Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கீழ்வெண்மணி

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, கீழ்வெண்மணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்களில் ஒன்று கீழ்வெண்மணி படுகொலை. 1968ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட பட்டியலினத்தோர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும். இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன?

1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இரவு. அப்போதைய கீழ் தஞ்சை மாவட்டத்தின் நாகப்பட்டினத்தில் இருந்த கீழ் வெண்மணி கிராமத்தில் பட்டியலினத்தவருக்கான நடுத்தெருவில் வசித்துவந்த ராமையன், தன் வீட்டிற்கு முன்பாக, சிலருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது கிழக்கே இருந்த இரிஞ்சூர் பக்கமிருந்து பலர் கூச்சலிட்டபடி வரும் சத்தம் கேட்டது. அதே நேரத்தில், விவசாயிகள் வசிக்கும் தெருப் பக்கமிருந்தும் சிலர் ஓடிவரும் சத்தம் கேட்டது. இதனால், அந்தத் தெருவில் வசித்துவந்த பட்டியலின மக்கள் அச்சத்தில் அங்குமிங்கும் ஓட, அங்கு வந்த குழுவினர் விரைவிலேயே தாக்க ஆரம்பித்தனர்.

இந்தியாவை அதிரவைத்த வன்முறை

பட்டியலினத்தவரில் சிலர் தப்பிப்பதற்காக ராமையாவின் குடிசைக்குள் சென்று ஒளிந்துகொண்டனர். கலவரக் கும்பல் அந்த வீட்டைப் பூட்டித் தீ வைத்தது. இதில், அந்தக் குடிசைக்குள் சிக்கிக்கொண்ட பட்டியலினத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு எரிந்து சாம்பலானார்கள். இவர்களில் 23 பேருக்கு 16 வயது அல்லது 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள். எனினும், நீதிமன்ற ஆவணங்கள் 42 பேர் எரிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றன.

தமிழ்நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்தது இந்த நிகழ்வு. விவசாயத் தொழிலாளர்கள் மீது நிலவுடைமையாளர்கள் நடத்திய இந்தக் கொடூரத் தாக்குதல் அந்தப் பகுதியில் நீண்ட காலமாக நடந்துவந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

கூலி உயர்வு கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் மிகச் செழிப்பான ஒரு மாவட்டம். ஆனால், அந்த காலகட்டத்தில் அம்மாவட்டத்தின் நிலவுடைமை பெரும்பாலும் உயர் சாதியினரிடமும் மடங்களிடமுமே இருந்தது. ஆகவே, இயல்பாகவே இம்மாவட்டத்தில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டுவந்த நிலையில், அந்தப் பகுதியின் தொழிலாளர்களை ஒன்று திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய தொழிலாளர் சங்கங்களை உருவாக்க ஆரம்பித்தனர். இந்தச் சங்கத்தின் மூலம், பல்வேறு கோரிக்கைகளை குறிப்பாக கூலி உயர்வு கோரிக்கைகளை முன்வைத்துவந்தனர். இந்த விவசாய சங்கத்தின் நாகப்பட்டின பிரிவின் தலைவராக முத்துசாமி என்பவர் இருந்துவந்தார்.

இந்தத் தொழிலாளர் சங்கம், அந்தப் பகுதியின் நிலவுடைமையாளர்களுக்கு சிக்கலாக உருவெடுத்த நிலையில், அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக 1966வாக்கில் நாகப்பட்டினம் தாலுகா நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற ஒரு சங்கத்தை உருவாக்கினர். இதன் தலைவராக இரிஞ்சூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் இருந்துவந்தார். தொழிலாளர்கள் தரப்புக்கும் நிலவுடமையாளர் தரப்புக்கும் இடையில் மோதல் முற்றும் நிலையில் அரசுத் தரப்பு, இந்த இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கமாக ஆரம்பித்தது.

கீழ்வெண்மணி நினைவு தினம்

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, கீழ்வெண்மணி நினைவுச் சின்னத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தரப்பினர் டிச. 25 அன்று மரியாதை செலுத்தி வருகின்றனர்

இந்நிலையில், 1967ஆம் ஆண்டின் மத்தியில் தொழிலாளர்கள், நிலவுடைமையாளர்கள், அரசுத் தரப்பு ஆகியோரை உள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரங்கபாஷ்யம் ஒரு பேச்சுவார்த்தையை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் கடந்த ஆண்டு, ஒரு கலம் நெல் அறுத்தால் கொடுக்கப்படும் கூலியைவிட அரைப்படி நெல் கூடுதலாக அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. உள்ளூர் தொழிலாளர்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டால் மட்டும், வெளியூரில் இருந்து தொழிலாளர்களை அழைத்துவரலாம் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

1968ஆம் ஆண்டு அக்டோபர் - நவம்பர் காலத்தில் குறுவை அறுவடையின்போது, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதைவிட தொழிலாளர்கள் கூடுதலாக கூலி கேட்டதாக நிலவுடைமையாளர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, நெல் உற்பத்தியாளர்கள் சங்கம், நெல்லை அறுவடை செய்ய வெளியூரிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்தனர். அக்கம்பக்கத்திலிருந்த ஊர்களிலும் வேலைகள் கிடைக்கவில்லை. டிசம்பர் 12ஆம் தேதி தேவூர் என்ற இடத்தில் நடந்த தொழிலாளர்களின் கூட்டத்தில், வெளியூரிலிருந்து ஆட்கள் வந்தால் தடுப்பது என தொழிலாளர்கள் முடிவுசெய்தனர்.

இந்நிலையில், கோவிந்தராஜ் என்பவரது நிலத்தில் வேலை செய்ய இருக்கை என்ற ஊரைச் சேர்ந்த 18 தொழிலாளர்களை நெல் உற்பத்தியாளர்களுக்கு நெருக்கமான பக்கிரிசாமி என்பவர் அழைத்துவந்தார். ஒரு கலத்திற்கு நான்கரைப்படி நெல் என அவர்களுக்கு கூலி பேசப்பட்டிருந்தது. டிசம்பர் 25ஆம் தேதியன்று இவர்கள் வேலை முடிந்து மாலை ஏழரை மணியளவில் கீழ் வெண்மணியின் கிழக்கு - மேற்கு தெரு அருகில் வந்தபோது, அவர்களை அந்த ஊரின் தொழிலாளர்கள் வழிமறித்ததாகவும் வெளியூர் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், பக்கிரிசாமி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

தப்பிச்சென்ற வெளியூர் தொழிலாளர்கள் மிராசுதார்களிடம் சென்று நடந்த சம்பவத்தைத் தெரிவித்தனர். இதையடுத்து, மிராசுதாரான பக்கிரிசாமி பொறையார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், கீழ்வேளூர் காவல் நிலையத்தில் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.

கீழ்வெண்மணி

பட மூலாதாரம்,CPIM/FACEBOOK

படக்குறிப்பு, கீழ்வெண்மணியில் 40க்கும் மேற்பட்டோர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் படம்

'ஊரே எரிந்துகொண்டிருந்தது'

இதற்குப் பிறகு பெரும் எண்ணிக்கையில் திரண்டுவந்த மிராசுதார் தரப்பு ஆட்கள், கீழ்வெண்மணிக்குள் புகுந்தனர். வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. கண்ணில் பட்டவர்கள் தாக்கப்பட்டனர். பலர் சுடப்பட்டனர். இந்தத் தாக்குதலில் தப்ப ராமையா என்பவரின் வீட்டுக்குள் புகுந்தவர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டனர். நீதிமன்ற ஆவணங்களின்படி 42 பேர் கொல்லப்பட்டதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆனால், இடதுசாரி இயக்கங்களின் சார்பில் எழுதப்பட்ட நூல்கள், 44 பேர் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன. அதாவது, ராமையாவின் வீட்டிற்குள் மொத்தம் 48 பேர் புகுந்தனர். தீ எரிய ஆரம்பித்தவுடன் இவர்களில் ஆறு பேர் தப்பினர். அந்த ஆறு பேரில் இருவர் மீண்டும் தாக்கப்பட்டு அந்த வீட்டுக்குள்ளேயே போடப்பட்டனர். முடிவில் 44 பேர் இந்த வீட்டிலேயே எரிந்து சாம்பலாயினர் என்பது அவர்கள் தரப்பு தகவலாக இருக்கிறது.

இந்த 25ஆம் தேதி நிகழ்வில், மொத்தம் 22 வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக பட்டியலினத்தைச் சேர்ந்த முனியன் என்பவர் அளித்த புகாரில், கீழ் வேளூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. அங்கிருந்து காவல்துறை கீழ்வெண்மணிக்கு வந்து பார்த்தபோதும் அந்த ஊரே எரிந்துகொண்டிருந்தது. புகைக்கு நடுவில், ஒரு தென்னை மரத்தின் கீழ் பக்கிரிசாமி கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தது தெரிந்தது.

'மக்கள் கொல்லப்பட்டதை கவனிக்காத காவல்துறை'

மனோஜ் மிட்டா, கீழ்வெண்மணி படுகொலை

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு, மக்கள் எரிக்கப்பட்டிருந்ததை காவல்துறை முதலில் கவனிக்கவில்லை என, 'காஸ்ட் பிரைட்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் மனோஜ் மிட்டா

இதையடுத்து பக்கிரிசாமி கொலை தொடர்பாக ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஆனால், அந்த இரவில் 42 பேர் ஒரே வீட்டில் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டதை காவல்துறையினர் கவனிக்கவில்லை என தனது 'காஸ்ட் பிரைட்' (Caste Pride) நூலில் மனோஜ் மிட்டா குறிப்பிடுகிறார். அடுத்த நாள் அதிகாலை ஆறரை மணியளவில்தான் அந்த வீட்டில் சடலங்கள் குவிந்து கிடப்பது கண்டறியப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் கோரப்பட்டன. காலை பத்து மணியளவில்தான் 42 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதில் புதிதாக வழக்குப் பதிவுசெய்யப்படவில்லை. முனியன் அளித்தப் புகாரிலேயே இந்த விவகாரமும் சேர்க்கப்பட்டது.

12 மணி நேரத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான கோபாலகிருஷ்ண நாயுடு கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு ஜனவரி 1ஆம் தேதி உள்ளூர் காவல்துறையிடமிருந்து மாற்றப்பட்டு, சென்னையில் இருந்த மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

குறைவான தண்டனை

ஆனால், இந்த நிகழ்வு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தின. இந்த வழக்குகளில் 1969 மார்ச் 26ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நாகப்பட்டினத்தில் இருந்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சி.எம். குப்பண்ணன் இரு வழக்குகளையும் விசாரித்தார். ஒன்று, பட்டியலினத்தினருக்கு எதிராக கீழ்வேளூர் காவல் நிலையம் பதிவுசெய்த வழக்கு. இரண்டாவது, மத்திய குற்றப் பிரிவு மிராசுதார்களுக்கு எதிராக நடத்திய வழக்கு.

42 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ராமையன் சாட்சியாகவும் பக்கிரிசாமி பிள்ளை கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரில் ஒருவராக ராமையன் நிறுத்தப்பட்டார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் முத்துசாமி, பக்கிரிசாமி பிள்ளை கொலை வழக்கிலும் கோபாலகிருஷ்ண நாயுடு 42 பேர் கொல்லப்பட்ட வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களாக நிறுத்தப்பட்டனர். 1970 நவம்பர் 30ஆம் தேதி இந்த இரு வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பக்கிரிசாமி பிள்ளை கொல்லப்பட்ட வழக்கில் 8 விவசாயத் தொழிலாளர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. கோபால் என்பவர் முதன்மை குற்றவாளியாகவும் ராமையன் அதைவிடக் குறைந்த குற்றங்களின் கீழும் தண்டிக்கப்பட்டனர். ஆனால், 42 பேர் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரில் யாருமே கொலைக் குற்றத்திற்காக தண்டிக்கப்படவில்லை. எட்டு பேர் மட்டும் சிறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டனர். அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனையே வழங்கப்பட்டது. 42 பேரை எரித்துக் கொன்றார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி குறிப்பிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மிராசுதார்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்களை கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததை எதிர்த்து அரசும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே. வெங்கடராமன், எஸ். மகராஜன் ஆகியோர் விசாரித்தனர். 1973 ஏப்ரல் 6ஆம் தேதி இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் மிராசுதார்களின் முறையீடு ஏற்கப்பட்டு, அரசுத் தரப்பின் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, கொலை அல்லாத வேறு குற்றங்களுக்காக நாகை நீதிமன்றம் அளித்த தண்டனையையும்கூட உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது.

தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது என்ன?

அந்தத் தீர்ப்பில் இடம்பெற்றிருந்த, "இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள 23 குற்றவாளிகளும் மிராசுதார்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள், முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இத்தகைய மிராசுதார்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளை பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்? இவர்கள் தாங்களே சம்பவ இடத்திற்கு நடந்துவந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பதை நம்புவது சிரமமாக உள்ளது" என்ற வாசகங்கள் தொழிலாளர் தரப்பை அதிரவைத்தன.

ஆனால், பக்கிரிசாமி பிள்ளை கொலை தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் உறுதிசெய்யப்பட்டன.

இந்திய உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1975ஆம் ஆண்டின் இறுதியில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்தது. ஆனால், இந்த வழக்கு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டது. முடிவில், இதற்கிடையில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் இறந்து போயிருந்தனர். 1990ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ். ரங்கநாதன், கே. ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது.

இதற்கிடையில், 1980களில் கீழ்வெண்மணி வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு, சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மேல் முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்திற்கு பிறகு, தமிழ்நாடு அரசு 1969ஆம் ஆண்டில், விவசாயிகளுக்கு நியாயமான கூலியை உறுதிசெய்ய 'தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நியாய ஊதியச் சட்டம் - 1969' என்ற சட்டத்தை இயற்றியது. ஆனால், இந்தப் படுகொலை தொழிலாளர் - மிராசுதார் இடையிலான மோதலால் மட்டும் நடந்ததா அல்லது இது சாதி ரீதியான ஒடுக்குமுறையா என்பது குறித்த விவாதங்களும் இந்த வழக்கில் காவல் துறையும் நீதிமன்றமும் நடந்துகொண்ட விதம் குறித்த சர்ச்சைகளும் இன்னமும் நீடிக்கின்றன.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

https://www.bbc.com/tamil/articles/c6236rvz6gyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.