Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

Published By: Vishnu

02 Feb, 2026 | 04:41 AM

image

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் அமைகிறது. நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (01) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் கிழக்கு மாகாண ஓய்வு பெற்ற முன்னாள் காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் வளவாளராக கலந்துகொண்டதுடன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டதோடு, வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர், வவுனியா வடக்கு, கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் கிவுல் ஓயா திட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வு முடிவடைந்த நிலையில்,வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வின் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் இலங்கையின் தற்போதைய அரசாங்கம், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதி மொழிகளாக முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்றுள்ளது.

இருப்பினும், 'நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம்,மேற்கூறிய உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்க வேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும். இருப்பினும், அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், இம்மக்களை அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைத்து, அவர்களின் வாழ்வாதார நிலைகளை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அரசாங்கம், அதனை விடுத்து வெளி பிரதேசங்களில் இருந்து மக்களை கொண்டு வந்து இப்பிரதேசங்களில் குடியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாக உள்ளது.

இவ்வாறான குடியேற்றங்கள் தேவையற்ற அரசியல், கலாச்சார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள திட்ட அறிக்கையின் படி, 'கிவுல் ஓயா' நீர்த்தேக்கம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், தமிழர்களின் பூர்வீக கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக, வடகிழக்கு திசையில் அமைக்கப்படவுள்ளது.

சுமார் 37 மீற்றர் (121.37 அடிகள்) உயரமுடைய அணையின் மூலம் உருவாக்கப் படவுள்ள இந்த நீர்த்தேக்கம், பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த நீர் தேக்கத்திற்கான எல்லைகள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெடிவைத்த மகாவலி அதிகார சபையினால் எல்லைக்கல்லிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன.

இதன்விளைவாக, கல்லு,ஈச்சங்குளம்,கூழாங்குளம்,காட்டு பூவரசங்குளம்,காஞ்சூர மோட்டை உள்ளிட்ட பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும்குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளது.

பெரியமேலும், 1921 ஆம் ஆண்டு வர்த்தமான அறிவித்தலின் மூலம் 'ஒதுக்குக் காடாக' அறிவிக்கப்பட்ட கட்டிக்குளம் ஒதுக்குக்காடு, சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியும், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் முழுமையாக அமிழ்ந்து போகும் நிலை உருவாகியுள்ளமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

அதேபோல், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்கள், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் நீரில் மூழ்க போவதாக மகாவலி அதிகார சபையின் சொந்த திட்ட ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது. இது, நாட்டின் மரபுரிமை மற்றும் தொல்லியல் பாதுகாப்பு கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.

இத்தகைய பின்னணியில்,இந்த நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை பிரதேசத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப் படுவதை 'தொல்லியல் பாதுகாப்பு' என்ற பெயரில் கட்டுப்படுத்தும் நிலையில், அதே சமயம் பல தொல்லியல் பிரதேசங்கள் முழுமையாக அழிவடைய அனுமதிக்கப்படுவது தொடர்பில் தெளிவான, வெளிப்படையான விளக்கங்கள் அரச நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவு களுக்குரிய

ஆமையன் குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ளமை பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனுடன், கொக்குத்தொடுவாய் சூரிய நாற்றுப் பகுதியில், தமிழ் மக்களுக்கு மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1,990 ஏக்கர் காணிகள், தற்போது கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இது, இப்பிரதேசங்களில் இனப்பரம்பல் அமைப்பையும், சமூகச் சமநிலையையும் மாற்றக்கூடிய ஒரு நவீன காலனித்துவ செயல்முறையாக பார்க்கப்படுகிறது.

எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு தாக்கங்களை மீளாய்வு செய்யவும், உள்ளூர், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமை உடன் இணைக்கவும், வெளிப்பிரதேச குடியேற்றங்களை தவிர்க்கவும், உள்ளூர் சமூகங்களின் காணி, வாழ்வாதாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாக்கவும் தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் நிலையான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால், அது உள்ளூர் மக்களின் உரிமைகள், மரியாதை மற்றும் வரலாற்றுப் பிணைப்புகளை மதிக்கும் அணுகுமுறையின் மூலம் சாத்தியமாகும் என்பதை அரசிற்கு தெளிவாக சுட்டிக்காட்டுகிறோம் .என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/237583

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.