Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், மரியன் கோஹன்
  • பதவி, பிபிசி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.

இரவு பகலை பற்றி பேசுகையில், வேற்றுக்கிரகவாசிகள் தூங்குவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது. உயிர்களை உருவாக்கக் கூடிய தன்மை கொண்ட பல கிரகங்களில் பகல்-இரவு சுழற்சி இல்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதே சமயம், பூமியிலும் ஆழமான நிலத்தடி அல்லது கடலின் அடிப்பகுதியில் வாழும் உயிரினங்கள் ஒளியற்ற வாழ்விடங்களில் வசிக்கின்றன.

இவை சர்க்காடியன் இசைவு (circadian rhythm) இல்லாத வேற்றுக்கிரகங்களில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றன.

நமது விண்மீன் மண்டலத்தில் உயிர்கள் வாழக்கூடிய தன்மை கொண்ட பில்லியன்கணக்கான கிரகங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கைக்கு பின்னால் ஒரு விளக்கம் உள்ளது. பால் வீதியில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன.

 

இவற்றில் 70% சிறியளவிலான, சிவப்பு ‘குள்ள’ நட்சத்திரங்கள் ஆகும். அவை M-dwarfs என்று அழைக்கப்படுகின்றன. 2013-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான எக்ஸோபிளானட் கணக்கெடுப்பு, எம்-டிவார்ஃப்ட் நட்சத்திரங்களில் 41% அவற்றின் "கோல்டிலாக்ஸ்" மண்டலத்தை சுற்றிவரும் கிரகங்களை கொண்டிருப்பதாக மதிப்பிட்டுள்ளது. இந்த மண்டலத்தில் கிரகத்தில் திரவ நீருக்கு ஏற்ற சரியான வெப்பநிலை உள்ளது.

இதனை உயிர்கள் வாழக்கூடிய சூழல் கொண்ட மண்டலம் என்றும் கூறலாம். ஒரு நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள சூழலைக் கொண்டிருக்கும். எனவே, உயிர்கள் வாழ இது உதவும். ஆனால், இந்த கோள்களில் உண்மையில் தண்ணீர் இருக்கிறதா என்று விஞ்ஞானிகளுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை.

 
எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

`டைடல் லாக்கிங்'

எம்-டிவார்ஃப்-இன் 'உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தில்' சுற்றிவரும் பாறை கிரகங்கள் எம்-எர்த்ஸ் (M-Earths) என்று அழைக்கப்படுகின்றன. அவை அடிப்படையான விஷயங்களில் நமது பூமியிலிருந்து வேறுபடுகின்றன. ஒன்று, எம்-டிவார்ஃப் நட்சத்திரங்கள் சூரியனை விட மிகவும் குளிர்ந்த நிலையில் இருக்கும். அவை நெருக்கமாக அமைந்திருக்கும்.

நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை, கிரகத்தின் மறுபுறத்தைக் காட்டிலும் அருகில் உள்ள பக்கத்தின் மீது அதிகமாக செயல்படுகிறது. இது கிரகத்தின் சுழற்சி வேகத்தைக் குறைக்கிறது.

எம்-எர்த்களில் பெரும்பாலானவை டைடல் லாக்கிங் (Tidal locking) செய்யப்பட்டிருக்கும் என்பதை இது குறிக்கிறது. அதாவது, அந்த கிரகத்தின் ஒரு அரைக்கோளம் தொடர்ந்து அந்த நட்சத்திரத்தை நோக்கி இருக்கும். மற்றொன்று எப்போதும் விலகியே இருக்கும்.

Tidal locking அல்லது `ஒத்தியங்கு சுழற்சி’ என்பது ஒரு வானியல்சார் பொருள் மற்றொரு வானியல்சார் பொருளைச் சுற்றி வரும் போது வானியல் பொருளின் ஒரு பக்கம் மட்டுமே மற்றதை நோக்கி இருக்குமாறு அமைவதாகும்.

டைடல் லாக்கிங் செய்யப்பட்ட ஒரு கிரகத்தின் ஆண்டு அதன் நாளின் நீளத்திற்கு சமம். நிலவு பூமியுடன் டைடல் லாக்கிங் செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. நிலவின் மறுபக்கத்தை பூமியில் இருந்தபடி நம்மால் ஒருபோதும் பார்க்க முடியாது.

எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்க்காடியன் சுழற்சி என்பது உயிர்வேதியியல், உடல் வெப்பநிலை, உயிரணுக்களின் மீளுருவாக்கம், நடத்தை என பலவற்றை பாதிக்கிறது.

எம்-எர்த் கிரகங்களில் பகல், இரவு இல்லை

டைடல் லாக்கிங் செய்யப்பட்ட ஒரு கிரகம் விசித்திரமானதாகத் தோன்றலாம், ஆனால் உயிர் வாழக்கூடிய தன்மை கொண்ட கிரகங்கள் இதுபோன்று தான் இருக்கும். நமது கிரகத்திற்கு அருகிலுள்ள ப்ராக்ஸிமா சென்டாரி பி (நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆல்பா சென்டாரி அமைப்பில் அமைந்துள்ளது) அநேகமாக டைடல் லாக்கிங் செய்யப்பட்ட எம்-எர்த் ஆக இருக்கலாம் .

நமது பூமியைப் போலல்லாமல், எம்-எர்த்களுக்கு பகல், இரவு மற்றும் வெவ்வேறு பருவங்கள் இல்லை. பூமியில் பாக்டீரியாக்கள் முதல் மனிதர்கள் வரை பெரும்பாலான உயிரினங்கள் பகல்-இரவு சுழற்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது சர்க்காடியன் இசைவைக் கொண்டுள்ளது.

இந்த சுழற்சியில் நமக்கு வெளிப்படையாக தெரிந்ததெல்லாம் இரவில் தூங்க வேண்டும் என்பது தான். ஆனால், சர்க்காடியன் சுழற்சி என்பது உயிர்வேதியியல், உடல் வெப்பநிலை, உயிரணுக்களின் மீளுருவாக்கம், நடத்தை என பலவற்றை பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, காலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்கள், பிற்பகலில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை விட அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறார்கள், ஏனெனில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு இரவு, பகல் என வெவ்வேறு தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

 

பயோரிதம்களை வெளிப்படுத்தும் உயிரினங்கள்

எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பூமியைப் போன்ற கிரகமான ப்ராக்ஸிமா சென்டாரி பி, ஒரு டைடல் லாக்கிங் செய்யப்பட்ட எம்.எர்த், இது தனித்துவமான பகல் மற்றும் இரவுகள் இருப்பதை பாதிக்கும்

தூக்கம் மற்றும் உயிரணுக்களின் மீளுருவாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் நிச்சயமற்றது. அவ்வப்போது ஓய்வு தேவைப்படாத உயிரினங்கள் தொடர்ந்து செயல்படலாம்.

உதாரணமாக ஆழ்கடல் உயிரினங்கள், குகையில் வசிக்கும் உயிரினங்கள் மற்றும் பூமியின் மேலோடு மற்றும் மனித உடல் போன்ற இருண்ட வாழ்விடங்களில் வசிக்கும் நுண்ணுயிரிகள் எப்படி பகல் வெளிச்சம் இன்றி நன்றாகச் செயல்படுகின்றன?

இந்த உயிரினங்கள் பல பயோரிதம்களை வெளிப்படுத்துகின்றன, அவை ஒளியைத் தவிர வேறு தன்மையால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நேக்டு மோல் எலிகள் தங்கள் முழு வாழ்க்கையையும் நிலத்தடியில் கழிக்கின்றன. சூரியனை அவை பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவை தினசரி மற்றும் பருவகால வெப்பநிலை, மழைப்பொழிவு சுழற்சிகளுக்கு ஏற்ப சர்க்காடியன் கடிகாரங்களைக் கொண்டுள்ளன.

ஹாட் வென்ட் இறால் மற்றும் ஆழ்கடல் மஸ்ஸல்கள் கடலின் அலைகளைப் பின்பற்றி வாழ்கின்றன.

மனித குடலில் வாழும் பாக்டீரியாக்கள் அவை வசிக்கும் உடலில் உள்ள மெலடோனின் ஏற்ற இறக்கங்களுடன் ஒத்திசைகின்றன. மெலடோனின் என்பது இருளில் உடல் உற்பத்தி செய்யும் ஹார்மோன் ஆகும்.

வெப்ப துளைகள், ஈரப்பத ஏற்ற இறக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வேதியியல் மாற்றங்கள் ஆகியவற்றால் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகள் அனைத்தும் உயிரினங்களில் உயிர்-அலைவுகளைத் தூண்டும் எனவே `பயோரிதம்கள்’ உள்ளார்ந்த நன்மைகளைக் கொண்டுள்ளன என்பதை பிரதிபலிக்கிறது.

எம்-எர்த்ஸ் நாட்கள் மற்றும் பருவங்களுக்கு பதிலாக சுழற்சிகளைக் கொண்டிருக்கலாம் என்பதை சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. இது போன்ற கேள்விகளை ஆய்வு செய்ய, ப்ராக்ஸிமா சென்டாரி பி (Proxima Centauri) உட்பட, எம்-எர்த்ஸ்-இன் சூழல் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் உருவகப்படுத்தியுள்ளனர்.

இந்த உருவகப்படுத்தலில், எம்-எர்த்ஸின் பகல் நேரத்திற்கும் இரவு நேரத்திற்கும் இடையிலான வேறுபாடு, விரைவான காற்று மற்றும் வளிமண்டல அலைகளை உருவாக்குவதாகத் தெரிகிறது. இது வளைந்து அலைந்து செல்லும் பூமியின் `ஜெட் ஸ்ட்ரீம்’ காற்றுக்கு ஒத்திருந்தது. கிரகத்தில் தண்ணீர் இருக்குமாயின், பகலில் மின்னல்கள் நிறைந்த அடர்த்தியான மேகங்கள் உருவாகலாம்.

 

பரிணாமம் எப்படி நடக்கும்?

காற்று, வளிமண்டல அலைகள் மற்றும் மேகங்களுக்கு இடையிலான தொடர்புகள் வெவ்வேறு நிலைகளுக்கு இடையேயான காலநிலையை மாற்றக்கூடும். இதனால் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றில் வழக்கமான சுழற்சிகள் ஏற்படலாம்.

இந்த சுழற்சிகள் ஒவ்வொரு கிரகத்திற்கும் பத்து முதல் நூற்றுக்கணக்கான பூமி நாட்கள் வரை வேறுபடும். அவை கிரகத்தின் சுழற்சி காலத்துடன் தொடர்புப்படுத்தப்படாது. இந்த கிரகங்களின் வானத்தில் நட்சத்திரம் நிலையாக இருக்கும் போது கூட, சூழல் மாறிக்கொண்டே இருக்கும்.

எம்-எர்த்ஸில் உள்ள உயிர்கள் இந்த சுழற்சிகளுடன் ஒத்திசைந்த பயோரிதம்களை உருவாக்கலாம் அல்லது உயிர்கள் பரிணாமம் நடப்பதற்கு வேறு ஒரு விசித்திரமான தீர்வு இருக்கலாம்.

கிரகத்தின் பகல் நேரத்தில் வாழும் இனங்கள் ஓய்வெடுக்கவும் மீளுருவாக்கம் செய்யவும் கிரகத்தின் இரவு நேரத்திற்கு குடிபெயரும் இனங்கள் இருக்கலாம் என்பது கற்பனையான யூகம். எனவே சர்க்காடியன் கடிகாரம் என்பது வேற்று கிரகங்களில் நேரத்தை சார்ந்திருப்பது அல்ல.

ஒருவேளை வேற்று கிரகங்களில் வாழ்க்கை இருந்தால், தற்போது நமக்குத் தெரிந்த அனுமானங்களை விட இன்னும் ஆழமான உண்மைகளை கொண்டிருக்கும். அது நம்மை ஆச்சரியப்படுத்தும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.