Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் உள்பட 18 இந்தியர்களுடன் கப்பலை சிறைபிடித்த இரான் - என்ன நடக்கிறது?

இரான், இந்தியா, கப்பல், எண்ணெய், இந்தியர்கள்

பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC

படக்குறிப்பு,கடந்த ஆண்டு டிசம்பரில் இரான் ஒரு கப்பலைக் கைப்பற்றியது. கப்பலில் இருந்த (இடமிருந்து வலமாக) துங்கா ராஜசேகர், தலைமை அதிகாரி அனில் குமார் சிங் மற்றும் மசூத் ஆலம்.

கட்டுரை தகவல்

  • முகமது சர்தாஜ் ஆலம்

  • பிபிசி ஹிந்திக்காக

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபத்தில், இரானில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். மறுபுறம் உலக அரங்கில் இரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அறிகுறிகளை அமெரிக்கா வெளிப்படுத்தியது.

இந்நிலையில், இரானில் கடந்த மாதம் இந்தியாவைச் சேர்ந்த 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர், அவர்களில் 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரானில் நிலவும் தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சிறையில் உள்ள இந்தியர்களின் குடும்பங்களும் ஒரு குழப்பமான சூழலில் சிக்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி, சட்டவிரோத டீசல் வைத்திருந்ததாகக் கூறி டிப்பா துறைமுகத்திற்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் 'எம்டி வேலியன்ட் ரோர்' (MT Valiant Roar) கப்பலை 18 பணியாளர்களுடன் இரான் அதிகாரிகள் கைப்பற்றினர்.

கப்பல் குழுவினரில் இந்தியர்கள் பத்து பேரை ஜனவரி 6-ஆம் தேதி இரான் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த கப்பலில் 16 இந்தியர்கள், ஒரு வங்கதேசத்தவர், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?

இரான், இந்தியா, கப்பல், எண்ணெய், இந்தியர்கள்

பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC

படக்குறிப்பு,கப்பலின் கேப்டன் விஜய் குமார்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இரான் பிரிவில் பணியாற்றும் இந்திய வெளியுறவுத் துறை (IFS) அதிகாரியான எம். ஆனந்த் பிரகாஷ் இந்த விவகாரத்தை பிபிசி ஹிந்தியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

எம். ஆனந்த் பிரகாஷ் கூறுகையில், "வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே குற்றச்சாட்டுகள் குறித்து இரான் நீதிமன்றமே முடிவு செய்யும். ஆனால் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், பணியாளர்களுக்குத் தூதரக ரீதியிலான அணுகலைப் பெற முயற்சி செய்து வருகிறது," என்றார்.

"ஜனவரி 10-ஆம் தேதி தூதரக அணுகல் கிடைக்கும் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் இரானில் நிலவும் குழப்பம் காரணமாக எங்களால் அதைப் பெற முடியவில்லை. நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்," என்றும் கூறினார்.

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் ஒரு செய்திக்குறிப்பில் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் மற்றும் 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளது.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இரான் அரசாங்கம் இன்னும் பதில் அளிக்கவில்லை.

இதற்கிடையில், 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்தின் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார், கப்பலில் ஆறாயிரம் மெட்ரிக் டன் சட்டவிரோத டீசல் இருந்ததாகக் கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று கூறினார்.

பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "கப்பல் டீசலை ஏற்றிச் செல்லவில்லை, ஆனால் 'மிகக் குறைந்த கந்தக எரிபொருள் எண்ணெயை' (VLSFO) ஏற்றிச் சென்றது. இது, சர்வதேச கடற்பரப்பில் எங்களது பிற கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக இருக்கக்கூடிய ஒரு வசதி. இது வழக்கமான செயல்முறையின் ஒரு பகுதியாகும்," என்றார்.

"ஆனால் கப்பலின் எரிபொருளை டீசல் என்று தவறாகக் கருதி இரான் எங்கள் குழுவினரை மோசமாக நடத்தியது கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், எங்களது அனைத்துப் பணியாளர்களையும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதே எங்களது முன்னுரிமை," என்றார் ஜோகிந்தர் பிரார்.

உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு

இரான், இந்தியா, கப்பல், எண்ணெய், இந்தியர்கள்

பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC

படக்குறிப்பு,ஆகாஷ் குப்தா, திவாகர் புத்தி மற்றும் விஷால் குமார் (இடமிருந்து வலமாக)

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கப்பல் கேப்டன் விஜய் குமார் மற்றும் ஆய்லர் (Oiler) ஆகாஷ் குப்தா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி துங்கா ராஜசேகர், டெக் ஃபிட்டர் நந்தகி வெங்கடேஷ் மற்றும் சமையல் பணிகளைச் செய்யும் திவாகர் புத்தி, பஞ்சாப்பைச் சேர்ந்த சீமேன்-1 விஷால் குமார் ஆகியோர் கடந்த 45 நாட்களாகக் கப்பலில் இரான் பாதுகாப்புப் படையினரின் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆறு இந்தியர்களைத் தவிர, வங்கதேசத்தைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் முகமது லுக்மான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மின்-தொழில்நுட்ப அதிகாரி பிரியா மனதுங்க ஆகியோரும் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் உள்ள பணியாளர்களிடமிருந்து பிபிசி ஹிந்திக்கு கிடைத்த தகவலின்படி, எட்டு பணியாளர்களின் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் 14-க்கு-10 அளவுள்ள உணவு அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அங்கேயே அவர்கள் இரவில் உறங்குகிறார்கள்.

ஒவ்வொரு நாள் காலையிலும், இந்திய தூதரகமும் கப்பல் நிறுவனமும் தங்களை மீட்டுவிடும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் கண் விழிக்கிறார்கள். அதே சிறிய அறையிலேயே அவர்கள் தங்களது நாட்களைக் கழிக்கிறார்கள். இந்த நிலை கடந்த ஒன்றரை மாதங்களாகத் நீடிக்கிறது.

இரான், இந்தியா, கப்பல், எண்ணெய், இந்தியர்கள்

பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC

படக்குறிப்பு,கேதன் மேத்தாவின் தந்தை முகேஷ் மேத்தா

டிசம்பர் மூன்றாவது வாரத்தில் கப்பலில் இருந்த அனைத்து உணவுப் பொருட்களும் தீர்ந்துபோனபோது, கப்பல் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார் டிசம்பர் 25-ஆம் தேதி உணவுப் பொருட்களை அனுப்பினார். ஆனால் ஒரு வாரம் கழித்து, அரிசி மட்டுமே எஞ்சியிருந்தது.

இத்தகைய சூழ்நிலையில், கப்பலில் உள்ள இந்தியச் சமையல்காரரான திவாகர் புத்தி, ஒரு நாளைக்கு இரண்டு முறை அரிசி சமைக்கிறார், அதை எட்டு பேரும் உப்போடு சேர்த்துச் சாப்பிடுகிறார்கள்.

கப்பலில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் கடந்த பத்து நாட்களாக குடிநீர் இல்லாமல் இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே, அவர்கள் கப்பலில் உள்ள "குடிப்பதற்கு அல்ல" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சாலை நீரை (Industrial water) கொதிக்க வைத்து குடிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள்.

எரிபொருள் பிரச்னை காரணமாக, அவர்கள் இரவில் மட்டுமே ஜெனரேட்டரைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய முயற்சிகள் ஒருபுறம் என்றாலும், டீசல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கவலை உள்ளது.

கேப்டன் விஜய்யின் சகோதரர் வினோத் பன்வாரின் கூற்றுப்படி, கப்பலின் எரிபொருளும் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது.

பணியாளர்களின் உடைமைகளைக் கைப்பற்றிய இரான்

இரான், இந்தியா, கப்பல், எண்ணெய், இந்தியர்கள்

பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC

படக்குறிப்பு,அன்சாரி மன்சூர் ஆலம், கேதன் மேத்தா, ஷோயப் அக்தர் (இடமிருந்து வலமாக)

டிசம்பர் 8-ஆம் தேதி, இரான் பாதுகாப்புப் படையினர் 'எம்டி வேலியன்ட் ரோர்' பணியாளர்கள் அனைவரின் மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய பைகளை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்தனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இரான் பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு ஒரு மொபைல் போனை வழங்கினர், அதன் உதவியுடன் இந்த ஆறு இந்தியர்களும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் தங்களது குடும்பத்தினருடன் பேசுகிறார்கள்.

ஆனால் ஜனவரி 31-ஆம் தேதி வரை 5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதால், இத்தகைய அழைப்புகளும் நீண்ட காலம் நீடிக்காது என்று கேப்டன் விஜய் குமாரின் சகோதரர் வினோத் பன்வார் கூறுகிறார்.

ஆரம்பத்தில், அனைவரும் மொபைல் போன்கள் பயன்படுத்தக் கடுமையாகத் தடை விதிக்கப்பட்டது. சமீப நாட்களில், அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள மொபைல் போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் கப்பலில் நிலவும் தண்ணீர் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளின் தட்டுப்பாடு குறித்துப் பேசிய ஜோகிந்தர் பிரார், "அவர்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாக வழங்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம்," என்றார்.

அதே சமயம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கப்பல் நிறுவனம் மீது அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

கப்பலின் மூன்றாவது பொறியாளர் கேதன் மேத்தாவின் தந்தை முகேஷ் மேத்தா கூறுகையில், "டிசம்பர் 8-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தபோதே, கப்பல் நிறுவனம் இதைத் தீவிரமாக எடுத்து முன்னுரிமை அளித்திருந்தால், இன்று எனது மகன் உட்பட பத்து பேர் சிறையில் இருந்திருக்க மாட்டார்கள்," என்றார்.

இரான், இந்தியா, கப்பல், எண்ணெய், இந்தியர்கள்

பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC

படக்குறிப்பு,மசூத் ஆலமின் தந்தை இப்ரார் அன்சாரி

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலைமை அதிகாரி அனில் குமார் சிங், சீமேன் ஆகாஷ் குமார் சிங், கோபால் சௌகான் மற்றும் ஷோயப் அக்தர், ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த மூன்றாம் நிலை அதிகாரி ஜம்மு வெங்கட், ஹரியானாவைச் சேர்ந்த இரண்டாம் பொறியாளர் சதீஷ் குமார், டெல்லியைச் சேர்ந்த மூன்றாவது பொறியாளர் கேதன் மேத்தா, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர் ஏரோ தாரிஷ், பிகாரைச் சேர்ந்த ஆயிலர் மசூத் ஆலம் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆயிலர் அன்சாரி மன்சூர் அகமது ஆகியோர் ஜனவரி 6-ஆம் தேதி இரானிய பாதுகாப்புப் படையினரால் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த 16 பணியாளர்களில், பலரது பயணம் இந்த ஜனவரியில் முடிவடையவிருந்தது. விஷால் குமார், நந்தகி வெங்கடேஷ் மற்றும் மசூத் ஆலம் ஆகியோரின் ஒன்பது மாதப் பயணம் இந்த ஜனவரியில் முடிவடையவிருந்தது.

பிகாரைச் சேர்ந்த மசூத் ஆலமின் தந்தை இப்ரார் அன்சாரி கூறுகையில், "எனது மகன் கடைசியாக ஜனவரி 5-ஆம் தேதி அழைத்தான், ஆனால் அப்போது குறைவான நேரமே பேச முடிந்தது. அதன்பிறகு என்னால் அவனுடன் பேச முடியவில்லை," என்றார்.

தனது மகனின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் இப்ரார் அன்சாரி, "டிசம்பர் 8-ஆம் தேதி அனைவரும் காவலில் எடுக்கப்பட்டபோது, மசூத் ஆலமுக்கு காய்ச்சல் இருந்தது. இப்போது அவரது நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை," என்றார்.

ஈத் பண்டிகைக்குப் பிறகு மசூத் திருமணம் செய்யவிருந்தார், ஆனால் இப்போது அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

மசூத்தைப் போலவே, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த துங்கா ராஜசேகரின் ஒரே சகோதரிக்கு மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

இத்தகைய சூழல்கள் குறித்துப் பேசிய முகேஷ் மேத்தா, "எனது வீட்டில் திருமணம் எதுவும் இல்லை, ஆனால் மகன் கேதன் சிறைக்குச் சென்ற செய்தியைக் கேட்ட பிறகு, அவரது தாயாரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது," என்றார்.

பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "இது எனது குடும்பத்தின் பிரச்னை மட்டுமல்ல, 16 குடும்பங்களின் பிரச்னை. நாங்கள் மின்னஞ்சல் அனுப்பாத துறையே இல்லை, ஆனால் இன்றுவரை யாரிடமிருந்தும் எங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை," என்றார்.

குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்

இரான், இந்தியா, கப்பல், எண்ணெய், இந்தியர்கள்

பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC

படக்குறிப்பு,அனில் சிங்கின் மனைவி காயத்ரி சிங்

முகேஷ் மேத்தாவைப் போலவே, அனில் சிங்கின் மனைவி காயத்ரி சிங், தனது கணவர் உட்பட கப்பல் பணியாளர்கள் அனைவரையும் இரான் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக நம்புகிறார்.

"இரானுக்குக் கப்பல் நிறுவனம் மீதோ அல்லது அதில் ஏற்றிச் செல்லப்படும் சரக்கு குறித்தோ ஏதேனும் பிரச்னை இருந்தால், அது நேரடியாக நிறுவனத்திடம் பேச வேண்டும், ஊழியர்களைத் துன்புறுத்தக் கூடாது," என்றார் காயத்ரி சிங்.

இந்தக் கருத்துடன் உடன்படும் இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் கூறுகையில், "நிறுவனமே கப்பலின் ஆபரேட்டர். கப்பலில் என்ன செல்கிறது என்பதை நிறுவனம் தான் தீர்மானிக்கிறது, பணியாளர்கள் அல்ல. எனவே, பணியாளர்களைச் சிறைக்கு அனுப்பும் இரானின் முடிவு முற்றிலும் மனிதத்தன்மையற்றது," என்றார்.

துபாயைச் சேர்ந்த 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்தின் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார், "இரானுடன் பேச்சுவார்தை நடத்த நிறுவனம் முயற்சி செய்து வருகிறது, ஆனால் இரான் அரசு பேசத் தயாராக இல்லை" என்றார்.

"இது முதல் முறை அல்ல, இரண்டாவது முறையாக எங்களது கப்பல் இரானால் கைப்பற்றப்பட்டுள்ளது," என்கிறார் ஜோகிந்தர் பிரார்.

இரான், இந்தியா, கப்பல், எண்ணெய், இந்தியர்கள்

பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC

படக்குறிப்பு,இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங்

டிசம்பர் 5, 2023 அன்று, பிராரின் மற்றொரு கப்பல் சட்டவிரோத டீசல் ஏற்றிச் சென்றதாகக் கூறி இரானால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அந்தக் கப்பலில் "21 பணியாளர்கள் இருந்தனர். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்களில் 18 பேரை இரான் விடுவித்தது. மூன்று பணியாளர்கள் இன்றும் சிறையில் உள்ளனர்," என்று ஜோகிந்தர் பிரார் கூறுகிறார்.

"நாங்கள் அன்றிலிருந்து முயற்சி செய்து வருகிறோம். இப்போது அவர்கள் இரண்டாவது கப்பலைப் பறிமுதல் செய்துள்ளனர். இரண்டு கப்பல்களிலும் மிகக் குறைந்த கந்தக எரிபொருள் எண்ணெய் (VLSFO) தொடர்பான ஆவணங்கள் இருந்தபோதிலும், இரானில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை," என்கிறார் அவர்.

இந்திய மாலுமிகள் பொதுச் செயலாளர் பிரதீப் சிங், 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' தொடர்பாகப் பல பிரச்னைகள் தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அது குறித்து ஏற்கனவே கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

ஆனால் கேப்டன் விஜய் குமாரின் மனைவி சோனியா பெரும் சோகமும் கோபமும் கலந்த ஒரு நிலையில் தவிக்கிறார். "இந்த 42 நாட்களில் நாங்கள் விரக்தியடைந்துவிட்டோம். எனவே இந்தப் பிரச்னையை சமாளிக்க, நாங்கள் (குழுவினரின் குடும்ப உறுப்பினர்கள்) அனைவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம்," என்றார்.

இரான், இந்தியா, கப்பல், எண்ணெய், இந்தியர்கள்

பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC

படக்குறிப்பு,கேப்டன் விஜய் குமாரின் மனைவி சோனியா நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு

டெல்லி உயர் நீதிமன்றத்தில் விஜய் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஜனவரி 15 அன்று நடைபெற்றது.

அதில் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சிஜிஎஸ்சி (CGSC) நிதி ராமன், "அரசாங்கத்தால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மனுதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்று கூறினார்.

நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே நேரத்தில் கப்பல் நிறுவன உரிமையாளர், "விவகாரத்தைத் தீர்க்க நாங்கள் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளோம். ஆனால் இரானில் நிலவும் மோசமான உள்நாட்டுச் சூழ்நிலை காரணமாக, வழக்கறிஞரால் பணியாளர்களைச் சந்திக்க முடியவில்லை," என்றார்.

இருப்பினும், சரக்குகளை கையாளும் கப்பல் நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் கூறுகிறார்.

"பணியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, அனைத்துப் பணியாளர்களையும் உடனடியாகத் தாயகம் அழைத்து வரக் கோரி கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரைச் சந்திப்போம்" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgkzg67v6xo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.