Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித டிஎன்ஏ,  அறிவியல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மனித டிஎன்ஏவின் பகுதிகளை புதிதாக ஆதியில் இருந்து உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்

கட்டுரை தகவல்

  • பல்லப் கோஷ்

  • அறிவியல் செய்தியாளர்

  • க்விண்டாஃப் ஹ்யூக்ஸ்

  • அறிவியல் ஒளிப்பதிவாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மனித உடலின் கட்டுமானத் தொகுதிகளான டிஎன்ஏவை புதிதாக உருவாக்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்படுவதாக நம்பப்படுகிறது.

எதிர்கால சந்ததியினரை தங்கள் விருப்பம் போல வடிவமைத்துவிடலாம் மற்றும் எதிர்பாராத மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகள் காரணமாக டிஎன்ஏ ஆராய்ச்சிகள் இதுவரை தடைசெய்யப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது உலகின் மிகப்பெரிய மருத்துவ தொண்டு நிறுவனமான வெல்கம் டிரஸ்ட், இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பத் தொகையாக 10 மில்லியன் யூரோ வழங்கியுள்ளது. பல குணப்படுத்த முடியாத நோய்களுக்கான சிகிச்சைகளை விரைவுபடுத்துவதன் மூலம் செயற்கை டிஎன்ஏ, தீமைகளைவிட நன்மைகளையே அதிகமாகச் செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக வெல்கம் டிரஸ்ட் கூறுகிறது.

இந்தத் திட்டத்தில் முக்கிய உறுப்பினரும், கேம்பிரிட்ஜில் உள்ள எம்.ஆர்.சி மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் ஜூலியன் சேல், இந்த ஆராய்ச்சியானது உயிரியலில் அடுத்த மிகப் பெரிய முன்னெடுப்பு என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

"வானமே எல்லை. முதியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சிகிச்சைகள் தேவை. வயதாகும்போது நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமான முதுமைக்கு வழிவகுக்கும் சிகிச்சைகளை நாம் தேடுகிறோம்."

"அதற்கு செயற்கை டிஎன்ஏவை பயன்படுத்தலாம், சேதமடைந்த உறுப்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். எடுத்துக்காட்டாக கல்லீரல், இதயம், நோய் எதிர்ப்பு மண்டலம் உள்பட, நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்க செயற்கை டிஎன்ஏவை பயன்படுத்த முடியும்," என்று அவர் கூறினார்.

மனித மரபணுவை செயற்கையாக உருவாக்கும் முயற்சி

ஆனால், மேம்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட மனிதர்களை உருவாக்க முயலும் நேர்மையற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த ஆராய்ச்சி உதவி செய்துவிடும் என்பதே இந்தத் திட்டத்தை விமர்சிப்பவர்களின் கவலையாக இருக்கிறது.

Beyond GM என்ற பிரசாரக் குழுவின் இயக்குநர் டாக்டர் பாட் தாமஸின் கருத்துப்படி, "விஞ்ஞானிகள் அனைவருமே நல்லதுதான் செய்வார்கள் என்று நம்ப வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தீமைக்கும், போருக்கும்கூட அறிவியலைப் பயன்படுத்த முடியும்."

மனித டிஎன்ஏவில் உள்ள மூலக்கூறுகளை வரைபடமாக்கிய மனித மரபணு திட்டம் நிறைவடைந்த 25வது ஆண்டு விழாவில் இந்தத் திட்டம் தொடர்பான தகவல்கள் பிபிசிக்கு வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு வெல்கம் டிரஸ்ட் பெருமளவில் நிதியுதவி அளித்துள்ளது.

நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் டிஎன்ஏ எனப்படும் ஒரு மூலக்கூறு உள்ளது. அதில் மரபணு தகவல்கள் இடம் பெற்றிருக்கும். ஏ, ஜி, சி, டி எனக் குறிப்பிடப்படும் நான்கு மிகச் சிறிய தொகுதிகளில் இருந்து டிஎன்ஏ கட்டமைக்கப்படுகிறது. அவை பல்வேறு சேர்க்கைகளில் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன.

உடல் ரீதியாக நாம் யார் என்பதை உருவாக்கும் அனைத்து மரபணு தகவல்களையும் டிஎன்ஏ கொண்டுள்ளது என்பது ஆச்சரியமளிக்கும் அறிவியல் உண்மை.

விஞ்ஞானிகள் அனைத்து மனித மரபணுக்களையும் ஒரு பார் குறியீடு போலப் படிக்க, மனித ஜீனோம் திட்டம் உதவியது. செயற்கை மனித ஜீனோம் திட்டம் என்று அழைக்கப்படும் புதிய திட்டம், இதை மிகப் பெரிய அளவில் முன்னோக்கி எடுத்துச் செல்லும். இது, டிஎன்ஏவின் மூலக்கூறுகளை ஆய்வாளர்கள் படிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, மூலக்கூறின் பகுதிகளை, (ஒருவேளை அனைத்தையும்) புதிதாக உருவாக்க அனுமதிக்கும்.

மனித டிஎன்ஏ-வை புதிதாக உருவாக்கும் விஞ்ஞானிகளின் நோக்கம் என்ன?

மனித டிஎன்ஏ, விஞ்ஞானிகள்

பட மூலாதாரம்,BBC NEWS

படக்குறிப்பு, மனித டிஎன்ஏவின் பெரிய பகுதிகளை உருவாக்குவதற்கான கருவிகளை விஞ்ஞானிகள் உருவாக்கத் தொடங்குவார்கள்

மனித டிஎன்ஏவின் பெரிய தொகுதிகளை உருவாக்குவதற்கான வழிகளை உருவாக்குவதே விஞ்ஞானிகளின் முதல் நோக்கம். அவை செயற்கையாக மனித குரோமோசோமை உருவாக்கும் வரை இது தொடரும். டிஎன்ஏவின் தொகுதிகள், நமது வளர்ச்சி, பழுது மற்றும் பராமரிப்பை நிர்வகிக்கும் மரபணுக்களைக் கொண்டுள்ளன.

பின்னர் இவற்றை ஆய்வு செய்து பரிசோதித்து, மரபணுக்கள் மற்றும் டிஎன்ஏக்கள் நம் உடல்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதைப் பற்றி மேலும் அறியலாம்.

"மரபணுக்கள் தவறாகச் செல்லும்போது பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே ஆய்வுகள், நோய்களுக்குத் தேவையான மேம்பட்ட சிகிச்சைகளை வழங்க வழிவகுக்கும்" என்று கூறுகிறார், மனித மரபணுவின் மிகப்பெரிய விகிதத்தை வரிசைப்படுத்திய வெல்கம் சாங்கர் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மேத்யூ ஹர்ல்ஸ் கூறுகிறார்.

"புதிதாக டிஎன்ஏவை உருவாக்குவது என்பது டிஎன்ஏ எவ்வாறு செயல்படுகிறது என்பதைச் சோதிக்கவும் புதிய கோட்பாடுகளைச் சோதிக்கவும் அனுமதிக்கிறது. ஏனெனில் தற்போது வாழும் அமைப்புகளில் ஏற்கெனவே இருக்கும் டிஎன்ஏவில், புதிய டிஎன்ஏவை மாற்றுவதன் மூலம் மட்டுமே நாம் அதைச் செய்ய முடியும்."

செயற்கை மனிதர்கள் உருவாக்கப்பட்டால்...

மனித டிஎன்ஏ, இயந்திரங்கள்

பட மூலாதாரம்,BBC NEWS

படக்குறிப்பு, மனித டிஎன்ஏவை படிக்கப் பயன்படுத்தப்படும் இந்த இயந்திரங்கள் விரைவில் டிஎன்ஏவின் பகுதிகளை எழுதவும் பயன்படுத்தப்படலாம்

இந்தத் திட்டத்தின் பணிகள் சோதனைக் குழாய்கள் மற்றும் கருவிகளுடன் மட்டுமே இருக்கும். செயற்கை உயிர்களை உருவாக்கும் எந்த முயற்சியும் இந்தத் திட்டத்தில் இருக்காது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் ஆராய்ச்சியாளர்களுக்கு மனித வாழ்க்கை அமைப்புகள் மீது இதுவரை இருந்திராத கட்டுப்பாட்டை வழங்கும்.

இந்தத் திட்டம் மருத்துவ ரீதியிலான நன்மைகளை இலக்கு வைத்து செய்யப்பட்டாலும், நேர்மையற்ற விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வழிமுறைகள் எதுவும் இல்லை.

உதாரணமாக, உயிரியல் ஆயுதங்கள், மேம்பட்ட மனிதர்கள் அல்லது மனித டிஎன்ஏ கொண்ட உயிரினங்களை உருவாக்க முயற்சி செய்யலாம் என்று மரபணு விஞ்ஞானி பேராசிரியர் பில் எர்ன்ஷா கவலை தெரிவிக்கிறார்.

இவர், செயற்கை மனித குரோமோசோம்களை உருவாக்குவதற்கான செயல்முறை ஒன்றை வடிவமைத்தவர். அதோடு, எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பிரபல மரபணு விஞ்ஞானி ஆவார்.

"பூதம் பாட்டிலுக்கு வெளியே வந்துவிட்டது," என்று அவர் இதுகுறித்து பிபிசியிடம் விவரித்தார். மேலும், "இப்போது நமக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம், ஆனால் பொருத்தமான இயந்திரங்களை அணுகக்கூடிய ஓர் அமைப்பு இதைச் செய்ய முடிவு செய்தால், அதைத் தடுக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்" என்றார்.

ஆராய்ச்சிகள் மூலம் உருவாக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருந்துகளை உருவாக்கும் சுகாதார நிறுவனங்களால் தொழில்நுட்பம், வணிகமயமாக்கப்படும் என்பது குறித்து டாக்டர் பாட் தாமஸ் கவலைப்படுகிறார்.

"செயற்கை உடல் பாகங்களையோ அல்லது செயற்கை மனிதர்களையோ நம்மால் உருவாக்க முடிந்தால், அவை யாருக்குச் சொந்தமானவை. இந்தப் படைப்புகளில் இருந்து வரும் தரவுகள் யாருடையது?" என்று அவர் கேள்விகளை எழுப்புகிறார்.

தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியங்களைக் கருத்தில் கொண்டு, அவர்கள் ஏன் இந்த ஆராய்ச்சிக்கு நிதியளிக்கிறார்கள் என்பதுதான் தற்போது வெல்கம் நிறுவனத்திடம் கேட்கப்படும் கேள்வி. இந்த முடிவு இலகுவாக எடுக்கப்படவில்லை என்று நிதியுதவி அளித்த வெல்கம் நிறுவனத்தின் டாக்டர் டாம் காலின்ஸ் கூறினார்.

"இதற்கு நிதியளிக்காவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வியை எங்களிடம் நாங்களே கேட்டுக்கொண்டோம்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"இந்தத் தொழில்நுட்பம் கண்டிப்பாக ஒரு நாள் உருவாக்கப்பட உள்ளது. எனவே இப்போதே அதைச் செய்வதில் தவறேதும் இல்லை. குறைந்தபட்சம் பொறுப்பான முறையில் அதைச் செய்ய முயல்கிறோம். அத்துடன், நெறிமுறை மற்றும் தார்மீக கேள்விகளை முடிந்தவரை வெளிப்படையாக எதிர்கொள்ள முயல்கிறோம்."

ஒரு பிரத்யேக சமூக அறிவியல் திட்டமும், இந்தத் திட்டத்தின் அறிவியல் வளர்ச்சியுடன் இணைந்து இயங்கும். கென்ட் பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் பேராசிரியர் ஜாய் ஜாங் தலைமையில் இந்த சமூக அறிவியல் திட்டம் நடைபெறும்.

"செயற்கை மனித மரபணு திட்டம் தொடர்பாக, நிபுணர்கள், சமூக விஞ்ஞானிகள் மற்றும் குறிப்பாக பொது மக்களின் கருத்துகளை அவர்கள் தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்கள், அது அவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது பற்றியும், முக்கியமாக அவர்களுக்கு எழும் கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்தும் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gdm68j4gdo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.