Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பது சில மாநிலங்களில் நடந்துள்ளது

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பது சில மாநிலங்களில் நடந்துள்ளது (கோப்புப்படம்)

நாட்டின் பல மாநிலங்களில் புல்டோசர்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை இடிப்பது தொடர்பான வழக்கில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் புல்டோசர்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை இடித்த பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பான வழக்கில், “குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவருடைய வீட்டை எப்படி இடிக்க முடியும்?” என உச்ச நீதிமன்றம் செப்டம்பர் மாதம் கேள்வி எழுப்பியிருந்தது. இத்தகைய வழக்குகளில் வீடுகளை இடிப்பதற்கு முன்பாக பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தான் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் இன்று (நவ. 13) பத்து வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளனர்.

குற்ற வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக, ஒருவருடைய வீட்டையோ அல்லது அவருக்கு சொந்தமான மற்ற கட்டடங்களையோ இடிப்பது, சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“சாமானியர் ஒருவர் வீடு கட்டுவதென்பது, அவருடைய பல ஆண்டுகள் கடின உழைப்பு, கனவு மற்றும் லட்சியத்தின் வெளிப்பாடு,” என உத்தரவை பிறப்பிக்கும் போது நீதிபதி கவாய் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள 10 வழிகாட்டுதல்கள்

1. உள்ளூர் நகராட்சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவு அல்லது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பான 15 நாட்கள், இரண்டில் எது அதிகமோ அதற்கேற்ப முன்பே நோட்டீஸ் அனுப்பாமல், எவ்வித கட்டட இடிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது.

2. இடிப்புக்கான காரணம் உள்ளிட்ட விரிவான தகவல்கள் அடங்கிய நோட்டீஸ், பதிவு செய்யப்பட்ட தபால் வாயிலாக அனுப்பும் அதேவேளையில் அந்த கட்டடத்திலும் ஒட்டப்பட வேண்டும்.

3. நடவடிக்கையை முன்தேதியிட்டு செயல்படுத்துவதாக எழும் குற்றச்சாட்டை தவிர்க்க, உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட உடன், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

4. ஒவ்வொரு நகராட்சி நிர்வாகமும் இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குள் இதற்கென டிஜிட்டல் இணையதளத்தை உருவாக்க வேண்டும். அதில், நோட்டீஸ் அனுப்பப்பட்டது, அதற்கான பதில், அதுதொடர்பான உத்தரவுகள் குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும்.

5. சம்பந்தப்பட்டவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்த சந்திப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும்.

 
கட்டடங்களை இடிப்பதற்கு முன்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, கட்டடங்களை இடிப்பதற்கு முன்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது

6. கட்டடத்தை இடிப்பதற்கான இறுதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தல் மற்றும் நீதித்துறை ஆய்வுக்கு உரிமையாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

7. கட்டடத்தை இடிப்பதற்கான உத்தரவு இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

8. உத்தரவிடப்பட்ட 15 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படாத கட்டடத்தை இடிக்க அல்லது அகற்றுவதற்கான வாய்ப்பு உரிமையாளருக்கு வழங்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை என்றால், இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

9. கட்டடம் இடிக்கப்படுவதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும், அதுதொடர்பான அறிக்கையும் தயார் செய்யப்பட வேண்டும்.

10. இந்த வழிமுறைகளுள் ஏதாவது மீறப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகுக்கும். விதிகளை மீறி கட்டடத்தை இடித்தது கண்டறியப்பட்டால், இடிக்கப்பட்ட கட்டடத்திற்கான மறுசீரமைப்புக்கு ஆகும் செலவை அதிகாரிகளே தங்களின் தனிப்பட்ட பணத்திலிருந்து வழங்க வேண்டும்.

எனினும், சாலை போன்ற பொது இடத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டடங்களுக்கும், நீதிமன்றத்தால் இடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கட்டடங்களுக்கும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தாது என, நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

வழக்கின் பின்னணி

நாட்டின் பல மாநிலங்களில் புல்டோசர்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை இடித்த பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஏப்ரல் 2022 இல் டெல்லி ஜஹாங்கிர்புரியில் இத்தகைய இடிப்பு நடவடிக்கை திட்டமிடப்பட்ட நேரத்தில், உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த 2022-ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி தினத்தன்று ஜஹாங்கிர்புரியில் நடந்த ஊர்வலத்தில் வகுப்புவாத வன்முறைகள் நடந்தன. அதன்பிறகு, அந்த பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு விதிமீறல் கட்டுமான நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகம், புல்டோசர் கொண்டு அவற்றை இடிக்கப் போவதாக கூறியிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. ஆனால், அதிகாரிகள் புல்டோசர்களை தண்டனையாகப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்க மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

இந்த மனுதாரர்களில் ஒருவரான மாநிலங்களவை முன்னாள் எம்பியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பிருந்தா காரத் ஜஹாங்கிர்புரியில் புல்டோசர் நடவடிக்கையின் போது சம்பவ இடத்திற்கு வந்திருந்தார்.

 
விதிகளை மீறி கட்டடங்களை இடித்தால், அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழிவகுக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, விதிகளை மீறி கட்டடங்களை இடித்தால், அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழிவகுக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

செப்டம்பர் 2023 இல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சில மனுதாரர்களின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை மாநில அரசு இடிப்பது அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்தார்.

வீடு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-ன் கீழ் வாழும் உரிமையின் ஒரு அம்சம் என அவர் தெரிவித்தார்.

இடிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கில்தான், குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும் என்று நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வி.விஸ்வநாத் அமர்வு கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இத்தகைய இடிப்பு நடவடிக்கை தேவைப்படும் போது அதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் உருவாக்கும் என்றும், நீதிபதிகள் அமர்வு அப்போது கூறியிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.