Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02 Sep, 2025 | 04:06 PM

image

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள்  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்று செவ்வாய்க்கிழமை (2) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடகாலம் பூர்த்தியாவதை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை தொடக்கிவைக்க  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்குக்கு  விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு, இன்று காலை புதுக்குடியிருப்பில்  தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு, நண்பகல் 1 மணியளவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்தார்.

மிக நீண்டகால கோரிக்கையாக இருந்த  வட்டுவாகல் பால நிர்வாகப் பணிகளை ஆரம்பித்துவைக்கச் சென்ற ஜனாதிபதியை  முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்  வரவேற்றிருந்தார். 

தொடர்ந்து பால நிர்மாணப் பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்துவைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர், பிரதி அமைச்சர்  உபாலி சமரசிங்க, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், ஜெகதீஸ்வரன், ரவிகரன், மதகுருமார், திணைக்களங்களின் அதிகாரிகள், தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

e96ed6cb-1d96-4bec-ac5a-17b4e1e684ad.jpg

82d0cff3-aa9f-4fe3-8bb5-424615f924d5.jpg

0f54167a-48d8-4cc3-8a24-d3de8b9b0de5.jpg

a6371d23-6356-4b3a-b5ba-7f120e82b1a5.jpg

https://www.virakesari.lk/article/224035

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போரில் பல லட்சம் தமிழர்களை காப்பாற்றிய வட்டுவாகல் பாலம் அழிக்கப்படுமா?

VADDUVAKAL BRIDGE

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

    3 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கை தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அடையாள சின்னமாக காணப்படும் முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்படுவது தற்போது பேசுப் பொருளாகியுள்ளது.

இறுதிக் கட்ட போரின் போது பல லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களை இந்த பாலம் பாதுகாத்ததாக ஈழத் தமிழர்கள் கூறி வருகின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் இந்த பாலத்தை திருத்தியமைக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்லும்போது ஒரு வாகனம் மாத்திரமே ஒரு சந்தர்ப்பத்தில் இந்த பாலத்தை கடக்க முடியும்.

அவ்வளவு குறுகிய நிலையில் இந்த பாலம் அமைந்துள்ளதுடன், கடந்த சில வருடங்களாக பாலத்தின் பல இடங்களில் உடைப்புக்களை அவதானிக்க முடிந்தது.

நாளொன்றிற்கு சுமார் 3000 வரையான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றமையினால், இந்த பாலத்தில் புனரமைப்பானது இன்றைய சூழ்நிலையில் அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது.

இதனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் இந்த பாலத்தை புதுபித்து நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட பின்னணியில், தமது வரலாற்று சான்றை இல்லாதொழிக்க வேண்டாம் என தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வட்டுவாகல் பாலம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நோக்கி செல்லும் பிரதான வீதியில் நந்தி கடலை ஊடறுத்து இந்த வட்டுவாகல் பாலம் அமையப் பெற்றுள்ளது. சுமார் 410 மீட்டர் தூரத்தை இந்த பாலம் கொண்டமைந்துள்ளது.

முல்லைத்தீவு நகரம் மற்றும் புதுகுடியிருப்பு நகரம் ஆகியவற்றை இணைக்கும் பிரதான பாலமாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் நீடித்த உள்நாட்டு போர், 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி மௌனிக்கப்பட்டது.

இறுதி போர் முடிவடைந்த இடமாக இந்த பாலம் அமைந்துள்ள பகுதி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

முல்லைத்தீவு நகர் பகுதி பக்கத்தில் இலங்கை ராணுவத்தினரும், மறுபுறமான புதுகுடியிருப்பு பகுதி பக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளும் நிலைக் கொண்டு இறுதி போரை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த நிலையில், புதுகுடியிருப்பு பக்கத்திலேயே தமிழர்கள் நிலைத்திருந்ததுடன், புதுக்குடியிருப்பை அண்மித்துள்ள முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர் என தமிழர்கள் கூறிவருகின்றனர்.

புதுகுடியிருப்பு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த பொதுமக்கள், தமது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்குடன் இந்த வட்டுவாகல் பாலத்தை பயன்படுத்தியே ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் பிரவேசித்திருந்தனர்.

இவ்வாறு இறுதிப் போரில் பல லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு வட்டுவாகல் பாலம் பாரிய உதவிகளை வழங்கியதாக கூறப்படுகின்றது.

VADDUVAKAL BRIDGE

உள்நாட்டு போரில் இந்த வட்டுவாகல் பாலம் சேதமடைந்திருந்ததாக அந்த காலப் பகுதியில் அங்கு வாழ்ந்த மக்கள் பிபிசி தமிழிடம் கூறியிருந்தனர்.

அதேபோன்று, சுனாமியின் போதும் இந்த பாலம் சேதமடைந்திருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல், இந்த பாலத்தை அண்மித்த ஒரு பகுதியிலிருந்தே மீட்கப்பட்டிருந்ததாக ராணுவம் அந்த சந்தர்ப்பத்தில் அறிவித்திருந்தது.

தமிழர்களுக்கு இவ்வாறு பல வரலாறுகளை கூறும் பாலம் இந்த உடைக்கப்பட்டு, புது பாலம் அமைக்கப்படும் தருவாயில் உள்ளமை பேசுப் பொருளாக மாறியுள்ளது.

பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த பாலம் தொடர்பான அரசாங்கத்தின் கவனம் மீளத் திரும்பியிருந்தது.

இந்த வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதற்கு கடந்த அரசாங்கங்கள் நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும், அந்த நடவடிக்கைகள் செயற்பாட்டு ரீதியில் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையிலேயே, புதிய அரசாங்கத்தின் முயற்சியுடன் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 2-ஆம் தேதி ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஜயம் மேற்கொண்டு இந்த பாலத்தில் நிர்மாணிப் பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்த பாலத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக 1.4 பில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது 2027-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலத்தில் நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

VADDUVAKAL BRIDGE

பட மூலாதாரம், PMD SRI LANKA

படக்குறிப்பு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 2-ஆம் தேதி ஆரம்பித்து வைத்தார்.

பாலத்தை உடைக்க வேண்டாம் - முல்லைத்தீவு தமிழர்கள் கோரிக்கை

வட்டுவாகல் பழைய பாலத்தை அழிக்காது புதிய பாலம் அமைத்து தரப்படும் என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே புதிய பாலம் அமைக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் நடனலிங்கம் கோரிக்கை விடுக்கின்றார்.

''புதிய பாலம் அமைப்பதற்கு நாங்கள் பல வருடங்கள் முயற்சி செய்தோம். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் சென்ற துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தின் முன்வைத்த கேரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த வருடம் அந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த பாலம் அவ்வாறே நிரந்தரமாக இருக்க வேண்டும். எமது அடையாளத்தை அவ்வாறே விட்டு விட்டு தான், புதிய பாலம் அமைக்க வேண்டும். 300 மீட்டர் தூரத்தில் குறுக்கே ஒரு பாலம் செல்லும் என்றும், பழைய பாலம் அவ்வாறே இருக்கும் என்றும் தான் எங்களுக்கு சொல்லப்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் பழைய பாலம் அழிக்கப்படாது என கூறினார்கள். பாலத்தை உடைக்காது பார்த்துக்கொள்ள வேண்டும். எங்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். எமக்கு சொன்ன உறுதிமொழிக்கு அமைய தான் அவர்கள் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.'' என அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவிக்கின்றார்.

VADDUVAKAL BRIDGE

பட மூலாதாரம், ANNALINGAM

படக்குறிப்பு, அன்னலிங்கம் நடனலிங்கம், வட்டுவாகல்

புதிய பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு இல்லை என்ற போதிலும், வரலாற்றை அழிக்காத வகையில் பழைய பாலம் பாதுகாக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவைச் சேர்ந்த செல்லையா யோகேந்திரராசா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதை நாங்கள் நூறு வீதம் வரவேற்கின்றோம். அது எங்களுக்கு தேவையான ஒரு பாலம். பல ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் பயணம் செய்கின்றார்கள். இந்த பாலத்தில் நிறைய வரலாறு பொறிக்கப்பட்டிருக்கின்றது. பாலத்தை முழுமையாக உடைப்பதற்கு எங்களுடைய மக்களுக்கு விருப்பம் இல்லை. புதிய பாலம் செய்வதற்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், பழைய பாலம் பாதுகாக்கப்பட வேண்டும்.'' என குறிப்பிடுகின்றார்.

VADDUVAKAL BRIDGE

படக்குறிப்பு, செல்லையா யோகேந்திரராசா, முல்லைத்தீவு

தமிழர்களின் அடையாளமாக விளங்கும் வட்டுவாகல் பாலத்தை இல்லாது செய்து, புதிய பாலத்தை அமைக்க இடமளிக்க மாட்டோம் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் தெரிவிக்கின்றார்.

பழைய பாலம் அவ்வாறே பாதுகாக்கப்பட்டு, அதனை அண்மித்து புதிய பாலம் அமைக்கப்பட வேண்டும் எனவும், தமிழர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''வட்டுவாகல் பாலம் என்பது 75 வருடங்களுக்கு மேலாக வரலாற்றை கொண்ட பாலம். இறுதி போரில் எல்லா மக்களும் அதனூடாக சென்ற பாலம். இறுதி போருக்கு அடையாளமாக, எச்சமாக இருக்கும் ஒரே ஒரு இடம் அந்தபாலம் மட்டும் தான்.

அபிவிருத்தி என்ற போர்வையில் அடையாளங்கள் இல்லாது செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டுவாகல் பாலம் கடைசி போரில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் ஆதாரமாக பார்க்கின்றோம்.

இப்போதுள்ள பாலத்தை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது. பழைய பாலம் உடைக்கப்பட்டு, புதிய பாலம் அமைக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு நடந்தேறிய அநீதிகளுக்கு அடையாளம் இல்லாது போய்விடும். இருக்கின்ற பாலத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.'' என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் கூறுகின்றார்.

வட்டுவாகல் பாலம் உடைக்கப்படுமா?

VADDUVAKAL BRIDGE

படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

ஈழத் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் வட்டுவாகல் பாலம் முழுமையாக உடைத்து அகற்றப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

புதிய பாலம் நிர்மாணிக்கப்படும் சந்தர்ப்பத்தில், பழைய பாலத்தின் ஒரு பகுதி மாத்திரம் சேதப்படுத்தப்படும் எனவும், பழைய வட்டுவாகல் பாலம் தமிழர்களின் அடையாள சின்னமாக பாதுகாக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

''பழைய பாலத்தை முற்று முழுதாக உடைத்து விட்டு புதிய பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஒரு கருத்து நிலவியது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த புதிய பாலம் இவ்வாறு தான் நிர்மாணிக்கப்படுகின்றது என வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நேரடியாக விளக்கங்கள் வழங்கப்பட்டன. அந்த கூட்டத்திலேயே நான் மறுத்திருந்தேன். பழைய யாழ்ப்பாண நூலகம் இப்படி தான் இருந்தது என்பதை எமது புதிய சந்ததியினருக்கு காட்டக்கூடியதாக இல்லை" என்று அவர் கூறினார்.

மேலும், " புதிய நூலகம் தான் இருக்கின்றது, பழைய நூலகத்தின் அடையாளங்களோ எச்சங்களோ இல்லாது போயுள்ளன. இப்படியான உதாரணங்களை சொல்லி காட்டி வட்டுவாகல் பாலம் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறியிருந்தேன். வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியாவது இருக்க வேண்டும் என்பதை ஆணித்தனமாக அன்றைய தினமே கூறியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டார்கள். ஒரு பகுதி மாத்திரம் இந்த பாலத்தில் இருக்கும். குறிப்பிட்ட சில இடங்களில் புதிய பாலம் அமைக்கும் போது இடையில் அழிக்க வேண்டி வரும். அந்த பாலம் நிச்சயம் இருக்கும் என்பதை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறிப்பிட்டனர். பிரதி அமைச்சர், மாவட்ட செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் போது விளக்க படங்களும் காண்பித்து இந்த கருத்து சொல்லப்பட்டது. தனிப்பட்ட ரீதியிலும் என்னிடம் உறுதி வழங்கப்பட்டது. சபையிலும் உறுதி வழங்கப்பட்டது'' என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரை தொடர்புக் கொள்ள பல முறை முயற்சி செய்த போதிலும், அவரிடம் இருந்து பதில் பெற முடியவில்லை

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் விடயம் தொடர்பில் வினவிய போது, அது குறித்து தலைவருடன் பேச வேண்டும் என பதில் வழங்கி இருந்தார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3dr8v423j9o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.