Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரதரின்(2025) புதிய முயற்சிகள்

July 19, 2025

வரதரின்(2025) புதிய முயற்சிகள்

— கருணாகரன் —

ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இருவரும் ஒரு காலத்தில் பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இயக்கத்தில் பொறுப்பான பதவிகளில் செயற்பட்டவர்கள். 1988 இல் வடகிழக்கு இணைந்த மாகாணசபையில் கூட முதன்மைப் பொறுப்புகளில் இருந்தவர்கள். பின்னாளில் வெவ்வேறு நிலைப்பாடுகளால் இருவேறு அணிகளாகியிருந்தனர். இப்போது கூட வெவ்வேறு அணிகளாக இருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். 

இந்தச் சந்திப்பு தனிப்பட்டதல்ல. அரசியல் ரீதியானதே. சந்திப்பில் சுரேஸ் அணியின் தரப்பில் வட மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முக்கியஸ்தருமான சர்வேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் யாழ்ப்பாணக் கொமிட்டியின் செயலாளர் கமலாகரன் (குகன்) மற்றும் சிவா ஆகியோரும் வரதரோடு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் கிருபாகரன் உட்பட மேலும் இருவர் கலந்துகொண்டுள்ளனர். 

ஆனால், இது சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான  ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் வரதராஜப்பெருமாள் செயற்பட்டுவரும் தமிழர் சமூக ஜனநாயகக்கட்சிக்கும் இடையிலான கட்சிசார் அரசியற் சந்திப்பு இல்லை என்று சம்மந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன. கட்சிசார் அரசியற் சந்திப்பாக இருந்தால் அதில் முக்கியமாக தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் சுகு ஸ்ரீதரன், மோகன் போன்றோரும் பங்கேற்றிருப்பார். மட்டுமல்ல, அதனுடைய தன்மையும் வேறாகவே இருந்திருக்கும். 

அப்படியென்றால் இந்தச்சந்திப்பில் என்ன முக்கியத்துவம் என்று யாரும் கேட்கலாம். ஏற்கனவே  எதிரும் புதிருமாக இருந்த பல தரப்புகள் அரசியல் உரையாடலையும் உறவாடலையும் அரசியற்கூட்டுகள், தேர்தற்கூட்டுகளையும் வைத்துள்ளன. இந்த நிலையில் சுரேஸ் – வரதர் சந்திப்பு ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அரசியலில் இதெல்லாம் சாதாரணமானதுதான். ஆனாலும் இந்தச் சந்திப்புச் சற்று வித்தியாசத்துக்குரியது என்றே கருதப்பட வேண்டியுள்ளது. 

ஏனென்றால், இந்தச் சந்திப்பு கட்சி அரசியல், தேர்தல் அரசியலுக்கு அப்பாலானதாக இருக்கிறது. அதை வரதராஜப்பெருமாளும் சுரேஸ் அணித் தரப்பும் சொல்லியுள்ளது. மட்டுமல்ல, சுரேஸ் பிரேமச்சந்திரனின் அணியைச் சந்தித்ததைப்போல, 17.07.2025 இல் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தையும் வரதராஜப்பெருமாள் சந்தித்துப்பேசியிருக்கிறார். அதற்கு அப்பால், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் உட்பட வேறு சிலரையும் சந்தித்துப்பேசியிருக்கிறார். 

இந்தச் சந்திப்புகள் தொடர்பாக வரதராஜப்பெருமாளுடன் பேசியபோது, தன்னுடைய இந்தப்பயணமும் சந்திப்புகளும் தேர்தல் அரசியல், கட்சி அரசியல் போன்றவற்றுக்கு அப்பாலானது. தேர்தல் அரசியலிலும் கட்சி அரசியலிலும் தனக்கு இப்பொழுது ஆர்வமில்லை. அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள், கட்சிகள் பற்றித் தான் எத்தகைய விமர்சனங்களையும் கருத்துகளையும் சொல்லப்போவதில்லை என்று கூறினார். மேலும் தன்னுடைய ஆர்வமும் நிலைப்பாடும், மாகாணசபைத் தேர்தலை வலியுறுத்துவது, மாகாணசபையை வினைத்திறனுள்ளதாக, ஆற்றல் மிக்கதாக வலுப்படுத்துவது, தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை – அதற்கான செயற்பாட்டு முனைப்பை அதற்குரிய தரப்புகளிடம் பேசி, இணைந்து செயற்பட்டுக்கூர்மைப்படுத்துவது போன்றதே என்றார். 

மாகாணசபையை வலுவாக்கம் செய்வதைப் பற்றிப் பேசினாலும் சமஸ்டி, தனிநாடு போன்றவற்றைப் பேசுவோர், அதற்காகச் செயற்படுவோரை தாம் மறுக்கப்போவதில்லை. அவற்றைத் தான் வரவேற்கிறேன். சமஸ்டியோ தனிநாடோ கிடைக்குமாக இருந்தால் எதை யார்தான் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறார் வரதராஜப்பெருமாள். 

ஆனால், அது கிட்டும் வரையில் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவையாக, வினைத்திறன் மிக்கவையாக இயங்க வைப்பது அவசியம். ஏனென்றால் இப்போதுள்ள சூழலில் தமிழ் பேசும் மக்களுடைய பாதுகாப்பு, முன்னேற்றம், சுயாதீனம் போன்றவற்றுக்கு மாகாணசபைகள்தான் யதார்த்தமாக உள்ளன. மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறிப்பாக ஜனாதிபதியை மையப்படுத்திக் குவிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மாகாண சபைகள்தான் பகிரக்கூடிய பொறிமுறையாக உள்ளது. எங்கே அதிகாரம் குவிக்கப்படுகிறதோ, அங்கே ஊழல் தொடக்கம் அதிகார துஸ்பிரயோகங்கள் வரையில் அத்தனை பிரச்சினைகளுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதிகாரங்களைப் பகிரும்போது ஒன்றை ஒன்று கட்டுப்படுத்திக்கொள்ளவும் கண்காணித்துக்கொள்ளவும் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. 

ஆகவேதான் நாம் மாகாணசபைகளை பல்வேறு அடிப்படைகளில் வலியுறுத்துகிறோம். இது அனைத்து மக்களுக்கும் பயன்தரக்கூடிய ஒரு கட்டமைப்பாகும். என்பதால்தான் சகல தரப்புகளோடும் இதை வலியுறுத்திய ஒரு உரையாடலைச் செய்ய விரும்புகிறேன். தமிழ், முஸ்லிம், மலையக அரசியற் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டியக்கத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர், மதகுருக்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரோடும் பேசுவதற்கு ஆர்வமாக உள்ளேன். மாகாணசபை முறைமையிலும் வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்குப் பெரிய பிரச்சினை இல்லை. ஏனென்றால், அந்த மாகாண சபைகள் பெரும்பான்மைச் சமூகமாகிய சிங்களத் தரப்பினரால் ஆளப்படுவது. சிங்களத் தரப்பே எப்போதும் ஆளும் தரப்புமாக இருப்பதால் அங்கே அதிகாரம் குறைந்திருந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. ஆனால், வடக்குக் கிழக்கின் நிலை அப்படியல்ல. அது பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் தரப்புகளால் நிர்வகிக்கப்படுவது. இதனால் அதிகாரம் இல்லை என்றால், உரிய ஆதரவையும் ஆற்றலையும் பெறுவது கடினமாகும். இதைக்குறித்து நாம் தெளிவாக உரையாடி வேண்டியுள்ளது.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினை என்பது இலங்கையின் தீராத அரசியல் நெருக்கடியாக நீண்டு செல்கிறது. அரசியல் நெருக்கடி இருக்கும் வரையிலும் பொருளாதார நெருக்கடியும் இருக்கும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இதை வெறுமனே நல்லிணக்கம், சமாதானம் போன்ற வார்த்தைகளால் தீர்த்து விட முடியாது. அதற்கப்பால் பாதிக்கப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் திருப்தி அடையக் கூடிய, நம்பிக்கை கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் முக்கியம். 

அரசியற் தீர்வுக்கு முன்பு, அவ்வாறான நடவடிக்கைகளை – அதாவது நம்பிக்கை அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அதைத் தாராளமாகச் செய்யலாம். அதையும் நாம் வலியுறுத்த வேண்டும். நடைமுறைச் சாத்தியமான நல்லிணக்கம் என்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல், எத்தனை தடவை அந்தச் சொற்களை உச்சரித்தாலும் நல்லிணக்கமோ சமாதானமோ கிட்டாது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் உச்சரிக்கப்படுகிறது. நேர்மையாகச் சொல்லுங்கள். எந்தச் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஆகவேதான் நடைமுறைகளே எதையும் தீர்மானிக்கின்றன என்பதை நாம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக பொருத்தமானதொரு அரசியல் யாப்பைக் குறித்த உரையாடல்களை நாம் செய்ய வேண்டும். இதையெல்லாம் கட்சி அரசியலுக்கு அப்பால், சமூக ஒருங்கிணைப்போடு செய்யலாமா என்று முயற்சித்துப் பார்ப்பதே தன்னுடைய நோக்கமாகும் எனமேலும் சொல்கிறார் வரதர். 

அரசியற் தீர்வுக்கு முன்பு, அவ்வாறான நடவடிக்கைகளை – அதாவது நம்பிக்கை அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அதைத் தாராளமாகச் செய்யலாம். அதையும் நாம் வலியுறுத்த வேண்டும். நடைமுறைச் சாத்தியமான நல்லிணக்கம் என்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல், எத்தனை தடவை அந்தச் சொற்களை உச்சரித்தாலும் நல்லிணக்கமோ சமாதானமோ கிட்டாது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் உச்சரிக்கப்படுகிறது. நேர்மையாகச் சொல்லுங்கள். எந்தச் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது.  அறுதியிட்டுக் கூற முடியாது. “இருந்தாற்போல திடீரென்று ஏதோ ஞானோதயம் கிடைத்ததைப்போல வந்து நிற்கிறார். இதற்கான பின்னணி என்ன? உண்மையான நிலவரம் என்ன?” என்று சிலர் குழம்பக்கூடும். 

எல்லாவற்றுக்கும் அப்பால், தன்னுடைய முதிர்வு, அரசியல் அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் தன்னால் முடிந்தவற்றை, தனக்குத் தெரிந்தவற்றையும் தனக்குரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் தமிழ் பேசும் மக்களுக்கும் இலங்கைத்தீவுக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்று உண்மையாகவே வரதர் வந்திருக்கலாம். உண்மையான ஈடுபாட்டின் விளைவாகவே அவருடைய முயற்சிகள் இருக்கலாம். 

வரதர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள விருப்பத்தையும் அந்த மெய்யான நோக்கத்தையும் சந்தேகித்தோ சந்தேகிக்காமலோ யார் யாரெல்லாம் பேசப்போகிறார்கள்? அவர் சொல்வதிலுள்ள நியாயங்களை யார் யாரெல்லாம் புரிந்து கொள்ளப்போகிறார்கள், ஏற்றுக் கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும்.

ஆனால், வரதருடைய இந்தச் சந்திப்புகளைக் குறித்தும் இந்த உரையாடல் முயற்சிகளைப் பற்றியும் ஒரு நேர்மறையான தோற்றமே – அணுகுமுறையே – இதுவரையிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு – உரையாடல்கள் –  பற்றிய முதல் ஊடகச் செய்திகளும் வரவேற்கக் கூடியவையாகவே உள்ளன. இந்தப் பத்தியாளர் கவனப்படுத்த விரும்புவது, எதிரும் புதிருமாக இருந்த பல தரப்புகள் தமக்கிடையில் இணக்கங்களைக் கண்டு வரும் ஒரு சூழல் மலர்ந்து வருகிறது. துரோகி – தியாகி என்ற பிரிவுக்கோடு மெல்ல அழிந்தோ மங்கியோ வருவதாகத் தோன்றுகிறது. மூத்தவர்கள், அனுபவஸ்தர்கள் யதார்த்த நிலையை உணர்வதாகத் தெரிகிறது. அதாவது பலரிடத்திலும் ஒரு சிறிய மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதொரு தொடக்க நிலைதான். ஆனால், வரவேற்கக் கூடிய தொடக்கம். 

அந்த வகையில் வரதர் எடுத்துள்ள முயற்சி வரவேற்க வேண்டியது. கட்சி, இனம், மதம், பிரதேசம் என்ற எந்த வேறுபாடும் பாரபட்சமும் இல்லாமல் அனைத்துத் தரப்பினரோடும் பேசுவதற்கு தான் முயற்சிக்கிறேன் என்பது வரவேற்க வேண்டியதே. எப்போதும் உரையாடல்கள் முக்கியமானவை. அதில் தயக்கங்களும் தாமதங்களும் விடுபடல்களும் புறக்கணிப்புகளும் தேவையில்லை. இந்த உலகம் உரையாடல்களினால்தான், இணக்கங்களினால்தான் ஏராளம் விடயங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது; சாதித்திருக்கிறது. 

இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் வரதர் புரிந்திருப்பது நல்லது. அதனால்தான் அவர் தானாகவே முன் வந்து எல்லோருடைய கதவுகளையும் தட்டுகிறார். எல்லோருடைய கைகளையும் குலுக்குகிறார். எல்லோருடனும் ஒரு தேநீரைப் பருகவும் பகிரவும் தயாராக இருக்கிறார். 

வரதராஜப்பெருமாளுடைய அரசியல் வரலாறும் அனுபவமும் நீண்டது, பரந்தது. எந்த வரலாறும் நேர்கோட்டில் பளிச்செனத் துலங்கிச் செல்வதில்லை. பல நூறு சுழிப்புகளையும் முடிச்சுகளையும் ஏற்ற இறக்கங்களையும் இருளையும் ஒளியையும் தன்னுள் கொண்டே வரலாறு நகர்கிறது. வரதருடைய அரசியல் வரலாறும் இந்த அடிப்படையிலானதுதான். வரதருடையது மட்டுமல்ல, அனைவருடையதும் அப்படியானதுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1970 களின் தொடக்கத்திலிருந்து இன்று வரையான தன்னுடைய அரசியல் வரலாற்றில், போராட்டம், சிறை, வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர், தலைமறைவு வாழ்க்கை எனப் பலதையும் சந்தித்தவர் வரதராஜப்பெருமாள். மாகாணசபை முறைமையைப் பற்றிய தெளிவான அறிவும் அனுபவமும் வரதருக்குண்டு. அரசியலமைப்பு மற்றும் பொருளாதார அடிப்படைகளைப் பற்றிய புரிதலும் அறிவும் கொண்டவர். கூடவே இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான நேரடி அனுபவத்தையும் அறிவையும் கொண்ட இந்தியாவின் இறுதித் தலைமுறையுடன் தொடர்பும் பரிச்சயமும் உள்ளவர்களில் ஒருவர். இலங்கைச் சூழலிலும் அறியப்பட்ட ஓர் அரசியல் ஆளுமை. இத்தகைய ஒருவர் கட்சி அரசியல், தேர்தல் அரசியல் போன்றவற்றுக்கு அப்பாலான அரசியல் இயக்கமொன்றை (Political movement) பற்றிச் சிந்திப்பது இன்றைய சூழலில் நல்லதே. 

பலருடனும் பேசி, உரையாடி, விவாதித்து, பொருத்தமான அடிப்படைகளை உருவாக்குவதைப்பற்றிய இத்தகைய அரசியல் முன்னெடுப்பு – அரசியற் பண்பாடு – நம்மிடையே வளர்ந்து செழிக்க வேண்டும். எத்தகைய எதிரெதிர் நிலைப்பாடு, கோட்பாடு, கொள்கை போன்றவற்றோடு இருந்தாலும் பரஸ்பரப் புரிதலோடு பேசிக் கொள்வது அவசியமானது. கைகளைப் பற்றிக் குலுக்கி, முகத்தை முகம்  நேரில் பார்த்து, நெகிழ்ச்சியோடு தொடர்ந்து உரையாடும்போது பரஸ்பர நெருக்கமும் புரிதலும் ஏற்படும். 

பேச்சுகளில் – உரையாடல்களில் ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு தரப்புக்கும் உள்ளோட்டங்களும் தனியான நிகழ்ச்சி நிரலும் இருக்கலாம். அல்லது உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே சம்பிரதாயமாக வேறொன்றைப் பேசலாம். எதுவாயினும் பரவாயில்லை. முதலில் சந்திப்பதும் பேசுவதும் அவசியமானது. அதொரு சிறந்த பண்பாடு. உயர்ந்த நாகரீகம். 

பேசாதிருப்பது, முகத்தைத் திருப்பிக் கொள்வது, தனிமைப்படுவது, தனிமைப்படுத்துவது எல்லாம் பயனற்றவை. கீழ்மையானவை. தீங்கானவை. இதனால் நாம் சந்தித்த இழப்புகளும் பின்னடைவுகளும் ஏராளம்.

தமிழ் அரசியலில், ஊடகத்துறையில், இலக்கியவெளியில், சமூக நிலையில்  மட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் ஏறக்குறைய தடைகள் – விலக்கல்கள், விலகல்கள், ஒதுக்கங்கள், ஒதுங்குதல்கள்தான் நீண்ட வரலாறாகும். அந்த வரலாற்றை மாற்றுவது – மாற்றி எழுதுவது நல்லது. அவசியமானது. 

மாற்றத்துக்கான எத்தனையோ முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் பலரும் முன்னெடுத்திருக்கிறார்கள். இதுவரையில் எதுவும் சாத்தியமானதில்லைத்தான். ஆனாலும் அதைக் கை விட முடியாது. ஏனென்றால், மாற்றம் வேண்டும். மாற்றம் ஒன்றே வேண்டும். மாற்றத்துக்காகவே இந்த உலகம் இடையறாது பாடுபடுகிறது.

https://arangamnews.com/?p=12166

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.