சரணாகதி
ராமராஜன் மாணிக்கவேல்
பார்த்தன் அதிகமாகத் திரௌபதியிடம் பேசியதில்லை. அவளும் அப்படித்தான். அவனிடம் அவள் அதிகமாகப் பேசியது இல்லையே தவிர, மற்றவர்களிடம் பேசாமல் இருந்தது இல்லை. அவள் சக்கரவர்த்தினி அல்லவா? கல்லும் முள்ளும் மண்டிய வெறும் கட்டாந்தரையில், அத்தனை பெரிய அதிசய அரண்மனை கட்ட வேண்டும் என்றால், எத்தனை எத்தனை கட்டளைகள் பிறப்பித்திருப்பாள்! இந்திரப்பிரஸ்தம் கண்ட ஸ்ரீசக்கரவர்த்தினி!
எண்ணங்கள் இல்லாதவனுக்கு ஆசைகள் இல்லை. ஆசைகள் இல்லாதவனுக்குக் கனவுகள் இல்லை. கனவுகள் இல்லாதவனுக்கு இலக்குகள் இல்லை. இலக்குகள் இல்லாதவனுக்குச் செயல்கள் இல்லை. செயல்கள் இல்லாதவனுக்குக் கட்டளைகள் இல்லை. கட்டளைகள் இல்லாதவன் தலைவன் இல்லை. தலைவன் ஆக முடியாதவன் எப்படி அரசனாவது? அரசன் ஆகாதவன் எப்படிச் சக்கரவர்த்தியாவது? அவள் சக்கரவர்த்தினி அல்லவா? நிறையப் பேசுவாள். நிறைவாகப் பேசுவாள். ஆனாலும் அவள் பார்த்தனிடம் அதிகம் பேசியதில்லை.
நெஞ்சகலில் தீபம் ஏற்றும் அவளின் அகல்விழிச் சிறு அசைவில், யுகங்களைத் தாண்டும் நீண்ட கதையாடல்கள் நடந்த நினைவுகள் நெஞ்சில் பூக்கும். அதனால் அவளிடம் பேச வேண்டும் என்ற நினைப்பே அவனுக்கு எழுந்ததில்லை. ஆனால் அவளிடம் இப்போது பேசத் தவிக்கிறான்.
அஸ்தினபுரியிலிருந்து கானகம் வந்த நாள் முதல், அவளிடம் தனியே பேச வேண்டும் என்ற தவிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அந்தத் தவிப்பால் விலகி விலகி நிற்கிறான். அங்கு அந்தக் கொடும் செயல் நடக்கும்போது வெறும் தூசாக இருந்துவிட்டு, இங்கு எப்படி அவளிடம் பேசுவது?
அவன் “கிருஷ்ணை” என்று தன்னை அழைக்கும்போதெல்லாம், கண்ணனையே அழைக்கிறான் என்று அறிந்தாள். அவள் கண்ணனின் பெண்வடிவம் என்ற மயக்கம் அவனுக்கு உண்டு. தனக்குள் கண்ணனே எழுகிறான் என்பதையும் கண்டாள். அன்பு, பிரியம், பக்தி கலந்து அவன் “கிருஷ்ணை” என்று அழைக்கும்போது, அவள் உணர்வு நரம்புகள் மீட்டப்படும். அவள் மனக்கொடியில் “கிருஷ்ணை” என்ற அவன் வாய்ச் சொல் மலர்ந்து மலர்ந்து தேன்வடிப்பதை, ரகசிய மணமாய் நுகர்வாள். ஆனாலும் அவள் சக்கரவர்த்தினி அல்லவா? அவளால் காதல் படிக்கட்டில் இறங்க முடியாது. அவளால் இறங்க முடியாது என்பதால், இவனால் ஏறவும் முடியாது. அதனால்தான் அவளிடத்தில் அவன் அதிகம் பேசியதில்லை. ஆனால் இப்போது அவளிடம் பேச வேண்டும் என்று தவிக்கிறான்.
பார்த்தன் “திரௌபதி” என்று அழைப்பதைத் தவிர்ப்பான். தவறி “திரௌபதி” என்று அழைத்துவிட்டால், அவன் உடலும், கைகளும், காற்றும் அறியாமல் நடுங்குவதை அவள் மட்டுமே அறிந்திருந்தாள். இப்போதெல்லாம் அவன் “கிருஷ்ணை” என்று தன்னை அழைத்த பின்புதான் திரும்புகிறாள்.
“திரௌபதி” என்ற அந்தப் பெயர், அவள் தந்தை துருபதன் நினைவை எழ வைக்கிறது. ஞாபகத்தீ எரிய வைக்கிறது. குருவுக்காக என்றாலும், யாருக்காக என்றாலும், மனிதனை மனிதன் சிறுமைப்படுத்தும் கணம் சுகமாக இருக்கலாம். அந்தக் கணத்தில் வெற்றி பெற்றதாய்க் களிப்புறலாம். அந்தக் கணத்தைத் தாண்டிவிட்டால், அந்தக் கணம் இறக்கி வைக்க முடியாத, அணைக்க முடியாத கனமான கனல் கல் என்றாகிவிடுகிறது. அது அழுத்திச் சுட்டுக்கொண்டே இருக்கும். யுகங்களைக் கடந்தும் கூட அது அணைவதே இல்லை. கணத்தில் செய்த பிழைகளை யுகங்கள்வரை ஓடியும், உழைத்தும் திருத்திவிட முடியுமா?
யுதிஷ்டிரன் திரௌபதியைச் சூதில் வைத்த கணம் எத்தனை சிறுபொழுது? இமைக்கணம். அதன் வலி யுகங்களின் வலி; யுகமாந்தர்களின் வலி. அதைத் திருத்திவிட முடியுமா? கணங்களைக் காத்த மனிதன் யுகங்களைக் காத்தவன் ஆகிறான்.
மகிழ மரத்தில் சாய்ந்து நின்று, நெஞ்சுக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு, வானத்தின் நீலத்தையும், மேகங்களின் சித்திரத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்த்தன், ஓடை ஓரத்தில் அவிழ்ந்த கூந்தலோடு அமர்ந்திருந்த திரௌபதியைப் பார்த்ததும் திடுக்கிட்டான். காண்டீபம் ஏந்தும் கைகள் நடுங்கின. கை நடுக்கத்தில், சிறு நரம்புகள் பாம்புகள் போலப் புறங்கையில் அசைந்தன. பதறும் கால்களுக்குக் கீழே பூமி பிளந்துவிடாதா? எப்படி அவளிடம் பேசுவேன்?
திரௌபதி ஓடையின் கரையில் கிடந்த சந்தன நிற வட்டக்கல்லின்மேல், பெரிய வாழைப்பூவைக் கொய்து குந்த வைத்ததுபோலக் குந்தி, பீமன் தேடிக் கொண்டுவந்த புல் அரிசியைச் சமைப்பதற்காகக் கழுவிக்கொண்டிருந்தாள். வண்டிச் சக்கரம் அளவுக்குப் பெரியதாக இருந்த அந்தக் கல்லைப் பீமன் வெகு தூரத்திலிருந்து தன்னந்தனியாய்த் தூக்கிவந்து அவளுக்காகப் போட்டுவைத்தான்.
ராஜ நாகங்கள் மலையில் புரள்வதுபோல, அவிழ்ந்த கூந்தல் கற்றைகள் காற்றில் அவள் முதுகிலும், கல்லிலும் புரண்டன. அவளுக்கு எத்தனை நீளமான கூந்தல்! அவள் கொண்டை போடும்போது, தலையின்மேல் ஒரு தலை இருப்பதுபோல இருக்கும். பொன்னும், மணியும், முத்தும், ரத்தினமும், இந்திர நீலமும், மரகதமும், மாணிக்கமும், பூங்காடும் நிறைந்த அவள் கொண்டை, வண்ண மீன் விளையாடும் கடலை உருட்டிக் கொண்டையாக வைத்ததுபோல் குளிர்ந்து ஜொலிக்கும்.
ஊர்ப் பெண்கள் எல்லாம் அவள் போடும் கொண்டையை நினைத்து, கனவிலும் பெருமூச்சு விடுவார்கள். கூடியிருந்தால் அலர் பேசுவார்கள். தனித்திருந்தால் உள்ளுக்குள் ரகசியமாய்ப் புகழ்வார்கள். சில நேரம் புழுங்குவார்கள், சில நேரம் அழுவார்கள், சில நேரம் சிரிப்பார்கள். அந்தக் கூந்தல் அவர்களைப் பித்துக்கொள்ளச் செய்தது.
சிக்கில்லா அவள் கூந்தலில் சிக்கிக்கொள்ளாத மனம் உண்டா? ஆடவர்களைப்பற்றித் தனியாக என்னச் சொல்ல? கொடுத்தே பழக்கப்பட்ட கர்ணன்கூட அவளிடம் எடுக்க நினைத்தான் என்றால்…
அந்தக் கூந்தலில் பார்த்தன் குழந்தையாகத் தவழ்ந்த காலம் வரம். யாருடைய சாபம், அதே கூந்தல் துச்சாதனன் கையில் அவளை இழுத்து வரும் கயிறானது? காலம் எத்தனை கொடியது!
பதிமூன்று ஆண்டுகள் கழித்தேனும் அவள் கொண்டையிடுவாளா? காலமே அறியும். உச்சம் பெரும் எல்லாமும் நீச்சம் பெறும் என்றால் உச்சம் எதற்கு? அதில் என்ன பெருமை? சிறுமையைக் கடந்துதான் பெருமை, பெருமைப்பட வேண்டும் போலும்.
பார்த்தன் ஆழமாக மூச்சை இழுத்து, நெஞ்சுக்குள் நிறுத்திப் பையப்பைய விட்டான். கண்ணின் இமைச் சுவர்களில் நீர் திரண்டு நின்றது. வெண்விழி நரம்புகள் சிவப்பேறின. கண்களை மூடித் திறந்தவன், தலையை மெல்ல ஆட்டிக்கொண்டு மீண்டும் திரௌபதியை நோக்கினான். விழியில் இருந்து விழுந்த கண்ணீர்த் துளி, அவன் கால் பெருவிரல் நகத்தில் பட்டுத் தெறித்தது. வெந்நீர்த் துளி விழுந்ததுபோல் காலை உதறினான்.
அவள் உடுத்திருந்த மரவுரிச் சேலை, ஓடையில் இருந்து எழுந்த குளிர்ந்த காற்றில் அசையும்போது, அக்கினிக் குண்டத்தில் மலர்ந்த அனல் மலர்போலத் தெரிந்தாள். கரையில் இருந்த கல்வாழைப் பூக்கள் காற்றில் அசைந்து அசைந்து அவள் தலையைத் தொட்டன. மேகத்தில் நட்சத்திரங்கள் பூப்பதுபோல இருந்தது.
வாயில் பசும்புற்கள் வழிய ஓடிவந்து திகைத்து, அங்கும் இங்கும் பவழம் போன்ற கண்களால் குழந்தைபோலப் பார்த்து, அவளை முகர்ந்துவிட்டுப் போகும் வெண்முயல்கள்! தண்ணீர் குடித்துவிட்டுப் போகும் மான்கள் அவள் முகம் நோக்கி முகம் நீட்டும்! ஆண் மயில்களின் சேட்டைக்கு அஞ்சுவதுபோல, அவள் அருகில் வந்து மேயும் பெண்மயில்கள்! பழமரங்களில் கொஞ்சும் கிளிகள் கொத்தி எடுத்து வந்த பழங்களை அவள் காலடியில் போட்டுவிட்டு, அவள் தோள்மீது அமர்ந்து கொஞ்சின. சொந்த வீட்டில் விளையாடும் குழந்தைகள் போல, இலக்கின்றி ஓடையில் நீந்தின மீன்கள்!
கழுவிக்கொண்டிருந்த அரிசியில் கைப்பிடி அள்ளி ஓடையில் எறிந்தாள். ஒரு பிடி அள்ளி மயிலுக்கும், கிளிக்கும், அணிலுக்கும் கரையில் தூவினாள். மீன்கள் எல்லாம் அந்த அரிசி விழுந்த இடத்தை நோக்கிக் குவிந்தன. ஓடையில் மீன்கொத்துகள் மலர்ந்தன. திரௌபதி இதழ்கள் மெல்ல விரிய, மீண்டும் ஒரு பிடி அள்ளிப் போட்டாள். மீன்விழியாள் மீனோடு விளையாடினாள். அன்னை வயதில் ஒரு குழந்தை அங்கு களித்துக்கொண்டிருந்தாள்.
பார்த்தன் குனிந்து காலடியிலிருந்த மகிழம்பூ ஒன்றை எடுத்து, அவளுக்குள் இருந்து வெளிப்படும் குழந்தையை விரட்ட, அவள்மேல் வீசப் போனான். ஏதோ நினைத்து நிறுத்திப் பூவை முகர்ந்தபடி, மரத்தில் வலது காலை ஊன்றிச் சாய்ந்து நின்று, அவளை மீண்டும் பார்த்தான். நரம்புகள் ஓடிய அவன் கால், மரத்தின் கிளைபோலத் தோன்றியது. மகிழ மரத்தில் ஏறிக்கொண்டிருந்த சித்தெறும்புகள், அவன் பாதத்தின் சிறு வரிகளை நோக்குவதுபோல நின்று, தலை அசைத்து முகர்ந்தன. கூச்சத்தில் பார்த்தன் பாதத்தைச் சற்று அசைத்தான். சித்தெறும்புகள் வளைந்து வரிசையாக மரத்தில் ஏறின.
கிருஷ்ணை, பார்க்கப் பார்க்கப் புதிதாகத் தோன்றிக்கொண்டே இருந்தாள். எங்குதான் இந்த அழகுப் பெண்களுக்குள் மறைந்திருக்கிறது? பார்க்கும் தோறும் புதையல்போல வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. “இத்தனை நாளாய் இவளை நாம் பார்க்கவே இல்லையோ?” என்ற ஐயம் அவனுக்குள் எழுந்தது. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்துக்கொண்டான். யுதிஷ்டிரரும் பீமனும் அவர்கள் செயலில் மூழ்கியிருந்தார்கள்.
திரௌபதி மீண்டும் கைப்பிடி அரிசியை அள்ளி மீனுக்குப் போட்டாள். ஒரு பெரிய மீன் துள்ளி அவள் காலுக்கடியில் விழுந்து அவள் பாதத்தை முத்தமிடுவதுபோல் வாயைக் குவித்துத் திறந்து துள்ளியது. ஒரு துள்ளலில் அதன் வால் அவள் காலைத் தீண்டியது, கூச்சத்தில் சிலிர்த்து மகிழ்ச்சியில் வாய்விட்டுச் சிரித்து, கல்லில் உட்கார்ந்திருப்பதை மறந்து, அரிசியோடு கீழே சாய்ந்தாள்.
பார்த்தன் அங்கு எப்படிப் போனான் என்று உணரும்முன், அவளை ஒரு கையிலும் அரிசியை ஒரு கையிலும் பற்றித் தூக்கி ஒரு சுற்றுச் சுற்றிச் சமதளத்தில் விட்டான். மகரந்தம் நிரம்பிய மரகதத் தாம்பூலத்தில் நிற்பதுபோல, மஞ்சள் பூ பூத்த புல்தரையில் கால்களை அழுத்தி நின்றாள். மஞ்சள் பூப் பூத்த புற்கள் அவள் பாதத்தை மூடிக்கொண்டன.
பார்த்தன் தலையிலிருந்து உதிர்ந்திருந்த மகிழம் பூக்கள் அவள் நெஞ்சில் விழுந்து, அவள் தனங்கள் தாங்க, மணத்தது. மகிழம்பூ வாசத்தில் அவள் மூச்சை சற்று ஆழமாக இழுத்தாள். பார்த்தன் கண்களைப் பார்த்தவள், ஆடையைச் சரி செய்வதுபோல் நகர்ந்துகொண்டாள். பார்த்தன் தன் விரல்களில் அனல் கங்கு ஒன்றைத் தொட்ட வலியை உணர்ந்தான்.
”கிருஷ்ணை” என்று அழைக்கப் போனவன் நா மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. வியர்த்தது.
கருப்பு வெள்ளை பளிங்கினால் செய்த மேகக் கோட்டையில் பதித்த இரத்தினத் தாம்பூலம் போன்ற மாலைச் சூரியன். வெண் பொன் வைர மணல் உருளும் சலசலக்கும் குளிர்ந்த நீர் ஓடை. அதன் அலை விசிறியிலிருந்து எழுந்து வரும் தென்றல். பூ, காய், கனி வாசம். ஓடையில் விளையாடும் மீன்கள். பூமரத்தில் விளையாடும் அன்றில்கள். கானம் பாடும் குயில்கள். வெண்பூக்கள் சூடிய நாணல் புற்களுக்கு இடையில் தவமிருக்கும் கொக்குகள். ஓடையின் உயரத்தில் ஓடைக்கு விசுறுவதுபோலச் சிறகடிக்கும் மீன்கொத்திகள். அக்கரையில் மேயும் பசுக்கூட்டங்கள். அணைத்து அமர்ந்திருக்கும் வானரங்கள். புல்லுக்கும் வலிக்காமல் நடந்து போகும் யானைகள். இந்த இடத்தில் மனைவியைத் தொடும்போது வியர்க்குமா? பார்த்தன் மனம் சிந்தனை அறுபட்டு நின்று போனது.
தூரத்தில் நீலக்குயில் ஒன்று கூவ, எதிர் குரல் எழுந்ததும், பலாமரத்தில் இருந்த குயில் வெளிப்பட்டது.
தூரத்தில் பீமன் பெரிய பெரிய பாறைகளைத் தூக்கிக் கொண்டு வந்து, விழுது விட்ட ஆலமரத்தடியைச் சுற்றிப்போட்டு உட்காரும் மேடை செய்தான்.
யுதிஷ்டிரர் இங்கு இல்லாததுபோல, வடக்கே இருந்த குளக்கரையில் அரசமரத்தடியில் குத்துக்காலிட்டு குனிந்து அமர்ந்திருந்தார். தோளில் கிடந்த அங்கவஸ்திரம் பூமிக்குப் போர்த்திவிட்டதுபோலக் கொஞ்சம் தோளில் கிடந்தது.
இப்பொழுதெல்லாம் அவர் யாரையும் நிமிர்ந்து பார்ப்பதில்லை. நடுங்கும் கைகளை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதால் கைநீட்டிக் கூட யாரிடமும் பதில் விடுப்பதில்லை. ஏதோ ஒரு விடையைத் தேடிக் கொண்டே இருந்தார். நெற்றியில் அடிக்கடி கோடுகள் தோன்றி மறைந்தன.
பீமன் அவர் அருகில் போகாமல் பார்த்தன் பார்த்துக் கொண்டான். திரௌபதியே பீமன் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள். நடுங்கும் கைகளால் முன்னால் கிடந்த வெண்மணலைச் சமன் செய்து, அரசச் சருகொன்றால் எதையோ எழுதுவதும் அழிப்பதுமாக இருந்தார். வாழ்வின் சம்பவங்கள் எழுதி அழிக்கக் கூடியவைதானா?
திரௌபதியிடமிருந்து நகர்ந்து போக வழி தேடிய பார்த்தன், கல்லின் மீது கிடந்து துடித்த பெரிய மீனைச் சமையலுக்காகப் பாய்ந்து போய்த் தூக்கினான்.
”இனியவரே, அது என் பாதத்தைத் தொட்டுவிட்டது. அது வாழட்டும், அதன் குடி பெருகட்டும். நீரில் விட்டுவிடுங்கள்” என்றாள்.
பார்த்தன் சிலையாகி விட்டான். கண்கள் இமைக்க மறந்துவிட்டன. ஆடைக்குள் தொடைத் தசைகள் ஆடின. நெஞ்சுக்குள் இருதயம் மலரும் ஓசை கேட்டான். வலது கையில் தலைகீழாய் தொங்கிய மீன் தனது விடுதலைக்காகப் பார்த்தன் கையில் துடித்துக் கொண்டு இருந்தது. பார்த்தன் இன்னும் சிலையாகத்தான் நின்றான். ஆனால், அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் இரு கரங்கள் குவிந்து மொட்டாகின.
”இனியவரே!” என்றாள் முன்னினும் இனிமையாக. செவி குளிர்ந்து, காது மடலில் மென்சூடு பரவிக், காது முடிகள் கூச்செறிந்தது.
சிற்பத்தில் பூத்த புன்னகை. சொட்டிவிடுமோ என்பதுபோல இதழ்கனியில் தேன் ஈர மினுமினுப்பு. நோக்கி உளம் உருகினான். இந்திரப்பிரதஸ்தத்தில் வாழும் வரை இவளை ஆசையும் அகங்காரமும் கொண்ட பேரரசியாக மட்டுமே பார்த்து, மனம் விலகி இருந்ததை நினைத்து வெட்கினான். மனைவியரைக் கணவர்கள் புரிந்துகொள்வதே இல்லையோ? மனைவியர்கள் கணவர்கள் புரிந்துகொள்ளும் வட்டத்திற்கு அப்பாலுக்கு அப்பால் நின்று ஆடுகிறார்களோ? எத்தனை மூச்சடக்கிப் பாடிப்போனாலும் தொட முடிவதில்லை. இவள் யார்?
அருகில் கிடந்த கருங்கல்லில் சிறு குழந்தையைப்போல துள்ளி ஏறி நின்று ”இனியவரே!” என்றாள் கர்ஜனையாக. அட்சயப் பாத்திரம் போலக் கையில் அரிசிப்பானை. குரலின் கடுமையில் கண்கள் விரிந்தன. அகன்ற கண்களும் அவிழ்ந்த கூந்தலும் மகிடன் தலையில் கொற்றவை எனக் காட்சிக் கொடுத்தாள். உடல் அதிர்ந்து, அகத்தில் பனித்துளி சொட்டிடக் குளிர்ந்தான்.
எண்ணங்கள் ஒழிந்தவனாய், யாரோ தன்னை இயக்குவதுபோலத் துரிதமாய் சென்று மீனை ஓடையில் விட்டான். மீன் ஆற்றில் நீந்தும் போதுதான் தனக்குள் தான் இருப்பதை உணர்ந்தான். திரௌபதி நீந்தும் மீனைப் பார்த்தாள். அவள் விழிகளும் நீந்தி மகிழ்ந்தன.
”கிருஷ்ணை” பார்த்தன் வாயில் இருந்து வார்த்தை வெளிப்படவில்லை. ஆனாலும் திரௌபதிக்குக் கேட்டது.
திரௌபதி, கானக வாழ்க்கையை எளிமையிலும் எளிமையாக, ஏதிலியாகப் பன்னிரண்டு ஆண்டுகள் எப்படி கடத்துவது என்று எண்ணும் அறியாச் சிறுமிபோல நோக்கினாள்.
”என்ன? இனியவரே” கண்களால் கேட்டாள். செவிவரை நீண்ட விழியும், கருங்குருவியின் இறகு இதழ் போன்ற இமை முடியும் அவள் கண்களை விசாலமாக மலரச் செய்தது. அவள் முகத்தைக் குழந்தையாக வடித்து வைத்தது.
‘’அஸ்தினாபுரத்தில் இத்தனை நடந்தபிறகும், இவளால் என்னை எப்படி இனியவரே என்று அழைக்க முடிகிறது. அதில் கேலி இல்லை. ஐவர்மீதும் இன்னும் அதிகப் பரிவிருக்கிறது. இவளால் மட்டும்தான் அது முடியுமோ’’ என்று நினைத்தபடியே ”எங்கு நின்றாலும் கருவறைப் பீடத்தில் நின்று அருளும் அன்னை எனவே தெரிகிறாய் தேவி” என்றான்.
திரௌபதி வாய்விட்டுச் சிரித்தாள். கானகம் முழுவதும் சிரிப்பொலி அலை அலையாய்ப் பரவியது.
அவள் பின்னால் ஓடிக்கொண்டிருந்த ஓடையில், பெரும் காடு நகர்ந்து வந்ததுபோல் புழுதிப் பறக்க வந்து நீர் அருந்திக் கொண்டிருந்த எருமைக் கூட்டத்தின் தலைவன், நீர் வழியும் வாயோடு அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, வயிறு அதிர உறுமி, தலை தாழ்த்தியது. அவள் பாதங்களுக்கு இருபுறமும் வளைந்த வாள் போல அதன் கொம்பு மட்டும் காட்சி கொடுத்தது.
எருமைகளின் வாசம் பிடித்து வந்த சிங்கக் கூட்டத்தின் முதல்வன் கோரைப்புல் புதரிலிருந்து ஓசை இன்றித் தலை நீட்டியது. அருகில் அடி பெருத்து நின்ற செண்பக மரத்திலிருந்து உதிர்ந்த செண்பகப் பூவில் ஒன்று காற்றில் மிதந்து வந்து, இதுதான் இடம் என்பதுபோல அவள் சென்னியில் விழுந்து, பாதத்தைத் தொட்டு, வான்பார்த்து மலர்ந்து அமைந்தது.
பீடம் அமைத்துவிட்டு, மரக்கட்டைகளைப் பிளந்துகொண்டிருந்த பீமன், கோடரியைத் தரையில் ஊன்றித் திரும்பிப் பார்த்துக் கண்களைச் சுருக்கிக் கேள்வி எழப் புன்னகைத்தான். யுதிஷ்டிரன் திரும்பி முதல்முதலில் நிமிர்ந்து கூர்ந்து பார்த்தான். அவன் கைகள் நடுங்கவில்லை. நெஞ்சம் நிமிர்ந்தது. மீண்டும் பிறந்ததுபோலப் புன்னகைத்தான். குத்துக்காலில் உட்கார்ந்திருந்தவன் அங்கவஸ்திரத்தை இழுத்துத் தரையில் படாமல் தோளில் போட்டுக் கொண்டு, தரையில் அழுந்த உட்கார்ந்தான். உடம்பிலிருந்து பெரிய எடை இறங்கியதுபோல உடலை அசைத்தான். ”எதுவும் தூரத்தில் இல்லை, எல்லாம் அருகில்தான் இருக்கிறது” என்று தரையில் கிறுக்கினான்.
காதலி முன் பேச்சு வராமல் தவிக்கும் காதலன்போலப் பார்த்தன் தலை குனிந்தான் தலை குனிந்தான். நீண்ட நாட்களுக்குப் பின் இதழில் மென்னகை பூத்தது. தன்னாலும் சிரிக்க முடியும் என்பதை நம்பினான். சில விஷயங்கள் எளியவைதான். அது எளியவை அல்ல என்பதை வாழ்க்கை உணர்த்துகிறது.
‘’விஜயரின் வில் பேசும் என்பது தெரியும். விஜயரும் பேசுவார். அதுவும் கவிதை பேசுவார் என்பது இன்றுதான் அறிந்தேன். இதற்காக நாம் கானகம் வரவேண்டியிருக்கிறது. விலை அதிகம்தான். ஆனாலும் அதுவும் நன்று. கண்ணனின் தோழருக்குக் கவிதை வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். ஒருவேளை கண்ணனின் தங்கையிடம் கற்றிருப்பார்.” என்று மீண்டும் சிரித்தாள்.
ஒரு சொல்லும் அவளிடம் கேலி இல்லை. ஆனால் பார்த்தனுக்கு வலித்தது. கண்ணனின் தங்கை என்றபோது அதில் கனல் இருந்தது. அவள் நெஞ்சம் ஏறி இறங்கி மூக்குச் சிவந்து மூச்சுச் சீறியது. விஜயன் என்ற பெயரை அவள் உச்சரித்ததும் காயத்தில் கொதி எண்ணெயை ஊற்றியதுபோல எரிந்தது. உலகில் யாரிடமும் தோற்காத காண்டீபம் ஒரு புல் என இருக்கும் காலமும் வரும் என்று அவன் எண்ணியது உண்டா? அவள் பார்க்காமல் இருக்க விழிகளைத் திருப்பிக் கொண்டான். அவளும் அவள் விழிகளைத் திருப்பிக் கொண்டாள். அங்கிருந்து நகர்ந்துவிடத் திரும்பினான் பார்த்தன்.
‘இனியவரே’ என்ற அவள் குரலின் குழைவு அவனை நகரவிடவில்லை. திரும்பாமல் நிலம் நோக்கி நின்றான். திரௌபதியின் வாசம் அருகில். திரும்பியவன் அவள் இமைகளின் ஈரத்தைச் சுண்டுவிரலால் நீக்கினான்.
”உயிர் போகிற வலி இருந்தாலும் யானைகள் அலறாது, துடிக்காது இனியவரே” என்றபடி அவள் தன் முந்தானையால் அவன் கண்களை ஒற்றினாள்.
”நாம் வெறும் மனிதர்கள் மட்டும் தேவி” என்றபோது அவன் உதடுகள் கோணின.
”மனிதம் மட்டுமே வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும் இனியவரே!” என்றவள் விலகி நின்று ”என்னிடம் என்ன பேசவேண்டும், சில நாட்களாய் அவதிப்படுகிறீர்கள்” என்றாள்.
‘எப்படி அறிந்தாள்?” அன்னையின் வடிவு. குழந்தையின் முகம். தித்திக்கும் சொற்கள். உடல் முழுவதும் பரவும் பரிவு. அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவேண்டும் என்ற தவிப்பு. கைகளை இறுக்கி மூடிக்கொண்டான்.
என்ன நடந்தால் என்ன? அன்பு, காமம், ஆசை, கோபம் எல்லாம் இடம் கிடைக்கும் போதெல்லாம் துளிர்த்துவிடுகிறது. அதன் விழைவு வேர்கள் அறுபடுவதே இல்லையோ? இமைக்கணத்தில் துளி என விழுந்து கடலாகித் தடம் தெரியாமல் ஆழ மூழ்கடித்து விடுகிறது.
மீன் துள்ளி அவள் காலுக்கடியில் விழுந்தபோது அவள் கல்லில் இருந்து சாய்ந்தது தெரியாமல் அல்ல, நான் தாங்கிக் கொள்வேன் என்ற தைரியத்தில்தானா?
பார்த்தன் கால்களை அழுந்த பூமியில் பதித்தான். இதழ்கள் மலர்ந்தன. பார்வை அகத்திற்குத் திரும்பியது. நெற்றிப்பொட்டில் மனம் குவிந்து நின்றது. தலைக்குமேல் வானம் விரிந்து விரிந்து போனது. தலைக்குள் ஒளி வட்டங்கள் மின்னின. சென்னியில் திருவடித் தாமரை மலர்ந்தது போன்ற சிலிர்ப்பு.
”கானகத்திற்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. நீங்கள் காண்டீபப் பயிற்சி செய்யவே இல்லை. நீங்கள் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள். பீமருக்குத் தனியாகப் பயிற்சி தேவை இல்லை. அவர் செய்யும் ஒவ்வொரு வேலையும் மல்லருக்கான பயிற்சிதான். பேரரசருக்கும் அப்படித்தான். சொல்வளர் கட்டுக்குள் புகுந்து சொற்கனிகள் உண்டு சொல்லாகவே மாறிவிடுவார். அவர் வேண்டும் என்றால் பகடை பழகலாம். இதை கோபத்தில் சொல்லவில்லை. அவர் உண்மையை தேடுபவர். தோல்வி பொய் என்று அவருக்குத் தெரியும். அவர் பொய்யைப் பொய்யாக்கிவிடுவார்.” இளையவர்கள் இருவரும் பரியும் பசுவும் மேய்க்கிறார்கள். அதுவே அவர்களுக்கு வித்தையும் ஞானமும் கொடுத்துவிடும்.
நீங்கள் படித்தது தனுர்வேதம். அதை ஓதவேண்டியது உங்கள் கடமை. கல்வி கற்பவனையே காதலிக்கிறது. கல்வி விலகா காதலி. என்றும் இளையவள். எப்பொழுதும் இனியவள். அவள் தன்னைக் காதலிப்பவனை அமுதூட்டிச் சிரஞ்சீவி ஆக்குகிறாள். நீங்கள் வில்வித்தை கற்பதில் ஓய்வு கொள்ளாதீர்கள். யார் கண்டார்கள், நாம் பெரும் போர் செய்தே நம் நாட்டை மீட்க வேண்டி இருக்கலாம்.’’ என்றவள் ‘’இளையவர்கள் பசி தாங்க மாட்டார்கள். அவர்கள் வருவதற்குள் சமைத்துவிட்டு வருகிறேன்.” என்று அவன் பதிலுக்குக் காத்திராமல் குடிலுக்கு நடந்தாள்.
”ஏன் எனக்குப் பசிக்காதா?” என்றவன், இவ்வளவு நெருக்கமாகக் கிருஷ்ணையிடம் பேசியது உண்டா? என்ற எண்ணத்தில் மூழ்கினான்.
அவளுக்குள் பரவிய கூச்சம் நடையில் தெரிந்தது. இடுப்பில் வைத்திருந்த அரிசிப் பானையை இடது கையால் அழுந்த அணைத்தபடி, வலது கையால் சேலையை இழுத்து மார்பை மூடியவள், பின்புறம் புடவைச் சுருக்கத்தைத் தடவி இழுத்துச் சரிசெய்தாள்.
“அவர்கள் முன் நான் குந்தி அத்தையாகிறேன்,” என்றாள், திரும்பாமல் நடந்து போனாள். அந்த கணத்தில் அவளின் உயரம் கூடியதுபோல் அவன் உணர்ந்தான்.
அவள் மெல்லச் சிரிப்பது அவள் முதுகில் தெரிந்தது. குடிலுக்குள் நுழையும் முன், தத்தித் தத்திப் பின்னால் வந்த பறவைகளுக்கு அரிசியை அள்ளித் தூவிவிட்டு, குடிலுக்குள் நுழைந்தாள். குடிலுக்கு அருகில் படர்ந்திருந்த வசந்த மல்லிகைக் கொத்து ஒன்று அவள் தோளில் தட்டியது.
பார்த்தன் காண்டீபத்தை எடுத்தான். மலைக் குகையில் தன் துணை மற்றும் குட்டிகளுடன் படுத்திருந்த ஆண் சிங்கம் எழுந்து, பிடரி உலுக்கிக் கர்ஜனை செய்தது. காண்டீபத்திலிருந்து எழுந்த ஒலி, எதிர்ச் சிங்கம் கர்ஜிப்பதுபோல் காடே அதிர்ந்தது.
பார்த்தன் அம்பை எய்து எய்து, கணக்கிலாத் தூரத்தை இலக்கை வென்றுகொண்டிருந்தான். தானே தனக்குக் கற்பித்துக் கொண்டிருந்தான். தன்னைத் தானே வென்றுகொண்டிருந்தான். குருவும் சீடனும் ஒன்றாகும் புள்ளியில் நின்று மையம் கண்டான். அந்த நொடி முடிந்ததும், “இன்னும் வெகுதூரம்” என்பதுபோல் வெறுமையில் விழுந்தான். அந்த வெறுமையை வெல்ல மீண்டும் தொடங்கினான். கல்வியோ, கலையோ, அதன் ஆடலே இதுதானோ? தேடல், தெளிவு, உண்மை; உண்மை, தெளிவு, தேடல். கீழிருந்து உச்சிக்கு. உச்சியிலிருந்து தரைக்கு. எங்கே நிற்பது? காண்டீபத்திலிருந்து அம்பு பறந்துகொண்டே இருந்தது.
திரௌபதி பொங்கும் பானையில் கழுவிய அரிசியை அள்ளிப் போட்டாள். அவிழ்ந்து அவளை மூடியிருந்த கூந்தல் அடுப்பில் பட்டுவிடாமல் சற்றுத் தள்ளி அமர்ந்து, ‘பார்த்தன் என்ன கேட்கப்போகிறான்’ என்ற நினைப்பில் எரியும் அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள். அடுப்பில் எரியும் தழல் ஒளி, அவள் கூந்தலில் நுழைந்து அவளை அக்கினிச் சிலை போல் செய்தது.
உடைத்த விறகுகளை அள்ளிச் சேர்த்து, மழையில் நனைந்துவிடாமல் இருக்கப் பாதுகாப்பாய், ஆலமர அடியில் வீடுபோல் இருந்த பொந்தில் வைத்த பீமன், தாமரைக் குளத்திற்கு நீந்தப் போனான். யுதிஷ்டிரர் குளித்துவிட்டு வந்து கமலாசனத்தில் அமர்ந்து தன்னில் மூழ்கினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரால் தியானத்தில் அமர முடிந்ததை, பார்த்தன் அம்பு எய்தபடியே பார்த்தான்.
ஒரு அம்பை அதிவேகத்தில் எய்து, அது இலக்கைத் தொடப்போகும்போது, மறு அம்பை எய்து அதைத் தடுத்து, தன்னிடமே வரவழைத்தான். வந்த அம்பைத் தன் கை அம்பால் அடித்து, இரண்டையும் ஒன்றாகவே வானுக்கு அனுப்பினான். அங்கிருந்து இரண்டும் பிரிந்து, இருவேறு பாதையில் அவனிடமே வந்தது. இரண்டு அம்பையும் பிடித்து, அம்பறாத் தூளியில் இட்டவன், காண்டீபத்தைக் கண்ணில் ஒற்றி, மகிழ மரத்தில் மாட்டி வைத்துவிட்டு நீர் ஆடப் போனான்.
நகுலனும் சகாதேவனும் காட்டில் தேடிக் கொணர்ந்த தேன், கனிகள், கிழங்குகளைத் திரௌபதியிடம் கொடுத்துவிட்டு, மாடுகளையும் பரிகளையும் அவற்றிற்குரிய இடத்தில் கட்டினார்கள். சகாதேவன் பால் கறந்து, அருகில் உள்ள ஆசிரமத்திற்கு எடுத்துப்போனான். நகுலன் தேடி எடுத்துவந்த நோய் தீர்க்கும் மூலிகைகளை ஆசிரமத்தில் கொடுக்க அவன்கூடச் சென்றான்.
வன உயிர்கள் தீயில் மடிந்துவிடக் கூடாது என்பதால், அவர்கள் இரவில் அனல் எழுப்புவதில்லை. கதிரவன் இருக்கும்போதே ஐவரும் உண்டார்கள். திரௌபதி, ஐவரும் உண்டபின் உண்டாள். நகுலனும் சகாதேவனும் அவளுக்கு உதவினார்கள்.
அஸ்தினபுரியிலிருந்து வந்த பின்பு இன்றுதான் பார்த்தன் பாடினான். மெல்லிய ராகத்தில் பாடியபடி, மகிழ மரத்தடியில் நிலவொளியில் காத்திருந்தான். அவனையும் அறியாமல், தாளத்திற்கு ஏற்றவாறு அவன் கைகள் அபிநயம் பிடித்தன. நிலவொளியில் நிழற்சிலைபோல நடந்து வந்த திரௌபதி, பார்த்தன்முன் அவன் தொடாத தூரத்தில் அமர்ந்தாள். பார்த்தனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
“இனியவரே!” நீண்ட நாட்களுக்குப் பின் “விஜயரைப் பார்த்தேன்” என்று திரௌபதி பேச்சைத் தொடங்கினாள்.
“உன்னால்தான் மீண்டேன் தேவி! பேரரசர் கூட மீண்டுவிட்டார்”
“நல்லது. வாழ்வென்பதே அதுதானே இனியவரே! நிலவின் ஒளியால் அந்த இடத்தை மனதில் அழியாச் சித்திரக்கூடமாக்கினாள். சற்றுமுன் பார்த்த இடமா இது?” என்று அதிசயித்தான்.
“உங்கள் மனைவியிடம் பேச இத்தனை நாள் ஏன் தவித்தீர்கள்?” அவள் நீண்ட, கூர்ந்த நாசி, கற்சிலையின் நாசிபோல் நிலவொளியில் பளபளத்தது. அதில் ஒரு காலத்தில் மின்னிய மாணிக்க மூக்குத்தியை எண்ணினான் பார்த்தன். பெரும் மூச்சு எழுந்தது.
“பகடையாட்டத்திற்குப் பின்னும், துச்சாதனன் கொடும் செயலுக்கு மௌனமாய் இருந்தப் பின்னும் உன்னோடு பேச முடியும் என்று என்னை நான் எப்படி நம்ப வைப்பது, தேவி!” பார்த்தன் குரல் தழுதழுத்தது. மேலும் பேச முடியாமல், மேலே பார்த்தான். முழு நிலவின் ஒளி, இலைகள் வழியாகப் பனித் துகளாக வழிந்தது. தூரத்தில் விளா மரத்தைச் சுற்றி மின்மினிகள் பறந்தன.
திரௌபதியின் நீண்ட மூச்சொலியால் அசைந்து திரும்பி, அவளைப் பார்த்தான். நிலவொளியில் நெய்த துகில் கூடத்திற்குள் கொலுவிருப்பதுபோல் சிலையாகி இருந்தாள். அவள் கண்கள் தூரத்தை நோக்கின. அவள் தனக்குள்ளேயே பார்க்கிறாள் என்று பார்த்தன் புரிந்து கொண்டான். சிலையின் புன்னகைபோல அவள் முகத்தில் புன்னகை படர்ந்திருந்தது. “எப்போதும் எப்படிப் புன்னகையோடு இருக்கிறாள்? எப்படி அந்தக் கணத்தைக் கடந்தாள்? கனத்தைத் துறந்தாள்?
“இதை எப்படி அவளிடம் கேள்வியாய்க் கேட்பது? துகில் உரியும்போது எப்படி இருந்தது என்றா? கண்ணன் துகில் வழங்கியபோது எதை உணர்ந்தாய் என்றா? எப்படி இந்த நிகழ்விலிருந்து மீண்டாய் என்றா? ஏன் அந்த நிகழ்வை நினைத்தேன்? நடக்கக் கூடாதது நடந்துவிட்டால் அதை மறந்துவிட்டுச் செல்ல வேண்டும். ஏன் அதை மனதில் ஓட்டி ஓட்டிப் பார்த்தேன்? திரௌபதி மன ஓட்டத்தைப் படித்துவிட்டாள். “இப்போது எப்படி கேட்பது? என்ன கேட்பது?” பார்த்தனால் பேச முடியவில்லை. பொய் சொல்லவும் விருப்பம் இல்லை. ‘கண்டுபிடித்துவிடுவாள்’.
“சொல்லுங்கள் இனியவரே! என்ன என்னிடம் கேட்க வேண்டும்?”
“வேண்டாம் தேவி, அதைக் கடந்து செல்வோம்”
“இது நடக்காதது அல்ல, விஜயரே! எந்த இழிவும் நமக்கு நடக்காதவரை அது சம்பவம் மட்டும்தான். நமக்கு நடந்தால் மட்டும்தான் துயரம்.”
பார்த்தன் பதறிப்போனான், நெஞ்சு ஏறி இறங்கித் துடித்தது.
“இந்த இழிவை நீங்கள், நான், எல்லோரும் பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் நமக்கு வலித்திருக்காது. வலிக்காததற்கு ஒரு காரணம் நமக்குச் சொல்லப்பட்டிருக்கும். கடந்துபோயிருப்போம்.” பார்த்தன் தலை கனத்தது, பின் மண்டையில் படீர் படீர் என்று அறைந்துகொண்டான். அதற்குமேல் பேசாமல் எழுந்து சென்றுவிடலாம் என்று நினைத்தான்.
தோள்பட்டை இறுகிக் கனத்தது. உடலின் ஒவ்வொரு அணுவிலும் கனல் ஊசிகள் ஏறும் வலி. விழுந்து புரளலாம்போல் இருந்தது. “வேண்டாம், செல்வோம்” என்றான். ஆனால் எழுந்திருக்க முடியவில்லை.
அவள் இனிமையாக ஏதேனும் பேச மாட்டாளா? என்று மனம் ஏங்கியது. உடலில் அமுதம் ஊறாதா? என்று தவித்தான். கானல் நீரைத் தேடி ஓடுபவன் நாவில், பனிக்கட்டி மழை விழ வேண்டாம்; விசும்பின் துளியாவது விழுந்தால் போதுமே!
ஆண் எவ்வளவு பெரிய சுயநலக்காரன்! பெண்ணிடம் அவன் வேண்டிக்கொண்டே இருக்கிறான். அவள் காயங்களிலும் தேன் ஊறாதா என்று நக்கிப் பார்க்கிறான். பார்த்தனுக்கு ‘ஓ’ என்று கத்திக்கொண்டு ஓடி, அருகில் உள்ள ஓடையில் குதிக்க வேண்டும்போல் அகம் எரிந்தது.
திரௌபதி சற்று நகர்ந்து, மெல்லக் கை நீட்டி அவன் நெஞ்சத்தைத் தொட்டாள். குழைவான குளிர் விரல்கள். பார்த்தன் நெகிழ்ந்தான். அந்தக் கைகளை அப்படியே நெஞ்சோடு வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும்போல் உருகினான். கண்கள் சிவந்து காந்தியது.
“அமைதி அடையுங்கள்” என்றாள். தன் கையை எடுத்துத் தனது மடியில் வைத்துக் கோர்த்துக்கொண்டாள். காற்றில் பறந்த முடி, அவள் நெற்றியில் சுருண்டு விழுந்து, கண்களை மறைத்து அழகைக் கூட்டியது. தனது விரலை நீட்டி அதை ஒதுக்கப் போனவன் நிறுத்திக்கொண்டான். அவளே தனது புறங்கையால் ஒதுக்கினாள். அந்த நொடியில் அவளுக்குள்ளிருந்து ஒரு மயில் எழுந்து எட்டிப் பார்த்து மறைந்தது. அவள் தொண்டைக்குழி மெல்லத் துடித்தது. அவள் கழுத்தோரம் சுருண்டிருந்த பூ முடிகள், நிலா ஒளியில் ஈரம் கொண்டிருந்தன. இரவில் மலரும் பவழ மல்லி வாசம் கனமாக வந்து தாக்கியது. அருகில் இருந்த குளத்திலிருந்து அல்லிகள் மலரும் வாசம் எழுந்து வந்து சூழ்ந்தது. அதற்குமேல் அங்கு இருக்க வேண்டாம் என்று எண்ணினான்.
“தேவி, நீ குடிலுக்குச் செல். நான் மல்லர் உருவாக்கி வைத்திருக்கும் புல் படுக்கைக்குச் செல்கிறேன்” என்றான். குரலில் கனமும் கண்டிப்பும் இருந்தது.
திரௌபதியின் உடலில் ஒரு சிலிர்ப்புத் தோன்ற, மெல்ல அசைந்து இதழ் பிரியாமல் புன்னகைத்தாள். பார்த்தனுக்கு அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவளை அருகில் வைத்துத் தாங்கிக்கொள்வதும் கடினமாக இருந்தது.
“ஆணுக்கு உடம்பு ஒரு ஆயுதம் மட்டும்; அது போட்டி போடும், வெட்டும், வெட்டப்படும். பெண்ணுக்கு உடம்பே இதயம். கையளவு இதயம் கொண்ட ஆணுக்கு அது எப்படிப் புரியும்? வயதோ, கல்வியோ, குலமோ அதைப் புரியவைத்துவிட முடியாது. அதனால்தான் பெண்ணின் உடல் இங்கு காட்சிக்கு இழுக்கப்படுகிறது.” அவளுக்குள் அனல் எழுந்து ஆடியது. கண்ணாடிக் குவளைக்குள் வைக்கப்பட்ட தீபம்போல் அவளுக்குள் எரியும் அனலை அவன் பார்த்தான். “குளிர்ந்த நதியில் தீபத்தை ஏற்றி மிதக்க விடுவதுபோல், குளிர்ந்திருந்த அவளுக்குள் மீண்டும் அனலை ஏற்றி வைத்து விட்டேனோ?” என்று முகம் வாடினான்.
“என்ன கேட்க நினைத்தேன்?” அவனுக்குள் கேள்வியே எழவில்லை. அவளிடம் பேச வேண்டும் என்ற வேட்கையில் குழப்பிக்கொண்டேனா? ஏதாவது உதவி செய்வதுபோலப் பேசியிருக்கலாமே? ஏன் சிறு விஷயத்தையும் பெரியதாகக் குழப்பிக்கொள்கிறேன்? பெரிய வலி ஏற்படும்போது, சிந்தனை சிறு சிறு விஷயங்களைக் கையாள முடியாமல் தவிக்கிறது.
அவன் முக வாடலைக் கண்ட திரௌபதி, அவன் மகிழ மெல்லச் சிரித்தாள். “விடுங்கள் விஜயரே! பெரும் பிரச்சினைகள் வரும்போது பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்” என்று எழுந்தவள், தன் பின்புறத்தைத் தட்டி அங்கிருந்த புற்களைப் பறக்கவிட்டாள். கண்ணுக்குத் தெரியாத தேவதைகள் நடுவிலிருந்து எழுந்தவள், அவர்கள் உடன்வரச் செல்வதுபோல் சென்றாள். எங்கிருந்தாலும் அவள் சக்கரவர்த்தினிதானே!
“தேவி!”
நின்று திரும்பிப் பார்த்து, “என்ன வேண்டும், குழந்தாய்?” என்பதுபோல் நோக்கினாள்.
“தேவி! அந்தக் கணத்தில் எப்படி கண்ணனை அழைத்தாய்?” “இத்தனை நாளாய் இந்தக் கேள்விக்குத்தான் தவித்தேன், கிடைத்துவிட்டது!” என்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் அவனை உந்தி எழுப்பியது.
திரௌபதி முகம் ஒளிர்ந்தது. விழிகள் கனிந்தன. இதழில் புன்னகை பூத்தது. விளா மரத்தைச் சுற்றிப் பறந்த மின்மினிகள் ஏனோ நகர்ந்தன. அதனால் தூரத்தில், அவள் சிரசுக்குப் பின்னால் மின்மினிகளின் ஒளிக்கோலம்.
“நம்மிடமிருந்து நம்மைத் துறப்பது அத்தனை எளிதில்லை, விஜயரே! அந்தக் கணத்தில் என்னிடமிருந்து என்னை நான் துறந்தேன், இனியவரே! அந்தக் கணம் எனக்கு வாய்த்தது. எனக்குள் நான் இல்லாதபோது வேறு யார் அங்கு இருப்பார்கள்? கண்ணன் வந்தான் என்றார்கள்.” என்றவள், காற்றும் கசங்காமல் மெல்ல நடந்தாள்.
பெண்வேடமிட்ட கண்ணன் நடந்து போவதுபோல் இருந்தது. குனிந்து கையில் கிடைத்த மகிழ மலர்களை அள்ளி, அவள் பாதம் பதிந்த இடத்தில் தூவினான்.
திரௌபதி திரும்பாமல் கடைக்கண்ணால் அதை நோக்கிப் புன்னகைத்துத் தன் நெஞ்சத்தைப் பார்த்தாள். மாலையில் பார்த்தன் சிரசிலிருந்து விழுந்த மலர்கள் அவள் தனத்தின்மீது மணத்துக் கொண்டிருந்தன.
https://solvanam.com/2026/01/11/சரணாகதி/
By
கிருபன் ·