Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

சென்னையில் அரசு மருத்துவமனையில், மருத்துவரை கத்தியால் குத்திய  இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,  இளைஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். தங்கள் தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர்.

கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய  இளைஞர்கள் 4 பேரை பிடித்த மருத்துவமனை ஊழியர்கள், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதில் இருவரை கைது செய்த போலீசார் 4 பேரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கத்தியால் குத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198587

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை தாக்கியது யார்? என்ன காரணம்?

சென்னை, அரசு மருத்துவர் மீது தாக்குதல்
படக்குறிப்பு, சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை மற்றும் தாக்கப்பட்ட மருத்துவர்

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

'தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை' எனக் கூறி சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது?

அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை (KCSSH)செயல்படுகிறது. இன்று (நவம்பர் 13 புதன்கிழமை) காலையில் வழக்கம் போல சிகிச்சைக்காக நோயாளிகள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.

மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவில் டாக்டர் பாலாஜி ஜெகன்னாத் இருந்துள்ளார். இவர் இத்துறையின் தலைவராக இருக்கிறார். காலை 10.30 மணியளவில் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர், மருத்துவர் பாலாஜியை அவரது அறையில் சந்தித்துள்ளார்.

 

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் பாலாஜியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மருத்துவர் பாலாஜி படுகாயம் அடைந்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட மருத்துவமனை ஊழியர்கள், தாக்குதலில் ஈடுபட்ட சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த இடத்தில் படுகாயத்துடன் இருந்த மருத்துவர் பாலாஜியை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை இயக்குநர் கூறியது என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி, "உடலில் நெறிக்கட்டுதைப் போல கட்டிகள் ஏற்படும் பிரச்னைக்காக தனது தாயை சிகிச்சைக்காக அந்த நபர் அழைத்து வந்தார். அவரது வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன" என்றார்.

தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்த மருத்துவர் பார்த்தசாரதி, "அவர் நல்லபடியாக வந்துள்ளார். டாக்டருடன் அரைமணி நேரம் உரையாடியுள்ளார். இதற்கு முன்னதாக தனது தாயை டிஸ்சார்ஜ் செய்து தனியாரிடம் சென்று சிகிச்சை அளித்துள்ளார்" என்றார்.

விக்னேஷ் தாக்கியது ஏன்?

சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் மீது விக்னேஷ் என்ற நபர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார்.

தொடக்கத்தில், இந்தச் சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், "தாக்குதலில் ஈடுபட்ட நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர்" என்றார்.

பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய்க்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

சென்னை, அரசு மருத்துவர் மீது தாக்குதல்

அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனையில் கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மருத்துவர் பாலாஜி மீது அவர் தாக்குதல் நடத்தியதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அரசு மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

'எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க நடவடிக்கை'

மருத்துவர் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளிக்கவும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

"அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது" என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். "இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.

சென்னை, அரசு மருத்துவர் மீது தாக்குதல்

பட மூலாதாரம்,X/STALIN

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

சென்னையில் அரசு மருத்துவமனைக்குள் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது." என்று சாடியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

இதேபோல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் அரசு மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்துள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்கா வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசு மருத்துவர் மீது தாக்குதல்: குற்றம் சுமத்தப்பட்டவரின் குடும்பத்தார் கூறுவது என்ன?

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவனை, மருத்துவர் மீது தாக்குதல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

தனது தாயின் உடல்நிலை மோசம் அடைவதற்கு மருத்துவர் பாலாஜியின் சிகிச்சையே காரணம் என்கிறார், குற்றம் சுமத்தப்பட்ட விக்னேஷின் சகோதரர்.

இதனை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவனையின் இயக்குநர் பார்த்தசாரதி மறுத்துள்ளார்.

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது?

என்ன நடந்தது?

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையின் முதல் தளத்தில் புற்றுநோய் மருத்துவப் பிரிவு செயல்படுகிறது.

இத்துறையின் தலைவராக மருத்துவர் பாலாஜி ஜெகந்நாத் பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமையன்று (நவம்பர் 13) காலை 10:30 மணியளவில் மருத்துவர் பாலாஜியின் அறைக்குள் புகுந்த நபர் ஒருவர், அந்த அறையின் கதவைத் தாழிட்டதாக கூறப்படுகிறது.

இதன்பிறகு பாலாஜியின் அறைக்குள் இருந்து பலத்த சத்தம் வரவே, எதிர் அறையில் பணியில் இருந்த வாய் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவத்துறையின் மருத்துவர் சேதுராஜன் வந்து பார்த்துள்ளார்.

முதல் தகவல் அறிக்கை சொல்வது என்ன?

இதுதொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் மருத்துவர் சேதுராஜன் அளித்துள்ள புகாரில், "சத்தம் கேட்டு அங்கு சென்றேன். டாக்டர் பாலாஜியின் அறைக்கதவை தட்டியபோது, அது உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. கதவின் கண்ணாடி வழியாகப் பார்த்தபோது, மருத்துவர் பாலாஜி ஜெகந்நாதனிடம் ஒருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

அறையின் கதவைத் தட்டிய போது அதைத் திறக்காமல் மேற்படி நபர் வாக்குவாதம் செய்து கொண்டே கையால் அவரை அடித்தார். தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவர் பாலாஜியின் தலைப்பகுதி, இடது கழுத்துப் பகுதி, இடது காது மடல் மற்றும் இடது தோள்பட்டை ஆகிய பகுதிகளில் வெட்டினார்," எனக் கூறியுள்ளார்.

அதன்பின்னர், அறையின் கதவைத் திறந்து அந்த நபர் தப்பித்து வெளியே வரும்போது மருத்துவர் சேதுராஜன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் அவரைப் பிடிக்க முயற்சி செய்துள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

அப்போது, 'என் அம்மாவுக்குச் சரியாக மருத்துவம் பார்க்கவில்லை என்பதால் அவரைக் கொலை செய்ய வந்தேன். அவர் பிழைக்க மாட்டார்' என அந்த நபர் கூறியதாகவும் பிறகு மருத்துவமனையின் அலுவலகக் கண்காணிப்பாளர் முத்து ரமேஷ் மற்றும் ஊழியர்கள், தரைதளத்தில் வைத்து மேற்படி நபரை மடக்கிப் பிடித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவனை, மருத்துவர் மீது தாக்குதல்
படக்குறிப்பு, மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ்

ஏழு பிரிவுகளில் வழக்கு

போலீஸ் நடத்திய விசாரணையில் மருத்துவரைக் கத்தியால் குத்திய நபரின் பெயர் விக்னேஷ் என்பதும், அவரது தாய் பிரேமாவுக்கு ஏற்பட்டப் புற்றுநோய் பாதிப்புக்கு மருத்துவர் பாலாஜி உரிய சிகிச்சை அளிக்காத கோபத்தில் இப்படியொரு செயலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மருத்துவர் சேதுராஜன் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் மீது எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்பிறகு, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தாக்குதலில் மருத்துவர் பாலாஜிக்கு அதிகப்படியான ரத்தம் வெளியேறியுள்ளது. அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில் மருத்துவர் பாலாஜியை அமைச்சர் மா.சுப்ரமணியன் சந்தித்துப் பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீடியோ காலில் வந்து மருத்துவர் பாலாஜியிடம் நலம் விசாரித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

மருத்துவர் மீதான தாக்குதல் அரசு மருத்துவர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், குற்றம் சுமத்தப்பட்டவர் தரப்பின் புகார்களும் பேசுபொருளாக மாறியுள்ளன.

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவனை, மருத்துவர் மீது தாக்குதல்

படக்குறிப்பு, சம்பவம் நடந்த மருத்துவர் பாலாஜியின் அறை

சிகிச்சையில் அலட்சியமா?

மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய விக்னேஷின் சகோதரர் கமலேஷிடம் பிபிசி தமிழ் பேசியது.

"என் அம்மா பிரேமாவுக்கு ஹாட்கின் லிம்போமா (Hodgkin lymphoma) என்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. உடலில் நெறிக்கட்டுவதைப் போல பிரச்னைகள் ஏற்படும். அம்மாவுக்கு வயிற்றில் நெறி கட்டியது. கடந்த ஜனவரி முதல் ஜூன் 18-ஆம் தேதி வரையில் கிண்டி அரசு மருத்துவமனையில் அம்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. துவக்கத்தில் இருந்தே மருத்துவ சிகிச்சையில் டாக்டர் பாலாஜி அலட்சியம் காட்டி வந்தார்," என்கிறார்.

தன் தாயாருக்கு எட்டு ஊசிகளை மருத்துவர் பாலாஜி செலுத்தியதாகக் கூறும் கமலேஷ், "ஐந்தாவது ஊசியை போடும் போது, 'எனக்கு மூச்சு வாங்குகிறது' என அம்மா சொன்னார். அதற்குப் பதில் அளித்த டாக்டர் பாலாஜி, 'நீ டாக்டரா... இல்லை நான் டாக்டரா?' எனச் சத்தம் போட்டார்,” என்கிறார்.

ஓர் ஊசியைப் போடும்போது, அதனால் பின்விளைவுகள் ஏற்படும் என்பது மருத்துவருக்கு தெரியும். அதற்கும் சேர்த்து அவர்கள் சிகிச்சை அளித்திருக்க வேண்டும். அம்மாவுக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால், அந்த ஸ்கேனை டாக்டர் பொருட்படுத்தவில்லை," என்கிறார்.

எட்டாவது ஊசியைப் போடும்போது தனது தாய்க்கு மூச்சு விடுவதில் அதிகச் சிரமம் ஏற்பட்டதாகவும், இதுகுறித்துக் கேட்டபோது 'இந்த ஊசியைப் போட்டால் அப்படித்தான் ஆகும்' என மருத்துவர் பாலாஜி கூறியதாகவும் கமலேஷ் கூறுகிறார்.

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவனை, மருத்துவர் மீது தாக்குதல்
படக்குறிப்பு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவனை

சம்பவ நாளில் என்ன நடந்தது?

"ஒருகட்டத்தில், அம்மாவுக்கு நுரையீரலில் பாதிப்பு அதிகரித்தது. ஆனால், அதற்கான சிகிச்சை கிண்டியில் இல்லை எனக் கூறி ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்," என்கிறார் கமலேஷ்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர்களும், 'சிறிய அளவில் தொற்று ஏற்பட்டாலும் சீரியஸான நிலைக்குப் போய்விடுவார்' எனக் கூறினார்கள் என்கிறார் அவர்.

இதனால் தனது அண்ணன் விக்னேஷூக்கு மன வருத்தம் ஏற்பட்டதாகக் கூறும் கமலேஷ், "ஒருகட்டத்தில் ஓமந்தூராரில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு அம்மாவை அழைத்துச் சென்றோம்," என்கிறார்.

தனியார் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகு, தாயார் எழுந்து நடமாடுவதற்குச் சிரமப்பட்டார் என்றும் தற்போது ஆக்சிஜன் உதவியோடு அவர் வாழ்ந்து வருகிறார் என்றும் கமலேஷ் கூறுகிறார்.

இதையடுத்து, புதன்கிழமை நடந்த தாக்குதல் சம்பவத்தை விவரித்தார்.

"நேற்று (நவம்பர் 13) காலை 7:30 மணியளவில் அம்மாவுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக பெருங்களத்தூரில் இருந்து வடபழனிக்குச் சென்றோம். எங்களுடன் வருவதற்கு விக்னேஷ் மறுத்துவிட்டார். நாங்கள் வெளியில் சென்றவுடன், கிண்டிக்குச் சென்றிருக்கிறார். இப்படி செய்வார் என நாங்கள் நினைக்கவில்லை," என்கிறார்.

ஆட்டோமொபைல் என்ஜினியரிங் துறையில் பட்டயப் படிப்பை முடித்துள்ள விக்னேஷ், சில மாதங்களுக்கு முன்பு இதயநோய் பாதிப்புக்காக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததாகவும் பிபிசி தமிழிடம் கமலேஷ் குறிப்பிட்டார்.

தங்கள் தந்தை இறந்துவிட்டதாகவும் உடன்பிறந்த மற்றொரு அண்ணனின் தயவில் குடும்பத்தை நடத்தி வருவதாகவும் கமலேஷ் கூறுகிறார்.

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவனை, மருத்துவர் மீது தாக்குதல்
படக்குறிப்பு, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்

புகாரை மறுக்கும் மருத்துவர்கள்

விக்னேஷ் தரப்பின் குற்றச்சாட்டுக்குக் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

"பாதிக்கப்பட்டவர்கள் என்ன வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம். தாக்குதலுக்கு ஆளான மருத்துவரிடம் கேட்டால் அவரும் குற்றம் சுமத்துவார். மருத்துவர் பாலாஜி குணமாகி வந்து விளக்கம் அளித்தால் உண்மை தெரியும். அதுவரை ஊகத்தின் அடிப்படையில் பதில் சொல்வது நன்றாக இருக்காது," எனக் கூறுகிறார்.

"விக்னேஷின் தாயார், கிண்டி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையைப் பெற்று வந்துள்ளார். பிறகு மருத்துவமனைகளை மாற்றி சிகிச்சை பெற்றுள்ளனர். அடிப்படையில் அவர்களிடம் தவறு இருக்கிறது," என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியைத் தான் சந்தித்தபோது, நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் தன்னை தாக்கியிருக்கலாம் என நினைத்ததாகவும் அந்த நோயாளியின் விவரம் எதுவும் தனக்குத் தெரியவில்லை எனக் கூறியதாக குறிப்பிடுகிறார், மருத்துவர் சாந்தி.

புற்றுநோய் மருத்துவத்தில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் பாலாஜி குறித்து இதுவரையில் யாரும் புகார் கூறியதில்லை எனக் கூறும் மருத்துவர் சாந்தி, "நோயாளியின் உடலுக்கு ஏற்ற அளவிலேயே மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. வேண்டும் என்றே மருத்துவர் செயல்பட்டதாக அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது,” என்கிறார்.

நோயாளிக்குப் பிரச்னை ஏற்பட்டால் மருத்துவமனையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் புகார் கூறலாம். அதைவிடுத்து ஆயுதத்தால் தாக்குவதை ஏற்க முடியாது," என்கிறார்.

 
சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவனை, மருத்துவர் மீது தாக்குதல்
படக்குறிப்பு, கிண்டி மருத்துவமனையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மருத்துவர்கள்

தொடரும் மருத்துவர்கள் போராட்டம்

இந்தச் சம்பவம், அரசு மருத்துவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அவசர சிகிச்சையைத் தவிர்த்து, புறநோயாளிகள் பிரிவு, திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் உட்பட இதர மருத்துவச் சேவைகளை முற்றாகப் புறக்கணிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டேன்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், உரிய பணிப் பாதுகாப்பை வழங்கக் கோரி, வியாழன் (நவம்பர் 14) அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவனை, மருத்துவர் மீது தாக்குதல்
படக்குறிப்பு, மருத்துவமனைக்கு வந்திருந்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேமா

நோயாளிகள் தவிப்பு

இதனால், அரசு மருத்துவனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்கள் பாதிப்புக்கு ஆளாகினர். கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பலரும் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுவதைப் பார்க்க முடிந்தது.

மருத்துவமனைக்கு வந்திருந்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேமா, "இதயப் பிரச்னைக்காக மருந்து வாங்க வந்தேன். போராட்டம் நடப்பதால் மருந்து கொடுக்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார்கள். டெஸ்ட் எடுக்கவும் மறுத்துவிட்டார்கள். இனி எப்போது வரவேண்டும் என்ற கேள்விக்கும் பதில் இல்லை," என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தனது மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக சங்கரன்கோவிலில் இருந்து சென்னை வந்திருந்த வேலுச்சாமி என்பவர், "அஞ்சு மாதமாக என் மனைவியை சிகிச்சைக்காக இங்கு அழைத்து வருகிறேன். இன்று செக்அப் செய்துகொண்டு மருந்து வாங்கிப்போக வந்தேன். டாக்டர் மேல் தாக்குதல் நடந்ததால் இன்றைக்கு மருந்து தர வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர்,” என்கிறார்.

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவனை, மருத்துவர் மீது தாக்குதல்
படக்குறிப்பு, அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் செந்தில்

தொடரும் போராட்டம்

இதுதொடர்பாக, மருத்துவ சங்கங்களுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் செந்தில், "திட்டமிட்டபடி போராட்டம் தொடரும்," என்றார்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய டாக்டர் செந்தில், "ஒவ்வொரு டாக்டருக்கும் ஒரு போலீஸ் என்பது சாத்தியமில்லை. ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். நோயாளி உடன் வருகிறவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு வர வேண்டும். இந்தமுறை உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்கிறார்.

இதற்குப் பதில் அளித்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவமனைக்கு நோயாளியுடன் வருவோருக்கு நீல நிற டேக் பொருத்தப்படுவது, அரசு மருத்துவமனைகளில் காவல் உதவி மையம் அமைப்பது உள்பட பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.