Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ajit-Pawar.jpg?resize=750%2C375&ssl=1

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் (Ajit Pawar) இன்று (28) காலை மும்பையில் இருந்து பாராமதிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் விமானிகள் மற்றும் பவாரின் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்ட சிறிய விமானம், ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் தரையிறங்கும் முயற்சியின் போது பாராமதி விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. 

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக நான்கு முக்கியமான பொதுக் கூட்டங்களில் பவார் கலந்து கொள்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் பின்னர் குறித்த விமானம் தீக்கிரையானது.

விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

66 வயதான அஜித் பவார், மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவாரின் மருமகன், மக்களவை எம்.பி. சுப்ரியா சுலேவின் உறவினர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1461908

  • கருத்துக்கள உறவுகள்

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார் - என்ன நடந்தது?

அஜித் பவார், விமான விபத்து, மகாராஷ்டிரா

28 ஜனவரி 2026, 04:31 GMT

புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்

மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66.

விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததை சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) உறுதிப்படுத்தியுள்ளது. டிஜிசிஏ தகவலின்படி, அந்த சிறிய ரக விமானத்தில் அஜித் பவார், அவரது தனி உதவியாளர், ஒரு பாதுகாவலர் மற்றும் இரண்டு விமானிகள் என மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர்.

மகாராஷ்டிராவில் எதிர்வரும் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து சமிதி தேர்தல்களுக்காகப் பிரசாரம் செய்ய அஜித் பவார் பாராமதியில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அதற்காக, அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார்.

பாராமதியில் விமானம் தரையிறங்க முயன்ற போது விமான நிலைய ஓடுபாதை அருகே விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. இந்த விபத்து காலை 8:48 மணிக்கு நிகழ்ந்தது.

இந்த விமானம் VTSSK, LJ45 வகையைச் சேர்ந்த சிறிய ரக விமானம் ஆகும்.

அஜித் பவார், விமான விபத்து, மகாராஷ்டிரா

பட மூலாதாரம்,ANI

லியர்ஜெட்-45 (LJ45) என்பது ஒரு நடுத்தர விமானமாகும். கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் என்ற விமானத் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த லியர்ஜெட் விமானம், பல வாடகை விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. இது இரண்டு ஹனிவெல் TFE731-20AR/BR டர்போஃபேன் என்ஜின்களால் இயக்கப்படுகிறது.

இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 8 பேர் பயணிக்க முடியும். இது சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய ஒரு விமானமாக அறியப்படுகிறது.

பாராமதியில் விபத்துக்குள்ளான லியர்ஜெட் 45 விமானம் 2010ஆம் ஆண்டு முதல் சேவையில் இருந்துள்ளது.

குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

அஜித் பவார் மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"பாராமதியில் ஏற்பட்ட விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் உட்பட பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் துயரமானது. அஜித் பவாரின் எதிர்பாராத மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. மகாராஷ்டிராவின் வளர்ச்சியில் குறிப்பாக கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியில் அவரின் சிறப்பான பங்களிப்புக்காக நினைவு கூறப்படுவார். அவரின் குடும்பம், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இந்த இழப்பை தாங்கிக் கொள்வதற்கான சக்தியை கடவுள் வழங்கப்பட்டும்," என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"பாராமதியில் ஏற்பட்ட விபத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு சக்தி கிடைக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்," என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

அஜித் பவார், விமான விபத்து, மகாராஷ்டிரா

பட மூலாதாரம்,ANI

அஜித் பவாரின் அரசியல் பின்னணி

அஜித் பவார், மகாராஷ்டிராவின் தேவ்லாலி எனும் சிறிய ஊரில் 1959-ஆம் ஆண்டு பிறந்தார், 1982ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார்.

முதலில் சர்க்கரை ஆலைகளின் கூட்டுறவு உறுப்பினர், கூட்டுறவு வங்கியின் தலைவர் போன்ற பதவிகளில் இருந்தவர், 1991-ஆம் ஆண்டு பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் அதை அவரது சித்தப்பா சரத் பவாருக்காக விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.

இதைத்தொடர்ந்து, அவர் அப்பகுதியின் அரசியலில் முக்கியமானவராக உருவெடுத்தார்.

1991-ஆம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டுவரை, பாராமதி தொகுதியில் போட்டியிட்டு ஏழுமுறை தொடர்ந்து வென்றார். கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கும் மேலாக பாராமதி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.

அவரது அரசியல் பயணத்தை கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் உத்தவ் பட்சல்கரின் கருத்துப்படி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் அப்பகுதியில் அரசியல் செய்துவந்த காலத்தில், அஜித் பவார் கட்சிக்குள் இளைஞர்களைக் கொண்டுவந்தார்.

சித்தப்பா சரத் பவாருக்காக எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தபின் அஜித் பவார் தன் கவனத்தை மாநில அரசியல் பக்கம் திருப்பி ஆர்வமாக ஈடுபடத் துவங்கினார்.

1991ஆம் ஆண்டு வேளாண் துறைக்கான இணை அமைச்சராக இருந்தார்.

அதன்பின் பாபர் மசூதி இடிக்கப்பட்டபின் மும்பையில் பெரும் கலவரங்கள் வெடித்தன. அதைச் சமாளிக்க, அனுபவசாலியான சரத் பவாரை முதல்வராக்கினார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்.

உடனடியாக பதவியேற்ற சரத் பவார், அஜித் பவாரை மின்சாரத் துறை அமைச்சராக்கினார்.

அஜித் பவார், விமான விபத்து, மகாராஷ்டிரா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சரத் பவாருடன் அஜித் பவார் (கோப்புப் படம்)

அதன்பின், 1995-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தோற்று, சிவசேனா-பா.ஜ.க கூட்டணி வென்றது. சரத் பவர் மீண்டும் எம்.பி ஆனார். அஜித் பவாரோ மாநில அரசியலிலேயே தங்கிவிட்டார்.

இந்நிலையில் அவர் மகாராஷ்டிராவில் காங்கிரஸின் செல்வாக்கினை மேம்படுத்தி, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். தான் சரத் பவாரின் அரசியல் வாரிசு என்ற நிலையை உருவாக்கினார், என்று தனது கட்டுரை ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் கிரண் தாரே கூறுகிறார்.

அதன்பின் 1999-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரானார்.

2004ஆம் ஆண்டு, காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இணைந்து தேர்தலில் வென்றன. காங்கிரசுக்கு 69 தொகுதிகளும், தேசியவாத காங்கிரசுக்கு 71 தொகுதிகளும் கிடைத்தன. ஆனால் கூட்டணிக் கணக்குகளைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தார் சரத் பவார். அப்படிச் செய்திருக்காவிட்டால், அப்போது அஜித் பவார் முதல்வராகியிருக்கக் கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

2023-ஆம் ஆண்டு அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் மகாராஷ்டிராவில் முதலமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து, துணை முதல்வராகப் பதவியும் ஏற்றார்.

கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்க, அஜித் பவார் துணை முதல்வராக தொடர்ந்தார்.

அஜித் பவரின் அரசியல் வாழ்வில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சம் இல்லை. 1999ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை அணைகள் கட்டுவதில் ஊழல் செய்ததாகவும், 2005ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை கூட்டுறவு வங்கிகளில் கடன் மோசடி குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்தது.

அஜித் பவார், விமான விபத்து, மகாராஷ்டிரா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சுப்ரியா சூலேவுடன் அஜித் பவார் (கோப்புப் படம்)

சுப்ரியா சூலே - அஜித் பவார் போட்டி

2006-ஆம் ஆண்டு, சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே அரசியலில் நுழைந்தார், ராஜ்ய சபா உறுப்பினரானார்.

அப்போது, அஜித் பவாருக்கும் சுப்ரியாவுக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை, என்கிறார் அபய் தேஷ்பாண்டே. "ஆனால் சுப்ரியா சூலே தேசியவாதியாக அறியப்பட்டு, அவரது தலைமை பரவலாக வெளியே தெரிந்தது. அஜித் பவாரின் செல்வாக்கும் கட்சிக்குள் வளர்ந்ததால் அவர்களிடையே போட்டியும் வளர்ந்தது," என்கிறார்.

2009-ஆம் ஆண்டு, சுப்ரியா சூலேவுக்கு, பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இது அஜித் பவாரின் செல்வாக்கு மிக்க பகுதி.

ஆனால் அஜித் பவாரும் சுப்ரியா சூலேவும் தங்களுக்கிடையே போட்டி இல்லை என்று கூறிவந்திருக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3dm2l21zglo

  • கருத்துக்கள உறவுகள்

'ஓடுபாதை தெரியவில்லை' - அஜித் பவார் பயணித்த விமானத்திலிருந்து வந்த செய்தி என்ன?

அஜித் பவார், டிஜிசிஏ

பட மூலாதாரம்,ANI

28 ஜனவரி 2026

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66. விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான தகவல்களை வழங்கியுள்ளது.

புனே (கிராமப்புற) எஸ்பி சந்தீப் சிங், ''இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு தரையிறங்குவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானது, அதில் ஐந்து பேர் இருந்தனர்.'' என்றார்.

பிபிசி மராத்தி செய்தியின்படி, அஜித் பவாருடன் இறந்த மற்ற நபர்களின் பெயர்கள் சுமித் கபூர், ஷாம்பவி பதக், விதிப் ஜாதவ் மற்றும் பிங்கி மாலி.

'தரையிறங்கும் போது ஏதோ பிரச்னை தெரிந்தது, விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்று தோன்றியது' என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிராவில் எதிர்வரும் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களுக்காகப் பிரசாரம் செய்ய அஜித் பவார் பாராமதியில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அதற்காக, அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார்.

விமானம் பாராமதியில் தரையிறங்குவதற்கு முன்பு விமானிக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் இடையிலான உரையாடலின் விவரங்களையும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.

அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர், மகாராஷ்டிரா முதல்வர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

விமான விபத்தில் அஜித் பவார் பலி

விமான போக்குவரத்து அமைச்சகம் என்ன கூறியது?

விபத்து தொடர்பாக, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையை, பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்டுள்ளது.

அதில், பாராமதி விமான தளம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC)) கோபுரம் இல்லாத தளம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போக்குவரத்துத் தகவல்கள் பாராமதியில் அமைந்துள்ள விமானி பயிற்சி அமைப்பின் (Flying Training Organisation) பயிற்றுநர்கள் அல்லது விமானிகளால் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

ஷார்ட் வீடியோ

Play video, "விமான விபத்தில் அஜித் பவார் மரணம் - என்ன நடந்தது?", கால அளவு 0,56

00:56

p0mxkdzq.jpg.webp

காணொளிக் குறிப்பு,என்ன நடந்தது?

டிஜிசிஏ கூறியுள்ளது என்ன?

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,

  • விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை (ATC) கையாண்ட நபர் அளித்த தகவல்களின்படி, ஜனவரி 28, 2026 அன்று, விமானம் VI-SSK காலை 8:18 மணிக்கு பாராமதியுடன் முதல் தொடர்பை ஏற்படுத்தியது.

  • அந்த விமானம் பாராமதிக்கு 30 நாட்டிகல் மைல் தூரத்தில் இருந்து, பாராமதி நோக்கி வருவதாகத் தகவலைத் தெரிவித்தது. அப்போது புனே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் இருந்து விமானம் விடுவிக்கப்பட்டு பாராமதி நோக்கி நோக்கி பறக்க அனுமதிக்கப்பட்டது

  • வானிலையை பொறுத்து அவருடைய சொந்த கணிப்பின்படி தரையிறங்க அதன் விமானி அறிவுறுத்தப்பட்டார்.

  • காற்று மற்றும் தெரிவுநிலை (visibility) குறித்து விமான குழுவினர் விசாரித்தனர். காற்று சீராக இருப்பதாகவும், தெரிவுநிலை சுமார் 3,000 மீட்டர் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது.

அஜித் பவார் இறந்த  விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது?

பட மூலாதாரம்,Getty Images

  • பின்னர் விமானம் ஓடுபாதை 11-ல் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழுவினர் கூறினர். ஆனால், குழுவினரால் ஓடுபாதையைப் பார்க்க முடியாததால், அவர்கள் தங்கள் முதல் முயற்சியில் தரையிறங்கும் முடிவை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

  • அதன்பின், விமானத்தின் நிலை குறித்து குழுவினரிடம் கேட்கப்பட்டது. பின்னர் விமானக் குழுவினர் ஓடுபாதை 11-ல் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

  • ஓடுபாதை தெரிகிறதா தகவலை தெரிவிக்க அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு, "ஓடுபாதை தற்போது தெரியவில்லை. அது தெரியும்போது அழைப்பதாக" பதிலளித்துள்ளனர்.

  • சில வினாடிகளுக்குப் பிறகு, ஓடுபாதை தெரிவதாக குழுவினர் கூறியுள்ளனர்.

  • காலை 8:43 மணிக்கு, விமானம் ஓடுபாதை 11-ல் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் தரையிறங்கும் அனுமதி குறித்து விமானக் குழுவினரால் எந்த உறுதியும் வழங்கப்படவில்லை.

  • பின்னர், காலை 8:44 மணிக்கு, ஓடுபாதை 11-க்கு அருகில் தீப்பிழம்புகள் எழுவதை ATC கவனித்தது. பின்னர் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன.

  • விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஓடுபாதை 11-க்கு அருகில் இடது பக்கத்தில் காணப்பட்டன.

அஜித் பவார், டிஜிசிஏ

பட மூலாதாரம்,ANI

விமான போக்குவரத்து அமைச்சகம் கூறுகையில், "விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணையை மேற்கொண்டுள்ளது. விசாரணையை நடத்த AAIB இயக்குநர் ஜெனரல் விபத்து நடந்த இடத்திற்கு செல்லவுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது பகிரப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ட் வீடியோ

Play video, "சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - வான் விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்", கால அளவு 1,45

01:45

p0mxlgw6.jpg.webp

காணொளிக் குறிப்பு,சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - வான் விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்

விமானக் குழுவினர் பற்றி தெரியவந்தது என்ன?

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூற்றுப்படி, விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர்.

ஒரு விமானி 15,000 மணிநேர விமானப் பயண அனுபவமுள்ளவர். இரண்டாவது விமானிக்கு 1,500 மணிநேரம் பறக்கும் அனுபவம் இருந்தது.

அஜித் பவார், விமான விபத்து, மகாராஷ்டிரா

பட மூலாதாரம்,ANI

நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

விபத்தை நேரில் கண்ட ஒருவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம், "நான் அதை என் கண்களால் பார்த்தேன். இது மிகவும் வேதனையானது. விமானம் கீழே விழும்போது, அது தரையிறங்க முடியாது என்று தோன்றியது, அதுதான் நடந்தது. அதன் பிறகு, அந்த விமானம் வெடித்தது. அந்த விமான வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அதன்பின், நாங்கள் விமானம் தீப்பிடித்து எரிந்ததைக் கண்டோம்." என்றார்.

"பின்னர் விமானத்தில் மேலும் நான்கு அல்லது ஐந்து வெடிப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகு, பொதுமக்கள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விமானத்தில் இருந்தவர்களை வெளியேற்ற முயன்றனர். ஆனால் தீ மிகவும் கடுமையாக இருந்ததால், மக்களால் உதவ முடியவில்லை. அஜித் பவாரும் விமானத்தில் இருந்தார், இது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது..."

காணொளிக் குறிப்பு,அஜித் பவார் உயிரிழப்பு - விமான விபத்தை நேரில் கண்டவர் கூறியது என்ன?

மற்றொரு நபர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "நாங்கள் இங்கே வசிக்கிறோம், எங்களுக்குப் பின்னால் ஒரு விமான ஓடுபாதை உள்ளது. ஒரு விமானம் வருவதைக் கண்டோம், ஆனால் அது தரையிறங்கவில்லை. அது முன்னோக்கிச் சென்றது, பின்னர் சிறிது நேரம் கழித்து அது திரும்பி தரையிறங்கத் தொடங்கியது. ஆனால் அது ஓடுபாதைக்கு சற்று முன்பு விபத்துக்குள்ளானது." என்றார்.

"இதைப் பார்த்தவுடன், ஓடுபாதையைச் சுற்றியுள்ள எங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம், அதன் பிறகு காவல்துறையினரும் மற்றவர்களும் உடனடியாக வந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm24p673px7o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.