Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,'ஆக்ஸியம் 4' திட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சிராஜ்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அமெரிக்காவின் நாசா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 'ஆக்ஸியம் ஸ்பேஸ்' எனும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் கீழ் அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள், ஜூன் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள்.

இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழையப் போகும் முதல் இந்தியர் என்ற பெருமையை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.

கடந்த 1984ஆம் ஆண்டு, ஏப்ரல் 3ஆம் தேதி, இந்தியாவை சேர்ந்த ராகேஷ் ஷர்மா, சோயுஸ் டி-11 எனும் சோவியத் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார். விண்வெளியில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த சல்யூட் 7 (Salyut 7) எனும் சோவியத் விண்வெளி நிலையத்தில் 7 நாட்கள், 21 மணிநேரம் தங்கியிருந்து அவர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

அதன் பிறகு, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், ராஜா சாரி உள்ளிட்ட சில இந்திய வம்சாவளியினர் விண்வெளிக்குச் சென்றிருந்தாலும், ஒரு இந்திய குடிமகன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வது இதுவே முதல்முறை.

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,'ஆக்ஸியம் நிலையம்' நிறுவத் தேவையான மாட்யூல்கள் பல கட்டங்களாக விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும்.

ஆக்ஸியம் 4

பூமியின் கீழ்வட்டப் பாதையில் (Low earth orbit - பூமியிலிருந்து 160-2000 கிமீ வரையிலான உயரம்), மனிதர்கள் தற்காலிகமாகத் தங்கி விண்வெளி ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே சர்வதேச விண்வெளி நிலையம்.

இந்த விண்வெளி நிலையம் 2031இல் செயலிழந்து, பூமியில் விழுந்து நொறுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வளிமண்டல மறுநுழைவின்போது அதீத வெப்பத்தின் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் பூமியில் விழும் முன்பே எரிந்துவிடும்.

அதற்கு மாற்றாக ஒரு புதிய விண்வெளி நிலையத்தை தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிறுவ நாசா விரும்புகிறது. அதன் ஒரு பகுதியே 'ஆக்ஸியம் நிலையம்'.

அதை நிறுவத் தேவையான 4 மாட்யூல்கள் (Modules) பல கட்டங்களாக விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும். பின்னர் ஐஎஸ்எஸ் செயலிழக்கும்போது இந்த மாட்யூல்கள் பிரிந்து, ஒரு புதிய விண்வெளி நிலையமாகச் செயல்படும். ஆனால், 2031 வரை காத்திருக்காமல், 2028ஆம் ஆண்டுக்குள் இதைச் செயல்படுத்த ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் விரும்புகிறது.

அடுத்த ஆண்டில்(2026), முதல் மாட்யூல் விண்வெளிக்கு அனுப்பப்படும் என நாசா கூறுகிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், 'ஆக்ஸியம் நிலையம்' உலகின் முதல் வணிக நோக்கிலான விண்வெளி நிலையமாக இருக்கும்.

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆக்ஸியம் 4 குழுவினர்

இந்தப் புதிய விண்வெளி நிலையத்தை நிறுவுவது தொடர்பான பணிகளுக்கு மட்டுமல்லாது, எதிர்காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்றாகவும், வணிக விண்வெளி நிலையமாகவும் செயல்பட வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு முன்னோட்டமாக 2022இல் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிவருகிறது ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம்.

அதன் நான்காவது கட்ட மிஷன் தான் இந்த ஆக்ஸியம் 4. இதில் பயணிக்கப் போகும் நால்வர் யார்?

  • அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையும், இந்த 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் கமாண்டருமான பெக்கி விட்சன்

  • இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, இவர் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் விமானி

  • போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்லாவோஷ் உஸ்னான்ஸ்கி-விச்நியெவ்ஸ்கி, இவர் 'ஆக்ஸியம் 4' திட்ட நிபுணர்

  • ஹங்கேரியை சேர்ந்த டிபோர் கபு, இவர் 'ஆக்ஸியம் 4' திட்ட நிபுணர்

இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாக இருக்கும்.

யார் இந்த சுபான்ஷு சுக்லா?

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,சுபான்ஷு சுக்லா, 2006ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்தார்.

அக்டோபர் 10, 1985, உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் பிறந்தவர் சுபான்ஷு சுக்லா. நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற பிறகு, 2006ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் 'ஃபைட்டர் விங்' பிரிவில் (Fighter Wing- போர் விமானப் பிரிவு) இணைந்தார்.

சுபான்ஷு, 2000 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். இதில் இந்திய விமானப் படையின் சுகோய் எஸ்யு-30 எம்கேஐ, மிக்-21, மிக்-29, ஜாகுவார், ஹாக், டோர்னியர், ஏஎன்-32 போன்ற போர் விமானங்களை ஓட்டிய அனுபவமும் அடங்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு, இஸ்ரோவில் இருந்து வந்த ஒரு முக்கியமான அழைப்பு சுபான்ஷுவின் வாழ்க்கையை மாற்றியது. அதன் பிறகு, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ஓர் ஆண்டு பயிற்சி பெற்றார். பின்னர் 2024இல், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,கேரளாவை சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது.

அதற்கு சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்த நால்வரில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் கேரளாவை சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் 'ஆக்ஸியம் 4' திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் பேக்-அப் குழுவில் இருக்கிறார். அதாவது, ஆக்ஸியம் 4 திட்டத்தின் பிரதான 4 உறுப்பினர்களைப் போலவே இந்த பேக்-அப் குழுவின் உறுப்பினர்களுக்கும் அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

ஒருவேளை, இறுதிக் கட்டத்தில் பிரதான உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரால் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால், அவரது இடத்தை இந்த பேக்-அப் குழு உறுப்பினர் ஒருவர் நிரப்புவார்.

விண்வெளியில் என்ன பணிகளை மேற்கொள்வார்கள்?

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,ஆக்ஸியம் 4 குழுவினர், 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

வரும் ஜூன் 8ஆம் தேதி, இந்திய நேரப்படி மாலை 6.41 மணிக்கு, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் உந்தப்படும் டிராகன் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணிக்க உள்ளனர்.

ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பயணம், 14 நாட்களுக்கு நீளும்.

'ஆக்ஸியம் 4' திட்டத்தின் நோக்கம் "அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி, சௌதி அரேபியா உள்பட 31 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 விண்வெளி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது" என்று ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் கூறுகிறது.

அவற்றில் முக்கியமானவை,

  • குறுகிய கால விண்வெளிப் பயணங்களின்போது இன்சுலினை சார்ந்திருக்கும் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு எந்தெந்த வழிகளில் உதவலாம் என்பது குறித்து ஆய்வு செய்தல்.

  • விண்வெளியில் நிலவும் குறைவான ஈர்ப்பு விசையே மைக்ரோகிராவிட்டி எனப்படுகிறது. அத்தகைய சூழல் மனித மூளையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்தல்.

  • மனிதர்கள் விண்வெளிக்கு ஏற்றவாறு எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள விண்வெளி வீரர்களிடம் இருந்து உடலியல் மற்றும் உளவியல் தரவுகளைச் சேகரித்தல்.

  • குறுகிய விண்வெளிப் பயணங்கள் மூட்டுகள் மற்றும் ரத்த ஓட்டத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்தல்.

  • விண்வெளியில் புற்றுநோய் வளர்ச்சியை ஆராய்தல், குறிப்பாக டிரிபிள்-நெகட்டிவ் மார்பக புற்றுநோயை ஆராய்தல்.

  • விண்வெளிப் பயணத்தின்போது ரத்த ஸ்டெம் செல்களில் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்வது.

'ஆக்ஸியம் 4' திட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுப் பணிகள்

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட சில இந்திய வம்சாவளியினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றிருந்தாலும், ஒரு இந்திய குடிமகன் அங்கு செல்வது இதுவே முதல்முறை.

ஆக்ஸியம் திட்டத்தில், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ தலைமையிலான ஆராய்ச்சிப் பணிகளும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படும். அவை பின்வருமாறு:

  • கணினித் திரைகள் மீது மைக்ரோகிராவிட்டி சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்தல்.

  • மைக்ரோகிராவிட்டி சூழலில் மூன்று நுண்பாசி திரிபுகளின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் மரபியல் ஆகியவற்றை ஆய்வு செய்தல். பிறகு அதை பூமியில் கிடைத்த தரவுகளுடன் ஒப்பிடுவது.

  • மைக்ரோகிராவிட்டி சூழலில் எலும்புத்தசை செயலிழப்பு (Skeletal muscle dysfunction) குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு செய்வது.

  • ஆறு வகையான பயிர் விதைகளில் விண்வெளிப் பயணத்தின் தாக்கங்களை ஆராய்தல்.

  • பயிர் விதைகளின் முளைத்தல் செயல்முறை மற்றும் வளர்ச்சியில் விண்வெளிப் பயணத்தின் தாக்கங்களை ஆராய்தல்.

இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பதோடு, இது அடுத்த தலைமுறை இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் என ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் கூறுகிறது.

ராகேஷ் ஷர்மா கூறுவது என்ன?

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ராகேஷ் ஷர்மா

கடந்த 25 ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 270க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் சென்றிருந்தாலும், அதில் ஒருவர்கூட இந்திய குடிமகன் கிடையாது.

ஒரு இந்தியர் மீண்டும் விண்வெளிக்குச் செல்வது குறித்த செய்திக்காகவே தான் 41 வருடங்களாகக் காத்திருந்ததாகக் கூறுகிறார் முன்னாள் இந்திய விமானப் படை விமானியும், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியருமான ராகேஷ் ஷர்மா.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய விண்வெளித் துறைக்கு இது மிக முக்கியமான தருணம்" என்றார்.

மேலும், "நான் விண்வெளிக்குச் சென்றபோது எல்லாமே புதிய விஷயமாக இருந்தது. உலகின் கவனம் எங்கள் மீது இருந்தது, குறிப்பாக மொத்த இந்தியாவின் கவனமும்.

இப்போது தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியடைந்துள்ள காலத்தில், விண்வெளிப் பயணத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் சவால்கள் இல்லாமல் இல்லை" என்று கூறினார்.

கடந்த 1984இல், ராகேஷ் ஷர்மா மற்றும் இரு சோவியத் விண்வெளி வீரர்கள் கொண்ட மூவர் குழு கிட்டத்தட்ட 8 நாட்கள் சோவியத் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்தியது.

குறிப்பாக உயிரி மருத்துவம் மற்றும் ரிமோட் சென்சிங் சார்ந்த ஆய்வுகளை ராகேஷ் ஷர்மா மேற்கொண்டார்.

அந்தப் பயணத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய 14வது நாடாக இந்தியா மாறியது. இப்போது 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு இந்தியர் விண்வெளிக்குச் செல்லவுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn5ylklrgklo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்தியருக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, ககன்யான், சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு, கிட்டத்தட்ட ஈர்ப்பு விசையே இல்லாத நிலையில் வாழ்வதற்கான பயிற்சி ஆக்ஸியம் 4 குழுவின் விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.சுபகுணம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 1 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது 2 ஜூன் 2025

விண்வெளி மீதான மனிதர்களின் நாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் வல்லரசுகள் மட்டுமே ஈடுபட்டிருந்த நிலை மாறி, இன்று மூன்றாம் உலக நாடுகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் கூட முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.

விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டான ஒரு விண்வெளித் திட்டம் தான் ஆக்ஸியம் 4.

ஒரு இந்தியர் உள்பட நான்கு விண்வெளி வீரர்களைச் சுமந்துகொண்டு ஆக்ஸியம் 4 விண்கலம் ஜூன் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கிறது. இந்திய விமானப்படையின் கேப்டன் சுபான்ஷு சுக்லா, இந்தக் குழுவின் கமாண்டராக விண்வெளிக்குச் செல்கிறார்.

கடந்த 1984ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த ராகேஷ் ஷர்மா சோவியத் விண்கலமான சோயுஸ் டி-11இல் விண்வெளிக்குப் பயணித்தார். அவருக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லப்போகும் இரண்டாவது இந்தியரும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லப்போகும் முதல் இந்தியரும் சுபான்ஷு சுக்லாதான்.

ஆக்ஸியம் 4 திட்டத்தில் அவர் பங்கேற்பது இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கும் ககன்யான் திட்டத்திற்கும் சுபான்ஷுவின் இந்தப் பயணத்தில் கிடைக்கும் அனுபவம் உதவிகரமாக இருக்கும்.

விண்வெளியின் சூழலில், குறிப்பாக விண்வெளி நிலையத்தில் தங்கிப் பணிபுரிவதற்காக முதல்முறை அங்கு செல்லும் அவருக்கு என்ன மாதிரியான சவால்கள் இருக்கும்? அவற்றில் கிடைக்கும் அனுபவம் ககன்யான் திட்டத்திற்கு எத்தகைய நுண்ணறிவுகளை வழங்கும்?

முதல் விண்வெளிப் பயணத்தில் உள்ள சவால்கள் என்ன?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதில் இருக்கும் மிகப்பெரிய சவால், நுண்ணீர்ப்பு விசையில், அதாவது கிட்டத்தட்ட ஈர்ப்பு விசையே இல்லாத சூழலில் பணியாற்ற வேண்டும்.

அதோடு, விண்வெளி நிலையத்தின் பணிகளையும் அங்கு சென்ற நோக்கம் தொடர்பான பணிகளையும் அதே சூழலில் தினசரி மேற்கொள்ள வேண்டும்.

நுண்ணீர்ப்பு விசை சூழலில் வாழ்வதை, தண்ணீருக்குள் இருப்பதோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம் என்கிறார், மொஹாலி இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முன்னாள் விஞ்ஞானியுமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

அதுகுறித்துப் பேசிய அவர், "தண்ணீருக்குள் ஒருவர் மூழ்கிவிட்டால், அவரது உடலுக்கு உறுதியாக நிற்கவோ செயல்படவோ எந்தப் பிடிமானமும் இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் உடல் சுய உந்துதலின்பேரில் எதிலாவது கால்களை ஊன்றிக்கொள்ளவோ அல்லது கைகளால் பிடித்துக்கொண்டு சமாளிக்கவோ முயலும்.

அப்படித்தான் கிட்டத்தட்ட ஈர்ப்பு விசையற்ற சூழலில் இருக்கும். உறுதியாக நிற்கவோ, செயல்படவோ முடியாமல் மிதந்துகொண்டே தனது அன்றாடப் பணிகளை மேற்கொள்வது சிரமமாக இருக்கும். இதற்கென சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு இருந்தாலும்கூட, முதன்முதலில் அத்தகைய உண்மையான சூழலை எதிர்கொள்ளும்போது அதற்கேற்ப தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் பிடிக்கும்," என்று விளக்கினார்.

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, ககன்யான், சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,சுபான்ஷு சுக்லா ஆக்ஸியம் 4 திட்டத்தின் கமாண்டராக செயல்பட்டு விண்கலத்தை இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, விண்வெளி நிலையத்தில் உள்ள கருவிகளை நுண்ணீர்ப்பு விசை சூழ்நிலையில் இயக்குவதிலும் முதல் முறை செல்லும் விண்வெளி வீரர் சவால்களைச் சந்திக்கக்கூடும்.

பூமியைப் போன்று ஈர்ப்பு விசையுள்ள இடத்தில் கருவிகளை இயக்குவதில் பெரிய சிக்கல் இருக்காது. ஆனால், விண்வெளியில் ஒரு லிவரை திருகினால்கூட, அதை இயக்கும் நபர் மிதந்துகொண்டே இருப்பதால் அவரும் அதனுடன் சேர்ந்து சுற்றுவார். அதனால் கருவிகளைச் சரிவர இயக்குவது சவாலாகவே இருக்கும்.

அதைத் தவிர்க்கவே, சர்வதேச விண்வெளி நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கைப்பிடிகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன். "ஒருவர் ஏதேனும் கருவியை இயக்கும்போது, ஒரு கையால் அந்தக் கைப்பிடிகளில் ஒன்றைப் பிடித்து, தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, மற்றொரு கையால் கருவியை இயக்குவார்."

இதுபோக, ஆக்ஸியம் 4 திட்டத்தில், நாசா, ஐரோப்பிய விண்வெளி நிலையம், இஸ்ரோ எனப் பல்வேறு விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆகவே, விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், அந்தந்த நாட்டின் நிறுவனங்களுக்கான சர்வதேச விண்வெளி நிலையத்தின் மாடியூல்களை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதே வேளையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உபகரணங்களும் அங்கு இருக்கும் என்பதால், அவற்றை இயக்குவதற்கான நுண்ணறிவையும் பெற்றிருக்க வேண்டும்.

ஆக்ஸியம் 4 விண்வெளிப் பயணம் ககன்யான் திட்டத்திற்கு எப்படி உதவும்?

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, ககன்யான், சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,ISRO/ANI

படக்குறிப்பு,ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லப்போகும் இந்தியர்கள். பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்ஷு சுக்லா.

கடந்த ஜனவரி மாதம், ஆக்ஸியம் 4 விண்வெளிப் பயணம் குறித்துப் பேசிய குழுவின் கமாண்டர் சுபான்ஷு சுக்லா, இதில் கிடைக்கும் அனுபவங்களும் படிப்பினைகளும் ககன்யான் திட்டத்திற்குப் பேருதவியாக இருக்குமென்று தெரிவித்தார்.

"ஆக்ஸியம் 4 திட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு மிக முக்கியமான தருணத்தில் கிடைத்துள்ளது" எனக் குறிப்பிட்ட சுக்லா, "கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவின் மகன் அல்லது மகள் விண்வெளிக்குச் செல்வார் என்று உத்தரவாதம் அளித்தார். அதைத் தொடர்ந்து ககன்யான் திட்டம் தொடங்கியது" என்றார்.

அந்தக் கனவை நனவாக்க பலரும் ஓய்வின்றி உழைத்து வரும் நிலையில், ஆக்ஸியம் 4 பயணத்தில் கிடைக்கும் விலைமதிப்பற்ற படிப்பினைகள் அதற்குப் பெரிதும் உதவும் என்று முழு நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதோடு, இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதும் அங்கு 2 வாரங்கள் தங்கிப் பணியாற்றுவதில் கிடைக்கும் அனுபவமும் ககன்யான் திட்டத்தை முழுமைப்படுத்துவதில் இருக்கக்கூடிய சவால்களைச் சரிசெய்யக் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்," என்றும் கூறினார் சுக்லா.

ககன்யான் திட்டத்தின் கீழ் இந்தியா விண்வெளி அனுப்பவுள்ள குழுவிலும் சுபான்ஷு சுக்லா இருப்பதால், இந்தப் பயணத்தில் அவருக்குக் கிடைக்கும் அனுபவம், ககன்யான் பயணத்தை எளிதாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, நுண்ணீர்ப்பு விசையில் பணியாற்றுவது, கருவிகளை இயக்குவது, விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்வது, அன்றாட வாழ்வை இயல்பாகக் கொண்டு செல்வது போன்றவற்றில் கிடைக்கும் நுண்ணறிவு, ககன்யான் பயணத்தை எளிதாக்கும் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

"மனிதர்கள் பூமியில் இருப்பதைப் போல் அங்கு சராசரி வாழ்வை மேற்கொள்ள இயலாது. நுண்ணீர்ப்பு விசையில், சாப்பிடுவது, கழிவறை பயன்படுத்துவது போன்ற சாதாரண செயல்பாடுகளுக்கே தனிப் பயிற்சி அவசியம்.

அத்தகைய பயிற்சிகள் இருந்தாலும்கூட, அவற்றை முதல்முறை அங்கு செய்யும்போது சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அப்படிப்பட்ட பயிற்சிகளை நேரடியாக விண்வெளியிலேயே பெறுவதற்கான வாய்ப்பு இது. அவை ககன்யான் பயணத்திற்குப் பெரிதும் உதவும்" என்கிறார் வெங்கடேஸ்வரன்.

ஆக்ஸியம் 4 குழுவினருக்கு வழங்கப்படும் பயிற்சிகள் யாவை?

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, ககன்யான், சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,ஆக்ஸியம் 4 குழுவினர் ஜூன் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணிக்கின்றனர்

விண்வெளிப் பயணத்தில் இருக்கும் நடைமுறை சவால்களைச் சமாளிக்க, ஆக்ஸியம் 4 குழுவினருக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

நுண்ணீர்ப்பு விசையின் விளைவுகளை எதிர்கொள்ளவும், தங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் தேவையான உடற்பயிற்சிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்டை இயக்குவதற்கு சுற்றுப்பாதை இயக்கவியல், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டாக்-இன் செய்வதற்கான நடைமுறைகள், அவசர கால நெறிமுறைகள் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது.

ஆக்ஸியம் 4 பயணத்தில், சுபான்ஷு சுக்லா தான் விண்கலத்தின் விமானியாகச் செயல்படப் போகிறார். ஆகவே, இந்தச் சிக்கலான அமைப்புகளில் அவர் அனுபவப்பூர்வமாகத் தேர்ச்சி பெறுவது இந்தியாவின் எதிர்கால திட்டத்திற்குப் பயனளிக்கும்.

இதுபோக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் வீரர்கள், கேபினில் காற்றழுத்தம் குறைவது, தீ விபத்து அல்லது நச்சு வாயுக்கள் கசிவது போன்ற அவசர நிலைகளையும் எதிர்கொள்ளும் சூழல் ஏற்படலாம். அதற்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும். இதற்கென, அத்தகைய சூழ்நிலைகளை செயற்கையாக உருவகப்படுத்தி தீவிர பயிற்சிகள் விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஆக்ஸியம் 4 பயணத்தில் சுபான்ஷு சுக்லா என்ன செய்வார்?

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, ககன்யான், சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாசிப் பன்றிகள், நுண்பாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.

சுபான்ஷு சுக்லா குறித்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்று உண்டு. அவர் இந்திய விமானப் படையின் விமானியும் விண்வெளி வீரரும் மட்டுமல்ல, சுக்லா ஒரு ஆராய்ச்சியாளரும்கூட.

சுபான்ஷு சுக்லா, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் (IISc) இருந்தபோது இரண்டு ஆய்வுக் கட்டுரைகளின் இணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

அதில் ஓர் ஆய்வு, சந்திரன் மற்றும் செவ்வாய் கோள்களுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான விண்வெளி வாழ்விடங்களை உருவாக்குவது குறித்தானது. பீம் (BHEEM) எனப் பெயரிடப்பட்ட வேற்றுக்கிரகங்களில் விரிவாக்கிப் பயன்படுத்தவல்ல மாதிரி வாழ்விடத்தை வடிவமைப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆய்வுக் குழுவில் சுபான்ஷு சுக்லாவும் இடம் பெற்றிருந்தார். .

இந்நிலையில், தற்போதைய பயணத்தில் அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.

அவற்றில் முக்கியமான ஆய்வு பாசிப் பன்றிகள் பற்றியது. எட்டு கால்களைக் கொண்ட, உருளை வடிவத்திலான ஒரு நுண்ணுயிர்தான் இந்த பாசிப் பன்றிகள்(Tardigrade).

பாசிப் பன்றிகள், அதிகபட்ச கதிர்வீச்சு, சுமார் 140 டிகிரி செல்ஷியஸுக்கு மேற்பட்ட வெப்பநிலை, ஆழ்கடல் பகுதிகளில் காணப்படும் அழுத்தத்தைவிட ஆறு மடங்கு அதிக அழுத்தம் என மிகக் கடுமையான சூழல்களிலும் உயிர் பிழைக்கக்கூடியவை.

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, ககன்யான், சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,ஆக்ஸியம் 4 திட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறார்கள்.

பூமியில் சுமார் 600 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நுண்ணுயிர்கள், விண்வெளியில் காணப்படும் நுண்ணீர்ப்பு விசையில் அவற்றின் உயிர் பிழைக்கும் திறன், இனப்பெருக்க நடத்தைகள் போன்றவற்றை சுக்லா ஆய்வு செய்யப் போகிறார்.

விண்வெளியில் பாசிப் பன்றிகளின் தகவமைப்பு செயல்பாடுகளை ஆராய்வது, நீண்டதூர விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதற்கான உயிரி தொழில்நுட்பங்களை உருவாக்க உதவலாம் என்று நம்பப்படுகிறது.

அதேபோல, நுண்ணீர்ப்பு விசையில் நுண்பாசிகளின்(Micro algae) வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றங்களையும் இஸ்ரோ ஆய்வு செய்யும். இவை புரதச்சத்து மிக்கவை என்பதால், நீண்டதூர விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும்போது இவற்றை வளர்த்து உணவாகப் பயன்படுத்த முடியுமா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மேலும், மைக்ரோகிராவிட்டி சூழலில் எலும்புத்தசை செயலிழப்பு (Skeletal muscle dysfunction) குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்வதும் இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது.

அதோடு, நுண்ணீர்ப்பு விசை சூழலில் பயிர் விதைகள் எப்படி முளைவிடுகின்றன என்பதை ஆராய்ந்து விண்வெளி விவசாயத்திற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியும் முயற்சியையும் நாசாவுடன் இணைந்து இஸ்ரோ மேற்கொள்ளவிருக்கிறது.

இந்த விண்வெளிப் பயணம், இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யானுக்கு, ஆக்ஸியம் 4 விண்வெளிப் பயணத்தில் கிடைக்கும் படிப்பினைகள் உறுதுணையாக இருக்கும் என்பதால் இஸ்ரோவுக்கு மிக முக்கியமான திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

ஆக்ஸியம் 4 திட்டத்தின் முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள: ஆக்ஸியம் 4 திட்டம் என்றால் என்ன? சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தக் குழுவினர் என்ன செய்யப் போகிறார்கள்?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgqy15594go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ஸியம் 4: விண்வெளி வீரர்கள் அன்னப் பறவை பொம்மை, அல்வா எடுத்துச் செல்வது ஏன்?

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம், நாசா, இஸ்ரோ,  விண்வெளி ஆராய்ச்சி, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,X/AXIOM SPACE

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஶ்ரீகாந்த் பக்‌ஷி

  • பதவி,

  • 8 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சர்வதேச விண்வெளி மையத்திற்கு இது வரை 270 விண்வெளி ஆய்வாளர்கள் சென்றுள்ளனர். ஆனால் ஒரு இந்தியர் கூட அங்கே செல்லவில்லை. இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுபான்ஷு சுக்லா இந்த கவலையை நிவர்த்தி செய்யப் போகிறார். இவரின் இந்த பயணம் மூலமாக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி புதிய மைல்கல்லை எட்டப் போகிறது.

சோயுஸ் விண்கலத்தின் மூலமாக, சோவியத் யூனியனின் உதவியோடு ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்ணுக்குச் சென்றார். 1984-ஆம் ஆண்டு இந்த பயணம் நிகழ்ந்தது. விண்ணுக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் அவர்.

அதன் பின், கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் போன்றோர் விண்ணுக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் இந்திய வம்சாவளிகளே அன்றி இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல.

ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்தைத் தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து சுக்லா விண்ணுக்குச் செல்கிறார். விண்ணுக்குச் செல்லும் இரண்டாவது இந்தியராகவும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியராகவும் அவர் இருப்பார்.

ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுக்லா செல்கிறார். அவருடைய பயணம் சரியாக ஜூன் 10-ஆம் தேதி மாலை 5.52 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந்த பயணத்தில் அவர் குரூப் கேப்டனாக பணியாற்ற உள்ளார்.

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம், நாசா, இஸ்ரோ,  விண்வெளி ஆராய்ச்சி, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு, விண்வெளி ஆய்வுகளுக்காக பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையம் பயன்படுத்தப்பட்டு வந்தது. 20230-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்த நாசா திட்டமிட்டுள்ளது.

ஆக்ஸியம் திட்டம் என்றால் என்ன?

விண்வெளி ஆய்வுகளுக்காக பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையம் (ISS) பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்த நாசா திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு ஆக்ஸியம் மையம் ஒன்று அங்கே உருவாக்கப்படுகிறது. மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையமாக அது இருக்கும்.

அந்த மையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக ஒவ்வொரு பொருட்களும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்படும். ஆக்ஸியம் விண்வெளி மையம் முழுமையாக கட்டப்பட்ட பிறகு இந்த உபகரணங்கள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டு ஆக்ஸியம் மையத்துடன் இணைக்கப்படும். பிறகு சர்வதேச விண்வெளி மையத்தின் (ISS) செயல்பாடு நிறுத்தப்படும்.

இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வீரர்கள் ஆக்ஸியம் 3 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளில் இந்த நாடுகளில் இருந்து யாரும் விண்வெளிக்கு சென்றதில்லை. ஆக்ஸியம் 4 திட்டத்தின் கமாண்டராக இருக்கும் பெக்கி விட்சனுக்கு இது ஐந்தாவது விண்வெளி பயணமாகும். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார். நூறு நாட்களுக்கும் மேலாக அங்கே இருந்த அவர் 10 முறை விண்வெளி நடை மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திட்டத்தில் சுக்லா விமானியாக செயல்பட உள்ளார். அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சார்பில் செல்கிறார். திட்ட நிபுணர்களான ஹங்கேரியின் திபோர் காப்பும், போலந்தின் ஸ்லாவோஜ் உஸ்னான்ஸ்கி விஸ்னிவ்ஸ்கியும் இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனர்.

ப்ளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியாவின் இயக்குநர் ரகுநந்தன் பிபிசியிடம் பேசிய போது, விமானியின் பங்கு விண்கலத்தின் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது. தலைமைக்கு அடுத்தபடியாக விமானி செயல்படுவதால் விண்ணில் ஏவப்படுவது முதல் மீண்டும் பூமிக்கு திரும்புவது வரை அனைத்து செயல்பாடுகளிலும் அவர் முக்கியப் பங்கைக் கொண்டிருப்பார் என்று கூறினார்.

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம், நாசா, இஸ்ரோ,  விண்வெளி ஆராய்ச்சி, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு, ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்தியா, போலந்து, ஹங்கேரி நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.

ஐந்தாவது உறுப்பினர் அன்னப் பறவை

ஏற்கனவே நான்கு குழு உறுப்பினர்கள் தேர்வாகியுள்ள நிலையில் ஜாய் என்ற சிறிய அன்னப் பறவை பொம்மையும் ஐந்தாவது நபராக விண்வெளிக்கு செல்கிறது.

மே 25 முதல் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள குழு உறுப்பினர்கள், ஜூன் 3 அன்று நடத்திய ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தின் போது ஜாயை உலகிற்கு அறிமுகம் செய்தனர்.

புவி ஈர்ப்பு விசையை தாண்டி வெளியே செல்லும் போது இந்த பொம்மைதான் ஒரு குறிப்பானாக செயல்படும். விண்ணுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும், அனைத்துவிதமான பயிற்சிகளும் நிறைவு பெற்றுவிட்டதாகவும் பெக்கி விட்சன் தெரிவித்தார்.

குழு கேப்டன் சுக்லா தனது ஆர்வத்தை விளக்க வார்த்தைகளே இல்லை என்று கூறினார். அவர் விண்ணுக்குச் செல்லும் போது வெறும் ஆய்வுப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லவில்லை, இந்தியர்களின் நம்பிக்கைகளையும் எடுத்துச் செல்வதாக கூறினார். பயணம் வெற்றி பெற பிரார்த்தனை செய்யுமாறும் அவர் இந்தியர்களிடம் கேட்டுக் கொண்டார்.

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம், நாசா, இஸ்ரோ,  விண்வெளி ஆராய்ச்சி, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு, விண்ணுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும், அனைத்துவிதமான பயிற்சிகளும் நிறைவு பெற்றுவிட்டதாகவும் பெக்கி விட்சன் தெரிவித்தார்.

தற்போது என்ன நடக்கிறது?

ஆக்ஸியம் 4 திட்டத்தின் உறுப்பினர்கள் தங்களை சில நாட்களாக தனிமைப்படுத்தியுள்ளனர். விண்ணுக்கு செல்வதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழு ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டின் மூலம் டிராகன் கலனில் விண்ணுக்குச் செல்கிறது.

28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய இருக்கும் அவர்கள் அங்கே 31 நாடுகளுக்கு சொந்தமான 60 ஆராய்ச்சிகளை 14 நாட்கள் மேற்கொள்வார்கள்.

நிலைத்தன்மையுடன் மனிதன் விண்ணில் வாழ்வது எப்படி என்பது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வார்கள் இவர்கள் என்று பெக்கி விட்சன் கூறினார். இது விண்ணில் இருக்கும் மனிதனுக்கு மட்டுமின்றி பூமியில் உள்ளவர்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

வருங்காலத்தில், நீரிழிவு நோய் உடையவர்கள் விண்வெளிக்கு செல்ல அனுமதிக்கும் வகையிலான ஆராய்ச்சி, விண்வெளியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டு புதிய மருந்துகளின் செயல்திறனை ஆராய்வது போன்ற முக்கிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பெக்கி கூறுகிறார்.

விண்வெளியில் நுண்ணீர்ப்பு தொடர்பாக இந்திய ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்ட 7 சோதனைகளை சுக்லா விண்ணில் ஆய்வுக்குட்படுத்துவார். விண்ணில் இருந்த வண்ணம், இந்திய மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் அனுபவங்கள் யாவும் இந்தியாவின் ககன்யான் மற்றும் இந்திய விண்வெளி மையம் தொடர்பான திட்டங்களில் பயனுடையதாக இருக்கும் என்றும் சுக்லா தெரிவித்தார்.

பூஜ்ஜிய ஈர்ப்பு விசையைக் குறிக்கும் ஒரு குறிப்பானாகவே அன்னப்பறவை பொம்மை எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் கூறினார். அன்னப்பறவை இந்திய கலாசாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறினார்.

யார் இந்த சுபான்ஷு சுக்லா?

அக்டோபர் 10, 1985-ஆம் ஆண்டு சுபான்ஷு சுக்லா உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தார். இந்திய விமானப்படையில் போர் விமானியாக 2006-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஆக்ஸியம் ஸ்பேஸ் வழங்கும் தகவலின் படி 2000 மணி நேரம் அவர் பல்வேறு போர் விமானங்களை ஓட்டிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

பிபிசியிடம் பேசிய அவருடைய சகோதரி சுச்சி மிஸ்ரா, சுபான்ஷு இந்திய விமானப்படையில் சேர்ந்தது எதிர்பாராத ஒன்று என்று கூறினார்.

"அவருக்கு 17 வயது இருக்கும் போது அவருடைய நண்பர் ஒருவர் தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்திற்கு (NDA) விண்ணப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் விண்ணப்பிக்கத் தேவையான வயதை தாண்டிவிட்டார் என்பதால் அவர் விண்ணப்பிக்கவில்லை. அப்போது அந்த விண்ணப்ப படிவத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதால் சுபான்ஷு அதனை பூர்த்தி செய்தார். அதில் தேர்வும் ஆனார். அதன் பின்னர் அவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது," என்றும் கூறினார் மிஸ்ரா.

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம், நாசா, இஸ்ரோ,  விண்வெளி ஆராய்ச்சி, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு, அக்டோபர் 10, 1985-ஆம் ஆண்டு சுபான்ஷு சுக்லா உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தார்

விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படும் ரகசிய பொருள் என்ன?

ககன்யான் திட்டத்தை 2018-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த பிறகு இஸ்ரோவில் பயிற்சி பெற விண்ணப்பித்ததாகக் கூறுகிறார் சுக்லா.

ஆக்ஸியம் வேர்ல்ட் மீடியாவுக்கு அளித்த பேட்டியில், ராகேஷ் சர்மாவைப் பார்த்து தான் விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகக் கூறினார் சுக்லா. சிறு வயது முதலே விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ராகேஷ் ஷர்மாவுக்கு சிறப்புப் பரிசு ஒன்றை தர விரும்புவதாக தெரிவிக்கும் சுக்லா, அப்பொருளை விண்ணுக்கு எடுத்துச் சென்று, பூமிக்குத் திரும்பிய பிறகு தர இருப்பதாக தெரிவித்தார். தற்போது அது என்ன பொருள் என்பது ரகசியம் என்றும் அவர் கூறினார்.

தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் மட்டுமின்றி அவர்களுக்கு பிடித்த உணவுகளையும் விண்வெளிக்கு இந்த வீரர்கள் எடுத்துச் செல்கின்றனர். சுக்லா மாம்பழச்சாறு, பருப்பு அல்வா மற்றும் கேரட் அல்வா போன்றவற்றை எடுத்துச் செல்வதாக கூறினார். இந்த உணவுகளை அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் இதர விண்வெளி வீரர்களோடு பகிர்ந்து கொள்வார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp8d7lr7v91o

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ஸியம் 4: 28,000 கிமீ வேகத்தில் சென்றாலும் 400 கிமீ உயரத்தில் உள்ள ஐஎஸ்எஸ்சை அடைய 28 மணி நேரமாவது ஏன்?

ஆக்ஸியம் 4, நாசா

பட மூலாதாரம்,NASA

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஸ்ரீகாந்த் பாக்‌ஷி

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்கிறார். அவர் உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை சுமந்து கொண்டு ஃபால்கன்-9 ராக்கெட் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இன்று (ஜூன் 25) இந்திய நேரப்படி நண்பகல் 12:01 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.

இதன் மூலம் விண்வெளி பயணத்தில் இந்தியா மற்றுமொரு சாதனையை புரிய உள்ளது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முதல் இந்தியராக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) செல்கிறார்.

கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 27 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்களுள் ஒருவர் கூட இந்தியர் இல்லை. அந்த சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார்.

மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தாலும், பூமியில் இருந்து வெறும் 400 கி.மீ. உயரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய இந்த குழுவுக்கு ஏன் 28 மணி நேரமாகிறது?

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, நாசா, இஸ்ரோ

பட மூலாதாரம்,X/INTERNATIONAL SPACE STATION

படக்குறிப்பு, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் குழுவினர்

நீண்ட பயணம் ஏன்?

ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கான் 9 (Falcon 9) ராக்கெட் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு மணிநேரத்தில் 28,000 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் அதனால் பயணிக்க முடியும். ஆக்ஸியம் 4 திட்டம், பூமிக்கு மேலே தோராயமாக 370 முதல் 400 கி.மீக்கு மேலே பூமியின் தாழ்வட்டப் பாதையில் (low-Earth orbit) சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும்.

இன்று மதியம் 12 மணியளவில் செலுத்தப்படும் ஃபால்கான் 9 ராக்கெட் 28 மணிநேரம் பயணித்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை ஜூன் 26 அன்று மாலை 5 மணிக்கு தான் அடையும்.

மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒரு ராக்கெட், 400 கி.மீ. தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய ஏன் 28 மணிநேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்? அதற்கான காரணத்தை இங்கே அறியலாம்.

நாம் குழந்தைகளாக இருந்தபோது, கணக்கு பாடத்தில் காலம், வேகம் மற்றும் தொலைவு குறித்து படித்திருப்போம். அதன்படி, மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ஒரு கார், 400 கி.மீ. தொலைவை அடைய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை கணக்கிட்டிருப்போம். அதாவது, 4 மணிநேரம் எடுத்துக்கொள்ளும்.

ஆனால், இந்த கணக்கு விதிமுறைகள் பூமியில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும், விண்வெளி பயணத்துக்கு அல்ல. ஏனெனில், பூமியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் போது அது மாறாத, நிலையான ஒன்றாக உள்ளது. அந்த இரு இடங்களுக்கு இடையேயான தொலைவு மாறாது. ஆனால், விண்வெளி பயணம் அப்படியல்ல.

விண்வெளியில் உள்ள எந்தவொரு பொருளும் நிலையானது அல்ல. அவை, ஒவ்வொரு சுற்றுப் பாதையிலும் தொடர்ந்து சுற்றிவருகின்றன. உதாரணமாக, கோள்கள் சூரியனையும் செயற்கைக்கோள்கள் கோள்கள் மற்றும் சிறுகோள்களையும் தொடர்ந்து சுற்றிவருகின்றன. அவை அப்படி சுழலவில்லை என்றால், அவை கோள்களின் ஈர்ப்புவிசைக்கு உட்பட்டு, அவற்றின் திசையிலேயே சென்று அவற்றுடன் மோதிவிடும். இதே விதிமுறை, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் பொருந்தும்.

சர்வதேச விண்வெளி நிலையம், தாழ்வட்டப் பாதையில் பூமியை மணிக்கு 28,000 கி.மீ எனும் வேகத்தில் சுற்றி வருகிறது.

அந்த வேகத்தில் அது சுழலவில்லை என்றால், பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியில் விழுந்துவிடும். அதனால்தான் அது நிலையான வேகத்தில் பூமியை சுற்றிவருகிறது.

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, நாசா, இஸ்ரோ

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர் ஒருவர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறார் (கோப்புப்படம்)

பயணத்தின் வெவ்வேறு கட்டங்கள்

ஆக்ஸியம் 4 திட்டத்தின்படி, பூமியின் ஈர்ப்புவிசையால் ஈர்க்கப்படுவதிலிருந்து தப்பிக்க (escape velocity) ஃபால்கான் 9 ராக்கெட் விநாடிக்கு 11.2 கி.மீ. வேகத்தில் பயணித்தால் தான் பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறி விண்வெளிக்குள் நுழைய முடியும். இந்த பாதை நேரானது அல்ல. அந்த பாதை ஓர் கூம்பு வெட்டு வடிவத்தில் (parabola) இருக்கும்.

புவியீர்ப்பு புலத்தைக் கடந்து பயணித்த பின், அந்த ராக்கெட்டில் உள்ள முதல் கட்ட உந்துகலன்கள் அதிலிருந்து பிரிந்து, இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கும்.

ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டதிலிருந்து ராக்கெட் இரண்டாம் கட்டத்தை அடைய சில நிமிடங்களே எடுக்கும். அங்கிருந்து ராக்கெட்டின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும் என்கிறார், தி பிளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியாவின் இயக்குநர் ரகுநந்தன்.

முதல் கட்டத்தில் புவியீர்ப்பு விசையை தாண்டி பயணிக்க ராக்கெட்டுக்கு அதிகளவிலான எரிபொருள் தேவை. ஆனால், பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து பயணித்த பின், குறைந்த எரிபொருள் மூலமாகவே நீண்ட தொலைவு மிக வேகமாக பயணிப்பது சாத்தியம்.

ஃபால்கான் 9 ராக்கெட்டின் இரண்டாம் கட்ட செயல்பாடு என்பது சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவது. அதாவது, ஃபால்கான் 9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து அதன் சுற்றுவட்டப் பாதையில் நுழைவதற்கு தேவையான வேகம் மற்றும் உயரத்தை அடைய வேண்டும்.

இதன்பின், அந்த ராக்கெட் பூமியை தொடர்ந்து சுற்றி, அதன் வேகம், திசை மற்றும் சுற்றுவட்டப் பாதையை மாற்றி, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும்.

எனினும், இந்த முழு செயல்முறையையும் ராக்கெட்டில் உள்ள வழிகாட்டும் அமைப்பே கவனித்துக்கொள்ளும்.

இத்திட்டத்தின் தலைவர் பெக்கி விட்சன் மற்றும் பைலட் சுபான்ஷு சுக்லா ராக்கெட்டில் தங்கள் முன்பு உள்ள மானிட்டர்கள் மூலம் இதை கண்காணித்து, அது சரியான திசையில் பயணிக்கிறதா என்பதை உறுதி செய்வார்கள்.

சில நிமிடங்களில் முதல் கட்டம் நிறைவடைந்துவிட்டது என எடுத்துக்கொண்டால், இரண்டாம் கட்டம் நிறைவடைய 23 முதல் 25 மணி நேரமாகும் என ரகுநந்தன் கூறுகிறார்.

சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, நாசா, இஸ்ரோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது.

கடினமான கட்டம்

நாசாவால் வெளியிடப்பட்ட சர்வதேச விண்வெளி நிலைய படங்கள், விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் மிக குறைவான வேகத்தில் நகர்வது போன்று காட்டுகின்றன. ஆனால், உண்மையில் அது மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. அதாவது, ஃபால்கான் 9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைய (docking) ஒரே வேகத்திலும் ஒரே திசையிலும் பயணிக்க வேண்டும். இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக பயணிக்கும்.

பயணம் தொடங்கி 25 மணிநேரம் கழித்து, டிராகன் விண்கலம் அதே வேகத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி செல்லும். அதன்பின், மெதுவாக வேகத்தை அதிகரித்து சர்வதேச விண்வெளி நிலையத்துடன் விண்கலம் இணையும் செயல்முறை தொடங்கும். அந்த சமயத்தில், இரண்டும் விண்வெளியில் நிலையாக உள்ளது போன்று தோன்றும், ஆனால் உண்மையில் இரண்டும் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.

இந்த சூழலை பூமியில் நடப்பதாக கற்பனை செய்து பார்ப்போம். அருகருகே மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் கார்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வந்தால், ஒரு காரில் உள்ளவர்கள் மற்றொரு காருக்குள் செல்வதைப் போன்றது.

அதனால்தான் டிராகன் விண்கலம் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த பின், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நெருக்கமாக செல்வதற்கு இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஆகிறது.

அனைத்து சூழல்களும் சரியாக இருந்தால், டாக்கிங் செயல்முறைக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அடாப்டருடன் டிராகன் விண்கலம் இணையும்.

இந்த செயல்முறைக்குப் பிறகும் இருபுறமும் உள்ள கதவுகள் உடனடியாக திறக்காது.

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் சேர்ந்து, விண்கலத்தில் உள்ள காற்றின் அழுத்தம் சமன் செய்யப்பட்ட பிறகு, காற்று வெளியேறாமல் தடுக்கும் வகையில் மூடப்பட்ட பின்னரே, இரண்டுக்கும் இடையேயான கதவுகள் (hatches) திறக்கப்படும்.

இந்த செயல்முறை முடிந்த பின்னர், விண்கலத்தில் உள்ள விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் இறங்குவார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cglz0knxe8wo

  • கருத்துக்கள உறவுகள்

504904124_23912436918405307_492830755547

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் இந்தியர் விண்வெளி நிலையத்திற்கு சென்ற தருணம்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா: Ax-4 விண்கலனின் 24 மணி நேர பயணத்தில் என்ன நடக்கும்?

பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • த வி வெங்கடேஸ்வரன்

  • பிபிசி தமிழுக்காக

  • 14 ஜூலை 2025, 12:15 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் சென்ற Ax-4 க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுபட்டு பூமிக்கு திரும்புகிறது.

கமாண்டர் பெக்கி விட்சன், பைலட் சுபான்ஷு சுக்லா, மற்றும் திட்ட நிபுணர்கள் ஸ்லாவோஷ் உஸ்னான்ஸ்கி-விஸ்னியெவ்ஸ்கி மற்றும் டிபர் காபு ஆகியோரை உள்ளடக்கிய, ஆக்சியம் மிஷன் 4 (Ax-4) குழு, ஜூன் 25, 2025 அன்று IST 12:01 மணிக்கு கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

அடுத்த 28 மணி நேர சுற்றுப்பாதை கட்டத்திற்குப் பிறகு இந்திய நேரப்படி (IST) ஜூன் 26 மாலை 4:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) வெற்றிகரமாக இணைந்தது. அதன் பின்னர் குழுப் பயணிகள் தங்கள் பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர்.

Ax-4 க்ரூ டிராகன் விண்கலம்,  சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுபடும் தருணம்

பட மூலாதாரம்,INTERNATIONAL SPACE STATION

படக்குறிப்பு, Ax-4 க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுபடும் தருணம்

விண்வெளியில் வாழ்வதற்கு தகவமைத்தல்

புதிய ஊருக்கு வீடு மாறி சென்றால் அங்கே நமக்கு பழக்கம் அடைய சில நாட்கள் ஆகும். அதுபோல விண்வெளிக்கு செல்லும்போது அங்கே உள்ள எடையற்ற நிலையில் இயங்க, தகவமைத்து கொள்ளச் சற்று காலம் எடுக்கும்.

பயணத்தின் இரண்டாம் நாளில், சுபான்ஷு சுக்லா மற்றும் குழு உறுப்பினர்கள் பூமியின் ஈர்ப்பு இல்லாத புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை பழக்கிக் கொண்டனர்.

அவர்கள் தங்கள் தூங்கும் இடங்களை அமைத்தனர். ISS-ல் ஏற்கனவே இருந்த எக்ஸ்பெடிஷன் 73 குழுவுடன் பணி ஒப்படைப்பு செயல்பாடுகளை மேற்கொண்டனர். எடுத்து சென்ற முக்கிய சரக்குகளை விண்கலத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எடுத்து வந்தனர். மேலும் அவசரகால நடைமுறைகளைக் கற்றுக்கொண்டனர்.

மூன்றாம் நாளில், அவர்கள் முழுமையாக ISS குழுவுடன் ஒருங்கிணைந்தனர். அவசரகால பயிற்சிகளை மேற்கொண்டனர், முக்கியமான விஞ்ஞான உபகரணங்களையும் பாதுகாப்பு சாதனங்களையும் ஆய்வு மேடையில் பொருத்தினர்.

நிலையத்தின் நடத்தை விதிகளைக் கற்றனர். சுபான்ஷு சுக்லா அடுத்து வரும் நாட்களில் மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி சோதனைகளுக்குத் தேவையான உபகரணங்களை தயார் செய்வதில் முனைப்பு காட்டினர். உயிரியல் மாதிரிகளை சோதனை மேடைகளில் பொருத்தி சரிபார்த்தார்.

சுபான்ஷு சுக்லா, ஆக்சியம் 4, சர்வதேச விண்வெளி மையம், ஆராய்ச்சி, வானியல் ஆராய்ச்சிகள்,

பட மூலாதாரம்,WWW.AXIOMSPACE.COM

படக்குறிப்பு, பயணத்தின் இரண்டாம் நாளில், சுபான்ஷு சுக்லா மற்றும் குழு உறுப்பினர்கள் பூமியின் ஈர்ப்பு இல்லாத புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை பழக்கிக் கொண்டனர்

முக்கிய சோதனைகளின் தொடக்கம்

நான்காம் நாள் சுபான்ஷு சுக்லாவுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர் லைஃப் சயின்ஸஸ் கிளவ்பாக்ஸ் எனப்படும் உயிரியல் ஆய்வு மேடை அமைப்பில் மயோஜெனிசிஸ் சோதனையை மேற்கொண்டு, நீண்டகால விண்வெளிப் பயணங்களால் ஏற்படும் தசை சீரழிவு பற்றி ஆய்வு செய்தார்.

மேலும், செரிப்ரல் ஹீமோடைனமிக்ஸ் ஆய்வில் பங்கேற்று, அல்ட்ராசவுண்ட் மூலம் பூமியின் ஈர்ப்பு இல்லாத நிலையில் மூளை இரத்த ஓட்டத்தை ஆய்வு செய்தார். சுபான்ஷு பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடி உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ஐந்தாம் நாளில், சுபான்ஷு எதிர்கால ஆழ்விண்வெளிப் பயணங்களுக்கான நிலையான உணவு மூலங்களை ஆராயும் மைக்ரோ ஆல்கே மாதிரிகளை ஆய்வு மேடையில் வைத்து ஆய்வை துவங்கின்னர்.

இந்த ஆய்வு, இஸ்ரோ (ISRO), சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் உயிரிதொழில்நுட்ப மையம் (ஐ.சி.ஜி.இ.பி), தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஜிபிஆர்) ஆகியவற்றின் உதவியுடன் நடத்தப்பட்டது.

எடையற்ற நிலையில் வளரும் உணவாக உட்கொள்ளக்கூடிய மூன்று வகை மைக்ரோ ஆல்கே இனங்களின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் மரபணுச் செயல்பாட்டை உற்றுநோக்கி பதிவு செய்து அதனைப் பூமியில் உள்ள மாதிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதே இந்தத் திட்டம்.

வளர்ஊட்டம் அளித்து, நுண்ணுயிர் மாதிரிகளை வளர்த்து அதன் வளர்ச்சியை படமெடுத்து, டிரான்ஸ்கிரிப்டோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் மற்றும் வளர்சிதை மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய உயிரியல் அளவுருக்களை பதிவு செய்வது தான் சுபான்ஷு சுக்கலாவின் பணி.

சுபான்ஷு சுக்லா உட்பட விண்வெளி நிலையத்தில் இருந்த எல்லா குழு உறுப்பினர்களும் நியூரோ மோஷன் VR எனும் ஆய்வு திட்டத்திலும் பங்கெடுத்தனர். எடையற்ற நிலையில் உடலியக்கத்தில் நரம்பு, நமது நிலை குறித்த மூளை அறியும் திறன் எப்படி மாறுபடுகிறது என்பதை ஆய்வு செய்வது இதன் நோக்கம்.

மேலும் மற்றொரு முக்கிய ஆய்வான விண்வெளியில் இருதய நலத்தை கண்காணிக்கும் டெலிமெட்ரிக் ஹெல்த் AI, திட்டத்திலும் குழுவினர் பங்குகொண்டனர்.

சுபான்ஷு சுக்லா, ஆக்சியம் 4, சர்வதேச விண்வெளி மையம், ஆராய்ச்சி, வானியல் ஆராய்ச்சிகள்,

பட மூலாதாரம்,WWW.AXIOMSPACE.COM

படக்குறிப்பு, ஆய்வுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைக்கும் டிபர் காபு மற்றும் டக்கியா ஒனுஷி

விண்வெளியில் தசை செல்களின்

ஆறாம் நாளில், சுபான்ஷு மயோஜெனிசிஸ் சோதனையில் தனது பணியைத் தொடர்ந்தார். எடையற்ற நிலையில் தசை செல்களின் நடத்தையை ஆய்வு செய்தார்.

இந்தியாவின் 'இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்டெம் செல் சயின்ஸ் அண்ட் ரிஜெனரேடிவ் மெடிசின் (InStem)' முன்மொழியப்பட்ட இந்த ஆய்வு, ISS-ன் லைஃப் சயின்ஸஸ் கிளவ்பாக்ஸில் 3D திசு சில்லுகளைப் பயன்படுத்தி, விண்வெளியின் எடையற்ற நிலையில் தசை ஸ்டெம் செல்களின் நடத்தை மாற்றங்களை ஆராய்ந்து பதிவு செய்தார்.

விண்வெளியில் வளர்ந்த மாதிரிகளை பூமியில் வளர்ந்தவற்றுடன் ஒப்பிட்டு, தசை உருவாக்கத்தில் ஈர்ப்பு விசையின் தாக்கத்தை தனிமைப்படுத்தி காண இந்த ஆய்வு வழி செய்யும்.

இந்த ஆய்வின் முடிவுகள் இரட்டை நன்மைகளை வழங்கும்: எதிர்காலத்தில் நிலவு-செவ்வாய் நீண்டகால பயணங்களில் விண்வெளி வீரர்களின் தசைகளைப் பாதுகாக்கும் முறைகளை உருவாக்குதலில் நமக்கு வழிகாட்டும். மேலும் பூமியில் தசை சீரழிவு நோய்களுக்கான சிகிச்சைகளில் முன்னேற்றம் காணவும் உதவும்.

ஃபோட்டான் கிராவ் மூளை-கணினி இடைமுக பரிசோதனையிலும் குழுவினர் பங்கு கொண்டனர். இது விண்கல இயக்க கருவிகளுடன் தங்களது மூளை செயல்பாடு மூலம் கட்டுப்படுத்தும் முன்னணி தொழில்நுட்ப ஆய்வு. நரம்பியல் நோய்களுக்கு புதுவித சிகிச்சையை உருவாக்கவும் இந்த ஆய்வு உதவும்.

சயனோபாக்டீரியா வளர்ச்சி

ஏழாம் நாளில், சுபான்ஷு இஸ்ரோவின் சயனோபாக்டீரியா வளர்ச்சியை ஆவணப்படுத்தினார். குழுவினர் வோயேஜர் டிஸ்ப்ளேஸ் எனும் ஆய்வு திட்டத்திலும் பங்கேற்றனர். கண் இயக்கம் மற்றும் பார்வை ஒருங்கிணைப்பபை எடையற்ற விண்வெளி நிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்யும்.

எட்டாம் நாள் பல ஆராய்ச்சி செயல்பாடுகளால் நிரம்பியிருந்தது. சுபான்ஷு மயோஜெனிசிஸ் ஆய்வுக்கான தசை செல் வளர்ச்சியை தொடர்ந்தார்.

மேலும் டார்டிகிரேட்ஸ் நுண்ணுயிரி சோதனையைத் தொடங்கினார். இது நுண்ணிய உயிரினங்கள் விண்வெளியில் எவ்வாறு உயிர் வாழ்கின்றன என்பதை ஆராய்கிறது. ஐஐஎஸ்சி பெங்களூர் வடிவமைத்த இந்த சோதனையில் டார்டிகிரேட்ஸ் அல்லது நீர் கரடிகள் என்று அழைக்கப்படும் சிறிய அரை மில்லி மீட்டர் நீளமே உடைய உயிரினங்கள் எப்படி வளர்கின்றன என்பதை ஆய்வு செய்வார்கள்.

இந்த வகை நுண்ணுயிரிகள் வெப்பம், கடும் குளிர், கடல்கள் மற்றும் எரிமலைகள் போன்ற தீங்கான சூழல்களில் கூட உயிர்வாழும் திறன் கொண்டவை. விண்வெளிப் பயணத்திற்கு முன், அவை உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

இந்த உறக்க நிலையில் உணவு தேவையில்லாமல் வளர்சிதை மாற்றம் இல்லாமல் இருந்தன. ISS-ல், சுபான்ஷு சுக்லா நீரைப்பயன்படுத்தி அவற்றை எடையற்ற நிலையில் மீண்டும் உயிர்ப்பித்தார்.

AXIOM-4 திரும்பியவுடன், விண்வெளியில் வளர்ந்த மாதிரிகள் பூமியை அடையும். இவற்றை இந்திய விஞ்ஞானிகள் பூமியில் வளர்ந்த நுண்ணுயிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வார்கள்.

விண்வெளி உடை தயாரிப்பில் பயன்படுத்த, நிலையான வெப்பநிலையை பராமரிக்க உதவும் வகையான புதிய பொருட்களை சோதிக்க குழுவினர் உதவினர். மேலும் வாய்ஸ் இன் ஸ்பேஸ் எனும் ஆய்வு திட்டத்திலும் பங்கு கொண்டனர். எடையற்ற விண்வெளி நிலையில் நமது குரலில் எவ்வித மாற்றம் ஏற்படுகிறது என்பதை இது ஆய்வு செய்யும்.

சுபான்ஷு சுக்லா, ஆக்சியம் 4, சர்வதேச விண்வெளி மையம், ஆராய்ச்சி, வானியல் ஆராய்ச்சிகள்,

பட மூலாதாரம்,WWW.AXIOMSPACE.COM

படக்குறிப்பு, AXIOM-4 திரும்பியவுடன், விண்வெளியில் வளர்ந்த மாதிரிகள் பூமியை அடையும். இவற்றை இந்திய விஞ்ஞானிகள் பூமியில் வளர்ந்த நுண்ணுயிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வார்கள்

விண்வெளி விடுமுறை

பரபரப்பான ஒருவாரம் நீண்ட பணிகளுக்கு பிறகு ஒன்பதாம் நாள் விண்வெளிக்குழுவினர்களுக்கு விடுமுறையாக அமைந்தது. சுபான்ஷு மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் இந்த நேரத்தை ஓய்வெடுக்க, தங்கள் குடும்பங்களுடன் பேச பயன்படுத்திக்கொண்டனர்.

விடுமுறைக்கு பிறகு, பத்தாம் நாளில், சுபான்ஷு மயோஜெனிசிஸ், மைக்ரோ ஆல்கே ஆய்வு போன்ற ஆய்வை தொடர்ந்தார். இந்த ஆய்வுகளில் வளர்ந்த தசை செல்கள் நுண்ணுயிர்கள் போன்றவற்றின் மாதிரிகளை சேகரித்து பதம் செய்து வைத்தார். வோயேஜர் டிஸ்ப்ளேஸ் போன்ற ஆய்வுகளும் தொடர்ந்தன.

பதினொன்றாம் நாள் தாவரவியலில் கவனம் சென்றது. சுபான்ஷு ஸ்ப்ரௌட்ஸ்- முளைவிடுதல்- சோதனையை துவக்கினர். இந்திய விவசாய மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எடையற்ற நிலையில் முளைக்கும் தாவரங்களின் மரபணு மாற்றங்களை ஆய்வு செய்தார். பூமியிலிருந்து எடுத்து சென்ற விதைகளுக்கு நீர்ப்பாசனம் செய்தார். வேர்/தண்டு வளர்ச்சி மாறுபாடுகளை ஆவணப்படுத்தினார்.

விண்வெளியில் முளைத்த தாவரங்களின் மாதிரிகள் -80°C-ல் சேமிக்கப்பட்டன. எதிர்காலத்தில் விண்வெளி நிலையத்தில் இவ்வாறு முளைவிட செய்து தாவர உணவுகளை பெறுவதற்கு இந்த ஆய்வு உதவும். மேலும் தாவரங்களின் வளர்ச்சியில் ஈர்ப்பு விசையின் பங்கு குறித்து அறியவும் உதவும்

பன்னிரண்டாம் நாளில், சுபான்ஷு மயோஜெனிசிஸ் ஆய்வின் செல்லுலார் மாதிரிகளை சேகரித்து சேதாரம் இல்லாமல் பூமிக்கு திரும்ப எடுத்துவர பதனம் செய்தார். மேலும் டெலிமெட்ரிக் ஹெல்த் AI திட்ட ஆய்விலும் பங்கு கொண்டார்.

13-வது நாளில், சயனோபாக்டீரியா மாதிரிகளை பூமிக்கு திரும்ப எடுத்துவர பதனம் செய்து பத்திரப்படுத்தினார். மேலும் வோயேஜர் டிஸ்ப்ளேஸ் ஆய்வின் பகுதியாக எடையற்ற நிலையில் கண் இயக்கத்தை ஆய்வு செய்ய உதவினார்.

14-ஆம் நாளில், விண்வெளியில் முளைவிட்ட தாவரங்கள் உட்பட அனைத்து உயரி ஆய்வுகளின் மாதிரிகளை -80°C உறைவிப்பானில் பதனம் செய்து பத்திரப்படுத்தினார்.

பதினைந்தாம் நாளில் குழு பூமியை சுமார் 230 முறை சுற்றி வந்தது. ஏற்கனவே துவங்கிய ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டார்.

16-ஆம் நாளில், சுபான்ஷு மைக்ரோ ஆல்கே ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதே நேரத்தில், குழு வோயேஜர் டிஸ்ப்ளேஸ் ஆய்வில் பங்கு கொண்டனர்.

சுபான்ஷு சுக்லா, ஆக்சியம் 4, சர்வதேச விண்வெளி மையம், ஆராய்ச்சி, வானியல் ஆராய்ச்சிகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எடையற்ற நிலையில் முளைக்கும் தாவரங்களின் மரபணு மாற்றங்களை ஆய்வு செய்தார் சுபான்ஷு சுக்லா (சித்தரிப்புப் படம்)

பூமி திரும்புவதற்கான ஆயத்தம்

பதினேழாம் நாளில், மைக்ரோ ஆல்கே கலாச்சாரங்களை சென்ட்ரிஃப்யூஜ் செய்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு உறைபனியில் வைத்தனர். வாய்ஸ் இன் ஸ்பேஸ் ஆய்விலும், அக்வயர்ட் ஈக்விவலன்ஸ் டெஸ்ட் எனும் ஆய்விலும் பங்களிப்பு செய்தார்.

பதினெட்டாம் நாளில், குழுவினர் தொடர்ந்த இரத்த குளோக்ஸ் அளவு பதிவு செய்தல் ஆய்வில் பங்கு கொண்டனர். விண்வெளியில் பல நாட்கள் வாழ்ந்த சூழலில் ரத்த சர்க்கரை அளவு எப்படி மாறுபடுகிறது என்பதை இந்த உடலியல் ஆய்வு பதிவு செய்தது.

பத்தொன்பதாம் நாள் புறப்படுவதற்கான தயாரிப்புகளில் கழிந்தது. சுபான்ஷு மற்றும் குழு முளைத்த விதைகள் மற்றும் ஆல்கே 'கல்ச்சர்' உள்ளிட்ட சோதனை மாதிரிகளை பேக் செய்தனர். அவர்கள் ISS குழுவுடன் விடைபெறும் விழாவில் பங்கேற்றனர்.

இருபதாம் நாளில், Ax-4குழுவினர் மறுபடி க்ரூ டிராகன் விண்கலத்துக்கு வந்தனர். விண்கல கதவுகள் -ஹேச்சுகளை மூடினர். ISS-லிருந்து விடுபட தயார் செய்து கொண்டனர். இவ்வாறு அவர்களின் 20-நாள் பணி முடிவுக்கு வந்தது.

ISS-லிருந்து விடுபடுதல், தரையிறக்கம் மற்றும் மீட்பு

Ax-4 க்ரூ டிராகன் விண்கலம் தரையிறக்கத்திற்கு சுமார் 22-24 மணி நேரத்திற்கு முன்பு ISS-லிருந்து விடுபடும். பிரிந்த பிறகு, மெல்ல மெல்ல சுற்றுப்பாதை தாழ்வு எரிப்புகளை செயல்படுத்தி அதன் சுற்றுப்பாதையை படிப்படியாக தாழ்த்தும். கணக்கிடப்பட்ட தரையிறக்கத்திற்கு 30-60 நிமிடங்களுக்கு முன்பு டி-ஆர்பிட் எரிப்பு மூலம் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்.

இந்த சமயத்தில் உராய்வு காரணமாக, விண்கலத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலை 1,900°C வரை உயரும். சிறப்பாக தயாரிக்கப்பட்ட வெப்ப கேடயம் இந்தக் கட்டத்தில் குழுவைப் பாதுகாக்கும். வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு, 5.5 கிமீ உயரத்தில் பாராசூட்கள் விரிக்கப்படும், கலிபோர்னியா கடற்கரையில் பாதுகாப்பாக நீரிறக்கம் ஆகும்.

சுற்றுப்பாதை நிலைமைகளைப் பொறுத்து இந்த முழு செயல்முறை 20 முதல் 24 மணி நேரம் எடுக்கும்.

மீட்பு குழுக்கள் நீரிறக்கம் ஆவதற்கு 30 நிமிடங்களுக்குள் கேப்சூலை அணுகி பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்வார்கள். தீ விபத்து போன்ற எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்தபின்னர், தரையிறங்கி கடலில் மிதக்கும் விண்கலத்தை கிரேன் கொண்டு கப்பல் தளத்துக்கு உயர்த்துவார்கள்.

இதன் பின்னர் கதவு திறக்கப்பட்டு குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள். இரண்டு வாரங்கள் ஈர்ப்பு இல்லாத நிலையில் இருந்த பிறகு, விண்வெளி வீரர்கள் பூமியின் ஈர்ப்பு விளைவுகளுக்கு ஏற்பத் தங்களை சரிசெய்ய உதவி தேவைப்படலாம்.

எனவே அவர்களை முதலில் ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலியில் வைத்து தான் அழைத்து செல்வார்கள். விண்வெளி வீரர்களை மருத்துவ குழுக்கள் ஆரம்பகட்ட உடல் சோதனை செய்வார்கள். உணவு, நீர் முதலிய வழங்குவார்கள். 20-25 மணிநேர பயணத்துக்கு பிறகு விண்கலத்திலிருந்து வெளிவருவதால் உடல் சுத்தம் செய்வார்கள்.

கப்பல் கரையை அடைந்ததும், மேலும் விரிவான மருத்துவ பரிசோதனை மேற்க்கொள்ளப்படும். தரையிறங்கிய சில மணி நேரத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். புதிய ஆரோக்கிய கவலைகள் எழாவிட்டால், நீண்ட கால தனிமைப்படுத்தல் தேவையில்லை. தரையிறக்கத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, சுபான்ஷு சுக்லா இந்தியா திரும்புவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cedgpnvp8pyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.