Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி?

9 டிசம்பர் 2024
டியாகோ கார்சியா
டியாகோ கார்சியா தீவில் தற்காலிக முகாமில் இருக்கும் கூடாரங்கள்

"டியாகோ கார்சியா" - இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தின் தொலைதூரப் பவளத் தீவு. இது பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவு. பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் இந்த தீவில் அமைந்துள்ளது.

இங்கு ஒரு தற்காலிக முகாமில் சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு காலை வேளையில் சாந்தியின் கணவர், தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பு வேலியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தார். அங்கு ரோந்துப் பணியில் அதிகாரி ஒருவர் ஈடுபட்டிருந்தார், கூடவே காவல் நாய் ஒன்றும் இருந்தது.

அந்த குழந்தைகள் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது அந்த காட்சியை தான். "நாய்களுக்குக் கூட நம்மை விட அதிக சுதந்திரம் உள்ளது" என்று அவர்கள் தந்தையிடம் கூறினர். 

 

"அவர்கள் சொன்னது என்னை மனதளவில் கடுமையாக பாதித்தது. நான் மனம் உடைந்துபோனேன்" என்று அவர் விவரித்தார்.

இது அவர்களின் குடும்பம் இக்கட்டான சூழலில் இருந்ததை பிரதிபலிக்கிறது. அவர்கள் தற்செயலாக ஒரு மர்மமான ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களுக்கு 5 வயதில் மகனும், ஒன்பது வயதுடைய ஒரு மகளும் இருந்தனர்.

 

இலங்கையில் இருந்து தப்பிக்க முயற்சி

 

டியாகோ கார்சியா
டியாகோ கார்சியா

சாந்தியின் (அவரது உண்மையான பெயர் அல்ல) குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த சிறிய முகாமில் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்த போதிலும், தங்களால் முடிந்த அளவுக்கு இயல்பாக இருக்க முயன்றனர். குடும்பமாக மகிழ்ந்திருப்பதிலும், படிப்பதிலும், செடிகளை வளர்ப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 

ரகசிய ராணுவ தீவான டியாகோ கார்சியாவில் தனது குழந்தைகளுக்கு இயல்பான உணர்வை உருவாக்க சாந்தி தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தார்.

சாந்தி பிற இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து 12,000 கி. மீ. தொலைவில் இருக்கும் கனடாவுக்கு செல்ல ஆசைப்பட்டு, ஒரு சட்டவிரோத முகவரிடம் தன் மொத்த சேமிப்புப் பணத்தையும் (சுமார் ரூ. 4.23 லட்சம்), தனது தங்க நகைகள் அனைத்தையும் வழங்கியதாக கூறுகிறார்.

கடந்த 2009இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் உடனான தொடர்புகள் காரணமாக, துன்புறுத்தல் செய்யப்படுவோம் என்ற அச்சத்தில், அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து தப்பிக்க நினைத்ததாகக் கூறினர். 

 

 

மோசமான சூழலிலும் குழந்தைகளுக்கு கல்வி

 

இலங்கை
சாந்தியும் அவரது குடும்பத்தினரும் 2021 இல் இலங்கையை விட்டு வெளியேறினர்

அவர்கள் சென்ற மீன்பிடி படகு நடுக்கடலில் சேதமடைந்தது. அதன் விளைவாக, ராயல் கடற்படை அவர்களைக் காப்பாற்ற நேர்ந்தது. கடற்படை அவர்களை அக்டோபர் 2021இல் டியாகோ கார்சியாவுக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவர்கள் வேலியிடப்பட்ட புலம்பெயர்ந்தோர் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

அந்த முகாமிற்கு அழைத்து வரப்பட்ட போது, "கனடா வந்துவிட்டோமோ என்று மகன் கேட்டது" சாந்திக்கு நினைவுக்கு வந்தது.

டியாகோ கார்சியா தீவை அடைந்த முதல் ஆறு மாதங்கள், அவரது பிள்ளைகள் தீவில் முறையான கல்வியைப் பெறவில்லை. எனவே, பயிற்சி பெற்ற ஆசிரியயையான சாந்தி, அந்த முகாமில் உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடங்களைக் கற்று கொடுக்கத் தொடங்கினார். இதன்மூலம் அவரின் பிள்ளைகளும் பயனடைந்தனர்.

"ஆங்கில எழுத்துக்கள், பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் என அடிப்படையான பாடங்களுடன் நாங்கள் கற்பிக்கத் தொடங்கினோம்" என்று அவர் கூறுகிறார்.

அதன் பின்னர், சாந்தியின் கணவர் அந்த கூடாரத்தில் வீட்டுப்பாடம் செய்ய ஏதுவாக, மரத்தாலான பலகைகளை வைத்து மேசையை உருவாக்கினார். 

 

 

கூண்டுக்குள் அடைப்பட்ட வாழ்க்கை

 

டியாகோ கார்சியா
டியாகோ கார்சியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம் "கூண்டுக்குள்" வாழ்வது போன்றது என்று சாந்தி கூறினார்

கல்வி கற்க ஒரு சிறிய பாதை உருவானப் போதிலும், மாலை நேரங்களில் குழந்தைகள் சலிப்பை உணரத் தொடங்கினர். எனவே, இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்ற சாந்தி, நடனப் பாடங்களையும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். மேலும், அவரது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடல்களை வைத்து நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்தார்.

இந்த குடும்பம் முகாமுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அவர்கள் இறுதியாக இந்த வாரம் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் நலன்களுக்காக அரசாங்கம் இதை "விதிவிலக்கானது" என விவரித்து, அவர்களை அனுப்பியது.

"அந்த முகாம் ஒரு திறந்தவெளி சிறை போன்றது. நாங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் வேலியிடப்பட்ட ஒரு கூடாரத்தில் வாழ்ந்தோம்" என்கிறார் சாந்தி. 30 வயதுகளின் முற்பகுதியில் உள்ள பெண்ணான அவர், லண்டனில் இருந்த போது அளித்த பேட்டியில் இதனை கூறினார்.

"ஒவ்வொரு நாளும் எங்கள் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருந்தது. ஒரு கூண்டுக்குள் வாழ்வது போல் இருந்தது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

பாதுகாவலர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். ராணுவ ஜெட் விமானங்கள் அவ்வப்போது தலைக்கு மேல் கர்ஜிக்கும். இதனையடுத்து , சாந்தியும் மற்ற இலங்கை தமிழர்களும் தீவில் உள்ள பிரிட்டிஷ் படைகளை அணுகி, பாதுகாப்பான நாட்டிற்கு அனுப்புமாறு கடிதம் கொடுத்ததாக சாந்தி கூறுகிறார். இந்தப் பிராந்தியத்தில் புகலிடம் கோரி கடிதம் கொடுப்பது இதுவே முதல் முறை.

இது பிரிட்டனில் 6,000 மைல்களுக்கு அப்பால் ஒரு நீண்ட சட்டப் போராட்டத்துக்கு வழிவகுத்தது. சட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் நடக்க, சாந்தியும் மற்றவர்களும் அந்த தீவில் தங்களுக்கான தேவைகளை அவர்களே பூர்த்தி செய்யத் தொடங்கினர்.

முகாமில் இருந்த தமிழர்கள் அவர்களுக்கான உணவை சமைக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே, அவர்கள் சில காய்கறிகளை விளைவிக்கத் தொடங்கினர். அங்கு, தென்னை மரங்கள் நிறைந்திருந்தன. அதிலிருந்து கிடைக்கும் தேங்காய் நாரை பயன்படுத்தி, சாந்தியும் மற்றவர்களும் மிளகாய், பூண்டு மற்றும் வெள்ளரி போன்ற காய்கறிகளை பயிரிட்டனர். 

முகாமில் விவசாயம் செய்தது எப்படி?

 

முகாமில் மிளகாய் விதைகளும் வெள்ளரி விதைகளும் எப்படி கிடைத்தது என்பதை விவரித்த சாந்தி, "அவர்கள் சில சமயங்களில் சிவப்பு மிளகாயைக் கொடுப்பார்கள். நாங்கள் அவற்றை வெயிலில் காயவைத்து விதைகளைச் சேகரித்து பயிரிட்டோம்." என்றார்.

மேலும், "எங்களுக்குக் கொடுக்கப்படும் சாலட்டில் சில சமயங்களில் வெள்ளரித் துண்டுகள் இருக்கும். அவற்றில் இருந்து விதைகளை சேகரித்து சூரிய ஒளியில் வைத்தோம். அவை காய்ந்த பிறகு விதைத்துப் பயிரிட்டோம்" என்றார்.

அவர்கள் ஒவ்வொரு நாளும், தேங்காய் மற்றும் மிளகாயை பிசைந்து 'சம்பல்' என்னும் உணவை தயாரித்தனர். அது இலங்கையின் பிரபலமான உணவு.

முகாமில் தங்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க உணவை சாப்பிட சாந்தி உள்ளிட்டோர் சிரமப்பட்டனர். மேலும், காய்கறிகளை பூண்டு மற்றும் மிளகாயுடன் வெந்நீரில் போட்டு குழம்பாக சமைக்க முயற்சித்தனர்.

முகாமில் இருந்தவர்களுக்கு ஆடை பற்றாக்குறையும் இருந்தது. குறிப்பாக, அங்குள்ள 16 குழந்தைகளுக்கும் போதுமான ஆடைகள் வழங்கப்படவில்லை. எனவே, சாந்தி மற்றும் பிற பெண்கள் படுக்கை விரிப்பை கிழித்து ஆடைகளை தைத்தனர்.

கிறிஸ்துமஸ் சமயத்தில், அவர்கள் காகித நாப்கின்களை (Tissue paper) பூக்களாக மாற்றி, ஒரு மரத்தை அலங்கரித்தனர்.

முகாமில் இருந்த காவலர்களுடன் தமிழர்களுக்கு அடிக்கடி பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஆனாலும், "நல்ல உள்ளம் கொண்ட அதிகாரி எங்களுக்கு பிரியாணி கொண்டு வந்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு காவலர் ஆவலாக தன் பிறந்தநாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த என் மகனின் பிறந்தநாளுக்கு கேக் கொண்டு வந்தார்" என்கிறார் சாந்தி.

 

 

எலிக்கடி தொல்லை

 

டியாகோ கார்சியா
புயல் காலங்களில் கூடாரங்கள் மழை நீரால் நிரம்பி வழியும்

"என்னதான் எங்களின் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொண்டாலும், நாட்கள் செல்ல செல்ல, உதவியற்று நிற்பது போன்ற உணர்வுகள் அதிகரித்தன" என்கிறார் சாந்தி. 

"முகாமில் வாழ்க்கை கூண்டுக்குள் இருப்பது போல இருந்தது. யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் வெடித்த பெரும் போர்கள் பற்றிய செய்திகள் முகாம் காவலர்கள் வாயிலாக எங்களுக்கு தெரிய வந்தது."

சாகோஸ் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான இந்த தீவுக்கான அணுகல் பெரிதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

1970களின் முற்பகுதியில் இருந்து பிரிட்டன் அங்கு வசிக்கும் அனைத்து மக்களையும் வெளியேற்றியது முதல், இது அதிகாரப்பூர்வமாக குடியிருப்பு மக்கள்தொகையைக் கொண்டிருக்கவில்லை. இதன்மூலம், அங்கு ராணுவத் தளத்தை உருவாக்க முடியும் என்பதே இதன் நோக்கம்.

"முதல் நாள் முதல் நாங்கள் அங்கிருந்து புறப்பட்ட நாள் வரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எலிகளுடன் வாழ்ந்தோம்," என்கிறார் சாந்தி.

"சில நேரங்களில் எலிகள் எங்களின் குழந்தைகளின் கால், கை விரல்களை கடிக்கும். அவை, எங்களின் உணவை உட்கொண்டன. இரவில் சில நேரங்களில் அவை எங்கள் போர்வைகள் மற்றும் தலையின் மீது ஊர்ந்து செல்லும்." என்று விவரித்தார்.

"ராட்சத தேங்காய் நண்டுகள் மற்றும் வெப்பமண்டல எறும்புகள் கூட முகாமுக்குள் ஊர்ந்து செல்லும். புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, தார்பாயால் போடப்பட்ட கூடாரங்களின் துளைகள் வழியாக மழை நீர் உள்ளே வரும். மேலும், இந்த கூடாரங்கள் இதற்கு முன்னர் தொற்றுநோய் சூழலின்போது கோவிட் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது." என்றார்.

கடந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய நாடுகளின் புலனாய்வாளர்கள் முகாமுக்குச் சென்றபோது, குழந்தைகள் அவர்களிடம் "சுற்றுலா செல்வது, சைக்கிள் ஓட்டுவது, ஐஸ்கிரீம் சாப்பிடுவது" போன்ற கனவுகள் இருப்பதாகக் கூறினார்கள்.

இந்த ஆண்டின் முற்பகுதியில், ஒரு மருத்துவ அதிகாரி இங்கு பெருமளவிலான தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்ததை குறிப்பிட்டு, இந்த முகாம் "முழுமையாக நெருக்கடியில்" இருப்பதாக விவரித்தார்.

"என் மகள் நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் என்னிடம் 'அம்மா அவர்கள் தங்களைத் தாங்களே வெட்டிக் கொண்டார்கள்' என்றாள்.

நானும் அப்படி செய்து கொள்ள வேண்டுமா?' என்று கேட்டாள். 'இல்லை, இல்லை. அப்படி செய்யக் கூடாது என்று நான் புரிய வைத்தேன். அவளின் கவனத்தை மாற்ற பேப்பர் எடுத்து ஓவியம் வரைய சொன்னேன்'' என்று அந்த சம்பவத்தைக் கண்ணீருடன் நினைவு கூர்ந்தார் சாந்தி.

இரண்டு முறை தங்கள் மகள் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதைப் பற்றி சாந்தியும் அவரின் கணவரும் நினைவு கூர்ந்து கண்கலங்கினர்.

"என் மகள் இரண்டு முறை தன்னை தானே காயப்படுத்திக் கொண்டாள். அது மிகவும் மோசமான தருணம். ஏன் இப்படி செய்தாய் என்று என் மகளிடம் கேட்டதற்கு, தான் இப்படி செய்தால், அவளின் சகோதரன் பாதுகாப்பான மூன்றாம் நாட்டிற்குச் செல்வார் என்ற நம்பிக்கையில் இதைச் செய்ததாகச் சொன்னாள்" என்று சாந்தி கூறுகிறார். 

`உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்’

 

முகாமில் இருக்கும் பிற புலம்பெயர்ந்தோரால் தங்களுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் நடப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

"மூன்று வருடங்களாக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்" என்கிறார் சாந்தி.

தீவில் தமிழர்கள் வாழ்ந்த காலம் முழுவதும், பிரித்தானிய அதிகாரிகள் அது அவர்களுக்கு ஏற்ற இடம் அல்ல என்பதை ஒப்புக்கொண்டதுடன், நீண்டகாலத் தீர்வுகளைத் தேடுவதாகவும் கூறினர். அங்கிருந்த மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.

"அவர்கள் பிரிட்டனுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும், அங்கு ஆறு மாதங்கள் தங்குவதற்கு அவர்களுக்கு உரிமை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்தபோது எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. எங்களின் மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது" என்கிறார் சாந்தி. மகிழ்ச்சியில் அன்று இரவு முகாமில் யாரும் தூங்கவில்லை என்றும் கூறினார்.

"பிரிட்டனுக்கு வந்தவுடன், குளிர்ச்சியான சூழல் எங்களை உற்சாகப்படுத்தியது. இத்தனை நாள் கோமாவில் இருந்துவிட்டு, எழுந்தது போல் உணர்ந்தேன். மொபைல் ஆப்ஸ்-ஐ பதிவிறக்குவது, வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புவது, கடைகளில் பணம் செலுத்துவது எப்படி என்பதை முழுமையாக மறந்துவிட்டேன்" என்கிறார்.

சாந்தியின் குழந்தைகள் பள்ளியைத் தொடங்குவது, நண்பர்களை உருவாக்குவது மற்றும் இரட்டை அடுக்கு பேருந்தில் செல்வது பற்றி பேசி கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

ஆனால், குடும்பத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.

அவர்கள் எஞ்சியிருக்கும் நம்பிக்கையில் இப்போது பிரிட்டனில் புகலிடம் கோரியுள்ளனர். கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில், அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, சாகோஸ் தீவுகளை மொரீஷியஸிடம் ஒப்படைக்க பிரிட்டன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டது.

இன்னும் கையொப்பமிடப்பட வேண்டிய இந்த ஒப்பந்தத்தின் கீழ், டியாகோ கார்சியா பிரிட்டன் - அமெரிக்க ராணுவத் தளமாகத் தொடர்ந்து செயல்படும், ஆனால் எதிர்காலத்தில் குடியேறுபவர்களின் வருகைக்கு மொரீஷியஸ் பொறுப்பேற்க வேண்டும்.

சாந்தி, டியாகோ கார்சியாவிலிருந்து ஒரு சிப்பியை கொண்டு வந்தார். அங்கிருந்ததன் நினைவாக, அதை தன் செயினில் போட்டு கழுத்தில் அணியப் போவதாகக் கூறுகிறார்.

சுவாமிநாதன் நடராஜன் வழங்கிய கூடுதல் தகவல்களுடன் 

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
 

 

https://www.bbc.com/tamil/articles/cly4n9nng04o

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.