Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வன்முறை எனும் விதிவிலக்கின் மொழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்முறை எனும் விதிவிலக்கின் மொழி

By ஆர். அபிலாஷ் February 03, 2026

எப்ஸ்டைன் கோப்புகள் குறித்த தரவுகள் உண்மையில் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமான வித்தியாசம் இது. நாம் இத்தகைய விவகாரங்களை கிசுகிசு, வம்பு, கற்பனைக் கதைகளுக்குள் மறைத்துவிடுவோம். அவர்களை அவற்றை ஆவணங்களாகவே பொதுவெளியில் வெளியிடுகிறார்கள். ஆனால் அதற்காக எப்ஸ்டைனைப் போன்ற சிறுமிகளைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்துவோர், பணத்தைக் காட்டி பல இளம்பெண்களைச் சுரண்டுவோர், அவர்களை டிரம்பைப் போன்ற வேறு நண்பர்கள், அதிகார வர்க்கத்தினரிடம் பகிர்ந்து கொள்வோர் இந்தியாவில் இல்லையென்றில்லை. இத்தகையோர் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லையா? இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். இதைப் பற்றிப் படிப்பவர்களை அதிகம் தொந்தரவு செய்வது, கலங்கடிப்பது எந்த வரைமுறையுமற்ற பாலியல் அத்துமீறல்கள். குற்றங்கள் கூட அல்ல. ஏனென்றால் ஒருவிதத்தில் பாலியல் தரகர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், மாடல்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் எப்ஸ்டைன். அவரிடம் யாரோ விசாரணை செய்யும் காணொளியும் வெளியாகி இருக்கிறது. அதிலும் இப்பணம் கேள்விக்குள்ளாகிறது. உங்கள் பணம் நியாயமானதா என்பதைப் போலொரு கேள்வி. எப்ஸ்டைன் ஆமாம் அதற்கென்ன? நான் சம்பாதித்ததுதானே என்கிறார்.

இதனாலே பாலின பேதம், பாலின அதிகாரம் எனும் தனிமனித ஒழுக்கம், தனிமனித அதிகாரம் எனும் குறுகிய எல்லையைக் கடந்து நாம் இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.

எப்ஸ்டைனின் நடவடிக்கைகளைப் பார்க்கையில் அவர் இளம்பெண்களை விருப்பமின்றி கடத்தி வந்து கொடுமைப்படுத்தியதாகத் தெரியவில்லை. அவரைக் குறித்து பின்னர் புகார் தெரிவித்தவர்களும் ஏதோ ஒரு கொடுக்கல் வாங்கலில் உள்ளே வந்தவர்கள். அல்லது தரகர்கர்களால் ‘வாங்கப்பட்டு’ கொண்டு வரப்பட்டவர்கள். அப்பெண்கள் இப்போது புகார் சொல்வதில் நிறைய நியாயம் உள்ளது. அவர்கள் முகமையற்ற ‘விற்பனைப் பண்டங்கள்’. சமத்துவத்தை நம்பும் சமூகத்தில் மனிதர்களை, அதுவும் குழந்தைகளைப் பண்டமாக்கி விற்க முடியுமா, என்பது நம்மை நடுங்கச் செய்கிறது. ஆனால் பிரச்சினை உண்மையில் எப்ஸ்டைன்கள் அல்ல, இந்த ‘தொழில்’தான். நாம் இதை நோண்டினால், அலசினால், கேள்வி கேட்டால் நிறைய நிறைய அசௌகர்யங்கள் ஏற்படும் - பாலியல் ஒழுக்கம், பாலியல் குற்றங்கள், அவை ஏன் நிகழ்கின்றன, குடும்பம், பாலியல் கட்டுப்பாடுகள், மதம் ஆகியவற்றுக்கும் ஒழுக்க மீறலுக்குமான தொடர்பு என்ன ஆகிய கேள்விகள். அடுத்து கட்டுக்கடங்காத பெருஞ்செல்வம் ஏன் எப்போதுமே மிதமிஞ்சிய போதைப் பழக்கம், பாலியல் மீறல்களுக்கு வழிவகுக்கின்றன? (நான் குடும்பத்தைப் பற்றி வேறோர் இடத்தில் பேசியிருப்பதால் இங்கு தவிர்க்கிறேன்.)

அடுத்து, செல்வம் ஏன் எப்போதும் மனிதர்களை சமூக அமைப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே ‘சுதந்திரமானவர்களாக’ மாற்றுகிறது?

இச்சுதந்திரம் ஏன் அறத்தினால் நெறிப்படுத்தப்படுவதில்லை?

ஏன் அறம் ஒரு மத்திய வர்க்கச் சிக்கலாக மட்டும் இருக்கிறது? ஏன் பெரும் பணக்காரர்கள் அறத்தைப் பற்றி கவலை கொள்வதில்லை?

ஏன் வணிகவியல் படிப்புகளில் அறம் சொல்லித் தரப்படுவதில்லை?

ஏன் நம்மால் அத்தகைய வர்க்கத்தினரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை?

ஆக ஒவ்வொரு முறை இத்தகைய குற்றங்கள் சர்ச்சையாகும்போதும் நாம் இவர்களைத் தூற்றிவிட்டு வேலையைப் பார்க்கப் போகிறோம். ஆனால் மத்திய, கீழ் வர்க்கத்தினர் இதே குற்றங்களைச் செய்ய முற்பட்டால் அவர்கள் சிதைக்கப்பட்டு எல்லாருக்கும் முன்னுதாரணமாக மாற்றப்படுவார்கள். அறத்துக்கு அப்பாலான ஒரு வர்க்கம் இருக்கிறதா?

அவர்கள் வர்க்கப் படிநிலைக்கு அப்பாலாக இருக்கிறார்களா? பணம் எனும் தூய கருத்துரு அதைச் சாத்தியமாக்குகிறதா? அதாவது பணமே கடவுளுக்கு மாற்றாகத் தோன்றிய தூய கருத்துரு என்று மார்க்ஸ் சொல்வது சரியெனில் பணம் ஒரு வர்க்கத்தை கடவுளுக்கு இணையாகக் கொண்டு நிறுத்துகிறதா? ஒரு கடவுளைக் கீழிறக்கி சிறையில் தள்ளி சவுக்கால் அடிப்பதைப் போலத்தான் எப்ஸ்டைனை இப்போது செய்திருக்கிறார்களா? அவரது மரணம் எதைக் காட்டுகிறது? அவரது நேர்காணலில் நீங்கள் சாத்தானின் மனித உருவமா எனும் கேள்வி இதை மனத்தில் வைத்தே எழுப்பப்படுகிறதா?

இதைக் குறித்தும் நாம் யோசிக்க வேண்டும்.

கடைசியாக, எப்ஸ்டைனுடையது (பிறழ்வு என்றல்லாமல்) பாலியல் வன்முறைக் குற்றம் என வகைப்படுத்தப்படும் எனில் அது உபயோகமாக இருக்கும். அது பாலியல் வன்முறை நிறுவனமயப்பட்டது, அதைப் பணம் சாத்தியப்படுத்துகிறதா எனும் கேள்விக்கு நம்மை இட்டுச் செல்லும்.

பாலியல் கட்டுப்பாட்டை ஒழுக்கவாதமாக அல்லாமல் சட்டரீதியான சமூகக் கட்டுப்பாடாகப் பார்த்தோமானால் இன்னும் தெளிவான பதில் கிடைக்கும்.

நம் சட்டம் அனைவரையும் சமமாகப் பார்த்தாலும் ஆளும் அதிகார வர்க்கம் சட்டத்துக்கு அப்பாலான ஒரு வர்க்கமாகவே எல்லா நாடுகளிலும் உள்ளது. அளவற்ற செல்வம் படைத்த வர்க்கமே ஆளும் கட்சிகளைக் கட்டுப்படுத்துவதால் அவர்களும் நீதிமன்றத்துக்கு அப்பாலான ஒரு மீ-குடிமக்களாக மாறுகிறார்கள். இதை நீதிமன்றம் இவ்வர்க்கத்தினரை நடத்தும் விதத்தைப் பார்த்தாலே புரியும். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் எந்தத் தலைவரையும் குற்றம் சாட்டி நம்மால் சிறைக்கு அனுப்ப முடியாது. அதிகாரத்தை இழந்த பின்னரே இயலும். ஒருவிதத்தில் அதிகாரத்தின் மீதான மரியாதை (மக்கள் அளிக்கும் அதிகாரத்துக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு எனும் பெயரில்) அரசை நீதிமன்றத்துக்கு அப்பால் நிறுத்துகிறது. ‘மக்களுக்காகவே நீதி, நீதிக்காக மக்கள் அல்ல’ எனும் பெயரில் நீதிமன்றத்தின் ‘நடைமுறை வரம்பிற்கு’ வராத வர்க்கமொன்று தோற்றுவிக்கப்படுகிறது. இவர்களுக்கு நிதியளிக்கும் வர்க்கமே நவீன கடவுளாக நம் சமூகத்தில் இருந்து வருகிறார்கள். இது ஊழலோ, எதார்த்தமோ அல்ல, இது சமூக நிறுவனங்கள் அளித்துள்ள ஒருவித அனுகூலம்.

எப்போதுமே நிறுவனங்கள் ‘விதிவிலக்குகளின்’ அடிப்படையிலே தோன்றுகின்றன என்பதை நாம் நினைவுகொள்ள வேண்டும். நீதி விசாரணையில் இருந்தும் சமத்துவத்தில் இருந்தும் விதிவிலக்கு என்பதே ஜனநாயகச் சமூகங்களில் பணக்கார, ஆளும் வர்க்கத்தை உருவாக்குகிற ‘விதிவிலக்கு’. அவ்விதிவிலக்கு இல்லையெனில் சமூக அதிகாரக் கட்டமைப்பு சீர்குலையும் என நம்புகிறேன். பெரும்பகுதியினர் ஏன் சிறுபான்மைக்குக் கட்டுப்பட வேண்டும்? ராணுவம், போலீஸ், மூலதனம் மீதான அச்சத்தினாலா? இவை நிபந்தனைக்குட்பட்டவை. நிபந்தனைக்குட்படாத ஒன்றுதான் மக்களைக் கட்டுப்படுத்துகிறது - அதுவே ‘விதிவிலக்குகள் அற்றவர்களாக இருக்கிறோம், அவர்கள் விதிவிலக்கால் இருக்கிறோம்' எனும் நிஜம். இந்த விதிவிலக்கே உடனடியாக நம்மைப் பணிய வைக்கிறது. இந்த விதிவிலக்கின் மொழியே பாலியல் நாட்டம் / வன்முறை. கடவுளும் பணமும் இந்த விதிவிலக்கின் இலக்குகள்.

பணத்துக்கும் பாலியல் கட்டுப்பாட்டுக்குமான இந்த உறவு வினோதமாகவும் அதே சமயம் உண்மையாகவும் இருக்கிறது - பணம் அதிகரிக்க அதிகரிக்க பாலியல் கட்டுப்பாடுகள் விலகிக் கொண்டே வருகின்றன. அது குறையக் குறைய கட்டுப்பாடுகளும் அதிகாரிக்கின்றன. பணமே இல்லாவிட்டாலும் பரவாயில்லை எனும்படிக்கு வறுமை தீவிரமாகும்போதும் பாலியல் கட்டுப்பாடுகள் காணாமல் போகின்றன.

இதனால்தான் எப்ஸ்டைன் போன்றோரின் வீழ்ச்சியை நாம் அருவருப்புடன் காண்கிறோம், ஆனால் மனதுக்குள் கொண்டாடுகிறோம். அவர்கள் அனுபவிக்கும் விதிவிலக்கின் திளைப்பு நம்மை உலுக்குகிறது. நாம் வன்முறையை அஞ்சும் அளவுக்கு அதை நேசிக்கவும் அதற்காக ஏங்கவும் செய்கிறோம். வன்முறையின் விளிம்பிலே ஒவ்வொரு கணமும் நின்றுகொண்டிருக்கிறோம் என்பதை நவீன மனிதர்களின் உடல்மொழி, சைகைகளைக் காண்கையில் தோன்றுகிறது (பாலியல் வன்முறையும் இதற்குள் வரும்). இந்த ‘விளிம்பு நிலை’ ஒரு தவிப்பு நிலை. இங்கிருந்து நாம் எப்ஸ்டைனைப் பார்க்கிறோம்.

மனிதர்கள் விலங்குகள் என்றோ அதனாலே அவர்கள் வன்முறையால் செலுத்தப்படுகிறார்கள் என்றோ நான் சொல்ல மாட்டேன். பணம் எனும் அரூபமான அதிகாரமே வன்முறையை உருவாக்குகிறது என நம்புகிறேன். கடவுளுக்கும் இத்தகைய சக்தி உண்டு. ஏனென்றால் இரண்டுமே விதிவிலக்கைத் தோற்றுவிக்கின்றன. இதைப் புரிந்துகொள்ள நீங்கள் கடவுளை மையமிட்ட மதங்களின் புராணக் கதைகளைப் பாருங்கள். அவற்றில் தொடர்ந்து கடவுளுக்கும் அறத்துக்குமான முரண்பாடு பேசப்பட்டிருக்கும். கடவுள் ஏன் இப்படிக் கொடூரமாக இருக்கிறார் எனக் கேட்டுவிட்டு அதற்கு ஒரு விளக்கம் அளிப்பார்கள். அது கடவுளை விதிவிலக்கானவராக்கும். பக்தி என்பதே இந்த ‘கொடூரத்தைக்’ காதலிப்பதுதான். மெல்லமெல்ல நாம் விவசாயத்தைக் கண்டுபிடிக்கிறோம், வேளாண் சமூகமாகிறோம், நிலத்தையும் அதில் பணிசெய்வோரையும் குழந்தைகளையும் நம் ‘தனிச்சொத்து’ எனும் புரிதலுக்கு வருகிறோம். வன்முறை அனைவரையும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் விதிவிலக்காக மாறியது இக்காலத்திலாகத்தான் இருக்க வேண்டும். அப்போதும் ஒன்று கூடாது என்றும், அதற்கு விதிவிலக்கு உண்டு எனும் இருமை இருந்திருக்கிறது. நிலத்தின் அடிப்படையிலான வளம், தங்கமாகவும் பணமாகவும் மன்னர்கள் காலத்தில் மாறுகிறது. இப்போது விதிவிலக்கை நாம் நீதி, அறம் ஆகியன குறித்த விவாதங்களால் வடிவமைத்தோம். விதிவிலக்கை எப்போது மீறலாம், எப்போது கூடாது என்பதில் வரும் சச்சரவே மகாபாரதப் போரும், விதிவிலக்கே ஆன்ம ஆற்றல் எனும் கோட்பாடே கீதைப் பேருரையும் ஆகின்றன.

அதன் பின்னர் காலனிய காலம் வருகிறது, அதைத் தொடர்ந்து நவீன சமூகங்கள் தோன்றுகின்றன. நவீன பணம் வணிக வர்க்கத்தை சமூகத்தின் உச்சத்திற்கு கொண்டு வர மக்கள் அனைவரும் அதை நோக்கிப் போக விரும்புகிறார்கள். இந்த இச்சையை வடிவமைக்க நாம் ஜனநாயக அமைப்பை உருவாக்குகிறோம். அடிப்படையில் அசமத்துவத்தை உருவாக்குகிற பொருளாதார அமைப்புக்குள் நியாயமான போட்டியும், சம வாய்ப்புகளும் உள்ளதாக ஒரு கதையாடலை உருவாக்குகிறோம். முதலில் நிலமும் உழைக்கிறவரின் உடலும் யார் கட்டுக்குள் இருக்கிறதோ அவரே ஒருவித மிதமான விதிவிலக்கை அனுபவித்தார். அதன்பிறகு மன்னரும் மதமும் அந்த இடத்தை எடுத்துக் கொள்ள, மன்னருக்கும் பூசாரிக்கும் விதிவிலக்கு கிடைக்கிறது. அவர்கள் குற்றம் செய்யலாம், தண்டனை இல்லை, அவர்கள் பிறரது குற்றங்களைத் தண்டிக்கலாம் (சாதி எனும் விதிவிலக்கை நேரடியாக நிர்வகிக்கும் சமூகவியல் அமைப்பும் தோன்ற்கிறது). அறம் இன்னும் சிக்கலாகிறது. அவர்களைத் தொடர்ந்து காலனியம் நேரடியாக உடல் மீது அதிகாரம் கொள்ளும் விதிவிலக்கையும் அடிமை விற்பனையையும் அறிமுகப்படுத்துகிறது. நவீன ஜனநாயக உலகில் வணிகச் சமூகங்களும் ஆளும் வர்க்கமும் பணத்தைக் கொண்டு விதிவிலக்கை உருவாக்கி முற்று முழுதான அதிகாரத்தைக் கட்டமைத்தனர். இப்படித்தான் கடவுளின் அதிகாரத்தை நாம் செல்வத்துக்குக் கொடுத்தோம். கடவுளைப் போன்றே அறத்தைக் கடந்த ஒரு மீ-இருப்பாக பணம் மாறியது. பணத்தை முழுமையாகக் கைக்கொண்டவர்கள் கடவுளாக உணர்ந்தார்கள்.

இந்த காலகட்டங்களில் பாலுறவு ஒரு சாதாரணமான செயல் எனும் இடத்தில் இருந்து சமூகத்தை வரையறுக்கும் அச்சமாக மாறுகிறது. அது நிலத்திலும் மனித உடல்களிலும் மன்னரின் செங்கோலிலும் வேதநூல்களிலும் காலனிய வர்த்தக நியதிகளிலும் நவீனப் பொருளாதார பரிவர்த்தனைகளிலும் புகுந்து விளையாடுகிறது. அது பாலுறுப்புகளைக் கடந்த ஒரு மகத்தான ஆற்றலாகிறது. அது இன்பத்தைத் தள்ளிப் போடுதல் அல்ல, அது அச்சத்தை விளைவிப்பதாகிறது. இந்த அச்சத்தைத் தக்க வைக்கும் நோக்கிலேயே பாலியல் ஒழுக்கம் கொண்டு வரப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என நினைக்கிறேன்.

ஆக, நவீன முற்போக்கு தாராளவாதிகள் நம்புவது இவ்விசயத்தில் தவறு: பாலியல் வன்முறையைச் சட்டத்தினாலோ சமத்துவத்தாலோ ஒழிக்க இயலாது. சட்டமும் சமத்துவமும் ஒரு குறிப்பிட்ட வகையான வர்க்கங்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவே உதவும் (அதாவது நம்மைப் போன்றவர்களை). அதுவும் நமக்குள் செல்வம் மீதான ஆசை நெருப்பாகக் கிளர்ந்தபடி இருக்கிறது. இதை நாம் பால் உடல்களில் நிகழ்த்திப் பார்க்கிறோம். ஆண்கள் பெண்களை விட வலுவானவர்கள் என்பதால் அவர்கள் பலாத்காரங்களில் அதிகமாக ஈடுபட்டு பல கொலைகளையும் செய்கிறார்கள். பாலியலின் இன்பமே உடல் அல்ல, உடலைப் மூலதனமாக மாற்றுவதுதான். ஆதிக்கப் பாலியல் இன்பம் உடலை வருத்தி மூலதனத்தைக் கைப்பற்றும் விருப்பம்தான். அதனாலே மனம் பிறழ்ந்தவர்கள், குற்றங்களால் தாம் விடுதலையானதாக உணர்ந்தவர்கள் பாலியல் குற்றங்களில் மிகக் கொடூரமாக ஈடுபடுகிறார்கள். பலாத்காரம் செய்து ரயிலில் இருந்து வீசி எறிகிறார்கள். அவர்களிடம் விதிவிலக்கின் அதிகாரம் உடனடியாக வந்து விடுகிறது. ஆனால் அரைகுறையாக, அவர்கள் மீறுவதே அதிகாரம், அந்த அதிகாரமே தனக்குள்ள விதிவிலக்கு என்று மட்டும் ஏதோ ஒரு கணத்தில் குழப்பமாகப் புரிந்து கொள்கிறார்கள். பலவீனமான யாரைக் கண்டாலும் அதை முயல்கிறார்கள், அழிக்கிறார்கள். அவர்களிடம் மிதமிஞ்சிய செல்வம் இருந்தால், பலவீனமானவர்களை அவர்களுடைய எதிர்ப்பின்றி பணத்தால் மீறுவதே அதிகாரம் எனும் புரிதல் வந்தால், அவர்கள் எப்ஸ்டைன்களாகி விடுவார்கள்.

மக்களைச் செலுத்துவது விதிவிலக்கின் எரிமலை. அதன் நெருப்புப் பிழம்பு வழிந்தபடித்தான் இருக்கிறது. மக்கள் இந்த எரிமலையைச் சுற்றி நின்று அச்சத்திலும் பரவசத்திலும் நடுங்குவார்கள். நாம் இதைக் குறித்துப் பேச வேண்டும்.

https://www.writerabilash.in/2026/02/blog-post_3.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.