Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயரை வெல்ல முடியும் என்று காட்டிய ஹைதர் அலி கடைபிடித்த போர் வியூகம்

ஹைதர் அலி, மைசூரின் அரசர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மைசூர் மன்னர் ஹைதர் அலி

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,ரெஹான் ஃபஸல்

  • பதவி,பிபிசி ஹிந்தி

  1. 4 மணி நேரங்களுக்கு முன்னர்

1757-ஆம் ஆண்டு பிளாசிப் போரில் வெற்றி பெற்ற பத்தாண்டுக்குள், இந்திய மன்னர்களின் ராணுவத் திறன் விரைவாக அதிகரித்து வருவதையும், பிளாசி போன்ற வெற்றியை மீண்டும் பெறுவது கடினம் என்பதையும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் உணர்ந்தனர்.

ஐரோப்பியர்களின் ராணுவத் தொழில்நுட்பத் திறனுக்கு இணையாக இந்திய சுதேச சமஸ்தானங்கள் வர வெறும் பத்தாண்டுககள் மட்டுமே ஆனது. 1760-களின் நடுப்பகுதிக்குள், அவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான ராணுவ பலத்தின் இடைவெளி கிட்டத்தட்ட குறைந்துவிட்டதாகத் தெரிந்தது. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் சந்தித்த முதல் சவால் ஹைதர் அலியிடமிருந்துதான் வந்தது.

லெவின் பி. போரிங் தனது 'ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான்' (Hyder Ali and Tipu Sultan) என்ற புத்தகத்தில், "18-ஆம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தின் மையமாக மைசூர் இருந்தது. உலகின் கிழக்கு வரலாற்றுப் பகுதியில் மைசூர் மிகத் துணிச்சலான மற்றும் பரபரப்பான நடவடிக்கைகளின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்த பகுதியில்தான் ஆங்கிலேயர்கள் தங்கள் மிகவும் ஆபத்தான எதிரியை எதிர்கொண்டனர். இந்தப் பகுதியின் தலைவரின் பெயர் ஹைதர் அலி." என எழுதினார்.

ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சி வெறும் 38 ஆண்டுகளே நீடித்தாலும், இந்த குறுகிய காலத்தில் நடந்த சம்பவங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது.

ஹைதர் அலி, திப்பு சுல்தான்

பட மூலாதாரம்,Pharos Book

இயல்பிலேயே ஒரு போர் வீரர்

ஹைதர் அலி மைசூர் படையில் உயர் பதவியில் இருந்தார். 1776-ஆம் ஆண்டில் மைசூர் உடையார் மன்னரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவர் மைசூர் ராணுவத்தை விரிவுபடுத்தி, சிறிய அண்டை சமஸ்தானங்களைக் கைப்பற்றத் தொடங்கினார்.

இர்ஃபான் ஹபீப் தனது 'ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆட்சியின் கீழ் எதிர்ப்பு மற்றும் நவீனமயமாக்கல்' (Resistance and Modernization Under Hyder Ali and Tipu Sultan) என்ற புத்தகத்தில், "ஹைதர் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க பிரெஞ்சு தளபதிகளை அழைத்து வந்தார். ஸ்ரீரங்கப்பட்டினத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரெஞ்சு பொறியாளர்களின் உதவியை நாடினார். ஹைதர் தனக்கென கடற்படையை உருவாக்கவும் முயற்சி செய்தார். 1766-ஆம் ஆண்டில் அவரிடம் 2 பெரிய போர்க் கப்பல்கள், 7 சிறிய போர்க் கப்பல்கள் மற்றும் 40 சிறிய படகுகள் இருந்தன. இந்த அனைத்திற்கும் ஸ்டெனெட் (Stennett) என்ற ஐரோப்பியரே தளபதியாக இருந்தார்," என எழுதுகிறார்.

ஹைதர் அலி இயல்பிலேயே ஒரு போர் வீரராக இருந்தார் என்று கூறப்படுகிறது. அவர் குதிரை சவாரி செய்வதில் மட்டுமல்ல, வாளை கையாள்வதிலும் மற்றும் துப்பாக்கி சுடுவதிலும் திறமையானவராக இருந்தார்.

லெவின் போரிங் எழுதுகிறார்: "ஹைதருக்கு சோர்வை சகித்துக் கொள்ளும் அபார சக்தி இருந்தது. படைகளுக்குத் தலைமை தாங்கும்போது தன் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை, அதனால்தான் அவரது வீரர்கள் அவருக்காக எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள தயாராக இருந்தனர். ஹைதரின் சிறப்பு அம்சம், போரின் போது அமைதியாக இருந்து வேகமாக, திடீர் தாக்குதல்களைத் தொடுப்பது ஆகும், இதில் அவர் பெரும்பாலும் வெற்றி கண்டார்."

ஹைதர் அலி, திப்பு சுல்தான்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹைதர் அலி குதிரையேற்றத்திலும், துப்பாக்கிச் சுடுதலிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்

ஹைதரின் அன்றாட வாழ்க்கை

மேஸ்தர் லா டூர் தனது 'ஹைதர் மற்றும் அவரது மகன் திப்பு சுல்தானின் வரலாறு' (The History of Hyder and His Son Tipu Sultan) என்ற புத்தகத்தில், ஹைதர் சுமார் 5 அடி ஆறு அங்குல உயரம் கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மாநிறம் கொண்டவராகவும், கரடுமுரடான முகத்தைக் கொண்டவராகவும் இருந்தார். அவர் மைல்கள் கணக்கில் நடந்தோ அல்லது குதிரை மீது பயணம் செய்தோ கடக்கும் திறன் கொண்டவர். அவர் வெள்ளை மஸ்லின் ஆடைகள் மற்றும் தலைப்பாகை அணிய விரும்பினார்.

"அவருக்கு ஆபரணங்கள் மீது ஆர்வம் இல்லை. பார்க்க கவர்ச்சியாக இல்லாவிட்டாலும், அவரது தோற்றம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது. அவர் தினமும் நள்ளிரவில் தூங்கச் சென்று, காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவார்."

"மைசூர் மன்னரான பிறகு, அவர் தனது முகத்தில் இருந்த அனைத்து முடிகளையும் சவரம் செய்து கொண்டார். அவருக்கு தாடி, மீசை, இமைமுடிகள் அல்லது புருவங்கள் இல்லை. காலை 8 மணி முதல் 9 மணிவரை அவர் அரண்மனையில் இருந்து அரசவைக்கு வருவார், அதன்பிறகு பால்கனியில் ஏறி யானைகள் மற்றும் குதிரைகளின் மரியாதையை ஏற்றுக்கொள்வார். ஹைதர் படிப்பறிவில்லாதவர். தன் பெயரின் முதல் எழுத்தை (ஹை) எழுதுவதைக் கூட அவர் மிகவும் சிரமப்பட்டு கற்றுக் கொண்டார்."

ஹைதர் அலியால் கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் தமிழ் மொழிகளை சரளமாகப் பேச முடிந்தது. அவருக்கு பாரசீகம் மற்றும் அரபு மொழியைப் பற்றி எதுவும் தெரியாது. படிப்பறிவில்லை என்றாலும், அவருக்கு அபார நினைவாற்றல் இருந்தது. பல பத்தாண்டுகளுக்கு முன் சந்தித்த ஒருவரை அடையாளம் காணும் அபார திறன் அவரிடம் இருந்தது.

ஹைதர் அலி, திப்பு சுல்தான்

பட மூலாதாரம்,Getty Images

ஹைதரின் சகிப்புத்தன்மை

ஹைதரின் ஆட்சிக் காலத்தில் மத விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 1610-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்த மைசூரின் புகழ்பெற்ற தசரா திருவிழாவைத் தொடர அவர் அனுமதித்தார். அவர் தசரா திருவிழாவில் நேரடியாகப் பங்கேற்றார்.

விஜயதசமி நாளில் நடைபெறும் ஊர்வலத்தில் யானை மீது ஏறிச் செல்வதில் அவர் முன்னணியில் இருப்பார். மார்க் வில்க்ஸ் தனது 'மைசூர் வரலாற்றைக் கண்டறியும் முயற்சியில் தென்னிந்தியாவின் வரலாற்று ஓவியங்கள்' (Historical Sketches of the South of India in an Attempt to Trace the History of Mysore) என்ற புத்தகத்தில் "முஸ்லிம் மன்னர்கள் அனைவரிலும் ஹைதர் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர். அவருக்கு தனது மதப்படி பிரார்த்தனை செய்யவோ, நோன்பு இருக்கவோ தெரியாது, அவருக்கு கற்றுக்கொடுக்கப்படவும் இல்லை. அனைத்து மதங்களும் கடவுளால் கொடுக்கப்பட்டவை என்றும், கடவுளின் பார்வையில் அனைத்து மதங்களும் சமம் என்றும் அவர் பொதுவில் அறிவித்தார்." எழுதியுள்ளார்.

ஏ.கே. சாஸ்திரி தனது 'சிருங்கேரி தர்மஸ்தானின் பதிவுகள்' (The Records of the Sringeri Dharmasthan) என்ற புத்தகத்தில் "ஹைதர் 1769, ஏப்ரல் 27 அன்று சிருங்கேரி மடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ஹைதர் ஜகத்குருவுக்கு ஒரு யானை, ஐந்து குதிரைகள், ஒரு பல்லக்கு, ஐந்து ஒட்டகங்கள் மற்றும் தேவி சாரதா அம்பாளுக்கு ஒரு புடவை, இரண்டு சால்வைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் கொண்ட பணப்பையை பரிசாக அனுப்பியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஜகத்குருவை ஒரு சிறந்த மற்றும் புனிதமான ஆத்மா என்று குறிப்பிட்டுள்ளார்." என்று தெரிவித்துள்ளார்.

ராக்கெட் பயன்பாட்டின் முன்னோடி

ஹைதர் அலி, திப்பு சுல்தான்

பட மூலாதாரம்,Gyan Publishing House

1767ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹைதர் அலி கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போரை அறிவித்தார். அப்போது ஹைதரின் படையில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இந்த அளவுக்கு ஹைதரிடம் நவீனப் படை உள்ளது என்பது கம்பெனிக்கு அப்போது தெரியாது. ஹைதரின் வீரர்களின் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் அதிநவீன பிரெஞ்சு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அவரது பீரங்கிகளின் திறன் மற்றும் வீச்சு கம்பெனியின் படைகளை விட அதிகமாக இருந்தது.

பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ஜீன் மேரி லாஃபோன் தனது 'இண்டிகா: இந்தோ-பிரெஞ்சு உறவுகளில் கட்டுரைகள் 1630-1976 ' (Indica: Essays in Indo-French Relations 1630-1976) என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்:

"பல விஷயங்களில், ஹைதரின் வீரர்கள் ஆங்கிலேய வீரர்களை விட அதிக புத்திசாலித்தனமாகவும், தந்திரோபாய ரீதியாக சிறந்தும் விளங்கினர். எதிரிப் படைகளைக் கலைக்க ஒட்டகங்களில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதில் அவர்கள் திறமை பெற்றிருந்தனர். தனது படைகளை நகர்த்துவதற்கும் தளவாடங்களை வழங்குவதற்கும் ஹைதர் காளைகளைப் பயன்படுத்தினார், அது அக்காலத்தில் ஒரு புதிய விஷயமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்களும் அதைப் பின்பற்றினர்."

இறுதியில், ஆங்கிலேயர்கள் ஹைதருடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், ஆங்கிலேயர்களைப் போரில் தோற்கடிக்கவும் ஆச்சரியப்படுத்தவும் முடியும் என்பதை இந்தியாவின் பல மன்னர்கள் உணர்ந்தனர்.

ஹைதர் அலி, திப்பு சுல்தான்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ராக்கெட்டுகளை முதன்முதலில் பயன்படுத்தியது ஹைதர் அலிதான்

ஆங்கிலேயர் மீது தாக்குதல்

1780 பிப்ரவரி 7 அன்று, வட்காவ் ஒப்பந்தத்திற்கு ஓராண்டுக்குப் பிறகு, மராட்டியத் தலைவர் நானா பட்நாவிஸ் தனது பழைய எதிரியான ஹைதர் அலிக்குக் கடிதம் எழுதினார். அதில், ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒரு மாதத்திற்குள் ஹைதராபாத் நிஜாமும் ஹைதருக்கு ஆதரவளிக்க முடிவு செய்தார். கோடைக்காலம் வந்தபோது, இந்த மூன்று சக்திகளும் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கான திட்டத்தில் பணியாற்றத் தொடங்கின.

ஒரு மாதம் கழித்து ஹைதருக்கு பிரான்சிலிருந்து பெரிய அளவிலான ஆயுதங்கள் வந்து சேர்ந்துவிட்டதாக ஆங்கிலேயர்களின் தளமான மதராஸிற்கு (சென்னை) ஒரு செய்தி கிடைத்தது. இறுதியாக, 1780 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று, ஹைதர் அலி மீண்டும் ஆங்கிலேயர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த முறை அவரிடம் முன்னர் இருந்ததை விட இரண்டு மடங்கு பெரிய படை இருந்தது.

அவரது படையில் 60 ஆயிரம் குதிரைப்படை வீரர்கள், 35 ஆயிரம் காலாட்படை வீரர்கள் மற்றும் 100 பீரங்கிகள் இருந்தன. ஆவணங்களின்படி, மதராஸைப் பாதுகாக்க கம்பெனியின் 30 ஆயிரம் வீரர்கள் நிறுத்தப்பட வேண்டும், ஆனால் உண்மையில் அந்த மாதம் எட்டு ஆயிரம் வீரர்களை மட்டுமே திரட்ட முடிந்தது.

மார்க் வில்க்ஸ் தனது 'தென்னிந்தியாவின் வரலாற்று ஓவியங்கள்' புத்தகத்தில், "ஹைதர் முன்னேறிய வேகம் ஆங்கிலேய வீரர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்தது. இவர்களில் பல வீரர்களின் குடும்பங்கள் ஆற்காட்டில் வசித்து வந்தனர். தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, இந்த வீரர்கள் ஆங்கிலேயர்களை விட்டு விலகினர். அவர்கள் ஹைதரிடம் சரணடைந்தனர் அல்லது லஞ்சம் பெற்றுக்கொண்டு தங்கள் நிலைகளின் கதவுகளைத் திறந்து விட்டனர். மதராஸ், வேலூர் மற்றும் ஆற்காட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தீ வைத்து, கம்பெனியின் தளவாட விநியோகத்தை ஹைதர் முழுவதுமாக அழித்தார்." என குறிப்பிட்டுள்ளார்.

ஹைதர் அலி, திப்பு சுல்தான்

பட மூலாதாரம்,Getty Images

முன்ரோ மற்றும் பெய்லியின் படைகள் சேரும் முயற்சி தோல்வி

1780ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, தென்னிந்தியாவில் ஹைதரின் படைகளை எதிர்கொள்ள ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய படை மதராஸிலிருந்து காஞ்சிபுரத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கியது. இந்தப் படைக்கு தளபதி ஹெக்டர் முன்ரோ தலைமை தாங்கினார். இவர்தான் 15 ஆண்டுகளுக்கு முன் பக்சர் போரில் சுஜா-உத்-தௌலாவைத் தோற்கடித்தவர்.

இந்த முறை அவரது படையில் ஐந்தாயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர், அவர்களுக்கு மாதக் கணக்கில் சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் ஹைதரின் ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட மாபெரும் படையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு 30 மைல் வடக்கே இருந்த கர்னல் வில்லியம் பெய்லிக்கு, தனது படைகளுடன் முன்ரோவின் படையுடன் இணையுமாறு உத்தரவு கிடைத்தது.

குலாம் ஹுசைன் கான் தனது 'சைர் முதாக்கரின்' (Sair Mutakhareen) என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"சமுத்திரத்தின் கோப அலைகளைப் போல முழு நிலத்தையும் மூடியிருக்கும் அளவு ஹைதரிடம் அவ்வளவு வீரர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னால் வந்த பீரங்கிப்படைக்கு முடிவே இல்லாததுபோல் தெரிந்தது. இதற்கிடையில், பலத்த மழை பெய்யத் தொடங்கியது, பெய்லியின் வீரர்கள் கொற்றலையார் ஆற்றைக் கடக்க பதினொரு நாட்கள் ஆனது. இந்த நேரம் ஹைதரின் மகன் திப்பு சுல்தானுக்கு, முன்ரோ மற்றும் பெய்லியின் படைகளுக்கு இடையில் தனது 11 ஆயிரம் வீரர்களை நிறுத்த போதுமானதாக இருந்தது."

திப்பு சுல்தான், ஹைதர் அலியின் மகன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான்

பெய்லியின் படையைச் சூழ்ந்த ஹைதரின் படை

இரு படைகளுக்கும் இடையே முதல் மோதல் செப்டம்பர் 6-ஆம் தேதி நடந்தது. கேப்டன் முவாத் தனது 'போலிலூர் தோல்வியின் அறிக்கை' (Account of the Defeat of Pollilur) என்ற கட்டுரையில், "தொடர்ந்து பெய்த மழையில், நெல் வயல்களில் முழங்கால் அளவு தண்ணீரில் சண்டையிட்ட பெய்லியின் படையின் பலவீனங்கள் முழுமையாக வெளிப்பட்டன, அவர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது. இரு படைகளும் நேருக்கு நேர் சண்டையிடவில்லை, மாறாகத் தொலைவில் இருந்தே போரிட்டன." எனக் குறிப்பிடுகிறார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்களுக்குச் சற்று முன்னால் எக்காளங்கள் மற்றும் மேளங்களின் சத்தம் கேட்டது. முன்ரோவின் வீரர்கள் தங்களுக்கு உதவ வருகிறார்கள் என்று பெய்லி கருதினார். அந்த வீரர்கள் நெருங்கி வந்தபோது, ஹைதர் தனது 25 ஆயிரம் வீரர்களுடன் தங்கள் முன் வந்துள்ளார் என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

பின்னர் பெய்லியின் இளைய சகோதரர் போலிலூர் அறிக்கையில் குறிப்பிடுகையில், "நாங்கள் ஹைதரின் குதிரைப் படையால் சூழப்பட்டோம். அவர்களுக்குப் பின்னால் அவரது பீரங்கிகள் இருந்தன. சுமார் 50 பீரங்கிகள் எங்கள் சுற்றி ஒரு அரை வட்டத்தை உருவாக்கின. ஹைதர் சிறிது நேரம் சண்டையை நிறுத்த உத்தரவிட்டார். பின்னால் வந்த தனது பெரிய பீரங்கிகளை முன்னே கொண்டு வந்தார். அவர்களுக்கு எதிராக எங்களுக்கு அங்கே எந்த வாய்ப்பும் இல்லை." எனத் தெரிவித்தார்.

ஹைதர் அலி, திப்பு சுல்தான்

பட மூலாதாரம்,Getty Images

ஆங்கிலேயர் தோல்வி

தன்னிடம் இருந்த அனைத்து வெடிமருந்துகளும் தீர்ந்த பிறகு, சரணடைய முயற்சிக்கும் விதமாக பெய்லி தனது வாளால் ஒரு கைக்குட்டையைக் கட்டி மேலே காட்டினார். பெய்லி தனது வீரர்களை ஆயுதங்களைக் கீழே போடுமாறு உத்தரவிட்டார், ஆனால் சில வீரர்கள் அவரது உத்தரவைக் கேட்க முடியாமல் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தனர். இதன் விளைவாக, ஹைதர் சரணடைதலை ஏற்க மறுத்துவிட்டார்.

அவரது குதிரைப்படை, போரில் தோற்ற ஆங்கிலேயப் படையை கொல்லத் தொடங்கியது. ஆலன் ட்ரைடன் தனது 'புலி சண்டை போட்ட போது' (When the Tiger Fought the Thistle) என்ற புத்தகத்தில், 73வது ஹைலேண்ட் ரெஜிமென்ட்டின் லெப்டினன்ட் ஒருவரின் கூற்றை இவ்வாறு பதிவு செய்கிறார்:

"மரணத்திலிருந்து தப்பித்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு எழுந்து நின்றனர். சிலர் மூச்சுத் திணறினார்கள். சிலர் தங்கள் சக வீரர்களின் சடலங்கள் மீது விழுந்ததால் நகர முடியாமல் இருந்தனர். சிலர் யானையின் காலடியில் நசுக்கப்பட்டனர். சிலரின் உடைகள் கிழிந்துபோயின, அவர்கள் கொதிக்கும் வெயிலில் தாகத்துடன் கிடந்தனர், எளிதில் காட்டு விலங்குகளுக்கு இரையாயினர். ஆங்கிலேயப் படையில் இருந்த 86 அதிகாரிகளில், 36 பேர் கொல்லப்பட்டனர், 34 பேர் காயமடைந்தனர், மற்றும் 16 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர்."

பெய்லி தலையிலும் முதுகிலும் காயமடைந்தார். அவர் தனது ஒரு காலையும் இழந்தார். இறுதியாக, பெய்லி ஒரு பீரங்கி வண்டியில் கட்டப்பட்டு ஹைதரின் முன் கொண்டு வரப்பட்டார், மற்ற கைதிகளுடன் தரையில் அமர வைக்கப்பட்டார். தோல்வியடைவது மற்றும் கைதி ஆவதன் பொருள் என்ன என்பதை கம்பெனி வீரர்கள் முதல்முறையாக உணர்ந்தனர்.

ஹைதர் அலி, திப்பு சுல்தான்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கர்னல் பெய்லி ஹைதர் அலியிடம் சரணடைதல்.

ஆங்கிலேய கைதிகள் கூறியது என்ன?

சுமார் ஏழு ஆயிரம் ஆங்கிலேய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ஜேம்ஸ் ஸ்கரி என்ற கைதி தனது 'ஜேம்ஸ் ஸ்கரியின் சிறைப்பிடிப்பு, துன்பம் மற்றும் தப்பித்தல்' (The Captivity, Suffering and Escape of James Scurry) என்ற புத்தகத்தில் "பத்து ஆண்டுகள் ஹைதரின் சிறையில் இருந்த பிறகு, நாற்காலியில் எப்படி உட்காருவது, கத்தி மற்றும் முள் கரண்டியால் எப்படிச் சாப்பிடுவது என்பதை நான் முற்றிலும் மறந்துவிட்டேன். ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதையும் நான் மறந்துவிட்டேன். என் தோல் கருப்பாகிவிட்டது, ஐரோப்பிய ஆடைகளை அணிய நான் விரும்பவில்லை." என்று கூறியுள்ளார்.

மாயா ஜாசனோஃப் தனது 'பேரரசின் யுகம்: கிழக்கில் வெற்றி மற்றும் சேகரிப்பு 1750-1850' (Age of the Empire Conquest and Collecting in the East 1750-1850) என்ற புத்தகத்தில், "பெய்லியின் தோல்விக்குப் பிறகு ஹைதர் சண்டையைத் தொடர்ந்திருந்தால், ஆங்கிலேயர்களின் மன உறுதி இழந்த நிலையில், செயின்ட் ஜார்ஸ் கோட்டையை அவர் கைப்பற்றுவதில் தோல்வி அடைந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. ஹைதர் தனது வீரர்களைப் பாதுகாக்க விரும்பியதால், கம்பெனிக்கு அது அதிர்ஷ்டமாக அமைந்தது. அவர் கம்பெனியுடன் நேரடியாக மோதும் கொள்கையை விட்டுவிட்டு, தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி விட்டுத் தப்பிக்கும் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கினார்." எனத் தெரிவிக்கிறார்.

அடுத்த சில மாதங்களில், கவர்னர் ஜெனரல் ஹேஸ்டிங்ஸ், மராட்டியர்களுடனான ஹைதரின் கூட்டணியை உடைப்பதில் வெற்றி பெற்றார். ஹேஸ்டிங்ஸ் மராட்டிய தளபதி மஹாத்ஜி சிண்டேயுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார், இதன் கீழ் மராட்டியர்கள் ஆங்கிலேயர்களின் நண்பர்களாக மாறினர். இதன் விளைவாக, ஆங்கிலேயர்களுக்கு எதிரான அடுத்த போரில் ஹைதரால் தனது வெற்றியை மீண்டும் பெற முடியவில்லை.

வில்லியம் டால்ரிம்பிள் (William Dalrymple) தனது 'தி அனார்க்கி' (The Anarchy) என்ற புத்தகத்தில், "1780-இல் ஹைதர் மற்றும் அவரது கூட்டாளிகள் கம்பெனி மீதான அழுத்தத்தைக் குறைக்காமல் இருந்திருந்தால், ஆங்கிலேயர்கள் அதேநேரத்தில் இந்தியாவிலிருந்து என்றென்றும் வெளியேறியிருப்பார்கள். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தத் தவறியதற்காகப் புனே மற்றும் மைசூர் அரசுகள் பின்னர் எப்போதும் வருந்தின." எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதர் அலி, திப்பு சுல்தான்

பட மூலாதாரம்,Bloomsbury

முதுகு புற்றுநோயால் மரணம்

1782-ஆம் ஆண்டில், ஹைதருக்கு முதுகில் ஒரு கட்டி தோன்றியது. மெதுவாக அந்தக் கட்டியின் அளவு அதிகரித்தது, பின்னர் அது முதுகு புற்றுநோய் என்று தெரியவந்தது.

இரண்டாவது ஆங்கிலோ-மைசூர் போரின் போது ஹைதரின் இந்த தீவிர நோய் அவரது பலத்தையும் வேகத்தையும் வெகுவாகக் குறைத்தது. ஒரு சாதாரண நிலையிலிருந்து உச்சிக்கு உயர்ந்த இந்த நபர், 1782 டிசம்பர் 7-ஆம் தேதி 60 வயதில் காலமானார்.

ஷாமா ராவ் தனது 'ஆரம்பம் முதல் 1868 வரை நவீன மைசூர்' (Modern Mysore from Beginning to 1868) என்ற புத்தகத்தில் "ஹைதரின் மரணம் இந்தியாவின் வரலாற்றில் ஒரு சாதாரண நிகழ்வு மட்டுமல்ல என்று கூறுவது மிகையாகாது. அவரது மரணம் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அதிகாரத்தின் அடித்தளத்தை அமைத்தது, இது அவர் உயிருடன் இருந்திருந்தால் சாத்தியமாகியிருக்காது." என்று குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cev8ze8wyn1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.