Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

க.வைத்திலிங்கம்

கடந்த தேர்தலில் மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். உண்மைத் தன்மையுடனும் வெளிப்படையாகவும் அவர்கள் வாக்களித்திருந்தனர். யாரும் யாருக்கும் அழுத்தம் கொடுத்ததாக இல்லை. மக்கள் சுய விருப்பின் பேரில் வாக்களித்தனர். அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கக் கூடிய சூழ்நிலையம் காணப்பட்டது.  கடந்த தேர்தலில் பெரும்பான்மை மக்களால் கொடுக்கப்பட்ட தீர்ப்பைப் பலரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை, அவர்களதும் அவர்கள் தொடர்பாக வெளிவரும் சமூக வலைத்தளப் பதிவுகளும் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த தேர்தலுக்குப் பிறகு தமிழ் மக்களாகிய நாம் எங்கிருக்கிறோம்? எமது அரசியல் எதிர்காலம் என்ன? எம்மால் இழைக்கப்பட்ட தவறுகள் எவை? அவை எப்படி ஏற்பட்டன? அதற்கு யார் காரணம்? இழைத்த தவறுகளை எப்படி சரிசெய்யப் போகிறோம்? சரியான பாதையில் செல்ல வழிகாட்டாதது தலைமைகள் தவறா? அப்படியாயின் அதனைச் சரி செய்வது எப்படி? மாற்று வழி என்ன? அதற்கான தேடலில் நாம் இருக்கிறோமா? என்றெல்லாம் சிந்திப்பதைவிட்டு விட்டு அநுரவையும், அர்ச்சுனாவையும் பற்றி அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோம். நாம் எம்மைப் பொருத்தமானவர்களாக வைத்திருக்காததால் தோற்றுப் போய்விட்டோம் என்பதை ஜீரணிக்க முடியாத மனோநிலையில் உள்ளவர்களின் உளவியல் சிக்கலாகத்தான் இதனைப் பார்க்க முடிகிறது.

அநுரவின் அரசு நீடிக்காது, அவர் இந்தியாவின் மனதை வெல்லவில்லை, அதனால் இந்தியா கோபமாக இருக்கிறது. அவர் சீனாவின் பக்கம் சார்ந்திருக்கிறார் என இந்தியா சந்தேகப்படுகிறது. அதனால்தான் தேர்தலுக்குப் பின்பு ரணிலை அழைத்து அது பேசி இருக்கிறது. அநுர அரசு ஒரு கம்யூனிஸ்ட் கொள்கை சார்ந்தது. எனவே அமெரிக்கா தலையிடி கொடுக்கும்.அது மட்டுமல்லாது அநுர அணியினர் எளிமைபோல் காட்டுவது தற்காலிக நாடகம். சமூக அரசியல்வாத நீரோட்டத்துக்குள் வந்துவிட்டால் அவர்களும் ஊழல் செய்வர், மோசடிகளிலும் ஈடுபடுவர் – என்றெல்லாம் கற்பனைக் கதைகளை உலாவவிட்டு தமது மனதைச் சாந்தப்படுத்துபவர்களாகத்தான் தமிழர்களைப் பார்க்க வேண்டி இருக்கிறது. இதனைத்தான் எம்மவரை உளவியல் சிக்கலுள்ளவர்கள் என்றேன்.

தமிழ் அரசியல் தோல்வி பற்றிப் பேசும்போது, “மக்கள் மத்தியில் அரசியல் களம் பற்றிய தெளிவு தாராளமாக உண்டு.ஏன் இப்படி நடந்து கொண்டனர் எனத் தெரியவில்லை” எனச் சொல்லுகின்றனர் ஒருசாரார். “இல்லை அது பற்றிய விழிப்புணர்வு போதாதனாலேயே இப்படி வாக்களித்துள்ளனர் ” என மறு சாரார் சொல்லி வருகிறார்கள். எது எப்படி இருப்பினும் மகேசனின் முடிவு மக்கள் தீர்ப்பாக வந்திருப்பதாக நம்புவோமாக.

மக்களுக்கு எங்களைப் பிடிக்கவில்லை. எங்களது செயற்பாட்டைப் பிடிக்கவில்லை அதனால்தான் அவர்கள் வாக்களிக்கவில்லை என்று  தோற்றுப்போனவர்கள் யாராவது ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? வாக்குப் போடாததற்கு மக்களைக் குறைகூறும் நீங்கள் அவர்கள் சார்ந்த விடயங்களில் உண்மையாக இல்லை என்ற உங்கள் குறைகளைக் கண்டு கொள்ளாதது ஏன்? என்னத்தைச் சொல்லி மக்கள் வாக்கைப் பெற்றுக் கொண்டீர்களோ, அதனை நிறைவேற்றாமல், அதற்குரிய காரணத்தையும் சொல்லாமல் மீண்டும் வாக்கைக் கேட்கச் சென்றிருக்கிறீர்கள். அதுவும் இம்முறை, இலத்திரனியல் ஊடகங்களையே அதிகம் நம்பி, குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு, சம்பளத்துக்கு ஆட்களை அமர்த்தி அவர்களினூடாகவே வாக்காளர்களை சந்தித்திருக்கிறீர்கள்.  உங்களில் பெரும்பாலானவர்கள் துண்டுப் பிரசுரங்களினூடாகவும், பதாதைகளினூடாவும், பத்திரிகைகளினூடாகவுமே மக்களைச் சந்தித்திருக்கிறீர்கள். அதற்கேற்றவாறு மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். அடுத்தது அமையப்போகும் அநுர அரசில் “சலுகை அரசியலுக்கு இடமில்லை” என்பதை மக்கள் திட்டவட்டமாக அறிந்திருந்தனர். இந்த விடயத்தில் மக்களே சரியான கருத்துக் கணிப்பாளர்கள் எனத் தெரியவருகிறது.

அது மட்டுமல்லாது தோற்றுப்போனவர்களின் மௌனமே அவர்கள் தோல்விக்கு காரணம். மத்தியில் பதவி வகித்த சிங்கள மேலாதிக்க அரசுக்கு துணைபோய் கோடி கோடியாகச் சுருட்டிக் கொண்டிருந்த தமிழர்கள் பற்றிப் பேசத் தவறியது யார் குற்றம்? அரசியல் என்ற போர்வையிலே குண்டர்கள் ஆட்சி நடைபெற்றிருக்கிறது. அரசியல்வாதிகளின் வீடுகளிலே சில அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் நடைபெற்று வந்திருக்கின்றன. பல சமயங்களில் அரசியல்வாதிகள் அரச அதிகாரிகளாகவும் செயற்பட்டு தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் மக்களிடையே உண்டு. தமிழர் பரப்பிலுள்ள அரச நிறுவனங்களில் ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன. தமிழ் அரசியல்வாதிகளும்,  அவர்களது செல்லப் பிள்ளைகளாக தம்மை உருவகித்துக்கொண்ட அரச அதிகாரிகளுமே அந்த ஊழல்களுக்கு சொந்தக்காரார்கள்  என்பது பலரறிந்த விடயம். அதற்குப் பக்க பலமாக அவற்றை முன்னின்று நடத்தியவர்கள் தமிழர்கள்.அவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் இதர சலுகைகளுக்காக விலைபோனவர்கள் என நன்கு தெரியும். இருந்தும் அவற்றை  மக்களுக்கு அடையாளங் காட்டாதது யார் குற்றம்?

ஒரு “அறகல” இயக்கத்தை நடத்தி,  முப்பது வருட ஆட்சி செய்கின்ற கனவோடு பதவிக்கு வந்த கோத்தபாயவைக் கலைத்து, அரசியல் பாதையைத் திசைதிருப்பி ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சியை அதுவும் பெரும்பான்மையோடு கொண்டு வந்திருக்கின்ற சிங்கள மக்களைச் சாதனையாளர்கள் என்று சொல்வதா?

இல்லை! மத்தியில் வருகின்ற அரசுக்குப் பந்தம் பிடித்து மக்கள் சொத்தைச் சூறையாடி அவற்றைக் கறைபடிந்த சிங்கள அரசியல்வாதிகளோடு பங்கு போட்டுத் தின்றவர்களை ஓட ஓட விரட்ட முடியாதவர்கள் தமிழ் அரசியல் தலைவர்களாக இருப்பதை சாதனை என்று சொல்வதா?

முதலில் தோல்வியை ஒப்புக்கொள்வது ஒருவரின் பெருந்தன்மையைக் காட்டும்.மேற் குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில் ஒதுக்க வேண்டியவர்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நின்றவர்கள் என்ற அடிப்படையில் நல்லவர்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.அப்படி அதனை நம்புவதற்கு ஏதுவாக கழித்து ஒதுக்கி புறந்தள்ளப் பட்டவர்களின் அரசியல் பின்புலத்தை சற்று ஆய்வோமாகில், மேற்குறிப்பிட்டவைகளைச் சரி என ஒப்புக் கொள்வீர்கள்.

மக்களை அரசியல்மயப்படுத்தியது போதாமல் நடத்தப்பட்ட தேர்தல் என்ற குற்றச்சாட்டைத் தோற்றவர்கள் முன்வைக்கிறார்கள்.அரசியல்மயப்படுத்துவது என்பது அடிப்படை அரசியலை விளங்கிக் கொள்வதற்கேயன்றி அரசியல் கள்ளர்களை இனங்காண்பதற்கல்ல. திருடரைத் திருடர்களாக அறிய, அயோக்கியர்களை அயோக்கியர்களாக அறிய மக்களைத் தயார்படுத்தத் தேவை இல்லை. அதனை அறியக் கூடிய பக்குவம் இயல்பாகவே மக்களிடம் உண்டு. 2009 க்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசுகளினால் அவர்கள் புலனாய்வாளர்களினால் உருவாக்கப்பட்ட “கிறீஸ்பூதம்” போன்றவைகளையும் மக்களே அடையாளங்கண்டனர். அது போன்ற பல திட்டமிட்ட விடயங்கள் சமூகத்துக்குள் கொண்டு வந்து விடப்பட்டன.அதனால் சமூகம் பல பின்னடைவுகளை எதிர்கொண்டனர்.அவற்றிற்கெல்லாம் முகம் கொடுத்து அவைகளை வென்றது மக்களே. அந்தக் காலகட்டங்களில் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் வாய்திறக்கவில்லை என்றதும் மக்களுக்கு நன்கு புரியும்.“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”, “அரசன் அன்று கொல்வான் கடவுள் நின்று கொல்லும்” என்பதற்கு அமைய நீங்கள் பாராளுமன்றத்துக்குச் செல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

கடந்த காலங்களில் மக்கள் அரசியலை முன்னெடுத்தவர்கள் என இனங்காணப்பட்ட சிலரும் இத்தேர்தலில் தோற்றுப்போய்விட்டனர் என்ற ஆதங்கமும் மக்களிடத்தில் உண்டு.அதேசமயம் அயோக்கியர்களாக இருந்தவர்களும், அரச நிதியைக் கையாடியவர்கள், தமிழ் தேசியக் கொள்கையை கொண்டவர்கள் என தம்மைப் போலியாக அடையாளம் காட்டியவர்கள் எனத் தோற்றவர்கள் பட்டியலில் பலர் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். தேர்தல் என்று வரும்போது மட்டும் மக்கள் அரசியலைக் கையிலெடுப்பவர்களையும் அவ்வாறு அல்லாதவர்களையும் வேறுபடுத்தி பார்ப்பதற்கே  விழிப்புணர்வு தேவை என்பதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தேர்தல் என்று வரும்போது அத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மட்டும் அல்ல சமூக ஊடகங்களும் ஏட்டிக்குப் போட்டியாக மக்கள் சார்பற்ற பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. சமூக ஊடகங்கள் கட்சி சாராதவைகளாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் ஒரு அரசியல் உண்டு. ஒன்று தற்காப்பு அரசியல், அதாவது எவ்வாறாயினும் தமது நிதி நிலைமையை மேம்படுத்துவது. உதாரணமாக சொல்லப் போனால் “யூரியூப்” ஊடகத்தைக் கையில் எடுத்தவரானால்  தமது பதிவுக்கு பார்வையாளர்களை அதிகரிப்பதே அவர்களது நோக்கமாக இருக்கும். பார்வையாளர்கள் அதிகரித்தால் வருவாய் அதிகரிக்கும் என்ற வகையில் அவர்கள் அரசியல் இருக்கும். அடுத்தது அதனை ஒரு பொழுது போக்காகச் செய்பவர்களும் உண்டு அவர்களிடம் சமூகப் பாதுகாப்பு அல்லது சமூகப் பொறுப்பு என்ற விடயங்கள் இருக்காது.தான்தோன்றித் தனமாக கருத்துகளை வெளியிடுவர்.அதுவும் ஒரு வகையில் ஆபத்தே. அதையும் ஒரு வித போதையாகச் செய்பவர்களும் உண்டு. எனவே இவைகள் அனைத்தையும் எதிர் கொள்வதற்கு ஒரு முன்னரங்க திட்டம் தேவையென உணரப்பட்டிருக்கிறது. அதற்குத்தான் தகுந்த விழிப்புணர்வுத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்.

கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, நடந்து முடிந்த விடுதலைப் போராட்டம் பற்றிய விடயங்களை மட்டும் பேசிக் காலம் கழித்தவர்கள் இருந்தனர். தேசியப் பற்றாளர்கள் எனப் போலி முகம் காட்டி மக்களை ஏமாற்றியவர்கள் இருந்தனர். விடுதலைப் புலிகளுக்குத்  தெரிந்தவர்கள் எனச் சொல்லப்பட்டவர்கள் அவர்ளோடு பல செயற்பாடுகளில் இணைந்திருந்ததாக சொல்லி வாக்குக் கேட்டனர். அரச நிதியுதவியின் மூலம் நடைபெற்ற செயல் திட்டங்களை தான் தன்னுடைய நிதி கொண்டு செய்ததாக பொய்யுரைத்தவர்கள் பலர். இவ்வாறு நீளும் பட்டியலிலே வாக்குக் கேட்டு நின்ற புதியவர்கள் பக்கம் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர்.மக்கள் கவனத்தில் புதிய கட்சியாகவும் அதன் வேட்பாளர்களாகவும் தெரிந்தவர்கள் அநுர சார்ந்த கட்சியினரே. அவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பதைக் காட்டிலும் அவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்ற வகையில் அவர்களுக்கும் சுயேச்சையாக நின்ற அர்ச்சுனாவுக்கும் வாக்களித்தனர். தமிழரசுக் கட்சியில் வேட்பாளராக நின்றவர்களுள் தனக்குச் சொந்தமாக வாக்குகள் இருக்கு என்ற நம்பிக்கையிலும், தனது கடந்த காலச் செயற்பாட்டில் வைத்த நம்பிக்கையிலுமே களத்தில் நின்றவர் ஸ்ரீதரன். மற்றைய அனைவரும் கட்சி வாக்குகளிலேயே தங்கி இருந்தனர். பழக்க தோஷத்தில் தமிழரசுக்கு மக்கள் வாக்களிப்பர் என்று தலைமைகள் கொடுத்த வாக்கை நம்பியே அவர்கள் களத்தில் நின்றனர். அவர்களுக்கென்று ஒரு சுயசரிதம் இருக்கவில்லை. சுயமான வாக்கு வங்கியும் இருக்கவில்லை. இவ்வாறானதொரு கள நிலைமையை முன் கூட்டியே  அறிய தமிழ் அரசுக் கட்சியினுள் ஒரு கட்டமைப்பு இருக்கவில்லை. பெரும்பாலும் மதி நுட்பவியலாளர் என்று கருதப்பட்ட சுமந்திரன் என்ற சட்டத்தரணியை மட்டும் நம்பியிருந்தவர்கள் அவர்கள்.

தேர்தலுக்கு முன்னும் பின்னும் நான் எழுதிய கட்டுரைகளில் இது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அரசியல் களம் என்பது என்றும் ஆய்வுக்குட்பட்டதாக இருக்க வேண்டும். ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்த  ஒரு கூட்டமைப்பாக அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும். உள்ளூரிலும் வெளியூரிலும் சர்வதேசங்களிலும் அரசியல் நடைமுறைகள், மாற்றங்கள் பற்றி ஆராயப்பட வேண்டும். கருத்துருவாக்கம் நடைபெறுவதாக கூட்டங்களை நடத்த வேண்டும். அங்கு நடைபெறும் வாதங்களையும் கருத்துகளையும் ஜீரணிக்கக் கூடிய ஆற்றலுள்ளவர்களாக மதியுரைஞர்களும், மக்களும் இருக்க வேண்டும். எதிரான கருத்தை விதைப்பவர்களை பலம் கொண்டு புறந்தள்ளுவது புத்திசாலித்தனம் அன்று. கட்சியைப் பலமாக வைத்திருக்க உதவுபவர்கள் அவ்வாறானவர்களே என்றதை விளங்கிக்கொண்டு அவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதே எமது முக்கிய நோக்கமாகக் கொள்வதையே கட்சி ஆரோக்கியம் என எண்ணுகிறேன்.

தற்கால அரசியல் சூழ்நிலையில் மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கின்ற கட்சி தேசிய மக்கள் சக்தி என நம்பலாம்.தாங்கள் பதவிக்கு வந்தால் என்ன விடயங்களை எப்படிச் செய்வது ? என்றவற்றை புலனாய்வு செய்து, ஆராய்ந்து அறிந்து, அவற்றை  கோப்புகளாத் தயாரித்து அவர்கள் வைத்திருப்பதாக அறிந்தேன்.அது உண்மையாக இருக்கலாம்.ஏனெனில் இடதுசாரிகளிடத்து இவ்வகையான நடவடிக்கைகளும், போக்கும் இருப்பது பொதுமை. எதனையும் முன்கூட்டியே திட்டமிடுவது.அதுதான் அவர்கள் வெற்றிக்குரிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆவணப்படுத்தலில் பலவீனமானவர்கள் எம்மவர் என்று சொல்லப்படுகிறது.அதே சமயம் திட்டமிடலிலும் நாம் பலவீனமானவர்கள் என்றதை நிரூபிக்க முறையான ஆவணக் காப்பகமும், திட்டமிடலுக்கான முறையான அமைப்பும் எம்மிடத்தில் இல்லை என்ற விடயமே சாட்சி. அது மட்டுமல்லாது எமது நிதி பலத்துக்கேற்றவாறு சமூக நோக்கோடு நாம் எமக்கென்று ஒரு சமூக நிதி நிறுவனத்தை இதுவரை நிறுவவில்லை. அது பற்றிய உரையாடலும் எம்மிடையே நடைபெற்றதாக  குறிப்புகளும் இல்லை.“நாம் வாய்சொல்லில் வீரரடி.செயற்திறனில் “வலு வீக்” எடி என்ற நிலைமைய மாற்ற வேண்டும்.அரசியல் களத்தை மாற்றியமைத்தவாறு அதனையும் மக்கள் மாற்றி அமைக்கலாம். மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் பயணிப்போம். பயணங்கள் முடிவதில்லை என்ற அனுபவக் கோட்பாட்டுக்கு அமைவாக…!!!???

https://thinakkural.lk/article/312778

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.