Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

படக்குறிப்பு, இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர்கள் குறித்த சித்தரிப்புகள் அவ்வபோது சர்ச்சையாகி வருகின்றன.

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 16 ஆகஸ்ட் 2025, 08:00 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'கிங்டம்' எனும் தெலுங்கு திரைப்படத்தில், இலங்கை தமிழர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது.

'கிங்டம்' திரைப்படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் 'முருகன்'. இலங்கையின் ஒரு தீவையும் அதில் வாழும் பழங்குடி மக்களையும் கட்டுப்படுத்தும் ஒரு தமிழ் குடும்பத்தின் வாரிசாக இந்த 'முருகன்' கதாபாத்திரம் இருக்கும்.

இந்த பழங்குடி மக்கள் 1920இல் இந்தியாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) குடிபெயர்ந்து இலங்கை வந்தவர்கள் என்று காட்டப்படும். மிகவும் கொடூரமான வில்லனாக சித்தரிக்கப்படும் இந்த முருகனைக் கொன்று, தன் பழங்குடி மக்களை கதாநாயகன் எப்படி மீட்கிறான் என்பதே கிங்டம் படத்தின் கதை.

'கிங்டம்' திரைப்படம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அதன் தயாரிப்பு நிறுவனம், "தமிழ் மக்களின் உணர்வுகள் ஏதேனும் புண்பட்டு இருந்தால் மிகவும் வருந்துகிறோம்" என்று அறிக்கை வெளியிட்டது.

இந்தியத் திரைப்படங்களில் இலங்கைத் தமிழர்கள் குறித்த சித்தரிப்புகள் சர்ச்சையாவது இது முதல்முறையல்ல.

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

பட மூலாதாரம், YOUTUBE

படக்குறிப்பு, ஜாட் திரைப்படத்தின் வில்லன் முத்துவேல் கரிகாலனாக பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா நடித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'ஜாட்' எனும் பாலிவுட் திரைப்படத்திலும் வில்லன் இலங்கை தமிழராக சித்தரிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது.

'ஜாட்' திரைப்படத்தின்படி, "இலங்கையைச் சேர்ந்த முத்துவேல் கரிகாலன் 'ஜாஃப்னா டைகர் ஃபோர்ஸ் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர்'. 2009 ஈழப்போருக்குப் பிறகு தனக்கு கிடைத்த பெரும் அளவிலான தங்கத்தோடு இந்தியா சென்று, ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவனை வீழ்த்தி, அந்த கிராம மக்களை ஒரு இந்திய ராணுவ வீரர் எப்படி மீட்கிறார்" என்பதே கதை.

"தமிழ் திரைப்படங்களில் கூட இலங்கைத் தமிழர் குறித்து முறையான சித்தரிப்புகள் இல்லை, பின்னர் எப்படி பிறமொழி இயக்குநர்களிடம் அதை எதிர்பார்க்க முடியும்" என்கிறார் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாய்வாளர் தியடோர் பாஸ்கர்.

"இலங்கை தமிழர்கள் என்றாலே, ஈழத் தமிழர்கள் மட்டும் தான் என்று திரைப்படத் துறையினர் மட்டுமின்றி, சாமானிய மக்கள் கூட நினைக்கின்றனர். மலையகத் தமிழர்கள் போல, அங்கு வேறு சில பிரிவுகள் இருக்கின்றன. தமிழில் 2002இல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் கூட ஈழத்தமிழர் வாழ்க்கையை சரியாகச் சித்தரிக்காமல், விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்தியே அவர்களை சித்தரித்தது. இனிவரும் படங்களிலாவது ஈழப்போர், விடுதலைப் புலிகள் போன்ற விஷயங்களைக் கடந்து அவர்களை நாம் அணுக வேண்டும்." என்கிறார் தியடோர் பாஸ்கர்.

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

பட மூலாதாரம், YOUTUBE

படக்குறிப்பு, 'ஈழம்' குறித்த சித்தரிப்புக்காக கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்தன.

இலங்கைத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இலங்கை மலையகத் தமிழரும், சில இந்திய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவருமான நாராயணன் ரொஹான், ''போர் நடைபெற்ற காலத்திலிருந்து இன்று வரை ஈழத் தமிழர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்னைகளை, இந்திய சினிமாவிலுள்ளவர்கள் நேரடியாகப் பார்த்ததில்லை. செய்திகளில் பார்க்கும், படிக்கும் அல்லது யாராவது சொல்கின்ற விஷயங்களை வைத்துக் கொண்டு இப்படி தான் ஈழத் தமிழர்கள் இருப்பார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் உள்ளது." என்கிறார் நாராயணன்.

"முக்கியமான விஷயம் என்னவென்றால், ஈழத் தமிழர்களை பரிதாபமாக சித்தரிப்பது தான். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை, அடக்குமுறையிலேயே இன்றும் அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற எண்ணத்திலேயே பார்க்கின்றார்கள். போர் முடிவடைந்த பின்னர் ஈழத் தமிழர்கள் ஓரளவு நல்ல நிலைமையில் வாழ்ந்து வருகின்றார்கள்.'' என அவர் கூறுகிறார்.

இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்தது என்பதைக் கருத்தில் கொண்டு, ஈழத்தமிழர்கள் குறித்த இந்திய திரைப்படங்களை 2009க்கு முன்/பின் என பிரித்துப் பார்க்கலாம். 2009க்கு முன்பு வரை தமிழில் தான் ஈழம் குறித்த படங்கள் ஒப்பீட்டளவில் அதிகம். புன்னகை மன்னன் (1986), உனக்காகப் பிறந்தேன் (1992), தெனாலி (2000), நந்தா (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002), ஆணிவேர் (2006), ராமேஸ்வரம் (2007) ஆகிய திரைப்படங்களில் ஈழத்தமிழர்கள் பிரதான கதாபாத்திரங்களில் இடம்பெற்றிருந்தனர்.

குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், 6 தேசிய விருதுகளை வென்றது. ஆனால், ஈழத்தமிழர்கள் குறித்த சித்தரிப்புக்காக மட்டுமல்லாமல், ஈழப்போர் மற்றும் விடுதலை புலிகள் இயக்கம் குறித்த காட்சிகளுக்காகவும் இப்படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தன.

2009க்கு முன் வெளியான 'தி டெர்ரரிஸ்ட்', 'காற்றுக்கென்ன வேலி', 'குற்றப்பத்திரிக்கை' போன்ற தமிழ் திரைப்படங்களும், 'சயனைடு', 'மிஷன் 90 டேஸ்' போன்ற பிற இந்திய மொழி திரைப்படங்களும் விடுதலைப் புலிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்துப் பேசின.

"கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் ஈழத்தமிழர்கள் குறித்த கதை என்று சொல்லிவிட்டு, மலைகளையும், அருவிகளையும் கொண்ட ஒரு நிலப்பரப்பை காண்பித்தார்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். அதுபோன்ற ஒரு நிலப்பரப்பே அங்கு கிடையாது." என்கிறார் 'ஆணிவேர்' (2006) திரைப்படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன்.

"ஆணிவேர் திரைப்படம் ஈழத்தில் எடுக்கப்பட்டது. படத்தில் நடித்தவர்கள் கூட அங்கு வசித்தவர்களே. அதனால் தான் ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சமூகங்களிடம் அது நல்ல வரவேற்பைப் பெற்றது."

"ஈழத்தமிழர்கள் தொடர்புடைய படம் என்றால் கண்டிப்பாக இலங்கைக்குச் சென்று பார்த்துவிட்டு வர வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் குறைந்தபட்சம் இணையத்திலாவது அடிப்படை ஆராய்ச்சிகளை செய்துகொள்ள வேண்டும் அல்லவா?" என்று ஜான் மகேந்திரன் கேள்வியெழுப்புகிறார்.

'கிங்டம்' படம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

"தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது மற்றும் படத்தின் 'பொறுப்புத் துறப்பு பகுதியில்' இது குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால், அந்த சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். படத்தை ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

பட மூலாதாரம், JOHN MAHENDRAN

படக்குறிப்பு, 'ஆணிவேர் திரைப்படம் ஈழத்தில் எடுக்கப்பட்டது. படத்தில் நடித்தவர்கள் கூட அங்கு வசித்தவர்களே' என்கிறார் திரைப்படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன்

இலங்கை உள்நாட்டு போருக்குப் பிறகு வெளியான இந்தியத் திரைப்படங்கள்

2009க்குப் பிறகு வெளியான சில திரைப்படங்கள் ஈழப்போரின் தாக்கம் குறித்தும், ஈழத்தமிழர்களுக்கு அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பேசின. உதாரணமாக, ஆண்டவன் கட்டளை (2016), ஜகமே தந்திரம் (2021) போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம்.

இந்த காலக்கட்டத்தில், ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மெட்ராஸ் கஃபே திரைப்படம் (2013) மற்றும் 2021இல் வெளியான ஃபேமிலி மேன் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்திற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், இவை விடுதலைப் புலிகள் குறித்த சித்தரிப்புக்காக சர்ச்சைகளை எதிர்கொண்டன.

மெட்ராஸ் கஃபே திரைப்பட சர்ச்சையின் போது பிபிசியிடம் பேசிய அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும், கதாநாயகனுமான ஜான் ஆபிரகாம், "இது தமிழர்களுக்கு ஆதரவான படம் என்று நான் நம்புகிறேன், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதற்காக அல்லது சர்ச்சையை ஏற்படுத்தி விளம்பரம் பெறுவதற்காக படத்தை உருவாக்கவில்லை," என்று தெரிவித்திருந்தார்.

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

பட மூலாதாரம், YOUTUBE

படக்குறிப்பு, 'மெட்ராஸ் கஃபே தமிழர்களுக்கு ஆதரவான படம்' என தான் நம்புவதாக, படத்தின் தயாரிப்பாளர், கதாநாயகன் ஜான் ஆபிரகாம் கூறியிருந்தார்.

'ஈழத் தமிழர்களை சித்தரிக்கும் விதம் கவலையளிக்கிறது'

"இலங்கை குறித்து இதுவரை வெளியான இந்தியத் திரைப்படங்களில் இருக்கும் ஒற்றுமை என்பது இவை ஈழத்தமிழர்கள் அல்லது ஈழம் குறித்து மட்டுமே பேசுகின்றன. இலங்கை தமிழர்கள் என்றாலே, ஈழத் தமிழர்கள் மட்டும் தான் என்ற பிம்பம் இந்தியாவில் இருக்கிறது" என்று கூறுகிறார் நாராயணன் ரொஹான்.

''ஈழத் தமிழர்கள் வேறு, மலையகத் தமிழர்கள் வேறு. அதுமட்டுமின்றி, நிறைய வகையான தமிழ் உச்சரிப்புகளை பேசக்கூடிய தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் இந்தியாவிலுள்ள பலருக்கு தெரியாது. இலங்கை என்றாலே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படும் தமிழ் உச்சரிப்பை தான் பேசுவோம் என்ற பிம்பமும் உள்ளது." என்கிறார்.

இந்திய சினிமாக்களில் ஈழத் தமிழர்களை சித்தரிக்கும் விதம் பெரும் கவலையளிப்பதாக ஈழ எழுத்தாளர் தீபச் செல்வன் கூறுகிறார்.

''ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரிக்கின்ற, வன்முறை ஈடுபாடு கொண்டவர்களைப் போன்று சித்தரிக்கின்ற விதமாக இந்தியாவில் சில படங்கள் எடுக்கப்படுகின்றன. விடுதலைப் புலி ஆதரவாளர்களாக இந்திய சினிமாக்களில் ஈழத் தமிழர்கள் காட்டப்படுகிறார்கள். அதேசமயம், விடுதலைப் புலிகளை தவறான விதத்தில் சித்தரிக்கும் வகையிலும் அந்த படங்கள் அமைந்திருக்கும். அப்படியிருக்க, அது அடுத்த தலைமுறையைப் பாதிக்கிறது. திரைப்படங்களில் விடுதலைப் புலிகளை பற்றி பேச வேண்டிய தேவை தற்போது கிடையாது" என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ''அந்த அமைப்பு 2009ஆம் ஆண்டுடன் மௌனிக்கப்பட்ட அமைப்பாக காணப்படுகின்றது. இன்று இருக்கக் கூடியவர்கள் சாதாரணமான மக்கள். அந்த இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் கூட சாமானிய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள். மீண்டும் அந்த காலக்கட்டத்திற்கு போய் அவர்களை பிழையாக காட்ட வேண்டிய தேவை இல்லை." என்று கூறுகிறார்.

"தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிரச்னைகள், பொருளாதார நெருடிக்கடி சார்ந்த பிரச்னைகள், உலக நாடுகளை நோக்கி தமிழர்கள் பயணிக்க கூடிய கதைகள் எல்லாம் இருக்கின்றது. இப்படியான கதைகளை பற்றி எல்லாம் பேசலாம். பழைய விடயங்களை தேடி, அவற்றைப் பிழையாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இன்றைய தலைமுறை, இப்படியான திரைப்படங்களை விரும்புவதில்லை, அது அவர்கள் மீதான எதிர்மறையான பிம்பத்திற்கு வழிவகுக்கிறது.'' என தீபச் செல்வன் கூறுகின்றார்.

இந்திய இயக்குநர்கள் முறையான ஆராய்ச்சிக்குப் பிறகு, இலங்கையின் உண்மை வரலாறு மற்றும் தற்போதைய நிலவரம் அறிந்து திரைப்படங்கள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறார் தீபச் செல்வன்.

இலங்கையில் இந்தியத் திரைப்படங்களின் படப்பிடிப்பு

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

படக்குறிப்பு, இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மாதிஉல்வௌ

இலங்கையில் இந்திய திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளை நிர்வகித்து வரும் நிறுவனமான என்.ஈ ப்ரொடக்ஷ்ன் நிறுவனத்தின் தலைவர் ஷியா உல் ஹசன், "கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்தே ஈழத்தமிழர்கள் குறித்த தவறான சித்தரிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இங்கு படமாக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கான திரைக்கதை, திரைப்பட கூட்டுதாபனத்திற்கு வழங்கப்பட்டு, அதன் அனுமதி கிடைத்தால் தான் படப்பிடிப்பு நடத்தமுடியும். அதையும் மீறி, இலங்கையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படங்களிலும் இது நடக்கிறது என்றால் அது கவலைக்குரிய விடயம் தான்." என்கிறார்.

இலங்கையில் படமாக்கப்பட்ட 'கிங்டம்' திரைப்படமும் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பதைக் குறிப்பிட்டு பேசிய அவர், "மொழி, கலாசாரம் என பல வகையிலும் ஈழத்தமிழர் குறித்த சித்தரிப்புகள் தெளிவாக இல்லை. ஈழத்தமிழர்களை குற்றவாளிகள் போல சித்தரிப்பது போல ஒருபுறம் என்றால், அவர்கள் அனைவருமே சாப்பாட்டுக்கு கூட வழியில்லாதவர்கள் என சித்தரிப்பதும் நடக்கிறது. புலம்பெயர் தமிழர்களை கவர்வதற்கான ஒரு வியாபார தந்திரமாக இது உள்ளது." என்கிறார்.

இலங்கையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த வேண்டுமென்றால், அந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள் உள்ளிட்டவற்றை 'இலங்கை திரைப்பட கூட்டுதாபனத்திற்கு' சமர்ப்பித்து, அதற்கான கட்டணங்களை செலுத்தி, அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இலங்கையில் உள்ளது.

இதுகுறித்துப் பேசிய இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மாதிஉல்வௌ, ''இப்போதைக்கு எங்கள் குழுவில் தமிழர்கள் இல்லை. தமிழ் பேசக் கூடிய ஒருவரையேனும் எமது தயாரிப்பு குழுவில் இணைத்துக்கொள்ள நான் முயற்சி செய்து வருகின்றேன். அதிகாரிகளின் பற்றாக்குறையுடனேயே நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். இத்தகைய சர்ச்சைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்" என குறிப்பிடுகின்றார்.

இலங்கைத் தமிழ் தொடர்பான சர்ச்சை

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

பட மூலாதாரம், @MILLIONOFFL

படக்குறிப்பு, 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் பேசிய 'இலங்கைத் தமிழ்' குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன.

ஈழத் தமிழர்கள் குறித்த இந்தியத் திரைப்படங்கள் பெரும்பாலும் சர்ச்சைகளையே எதிர்கொண்டுள்ளன, அதில் ஒன்று படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பேசும் 'இலங்கைத் தமிழ்' தொடர்பான சர்ச்சை. சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்திற்கு கூட இத்தகைய விமர்சனம் எழுந்தது.

இதில் விதிவிலக்கு என்பது நடிகர் கமல்ஹாசனின் 'தெனாலி' (2000) திரைப்படம். இதில் கமல் பேசிய யாழ்ப்பாணம் தமிழ் பலரால் பாராட்டப்பட்டது. காரணம், இந்தத் திரைப்படத்திற்காக கமலுக்கு மொழிப் பயிற்சி அளித்தவர் இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அப்துல் ஹமீத், "யாழ்ப்பாணத்தின் மொழி வழக்கு, யாழ்ப்பாணத்திலேயே மாறி வந்துள்ளது. நிறைய தென்னிந்திய தமிழ் சொற்கள் எல்லாம் தமிழ் திரைப்படங்களின் ஊடாகவும், தமிழ் தொலைக்காட்சிகளின் ஊடாகவும் எங்களுடைய மொழி வழக்கில் கலந்துள்ளன. யாழ் மொழி வழக்கு என்ற தனித்துவமான மொழி வழக்கு இப்போது இல்லை." என்றார்.

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

பட மூலாதாரம், B.H.ABDUL HAMEED/FACEBOOK

படக்குறிப்பு, 'தெனாலி' திரைப்படத்திற்காக கமலுக்கு மொழிப் பயிற்சி அளித்தவர் இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்.

"தெனாலி படத்தில் கமல் பேசிய யாழ்ப்பாணம் தமிழ், முழுமையானது அல்ல. உதாரணத்திற்கு, 'நீங்கள் சத்தி எடுக்கேக்க' என்று ஒரு வசனம் வைக்கவேண்டும். அப்படி சொல்லும் போது சத்தி என்பதை 'சத்தியம்' என்று நினைத்தார்கள். அப்போது அந்த சொல்லை தமிழுக்கேற்ப 'வாந்தி' என்று மாற்றினோம். இப்படி, ஆங்காங்கே தமிழ்நாட்டு மக்களுக்கு புரிகின்ற விதத்தில், ஓரளவு ஓசை நயம் மாத்திரம் இருந்தால் போதும் என்று முடிவுசெய்து வசனங்கள் எழுதப்பட்டன." என்று கூறுகிறார்.

"ஒரு திரைப்படம் புலம்பெயர் தமிழர் வசிக்கும் நாடுகளில் மட்டும் வெற்றிப் பெறுவதால் லாபம் கிடைக்காது. முக்கியமாக இந்தியாவில் படம் ஓட வேண்டும். அதற்காக தான் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் வசனங்கள் எழுதப்படுகின்றன. இதில் தவறொன்றும் இல்லை, மக்களுக்கு கதை புரிவது தான் முக்கியம்." என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8ry3dl8jeyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.