Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அண்ணா -- பூங்குழலி நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா -- பூங்குழலி நெடுமாறன்

செப்டம்பர் 17, 2007 - யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப வலியுறுத்தி மேற்கொண்ட சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை நிறைவு செய்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பா, அன்று தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியிருந்தார், 1 வாரம் விடுப்பு முடிந்து அன்றுதான் நான் மீண்டும் பணிக்குச் சென்றிருந்தேன்.

tamilselvan2do8.jpg

அன்று மாலை 8:00 மணியளவில் என் கைப்பேசியில் ஒரு அழைப்பு. எண்களின்றி வந்த அந்த அழைப்பு ஆர்வத்தைத் தூண்ட எடுத்து வணக்கம் சொன்னேன்.

மறுமுனையில், “அக்கா, நாங்கள் வன்னியில் இருந்து கதைக்கிறோம். தமிழ்ச்செல்வன் அண்ணை கதைக்க வேண்டும் என்றார்” என்றது ஒரு குரல். மனதில் ஒரு புறம் உண்மையா என்ற குழப்பம் ஏற்பட்டாலும் “அப்படியா கொடுங்க” என்றேன்.

2 நொடி இடைவெளிக்குப் பிறகு “வணக்கம் தங்கச்சி, நலமா இருக்கிறீங்களா” என்று ஒலித்த குரலைக் கேட்டவுடன் குபீரென்று மனதில் மகிழ்ச்சி எழும்பியது. அவரேதான். நிழற்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் கண்ட அந்த முகத்தை கேட்ட குரலோடுப் பொருத்திப் பார்க்கிறேன். “ஆம் அண்ணா நல்லாயிருக்கேன். நீங்க நலமா” என்றேன்.

உலகத் தமிழர்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அந்தச் சிரிப்புதான் எனக்கு பதிலாய் கிடைத்தது. “அப்பா எப்படி இருக்கிறார்கள்? அவர் உடல் நலம் குறித்துதான் எங்களுக்கெல்லாம் கவலை. அதைக் கேட்கத்தான் தொடர்புகொண்டேன்” என்றார். “அப்பாவிடம் பேச முடியுமா?” என்றார்.

நான் பணியில் இருப்பதையும் வீடு செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் என்பதையும் கூறினேன். அப்பாவின் எண் அளிக்கவா என கேட்டேன். “இல்லை. அப்பாவை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதாலதான் உங்க எண்ணை பிடிச்சு உங்களுக்கு அடிச்சோம்” என்றார். “அப்பா உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கோ. அதுதான் முக்கியம்” என்றார். “சரி அண்ணா நிச்சயமாக” என்றேன்.

மொத்தமாக 5 நிமிடம் கூட நீடிக்காத அந்த உரையாடலில் அவர் குரலில் தொனித்த உரிமை, பாசம், கரிசனம் முதன் முறையாகப் பேசுவது போல் அல்லாது, பல ஆண்டு பழகியதைப் போன்ற நட்பு.. இன்று அந்த நினைவுகள் வந்து உறங்கவிடாமல் செய்கின்றன. நலமா என்றதற்குப் பதிலாகக் கிடைத்த சிரிப்பு காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

உடன்பட்ட போது உருகி

முரண்பட்ட போது முறுவலித்தாய்

என்ற கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை வரிகள்தான் அவரது ஆளுமையை எடுத்துச் சொல்கின்றன.

எத்தனை உச்சக்கட்ட முரண்பாடுகள் ஏற்பட்ட போதும் தன் முறுவலாலேயே அதை எதிர்கொண்ட பக்குவம்தான் இன்று பல நாட்டினரும் அவரை வியந்து பாராட்டும் நிலைக்கு அவரை உயர்த்தியிருக்கிறது.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

என்ற குறளுக்கு ஏற்ப ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நம்பிப் பொறுப்பை ஒப்படைக்கும் தலைவரின் பாங்கிற்கு மிகச் சிறந்த சான்று அண்ணன் தமிழ்ச்செல்வன்.

அரசியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது அண்ணனுக்கு வயது வெறும் 27. களத் தளபதிகளாக இளம் வயதில் எத்தனையோ பேர் சாதித்ததுண்டு. ஆனால் அரசியல் தலைமை என்பது அப்படிப்பட்டதல்ல. மிகுந்த பக்குவம் தேவைப்படும் அப்பதவிக்கு அண்ணனைத் தலைவர் நியமித்த போது வியப்பாலும் அய்யத்தாலும் பல புருவங்கள் உயர்ந்தன. ஆனால் இறுதி வரை தான் ஏற்றுக் கொண்ட பொறுப்பிற்கும் தன்னை அந்நிலைக்கு உயர்த்திய தலைவருக்கும் பெருமை சேர்ப்பவராகவே அவர் வாழ்ந்தார்.

17 வயதில் தலைவரிடம் வந்து சேர்ந்த அவரை தனது தம்பியாக மட்டுமல்ல, சொந்தப் பிள்ளையாகவே தலைவர் வளர்த்தார்.

“தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல் மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.”

என்று அவர் சொல்லியிருப்பது தமிழ்ச்செல்வன் மீது அவர் எந்த அளவிற்கு பாசமும், நம்பிக்கையும் வைத்திருந்தார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

எவரிடமும் எளிதில் நட்பு பாராட்டும் அவரது இயல்பை இன்று உலக ஊடகவியலாளர்கள் அனை வரும் நினைத்துப் போற்றுகின்றனர். என்றும் மாறாத புன்னகை கொண்ட வராய் நாம் அறிந்துள்ள அவருக் கும் கோபமூட்டும் செயல்கள் உண்டு.

“அவனுக்கோ பிள்ளைகளுக்கோ நாங்கள் ஏதேனும் வாங்கிச் சென்றால் அவனுக்கு கோபம் வந்துவிடும். எனக்கு என் தலைவர் இருக்கிறார். என்னையும் என் பிள்ளைகளையும் அவர் பார்த்துக் கொள்வார். எங்களுக்கென்று தனியாக ஏதும் வாங்கி வராதீர்கள் என்று கண்டிப்புடன் சொல்லி விடுவான்”

- அண்ணன் தமிழ்ச் செல்வனின் மூத்த சகோதரர் பரமு ரவி கதறியழுது சொன்ன வார்த்தைகள் இவை.

கனடாவில் இருக்கும் இவரையும் இவர்களது தாயாரையும் வன்னியில் நடந்த இறுதி நிகழ்வில் பங்கு கொள்ள அனுமதி மறுத்தது ஈரமற்ற சிங்கள அரசு.

- அண்ணனின் முகத்தில் பூத்திருக்கும் புன்னகையை ஒத்த அழகான இரு பிள்ளைகள் அவருக்கு. மகளுக்கு வயது 8. மகனுக்கு 3. மனைவி இசைச்செல்வியும் ஒரு போராளி. அதனைத்தாண்டி ஒரு நடனக் கலைஞர். கவிஞர்.

5 நிமிட உரையாடல் அளவு மட்டுமே நேரடியாக அறிந்த எனக்கே உறக்கம் கெட்டு நெஞ்சே வெடித்துவிடும் போன்ற துயரம் பாரமாய் அழுத்துகிறதே..,, அவர் பெயரைக் கேட்டாலே விம்மல் எழுகிறதே,,

போராளியாக இருந்த போதும்,, ஒரு கலைஞராக,, கவிஞராக மென்மையான மனம் படைத்த அவர் மனைவியின் மனம் என்ன பாடுபடும்... நினைத்துப் பார்க்கவும் இயலவில்லையே..

சாவு ஏற்படுத்தும் ஆற்றாமை மிகக் கொடியது,,

எவ்வகையிலும் ஆற்றிக் கொள்ள இயலாதது,,

எத்தனை எத்தனை ஆசைகள்..

எத்தனை எத்தனை நம்பிக்கைகள்...

கையிலிருந்த ஆசைப் பொருளைப் பறி கொடுத்தது போன்ற ஏமாற்றம்..

அண்ணா,, நீ வெளிப்படுத்திய அன்பும்,, எம்மை வசப்படுத்திய உன் பாசமும்,,

இன்று வெளிப்படுத்த இயலா கண்ணீராய்,, வசமிழக்க வைக்கும் துயரமாய் பெருகி வழிவது உனக்குத் தெரிய வில்லையா?

தினம் காலையில் 4 மணிக்கு எழுந்து 6 மணிக்கு அலுவலகத்தில் இருப்பது உனக்கு வாடிக்கைதான்..

அன்று ஒரு நாள் நீ அதிக நேரம் தூங்கியிருக்கக்கூடாதா.. நிரந்தர துயில் உன்னை ஆட்கொள்ளாது விட்டிருக்குமே..

எல்லாம் கனவென,, நீ மீண்டும் புன்னகையோடு எழுந்துவிட மாட்டாயா?

"தங்கச்சி நலமா இருக்கிறீர்களா? என்று உன் குரலை நான் மீண்டும் கேட்க மாட்டேனா,,

உன் சொற்படி நான் அப்பாவை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்,,

ஆனால் உன்னைத் தொலைத்துவிட்டு நிற்கிறோமே,, இதற்கு என்ன செய்ய??

ஒரே ஆண்டில் பாலா அண்ணனையும் அருமைத் தம்பி உன்னையும் பறி கொடுத்துவிட்டு,,

தன் நெஞ்சத்துத் துயரையெல்லாம் அடக்கிக்கொண்டு இறுகிய முகத்தோடு நிற்கும் தலைவர் யாரிடம் எப்படி ஆற்றிக்கொள்வார் தன் வேதனையை?

களத்தில் சாவு தினசரி நிகழ்வுதான்..

30 ஆண்டுகளாய் நாம் பறிகொடுத்த உயிர்கள் ஒன்றிரண்டு இல்லைதான்..

எனினும்.. போரில் நிகழும் வீரச்சாவிற்கும்..

நயவஞ்சகத்தால் ஏற்படும் இழப்பிற்கும் வேறுபாடில்லையா..?

ஜானியை ,,

புலந்தி அம்மானை,,

குமரப்பாவை ,,

கிட்டு அண்ணாவை ..

இன்று தமிழ் அண்ணனை,,

இவர்களை இழந்தது நயவஞ்சகத்தால் மட்டுமல்ல,, நம் ஒற்றுமையின்மையாலும்தான்..

ஜானியின் சாவிற்கே தமிழகம் கூடிக் குரல் கொடுத்திருந்தால்,, அடுத்தடுத்து நடத்தத் துணிவு வந்திருக்குமா?

குற்ற உணர்ச்சி கொல்கிறது,,

இனியாவது திருந்துவோமா...?

- தென் செய்தி

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.