Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும்

September 30, 2025

அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும்

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

முன்னாள் ஜனாதிபதிகள் இருவர்  தங்களுக்கு இனிமேலும் கூட அரசியலில் ‘மீட்சி’ இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். 

தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை’ தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை  ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். 

அதேவேளை, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் பிரமாண்டமான  அரசாங்க  மாளிகையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தனக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ‘அரசியல் பயங்கரவாதத்தில்’ ஈடுபடுவதாகவும்  கூறி மக்கள் மத்தியில் மீண்டும்  தனக்கு ஆதரவைப் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த மாதம் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் (கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் )  வைக்கப்பட்டிருந்தபோது  அனேகமாக சகல  எதிர்க்கட்சிகளுமே அவருக்கு ஆதரவாக குரலெழுப்பின.   அவருடன் கடுமையான அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்  அரசியல்வாதிகளும் கூட அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்கள்.

அந்தவேளையில்  எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருந்த உத்வேகத்தை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டலைச் செய்யலாம் என்று விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகளும் நம்பினார்கள்.  ஆனால், அந்த உத்வேகம் ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே  தணிந்துவிட்டது. அதற்கு பிறகு கடந்த வாரம் (செப்டெம்பர் 20)  நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 79 வது வருடாந்த மகாநாட்டை எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதில் விக்கிரமசிங்க அக்கறை காட்டினார்.

ஆளும் தேசிய மக்கள் சக்தியை தவிர பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட சுமார் 40 கட்சிகள் மகாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தன. அழைக்கப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும்,  தங்களது வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவருமான சஜித் பிரேமதாச மகாநாட்டுக்கு வரவில்லை. ஆனால்,  பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மூத்த அரசியல்வாதிகள் பலர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர். பிரேமதாசவின் செய்தியை மத்தும பண்டார மகாநாட்டில் வாசித்தார். 

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவோ அல்லது  தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவோ மகாநாட்டுக்கு வரவில்லை.  பொதுச் செயலாளர் சாகர காரியவாசம்  மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  ஐக்கிய மக்கள் சக்தியுடன் அணிசேர்ந்து நிற்கும்  சகல தமிழ், முஸ்லிம் கட்சிகளினதும் தலைவர்கள் மகாநாட்டில் கலந்துகொண்ட அதேவேளை, அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும்,  வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் எவரும் பங்கேற்கவில்லை. 

வழமையாக ஐக்கிய தேசிய கட்சியின் மகாநாடுகளில் அதன் முன்னாள் தலைவர்களுக்கே அஞ்சலி செலுத்தி கௌரவம் அளிக்கப்படும். ஆனால் இந்த தடவை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர்களுக்கு மேலதிகமாக,  முன்னாள் பிரதமர்கள் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கும் முக்கியமான அரசியல் தலைவர்களாக விளங்கிய என். எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி சில்வா, பீற்றர் கெனமன், டி.ஏ. ராஜபக்ச, ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே.வி. செல்வநாயகம்,  சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆர். சம்பந்தன் ஆகியோருக்கும் நினைவஞ்சலி செய்யப்பட்டது.

மகாநாட்டில் விக்கிரமசிங்க நிகழ்த்திய உரை கடந்த மாதம் கைது செய்யப்பட்டதற்கு பிறகு பொதுவெளியில்  அவரின் முதன் முதலான உரையாக அமைந்தது. வழமைக்கு மாறாக வித்தியாசமான முறையில் தனது கட்சியின் வருடாந்த மகாநாடு இந்த தடவை நடத்தப்பட்டதற்கு பிரதான காரணம் தனது கைது என்பதை அவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டார். 2023 செப்டெம்பரில் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் மேற்கொண்ட விஜயத்துக்கு பிறகு நாடு திரும்பும் வழியில்  ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றதும் கூட உத்தியோகபூர்வ விஜயமே என்று  தனதுரையில்  அவர் விளக்கினார்.

கட்சியைப் பற்றி பேசுவதை விடவும் நாட்டில் இன்று உருவாகி வருகின்ற அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பாடுபடவேண்டியதே அவசியமானது என்று விக்கிரமசிங்க வலியுறுத்தினார். மகாநாட்டில் பேசிய வேறு பல அரசியல்வாதிகளும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் கண்காணிப்பில் இன்று நாட்டில் அரசியலமைப்புச் சர்வாதிகாரம் ஒன்று உருவாகிவருவதாக குறிப்பிட்டனர்.

அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டல்களைச் செய்வதற்கு எதிரணி கட்சிகள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றன. ஆனால், விக்கிரமசிங்க அவரது கைதுக்கு பிறகு கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கக்கூடிய அளவுக்கு பலம் பொருந்திய ஒரு தலைவராக மாறிவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது. 1975 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராவும்  நடத்தியதைப் போன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரம் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மாகாநாட்டில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், அத்தகைய கூட்டங்களை முன்னின்று நடத்தக்கூடிய அளவுக்கு அவரது கட்சி பலம்பொருந்தியதாக இல்லை. தற்போதைய முக்கியமான எதிர்க்கட்சிகளில் எந்தவொன்றுமே பிரமாண்டமான கூட்டங்களை நடத்தக்கூடியதாக வலுவான கட்டமைப்புக்களை கொண்டவையாக இல்லை. அதன் வரலாற்றிலேயே மிகவும் மோசமான அளவுக்கு பலவீனப்பட்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அணிதிரளுவதற்கு மற்றைய கட்சிகள் முன்வரக்கூடிய சாத்தியம் இல்லை.

மகாநாட்டில் உரையாற்றிய மற்றைய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் இதை தெளிவாக உணர்த்துகின்றன.

ஐக்கிய தேசிய கட்சியுடன் தங்களுக்கு எந்தவிதமான இணக்கப்பாடும் கிடையாது என்றும் ஆனால், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டுச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் மத்தும பண்டாரவும் பெ்துஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் காரியவாசமும் மகாநாட்டில் அறிவித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற பழைய முக்கியமான கட்சிகள் எல்லாமே பல குழுக்களாக பிளவடைந்திருக்கின்றன. அவை இன்றைய சூழ்நிலையில் அரசியலில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடிக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக என்று கூறப்படுகின்ற முயற்சிகளில் வலிந்து பங்கேற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. 

கடந்த மாதம் விக்கிரமசிங்கவின் கைதுக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி அதன் ஆதரவை கட்டியெழுப்புவதற்கு இரு முனைகளில் முயற்சிகளை முன்னெடுப்பதாக தெரிகிறது. ஒருபுறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதியில் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதும்  மறுபுறத்தில், மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து  பரந்தளவிலான அரசாங்க எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைப்பதுமே அவர்களது நோக்கம். 

சஜித் பிரேமதாசவை பொறுத்தவரை, ஐக்கிய தேசிய கட்சியின் இந்த பொறியில் வீழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறார். விக்கிரமசிங்க தலைமைத்துவத்தில் இருந்து விலகும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தனக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்குமானால் பிரேமதாச இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கு இணங்கக்கூடும். ஆனால், முன்னாள் ஜனாதிபதி கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்தோ அல்லது அரசியலில் இருந்தோ விலகுவதற்கான அறிகுறி ஏதுவுமில்லை. அதனால் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியில் தனது தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதிலேயே அக்கறை காண்பிப்பார். அத்துடன் அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூட அண்மையில் அறிவித்தார்..

மற்றைய எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை, ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டினாலும் கூட தேர்தல் கூட்டு ஒன்றைச் செய்து கொள்வது சாத்தியமில்லை. பலம்பொருந்திய ஒரு கட்சியை மையமாக வைத்து கூட்டணியை அமைத்தால் மாத்திரமே தேர்தலில் வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி அத்தகைய ஒரு நிலையில் தற்போது இல்லை என்பது மாத்திரமல்ல, அண்மைய எதிர்காலத்திலும் அதன் மக்கள் ஆதரவு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை.

கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறை காட்டாமல் விக்கிரமசிங்கவின் கைது போன்ற விடயங்களை முன்னிறுத்தி ‘ அரசியலமைப்புச் சர்வாதிகாரத்துக்கு ‘ எதிராக அணிதிரளுமாறு விடுக்கப்படும் அழைப்பு மக்களின் கவனத்தை எந்தளவுக்கு ஈர்க்கும் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.

இது இவ்வாறிருக்க,  முன்னாள் ஜனாதிபதிகள் இதுகாலவரை அனுபவித்துவந்த மட்டுமீறிய வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதற்காக பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தொடர்ந்து கொழும்பில் உள்ள அரச மாளிகையில் இருந்து வெளியேறி தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையின்  தங்காலைக்கு சென்றிருக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அரசியல் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டுகிறார். 

தங்காலை வாசஸ்தலத் துக்கு தினமும் பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் மாத்திரமல்ல, கொழும்பில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அவரை சந்தித்து வருகிறார்கள். கொழும்பு மாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாமல் போனதால் அவருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றும் அரசாங்கம் அவருக்கு அநீதி இழைத்துவிட்டது என்றும் நாட்டு மக்கள் நினைக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி நம்புகிறார் போலும். போரை முடிவுக்கு கொண்டு வந்ததால் தனக்கும் குடும்பத்தவர்களுக்கும் சிங்கள மக்கள் என்றென்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச ‘ அறகலய ‘ அனுபவத்துக்கு பின்னரும் கூட விடுபடவில்லை. 

இன்றைய அரசியல் நிலைவரத்தில் உள்ள விசித்திரம் என்ன வென்றால் ரணில் விக்கிரமசிக்கவும் மகிந்த ராஜபக்சவும் தங்களுக்கு அரசியலில் ஒரு ‘ மீட்சி’ இருக்கிறது என்று நம்புவதுதான்!

https://arangamnews.com/?p=12346

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.