Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை வைப்பதற்கான ஒரு நேரம்; காப்பாற்றுவதற்கு ஒரு உறுதிமொழி!

— கலாநிதி ஜெகான்பெரேரா —

செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலையும் நவம்பர் பாராளுமன்ற தேர்தலையும் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அண்மைய அரசியல் நிலைமாறுதல் “பாகுபாடு காட்டுகின்ற போக்கின் விளைவாக தோன்றிய ஆழமான பிரச்சினைகளை” கையாளுவதற்கு ஒரு திருப்புமுனை வாய்ப்பை தருகிறது. பத்தாவது பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க இலங்கையில் இனவாதத்தையும் மதத் தீவிரவாதத்தையும் தடுப்பதில் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அழுத்திக் கூறினார்.

இனவாத அரசியலும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுப்பதற்கு தனது அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிய அவர் அச்சமும் சந்தேகமும் இல்லாத ஜனநாயக அரசொன்றை நிறுவப்போவதாக சூளுரைத்தார். சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி சட்டத்திற்கு மேலானவர் என்று எந்தவொரு தனிநபருமோ அல்லது அரசியல்வாதியுமோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் குறிப்பிட்டார். சர்ச்சைக்குரிய குற்றச்செயல்களை விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதுடன் சட்டமுறைமை மீதான நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பப்போவதாக அவர் தனதுரையில் உறுதியளித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பகிரங்க முகம் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்க எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டார். அரசாங்கத்தின் முதன்மையான தொடர்பாடல்காரராக அவர் விளங்குகிறார். மக்கள் மத்தியிலான தனது ஆரம்ப வாழ்வையோ அல்லது கொள்கைகளையோ அவர் மறந்து விடவில்லை. அவரது உடைநடையில் அதை தெளிவாகக் காணமுடியும். இனவாதமும் இனவெறுப்பும் நாட்டில் மீண்டும் வேர்விடுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்ற ஜனாதிபதியின் சூளுரை அவர் வளர்ந்துவந்த பண்புமுறைமைக்கு இன்னொரு சான்றாகும். 

சிங்கள பௌத்த இராச்சியங்களின் மையப் பிராந்தியமாக ஒரு காலத்தில் விளங்கிய வடமத்திய மாகாணத்தின் விவசாய வலயங்களில் ஜனாதிபதியின் தோற்றுவாயும் வறுமையுடனான அவரது தனிப்பட்ட போராட்டமும்  இலங்கையின் முன்னைய அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக நலன்புரி திட்டங்களின் உதவியுடன் அந்த போராட்டத்தை வெற்றிகொண்ட விதமும் இலங்கையின் வெற்றிக் கதையின் முழுநிறைவான ஒரு  எடுத்துக்காட்டாக அவரை விளங்க வைத்திருக்கிறது.

பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையின் இன்னொரு தலைவர், ” வெறுப்பை வெறுப்பினால் ஒழிக்கமுடியாது. அன்பினாலேயே ஒழிக்கமுடியும்” என்று பௌத்த போதனையை மேற்கோள் காட்டினார். அந்த வார்த்தைகளை கொழும்பில் உள்ள தற்போதைய ஜப்பானிய தூதுவர் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அண்மையில் நிகழ்த்திய வரவேற்புரையில் நினைவுபடுத்தினார். இரண்டாவது உலக மகாயுத்தத்தில்  தோற்கடிக்கப்பட்ட பிறகு இழப்பீட்டைச் செலுத்தவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதில் இருந்து ஜப்பானைப் பாதுகாக்க முன்னாள்  ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவும் இதே வார்த்தைகளைப் பேசினார்.

இந்த வார்த்தைகள் உலகில் எந்தளவுக்கு நடைமுறையில் பின்பற்றப்படுகிறது என்பதே முக்கியமான கேள்வி. ஜனாதிபதி ஜெயவர்தன உலகிற்கு தான் பேசிய அந்த வார்த்தைகளை தனது சொந்த நாட்டில் நடைமுறையில் கடைப்பிடிக்கத் தவறியது துரதிர்ஷ்ட வசமானதாகும். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. )வும் விடுதலை புலிகளும் முன்னெடுத்த கிளர்ச்சிகளில் எளிதில் கையாளமுடியாத எதிரிகளுக்கு முகங்கொடுத்தபோது ஜெயவர்தன மூர்க்கத்தனமான அரச வன்முறையை கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டார்.

இறந்தவர்களை நினைவுகூருதல் :

===========

ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தான் பேசுகின்ற பண்புகளின் பிரகாரம் இதுவரையில் வாழ்ந்தும்  நடந்தும் வருகின்றார் என்று தோன்றுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்று இரு மாதங்களே கடந்திருக்கும் நிலையில்,  நிச்சயமாக எதையும் கூறுவது தற்போதைய தருணத்தில் பொருத்தமில்லாததாக இருக்கக்கூடும். ஆனால், அவரது சொல்லிலும் செயலிலும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் காண்பிக்கின்ற அக்கறையிலும் நேர்மையின் அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன.

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னைய அரசாங்கம் இணங்கிக்கொண்ட நடைமுறைச் சாத்தியமான பொருளாதாரக் கொள்கைகளை தேசிய மக்கள் சக்தியின் மையக்கட்சியான ஜே.வி.பி. ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அதை வழிநடத்திய முறையில் இதை காணக்கூடியதாக இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் விளைவாக மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்ற போதிலும், தற்போதைய தருணத்தில் நடைமுறைச் சாத்தியமான மாற்றுவழி எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்கள் தாங்கள் அதிகாரத்துக்கு வந்திருந்தாலும் கூட வேறு விதமாகச் செயற்படுவதற்கான வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் சிலவேளை தங்களுக்கு தேவையானதை அவர்கள் எடுத்திருக்கக்கூடும். அதனால் தான் அவர்களை மக்கள் நிராகரித்தார்கள்.

போரில் உயிர்துறந்தவர்களின் உறவினர்கள் மாவீரர்கள் தினம் என்று அறியப்பட்ட தினத்தில் நினைவேந்தலைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் அரசாங்கத்தின் அணுகுமுறை ஜனாதிபதியும் அவரது நிருவாகமும் தங்களது பண்புகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை காண்பிக்கும் இன்னொரு சந்தர்ப்பமாகும்.

மாண்டுபோன தங்கள் பிள்ளைகளுக்கு நினைவேந்தல் செய்ய விரும்புகிறவர்கள் ஒரு சுமூகமான, அமைதியான முறையில் நினைவு கூருவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இது உண்மையில் இழப்பீட்டுக்கான அலுவலகச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அந்த சட்டத்தின் 27 வது பிரிவு தனிநபர்களும் குழுக்களும் நினைவேந்தலைச் செய்ய அனுமதிக்கிறது.

 கொழும்பில் உள்ளவர்களுக்கு மாத்திரமல்ல கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு நல்வாழ்வு வேண்டும் என்பதற்காக  சமூகத்தை மாற்றுவதற்கு போராடிய தங்கள் தியாகிகளை ஜே.வி.பி. யினர் நீண்டகாலமாக நினைவுகூர்ந்து வருகிறார்கள். தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் உயர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

போரில் உயிரிழந்த தங்களது இரு மகன்களை நினைவு கூருவதற்கு யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கும் ( முன்பு மயானமாக இருந்த) இடத்துக்குச்  சென்ற ரி. செல்லத்துரை என்பவரும் அவரது மனைவியும் இப்போது இராணுவ முகாம் ஒன்றில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இராணுவ முகாமுக்கு எதிரே இருக்கும் தனியாருக்கு சொந்தமான சிறிய துண்டு நிலத்தில் அடையாளபூர்வமான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “எமது மகன்களை நினைவு கூருவதற்கு நாம் விரும்புகிறோம். அதற்காக அவர்களுக்கு விருப்பமான உணவுடன் பிரார்த்தனை செய்வதற்காக வந்தோம் ” என்று அந்த தம்பதியர் கூறினார்கள்.

உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம்,  ஆனால் அவர்கள் சார்ந்திருந்த இயக்கத்தை நினைவுகூர முடியாது என்பதே இந்த சந்தர்ப்பத்தில் அரசாஙகத்தின் நிலைப்பாடாக இருக்கிறது.

யாழ்ப்பாணம் இணுவிலில் 29 வயது இளைஞன் ஒருவன் இந்த வாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக இன்னொரு செய்தி கூறியது.  மாவீரர்தின நிகழ்வுகளின்போது சமூக ஊடகங்களில் தகவல்களை  பகிர்ந்து கொண்டமை தொடர்பாகவே அந்த இளைஞன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜே.வி.பி.யின் முன்னைய தலைவர்களின் படங்களை மறைக்காமல் விடுவதைப் போன்று எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர்களின் படங்களையும் பொலிசார் மறைக்காமல் இருக்கக்கூடும்.

விடுதலை புலிகளை நினைவுகூருவதற்கு அனுமதித்ததாக அரசாங்கத்தை எதிரணி அரசியல்வாதிகள் கடுமையாக கண்டனம் செய்கிறார்கள். இனத்துவ தேசியவாத சக்திக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்படக்கூடிய சாத்தியங்களை குறைத்து மதிப்பிட முடியாது.

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்பட்டது ஒன்றும் புதியது அல்ல. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை வகித்த முன்னைய அரசாங்கங்களினால் இதே போன்ற அனுமதி வழங்கப்பட்டது. இனவாதமற்ற இலங்கை ஒன்றை உருவாக்குவதற்கான அந்த அணுகுமுறை பாராட்டப்பட வேண்டியதேயாகும்.

முன்னாள் ஜனாதிபதி இலங்கைச் சமுதாயப் போட்டித் தேசியவாதங்களினால் கிரமமாக  திணறடிக்கப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், அந்த சமுதாயத்தின் பல்லின — பன்முகத்தன்மையை நீண்டகாலமாக பிரதிநிதித்துவம் செய்து வந்திருக்கிறார். இந்த சிந்தனைக்கு நெருக்கமானதாகவே பாரம்பரியமாக ஜே.வி.பி. இருந்து வந்திருக்கிறது. இதன் காரணத்தினாலேயே இன்றைய நேர்மறையான மாற்றத்துக்கான பெருமை பெருமளவுக்கு ஜனாதிபதி திசாநாயக்கவை சேருகிறது.

முஸ்லிம் புறக்கணிப்பு:

============== 

ஆட்சிமுறையில் இனவாதமற்ற போக்கு கடைப்பிடிக்கப்படும் என்று அளித்த உறுதிமொழிக்கு இணங்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் முதலாவது அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரைச் சேர்த்துக்கொள்ளாமல் விட்ட தவறை சீர்செய்வதற்கு இடையறாது முயற்சியை மேற்கொண்டு வருகிறது. முதற்தடவையாக  அரசாங்கத்தின் அதியுயர் மட்டத்தில் தீர்மானங்களை எடுக்கும்  செயன்முறைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதை முஸ்லிம் சமுதாயம் காண்கிறது. 

 முஸ்லிம் ஒருவரை பிரதி சபாநாயகராகவும் இன்னொரு முஸ்லிமை பிரதியமைச்சராகவும் நியமித்ததன் மூலம் நிலைவரத்தை சீர்செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்திருக்கின்ற  போதிலும்  கூட, புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வேதனை உணர்வு  முஸ்லிம் சமுதாயத்தை விசேடமாக அரசாங்கத்துக்கு வாக்களித்த கணிசமான எண்ணிக்கையான முஸ்லிம்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

ஆனால், கடந்த காலத்தில் பல முஸ்லிம் அமைச்சர்களைக் கொண்டிருந்த அரசாங்கங்கள் அதிகாரத்தில் இருந்த வேளைகளில் கூட, முஸ்லிம் சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதிகளை தடுக்க முடியவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு தேசியவாத குழுக்களின் பிரதான இலக்காக  முஸ்லிம் சமுதாயம் இருந்து வந்திருக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரமான கலவரங்களில் அவர்களின்  உடைமைகள் சூறையாடப்பட்டு நிர்மூலம் செய்யப்பட்டதுடன் சிலர் கொல்லப்பட்ட அதேவேளை அந்த அட்டூழியங்களைச் செய்தவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவையில் பல முஸ்லிம்கள் இருந்தும் அந்த அக்கிரமங்களை தடுக்க முடியவில்லை.

கடன்பொறி ஒன்றில் நாடு சிக்கிக் கொள்ளவதற்கு வெகு முன்னதாக, ஊழல் தலைவிரித்தாடும் நாடாக இலங்கை மாறுவதற்கு முன்னதாகவும் கூட,  நாட்டின் ஐக்கிய உணர்வைச் சிதைத்த இனப்பிளவு ஒன்று இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற கையோடு இந்திய வம்சாவளி தமிழர்களின் (மலையக தமிழர்கள்) குடியுரிமையும் அதன் வழியாக வாக்குரிமையும் பறிக்கப்பட்டு அவர்கள் அரசியல் சமுதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்கள். அதை தொடர்ந்து தனிச்சிங்களக் கொள்கையின் மூலமாக சகல  தமிழ்பேசும் மக்களினதும்  சமத்துவமான மொழியுரிமைகள் மறுக்கப்பட்டன.

அதுவே  இலங்கையின் குடிமக்களில் பெருமளவானவர்கள் நாட்டை விட்டு வெளியேற வழிவகுத்தது. அந்த நேரத்தில் மிகவும் படித்த சமூகத்தவர்களாக விளங்கிய பறங்கியர் சமூகம் வெளிநாடுகளுக்கு சென்றது.

இன்று நாட்டின் நாலாபுறங்களிலும் உள்ள மக்களும் மத்திய பகுதியில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்துக்காக, ஐக்கியத்துக்காக, ஒரு புதிய தொடக்கத்துக்காக  வாக்களித்திருக்கிறார்கள். இது தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருக்கும் ஒப்பற்ற ஒரு வாய்ப்பாகும்.  வாக்குறுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்.

https://arangamnews.com/?p=11518

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.