Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா, சிம்ஃபொனி, இசை

பட மூலாதாரம்,FACEBOOK

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பதவி,பிபிசி தமிழ்

  • 3 மார்ச் 2025

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய சிம்ஃபொனி வரும் மார்ச் 8-ஆம் தேதி லண்டன் நகரில் வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனி என்றால் என்ன? 'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்?

கேள்வி: சிம்ஃபொனி என்றால் என்ன?

பதில்: சிம்ஃபொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஒரு ஒத்திசைத் தொகுப்பு.

இந்த இசைத் தொகுப்பு, பல பகுதிகளை, பெரும்பாலும் நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். இந்தப் பகுதிகள் movements என்று குறிப்பிடப்படுகின்றன. அதில் ஒரு பகுதி சொனாடா என்ற வடிவத்தில் இருக்கும். சிம்ஃபொனிகளுக்கு என மிகத் தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு.

ஒரு சிம்ஃபொனி 30 முதல் 100 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைக்கப்படும் ஒரு நிகழ்வாக இருக்கும். இதில் வயலின், செல்லோ போன்ற தந்திக் கருவிகள், ட்ரம்பட், புல்லாங்குழல், க்ளாரினெட், சாக்ஸபோன் போன்ற காற்றால் இசைக்கப்படும் கருவிகள், தாள இசைக் கருவிகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ஐரோப்பிய இசை வரலாற்றில் செவ்வியல் இசையின் காலகட்டமாகக் கருதப்படும் 1740 - 1820 காலகட்டத்தில் சிம்ஃபொனிகள் உருவாகத் துவங்கியதாக பிரித்தானியா கலைக்களஞ்சியம் தெரிவிக்கிறது. ஜோசஃப் ஹைடன், மொசார்ட், பீத்தோவன் ஆகியோர் மிகச் சிறந்த சிம்ஃபொனி தொகுப்புகளை உருவாக்கியவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

கேள்வி: விரைவில் இளையராஜா வெளியிடவிருக்கும் சிம்ஃபொனியின் பின்னணி என்ன?

பதில்: இளையராஜா, Valiant என்ற பெயரில் ஒரு சிம்ஃபொனியை உருவாக்கியிருக்கிறார். இதனைத் தான் உருவாக்கிய முதல் சிம்ஃபொனி எனக் குறிப்பிடுகிறார் இளையராஜா. இந்த சிம்ஃபொனி லண்டனின் Royal Philharmonic Orchestra மூலம் இசைக்கப்பட்டு, ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டது.

இந்தப் பதிவு, மார்ச் 8ஆம் தேதியன்று வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனிகள் மிகச் சிக்கலான இசை வடிவமாககக் கருதப்படும் நிலையில், இதனை வெறும் 34 நாட்களில் எழுதி முடித்ததாக இளையராஜா தெரிவித்திருக்கிறார்.

கேள்வி: இந்தியர் ஒருவர் இதற்கு முன்பாக சிம்ஃபொனிகளை உருவாக்கியிருக்கிறார்களா?

பதில்: ஆசியாவிலிருந்து சிலர் சிம்ஃபொனிகளை உருவாக்கியிருந்தாலும், இந்தியர் ஒருவர் இதுவரை சிம்ஃபொனிகளை உருவாக்கியதில்லை. இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறு சிறு இசைத் தொகுப்புகளை சிலர் சிம்ஃபொனி என அழைத்தாலும், அப்படி அழைப்பது சரியல்ல என தன்னுடைய பேட்டிகளில் சுட்டிக்காட்டுகிறார் இளையராஜா. சிம்ஃபொனிகளுக்கென உள்ள விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்படுவதை மட்டுமே சிம்ஃபொனி எனக் குறிப்பிட வேண்டும் என்கிறார் அவர்.

இளையராஜா, சிம்ஃபொனி, இசை

பட மூலாதாரம்,FACEBOOK

கேள்வி: சிம்ஃபொனியை இளையராஜா ஏன் லண்டனில் பதிவுசெய்தார்? இந்தியாவில் சிம்ஃபொனிகளை பதிவுசெய்ய முடியாதா?

பதில்: சிம்ஃபொனிகளை இசைக்க, மேற்கத்திய இசையை ஒத்திசைந்து இசைக்கக்கூடிய சுமார் 100 தேர்ந்த இசைக் கலைஞர்கள் தேவை. சிம்ஃபொனிகள் இறுதியாக பதிவுசெய்யப்படுவதற்கு முன்பாக, பல முறை அவை வாசிக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்படும்.

ஆகவே, அதற்கென வடிவமைக்கப்பட்ட அரங்கங்கள் தேவை. சிம்ஃபொனிகளை இசைக்கக்கூடிய சில இசைக் குழுக்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், புதிதாக சிம்ஃபொனி ஒன்றை உருக்கியுள்ள நிலையில் அதனை தேர்ச்சிபெற்ற மேற்கத்திய இசைக் கலைஞர்களை வைத்தே லண்டனில் பதிவுசெய்ததாகத் தெரிவிக்கிறார் இளையராஜா.

கேள்வி: இளையராஜா இதற்கு முன்பாக, மேற்கத்திய செவ்வியல் இசையில் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாரா?

பதில்: 1986 ஆம் ஆண்டில் How to Name It? என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார் இளையராஜா. இதில் மொத்தம் பத்து ட்ராக்குகள் (tracks) இடம்பெற்றிருந்தன. இளையராஜாவின் முதல் ஃப்யூஷன் ஆல்பமாக (fusion album) இது வெளியானது.

1988 ஆம் ஆண்டில் Nothing but Wind என்ற ஆல்பத்தை வெளியிட்டார் இளையராஜா. மேற்கத்திய செவ்வியல் இசை, இந்திய நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி ஆகியவற்றை இணைத்து இளையராஜா உருவாக்கியிருந்த இந்த இசைத் தொகுப்பை வாசித்திருந்தவர், புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைக் கலைஞரான ஹரி பிரசாத் சௌராசியா.

1993 ஆம் ஆண்டில் இளையராஜா ஒரு சிம்ஃபொனியை உருவாக்கியதாக செய்திகள் வெளியாயின. ஆனால், அதிகாரபூர்வமாக அந்தத் தொகுப்பு வெளியாகவில்லை.

2005 ஆம் ஆண்டில் திருவாசகத்தை மேற்கத்திய இசைக் கருவிகளின் இசையோடு வெளியிட்டார் இளையராஜா. புடாபெஸ்ட் நகரில் புடாபெஸ்ட் சிம்ஃபொனி ஆர்க்கெஸ்ட்ரா இதனை இசைத்து, பதிவுசெய்யப்பட்டது. இது oratorio வகையைச் சேர்ந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/ce98v44n0vmo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்ணைபுரம் முதல் லண்டன் 'சிம்ஃபொனி' இசை வரை - இளையராஜா இன்றும் டிரெண்டில் இருப்பது எப்படி?

இளையராஜா, 'சிம்ஃபொனி' இசை, தமிழ் சினிமா, கோலிவுட், இசை

பட மூலாதாரம்,Facebook/Ilaiyaraaja

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,சிராஜ்

  • பதவி,பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இளையராஜா, 7000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மெட்டமைத்தவர், 1400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். இந்த எண்களைப் படிக்கும்போது, அவரது இசையமைக்கும் பாணி மற்றும் படைப்புத் திறன் குறித்த ஓர் ஆச்சர்யம் எழும்.

"பாடலுக்கான சூழலும், கதையும் விவரிக்கப்படும்போது திரைப்பட இயக்குநர் மட்டுமே என்னுடன் இருப்பார். பிறகு, நானும் என் ஹார்மோனியமும் மட்டும்தான். பாடலுக்கான சூழலை கற்பனை செய்து ஹார்மோனியத்தை தொடும்போது, இசை பாயும். நான் அப்போது வேறு உலகில் சஞ்சரிப்பேன். அது என்னால் விளக்க முடியாத ஒன்று."

தனது இசையமைக்கும் பாணி குறித்து இளையராஜா கூறிய வார்த்தைகள் இவை.

'அன்னக்கிளி' தொடங்கி 'விடுதலை 2' வரை, வினைல் ரெக்கார்டுகள் முதல் ஸ்ட்ரீமிங் தளங்கள் வரை, ஏறக்குறைய 50 ஆண்டுகளாகப் பல தலைமுறைகள் கடந்தும் இளைராஜாவின் இசையும் குரலும் கொண்டாடப்படுகிறது.

பண்ணைபுரம் முதல் லண்டன் சிம்ஃபொனி வரை

தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்ற ஊரில் இருந்து, தனது 25வது வயதில் (1968), இசைதான் வாழ்க்கை என்ற முடிவோடு மெட்ராஸ் (சென்னை) வந்தார் இளையராஜா.

அவர் அப்போது மேற்கத்திய இசையைக் கற்றுக்கொள்ள விரும்பினார். இளையராஜாவின் குழுவில் இருந்த பாடகி கமலா, தன்ராஜ் மாஸ்டர் என்பவரைப் பரிந்துரைத்தார். அவரிடம் மாணவராகச் சேர்ந்தார் இளையராஜா.

தனது வாழ்க்கையின் முக்கியமான மூன்று பேர் என இளையராஜா குறிப்பிடுவது, தன்ராஜ் மாஸ்டர், இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேசன் மற்றும் கடவுள் மூகாம்பிகை.

இதில் ஜி.கே.வெங்கடேசன் என்பவர் 1960கள் மற்றும் 70களில் கன்னட திரைப்படத் துறையில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர். அவரிடம் சிறிது காலம் இசை உதவியாளராகப் பணிபுரிந்தார் இளையராஜா.

இளையராஜா, 'சிம்ஃபொனி' இசை, தமிழ் சினிமா, கோலிவுட், இசை

பட மூலாதாரம்,Ilaiyaraajalive

படக்குறிப்பு,தன்ராஜ் மாஸ்டருடன் இளையராஜா

"தன்ராஜ் மாஸ்டர்தான் ராசையா என்ற பெயரை மாற்றி ராஜா என வைத்தார். பின்னர் பஞ்சு அருணாச்சலம் ராஜாவை இளையராஜா என்று மாற்றினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'இசைஞானி' என்ற பட்டத்தை வழங்கினார். எல்லோரும் என் பெயரை மாற்றிவிட்டார்கள்," என்று தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஒருமுறை கூறியிருந்தார் இளையராஜா.

இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படமான 'அன்னக்கிளி', 1976இல் வெளியானபோது, அதன் பாடல்கள் வெகு சீக்கிரமாகவே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. காரணம் அதில் ஒலித்த புதுமையான கிராமத்து இசை.

"படம் வெளியான நேரத்தில், ஒருமுறை நான் நடைபயிற்சி செய்யக் கிளம்பும்போது, பக்கத்து வீட்டின் வானொலியில் 'அடுத்த பாடல் அன்னக்கிளி படத்தில் இருந்து' என அறிவித்தார்கள். உடனே பக்கத்து வீட்டுக்காரர் 'அன்னக்கிளி பாடல் போடுகிறார்கள்' என்று பிறரையும் அழைத்தார். நான் தெருவைக் கடப்பதற்குள் அனைத்து வீட்டு வானொலிகளிலும் அந்தப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது" எனத் தனது முதல் திரைப்படம் தொடர்பான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருப்பார் இளையராஜா.

இளையராஜாவின் தாக்கம்

இளையராஜா, 'சிம்ஃபொனி' இசை, தமிழ் சினிமா, கோலிவுட், இசை

பட மூலாதாரம்,Facebook/Ilaiyaraaja

படக்குறிப்பு,இயக்குநர் பாரதிராஜாவுடன், இளையராஜா

அதன் பிறகு, எத்தனையோ பாடல்கள், திரைப்படங்கள் என தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறினார் இளையராஜா.

ஆனால் இளையராஜாவின் இசையை, குறிப்பாகப் பின்னணி இசையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்ற திரைப்படம் என்றால், அது 1977இல் வெளியான இயக்குநர் பாரதிராஜாவின் '16 வயதினிலே'. அன்னக்கிளிக்கும் 16 வயதினிலே படத்திற்கும் ஒரு வருடம்தான் இடைவெளி என்றாலும், இளையராஜா அதற்கு இடையே 11 படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய இளையராஜா, "16 வயதினிலே படத்திற்கு முன்பு வரை இயக்குநர்கள் கேட்டதை மட்டுமே செய்ய முடிந்தது. ஆனால், அந்தப் படத்தில்தான், பின்னணி இசையில் நான் என்னவெல்லாம் நினைக்கிறேனோ அவற்றையெல்லாம் செய்ய பாரதிராஜா ஒப்புக்கொண்டார். அந்தப் படத்திற்குப் பிறகுதான், எல்லாப் படங்களுக்கும் பின்னணி இசையில் என்னால் முழுமையாக, எந்தத் தயக்கமும் இல்லாமல் பணியாற்ற முடிந்தது" என்று கூறினார்.

ஒரு காட்சியில் வசனங்கள் ஏதும் இல்லாவிட்டாலும்கூட, தனது பின்னணி இசை மூலமாகவே கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்கு கடத்துவதில் இளையராஜா வல்லவர்.

அதற்கு உதாரணமாக, இயக்குநர் பாலு மகேந்திராவின் 'வீடு' திரைப்படத்தில், தனது பேத்தி கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீட்டை முருகேசன் எனும் தாத்தா கதாபாத்திரம் (நடிகர் சொக்கலிங்க பாகவதர்) சுற்றிப் பார்க்கும் ஒரு காட்சியைக் கூறலாம்.

இளையராஜா, 'சிம்ஃபொனி' இசை, தமிழ் சினிமா, கோலிவுட், இசை

பட மூலாதாரம்,Instagram/ilayaraja_official

கதை, திரைக்கதை மற்றும் நடிகர்களின் பங்களிப்பைத் தாண்டி இசை மூலம் ஒரு படத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதை 1988-இல் வெளியான 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' என்ற திரைப்படம் மூலம் இளையராஜா நிரூபித்திருப்பார்.

இந்தத் திரைப்படம் மலையாள இயக்குநர் ஃபாசில் (நடிகர் பஹத் ஃபாசிலின் தந்தை) இயக்கிய 'என்டே மாமட்டுக் குட்டியம்மாக்கு' என்ற படத்தின் ரீமேக். தமிழிலும் அவரே இயக்கியிருப்பார். அதே கதை, அதே திரைக்கதை, அதே இயக்குநர். ஆனால் மலையாளத்தில் வேறொரு இசையமைப்பாளர். தமிழுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார்.

தமிழில் வரும் பின்னணி இசை, குறிப்பாக இறுதிக் காட்சியில் வரும் இசையை, மலையாள படத்தோடு ஒப்பிட்டால் இளையராஜா ஏன் இன்றும் கொண்டாடப்படுகிறார் என்பது புரிந்துவிடும். ஒரு குழந்தையைப் பிரிந்து செல்லும் தாயின் உணர்வுகளை மிக அழகாகத் தனது இசையின் வாயிலாகக் கடத்தியிருப்பார்.

இளையராஜா, 'சிம்ஃபொனி' இசை, தமிழ் சினிமா, கோலிவுட், இசை

பட மூலாதாரம்,Facebook/Ilaiyaraaja

கடந்த 1970களின் இறுதியில் தொடங்கி, 1990களின் தொடக்கம் வரை தமிழ் சினிமாவின் பாடல்களில் இருந்து ஏதேனும் ஒரு பிரபலமான பாடலை போட்டுக் காட்டி, இதற்கு யார் இசையமைப்பாளர் எனக் கேட்டால், யோசிக்காமல் பலரும் கூறும் பதில் 'இளையராஜா'.

உதாரணமாக ரஜினிகாந்த் நடித்து 1980களில் வெளியான மனிதன், ராஜா சின்ன ரோஜா, ஊர்க்காவலன், தாய் வீடு போன்ற படங்களின் பாடல்களைக் கேட்கும் பலர், இளையராஜாதான் இசையமைப்பாளர் என்றே நினைப்பார்கள்.

சங்கர்-கணேஷ், சந்திரபோஸ் போன்ற இசையமைப்பாளர்கள் அப்போது பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ள போதும், '80களில் தமிழ் சினிமாவில் இளையராஜா மட்டுமே இசையமைப்பாளராக இருந்தார் அல்லது ஒரு நல்ல ரெட்ரோ தமிழ்ப் பாடல் என்றால் ராஜாவின் இசையாகவே இருக்கும்' என்ற பிம்பம் உருவாகும் அளவுக்கு அவரது பாடல்கள் பெருமளவில் தாக்கம் செலுத்தின.

அதன் தாக்கம் குறித்த ஒரு பிரபலமான உதாரணம் தான், தமிழ்நாட்டின் சிறுநகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களின் பேருந்துகளில் இன்றும் ஒலிக்கும் 'இளையராஜா பாடல்கள்'.

மார்ச் 8 அன்று லண்டனில், வேலியன்ட் (Valiant) என்ற பெயரில், இளையராஜா உருவாக்கிய முதல் சிம்ஃபொனி வெளியிடப்பட இருக்கிறது. சிம்ஃபொனிகள் மிகச் சிக்கலான இசை வடிவமாகக் கருதப்படும் நிலையில், இதை வெறும் 34 நாட்களில் எழுதி முடித்ததாக இளையராஜா தெரிவித்துள்ளார்.

இதற்காகக் கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டின் முதலமைச்சர் உள்படப் பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் அவரை நேரில் சந்தித்தும், சமூக ஊடகங்கள் மூலமும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இளையராஜா எனும் எழுத்தாளர்

இளையராஜா, 'சிம்ஃபொனி' இசை, தமிழ் சினிமா, கோலிவுட், இசை

பட மூலாதாரம்,kumudam puthagam velieedu

படக்குறிப்பு,இளையராஜா எழுதிய 'பால் நிலாப் பாதை' என்ற புத்தகம்

இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்பதைத் தாண்டி, பலரும் அறியாத இளையராஜாவின் மற்றொரு முகம் அவர் ஒரு எழுத்தாளர் என்பது.

  • உண்மைக்கு திரை ஏது?

  • என் நரம்பு வீணை

  • யாருக்கு யார் எழுதுவது? (தொகுப்பு)

  • யாதுமாகி நின்றாய்

  • சங்கீத கனவுகள்

  • வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது

  • வழித்துணை

  • துளிக்கடல்

  • ஞான கங்கா

  • பால் நிலாப் பாதை

  • நாத வெளியினிலே

  • பள்ளி எழுச்சிப் பாவைப் பாடல்கள்

  • இளையராஜாவின் சிந்தனைகள்

  • இளையராஜாவிடம் கேளுங்கள்

  • வெண்பா நன்மாலை

  • ஆதிசங்கரரின் விவேக சூடாமணி

  • இளையராஜா ஆய்வுக் கோவை

இவை அனைத்தும் இளையராஜா எழுதிய நூல்கள்.

"இளையராஜா, மரபுக் கவிதைகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதுவே திரைப்படங்களில் பாடல்கள் எழுதவும், புத்தகங்களை எழுதவும் அவரைத் தூண்டியுள்ளது" என்கிறார் சென்னை கிறித்தவக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கும் பரத் ஸ்ரீராம். இளையராஜா எழுதிய நூல்கள் குறித்து இவர் ஆய்வு செய்துள்ளார்.

"பெரும்பாலும் அவர் எழுதிய புத்தகங்களில் 'தத்துவ ஞானம்' சார்ந்தும், 'சித்தர் இலக்கியங்களின்' தொடர்ச்சி போலவும் இருக்கும். அவரது ஆன்மீக ஈடுபாடு, வாழ்க்கை குறித்த அவரது பார்வை ஆகியவற்றை அதில் புரிந்துகொள்ளலாம். தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் எழுதியவை மிக இயல்பாக இருக்கும். திருக்குறள் மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் தனது எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பார்," என்கிறார் பரத் ஸ்ரீராம்.

இளையராஜா எழுதியவற்றில், 'பால் நிலாப் பாதை' என்ற புத்தகத்தில் சிறு வயதில் கம்யூனிசம் மீது தான் கொண்ட ஈர்ப்பு முதல் தனது சினிமா பயணம் வரை பல விஷயங்களை பேசியிருப்பார். தனது புகழ்பெற்ற பாடல்கள் உருவான விதம் குறித்தும் அவர் விவரித்திருப்பார்.

அதற்குச் சான்றாக, ரஜினிகாந்த் நடிப்பில் 1984இல் வெளியான 'தம்பிக்கு எந்த ஊரு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'காதலின் தீபம் ஒன்று' என்ற பாடலைக் கூறலாம். அப்போது ஹெர்னியா அறுவை சிகிச்சையால் பேச முடியாமல் இருந்தபோதும், விசில் சத்தம் மூலம் பாடகர் எஸ்பிபி-க்கு பாடலையும், குழுவினருக்கு இசைக் குறிப்புகளையும் கொடுத்து பாடலை உருவாக்கியதாக புத்தகத்தில் விவரித்திருப்பார் இளையராஜா.

இளையராஜாவும் சர்ச்சைகளும்

இளையராஜா, 'சிம்ஃபொனி' இசை, தமிழ் சினிமா, கோலிவுட், இசை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது

இளையராஜா இதுவரை ஐந்து முறை இசைக்காக தேசிய விருது பெற்றுள்ளார். சாகர சங்கமம், ருத்ர வீணா என இரு தெலுங்கு படங்களுக்கும், சிந்து பைரவி என்ற தமிழ் படத்திற்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

பழசிராஜா என்ற மலையாள திரைப்படத்திற்காகவும் இயக்குநர் பாலாவின் தாரைத் தப்பட்டை படத்திற்காகவும் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை இளையராஜா வென்றுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

அதேநேரம் இளையராஜா குறித்த சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. 2022இல், பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அண்ட் மோதி' என்ற தலைப்பில் ப்ளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்ட நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அதே ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் மாநிலங்களவை நியமன உறுப்பினராக இளையராஜா நியமிக்கப்பட்டார்.

பல்வேறு தருணங்களில் அவர் தனது மனதில் பட்டதை அப்படியே பேசியதும், 'பாடல்களுக்கான காப்புரிமை' தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கு மற்றும் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி.சரண், பாடகி சித்ரா ஆகியோருக்கு அனுப்பிய நோட்டீஸ் போன்றவையும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இதையெல்லாம் கடந்து அவரது இசைக்காக இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர் கொண்டாடப்படுவார் என்பதே அவரைக் கொண்டாடும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpwdyvelg7eo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

London-ல் ஒலிக்கப்போகும் Ilayaraaja-வின் Symphony; சிம்ஃபொனி இசைப்பது கௌரவமாக பார்க்கப்படுவது ஏன்?

இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய சிம்ஃபொனி வரும் மார்ச் 8-ஆம் தேதி லண்டன் நகரில் வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனி என்றால் என்ன? 'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.