Jump to content

கோவையில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது - மழைநீரில் சிக்கிய பேருந்தில் பயணிகள் பத்திரமாக மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கோவை, கனமழை
படக்குறிப்பு, சிவானந்தா காலனி, கோவை கட்டுரை தகவல்
  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 13 அக்டோபர் 2024

கோவையில் கடந்த ஒரு வாரமாக, இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்து வந்தது. இன்று மாலை 3 மணிக்கு மேல், மிகக்கடுமையான இடியும், மின்னலுமாக இருந்தது. சிறிது நேரத்தில் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்த அடர்மழை காரணமாக, கோவை மாநகரமே ஸ்தம்பித்தது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அடுத்தடுத்து உருவாகும் வளி மண்டலச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 25 மாவட்டங்களில், அக்டோபர் 13-ஆம் தேதியிலிருந்து 3 நாட்களுக்கு அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதில் கோவைக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ கொடுக்கப்பட்டிருந்தது.

கோவை, கனமழை

வெள்ளத்தில் மிதந்த சாலைகள்

கோவை நகரின் பிரதான சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளமென பாய்ந்தோடியது. அவிநாசி சாலையில், 10 கி.மீ., துாரத்துக்கு தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் கட்டும் பணி நடப்பதையொட்டி, அதன் இரு புறங்களில் உள்ள சர்வீஸ் சாலைகளில், மழைநீர் செல்வதற்கான வடிகால்கள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அவை முழுமையடையாததாலும், ஆங்காங்கே தடைகள் இருப்பதாலும், மழை வெள்ளம் அவிநாசி சாலை முழுவதும் ஆறு போல ஓடியது.

அவிநாசி சாலையிலுள்ள அண்ணா மேம்பாலத்தின் சுரங்கப் பாதைகள் முழுவதும் தண்ணீரால் நிரம்பியது. இதனால் அந்த வழியில் போக்குவரத்து தடைபட்டது. இதே போல, நகரின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் பாதைக்குக் கீழே உள்ள சுரங்கப் பாதைகளில் வெள்ளம் நிரம்பி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கோவை, கனமழை

பேருந்தில் புகுந்த வெள்ளம்

சங்கனுார் அருகே சிவானந்தா காலனி பகுதியிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதை இரு புறமும் சாலைகள் மேடாக அமைந்துள்ளதால், இரு புறமும் இருந்து பாய்ந்து வந்த வெள்ளம் பாலத்திற்கு கீழே குளம் போல தேங்கியது. உக்கடம்–பிரஸ் காலனி இடையில் இயக்கப்படும் தனியார் டவுன்பஸ், இந்தப் பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீரின் வழியாகக் கடந்து செல்ல முயன்ற போது, இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் நின்று விட்டது. பஸ்சுக்குள்ளும் மழைநீர் புகுந்துவிட்டது. உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கவுண்டம்பாளையத்திலிருந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து, பஸ்சில் ஏறிச் சென்று, கயிறுகள் உதவியுடன், உடனடியாக பயணிகளை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.

அங்கு தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார் மூலமாக வெளியேற்றி, கிரேன் உதவியுடன் பஸ்சை வெளியே மீட்டுக் கொண்டு வந்தனர். இதே பகுதிக்கு அருகில் கவுண்டம்பாளையம் சிடிசி டெப்போ அருகிலுள்ள பள்ளி வாசலுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது.

 
கோவையில் கனமழை
படக்குறிப்பு, சி.எம்.சி. சாலை, கணபதி, கோவை

வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்

பீளமேடு, கணபதி, மசக்காளிபாளையம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, உக்கடம், காந்திபுரம் என கோவையின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது.

கோவை காமராஜர் சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, கிராஸ்கட் சாலை, பூ மார்கெட், அவினாசிலிங்கம் கல்லூரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கணபதி சிவசக்தி காலனி பகுதியில் பெய்த கன மழை காரணமாக, மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.

மேலும் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு, வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவற்றிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

செளரிபாளையம் ராஜீவ் காந்தி நகர், ஹட்கோ காலனி போன்ற பகுதிகளிலும் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அய்யர் லேஅவுட் பகுதியில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. பூ மார்க்கெட் பகுதியில் பெய்த மழை காரணமாக மார்க்கெட் வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக பூ வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?

தீபாவளி நெருங்கிவருவதால், காந்திபுரம், ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், ஏராளமான மக்கள் ‘ஷாப்பிங்’ செய்ய வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இந்த மழையில் சிக்கிக் கொண்டனர். அனைத்துப் பகுதிகளிலும் வாகனங்கள் செல்ல முடியாமல், மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரின் அனைத்து ரோடுகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிப் பல மணி நேரம் ஸ்தம்பிக்கும் நிலை இருந்தது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இருவரும் இணைந்து, மழை பாதிப்புக்குள்ளான பல பகுதிகளையும் நேரில் கள ஆய்வு செய்தனர். ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பிபிசி தமிழிடம் கூறுகையில், “இன்று கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டதால், ஏற்கெனவே மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அதிகாரிகளுக்கு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் வேறு பகுதிகள் எதிலும் பெரிய பாதிப்பு இருப்பதாக இதுவரை தகவல் இல்லை. மாநகரப் பகுதிகளில்தான் பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியிருக்கிறது. அதை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்றார்.

கோவை கனமழை
படக்குறிப்பு, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இருவரும் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளை நேரில் கள ஆய்வு செய்தனர்.

“ஆபத்தான வீடுகளில் குடியிருக்கும் மக்களை, உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு வருவாய்த்துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டுள்னர்,” என்று மழை பாதிப்புக்கான நடவடிக்கைகள் பற்றி அவர் தகவல் தெரிவித்தார்.

மேலும், “மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் இயங்குகின்றன. எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், 1077 அல்லது 0422-2301114 ஆகிய அவசர தொடர்பு எண்களை 24 மணி நேரமும் அழைக்கலாம் என அறிவித்து இருக்கிறோம். இன்று ஒரு நாள் மட்டும்தான் கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட் உள்ளது. நாளையிலிருந்து ‘எல்லோ அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்,” என்றும் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

மாவட்டத்தின் வேறு எந்தப் பகுதியிலும் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்று பிபிசி தமிழிடம் தெரிவித்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, “சிவானந்தா காலனியில் மழை வெள்ளத்தில் பஸ் சிக்கியதாகத் தகவல் வந்ததும், அடுத்த 10 நிமிடத்தில் தீயணைப்புத் துறையினர் சென்று மீட்டு விட்டோம். சில பகுதிகளில் வீடுகள், கடைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதாகத் தகவல் வரும்பட்சத்தில், அவற்றை வெளியேற்றி, மக்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.