Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் இருக்கின்றது. வாசகர் ஒருவரின் கேள்வியும், அதற்கான பதிலும்.

இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களையும், இதே போன்ற கேள்விகளையும் எண்ணற்ற தடவைகள் நாங்கள் பலரும் கடந்து வந்திருப்போம். இன்னும் கடக்கவும் இருக்கின்றோம். ஜெயமோகனின் பதிலும், விளக்கமும் ஒரு தெளிவைக் கொடுக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.

சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டில் முன் அறிமுகமில்லாத ஒருவரைச் சந்தித்தேன். உறவினர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கூடுதல் தகவலாக அந்தப் புதியவர் வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்குப் போகின்றார் என்ற தகவலையும், இரண்டு நாட்கள் வேலையே அவருக்கு போதும் என்ற திருப்தியுடன் அவர் வாழ்வதாகவும் சொன்னார். அந்தப் புதியவர் அங்கிருந்து போன பின், உறவினரின் மனைவி பொங்கி எழுந்துவிட்டார். 'அவர் இரண்டு நாட்கள் தான் வேலைக்கு போகின்றார்.............. ஆனால் அவரின் மனைவி ஐந்து நாட்களும் வேலைக்குப் போகின்றார்......... அது உங்களுக்கு தெரியுமோ.................' என்று பின்னர் அது ஒரு சின்ன வாக்குவாதம் ஆகியது..................

https://www.jeyamohan.in/222076/


குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்

November 13, 2025

big.jpg

அன்பின் ஜெ,

எனது வாழ்க்கையில் நான் கவனித்து வரும் மூன்று நபர்களின் நடத்தைகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் காட்டும் அசாதாரண பொறுமையையும் புரிந்துகொள்ள உங்கள் ஆலோசனையை நாடுகிறேன். மேலும், இந்த நபர்களுடன் பேசும்போது, அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகவும், எல்லாம் தெரிந்தவர்களாகவும் கருதுவதை கவனித்துள்ளேன்.

நபர் 1: எனது உறவினர்களில் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்யாமல், தனது மனைவியின் வருமானத்தில் முழுமையாகச் சார்ந்து வாழ்கிறார். அவரது மனைவி குடும்பத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறார், மேலும் இவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளதால் அவரது பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால், இவருடன் பேசும்போது, இவர் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், எல்லாம் அறிந்தவராகவும் கருதுகிறார்.

நபர் 2: எனது நண்பர் ஒருவர், 40 வயதாகியும் திருமணம் செய்யாமல், வேலை ஏதும் செய்யாமல், ஒரு சிறிய ஊரில் தனது தாயின் ஓய்வூதியத்தில் வாழ்கிறார். நான் அவரது வீட்டிற்கு செல்லும்போது, அவரது தாய் அடிக்கடி கவலையுடன் இருப்பதை காண்கிறேன். இவரும் தன்னை மிகவும் அறிவாளியாகவும், எல்லாம் தெரிந்தவராகவும் நினைத்துக்கொள்கிறார்.

நபர் 3: மற்றொரு உறவினர், 40 வயதை எட்டியும் உயர்கல்வி பெறவில்லை, நிலையான வேலை இல்லை, மேலும் திருமணமும் செய்யவில்லை. இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அங்கு மூன்று வேளையும் உணவு உண்கிறார். இவரது வருகை அந்த வீட்டில் பல முரண்பாடுகளையும் பதற்றங்களையும் ஏற்படுத்துகிறது. ஆயினும், இவரும் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், அனைத்தையும் அறிந்தவராகவும் எண்ணுகிறார்.

இந்த மூன்று நபர்களின் மனைவி, தாய், மற்றும் சகோதரி ஆகியோரின் பொறுமை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆண்களின் குறைபாடுகளையும், அவர்கள் ஏற்படுத்தும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து, பராமரித்து வருகின்றனர். இத்தகைய ஏற்பு இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே காணப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது, அங்கு குடும்ப பந்தங்கள் மற்றும் கடமைகள் தனிப்பட்ட சிரமங்களை மீறி நிற்கின்றன.

இவர்களின் பொறுமைக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவ முடியுமா? இந்த பெண்கள், இந்த சிரமங்கள் இருந்தபோதிலும் ஏன் இவர்களை ஆதரிக்கின்றனர்? இந்த ஏற்பு கலாச்சார மதிப்புகளில் வேரூன்றியதா? மேலும், தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதும் இந்த நபர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களைப் புரிந்துகொள்வது?

அன்புடன்

ராஜேஷ் 

பெங்களூர்

அன்புள்ள ராஜேஷ்,

இது சாமானியமாகத் தோன்றினாலும் நம் குடும்பம் என்னும் அமைப்பை, அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலைவரையிலான பரிணாமத்தைக் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டிய விஷயம்.

குடும்பம் என்னும் அமைப்பு எங்கல்ஸ் எண்ணியதுபோல (குடும்பம் தனிச்சொத்து சமூகம்) செயற்கையான ஒன்று அல்ல. முதிராச் சிந்தனையுடன் பின்நவீனத்துவர் சிலர் சொன்னதுபோல அது இல்லாமலாகப் போவதுமில்லை. அது ஏராளமான உயிர்களில் ஏதேனும் வகையில் நீடிக்கும் ஓர் அமைப்புதான். குடும்பம் என நாம் எண்ணுவது மனிதக்குடும்பம்.ஆனால் குடும்பம் என்னும் அமைப்பு குரங்குகளில் உள்ளது. எறும்புகள் வரை வெவ்வேறு உயிர்களில் வெவ்வேறுவகையான குடும்பங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப மாதிரிகளை இன்றைய உயிரியலாளர் அடையாளப்படுத்தியுள்ளனர்.

குடும்பம் என்னும் அமைப்பு உயிரியல் பரிணாமத்தின் ஒரு பகுதியாக உருவாகி வந்தது. எந்த உயிரினமும் தனித்து வாழமுடிவதில்லை. சேர்ந்து வாழவேண்டும் என்றால் ஒரு திரள் அமைப்பு தேவை. தனியாக இருக்கையில் ஓர் உயிர் கொள்ளும் குறைபாடுகளை நிரப்பும் பிறர்தான் குடும்பம். மனிதக்குழந்தைக்கு அறிவும் உடற்திறனும் உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே நிலையாந குடும்ப அமைப்பு தேவையாகிறது. உயிரியல்தேவை அமைப்பை உருவாக்கியது. அமைப்பு தன்னை பலபடியாக வளர்த்துக்கொண்டு நெறிகளை, நம்பிக்கைகளை , உணர்வுகளை உருவாக்கிக்கொண்டது.

ஓர் அமைப்பு, அது எதுவானாலும் அதில் அதிகப் பங்களிப்பாற்றுபவர், குறைவாகப் பங்களிப்பாற்றுபவர் என்னும் வேறுபாடு இருக்கும். கொடுப்பவர் -பெறுபவர் என்னும் இடங்கள் இருக்கும். ஆதிக்கம் செலுத்துபவர், வழிநடத்துபவர் என்னும் ஆளுமைகள் இருக்கும். அடங்குபவர்,தொடர்பவர் என்னும் ஆளுமைகளும் இருக்கும். நீங்கள் உங்கள் அலுவலகத்தையே உதாரணமாக எடுக்கலாம். அலுவலகம் என்பது அண்மைக்கால உருவாக்கம். அது இயற்கையானது அல்ல. அதில் ‘செண்டிமெண்ட்ஸ்’ இல்லை. ஆனாலும் இந்த வேறுபாடுகள் உள்ளன.

அப்படி வேறுபாடுகள் ஏதுமற்ற ‘சமத்துவ’ அமைப்புதான் தேவை என கற்பனை செய்யலாம். ஆனால் உயிரியல் ரீதியாக அது சாத்தியமல்ல. எறும்புகளிலும் சிம்பன்ஸிக்களிலும் இல்லாத ஒன்று மனிதனில் மட்டும் திகழமுடியாது. வேண்டுமென்றால் அந்த வேறுபாட்டை குறைக்கலாம். அந்த வேறுபாடு வன்முறையற்றதாக ஆகும்படி முயலலாம். ஆனால் அந்த வேறுபாடு இருக்கவே செய்யும்.

நம் குடும்பங்கள் அனைத்திலுமே அளிப்போர், பெறுவோர் என்னும் இரு நிலைகள் எப்போதும் இருக்கின்றன. நாம் வளர்ந்து நம் வருமானத்தில் நிற்பது வரை நாம் பெறுவோர் மட்டுமே. நம் பெற்றோர் அளிப்போராக திகழ்கிறார்கள். பல நடுத்தரக் குடும்பங்களில் தந்தை மட்டுமே பணமீட்டுபவர், பிற அனைவருமே அதைப் பெற்று வாழ்பவர்கள்தான்.

பழைய கூட்டுக்குடும்பங்களில் திறனற்றவர்களை அக்குடும்பங்களே பேணும் தன்மை இருந்தது. சிலரால் வேலை செய்ய முடியாது. சிலருக்கு போதிய அறிவுத்திறனோ உடல்வளர்ச்சியோ இருக்காது. அவர்கள் சுமை என கருதப்பட்டதில்லை. குடும்பத்தின் பொறுப்பு அவர்களையும் பேணுவதுதான் என்றே கொள்ளப்பட்டது.

குடும்பம் என்னும் நிறுவனத்தின் விரிவான அமைப்பே குலம். குலம் விரிந்து ஊர். ஊர் விரிந்து நாடு அல்லது சமூகம். சென்றகாலங்களில் தானாக வாழும் தகுதியற்ற ஒருவனை அக்குலம் பேணியதுண்டு. அந்த ஊர் பேணியதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது என் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி இல்லாதவர்கள், உடல்வளர்ச்சி இல்லாதவர்கள் இருந்தனர். முதுமையால் உடல்நலிந்தவர்கள் ஐம்பதுபேராவது இருந்தனர். அவர்களை ஊர்தான் பேணியது. என் அப்பா அவருடைய வருமானத்தில் கால்வாசிப்பங்கை வெவ்வேறு நபர்களுக்கு அளித்தார்.

இன்று சமூகம், நாடு அத்தகையோரைப் பேணுகிறது. அப்படிப் பேணுவதுதான் நல்ல சமூகம். நவீன மேலைச்சமூகங்களில் உழைப்பவர் அளிக்கும் வரிப்பணத்தில் கால்பங்கு உழைக்கமுடியாதவர்களுக்கு நலனுதவிகளாக வழங்கப்படுகிறது. அவர்களில் முதியோர், உடற்குறை உள்ளவர்கள் உண்டு. வேலை இழந்து வேலைதேடும் நிலையிலுள்ளவர்களும் உண்டு. வேலைசெய்யமுடியாது என அறிவித்து, தெருவில் வாழும் ஹிப்பிகள், சமூக எதிர்ப்பாளர்கள் மற்றும் போதையடிமைகளுக்கும் குறைந்தபட்சம் சாப்பாடாவது கிடைக்கும்படி அந்த அரசுகள் ஏற்பாடு செய்கின்றன. சாகவிடுவதில்லை.

பெறுபவர்கள் எல்லாமே இழிந்தோர், அவர்களுக்கு கொடுப்பது வீண் என்னும் மனநிலை சமூகத்தை அழிக்கும். ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் , உழைக்காதவர் அழியவேண்டும் என்பது ஓர் உயர்ந்த மனநிலை என்றும்; அது ‘உழைப்பைப் போற்றும் மனநிலை’ என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு குறுகிய, சுயநல மனநிலை. நீங்கள் எவரென்றாலும் உங்களால் ஈட்டப்படும் செல்வத்தில் சிறு பங்கையே நீங்கள் செலவழிக்கிறீர்கள். எஞ்சியதை முழுக்க குடும்பத்திற்காகச் செலவழிக்கிறீர்கள், சேர்த்து வைக்கிறீர்கள். அதில் ஒரு பங்கை இயலாதோருக்கு அளிப்பதில் என்ன பிழை?

ஒரு குடும்பத்தில் எவர் இயலாதோர்? குழந்தைகள், மாணவர்கள் எப்படியும் பிறரை நம்பி இருக்கவேண்டியவர்கள். முதியோரும் அவ்வாறே. இதைத்தவிர பலவகையான உடல், உளக் குறைபாடுள்ளவர்களும் பேணப்படவேண்டும். குடும்பம் அவர்களை பேணுவதே முறை. அல்லது ஊர் அல்லது சமூகம் பேணவேண்டும். ஏனென்றால் இங்கே இன்னும் முழுக்க அனைவர்நலனையும் நாடும் அரசு உருவாகவில்லை.

நம் சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக துறவிகள், நாடோடிகள் பேணப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் சாவடிக்குச் சென்று “இரவுணவு உண்ணாத எவரேனும் உண்டா?” என்று கேட்டு, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுவிட்டே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்னும் மரபு அண்மைக்காலம் வரை இருந்தது. என் அப்பா அவருடைய இறுதிவரை அதைச்செய்துவந்தார். அவ்வாறு சாப்பிடுபவர் உழைக்கமுடியாதவரா, உழைக்க மனமில்லாதவரா என்று பார்க்கக்கூடாது. அது அறமின்மை. ஏனென்றால் நாம் எப்படி அதை அறியமுடியும்?

“போய் உழைக்கவேண்டியதுதானே?” என்று பிச்சைக்காரர்களிடம் கேட்பவர்கள் உண்டு. (கேட்பவர் என்ன உழைக்கிறார் என்று பார்த்தால் பத்துரூபாய்க்கு பொருள் வாங்கி இருபது ரூபாய்க்கு விற்பவராக இருப்பார். உண்மையில் சமூகத்தைச் சுரண்டும் கிருமி அவர். அல்லது அதேபோல ஏதாவது வெட்டிவேலை செய்வார். எதையாவது உற்பத்திசெய்பவர் இங்கே எத்தனைபேர்?) அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவராக நித்யசைதன்ய யதி இருந்திருக்கிறார். நடராஜகுருவும் நாராயணகுருவும் விவேகானந்தரும் இருந்திருக்கிறார்கள். அவர்களை அழியவிடவேண்டும் என்றும், இந்த சம்பாதிக்கும் கூட்டம் மட்டும் சோறுதின்று கொழுக்கவேண்டும் என்றும் நான் சொல்ல மாட்டேன்.

மிக அரிதாக நீங்கள் சொல்வது போல உழைக்க மனம் ஒவ்வாதவர்கள், இயல்பிலேயே உழைக்கும் உளமில்லாதவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். அதுவும் மனித இயல்பே. மானுடத்தின் வண்ணமே. அவர்களுக்கான காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் வேண்டுவது வெறுமே சோறு, உறைவிடம், துணி மட்டுமே என்றால் அதை அளிப்பது அவசியம் என்பதே என் எண்ணம். அது கொடுப்பவர்களுக்கு பெரிய சுமை அல்ல என்றால் கொடுப்பதன் வழியாக அவர்கள் உறவை நிலைநாட்டுகிறார்கள் என்றும், குடும்பம் என்னும் அமைப்பின் இயல்பான அறத்தை நிலைநாட்டுகிறார்கள் என்றும்தான் பொருள்.

அவ்வாறு சார்ந்திருப்பவர்கள் உழைப்பவர்களின் பணத்தை வாங்கி வீணடித்தார்கள் என்றால் அதை அனுமதிக்கக்கூடாது. போதைக்கோ சூதுக்கோ பணம் அளிக்கலாகாது. ஆனால் அவர்கள் உழைக்காவிட்டால் சாகவேண்டும் என்று சொல்வது குடும்பம் என்னும் அமைப்புக்கே எதிரானது. என் அப்பா வாழ்ந்த நாளெல்லாம் கடைப்பிடித்த அறம் இது. அவர் மறைந்தபோது கிட்டத்தட்ட இருபதுபேர் அவரைச் சார்ந்திருந்தனர் என அறிந்தேன். அவர்களில் பலர் வெறுமே சாப்பிட்டுவிட்டுச் சும்மா இருந்தவர்கள்தான்.

ஏனென்றால் குடும்பம் என்னும் அமைப்பே ஒருவரின் பலவீனத்தை, குறைபாட்டை இன்னொருவர் ஈடுகட்டுவதில்தான் உள்ளது. உழைக்கமுடியாதவர் உழைப்பவரைச் சார்ந்திருக்கிறார். அவர் உழைப்பவரைச் சுரண்டுகிறார் என்று எண்ணுவது குடும்பம் என்னும் மனநிலையை அழிப்பது. இன்றைக்கு உழைப்பவர் சட்டென்று நோயாளியாகி பிறரைச் சார்ந்திருக்கவும்கூடும். எந்நிலையிலும் ஒரு தனிநபரை குடும்பம் கைவிடக்கூடாது. அதுவே குடும்பம் என்னும் அமைப்பின் அடிப்படை அறம். அந்த நம்பிக்கையில்தான் நீங்களும் நானும் உயிர்வாழ்கிறோம். அந்த நம்பிக்கை இல்லாமலானால் நாமனைவருமே அனாதைகள், அல்லது அனாதைகளாக ஆகும் வாய்ப்புள்ளவர்கள்.

பிச்சை எடுக்க வருபவர்கள் ‘தர்மம் செய்யுங்க’ என்றுதான் சொல்கிறார்கள். ஈதல் அறம் என்றே நம் மரபு சொல்கிறது. ஒருவருக்கான அடிப்படை உணவு என்பது ஒருபோதும் வெட்டிச்செலவு அல்ல. அவர் என்னவாக இருக்கிறார் என நாம் அறியமுடியாது. ஒருவேளை அவர் சிந்தனையாளரோ, கலைஞரோ ஆக இருக்கலாம். அல்லது அப்படி எதிர்காலத்தில் மாறலாம். அல்லது வெட்டியாகவே இருந்தால்கூட அவரைப்போன்ற ‘வெட்டிக்கூட்டத்தில்’ ஒருவராக ஒருவேளை கலைஞனும் சிந்தனையாளனும் இருக்க வாய்ப்புண்டு.  வெட்டிக்கூட்டத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டோம் என்றால் கலைஞர்களையும் சிந்தனைகயாளர்களையும் அழித்துவிடுவோம். அதை உழைப்பை சிரமேற்கொண்டு போற்றும் மேற்குநாடுகளே கூட செய்வதில்லை.

நடராஜகுருவும் நித்யாவும் ரயிலில் செல்கிறார்கள். ஒரு குழந்தை வந்து பிச்சை கேட்கிறது. உடனிருக்கும் மார்க்ஸியர் ஒருவர் அருவருப்புடன் பிச்சை எடுப்பதை இழித்துப்பேசுகிறார். அது சோம்பலை வளர்க்கும் என்கிறார். நடராஜகுரு சொல்கிறார். ‘ஒரு குழந்தை எனக்குப் பசிக்கிறது என்று உலகத்திடம் கேட்பதில் மகத்தானதாக ஒன்று உள்ளது. இந்த உலகம் மீது அக்குழந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அது. அதை எப்போது பார்த்தாலும் எனக்குக் கண்ணீர் வருகிறது. அந்த நம்பிக்கையை ஒருபோதும் உலகம் இழந்துவிடலாகாது’

‘எனக்கு சோறு மட்டும் போதும்’ என சொல்லும் ஒருவரிடம் ‘சோறுதானே, சாப்பிடு’ என்று சொல்லும் நிலையில் உள்ள குடும்பமே அறம் சார்ந்தது, அப்படிச் சொல்லும் சமூகமும் நாடுமே வாழும் அறம் கொண்டவை. சோற்றில் கணக்குபார்ப்பவர்கள் ஒன்றை யோசிக்கலாம், அவர்கள் உண்ணும் சோறுக்கு எங்கோ கணக்குகள் பார்க்கப்படும்.

ஜெ

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அனுபவங்களினூடாக சில விமர்சனங்கள் இருந்தாலும் கூட ...... பகிர்வுக்கு நன்றி ரசோ ........!

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் போய் வருபவர்களில் அநேகம் பேர் சொல்வது என்னவென்றால்:

அங்குள்ள இளைஞர்கள் உழைக்க உளமில்லாதவர்களாக உள்ளார்கள். புலம்பெயர்ந்த உறவுகள் இப்படியானவர்கள் கேட்பதற்கும் மேலால் கொடுத்து ஒரு இளைய சமூகத்தையே கெடுத்து வைத்திருக்கின்றார்கள். உழைக்காமல் பிறரின் பணத்தில் வாழ்வதை அகெளரவமாகப் பார்ப்பது இல்லை.

இப்படிக் கொடுக்கும் புலம்பெயர் உறவுகள் குடும்பத்திற்காகக் கொடுக்கின்றார்களா அல்லது கெளரவத்திற்காக அல்லது சுயபெருமைக்காக அல்லது தாம் புலம்பெயர்ந்து நன்றாக இருக்கின்றோமே என்ற குற்ற உணர்விலா கொடுக்கின்றார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

இங்கு அனுபவங்களினூடாக சில விமர்சனங்கள் இருந்தாலும் கூட ...... பகிர்வுக்கு நன்றி ரசோ ........!

எங்களின் காலகட்டம் மிக அதிகமாகவே இப்படியான ஒரு சூழலுடனேயே அமைந்துவிட்டது, சுவி ஐயா. சில வேளைகளில் தனிப்பட்ட ரீதியில் நான் களைத்துப் போய் விட்டேன் போல என்ற நினைப்பு கூட எனக்கு வருவதுண்டு..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இப்படிக் கொடுக்கும் புலம்பெயர் உறவுகள் குடும்பத்திற்காகக் கொடுக்கின்றார்களா அல்லது கெளரவத்திற்காக அல்லது சுயபெருமைக்காக அல்லது தாம் புலம்பெயர்ந்து நன்றாக இருக்கின்றோமே என்ற குற்ற உணர்விலா கொடுக்கின்றார்கள்?

எங்களில் பலருக்குள்ளும் இதே கேள்வி இருந்து கொண்டேயிருக்கின்றது, கிருபன். பாசம், மனிதாபிமானம், குற்ற உணர்வு, விளம்பரம் என்று, நீங்கள் சொல்லியிருப்பது போலவே, பல வகையான உந்துதல்கள் இருக்கின்றன.

நாங்கள் செய்யும் சில செயல்கள் கூட இதில் எந்த வகை என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்பதும் உண்டு என்றே நினைக்கின்றேன்.

விளம்பர வகை என்று வரும் போது ஒப்பீட்டளவில் கொஞ்சம் இலகுவாக அவற்றை உணர முடிகின்றது, உதாரணம்: சுதா நாராயணமூர்த்தியின் சேவைகள் பற்றி வரும் துணுக்குகள் போன்றவை. மற்றைய வகைகளை பிரித்தறிவது சிரமம் போல.

நீண்ட பல வருட செயற்பாடுகளின் பின் இதுவரை இவற்றால் விளைந்த பயன்கள் என்ன என்ற கேள்வி சில சமயங்களில் பலருக்கும் ஒரு அயர்ச்சியை கொடுக்கக்கூடும். ஆனால் ஜெயமோகன் அவர்கள் சொல்லியிருப்பது போல சில விடயங்களில் ஒரு சமூகமாக நாங்கள் பயன்களை கணக்குப் போட்டுப் பார்க்கவும் கூடாது என்றே தோன்றுகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.