Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தியின் தலித் வளர்ப்பு மகளின் கதை: ஆசிரமத்தில் அவர் குடும்பம் தங்குவதை கஸ்தூரிபா எதிர்த்த வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியின் தலித் வளர்ப்பு மகளின் கதை: ஆசிரமத்தில் அவர் குடும்பம் தங்குவதை கஸ்தூரிபா எதிர்த்த வரலாறு

காந்தி, கஸ்தூரிபா, தலித் சிறுமி, லெட்சுமி

பட மூலாதாரம்,Getty Images/HITESH DAFDA

படக்குறிப்பு,கடந்த 1915ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் உள்ள கோச்ரப் ஆசிரமத்திற்கு ஒரு தலித் குடும்பம் வந்தபோது, ஆசிரமவாசிகள் பலர் அவர்களை எதிர்த்தனர். உள்ளே உள்ள படத்தில் காந்தியும் அவர் தத்தெடுத்த தலித் மகளான லட்சுமியும் காணப்படுகின்றனர்

கட்டுரை தகவல்

  • ஜெய் சுக்லா

  • பிபிசி செய்தியாளர்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

காந்திக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு மகளைத் தத்தெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அந்த மகள் யார்?

அவர் கோச்ரப் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டவுடன், கஸ்தூரிபா உட்பட ஆசிரமவாசிகள் அவரை ஏன் எதிர்க்கத் தொடங்கினார்கள்?

இந்த எதிர்ப்பை காந்தி எப்படி கையாண்டார்?

இவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு கஸ்தூரிபா அந்த மகளை எப்படி ஏற்றுக்கொண்டார்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, பிபிசி குஜராத்தி காந்திய இலக்கியங்களைப் ஆய்வு செய்ததோடு, தத்தெடுக்கப்பட்ட அந்த மகளின் குடும்பத்தில் இன்று உயிருடன் இருக்கும் உறுப்பினர்களிடமும் பேசியது.

காந்தியின் வளர்ப்பு மகளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள, நாம் வரலாற்றைப் புரட்ட வேண்டும்.

காந்தி ஜனவரி 9, 1915 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அவர் மும்பையில் கால் பதித்தபோது, ஒரு தேசிய வீரரைப் போல அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

'டால்ஸ்டாய்' மற்றும் 'பீனிக்ஸ்' போலவே இந்தியாவிலும் ஒரு நிறுவனம் அல்லது ஆசிரமத்தை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.

மே 25, 1915 அன்று, காந்தி ஆமதாபாத்தில் 'சத்யாகிரக ஆசிரமத்தை' நிறுவினார். இது இன்று 'கோச்ரப் ஆசிரமம்' என்றும் அழைக்கப்படுகிறது.

ஆமதாபாத்தில் காந்தி குடியேற உதவியவர்களில் ஜீவன்லால் பாரிஸ்டரும் ஒருவர். கோச்ரப்பில் உள்ள அவரது வீட்டை ஆசிரமத்திற்காக வாடகைக்கு எடுக்க காந்தி முடிவு செய்தார்.

தனது சுயசரிதையான 'சத்திய சோதனை'யில் காந்தி குறிப்பிடுகையில், அந்த நேரத்தில் ஆசிரமத்தில் 13 தமிழர்கள் இருந்ததாக எழுதியுள்ளார். அவர்களுடன் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஐந்து தமிழ் குழந்தைகளும் வந்திருந்தனர்.

சுமார் 25 ஆண்கள் மற்றும் பெண்களுடன் ஆசிரமம் தொடங்கியது. "அனைவரும் ஒரே சமையலறையில் சாப்பிட்டோம், ஒரே குடும்பமாக நடந்து கொள்ள முயற்சித்தோம்" என்று காந்தி எழுதியுள்ளார்.

இருப்பினும், ஆசிரமம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே காந்திக்கு ஒரு கடுமையான சோதனை காத்திருந்தது.

தீண்டத்தகாதவர்கள் என்று அக்காலத்தல் கருதப்பட்ட பிரிவினரில் ஒரு குடும்பத்தை ஆசிரமத்தில் குடியமர்த்தி ஒரு முன்மாதிரியை உருவாக்க காந்தி விரும்பினார். எனவே, ஆசிரமத்தில் வசிக்க விருப்பமுள்ள அத்தகைய குடும்பங்களைத் தேடினார்.

காந்தி, கஸ்தூரிபா, தலித் சிறுமி, லெட்சுமி

பட மூலாதாரம்,BHIKHUBHAI DAFDA

படக்குறிப்பு,காந்தி துதாபாய் தஃப்டாவின் குடும்பத்துடன். லட்சுமி வலதுபுறத்தில்

குடும்பத்துடன் ஆசிரமத்திற்குள் நுழைந்த தலித் மகள் லட்சுமி

காந்தியின் கருத்துகளைப் பின்பற்றி, பழங்குடி சமூகங்களிடையே கல்வி கற்பிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பாடுபட்ட அமிர்தலால் தக்கர் (தக்கர் பாபா) என்பவரிடமிருந்து காந்திக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில் அவர், "ஒரு ஏழ்மையான மற்றும் நேர்மையான அந்தியஜ (தலித்) குடும்பம் உள்ளது. அவர்கள் உங்கள் ஆசிரமத்திற்கு வந்து வாழ விரும்புகிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று எழுதியிருந்தார்.

காந்தி தனது சுயசரிதையில், "தக்கர் பாபாவின் பரிந்துரையுடன் வரும் அந்தக் குடும்பம் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கடிதத்தை என் தோழர்களிடம் வாசித்துக் காட்டினேன். அவர்கள் அதை வரவேற்றனர். அந்தக் குடும்பத்தினர் ஆசிரமத்தின் விதிகளைப் பின்பற்றத் தயாராக இருந்தால், அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று நான் அமிர்தலால் தக்கருக்குத் தகவல் அனுப்பினேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

துதாபாய் செப்டம்பர் 6, 1915 அன்று ஒரு கடிதம் எழுதினார். அதில் தான் ஆசிரமத்தில் சேர விரும்புவதாகவும், அதன் அனைத்து விதிகளையும் பின்பற்றுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இறுதியாக, செப்டம்பர் 11, 1915 அன்று துதாபாய், அவரது மனைவி தானிபென் மற்றும் பெண் குழந்தையான லட்சுமி ஆகியோர் ஆசிரமத்திற்கு வந்தனர். பின்னர் செப்டம்பர் 26 அன்று அவர்கள் ஆசிரமத்தில் குடியேறினர்.

துதாபாய் தற்போதைய அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தேவராஜியா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் போடாட் நகரில் ஒரு பள்ளியை நடத்தி வந்தார், பின்னர் மும்பையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆனால் அவரது வருகையோடு, ஆசிரமத்தில் சிக்கல் தொடங்கியது.

"ஆதரவாக இருந்த நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. பங்களா உரிமையாளருக்குப் பங்கிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது."

"அந்த நபர் மீது எங்கள் தண்ணீர் தெளித்தால் கோபப்படுவார். அவர் துதாபாயைத் திட்டவும் துன்புறுத்தவும் தொடங்கினார். அனைவரிடமும் அந்த வசவுகளைப் பொறுத்துக்கொண்டு, உறுதியுடன் தண்ணீர் எடுக்குமாறு நான் சொல்லியிருந்தேன்"என்று காந்தி பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த நபர் திட்டுவதை நிறுத்திக்கொண்டார். ஆனால், அதன் பிறகு ஆசிரமத்தில் மற்றொரு பிரச்னை உருவானது.

காந்தி, கஸ்தூரிபா, தலித் சிறுமி, லெட்சுமி

பட மூலாதாரம்,HITESH DAFDA

படக்குறிப்பு,காந்தி தனது வளர்ப்பு மகள் லட்சுமியுடன்

ஆசிரமத்திற்கு கிடைத்து வந்த நிதி உதவி நின்றது.

"ஆசிரம விதிகளுக்கு உட்பட்டு அந்தியஜர்கள் (தலித் மக்கள்) உள்ளே நுழைவதை ஆரம்பத்திலிருந்தே சந்தேகித்த அந்தச் சகோதரருக்கு, அவர்கள் ஆசிரமத்திற்குள் வருவார்கள் என்பதில் நம்பிக்கையே இல்லை. நிதி உதவி நின்றது. சமூகப் புறக்கணிப்பு பற்றிய வதந்திகள் என் காதுகளை எட்டின. புறக்கணிக்கப்பட்டு எந்த ஆதரவும் இல்லாமல் போனாலும், நாங்கள் ஆமதாபாத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று என் தோழர்களிடம் சொன்னேன். நாங்கள் அந்தியஜவாடாவுக்கே (தலித் மக்கள் வசிக்கும் பகுதி) சென்று அவர்களுடனேயே வாழ்வோம். அங்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்தோ அல்லது உழைத்தோ பிழைத்துக்கொள்வோம்," என்று காந்தி குறிப்பிட்டுள்ளார்.

நிதி உதவி நின்ற பிறகு, ஆசிரமத்தின் நிர்வாகம் மற்றும் செலவுகளைக் கவனித்து வந்த காந்தியின் மருமகன் மகன்லால் காந்தி, "அடுத்த மாத ஆசிரமச் செலவுகளைச் சமாளிக்க நம்மிடம் பணம் இல்லை"என்று காந்திக்கு ஒரு தகவலைத் தந்தார்.

மகன்லால் காந்தி, காந்தியின் மாமா ஜீவன் சந்தின் மகனான குஷால் சந்தின் மகன் . காந்தியைப் போலவே அவரும் தென்னாப்பிரிக்கா சென்றார். ஆனால் அங்கு தொழில் செய்யாமல், காந்தியின் ஆசிரமத்தில் இணைந்தார்.

மகன்லால் காந்தியின் எச்சரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக , "அப்படியானால் நாம் இறுதிவரை போராடுவோம்" என்று காந்தி எழுதியுள்ளார்.

மேலும், "இப்படிப்பட்ட இக்கட்டான நிலை எனக்கு வருவது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு முறையும், 'ஷாம்லா' (கடவுள்) கடைசி நிமிடத்தில் உதவியை அனுப்பியிருக்கிறார்" என்று எழுதியுள்ளார்.

மகன்லால் அந்தத் தகவலைச் சொன்ன உடனேயே, ஒரு நாள் காலை ஒரு குழந்தை ஓடிவந்து காந்தியிடம், "ஆசிரமத்திற்கு வெளியே ஒரு கார் நிற்கிறது. ஒரு வணிகர் உங்களை அழைக்கிறார் என்று கூறியது.

இதனைக் குறித்து காந்தி பின்வருமாறு எழுதியுள்ளார். "நான் அந்த நபரை அணுகினேன். அவர் என்னிடம், "நான் ஆசிரமத்திற்கு உதவ விரும்புகிறேன், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்டார். அதற்கு நான், "நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன், ஆனால் தற்போது நான் பெரும் நெருக்கடியில் இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

"மறுநாள் சந்திப்பதாக அவர் கூறிச் சென்றார். அடுத்த நாள், அந்த வணிகர் காந்தியிடம் வந்து 13,000 ரூபாயை ரொக்கமாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்."

காந்தி, கஸ்தூரிபா, தலித் சிறுமி, லெட்சுமி

பட மூலாதாரம்,Getty Images

கஸ்தூரிபாவின் எதிர்ப்பு

ஆசிரமத்தில் ஒரு தலித் குடும்பம் தங்குவது அங்கிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்களில் காந்தியின் மனைவி கஸ்தூரிபாவும் ஒருவர்.

லட்சுமியின் சகோதரர் மோகன்பாய் தஃப்டாவின் மகனான பிகுபாய் தஃப்டா, பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "கஸ்தூரிபா கோபமாக இருந்தார். எனவே என் தாத்தா துதாபாய், காந்தியிடம் தாங்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறத் தயார் என்று கூறினார். ஆனால் காந்தி பிடிவாதமாக மறுத்துவிட்டார். அனைத்தையும் மௌனமாக பொறுத்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்"என்றார்.

காந்தி தனது 'அக்ஷர்தேக்' நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

"துதாபாய் ஆசிரமத்திற்கு வந்த அன்று, தென்னாப்பிரிக்கா சத்யாகிரகத்தில் பங்கேற்ற சந்தோக் மகன்லால் காந்தி விரதத்தைத் தொடங்கினார். ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. சந்தோக் சாப்பிடாததால் நானும் சாப்பிடவில்லை. கஸ்தூரிபாவிற்கும் இது பிடிக்கவில்லை, அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். ஆசிரமத்தின் மற்ற சகோதரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்."

காந்தி கஸ்தூரிபாவிடம், "நீ என்னை விட்டு பிரிந்து செல்லலாம், நாம் நல்ல நண்பர்களாகவே பிரிவோம்" என்று கூறிவிட்டார்.

செப்டம்பர் 24 அன்று சந்தோக்கும் மகன்லாலும் ஆசிரமத்தை விட்டு வெளியேறினர். இருப்பினும், அவர்கள் அக்டோபர் 3 அன்று மீண்டும் திரும்பினர். கஸ்தூரிபா எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஆசிரமத்தை விட்டு வெளியேறவில்லை.

ஆசிரமவாசிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க காந்தி 'உண்ணா விரதம்' என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்தார்.

காந்தி எப்போதும் கஸ்தூரிபாவுக்கு நிலைமையை விளக்குவார், ஆனால் பா (கஸ்தூரிபா) சோர்ந்து போவார். அவர் கண்களில் கண்ணீர் வழியும், ஆனாலும் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

அந்த நேரத்தில், காந்தியின் மூத்த சகோதரி ரலியத்பென்னும் ஆசிரமத்தில் வசித்து வந்தார். இளம் வயதிலேயே கணவரை இழந்த அவருக்கும், துதாபாயின் குடும்பம் ஆசிரமத்தில் தங்குவது பிடிக்கவில்லை.

முதலில், அவர்கள் தனிச் சமையல் வேண்டும் என்று கோரினர், ஆனால் காந்தி அதை நிராகரித்தார். இதனால் அவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.

அவர் ராஜ்கோட்டிற்குச் சென்றார், அங்கு அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை காந்தி செய்து கொடுத்தார்.

காந்தி கஸ்தூரிபாவிடமும், நீயும் ரலியத்பென் போலவே ராஜ்கோட்டிற்குச் செல்லலாம் என்று கூறினார். ஆனால் கஸ்தூரிபா, "அப்படிச் செய்வதன் மூலம், உங்கள் வாழ்நாள் முழுவதும் என்னை நீங்கள் பிரிக்க நேரிடும். நான் உங்களைப் பிரிந்து செல்ல மாட்டேன்," என்று கூறிவிட்டார்.

இறுதியாக, காந்தியின் கோரிக்கையை பா ஒப்புக்கொண்டார்.

பின்நாட்களில், லட்சுமியின் தலைமுடியைச் சீவி, குளிப்பாட்டி அவரை பா தயார் செய்வார். ஆரம்பத்தில் காட்டிய வெறுப்பிற்குப் பதிலாக, லட்சுமியின் மீது மிகுந்த அன்பைப் பொழிந்தார் கஸ்தூரிபா.

காந்தி, கஸ்தூரிபா, தலித் சிறுமி, லெட்சுமி

பட மூலாதாரம்,ROLI BOOKS

லட்சுமியை தத்தெடுத்த காந்தி

இறுதியாக, எதிர்ப்புகளை சமாளிக்க லட்சுமியைத் தத்தெடுக்க காந்தி முடிவு செய்தார்.

அக்டோபர் 5, 1920 அன்று காந்தி லட்சுமியைத் தத்தெடுத்தார்.

அப்போது லட்சுமிக்கு சுமார் ஆறு வயது. அடுத்த 14 ஆண்டுகள் லட்சுமி காந்தியுடன் இருந்தார்.

லட்சுமி திருமண வயதை அடைந்ததும், அவருக்குத் திருமணம் செய்து வைக்க காந்தி முடிவு செய்தார். இதற்காக, ஆசிரமத்தில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த தமிழ் பிராமணரான மாருதி சர்மாவை அவர் தேர்ந்தெடுத்தார்.

மாருதி சர்மா விழித்திரை தொடர்பான பணிகளைச் செய்யும் ஒரு தொழிற்சாலையில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார்.

"அவர்களது திருமணத்தின் போது காந்தி எரவாடா சிறையில் இருந்தார். எனவே, காந்தி இல்லாத நிலையில், காந்தி ஆசிரமத்திற்கு எதிரே இருந்த சிவப்பு பங்களாவில் திருமணம் நடந்தது. பிரபல இசைக்கலைஞர் நாராயண் கரே லட்சுமிக்குச் சீர் செய்தார்"என்று பிகுபாய் தஃப்தாவின் மகன் ஹிதேஷ்பாய் தஃப்தா பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.

முன்னதாக, காந்தி சிறையில் இருந்ததால் லட்சுமியின் திருமணம் தள்ளிப்போனது. காந்தி நேரில் இல்லாமல் தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என லட்சுமி மறுத்து வந்தார். ஆனால், இந்த முறை காந்தி இல்லாத போதும் லட்சுமி திருமணத்திற்குச் சம்மதித்தார்.

இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். மகனுக்கு ஹரிபாய் சர்மா என்றும், மகளுக்கு கல்பனாபென் என்றும் பெயரிடப்பட்டது. ஹரிபாய் சர்மா, ரஸிலாபென் என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு சிநேக் என்ற மகள் உள்ளார். ஹரிபாய் சர்மா தற்போது உயிருடன் இல்லை.

மாருதி சர்மா 1946-ல் காலமானார்.

லட்சுமிபென் 32 வயதிலேயே கணவரை இழந்தார்.

ஆனால், காந்தியின் பெயரைச் சொல்லி அவர் எந்தச் சலுகையையும் கேட்கவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

"அவர் ஒரு மில்லில் வேலை செய்தார், பின்னர் ஒரு மருத்துவமனையில் மக்களுக்குச் சேவை செய்ய முடிவு செய்தார்," என்று ஹிதேஷ் சர்மா கூறுகிறார்.

லட்சுமிபென் ஷர்மாவின் மகன் ஹரிபாய் சர்மா இறந்துவிட்டாலும், அவரது மனைவி ரஸிலாபென் சர்மா இன்றும் உயிருடன் இருக்கிறார்.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய ரஸிலாபென் சர்மா, "அவர் எளிமையை விரும்பினார். காந்தியின் கருத்துகளின்படி வாழ விரும்பினார்," என்று கூறினார்.

"எனக்கு 1978-ல் திருமணம் நடந்தது, அவர் 1984-ல் இறந்தார். நாங்கள் ஒன்றாக இருந்த காலம் மிகக் குறைவு, ஏனெனில் அவர் காந்தி ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார்."

காந்தி குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் போல அவர் ஏன் அரசியலில் ஈடுபடவில்லை அல்லது வெளிச்சத்திற்கு வரவில்லை?

இந்தக் கேள்விக்கு ரஸிலாபென் பதிலளிக்கையில், "அவர் அரசியலில் இருந்து வெகுதூரம் விலகி இருந்தார். ஆடம்பரத்தை அவர் விரும்பவில்லை. எப்போதும் காதி ஆடைகளையே அணிந்தார், காந்தியைப் போலவே எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். மக்களுக்குச் சேவை செய்வதிலும் காந்திய சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் மிகவும் எளிமையான குணம் கொண்டவர்," என்றார்.

காந்தி, கஸ்தூரிபா, தலித் சிறுமி, லெட்சுமி

பட மூலாதாரம்,HITESH DAFADA

படக்குறிப்பு,காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி 1984ஆம் ஆண்டு காலமானார்

தஃப்டா குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவரது கணவர் மாருதி சர்மா இறந்த பிறகு, லட்சுமி தனது வாழ்வாதாரத்திற்காக ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆலையில் வேலை செய்யத் தொடங்கினார். ஒரு நாள், அவர் படிக்கட்டில் வழுக்கி விழுந்ததால், கடினமான வேலைகள் செய்வதை நிறுத்திக்கொண்டார்.

லட்சுமிபென்னின் மகன் ஹரிபாய் சர்மா குஜராத் காதி வாரியத்தில் ஸ்டெனோகிராஃபராகப் பணியாற்றி வந்தார்.

காந்திக்கு ஹரிபாய் மீது மிகுந்த அன்பு இருந்தது. ஹரிபாய் குழந்தையாக இருந்தபோது காந்தி அவருடன் விளையாடுவார். காந்தி உயிருடன் இருந்தவரை, ஒவ்வொரு ஆண்டும் லட்சுமியைத் தன்னுடன் வந்து தங்குமாறு (பிறந்த வீட்டிற்கு வருவது போல) அழைப்பார். கஸ்தூரிபாவின் மறைவுக்குப் பிறகும் காந்தி இந்த வழக்கத்தைத் தொடர்ந்தார்.

லட்சுமிபென்னை எப்போதும் கடிதங்கள் எழுதுமாறு காந்தி சொல்வார்.

காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி லட்சுமியைப் பெரிதும் உலுக்கியது. டெல்லிக்குச் செல்ல அவரிடம் போதிய வசதிகள் இல்லாததால், நான்காவது நாளில் தான் அவர் டெல்லியை அடைந்தார். பின்னர் அவரது அஸ்தியுடன் பிரயாகைக்குச் சென்றார்.

கஷ்டப்பட்டு தன் குழந்தைகளை வளர்த்த அவர், ஜனவரி 31, 1984 அன்று காலமானார். அவர் இறக்கும் போது, அவரது கடைசி விருப்பத்தின்படி காந்தி ஆசிரமத்திலேயே வசித்து வந்தார்.

லட்சுமிபென்னின் இரண்டாவது சகோதரி சந்திரிகாபென்னின் மகன் நரேந்திரபாய் கோஹில், பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "அவர் இறுதிவரை காந்தி ஆசிரமத்தின் பிரார்த்தனைகளில் பங்கேற்றார். பஜனைகள் பாடுவார், ஆசிரம நிகழ்வுகளில் கலந்துகொள்வார். காந்தியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் ஒருபோதும் நடந்துகொண்டதில்லை"என்றார்.

"அவர் இறுதிவரை காதி ஆடைகளையே அணிந்தார். அவரது குழந்தைப் பருவமும் ஆசிரமத்தில் கழிந்தது, அவரது இறுதி நாட்களும் ஆசிரமத்திலேயே கழிந்தன."

"அவருக்கு அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் கிடைத்து வந்தது. அதை வைத்தே அவர் வாழ்ந்தார். வேறு எந்த உதவியையும் அவர் எதிர்பார்க்கவில்லை"என்பதையும் நரேந்திரபாய் கோஹில் குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும், பொதுவாழ்வில் இருந்து லட்சுமிபென் எப்போதும் ஒதுங்கியே இருந்தார்.

"காந்தியின் முக்கிய குடும்ப உறுப்பினர்களுடனான எங்கள் தொடர்பு மிகக் குறைவாகவே இருந்தது. ஒருமுறை காந்தியின் வம்சாவளிப் பட்டியலைத் தயாரித்தபோது, அதில் லட்சுமிபென்னின் பெயர் இருந்தது. ஆனால் அதைத் தவிர மற்ற தொடர்புகள் அனைத்தும் நின்றுவிட்டன. நாங்களும் எதையும் எதிர்பார்க்கவில்லை," என்று பிகுபாய் டஃப்தா தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9wx0xqnz8wo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.