Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பத்திரிகையாளராக மாறிய போராளி ' தராக்கி ' சிவராம் : கொடூரமான கடத்தலும் கொலையும் - மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் ஜனாதிபதி அநுரா குமாரவின் அரசாங்கம்

image

டி.பி.எஸ்  ஜெயராஜ் 

கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களினால் தடுக்கப்பட்ட அல்லது சீர்குலைக்கப்பட்டு நீதிகிடைக்காமல் போன பாரிய  ஊழல் மோசடிகள், படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தனது தேர்தல் பிரசாரங்களின்போது அடிக்கடி வலியுறுத்திக் கூறினார்.

அண்மைய நிகழ்வுகள்  தங்களது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஜனாதிபதி திசாநாயக்கவும் அவரது அரசாங்கமும் கரிசனையாக இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. இது தொடர்பில் அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த விவகாரங்களில் நீதியை உறுதிசெய்வதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருப்பதை அரசாங்கம் மெய்ப்பித்துக் காட்டுமோயானால்  ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாய்ப்புகள் பிரகாசமானதாக இருக்கும்.

சர்ச்சைக்குரிய 2015 திறைசேரி பிணைமுறி விவகாரம், 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், 2005 ஆம் ஆண்டில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல்போன சம்பவம் மற்றும் பத்திரிகையாளர் தருமரத்தினம் ' தராக்கி ' சிவராம் கடத்திக் கொலைசெய்யப்பட்டமை  உட்பட பல்வேறு பிரபலமான சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சு இரு வாரங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது.

விசாரதைகளை தீவிரமாக முன்னெடுப்பதில் குற்றவியல் விசாரணை திணைக்களத்துடனும்  சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளுடனும் ஒருங்கிணைந்து செயற்படுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அமைச்ச பணிப்புரை வழங்கியிருக்கிறது.

' தராக்கி ' என்ற பத்திரிகையாளர் சிவராம் பற்றி குறிப்பிடப்பட்டதால் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவில் வைத்திருக்கும் இலங்கையர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக  தராக்கியையும் அவரது மரணத்தையும் பற்றி அறிந்துகொள்ள விரும்பும்  இளைய தலைமுறையினர் மத்தியிலும் ஆர்வம் பிறந்திருக்கிறது.

ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய தருமரத்தினம் புவிராஜகீர்த்தி சிவராம் 2005, ஏப்பில் 28 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் பம்பலப்பிட்டியில் வைத்துக் கடத்தப்பட்டார்.

நான்கு மணித்தியாலங்கள் கழித்து அவரது சடலத்தை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இருந்து 500 மீட்டர்கள் தொலைவில் தியவன்ன ஓயா ஆற்றங்கரைக்கு அண்மையாக  கிம்புளா - எல சந்தியில் பொலிஸார் கண்டுபிடித்தனர். நள்ளிரவு 12.30 மணிக்கும் ஏப்ரல் 29 அதிகாலை ஒரு மணிக்கும் இடைப்பட்ட நேரத்துக்கு பிறகு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் அவர் மரணமடைந்தார் என்று பிரேதப் பரிசோதனையில் கூறப்பட்டது.

தராக்கி சிவராம் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த நேத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அவர் முதலில் ஆயுதமேந்திய ஒரு தமிழ்த் தீவிரவாதி. பிறகு பேனையை ஆயுதமாகக் கொண்ட பத்திராகையாளராக மாறினார்.

ஒரு சுயாதீன பத்திரிகையாளராக சிவராம்  தனது வாரஇறுதி தராக்கி பத்தியை சண்டே ஐலண்ட், டெயிலி மிறர் மற்றும் சண்டே ரைம்ஸ் உட்பட வேறுபட்ட பத்திராகைகளுக்கு வேறுபட்ட நேரங்களில் எழுதினார். இடைக்கிடை அவர் டி.பி. சிவராம் என்ற பெயரில் வீரகேசரி போன்ற பத்திரிகைகளில்  தமிழிலும் எழுதினார். பிறகு அவர் நோர்த் ஈஸ்டேர்ண் ஹெரால்ட் மற்றும் தமிழ்நெற் இணையத்தளம் ஆகியவற்றிலும் பணியாற்றினார்.

அவ்வப்போது சர்ச்சைக்குரியவையாக இருந்தபோதிலும், பெருமளவு தகவல்கள் நிறைந்ததும் ஆய்வுத் தன்மை கொண்டதுமான அவரது அரசியல் பத்திகள்்பரவலாக வாசிக்கப்பட்டன.

அதனால் அவரது கடத்தலும் கொலையும் இந்த கட்டுரையாளர் உட்பட பலரிடம் இருந்து பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்தின.  இந்த கட்டுரையில் நான் பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அந்த கொடூரச் சம்பவம் மீள்பார்வை செய்கிறேன். அதற்கு எனது முன்னைய கட்டுரைகளில் இருந்தும் விடயங்களை தாராளமாக பயன்படுத்துகிறேன்.

பம்பலப்பிட்டி

எஸ். ஆர்.சிவா, ராம் என்று பல்வேறு பெயர்களில் நண்பர்களினால் அறியப்பட்ட சிவராம் கடத்தப்ப்ட அந்த விதிவசமான இரவு தனது இனிய நண்பர்களுடன் மதுபானம் அருந்தினார். 

சுயாதீன பத்திரிகையாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான குசல் பெரேரா, சுகாதாரத்துறை தொழிற்சங்கவாதி ரவி குழுதேஷ் மற்றும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவன ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன இரத்நாயக்க ஆகியோரே அன்றைய தினம் அவருடன் இருந்தவர்கள். இரவு 10.25 மணிக்கு நால்வரும் பம்பலப்பிட்டி மதுபான விடுதியில் இருந்து நால்வரும் வெளியே வந்தனர்.

ரவியும் பிரசன்னவும் மற்றையவர்களுக்கு விடைகொடுத்துவிட்டு பொரளைக்கு போவதற்கு முச்சக்கரவண்டி ஒன்றை பிடிக்கப்போவதாக கூறிக்கொண்டு கொள்ளுப்பிட்டி நோக்கி நடந்தனர். குசலும் சிவாவும் கதைத்துக் கொண்டு வெள்ளவத்தை  நோக்கி நடந்து சென்றனர்.

கதையை முடித்துக்கொண்டு ஒரு பஸ்ஸில் வீட்டுக்கு போவதே அவர்களின் யோசனை. டீ வோஸ் அவனியூவுக்கு அண்மையாக காலி வீதியில் பஸ் தரிப்பிடம் ஒன்றில் சிவராமும் குசலும் நின்று கொண்டிருந்தனர். அப்போது சிவராமுக்கு அவரின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது.

தமிழில் பேசிக்கொண்டு சற்று முன்னோக்கி அவர் நகர்ந்த அதேவேளை குசல் தரிப்பிடத்திலேயே நின்றுகொண்டு  பஸ் வருகிறதா என்று எதிர்த்திசையை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் புறக்கோட்டை - பாணந்துறை பஸ் ஒன்று வருவதைக் கண்ட குசல் பஸ்ஸைப் பற்றி சிவராமை உஷா்ப்படுத்துவதற்காக அவர் பக்கமாக திரும்பினர்.

அப்போது குசல் கண்ட காட்சி அவரை அச்சமடையவைத்தது. சிவராமுக்கு அண்மையாக வீதியில் ஒரு வெள்ளி -- சாம்பல் நிற வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அது ஒரு ரொயோட்டா எஸ்.யூ.வி. வாகனம். அதன் இலக்கம் WP G 11 குசலினால் மற்றைய இலக்கங்களை ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை.

இருவர் சிவராமை அந்த வாகனத்திற்குள் நிர்ப்பந்தமாக ஏற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த அதேவேளை மூன்றாவது நபர் வாகனத்தின் திறந்த கதவுக்கு அருகாக நின்றுகொண்டிருந்தார். நான்காவது நபர் சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். வாகனம்  இயங்கிக் கொண்டிருந்தது.

திடீரென்று அவர்கள் சிவராமை பின்பக்கத்தினால் பிடித்து வாகனத்திற்குள் தள்ளத் தொடங்கினர்.சிவராம் கடத்தல்காரர்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் சிவிலுடைகளில் இருந்தாலும் ' சீருடையின்' சாயல் தெரிந்தது.

அந்த அடிபிடியைப் பார்த்ததும் சிவா, சிவராம் என்று சத்தமிட்டுக்கொண்டு அவர்களுக்கு அண்மையாக செல்ல முயற்சித்ததாக குசல் பெரேரா கூறினார். வாகனத்திற்குள் சிவராமை தள்ளுவதில் கடத்தல்க்ரர்கள் வெற்றி கண்டார்கள்.

அவர்களில் இருவர் குசலை நோக்கி அச்சுறுத்தும் வகையில் கையைக் காட்டிவிட்டு வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். வாகனம் விரைந்துசென்றதாக குசல் கூறினார். பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு நேரெதிராகவே  இந்த கடத்தல் நாடகம் முழுவதும் நடந்தேறியது. குசல் பிறகு வீடு சென்று சம்பவம் குறித்துப் பலருக்கும் அறிவித்தார்.

நான்கு பேர் இரவு 8.30 மணி தொடக்கம் அந்த மதுபான விடுதிக்கு வெளியே உலாவிக் கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் மூலம் பிறகு தெரியவந்தது. அவர்களில் இருவர் தங்களுக்குள் தமிழிலும் மற்றைய இருவரும் சிங்களத்திலும் பேசிக்கொண்டார்கள். ஒருவர் கைத்தொலைபேசியில் எவருடனோ தொடர்பு கொண்டு வாகனத்தை அனுப்புமாறு தமிழில் கேட்டதாக நேரில் கண்ட ஒருவர் கூறினார்.

அவ்வாறே வரவழைக்கப்பட்ட வாகனத்திலேயே சிவராம் கடத்தப்பட்டார் என்பது பிறகு புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. மிகவும் விரைவாக அந்த வாகனம் சம்பவ இடத்துக்கு வந்ததில் இருந்து அது மிகவும் நெருக்கமாக ஒரு இடத்தில்  காத்துக் கொண்டு நின்றிருக்க வேண்டும் என்று ஊகிக்கமுடிந்தது.

சிவராம் கடத்தப்பட்டதை அறிந்த உடனடியாக அவரது மனைவி யோகரஞ்சினி ( பவானி என்றும் அவரை அழைப்பதுண்டு) மட்டக்குளியில் உள்ள சகோதரனுடன் தொடர்புகொண்டு அவருடன் சேர்ந்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு ஒன்றைச் செய்தார்.

சிவராமின் பத்திரிகைத்துறை சகாவும் நண்பருமான ராஜ்பால் அபேநாயக்க அன்றைய இராணுவத் தளபதி லெப்டின்ட் ஜெனரல் சாந்த கொட்டேகொட உட்பட பல அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்து அறிவித்தார். சகல இராணுவச் சோதனை நிலையங்களையும் உஷார்ப்படுத்த உத்தரவிடுவதாக இராணுவத் தளபதி உறுதியளித்தார்.

தியவன்ன ஓயா

நள்ளிரவுக்கு பின்னர் ஒரு மணித்தியாலம் கழித்து தியவன்ன ஓயா ஆற்றங்கரையில் இலங்கை - ஜப்பான் நட்புறவு வீதியோரமாக  சடலம் ஒன்று கிடப்பதாக தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு பின்புறமாக சுமார் 500 மீட்டர்கள் தொலைவில் கிம்புளா - எல சந்திக்கு அண்மையாக சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் பற்றைகளுக்கு நடுவே சடலம் ஒன்று கிடப்பதை கண்டனர். அது சிவராமின் சடலம் என்பதை பிறகு நண்பர்களும் குடும்பத்தவர்களும் அடையாளம் காட்டினர்.

சிவராமின் வாய்  ஒரு புள்ளி கைக்குட்டையினால் கட்டப்பட்டிருந்தது. கைகளும் பின்புறமாகக் கட்டப்பட்டுக் கிடந்தது. அவரின் தலையின் பின்புறம் மொட்டையான ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டிருந்தது. அவர் மல்லுக்கட்டுவதை தடுப்பதற்காக அவ்வாறு செய்ப்பட்டது போன்று தோன்றியது.

துணிச்சலான ஒரு போராளியான சிவராம் தன்னைக் கடத்தியவர்களை  வீரதீரத்துடன் எதிர்த்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதனால் அவரை அவர்கள் தாக்கி நினைவிழக்கச் செய்திருக்கிறார்கள்.

சிவராம் 9 எம்.எம். பிறவுணிங் கைத்துப்பாக்கி ஒன்றினால் மிக நெருக்கமாக வைத்து சுடப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. ஒரு சூடு அவரது கழுத்து மற்றும் நெஞ்சினூடாக சென்றிருந்தது. இரண்டாவது சூடு அவரது கையைத் துளைத்துக்கொண்டு உடம்புக்குள் பிரவேசித்திருந்தது.

அவர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருக்கவில்லை. 9 எம்.எம். வெற்று ரவைகள் அவரின் சடலத்துக்கு அருகாக காணப்பட்டன. சம்பவ இடத்தில் பெரிதாக இரத்தக்கறையை காணவில்லை.

பிரேதப்பரிசோதனை 

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியின் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பு மருத்துவ பீடத்தில் தடயவியல் மருத்துவ பீடத்தின் தலைவராக்இருந்த  டாக்டர் ஜீன் பெரேரா  பிரேதப் பரிசோதனையை நடத்தினார். ஊடகங்கள் அவரை தொடர்பு கொணடு கேட்டபோது " சித்திரவதை செய்யப்படவோ அல்லது தாக்குதல் நடத்தப்படவோ இல்லை.  அதை உறுதியாகக் கூறுகிறேன்" என்று அவர் கூறினார்.

"அவரின் ( சிவராம்) தலையின் பின்புறத்தில் ஒரு தடவை தாக்கப்பட்டிருக்கிறார். பிறகு நிலத்தில் கிடந்தவேளையால் தோள் பட்டை மற்றும் கழுத்தில் இரு தடவைகள் சுடப்பட்டிருக்கிறார். சடலம் கிடந்த இடத்தில் வைத்தே கொலை நடந்திருக்கிறது. அவரது ஒரு கண்ணில் காணப்பட்ட வீக்கம் ஒரு தாக்குதலின் விளைவானது அல்ல. உடலை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தபோது ஏற்பட்ட அதிர்வின் காரணமாவே அந்த வீக்கம் ஏற்பட்டது" என்று அவர் கூறினார். நள்ளிரவு 12.30 மணிக்கும் அதிகாலை ஒரு மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே மரணம் சம்பவித்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிவாவின் கொலைக்கு பிறகு பெரும் கண்டனங்கள் கிளம்பின. கொலையைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்ட யூனெஸ்கோ மற்றும் எல்லைகளற்ற நிருபர்கள் போன்ற அமைப்புகள் விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று கோரின. " கண்டிக்கத்தக்க கோழைத்தனமான கடத்தலும் கொலையும் " என்று ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் சாடியது.  முழுமையான விசாரணைக்கும் அரசாங்கம் உத்தரவிட்டது. ஆனால், இலங்கையில் பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்ட, தாக்கப்பட்ட, கொலைசெய்யப்பட்ட ஏனைய சம்பவங்களில் நடந்தததைப் போன்று சிவராம் கொலை தொடர்பிலும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.

 

தேரபுத்தபாய பலகாய 

கொலை நடந்து பத்து நாட்களுக்கு பிறகு " தேரபுத்தபாய பலகாய " என்ற மர்மமான சிங்கள குழுவொன்று உரிமை கோரியது. சிங்கள பத்திரிகைகளில் மறுபிரசுரம் செய்யப்பட்ட கடிதம் ஒன்றில் அந்த குழு " இலங்கையின் சர்வதேச பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக " சிவராமை குற்றஞ்சாட்டியது. கடிதத்தின் பிரதிகள் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டன. " தாய்நாட்டுக்கு ஊறு விழைவிப்பவர்கள் மிகவும் விரைவில் தாய்நாட்டுக்கு பசளையாக மாறுவதற்கு தயாராக இருக்கவேண்டும் " என்று கடிதத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புளொட் 'பீட்டர் '

சில வாரங்கள் கழித்து சிவராமின் கைத்தொலைபேசியின் சிம் அட்டையை வைத்திருந்தமைக்காக புளொட் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினரான  பீட்டர் என்ற ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா  கைது செய்யப்பட்டார். சிவராமை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய வாகனம் ஒன்றை கொழும்பு பம்பலப்பிட்டி ஹெய்க் வீதியில் அமைந்திருக்கும் புளொட் அலுவலக வளாகத்தில் கண்டுபிடித்ததாகவும் பொலிசார் கூறினர். சிவராம் கடத்தப்பட்ட இடத்திற்கு அண்மையாகவே புளொட் அலுவலகம் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. பீட்டர் என்ற ஸ்ரீஸ்கந்தராஜா  இறுதியில் பிணையில் விடுதலை செய்ப்பட்டார். பிறகு போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறப்பட்டு அவர் வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

தனிப்பட்ட நண்பன்

சிவராம் அல்லது சிவா எனது தனிப்பட்ட ஒரு நண்பன். அவரது குடும்பத்தில் சிவராம் நான்காவது பிள்ளையாக 1959 ஆகஸ்ட் 11 ஆம் திகதி பிறந்தார். மிகவும் எளிமையான வைபவம் ஒன்றில் 1988 செப்டெம்பரில் அவர் திருமணம் செய்துகொண்டார்.  காலஞ்சென்ற றிச்சர்ட் டி சொய்சாவும் நானும் மாத்திரமே  அந்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள். சிவராமின் மனைவி யோகரஞ்சினி பூபாலபிள்ளையும் மட்டக்களப்பைச் சேர்ந்தவரே. பவானி என்று அவரை அழைப்பதுண்டு. அவர்களுக்கு வைஷ்ணவி, வைதேகி என்ற இரு புதல்விகளும் சேரலாதன் என்ற புதல்வனும் இருக்கிறார்கள். சிவராமின் மறைவுக்கு பிறகு குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்துவிட்டது.

மேட்டுக்குடி குடும்பம்

சிவராம் கிழக்கில் ஒரு தமிழ் மேட்டுக்குடி குடும்பத்தைச்  சேர்ந்தவர். அவர்களுக்கு கிழக்கில் பெருமளவு நிலங்கள் சொந்தமாக இருக்கின்றன. தருமரத்தினம் வன்னியனார் என்று அறியப்பட்ட அவரின் தந்தைவழி பாட்டன் 1938 செப்டெம்பர் 17 தொடக்கம் 1943 நவம்பர் 20 வரை அன்றைய மட்டக்களப்பு தெற்கு தொகுதியை அரசாங்க சபையில் பிரதிநிதித்துவம் செய்தார். 1970 களின் காணிச் சீர்திருத்தங்கள் காரணமாக அந்த குடும்பம் ஓரளவுக்கு காணிகளை இழக்க வேண்டிவந்தது. லேடி மன்னிங் ட்ரைவில் அமைந்திருந்த அவர்களின் வீடு சகல நண்பர்களும் சிறுவர்களும் வரவேற்கப்பட்ட ஒரு இடமாக விளங்கியது.

சிறுவயதில் இருந்தே சிவா ஒரு தீவிர வாசகர்;  தனது அறிவுத்தேடலில் கட்டுப்பாடின்றி பல கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வரவேற்பவர். மார்க்ஸ், பேர்னாட் ஷா, சேக்ஸ்பியர், மாக்கியவெல்லி, கௌடில்யா, சன் சூ, குளோவிற்ஸ், ஜோமினி,  ஒமர் கயாம், ஜோன் டோன் ஆகியோரின் நூல்களையும் ஓளவையார் , திருமூலர் மற்றும் பல்வேறு சித்தர் பாடல்கள் என்று பலவற்றையும்  ஒப்பீட்டளவில் இளவயதிலேயே பேரார்வத்துடன் படித்து மனதில் இருத்திக் கொண்டவர். வாசிப்பு பழக்கத்துடனான சிவராமின் நெருக்கமே 1980 ஆம் ஆண்டில் மடடக்களப்பு வாசகர் வட்டத்தை அமைப்பதில் அவரை முன்னோடியாகச் செயற்பட வைத்தது.

சிவராம் மட்டக்களப்பில் சென். மைக்கேல் கல்லூரியிலும்  கொழும்பில் பெம்புரூக்  மற்றும் அக்குயினாஸ் கல்லூரிகளிலும் கல்வி பயின்றார். 1982 ஆம் ஆண்டில்  பேராதனை பல்கலைக்கழகத்தில் பிரவேசித்த அவர் ஜி.ஏ. கியூ.வுக்காக ஆங்கிலம், தமிழ் மற்றும் தத்துவத்தை கற்றார். ஆனால் பிறகு ஆங்கிலத்தில் கவனம் செலுத்தினார். அவர் தனது பட்டப்படிப்பை ஒருபோதும் பூர்த்தி செய்யவில்லை. 1983 கறுப்பு ஜூலை வன்செயல்களையடுத்து ஒரு பட்டதாரி மாணவனாக யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்த சிவராம் அடுத்த வருடம் படிப்பைக் கைவிட்டு முழுநேர கெரில்லாப் போராட்டத்துக்கு தன்னை அர்ப்பணித்தார். பேராதனையில் படித்துக்கொண்டிருந்த வேளையில் கூட தனது ' அரசியல் ' வேலையைச் செய்வதற்காக சிவராம் திடீரென்று  விரிவுரைகளில் இருந்து  காணாமல் போய்விடுவார். அப்போது அவர் 'எஸ். ஆர். ' என்று அழைக்கப்பட்டார்.

முதலில் சிவராம் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கே விரும்பினார். ஆனால் அவரைச் சேர்த்துக் கொளவதற்கு விடுதலை புலிகள் விரும்பவில்லை. அதற்கு பிறகு அவர் 1984 ஆம் ஆண்டில் கே. உமாமகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ விடுதலை கழகத்தில் (புளொட் ) இணைந்து கொண்டார். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாட்டில் சிவராம் இராணுவப் பயிற்சியைப் பெற்றார். ஆனால் அவர் அரசியலுக்கே பழக்கப்பட்டவர் என்பதால் புளொட் போராளிகளுக்கு அரசியல் மற்றும் இராணுவ தத்துவ வகுப்புக்களை எடுப்பதில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 

இந்தியாவிலும் இலங்கையில் வடக்கு, கிழக்கிலும் சிவராம் வகுப்புக்களை நடத்தினார். ஒரு கடடத்தில் மட்டக்களப்பில் புளொட் இயக்கத்தின் இராணுவப் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். நாளடைவில்  இயக்கத்தின் மத்திய குழுவின் உறுப்பினராக அவர் தரமுயர்த்தப்பட்டார்.

சிவராம் 1983 --87 காலப்பகுதியில் தெற்கிலும   கொழும்பிலும் அரசியல் வேலைக்காக பரந்தளவில் பயணங்களை மேற்கொண்டார். அந்த வரூடங்களில் பெருமளவு தொடர்களை ஏற்படுத்திக் கொண்ட அவருக்கு பெரும் எண்ணிக்கையில் நண்பர்கள். விஜய குமாரதுங்கவும் ஓஸீ அபேகுணசேகரவும் அவர்களில் அடங்குவர். அப்போது ஜே.வி.பி.யுடனும் சிவராம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். ஜே.வி.பி.யின் முன்னாள் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்கவும் புளொட் இயக்கத்தின் இராணுவத் தளபதி மாணிக்கம் தாசனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள்.  அவர்களது தாய்மார் சகோதரிகள்.  இந்த தொடர்பு அரசியல் நோக்கங்களுக்காக பயனபடுத்தப்பட்டது. ஜே.வி.பி. க்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட  மாற்றுக் குழுவான ' விகல்ப கண்டாயம' வுடனும் சிவராமுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நக்சலைட்டுக்கள் என்று அழைக்கப்பட்ட ஆயுதமேந்திய  மார்க்சிஸ்ட் --  லெனினிஸ்ட் குழுக்களுடனும் புளொட் தொடர்புகளைப் பேணியது. அந்த முயற்சியிலும் கூட  சிவராமுக்கு பங்குண்டு. அவர் பரந்தளவில் பயணங்களை மேற்கொண்டார். ஆந்திரப் பிரதேசத்தின் காடுகளுக்குள் ' மக்கள் போர்க்குழு' வுடனான சந்திப்பை அவர் எப்போதும் நினைத்துப் பெருமைப்படுவார். அங்கு தான் சிவராம் பழம்பெரும்  புரட்சிவாதி கொண்டபள்ளி சீத்தாராமய்யாவை சந்தித்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி

1987 ஜூலை 28 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையை புளொட்  சில தயக்கங்களுடன் ஏற்றுக்கொண்டது. புளொட் உத்தியோக பூர்வமாக தெற்கிற்கு நகர்வதற்கும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து ஜனநாயக அரசியலுக்கு நிலைமாறுவதற்கும் உடன்படிக்கை வழிவகுத்தது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் புளொட் அமைத்த அரசியல் கட்சியின் தலைவராக தர்மலிங்கம் சித்தார்த்தன் நியமிக்கப்பட்டார். அதேவேளை அந்த புதிய கட்சியின் முதலாவது செயலாளர்  வேறு யாருமல்ல தருமரத்தினம் சிவராமே தான். சிவராமின் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டம் தொடங்கியது.

சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான அரசியலுடனான சிவராமின் சல்லாபம் துப்பாக்கியில் இருந்து பேனைக்கான அவரின் நிலைமாறலுக்கு முன்னோடியாக அமைந்தது.

புளொட்டின் தலைவரான " முகுந்தன் " என்ற கதிர்காமர் உமாமகேஸ்வரன் 1989 ஜூலை 15 அவரது இரு மெய்க்காவலர்கள் உட்பட அவரது இயக்க உறுப்பினர்களினால் கொழும்பில் கொல்லப்பட்டார்.  உமாமகேஸ்வரனின் மரணத்துக்கு பிறகு புளொட் இயக்கத்தில் இருந்து பெருமளவு உறுப்பினர்கள் விலகத் தொடங்கினர்.

பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றார்கள். புளொட்டின் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்  செயலாளராக தொடர்ந்தும் இருந்த சிவராமும் விரக்திக்குள்ளானார். அரசியல் கட்சியின் தலைவரான  தருமலிங்கம்  சித்தார்த்தன் உமாமகேஸ்வரனின் இடத்துக்கு புளொட்டின் தலைவராக வந்தார்.

பத்திரிகைத்துறைக்கு நகர்வு

மாறிக்கொண்டிருந்த இந்த கோலங்களுக்கு மத்தியில், சித்தார்த்தனுடனான சிவராமின் உறவு அப்படியே தொடர்ந்த போதிலும், புளொட் இயக்கத்திற்குள் பெருமளவுக்கு தான் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் உணர்ந்தார். தமிழர் அரசியலில் புளொட்டுக்கு பெரிய எதிர்காலம் இருக்கப் போவதில்லை என்றும் சிவராம் உணர்ந்து கொண்டார்.

இன்டர் பிரெஸ் சேர்விஸுக்காக றிச்சர்ட் டி சொய்சாவுக்கு உதவியதன் மூலம் பத்திரிகைத் துறையிலும்  சிவராம் சிறியளவில் பரிச்சயத்தைப் பெறத் தொடங்கினார். அரசியலில் இருந்து பத்திரிகைத் துறைக்கு ஒரு நகர்வைச் செய்வதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.

' த ஐலண்ட் ' பத்திரிகையின் வடிவில் வாய்ப்பு ஒன்று கிடைத்தபோது சிவராம் அதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டார். அதையடுத்தே ' தராக்கி ' என்ற பத்திரிகையாளர் அவதாரத்தை அவர் எடுத்து பத்திரிகைத் துறையில் அலைகளை ஏற்படுத்தத் தொடங்கினார்.

ஒரு போராளி என்ற நிலையில் இருந்து பத்திரிகையாளராக சிவராமின் நிலை மாற்றமும் ' த ஐலண்ட் ' வழியாக ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் அவரது பிரவேசமும்  1989 ஆம் ஆண்டில் இடம்பெற்றன. நான் ' த ஐலண்ட் ' பத்திரிகையில் இருந்து 1988 ஆம் ஆண்டில் விலகி அமெரிக்கா சென்று அங்கிருந்து கனடாவுக்கு மாறினேன். எம்மிருவரினதும் நண்பனும் சகாவுமான றிச்சர்ட் டி சொய்சாவே  த ஐலண்டில் சிவராம் இணைந்து கொள்வதற்கு அனுசரணையாக இருந்தார்.

காமினி வீரக்கோன்

அந்த நேரத்தில் த ஐலண்ட் தினசரியினதும் சண்டே ஐலண்டினதும் ஆசிரியராக காமினி வீரக்கோன் பணியாற்றாற்றினார். அவர் பொதுவில் " கம்மா "  என்று அறியப்பட்டவர். சிவராமின் மறைவுக்கு பிறகு காமினி வீரக்கோன் எழுதிய கட்டுரை ஒன்றில் தான் எவ்வாறு சிவராமை ஆசிரியபீடத்துக்கு எடுத்தார் என்பதையும் ' தராக்கி ' என்ற புனைபெயர் எவ்வாறு வந்தது என்பதையும் விரிவாக கூறியிருந்தார். அதனால் அந்த கதையை அவரின் வார்த்தைகளிலேயே கூறுவதே சிறந்தது.

காமினி வீரக்கோனின் கட்டுரையின் பொருத்தமான பந்திகள் வருமாறு ; 

" 1989 ஆண்டில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் றிச்சர்ட் டி சொய்சாவிடமிருந்து ( அவரும் பிறகு சிவாவைப் போன்றே அவலமான முறையில் மரணத்தைச் சந்தித்தார்) தொலைபேசி அழைப்பு ஒன்று எனக்கு வந்தது. "வடக்கு -- கிழக்கு மோதல்கள் குறித்து உச்ச அளவில் அறிவைக்கொண்ட ஒரு பத்தி எழுத்தாளரை த ஐலண்ட் பத்திரிகையில் சேர்த்துக்கொள்ள விரும்புவீர்களா"  என்று அவர் என்னைக் கேட்டார்.

" ஒரு சில தினங்களுக்கு பிறகு நாம் ஆர்ட்ஸ் சென்டர் கிளப்பில் சந்தித்தோம். தொழில் ஒன்றைத் தேடுகின்ற உணர்வை பெரிதாக வெளிக்காட்டுகின்ற ஒரு இளைஞனாக சிவா  தோன்றவில்லை. மிகவும் அளவாகப் பேசிய சிவா வடக்கு, கிழக்குடன் தொடர்புடைய விவகாரங்களில் சண்டே ஐலண்டுக்கு ஒரு வாரந்த பத்தியை தன்னால் எழுதமுடியும் என்று சொன்னார்.

அந்த நேரத்தில் வடக்கு, கிழக்கில் நிவவிய சூழ்நிலை குறித்து நாம் பேசினோம். சிவாவின் அறிவும் நிகழ்வுகளை அவர் வியாக்கியானம் செய்த முறையும் என்னைக் கவர்ந்தன. அந்த நேரத்தில் எனது பத்திரிகையில் ஒரு சுயாதீன எழுத்தாளருக்கு வழங்கிய கொடுப்பனவில் மிகவும் கூடுதலான ஒரு  தொகையை அவருக்கு நான் வழங்கினேன்.

தாரகையில் இருந்து தராக்கிக்கு 

தனக்கு ஒரு புனைபெயரை வைக்கும் பொறுப்பை சிவராம் என்னிடமே விட்டுவிட்டார். அவரது அடையாளம் அந்தரங்கமாக இருக்கவேண்டும் என்று நாம் இருவரும் விரும்பினோம்.  தாரகை ( Tharakai - Star ) என்ற புனைபெயரை வைக்கலாம் என்று நானாகத்  தீர்மானித்தேன். ஆனால், பத்திரிகை ஆசிரியர்கள் நன்கு சிந்தித்து தீட்டுகின்ற திட்டங்கள் தங்களது சொந்த பங்களிப்பைச் செய்ய விரும்புகின்ற உதவி ஆசிரியர்களினால் உயரத் தூக்கி வீசப்படுகின்றன.

நான் சிவராமின் கட்டுரையை அச்சில் பார்த்தபோது அதில் பெயர் தராக்கி (Taraki ) என்று இருந்தது. அது பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஆப்கான் சர்வாதிகாரியின்( நூர் முஹமட்  தராக்கி ) பெயர். சிவாவுக்கு அது வேடிக்கையாக இருந்தது. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டோம். இறுதியாக தராக்கி ( Taraki) என்று நிலைபெறும் வரை அது பல்வேறு வடிவங்களை எடுத்தது.

"அவர் எழுதிய முதல் கட்டுரை ' தமிழ்த் தேசிய இராணுவத்தின் இராணுவ மூலோபாயங்கள்'  Military Stretegies of Tamil National Army ) என்று  நினைக்கிறேன். அது அரசியல்,இராணுவ, இராஜதந்திர, பத்திரிகைத்துறை மற்றும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவன வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவாவின் பத்தியுடன் எனக்கு பிரச்சினை இருக்கவில்லை. அவர் த ஐலண்டில் இருந்த காலம் முழுவதும் எனக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. அவரது பத்தியை கடுமையாக செம்மைமப்படுத்திய ஒரு சந்தர்ப்பத்தைக் கூட என்னால் நினைவுபடுத்த முடியவில்லை."

ஆலையடிச்சோலை 

தருமரத்தினம் புவிராஜகீர்த்தி சிவராமின் பூதவுடல் 2005  மே  2 ஆம் திகதி மட்டக்களப்பில் ஆலையடிச்சோலையில் உள்ள குடும்ப மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சிவராம் தனது மட்டக்களப்பையும்  சொந்த கிழக்கு மண்ணையும் பெரிதும் நேசித்தார்.

மட்டக்களப்பு வாவியின் மேலாக புளியந்தீவு பாலத்தில் நின்று இதமான காற்றை வாங்குவதே சிவராமின் வாழ்வில் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. ஆலையடிச்சோலையில் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. அதை அவர்  2004 ஆம் ஆண்டிலேயே பகிரங்கமாக எழுதினார்.

கிழக்கு மண்ணின் இந்த துணிச்சல்மிகு பத்திரிகையாளனுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனுதாபிகள் என்று பெருமளவு மக்கள் கூட்டம் பிரியாவிடை கொடுத்தது. அவர் ஆங்கிலம் வாசிக்கும் உலகிற்கு 'தராக்கி' யாக இருக்கலாம், ஆனால் தனது சொந்த மண்ணில் உறவினர்களுக்கு "குங்கி ", நண்பர்களுக்கு "எஸ்ஸார்" ( SR). சிவராமின் தீவிரவாதமும் இதழியலும் வேறு எங்காவது பெரிய சர்ச்சைகளை உருவாக்கியிருக்கக் கூடும்.

ஆனால் மட்டக்களப்பில்  அவர் எளிமையான "எங்கள் பையன்". தனது 46 வருடகால வாழ்வில் சிவராம் பரந்த உலகில் பெருமளவு சாதனைகளைச் செய்திருக்கிறார். ஆனால், நித்திய துயிலுக்கு அவர் மட்டக்களப்புக்கு வரவேண்டியிருந்தது.

https://www.virakesari.lk/article/197057



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.