Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜான் ஜெபராஜ் கைது

படக்குறிப்பு,ஜான் ஜெபராஜை கைது செய்த போலீஸார்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 9 ஏப்ரல் 2025

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கோவையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், 17 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் அவர் மீது, போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டிருந்தார். தனிப்படை போலீஸார் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஜான் ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க இருக்க விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதேநேரத்தில், ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த சூழ்நிலையில், மூணாறு பகுதியில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை ஆய்வாளர் அர்ஜூன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.

அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்தனர். பின்னர், உதவி ஆணையர் கணேஷ் தலைமையில் ஜான் ஜெபராஜை போக்சோ நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்போடு காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

யார் இந்த ஜான் ஜெபராஜ்?

ஜான் ஜெபராஜ்

பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM

படக்குறிப்பு,ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது

ஜான் ஜெபராஜின் கிறிஸ்தவ மத இசை நிகழ்ச்சிகளுக்கு, பெரும் கூட்டம் கூடுவது வழக்கமாகவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மட்டுமின்றி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட வெளிமாநில நகரங்களிலும் இவர் இசை ஊழிய நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

தென்காசியை சேர்ந்த ஜான் ஜெபராஜ் (வயது 37), ஒரு கிறிஸ்தவ மத போதகர். தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, அவருடைய சொந்த ஊர் செங்கோட்டை. எஸ்எம்எஸ்எஸ் அரசுப்பள்ளியில் கடந்த 2005 வரை படித்த பின், சதர்ன் ஆசியா பைபிள் கல்லுாரியில் படித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெவிமினிஸ்ட்ரிஸ் என்ற மதபோதக அமைப்பை நிறுவி, அதனை நடத்தி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கோவையில் வசித்து வந்த ஜான் ஜெபராஜ், கிராஸ்கட் ரோட்டில் கிங்ஸ் ஜெனரேஷன் சர்ச் என்ற பெயரில் தனியாக ஒரு கிறிஸ்தவ ஆலயத்தை மற்றொரு பாஸ்டருடன் சேர்ந்து நடத்தி வந்துள்ளார்.

கடந்த ஆண்டிலிருந்து அந்த ஆலயமும் மூடப்பட்டுவிட்டதாக கிராஸ்கட் ரோட்டில் உள்ள அந்த கட்டடத்துக்கு அருகில் இருப்பவர்கள், பிபிசி தமிழிடம் தகவல் பகிர்ந்தனர். அதன்பின், தனியாக அரங்கங்களை எடுத்து ஜெபக்கூட்டம் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் ஜான் ஜெபராஜ் நடத்தி வந்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக, கிறிஸ்தவ பாடல்களுடன் அவர் வெளியிட்டுள்ள பல்வேறு இசை ஆல்பங்கள் பல லட்சக்கணக்கான பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளன.

அதேபோன்று, அவர் நடத்திய இசை நிகழ்ச்சிகளில் அவர் பேசுகிற பேச்சுக்கள், பாடல்கள் குறித்த காணொளிகளும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளன. அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் இளைஞர்களின் கூட்டம் மிக அதிகளவில் திரள்வதையும் அதில் காண முடிகிறது. அவருடைய பேச்சும், பாடல்களும், நடனமும் இளைய வயதினரை குறி வைப்பதாகவுள்ளன.

கடந்த சில மாதங்களாக கோவையில் ஜான் ஜெபராஜ் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை என்பதும், அவர் இங்கு இல்லை என்பதும் அவருடைய சமூக ஊடகப் பதிவுகளிலிருந்து தெரியவருகிறது.

ஜான் ஜெபராஜ்

பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM

படக்குறிப்பு,கிறிஸ்தவ பாடல்களுடன் அவர் வெளியிட்டுள்ள பல்வேறு இசை ஆல்பங்கள் பல லட்சக்கணக்கான பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது

கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று, ஜான் ஜெபராஜ் வீட்டில் நடந்த ஒரு கொண்டாட்ட நிகழ்வின்போது, 17 வயது சிறுமிக்கும், 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி, தற்போது ஜான் ஜெபராஜ் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பெயர் கூற விரும்பாத காவல் அதிகாரி, ''கடந்த 2024 மே மாதத்திலேயே இந்த சம்பவம் நடந்திருந்தாலும், அந்தக் குழந்தைகள் யாரிடமும் சொல்லவில்லை.

சில மாதங்களாக அவர் கோவைக்கே வரவில்லை. பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிதான், தங்களுக்கு நடந்தது குறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அந்த சிறுமி பெயரில்தான் தற்போது புகார் தரப்பட்டு, இரு சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.'' என்று பிபிசி தமிழிடம் கூறினார்.

மற்ற பாஸ்டர்களின் விமர்சனம்

ஜான் ஜெபராஜ் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9 (I) (m) (கடுமையான பாலியல் தாக்குதல்) மற்றும் அதற்கான தண்டனைப் பிரிவு 10 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக, கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர்.

விசாரணை நடந்து வருவதால் வேறு எந்தத் தகவலையும் பகிர முடியாது என்று காவல் ஆய்வாளர் ரேணுகா கூறியுள்ளார். ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, ஆதரவும், எதிர்ப்புமாக பலவிதமான விமர்சனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜான் ஜெபராஜுக்கும், மற்ற கிறிஸ்தவ மதபோதகர்களுக்கும் இடையில் இணக்கம் இல்லை என்பதும், மோதல் இருந்ததும் பல்வேறு பதிவுகளின் மூலமாகத் தெரியவருகிறது. இதே கருத்தை, பிபிசி தமிழிடம் பேசிய பல்வேறு பாஸ்டர்களும் தெரிவித்தனர். இதற்கு முன்பாக ஜான் ஜெபராஜ் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள பல்வேறு காணொளிகளிலும் இந்த மோதல் போக்கு வெளிப்படுகிறது.

ஜான் ஜெபராஜ்

குறிப்பாக, கிறிஸ்தவ மதபோதகர் அகஸ்டின் ஜெபக்குமார் என்பவர், இவரை 'பாட்டுக்காரன்' என்று கூறி, இவர் மேடையில் பேசுகிற சில வார்த்தைகளைக் குறிப்பிட்டு, கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதற்குப் பதிலடி தரும் விதமாக, ஜான் ஜெபராஜும் தனது இசை நிகழ்ச்சிகளில் அகஸ்டின் ஜெபக்குமார் பெயரைக் குறிப்பிட்டே விமர்சித்துள்ளார். இவ்விருவருக்கிடையிலான மோதல் காணொளிகளும் சமூக ஊடகங்களில் இன்னும் வலம் வருகின்றன. வேறு சில மதபோதகர்களும் இவரைப் பற்றி விமர்சித்துள்ளனர்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய கோவை கிறிஸ்தவ மதபோதகர்கள் ஐக்கியம் (Pastor's Fellowship) அமைப்பின் தலைவர் சாம்சன் எட்வர்டு, ''கோவையில் பெந்தகோஸ்தே சபை பாஸ்டர்கள் மற்றும் இவாஞ்சலிஸ்ட்கள் என மொத்தம் 800 பேர் எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாகவுள்ளனர். இதில் ஜான் ஜெபராஜ் எப்போதுமே இணைந்ததில்லை. அவரை ஒரே ஒரு நிகழ்வில் ஐந்தே நிமிடங்கள் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.'' என்றார்.

அவர் மீதான பாலியல் புகாரின் உண்மைத்தன்மை குறித்து எதுவும் தனக்குத் தெரியாத நிலையில், அதுபற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்க இயலாது என்று கூறிய சாம்சன் எட்வர்டு, கடந்த சில மாதங்களாக அவர் கோவையில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தவில்லை என்றார். கோவையில் அவர் எந்த ஆலயத்தையும் வெகுகாலம் நடத்தியதில்லை என்றும் அவர் கூறினார்.

திரை வசனங்களை பயன்படுத்தியவர்

ஜான் ஜெபராஜ் இசை நிகழ்ச்சி காணொளிகளில், இளைய வயதினரை ஈர்க்கும் வகையில், சினிமா பாடல் மெட்டுக்களில் கிறிஸ்தவப் பாடல்களை பாடுவதும், ஆடுவதும் நகைச்சுவை நடிகர்கள் வடிவேல், விவேக் உள்ளிட்ட பலருடைய பிரபல வசனங்களை அவர் அடிக்கடி பயன்படுத்துவதும் தெரிகிறது.

பிரபல இசையமைப்பாளர்கள் நடத்துவது போலவே, அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்கும் Live in Concert என்றே சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் நடந்துள்ளது. தன்னைத் தேடி வரும் இளைஞர் கூட்டத்தைப் பார்த்து, பொறாமையிலேயே மற்ற மத போதகர்கள் தன்னை விமர்சிப்பதாக இசை நிகழ்ச்சிகளில் அவர் பேசியதையும் காணொளிகள் வாயிலாக பார்க்க முடிகிறது.

ஜான் ஜெபராஜ் குறித்து மற்ற கிறிஸ்தவ மதபோதகர்களும், மற்றவர்களைப் பற்றி ஜான் ஜெபராஜும் காணொளிகளில் பகிர்ந்துள்ள தகவல்களையும், கருத்துகளையும் பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜான் ஜெபராஜ் மற்றும் அவர் தரப்பில் தொடர்பு கொள்ள பிபிசி தமிழ் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஜான் ஜெபராஜ்

பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், ''ஜான் ஜெபராஜ் தற்போது தலைமறைவாக இருப்பதால், அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வெவ்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவர் வெளிநாடு சென்றிருக்க வாய்ப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் விரைவில் அவர் கைதாக வாய்ப்பு அதிகமுள்ளது,'' என்றார்.

அவர் மீது வேறு எந்தப் புகார்களும் வந்துள்ளதா என்பது பற்றி கேட்டபோது, ''இதுவரை வேறு எந்தப் புகாரும் வரவில்லை. இந்த சம்பவம் கடந்த ஆண்டில் நடந்திருந்தாலும் இப்போதுதான் புகார் வந்துள்ளது. அதனால்தான் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார் காவல் ஆணையர் சரவணசுந்தர்.

மே 18 – சென்னையில் ஜான் ஜெபராஜ் இசை நிகழ்ச்சி

ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் மே 18 ஆம் தேதியன்று சென்னை காமராசர் அரங்கத்தில் 'JJ-REBORN என்ற பெயரில் ஜான் ஜெபராஜ் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடப்பதாக அவருடைய சமூக ஊடகப்பக்கங்களில் விளம்பரங்கள் காணப்படுகின்றன. டிக்கெட் புக்கிங் நடப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சி பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''நான் தேவாலயம் கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை என்னுடன் இருந்தவன் திருடிவிட்டான், புதிய தேவாலயம் கட்ட ஒரு கோடி ரூபாய் செலவாகும். அதற்கு நிதி திரட்டவே இந்த இசை நிகழ்ச்சி. இதற்கு பண உதவி செய்ய விரும்பாதவர்கள், இதைப் பொருட்படுத்த வேண்டாம். தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம், '' என்று கூறியுள்ளார்.

ஜான் ஜெபராஜ்

பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM

வழக்குப்பதிவுக்கு முன் ஜான் ஜெபராஜ் வெளியிட்ட ஆடியோ

போக்சோ வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு, 3 வாரங்களுக்கு முன்பு, ஜான் ஜெபராஜ் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மொத்தம் ஒரு மணி நேரம் அதில் அவர் பேசியுள்ளார்.

கோவை ஒய்எம்சிஏ கட்டடத்தில் முதல் முதலாக சபையைத் துவக்கியது குறித்தும், அதன்பின் கிராஸ்கட் ரோட்டில் மற்றொருவருடன் இணைந்து சபை நடத்தியதாகவும் அதில் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் முதல் தேதியன்று கோவையில் புதிய கட்டடத்தில் மீண்டும் சபை துவங்குமென்றும் உறுதியளித்துள்ள அவர், தற்போது தன்னுடைய சபையில் 2,300 குடும்பங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

தன்னைப் பற்றி அவதுாறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுத்தளத்தில் வைத்தால் அதைச் சந்திக்கத் தயாராகவுள்ளதாகவும் பேசியுள்ளார்.

பல்வேறு பிரச்னைகளால் சாப்பிடாமல் 9 கிலோ எடை குறைந்ததாகவும், தற்கொலைக்கு பலமுறை முயன்றதாகவும் அந்த ஆடியோவில் ஜான் ஜெபராஜ் தெரிவித்துள்ளார்.

தனக்கு நேர்ந்துள்ள இந்த பிரச்னையிலிருந்து மீள்வதற்கு கடவுளே நீதிபதியாக இருந்து தீர்ப்பை வழங்குவார் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆடியோவையும் முக்கிய ஆதாரமாக வைத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக காந்திபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் கூறியுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn5xx2qv31lo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.