Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
'ஷனாய்-டிம்பிஷ்கா' அல்லது 'லா பாம்பா' என்றும் அழைக்கப்படும் கொதிக்கும் ஆறு

பட மூலாதாரம்,RILEY FORTIER

படக்குறிப்பு, 'ஷனாய்-டிம்பிஷ்கா' அல்லது 'லா பாம்பா' என்றும் அழைக்கப்படும் கொதிக்கும் ஆறு கட்டுரை தகவல்
  • எழுதியவர், கிறிஸ் பரானியுக்
  • பதவி, பிபிசி ஃபியூச்சர்

கொதிக்கும் நதி வழக்கமாகவே 86 டிகிரி செல்சியஸை அடைகிறது. இது சுற்றியுள்ள மழைக்காடுகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

பெருவின் கொதிக்கும் ஆற்றை நோக்கி, சமதளம் நிறைந்த, நான்கு மணி நேரம் பயணம் செய்து, மழைக்காடு வழியாகச் சென்று, நிலப்பரப்பில் உள்ள முகடுகளைத் தாண்டிய பிறகுதான், அதை உங்களால் பார்க்க முடியும் என்று, சுவிஸ் ஃபெடரல் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் லொசேனில் (EPFL) தாவர சூழலியல் முதுகலை ஆராய்ச்சியாளராக இருக்கும் அலிசா குல்பெர்க் கூறுகிறார்.

கீழே உள்ள நிலப்பரப்பில், பரந்த, கிண்ண வடிவத்தில் அமைந்துள்ள தாழ்வாரத்தில் உள்ள மரங்களின் சிறு பகுதியிலிருந்து அடர்த்தியான நீராவி மேகங்கள் வெளிப்படுகின்றன.

காலநிலை மாற்றம் அமேசானை எவ்வாறு மாற்றும்?

"அது ஏதோ மாயாஜாலமாக இருந்தது," என கொதிக்கும் நதியை முதன்முதலாக பார்த்தது குறித்து குல்பெர்க் நினைவு கூர்ந்தார்.

'ஷனாய்-டிம்பிஷ்கா' அல்லது 'லா பாம்பா' என்றும் அழைக்கப்படும் கொதிக்கும் ஆறு, கிழக்கு-மத்திய பெருவில் உள்ள ஒரு துணை நதியின் ஒரு பகுதியாக இருந்து, அமேசான் நதியுடன் இணைகிறது.

இந்த பகுதியில் உள்ள மலைகளில், 1930-களில் புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் எண்ணெய் வளங்களைத் தேடின. ஆனால் இந்த பழம்பெரும் கொதிக்கும் நதியின் ரகசியங்கள் குறித்து தற்போது மேற்கத்திய விஞ்ஞானிகளால் ஆழமாக பேசப்படுகின்றன.

உதாரணமாக, கீழே நிலத்தில் ஆழமான புவிவெப்ப ஆற்றல் மூலங்களால் நதி வெப்பமடைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

குல்பெர்க் முதன்முதலில் இந்த மர்மமான இடத்தை 2022 இல், அமெரிக்கா மற்றும் பெருவைச் சேர்ந்த ஒரு குழுவுடன் பார்வையிட்டார். அதில், தற்போது மியாமி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ள ரிலே ஃபோர்டியரும் ஒருவர்.

அமேசான் கொதிக்கும் நதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆராய்ச்சியாளர்கள் காடு வழியாக மலையேறும்போது, அவர்களைச் சுற்றியிருந்த தாவர வாழ்வியலில் அசாதாரணமான ஒன்றை கவனித்தனர்.

"நதியில் தெளிவான மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்று இருந்தது என்பது எங்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது" என்கிறார் ஃபோர்டியர்.

"காடு சிறிய பகுதிகளாகத் தோன்றியது. பெரிய மரங்கள் அதிகம் இல்லை. அது ஓரளவு காய்ந்திருந்ததாகவும் உணர்ந்தோம். தரையில் விழுந்த இலைகள் சலசலப்பான தன்மையுடன் இருந்தன" என்கிறார்.

பொதுவாக வெதுவெதுப்பான அமேசானுடன் ஒப்பிடும் போது, இந்த வனப் பகுதியின் கடுமையான வெப்பத்தால் ஃபோர்டியர் வியப்படைந்தார். புவி வெப்பமடைதல், சராசரி வெப்பநிலையை அதிகரிப்பதால், காலநிலை மாற்றம் அமேசானை எவ்வாறு மாற்றும் என்பதை இந்த இடம் விளக்கக்கூடும் என்பதை அவரும் அவரது குழுவினரும் உணர்ந்தனர்.

அந்த அடிப்படையில் கொதிக்கும் நதியை ஓர் இயற்கை பரிசோதனையாகக் கருதலாம். இது எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.

இருப்பினும், அதைக் குறித்து ஆய்வு செய்தது சவாலாக இருந்தது. "இது நீராவிக் குளியல் தொட்டி உள்ள அறையில் களப்பணி செய்வது போன்றது" என்று ஃபோர்டியர் குறிப்பிட்டார்.

கொதிக்கும் நதி

பட மூலாதாரம்,RILEY FORTIER

படக்குறிப்பு, கொதிக்கும் நதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது கடினம் என்கிறார், ஃபோர்டியர்

பல்லுயிர் பெருக்கத்தில் வெப்பத்தின் தாக்கம்

கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், ஃபோர்டியர், குல்பெர்குடன் அமெரிக்கா மற்றும் பெருவைச் சேர்ந்த அவர்களது குழுவினர், 13 வெப்பநிலை பதிவு சாதனங்களைப் பயன்படுத்தி கொதிக்கும் ஆற்றின் அருகே ஒரு வருடத்திற்கு காற்றின் வெப்பநிலையைக் கண்காணித்ததை விவரித்தனர்.

ஆராய்ச்சியாளர்கள் ஆற்றின் ஒரு பகுதியில் வெப்பநிலை பதிவு சாதனங்களை வைத்தனர், அதில் குளிரான மண்டலங்களும் அடங்கும்.

குளிர்ந்த இடங்களில் சராசரி ஆண்டு வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் (75-77F) முதல் வெப்பமான பகுதிகளில் 28-29 டிகிரி செல்சியஸ் (82-84F) வரை இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை, கொதிக்கும் ஆற்றின் ஒரு சில வெப்பமான இடங்களில், 45 டிகிரி செல்சியஸை (113F) நெருங்கியது.

புவி வெப்பம் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானி ஆன்ட்ரூஸ் ரூஸோ கடந்த காலத்தில் மேற்கொண்ட பகுப்பாய்வில் அந்த ஆற்று நீரின் சராசரி வெப்பநிலை 86 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதாக கண்டறிந்தார். இந்த பகுப்பாய்வு, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழில் வெளியிடப்படவில்லை.

எந்த தாவர இனங்கள் உள்ளன என்பதைப் பற்றிய விரிவான பகுப்பாய்வைச் செய்ய, கடினமான சூழல்களை எதிர்த்து, குழு போராடியது. ஆராய்ச்சியாளர்கள் ஆற்றங்கரையின் பல அடுக்குகளில் உள்ள தாவரங்களை உன்னிப்பாக ஆராய்ந்தனர். அதில் , ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பைக் கண்டறிந்தனர்.

ஆற்றின் வெப்பமான பகுதிகளில் தாவரங்கள் குறைவாக இருந்தன. சில தாவர இனங்கள் முற்றிலுமாக இல்லை. "அடித்தளத்தில் தாவரங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. நீராவி இருந்தாலும், தாவரங்கள் மிகவும் உலர்ந்ததாகத் தோன்றின." என குல்பெர்க் குறிப்பிட்டார்.

எடுத்துக்காட்டாக, 50 மீ (164 அடி) உயரம் வரை வளரக்கூடிய பசுமையான குவாரியா கிராண்டிஃபோலியா போன்ற சில பெரிய மரங்கள், ஆற்றின் வெப்பமான பகுதிகளுக்கு அருகில் வளர்வதற்கு போராடுவதாக தோன்றியது.

ஒட்டுமொத்தமாக, வெப்பம், பல்லுயிர் பெருக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றியது. காற்றில் உள்ள நீராவியின் அளவு, அப்பகுதியில் பறக்கும் பூச்சிகள் அல்லது பிற விலங்குகளை பாதிக்கக்கூடும் என்று ஃபோர்டியர் தெரிவிக்கிறார். ஆனால், குறிப்பிட்டு இதனை அவர்கள் ஆராயவில்லை.

அதிக வெப்பநிலையை பொறுத்துக்கொள்ளும் தாவர இனங்கள் வெப்பமான பகுதிகளில் மிகவும் பொதுவானவை. இது எதிர்பாராதது அல்ல. ஆனால், மிகச்சிறிய இடைவெளியில் கூட இந்த விளைவைக் கண்டு குழு ஆச்சரியமடைந்தது. அவர்களின் ஆய்வுப் பகுதியின் முழு நீளமும் சுமார் 2 கிமீக்கு (1.24 மைல்கள்) அதிகமாக இல்லை. கூடுதலாக, கொதிக்கும் ஆற்றின் வெப்பமான பகுதிகள் ஆங்காங்கே உள்ளன.

இதில் சில நீராவி பகுதிகள் ஆற்றின் குறுக்கே அங்கும் இங்கும் சிதறி உள்ளன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டியவுடன், தாவரங்கள், கிட்டத்தட்ட உடனடியாக வினைபுரியும் என்று ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

அமேசான் மழைக்காடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காலநிலை மாற்றம் அமேசான் படுகையை வெப்பமாக்குவதால், கொதிக்கும் நதியின் எல்லைப் பகுதிகளைப் போல மழைக்காடுகள் வறண்டு போகக்கூடும்

எதிர்காலத்தில் அமேசான் எவ்வாறு மாறக்கூடும்?

ஆய்வில் ஈடுபடாத எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் கிறிஸ் போல்டன் கூறுகையில், கொதிக்கும் நதியை 'இயற்கைப் பரிசோதனையாக' குழு விளக்கியது பற்றி பேசுகிறார். "இது மிகவும் நன்றாக இருந்தது என்று நான் நினைத்தேன். இது ஒரு புத்திசாலித்தனமான விஷயம்" என்கிறார் அவர்.

அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், அமேசானுக்கான அறிவியல் குழுவின் தொழில்நுட்ப-அறிவியல் செயலகத்தின் உறுப்பினரான டியாகோ ஒலிவேரா பிராண்டோ, எதிர்காலத்தில் அமேசான் எவ்வாறு மாறக்கூடும் என்பதற்கு கொதிக்கும் நதி ஒரு உதாரணம் என்கிறார்.

காலநிலை மாற்றத்தின் இத்தகைய விளைவுகள் பழங்குடியின மக்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து தாம் கவலைப்படுவதாக அவர் கூறுகிறார். "இந்த மக்கள் உயிரியல் வளங்களை சார்ந்துள்ளனர்," என்றும் அவர் கூறுகிறார்.

அமேசானில் உள்ள பழங்குடி குழுக்கள் ஏற்கனவே வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர். சில சமயங்களில் இது காலநிலை மாற்றத்தால் மோசமடைகிறது, எனவும் போல்டன் தெரிவித்தார்.

அமேசானின் அதிக வெப்பநிலை அங்குள்ள பல தாவரங்களின் செயல்பாட்டை அச்சுறுத்தும் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோடோல்போ நோப்ரேகா கூறுகிறார் .

கொதிக்கும் நதி இதை மிகச்சரியாக விளக்குகிறது. "நீங்கள் பிராந்தியத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும்போது, அருகில் நீர் கிடைத்தாலும் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை திறனை நீங்கள் குறைக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

"நான் நம்புவது என்னவென்றால், சுற்றி நீர் இருந்தாலும், தாவரங்களுக்கு வெப்பநிலையால் அழுத்தம் ஏற்படுகின்றது." நிலத்தடி நீரின் வெப்பநிலை அல்லது அளவை ஆராய்ச்சியாளர்கள் அளவிடவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகரிக்கும் வெப்பநிலை பல்லுயிர் மற்றும் தாவர வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கும் என்பதை கொதிக்கும் நதி சுட்டிக்காட்டினாலும், இந்த பகுதி, அமேசானின் மழைக்காடுகளின் எதிர்காலத்தை பெரிய அளவில் பிரதிபலிக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்று குல்பெர்க் கூறுகிறார்.

உதாரணமாக, வேறு எங்கும் இவ்வளவு நீராவியை எதிர்பார்க்க முடியாது. புயல் அல்லது மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பெரிய வானிலை விளைவுகள், வரும் ஆண்டுகளில் ஒட்டுமொத்த காடு எவ்வாறு உருவாகிறது என்பதையும் பாதிக்கும்.

கொதிக்கும் ஆறு

பட மூலாதாரம்,RILEY FORTIER

படக்குறிப்பு, கொதிக்கும் ஆறு பூமிக்கு அடியில் உள்ள ஆழமான புவிவெப்ப மூலங்களால் வெப்பமடைவதாக கருதப்படுகிறது

காற்றில் ஓடும் வளிமண்டல ஆறுகள் மீதான பாதிப்பு

மேலும் காலநிலை மாற்றத்தினுடைய தாக்கத்தின் கீழ் பரந்த அமேசான் படுகையின் நிலைமைகளை, 'கொதிக்கும் நதி' முழுமையாக பிரதிபலிக்காததற்கு மற்றொரு காரணமும் உள்ளது.

அமேசான் ஒரு பெரிய பரப்பு என்று நோப்ரேகா சுட்டிக்காட்டுகிறார். இது பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா மற்றும் பிரெஞ்சு கயானா, கடல்கடந்த பிரெஞ்சு பிரதேசம் உட்பட ஒன்பது வெவ்வேறு நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியது. மொத்தத்தில், 6.7 மில்லியன் சதுர கிமீ (2.6 மில்லியன் சதுர மைல்) பரப்பளவை அமேசான் கொண்டுள்ளது .

"ஒரு பகுதியில் நீங்கள் கண்டறிவது, வேறொரு மழைப்பொழிவு முறை அல்லது தாவர விநியோகம் கொண்ட மற்றொரு பகுதிக்கு அறிவியல் ரீதியாக பொருந்தாது" என்றும் அவர் கூறுகிறார்.

முன்னதாக, போல்டன் மற்றும் அவரது நண்பர்கள் அமேசான் 'பேரழிவு கட்டத்தை' நெருங்கி இருக்கலாம் என்ற கருத்தை ஆராய்ந்தனர். அங்கு காலநிலை மாற்றம் மற்றும் காடழிப்புச் செயல்கள், அந்த காடுகளை விரைவாக மோசமடையச் செய்யலாம்.

"கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மரங்களின் திடீர் அழிவை நீங்கள் காணலாம்," என்கிறார் போல்டன்.

மேலும், காலநிலை மாற்றத்தால் மட்டுமே அமேசான் வெப்பமாகவும் வறண்டதாகவும் மாறுவது இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.

காடழிப்பு பெரும் பிரச்னையாகும். இது காடுகளுக்கு மேலே காற்றில் ஓடும் வளிமண்டல ஆறுகளை துண்டித்துவிடும். இல்லையெனில், இவை மழை வடிவில் காடுகளுக்கு ஈரப்பதத்தைக் கொண்டு வரும். "நீங்கள் மரங்களை வெட்டினால், அந்த இணைப்பை அழித்துவிடுவீர்கள், அடிப்படையில், நீங்கள் வறட்சியை ஏற்படுத்துகிறீர்கள்," என்றும் அவர் விளக்குகிறார்.

செய்பா மரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, செய்பா மரம் போல, குறிப்பிட்ட தாவரங்களால் கொதிக்கும் ஆற்றின் தீவிர சூழலை சமாளிக்க முடியும்

அமேசான் மழைக்காடுகள் வறண்ட இடமாக மாறும் அபாயம்

போல்டன் உட்பட 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களால் 2023 இல் வெளியிடப்பட்ட 'குளோபல் டிப்பிங் பாயிண்ட்ஸ்' பற்றிய ஒரு அறிக்கை, அமேசான் மழைக்காடுகள் விரைவில் மிகவும் வறண்ட இடமாக மாறும் அபாயத்தை ஆராய்ந்தது. இது காட்டை விட பரந்த சமதள வெளியிடத்தைப் போன்று உள்ளது.

கொதிக்கும் நதியை மேலும் ஆராய்வதன் மூலம், கடுமையான புதிய நிலைகளில் எந்த இனங்கள் உயிர்வாழ அதிக வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றிய ஒரு தகவலைப் பெறலாம் என ஃபோர்டியர் பரிந்துரைக்கிறார்.

50 மீ (164 அடி) உயரம் வரை வளரக்கூடிய மாபெரும் செய்பா மரத்தின் (செய்பா லுபுனா) உதாரணத்தை அவர் குறிப்பிடுகிறார்.

குல்பெர்க்கின் கூற்றுப்படி, இந்த மரம் கொதிக்கும் ஆற்றின் அருகே அதிக வெப்பநிலையைத் தாங்கும் தன்மையைக் கொண்டதாகத் தோன்றியது. மேலும், இது முந்தைய ஆராய்ச்சியின் மூலம் ஆதரிக்கப்பட்டது.

செய்பா மரம், அதன் தண்டுகளில் தண்ணீரை சேமிக்க முடியும் என்று குல்பெர்க் குறிப்பிடுகிறார். இது வறண்ட நிலைமைகளிலும் உயிர் வாழ உதவுகிறது.

இது தொடர்பாக மேற்கொண்டு பேசும் ஃபோர்டியர், கொதிக்கும் ஆற்றின் அருகே வளரும் குறிப்பிட்ட தாவர வகைகள், இந்த கடுமையான சூழலை சமாளிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவது இயற்கை வளங்களை பாதுகாக்கும் ஆர்வலர்களுக்கு நன்மை அளிக்கிறது என்று கூறுகிறார். இதன் மூலம் பரந்த மழைக்காடுகளில், எந்த பகுதிகளில் இருக்கும் இயற்கை சூழலுக்கு அதிக பாதுகாப்பு தேவை என்பதை தீர்மானிக்க முடியும் என்பதை அவர் நம்புகிறார்.

இந்த மரக்கவிகைகளுக்கு கீழே நிலவும் மைக்ரோ கிளைமேட்டிக் சூழலில் கடுமையான சூழலிலும் உயிர்வாழ தேவையான தகவமைப்புகளைக் கொண்ட உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்கு இது உதவும்.

அமேசானைப் பாதுகாப்பதை காடுகளுக்கு அப்பால் மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக போல்டன் கருதுகிறார். ஆபத்து என்னவென்றால், மழைக்காடுகள் ஒரு பேரழிவு கட்டத்தை அடைந்தால், அது விரைவாக அழியத் தொடங்கினால், முழு உலகமும் பாதிக்கப்படும்.

"காடு அழிந்தால், அதிகளவு கார்பன் வளி மண்டலத்திற்குச் செல்லப் போகிறது, அது காலநிலையை பாதிக்கும். இது உள்ளூர் பிரச்னை மட்டுமல்ல, உலகளாவிய ஒன்று" என்றும் அவர் கூறுகிறார்.

அப்படியானால், கொதிக்கும் நதி எதிர்காலத்தின் ஒரு முன்னோட்டம் மட்டுமல்ல. இது ஒரு எச்சரிக்கையும் கூட.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

https://www.bbc.com/tamil/articles/c9vke70nn1ro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.