Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..!

கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..!(வெளிச்சம்:018)

    — அழகு குணசீலன் —

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு மாதம் கடந்த நிலையில், பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன. முழு இலங்கையையும் போன்றே கிழக்கிலும் என்றும் இல்லாதவாறு அதிகளவான கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றில் சில கட்சிகளும், பெரும்பாலும் அனைத்து சுயேட்சைகளும் வெற்றி வாய்ப்பு அறவே அற்றவை. வெறுமனே வாக்கு பிரிப்பர்கள்.

இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், தேர்தலுக்கு பின்னரும் கிழக்கில் ஜே.வி.பி.க்கு இருந்த அலை தொடர்ந்தும் அடிக்கிறதா? அதற்கான காற்று வளம் வீசுகிறதா? என்ற கேள்விகளுக்கான பதிலை வெளிச்சத்தில் தேடுகிறது இப்பதிவு.

அரசியல் கூட்டுக்களில் வெளியில் என்ன படம் காட்சிப்படுத்தப்பட்டாலும், பிரதான வகிபாகம் பலமான ஒரு கட்சியிடமே இருக்கிறது. இதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜனபெரமுன, உள்ளிட்ட பல கூட்டுக்களை  குறிப்பிட முடியும்.  இந்த விதிக்கு ஜே.வி.பி. பிராதான பாத்திரம் வகிக்கின்ற என்.பி.பி. என்ற தேசிய மக்கள் சக்தியும் விலக்கல்ல . காரணம் இவை எல்லாம் கதிரை அதிகாரத்தை முதன்மையாகக் கொண்ட கூட்டுக்கள். கதிரைக்கு இடது, வலது என்ற வேறுபாடு இல்லை. 

ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில் பெற்ற வாக்குகள் 1,97,689. இதில்  திகாமடுல்ல, திருகோணமலையில் பெற்ற வாக்குகளில்( 1,08,971 + 49, 886 ) சிங்கள மக்களின் வாக்குகள் அதிகமானவை. அதே போன்று மட்டக்களப்பில் ஜனாதிபதி பெற்ற வாக்குகளிலும்(38,832)  தமிழர் வாக்குகுகளுடன் ஒப்பிடுகையில் சோனகர்களின் வாக்குகள் அதிகமானவை. ஏனெனில் சஜீத்பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ்,சோனக கட்சிகளின் ஆதரவுடன் பெற்ற வாக்குகளில் தமிழர், சோனகர் வாக்குகள் அதிகபங்கை வகித்துள்ளன.

இது ஜனாதிபதி தேர்தல் நிலவரம். மக்கள் தங்களுக்கு நேரடியாக தொடர்பற்ற, சமூக, பொருளாதார, அரசியல் உறவற்ற கொழும்பு தலைமைக்கு அளிக்கும் வாக்கு. இது பாராளுமன்ற பொதுத்தேர்தல் களத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு நிலைப்பாடு.  இதனால்தான் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு புள்ளி விபரங்களை கொண்டு  பல்லின பிரதிநிதித்துவ கிழக்கு மாகாண பாராளுமன்ற தேர்தலை எதிர்வு கூற முடியாது. இது  தபால் மூல வாக்களிப்பிலும் பிரதிபலிக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் தென்னிலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அடிப்படையிலான மதிப்பீடு வடக்கு கிழக்கு மாகாணங்களை விடவும் அதிகம்  செல்வாக்கு செலுத்த  வாய்ப்புண்டு.

ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார மந்தம், ஊழல் ஒழிப்பு, ஜனநாயக அரசியல் செயற்பாட்டு மறுப்பு, மனிதவுரிமைகள் மீறல்  போன்ற தேசிய ரீதியிலான நீதி, நிர்வாக சீர்திருத்தங்கள்  முக்கிய பேசுபொருளாக இருந்தன. இனப்பிரச்சினை மேற்குறிப்பிட்ட அனைத்து தேசிய பிரச்சினைகளோடும் தொடர்பு பட்டதாக இருந்த போதும் மற்றைய வேட்பார்களைப் போன்றே அநுரகுமாரவும் அதைப்பொருட்படுத்தவோ, உறுதியான தீர்வு திட்டம் ஒன்றை முன்வைக்கவோ இல்லை. எனினும் ஒரு இடதுசாரி கட்சி (?) என்ற நம்பிக்கையில், வழக்கத்திற்கு மாறான ஒரு மாற்றாக தமிழர்களும், சோனகர்களும் கணிசமான அளவு வாக்குகளை நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கியுள்ளனர். இதில் பொதுவான தேசிய சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கான ஆதரவு முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் இனப்பிரச்சினை தீர்வு குறித்த நம்பிக்கை சிறுபான்மை மக்களிடம் படிப்படியாக இழக்கப்பட்டு வருகிறது. இதுவே  வடக்கு, கிழக்கில் பாராளுமன்ற தேர்தல்  முடிவை தீர்மானிக்கின்ற முக்கிய போக்காக அமையும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற போது  ‘இலங்கை அரசு’ சுதேசிகளால் கட்டமைக்கப்பட்டது. அதனூடாக ஒரு ‘இலங்கைத் தேசியம்’ உருவானது. ஆனால் ‘இலங்கையர்’ என்ற ஒரு பன்மைத்துவ சமூகக்கட்டமைப்பை அது உருவாக்கவில்லை. இந்த மூன்று வார்த்தை பிரயோகங்களும் சிங்கள மேலாண்மையை குறித்து நிற்கின்ற வார்த்தைகளாகவே இன்றும் அடையாளப்படுத்துகின்றன. ஒட்டு மொத்தத்தில் இந்த வார்த்தைகள் சிங்கள பௌத்த மேலாண்மையின் பிரதிபலிப்பாக, அடையாளமாக உள்ளன. இதன் மிகப்பிந்திய வெளிப்பாடே இனப்பிரச்சினையை  பொருளாதாரப்பிரச்சினை என்பதும், அது அதிகாரப்பகிர்வை கோரவில்லை வெறுமனே அபிவிருத்தியை கோருகிறது என்ற ஆளுங்கட்சியான ஜே.வி.பி. யின் அதிஉயர் அந்தஸ்த்தையும், அதிகாரத்தையும் கொண்ட செயலாளர் ரில்வின் சில்வாவின் கூற்றாகும். இதற்கான பதிலை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மை மக்கள் தங்கள் வாக்குகளால் வழங்குவதன்மூலம் ஜனாதிபதி தேர்தலில் நம்பிக்கையின் அடிப்படையில் விட்ட அரசியல் தவறை ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையின்  ஊடாக திருத்திக்கொள்ள முடியும்.

ஜே.வி.பி.செயலாளர் ரில்வின் சில்வாவின் அறிவிப்பு ஜனாதிபதி அநுரகுமாரவினால் அல்லது கட்சியின் வேறேந்த முக்கியஸ்தர்களாலும் வாரங்கள் கடந்தும் இதுவரை மறுதலிக்கப்படவில்லை. வடக்கும், கிழக்கும் அங்கு பரம்பரையாக வாழ்கின்ற தமிழர்களினதும், சோனகர்களினதும் பாரம்பரிய தாயகம் என்பதையும், பன்மைத்துவ இனத்துவத்தையும், அடையாளங்களையும் மறுதலித்துக்கொண்டு அரசியல் செய்தால் சிவப்பு சாயம் மிக விரைவாக வெளிறிப்போகும். ஒரு இடதுசாரி அரசியல் இயக்கத்தில் இது ஒரு அடிப்படையான முரண்பாடு. சுமந்திரன்  அமைச்சர் பதவிக்காக போட்டுள்ள டீலின்  இரு கோரிக்கைகளும் காலத்தால் கரைந்து விடும்.

வடக்கும், கிழக்கும் பாரம்பரிய தாயகம் என அங்கீகரிப்பதனால் அது சமஷ்டியை வழங்குவதாகவோ, அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதாகவோ கருதப்படவேண்டியதில்லை. அந்த மண்ணில் வாழ்கின்ற மக்களின் தனித்துவ அடையாளங்களையும், பிரதேசத்தையும், சமூக பன்மைத்துவத்தையும் அங்கீகரிப்பதாகும். இது இடம்பெறாமல் இலங்கை ஒரு பன்மைத்துவ சமூகத்தைக் கொண்டது என்பது மேலாதிக்க பொய். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதல்ல இது. இது அந்த சட்ட நோக்கில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இன, மத, கலாச்சார, மொழி வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் சமூகநீதியை மறுதலித்து கொண்டு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும் ஒருவகையில் அடக்கு முறையே. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது  ஒரு வழக்கில் சிங்களவர், தமிழர், சோனகர் என்ற வேறுபாடின்றி ஒரே குற்றத்திற்காக ஒரே தண்டனையை வழங்குவது. 

 ஆனால் பல்லின பன்மைத்துவ சமூகத்தில்  தனித்துவமான வழக்குகளும், மரபுகளும், நடைமுறைகளும் முக்கியமானவை. கொரோனா கால ஜனாஷா எரிப்பு  எல்லோருக்கும் ஒரே நியதி என்று கூறி தனித்துவங்களை நிராகரித்த செயல். இதனால்தான் இந்த “இலங்கையர்” என்ற வார்த்தை மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு. . சகல  இனத்துவ தனித்துவமான அடையாளங்களை, வாழ்வியல் பன்மைத்துவத்தை அங்கீகரிப்பது என்றால் சிங்கள மொழிக்கும், பௌத்தத்திற்கும், அவை சார்ந்த கலாச்சார விழுமியங்களுக்கும் தனியான முன்னுரிமையும், பாதுகாப்பும் எதற்கு?. இதில்  சுதந்திர இலங்கையின் எந்த அரசாங்கமும் அநுரகுமார அரசாங்கம் உட்பட எந்த அரசாங்கமும் விலக்கல்ல. ஒரு இடதுசாரி கட்சியாக ஜே.வி.பி.க்கு ஒரு இளம் பிக்குகள் சங்கம் ஒன்று எதற்கு? தேவை தொழிலாளர் சங்கங்கள் அல்லவா?

தமிழர்கள் ஜனாதிபதிக்கு அளித்த வாக்கை இந்த இலக்கில் மறுபரிசீலனை செய்யும் நிலையில், கிழக்கு சோனகர்கள் மத்தியில் ஜே.வி.பி. வடக்கு, கிழக்கை பிரித்து தந்திருக்கிறது,  அதற்காக நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற ஒரு பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகிறது. மறுபக்கத்தில்  சோனகர்கள் ஜே.வி.பி.க்கு ஆதரவளித்து வடக்கு, கிழக்கு இணைப்பை தடுக்கப்போகிறார்கள் என்று இணைப்புக்கு ஆதரவான தமிழ்த்தேசிய தரப்புக்களின் பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ளது. மேலும்  ஜே.வி.பி . உள்ளிட்ட தென்னிலங்கை கட்சிகளின் சோனக வேட்பாளர்கள் தமிழர் வாக்குகளாலும், தமிழர் வேட்பாளர்கள் சோனகர் வாக்குகளாலும் வெல்லப்போகிறார்கள் என்ற பிரச்சாரங்கள் வேறு. தேர்தல் நெருங்க,நெருங்க எல்லாப்பூதங்களும் “அறுகம்பை பூதம்” போல் இன்னும் வெளிவரத்தான் போகின்றன. 

இங்கு  முக்கியமாக  சோனக சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு  துளியும் வாய்ப்பில்லை. அதை தமிழர்களில் ஒரு பகுதியினரும், சிங்களவர்கள் முழுமையாகவும் எதிர்க்கிறார்கள். இதை ஆதரித்து ஜனாதிபதி கூட பேசப்போவதில்லை. மாறாக   இரு சமூகங்களும் இனத்துவ அடையாளங்களையும்,வடக்கு , கிழக்கு பிரதேசங்களையும், அங்கீகரிக்க கோருகின்றன. இந்த அங்கீகாரம் தென்னிலங்கையில் வாழ்கின்ற தமிழ்,சோனக மக்களுக்கும், வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கும், மலையக மக்களுக்கும் ஒரு பன்மைத்துவ அங்கீகாரத்தை வழங்குவதாக அமையும், அமையவேண்டும். இந்த அச்சங்களும், முரண்பாடுகளும் ஆரம்பத்தில் இருந்ததை விடவும் ஜே.வி.பி அலையின் வேகத்தை குறைத்திருக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்த சோனகர் சமூகத்தில் இஸ்ரேல் -பாலஸ்தீன போரில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடும் கிழக்கில் பேசுபொருளாகி இருக்கிறது. புதிய அரசாங்கம் இதுவரை ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா. பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை. எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சிங்கள-தமிழ் கிறிஸ்தவ வாக்காளர்களின் வாக்குகளை குறிவைத்து இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. பேராயர் மெல்ல, மெல்ல அநுர அரசின் பேச்சாளராக மாறி வருகிறார். இந்த பின்னணி கிழக்கு சோனகர் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் மட்டக்களப்பு கிறிஸ்த்தவ சமூகத்தில் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்குழு அறிக்கையை ஜனாதிபதி வெளியிடாததும், அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களுக்கு பதவிகளை வழங்கியிருப்பதும்.  ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அநுரகுமார திசாநாயக்க கூறிய உறுதியை இழுத்தடிக்கும் செயல் என மக்கள் கருதுகின்றனர். ஆகக்குறைந்தது அறிக்கையில் பெயர்குறிபிடப்பட்ட இருவரையும் இடைநிறுத்தி புதியவர்களை நியமித்து விசாரணையை மீள மேற்கொள்ள ஜனாதிபதி பணித்திருக்க வாய்ப்பு இருந்தது. அதை அவர் பயன்படுத்தவில்லை என்ற விசனம் ஜே.வி.பி.குறித்த சந்தேகத்தை கிழக்கு கிறித்தவ வாக்காளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அறுகம்பை குறித்து பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் சோனக சமூகத்தை அச்சுறுத்துவதற்கான கோத்தபாய பாணியிலான ஒரு தந்திரோபாயமா?   என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் பயங்கரவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஒரு கருவியாக ஜே.ஆர். ஜயவர்தன முதல் கோத்தபாய வரையுமான பல தலைவர்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஜனாதிபதி அநுகுமாரவும் அந்த வழி அமைப்பு ஒன்றின் ஊடாக அரசியலுக்கு வந்தவர். ஈஸ்டர் தாக்குதல் பாணியிலேயே தகவல்கள் வெளியாகின்றன. 

ஒக்டோபர் 7ம்திகதி இந்திய புலனாய்வு துறையினால் இலங்கைக்கு தகவல் பரிமாறப்பட்டதாக ஒரு செய்தி கூறுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் , எடுத்திருந்தால் தூதரகங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்து மேற்கு நாடுகளின் உல்லாசப் பிரயாணத்தடையை தடுத்திருக்கலாம் என்றும் எதிர்கட்சிகள் கூறுகின்றன.  இதன் மூலம்  பாரிய அந்நியச் செலாவணி இழப்பை தவிர்த்திருக்க முடியும். ஆனால் அமைச்சர் விஜயகேரத் இந்திய புலனாய்வு துறை தகவல் வழங்கவில்லை என்று மறுத்துள்ளார். 

அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பேசப்படுகின்ற மற்றொரு விடயம் ஜே.வி.பி.யின் தேசிய பட்டியல்.  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியலில்  2வது இடத்தில் இம்தியாஷ் பார்க்கீர் மார்க்கார், 4வது இடத்தில் சாகரன் விஜயேந்திரன், 5வது இடத்தில் நிசாம் காரியப்பர் இடம் பிடித்துள்ளனர். மேலும் 23, 24, 25 ம் இடங்களில் மூன்று தமிழர்களும், 27, 28 ம் இடங்களில் இரு சோனகர்களும் உள்ளனர். 

ரணில் விக்கிரமசிங்க ஆதரவுடனான புதிய ஜனநாயக முன்னணியில் 3வது இடத்தில் மொகமட் பைசர் முஸ்த்தபா, 7வது இடத்தில் செந்தில் தொண்டமான், 8வது இடத்தில் சுரேன் ராகவன் உள்ளனர். பொதுஜன பெரமுனவில் 10வது இடத்தில் பளீல் மர்ஷான் அஸ்மி உள்ளார். இதில் தமிழர் எவரும் இல்லை.  ஆனால் இலங்கை தேசியம், இலங்கையர் வார்த்தைகளை உரத்து உச்சரிக்கின்ற ஜே.வி.பி/என்.பி.பி. பட்டியலில்  10 வது இடத்திலேயே இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் 20 வது இடத்தில் அப்துல் ஃபதா முகமது இக்ராம் உள்ளார். 29 பேரைக்கொண்ட தேசிய பட்டியலில் சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்களுக்கு போதிய பிரதிநித்துவம் மட்டும் அல்ல முன்னுரிமையும் வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரியது. 

ஆக, கிழக்கிலங்கையில் ஜே.வி.பி.க்கு காற்று வளம் செப்டம்பரில் போன்று நவம்பரில் அடிக்காது போல்தான் உள்ளது.? அரசியல் காலநிலை மாறுவதும் ஒரு மாற்றம் தானே ! இல்லையா?.
 

 

https://arangamnews.com/?p=11370



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.