Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மரணம், வனம், சிறுத்தை, கால்நடைகள், இயற்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • பெ.சிவசுப்ரமணியம்

  • பிபிசி தமிழுக்காக

  • 27 ஜூன் 2025

தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18வது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம், மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது.

இது பாலாறு, மாதேஸ்வரன் மலை, ஹூக்கியம், ராமாபுரம், பி.ஜி.பாளையம், அனூர், கொள்ளேகால் என ஏழு வனச் சரகங்களை உள்ளடக்கியது. தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது ஹூக்கியம் வனச்சரகம். இங்குள்ள மின்னியம் காட்டுப் பகுதியில், மாரி அணை கேம்ப் என்ற இடம் உள்ளது.

இந்த இடத்திலுள்ள ஒரு மாட்டுப் பட்டியின் அருகில் இன்று காலை நான்கு புலிகள் உயிரிழந்து கிடப்பதாகக் கிடைத்த செய்தியைத் தொடர்ந்து, ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், மலை மாதேஸ்வரா வனக் கோட்ட துணை வனப் பாதுகாவலர் சக்கரபாணி தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, இறந்து கிடந்த நான்கு புலிகளின் உடல்களைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர்.

மூன்று வயது குட்டிகள்

புலிகள் மரணம், வனம், சிறுத்தை, கால்நடைகள், இயற்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், "இறந்துபோன தாய்ப் புலிக்கு 15 வயது இருக்கலாம். அதன் குட்டிகளுக்கு இரண்டு முதல் மூன்று வயதுக்குள் இருக்கும். இன்னும் சில நாள்களில் தாய்ப் புலியை விட்டு குட்டிகள், தனித்து வாழும் நிலையை அடையும் வயதில் இருந்தன.

நான்கு புலிகளும் 300 மீட்டர் சுற்றளவுக்குள் உயிரிழந்து கிடந்தன. அவை இறந்து இரண்டு நாள்கள் ஆகியிருக்கலாம். நான்கு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. முதல் கட்ட விசாரணையில், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. நாளை காலை கால்நடை மருத்துவர் குழுவைக் கொண்டு உடற்கூறாய்வு மேற்கொள்ள இருக்கிறோம். அதற்குப் பிறகுதான், புலிகள் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரிய வரும்" என்றார்.

இந்திய அளவில் காட்டுயிர் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விரும்பிகள் மத்தியில், நான்கு புலிகள் உயிரிழந்த செய்தி மிகப்பெரிய வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலய வனப்பகுதியில் உள்ள ஹூக்கியம் வனச்சரக எல்லையில் ஒரு தாய்ப் புலி மற்றும் மூன்று குட்டிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனையான செய்தியாகும். கர்நாடக அரசு, இதை மிகவும் தீவிர இழப்பாகக் கருதியுள்ளது," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த புலிகள் பாதுகாப்பு திட்டம்

புலிகள் மரணம், வனம், சிறுத்தை, கால்நடைகள், இயற்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புலிகள் அதிகமாக வாழும் காடு வளம் கொண்டது என வல்லுநர்கள் கூறுகின்றனர்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, புலிகள் பாதுகாப்புக்காக ப்ராஜெக்ட் டைகர் (Project Tiger) எனும் திட்டத்தை 1973இல் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் புலிகளைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில், கர்நாடக மாநிலம், 563 புலிகளுடன் நாட்டில் 2வது இடத்தில் உள்ளது.

"புலிகள் பாதுகாப்பிற்குப் பெயர் பெற்ற மாநிலத்தில், ஒரே நாளில் நான்கு புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. கர்நாடக மாநில முதன்மை வனப்பாதுகாவலர் சுபாஷ் கே. மல்கேடே தலைமையில் உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "வன ஊழியர்களின் அலட்சியம் அல்லது மின்சாரம் தாக்கியதாலோ, விஷம் கொடுத்தோ மரணம் ஏற்பட்டு இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றும் கூறப்பட்டுள்ளது.

'புலிகள் - வன வளத்தின் குறியீடு'

புலிகள் மரணம், வனம், சிறுத்தை, கால்நடைகள், இயற்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அளவில், கர்நாடகா மாநிலம் 563 புலிகளுடன் 2வது இடத்தில் உள்ளது

தமிழ்நாட்டில் காட்டுயிர்களின் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளைச் செய்து வரும் ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ், "தாய்ப் புலியோடு சேர்ந்து மூன்று குட்டிகளும் உயிரிழந்ததைப் பார்க்கும்போது, இந்த நான்கு புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது," என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய காளிதாஸ், "புலிகள் அதிகமாக வாழும் காடு வளமானது எனப் புரிந்துகொள்ளலாம். ஒரு புலி வாழும் காடு என்றால், அங்கே 500 மான்கள் வரை வாழும். 500 மான்கள் வாழும் இடத்தில், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மற்ற விலங்குகள், பறவைகள் வாழும். மரங்கள், செடி, கொடி, புற்கள் செழிப்புடன் வளரும். ஒரு புலி, ஒரு மானை, ஒரே முயற்சியில் வேட்டையாடி உண்ண முடியாது. குறைந்தது 20 முறை முயற்சி செய்துதான், அது தன் இரையை வேட்டையாடி உண்ணும்" என்று விளக்கினார் காளிதாஸ்.

மேலும், "இந்தியாவில் சட்டவிரோத வேட்டையால் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கையை விடவும், விஷம் வைத்துக் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காட்டின் எல்லையோரப் பகுதிகளில், கால்நடைகளை வளர்க்கும் எளிய மக்கள், தங்கள் மாடுகளைப் புலிகள், சிறுத்தைகள் அடித்துச் சாப்பிட்டு விடுவதால் ஏற்படும் இழப்புகள் மற்றும் ஆத்திரத்தின் விளைவாக, இறைச்சியில் விஷத்தைக் கலக்கும் செயலில் ஈடுபடுவது நடக்கிறது" என்று கூறுகிறார்.

ஒரு புலி, தான் அடித்துச் சாப்பிடும் உணவைக் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடும் வழக்கம் கொண்டது என்பதைச் சுட்டிக் காட்டும் காளிதாஸ், "இந்த நடைமுறையைத் தெரிந்துகொள்ளும் சிலர், தனது கால்நடையைக் கொன்ற புலியை அல்லது சிறுத்தையைப் பழிவாங்கும் எண்ணத்தில், அது மிச்சம் வைத்துள்ள இறைச்சியில் விஷம் கலந்து விடுகின்றனர். இந்தியாவில் நிகழும் இயற்கைக்கு மாறான புலிகள் இறப்புக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது," என்று கூறினார்.

மேலும், காடுகளைப் பாதுகாப்பதில் வனத்துறை முற்று முழுதாகச் சுயமாகச் செயல்பட்டுவிட முடியாது எனக் கூறிய காளிதாஸ், காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி சமூகங்களுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே இதற்கான தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

அதோடு, "கால்நடைகளை வளர்க்கும் ஒருவருக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், உடனடியாக இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். கால்நடைகளை விலங்குகள் வேட்டையாடி விட்டால், அதற்கு அரசு இழப்பீடு வழங்கும் என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று விளக்கினார்.

புலிகள் வேட்டையாடிய கால்நடைகளுக்கான இழப்பீடு

புலிகள் மரணம், வனம், சிறுத்தை, கால்நடைகள், இயற்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

புலிகள் மற்றும் சிறுத்தைகளால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அந்தியூர் வனச்சரக அலுவலர் முருகேசன், "காடுகளில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு ஆயிரம் முதல் 3,000 வரையும், எருமைகளுக்கு பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும், மாடுகளுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையும் வனத்துறையால் இழப்பீடு வழங்கப்படுகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "காட்டுயிர்களால் வேட்டையாடப்பட்ட கால்நடைகள் குறித்த தகவல்கள் கிடைத்ததும், கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு செய்யப்படும். அப்படித்தான் அதன் வயது முடிவு செய்யப்படும். பிறகு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வைத்து, மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை அனுப்பி வைத்து, நிதி கையிருப்பு இருந்தால் உடனடியாக கிளைம் வழங்கப்படும். நிதி இல்லையெனில், அடுத்த மூன்று மாதங்களில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கால்நடைக்கு இழப்பீடு வழங்கப்படும்" என்று இழப்பீடு வழங்கப்படும் செயல்முறையை விளக்கினார்.

ஓய்வு பெற்ற கர்நாடக மாநில உதவி வனக்கோட்ட அலுவலர் அங்குராஜ் பேசும்போது, "கர்நாடக மாநில காப்புக் காடுகளின் எல்லைக்குள் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு கொடுப்பது இல்லை. ஊர் எல்லையில் உள்ள காடுகளில், காட்டுயிர்களால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்குகிறது" என்றார்.

மேலும், "மாநில அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இதுபோன்ற இழப்புகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து வைக்கும். அதில் போதிய நிதி இருந்தால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும். நிதி இல்லையெனில், சீனியாரிட்டி அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களிலோ அல்லது ஆறு மாதங்களிலோ இழப்பீடு வழங்கப்படும்" என்று கூறிய அவர், சில நேரங்களில், ஓர் ஆண்டு கடந்தும்கூட இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3,682 புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் புலிகள் அதிகமுள்ள மாநிலம் மத்திய பிரதேசம். 2022ஆம் ஆண்டு, புள்ளி விவரங்களின்படி, மத்திய பிரதேசத்தில் 785 புலிகள் வாழ்வதாகத் தெரிய வந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், 560 புலிகளுடன் மூன்றாவது இடத்தில் சத்தீஸ்கரும் உள்ளன. தமிழ்நாட்டின் காடுகளில் 264 புலிகள் மட்டுமே வாழ்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce9x2870lv4o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.