Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் சிம்ஃபொனி வெளியீடு எப்போது? நேரில் கண்டு பரவசமடைந்த ரசிகர்கள் எதிர்பார்ப்பு

வேலியன்ட், இளையராஜா, சிம்ஃபொனி, மேற்கத்திய செவ்வியல் இசை, லண்டன் ,  வேலியண்ட், லிடியன் நாதஸ்வரம்

பட மூலாதாரம்,FACEBOOK

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 12 மார்ச் 2025, 04:41 GMT

    புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்

தான் உருவாக்கிய சிம்ஃபொனி இசைக் கோர்வையை லண்டனில் அரங்கேற்றிவிட்டு இந்தியா திரும்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.

ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள், பின்னணி இசைக் கோர்வை, 7000க்கும் அதிகமான பாடல்கள் என்று பல சாதனைகளைப் படைத்திருக்கும் இளையராஜா தமிழ் சினிமா மட்டுமல்லாது உலகளவில் மிகப்பெரிய திரை இசை ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார்.

வேலியன்ட் (VALIANT) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சிம்ஃபொனி, அவரது இசைப் பயணத்தில் மற்றுமொரு மகுடம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இளையராஜாவின் இந்த சிம்ஃபொனி இசைக் கோர்வையின் முக்கியத்துவம் என்ன? சிம்ஃபொனியை உருவாக்குவதில் இருக்கும் சவால்கள் என்ன? இந்தியாவில் பல திறமையாளர்கள் இருந்தும் பல சிம்ஃபொனிக்கள் உருவாகாததன் காரணம் என்ன? இந்த இசை நிகழ்ச்சியை நேரில் கண்ட ரசிகர்கள் கூறுவது என்ன?

மேற்கத்திய செவ்வியல் இசையின் உச்சம் சிம்ஃபொனி

மேற்கத்திய செவ்வியல் இசை மிகப்பெரிய மரபைக் கொண்டது. அந்த மரபின் உச்சம் சிம்ஃபொனி.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் இசைக் கலைஞர்கள், அமெரிக்க இசைக் கலைஞர்கள் மேற்கத்திய செவ்வியல் இசையை இசைத்துள்ளனர். ஆனால் இந்தியாவில், இந்தியர்கள் இந்த இசை மரபு சார்ந்து இசைக் கோர்வையை உருவாக்குவதே மிக அரிதான விஷயம். ஒரு சிலருக்கே அது சாத்தியப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் இளையராஜாவும் இடம்பெற்றிருப்பது இந்திய இசை வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் என்று இசை ஆர்வலர்கள் கருதுகின்றனர். இது குறித்து புகழ்பெற்ற பியானோ இசைக் கலைஞர் மற்றும் இசைக் கல்வியாளர் அனில் ஸ்ரீனிவாசன் பிபிசி தமிழிடம் பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூறியதாவது:

"இளையராஜா செய்திருக்கும் இந்த சிம்ஃபொனி ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், மேற்கத்திய செவ்வியல் மரபில் இந்திய இசையமைப்பாளர் ஒருவரின் முதிர்ச்சியை இது காட்டுகிறது.

பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த, லண்டனில் இருக்கும் மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர் ஒருவர் இந்தியாவின் பாரம்பரிய இசையில் உச்சம் தொட்டால் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்கு இது மிகப்பெரிய சாதனை."

சிம்ஃபொனி இசைப்பது ஏன் கடினம்?

இளையராஜா, சிம்ஃபொனி, மேற்கத்திய செவ்வியல் இசை, லண்டன் ,  வேலியண்ட், லிடியன் நாதஸ்வரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மேற்கத்திய செவ்வியல் மரபில் இந்திய இசையமைப்பாளர் ஒருவரின் முதிர்ச்சியை சிம்ஃபொனி உணர்த்துகிறது

பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள் என மிகத் திறமையான மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர்கள் பலர் நம்மிடையே இருந்திருக்கின்றனர், இருக்கின்றனர். ஆனால் இதில் இசையமைப்பாளர்கள் அரிது.

"வன்ராஜ் பாடியா, ஓல்கா க்ரான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் இருந்துள்ளனர். இவர்களை நான் குறிப்பிடுவதற்கான காரணம், இவர்களின் மேற்கத்திய செவ்வியல் இசைக் கோர்ப்புகளை, மேற்கத்திய இசைக் கலைஞர்கள் வாசித்துள்ளனர்.

நாம் அந்த அளவுக்கு கற்றுக் கொள்ள இந்தியாவில் வசதி இல்லை என்பதால் இங்கிருந்து சிம்ஃபொனி செல்லும் வாய்ப்பு பலருக்கு அமைந்ததில்லை," என்கிறார் அனில் ஸ்ரீனிவாசன்.

சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இந்த இசை மரபை கற்றுத் தரும் சங்கங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே இந்தியாவில் இதைக் கற்க முடியும் என்கிறார் அவர்.

மேற்கொண்டு படிக்க, வெளிநாடுதான் செல்ல வேண்டும். அதனால்தான் இங்கிருந்து கொண்டே இதைக் கற்று, இதில் இசைப்பது அரிது என்று கூறப்படுகிறது.

இளையராஜாவுக்கு இது சாத்தியப்பட்டது எப்படி?

இளையராஜா, சிம்ஃபொனி, மேற்கத்திய செவ்வியல் இசை, லண்டன் ,  வேலியண்ட், லிடியன் நாதஸ்வரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இத்தகைய சூழலிலும் மேற்கத்திய செவ்வியல் இசை சார்ந்தும், அதை இந்திய பார்மபரிய இசையுடன் சேர்த்தும் தொடர்ந்து பல புதுமைகளைப் படைத்து வருகிறார் இளையராஜா. தற்போது அவருக்கு சிம்ஃபொனி சாத்தியப்பட்டதற்கு அவரது அனுபவமே காரணம் என்கிறார் அனில் ஸ்ரீனிவாசன்.

"சிக்கலான உணர்வுகளை இசையில் கையாள்வதில் இளையராஜா பல ஆண்டுகளாக அனுபவம் பெற்றிருக்கிறார், தேர்ந்திருக்கிறார். இந்த முதிர்ச்சி மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளது. ஒரு பக்கம் பிறப்பிலேயே அவரிடம் இருக்கும் இசை மேதமை, இன்னொரு பக்கம் மிக நுணுக்கமான உணர்வுகளைப் பல ஆண்டுகளாக இசையின் மூலம் அவர் கடத்தி வந்த அனுபவம், இந்த இரண்டும் சேர்ந்திருப்பது மிக அரிதான கலவை. திரையிசை அல்லாது இந்திய பாரம்பரிய இசை, பக்திப் பாடல்கள் எனப் பல்வேறு வகையான தனி இசையையும் அவர் உருவாக்கியிருக்கிறார்."

கடந்த 2005ஆம் ஆண்டு புடாபெஸ்ட் சிம்ஃபொனி இசைக்குழுவை வைத்து திருவாசகம் ஆல்பத்தை வெளியிட்டார் இளையராஜா. இது ஆரடோரியா என்கிற இசை வகையைச் சார்ந்தது. இதன் மூலம் மேற்கத்திய செவ்வியல் இசையை, அந்த இசைக் குழுவோடு, மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர்களை வாசிக்க வைத்து, தேர்ந்த அனுபவத்தை இளையராஜா பெற்றிருந்தது இந்த சிம்ஃபொனிக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

"How to Name It?, Nothing but Wind போன்ற ஆல்பங்களை எடுத்துக் கொண்டால் பல்வேறு இசைப் பரிமாணங்களில் அவர் வளர்ச்சி எப்படி இருந்திருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். எனவே அப்படியான ஓர் உணர்வுப்பூர்வமான முதிர்ச்சி இருப்பதால்தான், மற்றவர்களைவிட இளையராஜாவால் இது சாத்தியப்பட்டிருக்கிறது," என்கிறார் அனில் ஸ்ரீனிவாசன்.

அற்புதமான இசை அனுபவம்

இளையராஜா, சிம்ஃபொனி, மேற்கத்திய செவ்வியல் இசை, லண்டன் ,  வேலியண்ட், லிடியன் நாதஸ்வரம்

பட மூலாதாரம்,FACEBOOK

இந்த இசை நிகழ்ச்சியை நேரில் கண்ட பலர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். லண்டன் லெஸ்டர் பகுதியில் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சில்வியன், அவ்வாறான ஒரு ரசிகர். தொடர்ந்து இளையராஜாவின் இசை பற்றித் தனது ட்விட்டர் பக்கத்தில் பல கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரிடம் இந்த அனுபவம் குறித்து பிபிசி சார்பாகப் பேசினோம்.

"நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் பேசிய இளையராஜா, இது அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என்றார். முதல் ஸ்வரத்தின் ஒலியில் இருந்தே அற்புதமான ஓர் அனுபவமாக அது இருந்தது. இந்த இசை மரபு குறித்துத் தெரியாத ஒரு வெகுஜன ரசிகனாக நான் இருந்தும், இந்த இசைக் கோர்ப்பு அவ்வளவு சிறப்பு மிக்கதாக, புது அனுபவமாக இருந்தது. மொத்தம் நான்கு பகுதிகள் (movements) கொண்ட சிம்ஃபொனி அரேங்கற்றப்பட்டது. முழுக்க முழுக்க அந்த இலக்கணத்தை மீறாமல், பிரத்யேக மேற்கத்திய செவ்வியல் இசையாகவே இளையராஜா இதை எழுதியிருக்கிறார்" என்று குறிப்பிட்டார் சில்வியன்.

கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இந்த சிம்ஃபொனி நீடித்ததாகக் கூறும் அவர், குறிப்பாக மூன்றாவது பகுதி துள்ளலான தன்மையுடன் இருந்ததாகத் தெரிவித்தார்.

"இந்த சிம்ஃபொனி வெளியானவுடன் மூன்றாவது பகுதியைக் கேட்டுப் பலர் குதூகலிக்கப் போகின்றனர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த அரங்கேற்றம் முடிந்ததும், அந்த மூன்றாவது பகுதியை மட்டும் மீண்டும் வாசிக்கலாம் என்று இசைக் கலைஞர் ஒருவர் உத்தேசிக்க, அதை மீண்டும் வாசித்துக் காட்டினார்கள்," என்று உற்சாகத்துடன் பகிர்ந்தார் சில்வியன்.

இந்த இசை நிகழ்ச்சியில் பெரும்பாலும் இந்திய ரசிகர்களையே காண முடிந்ததாகக் கூறிய சில்வியன், இதற்காகவே பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்தும், மத்தியக் கிழக்கு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்ததாகக் குறிப்பிட்டார். அமெரிக்காவில் இருந்தும் கணிசமான ரசிகர்கள் வந்திருந்ததாகக் கூறுகிறார் சில்வியன்.

"சிம்ஃபொனி வாசித்து முடிக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும், கை தட்டக்கூடாது என்பது அவர்களின் பாரம்பரியம். இசை நடத்துநர் (conductor) சொல்லும்போதுதான் கை தட்ட வேண்டும். ஆனால் ஒவ்வொரு பகுதி முடிந்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் கைதட்டினார்கள். இசையை நடத்திய மிக்கெல் டாம்ஸுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் இளையராஜா பரவாயில்லை, இதுதான் எங்கள் வழக்கம் என்று அவரிடம் சொன்னார்.

சிம்ஃபொனி அரங்கேற்றம் முடிந்த பிறகு இளையராஜாவின் சில பாடல்களை அந்த இசைக் குழுவின் பாணியில் இசைத்தார்கள். இதில் அவர் 3 ஸ்வரங்களை வைத்து மட்டும் இசையமைத்த பாடல், ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா, மடை திறந்து பாடும், பூவே செம்பூவே, கண்ணே கலைமானே ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. ஷூபெர்டின் முடிக்கப்படாத சிம்ஃபொனியை தழுவி அவர் இசையமைத்த இதயம் போகுதே பாடல் இசைக்கப்பட்ட போது இளையராஜாவும் இணைந்து பாடினார். பிறகு சில படங்களின் பின்னணி இசைக் கோர்வையும் இசைக்கப்பட்டன," என்றார் சில்வியன்.

இளையராஜாவின் சிம்ஃபொனி வெளியீடு எப்போது?

லண்டனில் இளையராஜா சிம்ஃபொனி அரங்கேற்றியதை நேரில் பார்த்த ரசிகர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,FACEBOOK/ILAIYARAAJA

லண்டனில் இந்த சிம்ஃபொனி இசை நிகழ்ச்சி முடிந்த நிமிடம் முதலே சமூக ஊடகங்களில் சில காணொளிகள் பகிரப்பட்டு வந்தன. அதைப் பார்த்த ரசிகர்கள் பலர், வேலியன்ட்டின் அதிகாரப்பூர்வ வெளியீடு எப்போது என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அது குறித்த எந்தத் தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் இந்த சிம்ஃபொனி இசை நிகழ்ச்சியை உலகின் பல்வேறு நாடுகளில் நடத்த ஏற்கெனவே திட்டமிட்டு முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார் இளையராஜா. லண்டனில் இருந்து சென்னை திரும்பியவுடன், செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்தத் தகவலை இளையராஜா தெரிவித்தார்.

இளையராஜாவின் இந்த சிம்ஃபொனி முயற்சி இந்திய இசை வரலாற்றில் ஒரு கலாசார மைல்கல் என்று பலர் புகழாரம் சூட்டியுள்ளனர். ராஜா ஏன் இன்னும் இசையின் ராஜாவாக இருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று என அவரது ரசிகர்கள் பலர் பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

இளையராஜவின் இந்தச் சாதனை இந்தியாவை சேர்ந்த பல்வேறு இசைக் கலைஞர்களுக்குப் புதிய சாத்தியங்களுக்கான கதவுகளைத் திறந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம், அடுத்த ஆண்டு தனது சிம்ஃபொனி இசையை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளதும், தனக்கு இசையமைப்பாளர் இளையராஜா தந்த உற்சாகம் ஒரு முக்கியக் காரணம் என்று கூறியிருப்பதுமே அதற்கான அத்தாட்சி என்று கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cy83j283d22o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.