Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
சூரியனார் கோவில் ஆதீனம்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மடத்தின் ரூ.1,000 கோடி சொத்துகளை அபகரிக்கவே திருமணம் நடந்துள்ளதாக சிலர் புகார் கூறியுள்ளனர்.

திருமணம் நடந்தாலும் தனது மனைவி கர்நாடகாவிலேயே இருப்பார், மடத்துக்குள் உரிமை கோர மாட்டார் என்கிறார், சூரியனார் கோயில் ஆதீனம்.

சூரியனார் கோயில் ஆதீனம் திருமணம் செய்து கொண்டது ஏன்?

இந்தச் சர்ச்சை குறித்து ஆதீனத்தின் மனைவி சொல்லும் பதில் என்ன?

சூரியனார் கோயில் ஆதீனம்

தமிழ்நாட்டில் உள்ள 18 சைவ மடங்களில் ஒன்று சூரியனார் கோயில் ஆதீனம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள இந்த மடம், சிவாக்ர யோகி என்பவரால் 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய சமஸ்தானங்களை ஆட்சி செய்த மன்னர்களும் தஞ்சை சரபோஜி மன்னர்களும், சூரியனார் கோயிலுக்கு ஏராளமான நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர்.

இந்த மடத்தில் பிரம்மசாரிகளும் இல்லறத்தைக் கைவிட்டு துறவறத்தை ஏற்றுக் கொண்டவர்களும் ஆதீனங்களாக இருந்துள்ளனர். இதை ‘சிவாச்சாரியார்கள் மடம்’ எனவும் கூறுகின்றனர்.

சூரியனார் கோயில் மடத்தை நிர்வகிக்க முடியாத காரணத்தால், சிலகாலம் திருவாவடுதுறை ஆதீனத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு தம்பிரான்களாக இருந்தவர்கள், சூரியனார் கோயில் மடத்தின் ஆதீனங்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு சூரியனார் கோயில் ஆதீனமாக இருந்த சங்கரலிங்க தேசிக சுவாமிகள், பரிபூரணம் (மரணம்) அடைந்ததைத் தொடர்ந்து 28-வது ஆதீனமாக மகாலிங்க தேசிகப் பண்டார சுவாமிகள் நியமிக்கப்பட்டார்.

 
சூரியனார் கோவில் ஆதீனம்
படக்குறிப்பு, கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீன மடம்

கர்நாடக பெண்ணுடன் திருமணம்

இந்தநிலையில் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி கர்நாடகாவில் வசித்து வரும் ஹேமாஸ்ரீ என்பவரை, சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக சுவாமிகள் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது.

இருவருக்கும் கர்நாடகாவில் திருமணம் நடந்தது தொடர்பான பதிவுச் சான்றிதழ், இணையதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து வீடியோ ஒன்றில் விளக்கம் அளித்திருந்தார், சூரியனார் கோயில் ஆதீனம்.

அதில், "மடத்தின் விதிகளை மீறிப் புதிதாக நான் எதையும் செய்யவில்லை. நடந்த சம்பவங்களை மறைக்கவும் விரும்பவில்லை. நான்கு பேருக்கு தெரிந்து வெளிப்படையாகவே பதிவுத் திருமணம் செய்து கொண்டேன்," எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, சூரியனார் கோவில் ஆதீனத்திடம் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமான விளக்கம் ஒன்றையும் பெற்றுள்ளனர்.

மரபுகளை மீறினாரா ஆதீனம்?

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார் சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் சுவாமிநாத தேசிக சுவாமிகள். (மடத்தின் சமயம், நிர்வாகப் பணிகளை கவனிப்பவர்களை 'ஸ்ரீகார்யம்' என்கின்றனர்)

"ஆதீனத்துக்கு இது முதல் திருமணம். ஆனால், ஹேமாஸ்ரீக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். மடத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரிக்கவே இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது," என்கிறார் அவர்.

"மதுரை, திருவாவடுதுறை, தருமபுரம் ஆகிய ஆதீனங்களில் திருமணம் ஆகாதவர்கள் தான் ஆச்சாரியர்களாக வர முடியும். ஆனால், சூரியனார் கோயில் மரபுப்படி இல்லறத்தில் இருந்தும் துறவறம் மேற்கொள்ளலாம். இதற்கு முன்பிருந்த ஆதீனம், இல்லறத்தில் இருந்து துறவறத்துக்கு வந்தவர் தான். ஆனால் துறவறம் வந்த பிறகு இல்லறம் ஏற்கக் கூடாது என்பது மரபு. இதற்கு மாறாக தற்போதைய ஆதீனம் செயல்பட்டுள்ளார்,” என்கிறார் அவர்.

மேலும், “அவர் திருமணம் செய்துள்ள ஹேமாஸ்ரீ என்பவர், கடந்த ஜனவரி மாதம் மகர சங்கராந்தி அன்று மடத்தின் பக்தையாக உள்ளே வந்தார். பிப்ரவரி மாதம் மாசி மகம் நிகழ்வில் பங்கேற்றார். மார்ச் மாதம் நாங்கள் அயோத்திக்கு சென்றபோது, அப்போது ஆதீனத்துடன் அந்தப் பெண்மணி வந்து நின்றார். ஏப்ரல் மாதம் நர்மதா புஷ்கர நிகழ்வில் பங்கேற்க வந்தார்,” என்கிறார்.

 
சூரியனார் கோவில் ஆதீனம்
படக்குறிப்பு,சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் சுவாமிநாத தேசிக சுவாமிகள்

'ரூ.1,000 கோடி சொத்துகள்'

மேலும் பேசிய ஸ்ரீகார்யம் சுவாமிநாத தேசிக சுவாமிகள், ஹேமாஸ்ரீ தான் செய்து வரும் வியாபாரம் தொடர்பாக அவர் கொடுத்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை எனத் தெரியவந்ததாகச் சொல்கிறார்.

“மன்னர்கள் தானமாகக் கொடுத்த மடத்தின் சொத்துகளில் பலவும் ஆக்கிரமிப்பில் இருப்பதால், அதை மீட்டுக் கொடுக்கும் அளவுக்குத் தனக்கு செல்வாக்கு உள்ளதாகக் கூறி ஆதீனத்தை அவர் ஏமாற்றியுள்ளதாக அறிகிறோம்," என்கிறார்.

தொடர்ந்து பேசிய சுவாமிநாத சுவாமிகள், "கர்நாடக மாநிலம், பிடதியில் 3 ஏக்கர் நிலத்தை மடம் அமைப்பதற்காக அந்தப் பெண்மணி கொடுத்ததால் திருமணம் செய்து கொண்டதாக ஆதீனம் கூறுகிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பலரும் மடத்துக்கு நிலம், உடைமைகளைப் தானமாக கொடுத்துள்ளனர். அவர்களை எல்லாம் அப்போதிருந்த ஆதீனங்கள் திருமணம் செய்து கொண்டதாக தகவல் இல்லை,” என்கிறார்.

“மடத்துக்குச் சேவை செய்ய வரும் பெண்களுக்கு சமய தீட்சை, சிவ தீட்சை, சந்நியாச தீட்சை எனக் கொடுப்பதில் தவறு இல்லை. திருமணம் செய்து கொள்வதை எவ்வாறு ஏற்பது?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

மேலும், மடத்தின் சொத்துகளாகச் சூரியனார் கோயில் கிராமம், திருமாந்துறை கிராமம், திருமங்கலக்குடி கிராமம், திருவீழிமிழலை கிராமம் ஆகியவை உள்ளன. ரூ.1,000 கோடி மதிப்புள்ள இந்தச் சொத்துகளை அபகரிக்கவே திருமணம் நடந்துள்ளதாக அறிகிறோம்," என்கிறார்.

"இந்தத் திருமணத்தின் மூலம் மடத்தின் மாண்பும் புனிதமும் கெட்டுப் போய்விட்டது. இந்தத் தகவலை இதர மடாதிபதிகளுக்கும் வாட்ஸ்ஆப் மூலம் தெரிவித்துள்ளோம். காவல்துறையிலும் புகார் கொடுக்க உள்ளோம்," என்கிறார்.

 
சூரியனார் கோவில் ஆதீனம்

பட மூலாதாரம்,SURIYANARKOVILAADHEENAM/FACEBOOK

படக்குறிப்பு, ஆதீன திருக்கோவில் நிர்வாக குழுவினருடன் சூரியனார் கோவில் ஆதீனம்

ஆதீனம் சொல்வது என்ன?

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அறவே மறுக்கிறார், சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக சுவாமிகள்.

பிபிசி தமிழிடம் பேசிய ஆதீனம், "எங்களுக்கு சமய தீட்சை, விசேட தீட்சை, நிர்வாக தீட்சை, ஆச்சார்ய தீட்சை ஆகியவை கொடுக்கப்படுகின்றன. இதைப் பெற்று சந்நிதானமாகப் பொறுப்புக்கு வருகிறோம். இல்லறத்தில் இருந்தும் மடம் நடத்தலாம். துறவறத்தில் இருந்தும் மடம் நடத்தலாம். எனக்கு முன்பு இருந்து சந்நிதானங்கள், இல்லறத்தில் இருந்து தான் வந்துள்ளனர்," என்கிறார்.

ஹேமாஸ்ரீ உடன் திருமணம் நடந்தது குறித்துப் பேசிய ஆதீனம், "அவருக்குத் தமிழ் தெரியாது. மடத்தின் நிர்வாகத்துக்குள் அவர் வரமாட்டார். அவருக்கு கர்நாடகாவில் தொழில்கள் உள்ளன. அவர் அங்கு தான் இருப்பார். அவருக்கும் எதிர்பார்ப்புகள் இல்லை. எனக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை," என்கிறார்.

கர்நாடகாவில் சூரியனார் கோயில் மடத்தைத் தொடங்குவதற்குத் தனக்குச் சொந்தமான இடத்தை ஹேமாஸ்ரீ கொடுத்துள்ளதாகவும் அவரை அறங்காவலராக நியமித்து, தொடர்ந்து நிர்வாகம் செய்வதற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் பிபிசி தமிழிடம் ஆதீனம் கூறினார்.

தனக்கு முன்பிருந்த சந்நிதானத்துக்கு 102 வயதாகும் போது அவரைப் பராமரிப்பதற்கு ஆள் இல்லாமல் தவித்ததாகவும் ஆதீனம் குறிப்பிட்டார்.

மடத்தின் சொத்துகளை அபகரிக்கவே திருமணம் செய்துள்ளதாக கூறும் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த ஆதீனம், "தவறான குற்றச்சாட்டு. இவர்கள் கூறும் சொத்துகள் எல்லாம் ஆதீனத்தின் பெயரால் உள்ளதே தவிர, ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. மக்களிடம் உள்ள நிலங்களுக்கு குத்தகையும் முறையாக வசூல் செய்யப்படவில்லை," என்கிறார்.

"இப்போது வரை ஆறு கிராமங்கள் மட்டுமே சூரியனார் கோயில் மடத்துக்குச் சொந்தமாக உள்ளன. இவை நிலங்களாக உள்ளன. இங்கு வசிக்கும் மக்களும் அன்றாட வருவாய்க்காக வேலை பார்ப்பவர்கள். அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வசூலிக்க முடியவில்லை," என்கிறார் மகாலிங்க தேசிக சுவாமிகள்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட விஜயரகுநாத தொண்டைமான், ஆறு கிராமங்களை சூரியனார் கோயிலுக்கு தானமாக கொடுத்துள்ளதாக கூறும் ஆதீனம், "அந்தச் சொத்துகளைத் திருவாவடுதுறை ஆதீனமும் பராமரிக்கவில்லை, நாங்களும் பராமரிக்கவில்லை. ஆனால் பட்டயம் மட்டும் உள்ளது. அதை மீட்பதற்கான வேலையும் நடந்து வருகிறது. பெரும்பான்மையான சொத்துகள், திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்," என்கிறார்.

பக்தர்களின் காணிக்கையை வைத்து சூரியனார் கோவில் புனரமைக்கும் வேலைகளைச் செய்து வருவதாகவும் அதில் இருந்தே மடத்தின் அன்றாட செலவுகளையும் கவனித்து வருவதாகவும் கூறுகிறார் ஆதீனம்.

'பக்தராக மட்டுமே வருவார்'

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் விசாரணை குறித்துப் பேசிய ஆதீனம், "என்னிடம் வந்து அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களிடம், 'கர்நாடகாவில் இருந்து ஹேமாஸ்ரீ நிர்வாகம் செய்வார். தமிழ்நாட்டுக்கு பக்தராக மட்டுமே வருவார். எந்த உரிமையும் கோரப் போவதில்லை' எனக் கூறிவிட்டேன். இந்த விவகாரத்தில் சிலர் தேவையில்லாமல் பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள்" என்கிறார்.

ஹேமாஸ்ரீ என்ன சொல்கிறார்?

திருமணச் சர்ச்சை குறித்து ஹேமாஸ்ரீயிடம் பிபிசி தமிழ் பேசியது.

"பா.ஜ.க வைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் மூலம் கடந்த ஜனவரி மாதம் ஆதீனத்தைச் சந்தித்தேன். அவரை நான் திருமணம் செய்வதற்கு முன்பு வரை அவர் ஆதீனம் என்பது தெரியாது. அவருடன் காசிக்குச் சென்றபோது, அவர் ஆதீனம் என்பதையும் சைவ மடங்களில் மிகவும் புகழ்பெற்றதாக சூரியனார் கோவில் இருப்பதையும் அறிந்தேன்,” என்கிறார்.

“நான் ஆதீனத்திடம், 'எனக்குள்ள தொடர்புகள் மூலம் உலக அளவில் சூரியனார் கோயிலுக்கு மடங்களைத் திறக்கலாம்' என்றேன். அதன் ஒருபகுதியாக பிடதியில் உள்ள நிலத்தில் மடம் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

“அந்த நிலத்தின் மதிப்பு ரூ.35 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளது. என்னுடைய சொந்தப் பணத்தில் தான் அங்கு மடத்தைத் திறக்க உள்ளோம். இதற்கு ஆதீனம் ஒப்புதல் கொடுத்தார். ஆனால், சிலர் என் மீதும் ஆதீனம் தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்," என்கிறார்.

 
சூரியனார் கோவில் ஆதீனம்

பட மூலாதாரம்,SURIYANARKOVILAADHEENAM/FACEBOOK

படக்குறிப்பு, அரியலூரில் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஆதினம் (கோப்பு புகைப்படம்)

'இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு'

மேலும் பேசிய ஹேமாஸ்ரீ, " தமிழ் ஊடகங்களில் என்னைப் பற்றித் தவறான தகவல்கள் வெளிவந்துள்ளன. இது நானும் ஆதீனமும் சேர்ந்து எடுத்த முடிவு. இதில் மற்றவர்கள் தலையிடுவதற்கு என்ன உரிமை உள்ளது?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

மடத்தின் சொத்துகளை அபகரிப்பது தொடர்பான சர்ச்சைக்கு பதில் அளித்த ஹேமாஸ்ரீ, "திருமணம் செய்வதற்கு முன்பு வரை என்னுடைய சொத்துகள் பற்றி ஆதீனத்துக்குத் தெரியாது. அதேபோல், அவருக்கு உள்ள சொத்துகள் பற்றியும் எனக்குத் தெரியாது. அது பொதுமக்களின் பணம். அதை நான் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் உள்ள பணமே போதுமானது," என்கிறார்.

"தற்போது சிலர் என் தந்தையைச் சந்தித்து, 'இந்தத் திருமணம் செல்லாது. ரத்து செய்ய வேண்டும்' எனக் கூறி மிரட்டியுள்ளனர். என் தந்தையை அவர்கள் சந்தித்துப் பேச வேண்டிய அவசியம் என்ன? என் முந்தைய கணவர் இறந்த பிறகு பெற்றோருடன் தங்கியிருக்கிறேன். எங்கள் குடும்பத்துக்கு ராம்நகரில் நற்பெயரில் உள்ளது. இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ள இருக்கிறேன்," என்கிறார் ஹேமாஸ்ரீ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூரியனார் கோவில் ஆதீனம் திருமண சர்ச்சை - மடத்தில் இருந்து வெளியேறியது ஏன்?

கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம்

பட மூலாதாரம்,FACEBOOK/SOORIYANARKOVILAADHEENAM

படக்குறிப்பு, சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிகப் பண்டார சுவாமிகள்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

அறநிலையத்துறையிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மடத்தை விட்டு வெளியேறியிருக்கிறார், கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம்.

உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாகவே, மடத்தைவிட்டு ஆதீனம் வெளியேறியதாகக் கூறுகின்றனர், மடத்தின் நிர்வாகிகள்.

இதன் பின்னணியில் திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தூண்டுதல் உள்ளதாகக் கூறுகிறார், சூரியனார் கோவில் ஆதீனம்.

மடத்தின் நிர்வாக பொறுப்புகளில் இருந்து சூரியனார் கோவில் ஆதீனம் விலகியது ஏன்?

 

தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்களில் கும்பகோணத்தில் உள்ள சூரியனார் கோவில் ஆதீனமும் ஒன்று. இந்த மடத்தின் 27-வது சந்நிதானமாக சங்கரலிங்க தேசிக சுவாமிகள் இருந்தார்.

இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு பரிபூரணம் (மரணம்) அடைந்ததைத் தொடர்ந்து, 28-வது ஆதீனமாக மகாலிங்க தேசிகப் பண்டார சுவாமிகள் ஆதீனமாக பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இதற்கு முன்னதாக, இவர் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் தம்பிரானாக இருந்துள்ளார்.

திருமண சர்ச்சை

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சூரியனார் கோவில் ஆதீனமாகப் பொறுப்பில் இருக்கும் மகாலிங்க தேசிக சுவாமிகள், அண்மையில் பெங்களூருவைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை கர்நாடக மாநிலத்தில், இந்து திருமணச் சட்டத்தின்படி பதிவு செய்துள்ளார்.

ஆதீனம் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல்கள் பரவவே, "ஆமாம். நான் திருமணம் செய்து கொண்டது உண்மைதான். நான்கு பேருக்குத் தெரிந்து வெளிப்படையாகத் திருமணம் செய்து கொண்டேன்," என ஆதீனம் விளக்கம் அளித்தார்.

மேலும், மடத்தின் விதிகளுக்கு மாறாக தான் நடந்து கொள்ளவில்லை எனவும் கூறியிருந்தார்.

ஆனால், மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரிக்கவே இந்தத் திருமணம் நடைபெற்றதாக, சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் (சமய, நிர்வாகப் பணிகளை மேற்கொள்பவர்) சுவாமிநாத தேசிக சுவாமிகள் குற்றம் சுமத்தினார்.

பிபிசி தமிழிடம் அவர் முன்னர் பேசும்போது, "சூரியனார் கோவில் மடத்தின் மரபுப்படி இல்லறத்தில் இருந்து துறவறம் மேற்கொள்ளலாம். ஆனால், துறவறம் வந்த பிறகு இல்லறம் ஏற்கக் கூடாது. இந்த மரபை ஆதீனம் மீறிவிட்டார்," என்றார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, கடந்த வாரம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மடத்தில் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர்களிடம் பேசிய சூரியனார் கோவில் ஆதீனம், 'கர்நாடகாவில் அமைய உள்ள ஆசிரமத்தின் நிர்வாகப் பொறுப்புகளை மட்டும் ஹேமாஸ்ரீ கவனிப்பார். தமிழ்நாட்டில் உள்ள மடத்துக்கு உரிமை கோர மாட்டார்' என விளக்கம் அளித்தார்.

இதை பிபிசி தமிழிடமும் சூரியனார் கோவில் ஆதீனம் கூறியிருந்தார்.

 
கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, உள்ளூர் மக்கள் சூரியனார் கோவில் மடத்தின் முன்பாகத் திரண்டு கோஷம் எழுப்பினர்

ஆதீனம் எடுத்த முடிவு

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (நவம்பர் 11) சூரியனார் கோவில் ஆதீனத்துக்கு எதிராகக் கும்பகோணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) அன்று உள்ளூர் மக்கள், மடத்தின் முன்பாகத் திரண்டனர்.

மடத்தின் மரபுகளை மீறியதால் ஆதீனப் பொறுப்பில் இருந்து வெளியேறுமாறு கூறி அவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பதற்குப் காவல் துறை குவிக்கப்பட்டனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்படவே, மடத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாகக் கூறி, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மடத்தின் சாவியை ஒப்படைத்திருக்கிறார், சூரியனார் கோவில் ஆதீனம்.

கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க மடத்தின் முன்பு காவல் துறை குவிக்கப்பட்டனர்

இதன்பிறகு நடந்த விவரங்களை பிபிசி தமிழிடம் விவரித்தார், சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் சுவாமிநாத சுவாமிகள், "மடத்தின் முன்பு மக்கள் திரண்டதால், 'சொத்துகளுக்குச் சேதம் வரக் கூடாது' என்பதற்காக, நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஆதீனம் அறிவித்தார்.''

“அப்போது அறநிலையத்துறை அதிகாரிகள், மடத்தின் நிர்வாகப் பொறுப்பை திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். 'அவர்களிடம் கொடுக்க விரும்பவில்லை. அறநிலையத்துறையிடமே ஒப்படைக்கிறேன்' என ஆதீனம் கூறிவிட்டார்." என்றார்.

கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம்
படக்குறிப்பு, சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் சுவாமிநாத தேசிக சுவாமிகள்

ஒன்று கூடும் சைவ ஆதீனங்கள்

நிர்வாகப் பொறுப்பில் இருந்து மகாலிங்க தேசிக சுவாமிகள் விலகியுள்ள நிலையில், ஆதீன பொறுப்பில் இருந்தும் அவரை நீக்குவது குறித்து பிற சைவ மடங்களின் ஆதீனங்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுக்க உள்ளதாகக் கூறுகிறார், சுவாமிநாத சுவாமிகள்.

"ஆதீனப் பொறுப்பில் இருந்து அவரை விலக்குவது தொடர்பாக, 16 மடங்களின் ஆதீனங்கள் கூட்டு அறிக்கை கொடுக்க வேண்டும் எனவும், திருவாவடுதுறை ஆதீனம் மட்டும் தனியாக கருத்துரு கொடுக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை கூறியுள்ளது," என்கிறார்.

பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "மடத்தின் சம்பிரதாயத்தில் இருந்து ஆதீனம் விலகியதுதான் பிரச்னை. மடத்தின் சொத்துகளை மீட்கும் முயற்சியில் இறங்கியதால், தனக்கு எதிராகச் சிலர் செயல்பட்டதாக ஆதீனம் கூறுகிறார். அப்படியானால், மடத்தின் மரபை மீறித் திருமணம் செய்து கொண்டதை எவ்வாறு ஏற்பது?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

"இனிவரும் நாட்களில் ஆதீனமாக மகாலிங்க தேசிக சுவாமிகள் தொடர்வது சிரமம் தான்," எனக் கூறும் சுவாமிநாத சுவாமிகள், "திருமணம் என்ற சூழ்ச்சி வலையில் ஆதீனம் சிக்க வைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை அவர்தான் உணர வேண்டும். திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது," என்கிறார்.

 
கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம்
படக்குறிப்பு, சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிகப் பண்டார சுவாமிகள்

சூரியனார் கோவில் ஆதீனம் சொல்வது என்ன?

மடத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகியது குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக சுவாமிகள், "உள்ளூரில் சிலர் தேவையற்றப் பிரச்னைகளை ஏற்படுத்தியதால், அறநிலையத்துறையிடம் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டேன்," என்றார்.

ஆனால், சூரியனார் கோவில் ஆதீனமாகத் தான் தொடர்வதாக பிபிசி தமிழிடம் கூறிய ஆதீனம், "இந்த விவகாரத்தின் பின்னணியில் திருவாவடுதுறை ஆதீனத்தின் தூண்டுதல் இருக்கிறது," என்கிறார்.

இதுகுறித்து விவரித்த ஆதீனம், "சூரியனார் கோவில் மடத்தின் சொத்துகள் பெருமளவு திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதைச் சட்டரீதியாக மீட்கும் முயற்சியில் இறங்கியதால், எனக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர். இதைச் சட்டரீதியாக எதிர்கொள்வேன்," என்றார்.

ஆதீனங்கள் ஒன்றுகூடி முடிவெடுக்க உள்ளது தொடர்பாகக் கேட்டபோது, "அது வழக்கமான ஒன்றுதான்," என்று மட்டும் பதில் அளித்தார்.

திருவாவடுதுறை மடத்தின் நிர்வாகிகள் பதில்

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய திருவாவடுதுறை ஆதீன மடத்தின் பொதுமேலாளர் ராஜேந்திரன், "சூரியனார் கோவில் மடத்தின் ஆதீனத்தை நியமிப்பது மட்டும்தான் எங்களின் வேலை. அதன் நிர்வாகத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை," என்கிறார்.

துவக்கத்தில் இருந்தே தங்கள் மீது சூரியனார் கோவில் ஆதீனம் குறை கூறிவருவதாகக் கூறும் ராஜேந்திரன், "ஆதீனத்துக்கு எதிராக உள்ளூரில் உள்ள மக்கள் பிரச்னை செய்துள்ளனர். அதைக் கேள்விப்பட்டு அங்கே சென்றோம். அவர் மீதான சர்ச்சையை மறைப்பதற்காக எதையோ பேசி வருகிறார். இதில் எங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.