'விஜய் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்திற்கான தொடக்கம்' - பிபிசி தமிழுக்கு கிருஷ்ணசாமி பேட்டி
பட மூலாதாரம்,Krishnasamy
கட்டுரை தகவல்
சேவியர் செல்வகுமார்
பிபிசி தமிழ்
8 மணி நேரங்களுக்கு முன்னர்
"ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சி போலப் பார்க்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் நடக்கவிருக்கின்ற அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்று நான் கருதுகிறேன்.'' என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி:
கடந்த சில தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம், இப்போதும் அந்த கூட்டணியில் நீடிக்கிறதா? இந்த தேர்தலில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறதா?
கடந்த 2019 தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தோம். அதன்பின் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஏழு பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயரிட வேண்டும், இந்த சமுதாயத்தை பட்டியல் பிரிவிலிருந்து (SC) பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் பெயர் மாற்றம் மட்டும் ஏற்கப்பட்டதால் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தோம்.
சென்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெற்றது. அப்போது பாஜவுடன் கூட்டணியில் இருந்தால்தான் திமுக கூட்டணியை எதிர்கொள்ள முடியுமென்று கூறினோம். அதை அதிமுக ஏற்கவில்லை. அப்போதும் நாங்கள் அதிமுகவுடன் இருந்தோம். ஆனால், அதன்பின் சில மாதங்களிலேயே பாஜவுடன் மீண்டும் சேரும் முடிவை அதிமுக தலைமை எடுத்தது.''
கடந்த தேர்தலில் எங்களுடன் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளிடம் இதைப் பற்றிச் சொன்னார்களா என்று தெரியாது. ஆனால், எங்களிடம் எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதனால் நாங்கள் இப்போது இந்த கூட்டணியில் இருந்து விலகியதாகவும் இல்லை. துாரமாகப் போய்விட்டதாகவும் இல்லாமல் நாங்கள் நாங்களாக இருக்கிறோம்.''
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி மீதான அதிருப்தியால் (Anti Incumbency) மட்டுமே இரு கட்சிகளிடையே ஆட்சி மாற்றம் நடக்கிறது. மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு, கனிம வளக்கொள்ளை நிறுத்தம், வேலைவாய்ப்பு சார்ந்து கொள்கைரீதியான ஆட்சி மாற்றம் வரவேண்டுமென்று நினைக்கிறோம். அது மட்டுமின்றி, இந்தத் தேர்தலில் ஜெயித்து சட்டமன்றத்துக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கேற்ப இந்த தேர்தலில் கூட்டணி முடிவெடுக்கப்படும்.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற குரல், இந்த தேர்தலில் ஓங்கி ஒலிக்கிறது. கேரளாவைப் போல இங்கேயும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவேண்டுமென்று நீங்களும் வலியுறுத்தியிருக்கிறீர்கள். தமிழகத்தில் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ஒரே கட்சி தவெக என்பதால் அக்கட்சியுடன் புதிய தமிழகம் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா?
தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டுக்குப் பின்பு, அரசியல் மாற்றம் எதுவும் நிகழவில்லை. இரு கட்சிகள்தான் மாறிமாறி ஆளுகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. கடந்த 2006–2011 இடையிலான காலத்தில் திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலும், ஆட்சிக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி முயன்றும் அமைச்சரவையில் பங்கேற்க முடியவில்லை.
இப்போதும் இந்த கோரிக்கையை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாகப் பேச மறுப்பது வருத்தமாக உள்ளது. கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தந்ததால் அந்த ஆட்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. நன்றாகத்தான் ஆட்சியும் நடந்தன, நடக்கின்றன. இங்கு மட்டும் அந்த கட்சிகள் அதை பேச மறுப்பது ஏனென்று தெரியவில்லை.
கூட்டணி ஆட்சி என்பதை திமுக, அதிமுக இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சியைப் போலப் பார்க்கின்றன. சமூகநீதி என்று வாயில் மட்டும் பேசக்கூடாது. சமூகநீதி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். இந்த தேர்தலில் எந்தக் கட்சியும் தனித்து பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை. அந்த வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்றே கருதுகிறேன்.
சமீபத்திய ஆண்டுகளில் மாநில உரிமைகள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளில் நீங்கள் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக தெரிவித்த பல கருத்துகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின... இதற்கு உங்கள் கட்சியில் எதிர்ப்பு எழவில்லையா... உண்மையிலேயே மாநில உரிமைகளில் பாஜக அரசு சரியாக நடந்துகொள்கிறதா?
மாநில உரிமைகள் சார்ந்த பிரச்னைகளில் மத்திய பாஜக அரசு முழுமையாக நியாயமாக நடந்துகொள்கிறது என்றோ, அனைத்திலும் அநியாயமாக நடந்துகொள்கிறார்கள் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால், அனைத்து விஷயங்களிலும் திமுக அரசியல் மட்டுமே செய்கிறது என்பதுதான் என் குற்றச்சாட்டு. கடந்த 2021 கோவிட் காலத்துக்குப் பின்பு, நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயன்றபோது மத்திய அரசை தமிழகத்தில் கண்டித்த ஒரே கட்சி நாங்கள்தான்.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை துவங்கும் முன்பே தமிழகத்தில் 8 தொகுதி போய்விடுமென்று திமுக பீதியைக் கிளப்பியது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் வந்தால் மொத்தமாக வாக்காளர் உரிமை போகுமென்று திமுக சொன்னதும் அரசியல்தான். ஆனால், நாங்கள் அதை ஆதரித்தோம். இப்போது திமுகதான் எஸ்ஐஆரில் அதிகமாக பங்களித்துக்கொண்டிருக்கிறது.
இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட ஒரு நாடு. இங்கே மத்திய, மாநில அரசுகள் இருந்தாலும் ஒரே நாடு என்ற வகையில் சில முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அதில் மாநில சுயாட்சி என்ற பெயரில் தமிழகத்தை தனி நாடு போன்ற உணர்வைக் காட்டி சுயமாக கொள்ளையடிப்பதும், அரசியல் செய்வதும்தான் திமுகவின் முயற்சியாக உள்ளது. அதனால்தான் நாங்கள் சில விஷயங்களில் திமுக நிலைப்பாட்டை ஆதரிப்பதில்லை.
பட மூலாதாரம்,Krishnasamy
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அனுமதி, கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சித் திட்டங்கள், கல்வி உள்ளிட்ட நிதி ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் தமிழகத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாக திமுக குற்றம்சாட்டி வருகிறதே?
நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியின் 40 எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள்... நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்றார்கள். அதைச் செய்ய முடிந்ததா? உங்கள் கடமையை சரியாகச் செய்யாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டுவதில் அர்த்தமே இல்லை.
மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதி அனைத்தையும் இந்த அரசு சரியாகப் பயன்படுத்துவதும் இல்லை. பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர ஆந்திரா, தெலங்கானா அரசுகள் தனி பட்ஜெட் போடுகின்றன. இங்கே ஏன் அதைச் செய்வதில்லை... பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமங்களில் குடிநீர், சாலை, மயான வசதிகள் இல்லை.
கிடைக்கின்ற நிதியைச் சரியாகப் பயன்படுத்தி எல்லா திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி, அடித்தட்டு மக்களுக்கும் உரியவை கிடைக்கச் செய்துவிட்டு, நிதி போதவில்லை என்று கேட்டால் அதை ஆதரித்து நாங்களும் குரல் கொடுக்கத் தயாராகவுள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு நல்ல திட்டத்தையுமே திமுக அரசு செயல்படுத்தவில்லை என்கிறீர்களா?
நல்ல திட்டம் என்பது வேறு. கவர்ச்சித் திட்டம், இலவசத்திட்டம் என்பது வேறு. திமுக அரசு கடந்த தேர்தலில் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை. நிலைத்த, நீடித்த வளர்ச்சிக்கான (Sustainable Development) எந்த திட்டத்தையும் இந்த அரசு செய்யவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு.
ஆனால் திமுக கூட்டணிதான் தற்போது பலமாக இருக்கிறது என்ற ஒரு தோற்றம் இருக்கிறதே... அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் அப்படி நினைக்கவில்லை. தவறு செய்பவர் ஒருவரின் தலைமையில் 10, 15 நல்லவர்கள் சேர்ந்தாலும், தலைமையில் இருப்பவர் தவறானவராக இருந்தால் மற்றவர்களையும் மக்கள் அப்படித்தான் பார்ப்பார்கள். முதல் எண் பூஜ்யம் என்றால் அதன்பின் வரும் எல்லாமே பூஜ்யம்தான். ஆட்சியின் மீதான அதிருப்தி என்பதைத் தாண்டி திமுக அரசு செய்யத் தவறிய பல விஷயங்களால் மக்களுக்கு கோபம் இருக்கிறது.
தமிழக அரசியலில் விஜய் வருகை, அவரது கட்சியின் கொள்கை, அவருக்கு கிடைக்கும் வரவேற்பு ஆகியவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்... விஜய் கட்சியின் வளர்ச்சி, எந்தக் கட்சியின் வாக்குவங்கிக்கு ஆபத்தாக மாறுமென்று நினைக்கிறீர்கள்?
தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் உண்மையான கொள்கை என்று எதுவும் கிடையாது. திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ் கட்சிகள் பேசும் கொள்கை வேறு, நடந்து கொள்ளும் விதம் வேறு. விஜய் தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வர வேண்டுமென்று நினைக்கிறார். அவருக்கு எவ்வளவு வாக்கு கிடைக்குமென்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால், அவர் அபரிமிதமான மக்கள் செல்வாக்குடன் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
தமிழகத்தில் தனி நபராக, ஒரு புதிய கட்சியைத் துவக்கியிருக்கிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வீசப்பட்டாலும் அவை எல்லாமே அவருக்கு சாதகமாக மாறுவதைத்தான் நான் பார்க்கிறேன். அதனால் அவர் மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியைப் பிரிப்பார் என்று மட்டும் பார்க்க முடியாது. மாறாக அவரே ஒரு பெரும் அரசியல் சக்தியாக வளர்கிறார் என்பதாகத்தான் தெரிகிறது.
பட மூலாதாரம்,TVK
விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற சில கட்சிகள் எம்.பி., எம்எல்ஏக்கள் என்று வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சிக் கட்டமைப்பும் வாக்குவங்கியும் ஒரு கட்டத்தைத் தாண்டாமல் இருப்பது ஏன்?
கட்சி துவங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால், ஒரு கட்சியின் செயல்பாட்டையும், மதிப்பையும், மக்களிடமுள்ள மரியாதையையும் அப்படிப் பார்க்கக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை மட்டும் வைத்து ஒரு கட்சியின் வளர்ச்சியை மதிப்பிடக்கூடாது.
கடந்த 1995 ஆம் ஆண்டில் கொடியங்குளம் கொடுமையை உலகறியச் செய்ததில் துவங்கி எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்து, எத்தனையோ சாதனைகளை புதிய தமிழகம் செய்திருக்கிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 5 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வெறும் 65 ரூபாய் சம்பளத்திலிருந்து 450 ரூபாய் சம்பளத்தைக் கொண்டு வந்தது புதிய தமிழகம் கட்சியின் செயல்பாட்டால் ஏற்பட்ட விளைவுதான்.
தமிழகத்திலுள்ள ஒரு லட்சம் கிராமங்களில் 40 ஆயிரம் கிராமங்களில் டீக்கடைகளில் பட்டியலின மக்கள் சமமாக நடத்தப்படாமல் இருந்த இரட்டைக்குவளை முறையை ஒழித்ததும் புதிய தமிழகம்தான். கண்டதேவி உட்பட கிராமக்கோவில்களில் பட்டியலின மக்கள் நுழைய முடியாத நிலையை மாற்றியதும், கிராமங்களில் பட்டியலின மக்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை உருவாக்கியதும் நாங்கள்தான்.
அரசியலில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் தவறு என்றால் தவறு என்று சுட்டிக்காட்டுவதால்தான் நாங்கள் இந்த நிலையில் இருக்கிறோம். ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்து, ஐந்தாண்டுகளுக்கு புகழ்வதாக இருந்திருந்தால் நாங்களும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்போம். அது தேவையில்லை. ஆனால் வரும் தேர்தலில் வெற்றி பெற்று புதிய தமிழகம் சட்டமன்றத்தில் இடம்பெறும்.
பட மூலாதாரம்,Krishnasamy
தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் ஆதரிக்காத அளவுக்கு, பாஜகவை நீங்கள் அதிதீவிரமாக ஆதரித்தும் உங்களுக்கான அங்கீகாரத்தை அவர்கள் தரவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?
சமீபத்தில் கூட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதும், உறுதி என்பதை அகற்றியதையும் நான் கண்டித்தேன். அதனால் மத்திய அரசை எங்கே எப்போது கண்டிக்க வேண்டுமோ அந்தளவுக்கு நான் கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பாஜவை கண்மூடித்தனமாக என்றைக்குமே நான் ஆதரித்ததில்லை.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை நான் தெளிவாகக் கூறினேன். ஏனெனில், திருப்பரங்குன்றம், பாஜகவுக்கோ, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கோ எழுதி வைக்கப்பட்டதில்லை. அந்த விவகாரத்தில் திமுகதான் உண்மையை உணராமல் கண்மூடித்தனமாக எதிர்த்தது. இறுதியில் நாங்கள் சொன்னதையே நீதிமன்றமும் சொன்னது.
தமிழ் கலாசாரம், பாரம்பரியத்தின் அடிப்படையில்தான் இந்த விஷயத்தை நாங்கள் அணுகினோம். அதற்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தை காங்கிரஸுடனும், தமிழ் மொழிக்கான போராட்டத்தை திமுகவுடனும் பொருத்திப் பார்ப்பது எவ்வளவு தவறோ, அதேபோல வழிபாட்டு உரிமைகளை குறிப்பிட்ட கட்சியுடன் பொருத்திப் பார்ப்பதும் தவறு.
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட பின்பு அதுதொடர்பான உங்களின் முயற்சி முடிவடைந்துவிட்டதா?
மீண்டும் மீண்டும் மத்திய அரசை அணுகுவதில் பயனில்லை. அதனால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் புதிய தமிழகம் பங்கேற்கும் நிலை வரும்போது, 'தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பட்டியலினப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, ஓபிசி பட்டியலில் இணைக்கப்படுகிறது' என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி அதைச் செயல்படுத்த வைப்போம். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.''
மற்ற மாநிலங்களில் தலித் முதலமைச்சர் அல்லது தலித் துணை முதலமைச்சர் என்கிற கனவு சாத்தியப்படும்போது, தமிழகத்தில் மட்டும் அது கானல் நீராக இருப்பது ஏன்?
தமிழக அரசியலில் பொய் முகங்கள்தான் அதிகம். திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான ஒரு கட்டமைப்பை உருவாக்கியது வெளிப்படை. வெளியே தெரியாத விஷயம், தமிழகம் முழுவதும் கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான ஒரு மனநிலையைத்தான் அவை உருவாக்கி வைத்திருக்கின்றன. அந்தக் கட்சியில் இருக்கும் பட்டியலினத்தவரும் அப்படியே நடக்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் இவர்கள் சொல்லும் சமத்துவம் பேசப்படுவதில்லை. ஆனால், அங்கே பட்டியலினத்தைச் சேர்ந்தவரால் முதலமைச்சர், துணை முதலமைச்சராக அல்லது முதலமைச்சர் வேட்பாளராக முடிகிறது.
மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக முடிகிறது. உத்தர பிரதேசத்தில் மாயாவதி முதலமைச்சராக இருந்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் பட்டியலின முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் என்ற நிலை இங்கே உருவாகியிருக்க வேண்டும். ஆனால், திராவிடக் கட்சியினர் சமத்துவம் பேசுகின்றனரே தவிர, அதைச் செயல்படுத்த முன்வருவதில்லை.
திமுக, அதிமுக இரு கட்சிகளிலுமே மத்திய, மாநில அமைச்சர்களாக முக்கியப் பொறுப்புகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களே...
அதனால் பட்டியலின மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது... அவர்கள் அந்த கட்சிகளின் கொள்கை சார்ந்துதான் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பேசுகிறார்கள். மாஞ்சோலை விவகாரம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னை, வேங்கை வயல் என்று பட்டியலின மக்களின் பிரச்னைகளைப் பேசுவதில்லை.
முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் நிலைக்கு இந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் வரும்போதுதான், உண்மையாகவே இந்த சமுதாயத்தால் முன்னேற முடியும். அதற்கான வாய்ப்பு, வரும் தேர்தலில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அது எப்படி யாரால் சாத்தியமாகும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cvg1kx931k2o
By
ஏராளன் ·