Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும்

December 2, 2025

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

இலங்கை முழுவதும் இயற்கையின் சீற்றத்தினால்  பேரிடருக்கு  உள்ளாகியிருக்கின்ற  நிலைவரத்துக்கு  மத்தியிலும் கடந்த வாரம் வடக்கு, கிழக்கில் மாவீரர் வாரம் முன்னென்றுமில்லாத வகையில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டிருக்கிறது. இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிரதான நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவில் மக்கள் அணிதிரண்டது குறித்து செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்கள் விடுதலை புலிகளின் காலத்தில் கூட இந்தளவுக்கு பிரமாண்டமானதாக மாவீரர்தின நிகழ்வை காணக்கூடியதாக இருந்ததில்லை என்று கூறியிருந்தன..

விடுதலை புலிகள் இயக்கம் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருக்கின்ற போதிலும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 வது பிறந்த தினமான நவம்பர் 26 புதன்கிழமை வடக்கு,  கிழக்கில் பல்வேறு இடங்களில்  அவரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. போரில் பலியானவர்களை நினைவுகூருவதன் பேரில் விடுதலை புலிகளை புகழ்ந்து போற்றும் நிகழ்வுகளுக்கு இடமளிக்க முடியாது என்று அரசாங்கத் தரப்பில் தொடக்கத்தில் கூறப்பட்ட போதிலும், பிரபாகரனின் பிறந்ததினக் கொண்டாட்டங்களை தடுப்பதற்கு பொலிசாரோ அல்லது படையினரோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு இரண்டாவது தடவையாக கொண்டாடப்பட்ட மாவீரர் வாரம் இதுவாகும்.  இலங்கை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒரு அறையில் இலங்கை தமிழரசு கட்சியின்  கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கார்த்திகைப்பூவின் முன்னால் தீபமேற்றி நினைவேந்தல் செய்து படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர்.  முன்னென்றுமில்லாத வகையில் இந்தத் தடவை பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்க் கட்சிகளின்  உறுப்பினர்கள் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்ற வேளைகளில்  மாவீரர்களை நினைவேந்திய வண்ணமே தங்களது பேச்சுக்களை ஆரம்பித்தையும் பிரபாகரனுக்கு பிறந்ததின வாழ்த்துக் கூறியதையும்  காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அதற்கு அரசாங்கத் தரப்பில் இருந்தோ அல்லது எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தோ எவரும் ஆட்சேபம் தெரிவிக்கவுமில்லை. 

கடந்த வருடமும் கூட மாவீரர்வாரக் கொண்டாட்டங்களை அமைதியான முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்தது. ஆனால், கடந்த வருடத்தை விடவும் இந்த தடவை கொண்டாட்டங்களில் கூடுதலான அளவுக்கு உத்வேகத்தை காணக் கூடியதாக இருந்தது. வடக்கு, கிழக்கில்  தமிழ் அரசியல் கட்சிகள் குறிப்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசு கட்சியும் நினைவேந்தல்களில் தீவிரமாக பங்கேற்றன. முன்னர் இத்தகைய நினைவேந்தல்களில் பெருமளவுக்கு அக்கறை காட்டாத தமிழரசு கட்சியின் பொதுச்  செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் போன்றவர்களும் கூட கடந்த வாரம் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான இராமலிங்கம் சந்திரசேகரும் மாவீரர்களை நினைவுகூர்ந்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் போரை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு தத்துவார்த்த வழிகாட்டியாகச்  செயற்பட்ட ஜனதா விமுக்தி பெரமுனக்கு  (ஜே.வி.பி.) தமிழ் மக்களின் விமோசனத்துக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவேந்தல் செய்வதற்கு எந்த தகுதியும் கிடையாது என்று பாராளுமன்றத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் செய்தததையும் காணக்கூடியதாக இருந்தது.

எது எவ்வாறிருந்தாலும், முன்னைய அரசாங்கங்களைப் போலன்றி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க  தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்நாட்டுப்போரில் இறந்தவர்களை  எந்தவிதமான இடையூறுமின்றி சுதந்திரமாக நினைவு கூருவதற்கு தமிழ் மக்களை அனுமதித்தது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒரு செயலாகும். 

ஜே.வி. பி.யின் தாபகத் தலைவர் றோஹண விஜேவீர உட்பட அரச படைகளினால் கொல்லப்பட்ட  தங்களது முன்னைய தலைவர்களையும்  இரு ஆயுதக் கிளர்ச்சிகளிலும் பலியான இயக்க உறுப்பினர்களையும் வருடாந்தம் நினைவேந்தல் செய்து வரும் அரசாங்கத் தலைவர்கள் உள்நாட்டுப்போரில் உயிர்தியாகம் செய்த தமிழ்ப் பேராளிகளும் பலியான மக்களும் நினைவுகூரப்படுவதை தடுப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல  என்ற தர்க்கநியாயத்தின் அடிப்படையிலேயே  மாவீரர்தின நிகழ்வுகளை சுதந்திரமாக நடத்துவதற்கு அனுமதிக்க தாங்களாகவே நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் எனலாம்.

ஜே.வி.பி. 1994 ஆம் ஆண்டு தொடக்கம் ‘நவம்பர் வீரர்கள் தினத்தை’ அனுஷ்டித்து வருகிறது. விஜேவீர கொழும்பில் 1989 நவம்பர் 13 ஆம் திகதி கொல்லப்பட்டதால் வருடாந்தம் அன்றைய தினத்தில் அவர்கள் நினைவு நிகழ்வை நடத்திவருகிறார்கள். இறுதியாக இரு வாரங்களுக்கு முன்னர் நவம்பர் 14 கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஜனாதிபதி  அநுர குமார திசநாயக்க தலைமையில் நவம்பர் வீரர்கள் தின நிகழ்வு இடம்பெற்றது. 

அதேவேளை, மாவீரர் தினத்தை விடுதலை புலிகள் 1989 ஆம் ஆண்டு அனுஷ்டிக்கத் தொடங்கினர். அரசாங்க படையினருடனான மோதலில் முதன்முதலாக இயக்கப் போராளி (சங்கர் என்ற சத்தியநாதன்) 1982 நவம்பர் 27 ஆம் திகதி கொல்லப்பட்ட காரணத்தினால் மாவீரர் தினத்தை வருடாந்தம் அனுஷ்டிப்பதற்கு அன்றைய தினத்தை  அவர்கள் தெரிவு செய்தனர். பிரபாகரனின் பிறந்ததினம் நவம்பர் 26 ஆம் திகதியாகும். 

முதலாவது மாவீரர்தினம் முல்லைத்தீவு காட்டுக்குள் அனுஷ்டிக்கப்பட்டபோது வடக்கு, கிழக்கில் இந்திய படையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் 1990 மார்ச் மாதம் முற்றாக வெளியேறியதை தொடர்ந்து விடுதலை புலிகள் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பகுதிகளில் மாவீரர்தின நிகழ்வுகளை விரிவுபடுத்தினர். அந்த தினத்தில் பிரபாகரன் முக்கியமான உரையை நிகழ்த்துவதும் வழக்கமாக இருந்தது. 

2009 மே மாதம் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு ராஜபக்சாக்களின் ஆட்சியில் மாவீரர்தின நிகழ்வுகளை பகிரங்கமாக நடத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஆனால், சில சிவில் சமூக அமைப்புக்களின் உதவியுடன் எளிமையான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆங்காங்கே இடம்பெற்றன.  ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து படிப்படியாக விரிவான முறையில் அந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுவந்தன. தற்போது பரந்தளவில் மக்களின் பங்கேற்புடன்  நடத்தப்பட்டுவரும் மாவீரர் வார நிகழ்வுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் தீவிரமான ஈடுபாட்டைக் காண்பிக்கின்றன. 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களும்  காணாமல் போனோரினதும்  உயிரிழந்த போராளிகளினதும்  குடும்பங்களும் இதுவரையில் தங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில்  கவலையையும் வேதனையையும் வெளிக்காட்டுவதற்கு  நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவில் அணிதிரண்டு  பங்கேற்கிறார்கள். 

ஆனால், போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு ஏற்ற  முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் இருக்கும் தமிழ்க் கட்சிகள்  தியாகங்களும் அழிவுகளும் நிறைந்த போராட்டகால நினைவுகளுடன் தமிழ் மக்களைக் பிணைத்து வைத்திருப்பதில் குறியாக இருக்கின்றன. பல தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, நினைவேந்தல்களே அவை  முன்னெடுக்கின்ற பிரதான அரசியல் செயற்பாடுகளாக இருக்கின்றன. தங்கள் சொந்தத்தில் கொள்கைகளை வகுத்து தமிழ் மக்களை வழிநடத்த முடியாத நிலையில் இருக்கும் இந்த கட்சிகள் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில சக்திகளின் உதவியுடன் கடந்த காலப் போராட்டங்களை நினைவுபடுத்துவதில் காலத்தைக் கடத்துகின்றன.

விஜேவீரவோ அல்லது பிரபாகரனோ விட்டுச் சென்ற இடத்திலிருந்து அவர்களின் போராட்டத்தை எவரும்  தொடர முடியாது. அரசியல் யதார்த்தத்தை தெளிவாக விளங்கிக் கொண்ட ஜே.வி.பி.யினர்   ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து   பாராளுமன்ற அரசியலின் மூலமாக இன்று அதிகாரத்தையும் கைப்பற்றிவிட்டனர். விஜேவீரவை வருடம் ஒருமுறை நினைவு கூருவதை தவிர,  அவரது கொள்கைகளைப் பற்றி அவர்கள் பெரிதாகப் பேசுவதில்லை.

தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அவதாரத்துடன் இன்று ஆட்சியை நடத்துகின்ற ஜே.வி.பி. தலைவர்கள் பழைய கொள்கைகள் பலவற்றைக் கைவிட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு இசைவான முறையில் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டதாக பகிரங்கமாக கூறுகிறார்கள். 

விஜேவீர அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக  இரு  ஆயுதக் கிளர்ச்சிகளை  வெவ்வேறு காலகட்டங்களில்  முன்னெடுத்தார். ஆனால், தோற்கடிக்கப்பட்ட பிறகு புதிய சூழ்நிலைகளில் அரசியலில் எவ்வாறு மீண்டெழுவது என்பதை அவரின் இயக்கத்தில் எஞ்சியிருந்தவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.

 பிரபாகரன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு தனிநாடொன்றை அமைப்பதற்காக ஆயுதமேந்திப் போராடினார். ஆனால், பிரபாகரனின் இயக்கத்தைப் பொறுத்தவரை, அவ்வாறு மீண்டெழுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. விடுதலை புலிகள் இயக்கம்  இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டிருக்கிறது. விடுதலை புலிகள் இயக்கத்தின் பழைய போராளிகள் சிலர் சேர்ந்து அமைத்த அரசியல் கட்சி ஒன்று தற்போது ஜனநாயக அரசியலில் இருக்கிறது.  ஆனால், அந்த கட்சியைச் சேர்ந்த எவரையும் தமிழ் மக்கள் பிரதேச சபைக்குத் தானும் இதுவரையில் தெரிவு செய்யவில்லை. 

இத்தகைய பின்புலத்தில்,   நினைவேந்தல் அரசியலையே தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களை எதுவரைக்கும் கொண்டுசெல்ல முடியும் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் சிந்தித்துப் பார்க்க வேணடும். பிரதேச சபை தொடக்கம் பாராளுமன்றம் வரை நினைவேந்தலை முதன்மைப்படுத்துவதாகவே தமிழர் அரசியல் விளங்குகிறது. 

இந்தக் கருத்துக்களை தமிழர்களின் விமோசனத்துக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த போராளிகளை நிந்தனை செய்யும் நோக்கில் முன்வைக்கப்படுபவையாக வியாக்கியானம் செய்யவேண்டியதில்லை.  அவர்களின் தியாகங்களை நினைவுகூருவதை மாத்திரம் முக்கியமான அரசியல் செயற்பாடாக முன்னெடுப்பதன் மூலமாக தங்களது அரசியல் இயலாமையை மறைக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நோக்கியவையே இந்த கருத்துக்கள். 

இறுதியாக, மாவீரர்வாரத்தை சுதந்திரமாக கொண்டாடுவதற்கு அனுமதித்ததன் மூலமாக தமிழ் மக்களுக்கு பெரியதொரு விட்டுக்கொடுப்பைச் செய்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்க தலைவர்கள் நினைக்கக்கூடாது. இன்று அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடான மாகாணசபைகள் முறையை புதிய அரசியலமைப்பில் ஒழித்துவிடப்போவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆபத்தை உணர்ந்து தமிழ் அரசியல் தலைவர்கள்  செயற்பட வேண்டும். கற்பனையில் காலத்தைக் கடத்தினால் இறுதியில் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்காமல் போகும்.

https://arangamnews.com/?p=12467

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.