Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

Feb 25, 2026 - 09:26 AM

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இன்று (25) அதிகாலை பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmm1i55xv0001356pfd1d2w9i

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல் : அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது!

25 Feb, 2026 | 09:58 AM

image

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது கைது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சனல் 4 ஆவணப்படம்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் பெயரை தொடர்புபடுத்தி, பிரித்தானியாவின் ‘Channel 4’ தொலைக்காட்சி 2023 ஆம் ஆண்டு ஒரு விசேட ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.

அந்த ஆவணப்படத்தில், ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையானின் செயலாளராக பணியாற்றிய அசாத் மௌலானா என்பவர், சுரேஷ் சாலே தொடர்பான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

முன்னைய பதவிகள்

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலப்பகுதியில், சுரேஷ் சாலே இராணுவப் புலனாய்வுப் பணிப்பகத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.

எனினும், 2024 நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களால், அவர் தனது பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/239511

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்

Feb 25, 2026 - 02:28 PM

கைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் காணப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பில் நீண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால் அது குறித்த தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றார்.

கைதுக்கான காரணத்தை சில மணி நேரங்களுக்குள் வெளிப்படுத்துவது கடினம் எனக் குறிப்பிட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, பொலிஸார் தமது கடமையை முறையாகச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmm1swzdq000d356p0n8srrqy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் அலி சப்ரி!

Feb 25, 2026 - 03:48 PM

சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் அலி சப்ரி!

இன்று இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் பிரிவிற்கும் ஒரு கவலைக்குரிய நாளாகும் என முன்னாள் வெளிவிவகார மற்றும் நீதி, சிறைச்சாலைகள் விவகார மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே என்பவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வு வலையமைப்பை முறியடித்தமை, விடுதலைப் புலிகளின் உயர் தலைவர்களை இலக்கு வைத்துப் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தமை மற்றும் 'கே.பி' போன்ற விடுதலைப் புலித் தலைவர்களைக் கைது செய்தமை போன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு அதிகாரி என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிற்கு மிகவும் சவாலான காலப்பகுதிகளில் தமது உயிரைப் பணயம் வைத்துச் சேவையாற்றிய அதிகாரிகள், இன்று அரசியல் விவாதங்களுக்குள் இழுத்து வரப்படுகின்றமை பலரையும் கவலையடையச் செய்யும் ஒரு விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக நாடொன்றில் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறல் என்பது அவசியமானது என்ற போதிலும், அது நியாயமான முறையிலும், எல்லைகளுக்கு உட்பட்டும், நிறுவனத்தின் கௌரவத்தை மதிக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொழில்முறை வாய்ந்ததாகவும், சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடாகவும் அமைய வேண்டும்.

ஆனால் அதற்குப் பதிலாக, ஒரு சிக்கலான விசாரணையானது பொதுமக்களுக்கான ஒரு காட்சிப்பொருளாக (Public spectacle) மாற்றப்படுவதையே நாம் அதிகளவில் காணக்கூடியதாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் தனது X பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியல் லாபங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்துவதானது, இலங்கையின் நம்பகத்தன்மைக்கும் நீண்டகாலப் பாதுகாப்பு நலன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பானது அரசியல் மோதல்களின் பக்கவிளைவாக மாறிவிடக் கூடாது என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை உண்மையையும் நீதியையும் தேடிப் பயணிக்க வேண்டும். ஆனால், அது சட்டம், சாட்சியங்கள் மற்றும் பொறுப்புள்ள தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவோ அல்லது திசை திருப்புவதற்காகவோ உருவாக்கப்படும் நாடகத்தனமான நடவடிக்கைகளின் அடிப்படையில் அமையக் கூடாது என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி இறுதியாக வலியுறுத்தியுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmm1vq4mk000g356pg7ukef6g

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது: 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை!

25 Feb, 2026 | 03:31 PM

image

அரச புலனாய்வுப் பிரிவு முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை (25) காலை பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான மீள் விசாரணைகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இன்று பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்பட்டன:

மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த கருத்துத் தெரிவிக்கையில்,

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகக் கிடைத்துள்ள வலுவான சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து நீண்டகால விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், மேலதிக தகவல்களை இப்போதைக்கு வெளியிட முடியாது" எனத் தெரிவித்தார்.

கைதுக்கான காரணத்தை உடனடியாக அறிவிக்காமல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சஜீவ மெதவத்த, "அவரைக் கைது செய்யாமல் இருந்திருந்தால் தான் பொலிஸாருக்கு எதிராக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொலிஸார் தமது கடமையைச் சரியாகச் செய்துள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.

சுரேஷ் சலேவிடம் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளின் ஊடாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள 'மகா சூத்திரதாரி' தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கையில்,

"பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்தால் 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய முடியும். அதன்பின்னர் தேவைப்படின், சாட்சியங்களின் அடிப்படையில் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக காலம் தடுத்து வைக்கவும் சட்டத்தில் இடமுண்டு" என்றார்.

பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மேலதிக தகவல்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் பொலிஸார் இதன்போது உறுதியளித்தனர்.

'சனல்-4' விவகாரம் மற்றும் அசாத் மௌலானாவின் வாக்குமூலங்கள் பின்னணி

2019 ஏப்ரல் 21 அன்று சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த 10 தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களில் 273 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு தினசரி விசாரணை நடைபெற்று வருகின்றது.

இத்தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சக்திகள் இருப்பதாக நீண்டகாலமாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தற்போதைய அரசாங்கம் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியது.

குறிப்பாக, பிரித்தானியாவின் 'சனல்-4' ஊடகம் வெளியிட்ட ஆவணப்படத்தில், சுரேஷ் சலே மற்றும் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்தும், ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டுவர நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கத் திட்டமிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ளவருமான அசாத் மௌலானா வழங்கிய தகவல்களே சுரேஷ் சலேவுக்கு எதிரான விசாரணைகளில் திருப்புமுனையாக அமைந்தன.

கடந்த காலங்களில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த இரகசிய விசாரணை அறிக்கைகளின் அடிப்படையிலும், புதிதாகக் கண்டறியப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலுமே இன்றையதினம் இந்த அதிரடி கைது இடம்பெற்றுள்ளது.

தற்போது சி.ஐ.டி வசம் உள்ள சுரேஷ் சலேவிடம் தாக்குதலின் பின்னாலுள்ள அரசியல் தொடர்புகள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://www.virakesari.lk/article/239555

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுரேஷ் சலேயின் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது - திலித் ஜயவீர

Feb 25, 2026 - 05:46 PM

சுரேஷ் சலேயின் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது - திலித் ஜயவீர

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை, சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர இன்று (13) வன்மையாகக் கண்டித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் போர்வையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமது எக்‌ஸ் கணக்கில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து திலித் ஜயவீர தெரிவித்துள்ளதாவது,

மேஜர் ஜெனரல் சலே இலங்கையில் மூன்று தசாப்த கால கொடிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஒரு சிறந்த மற்றும் திறமையான இராணுவ அதிகாரி ஆவார்.

இவ்வாறானதொரு அதிகாரியை அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலுக்கு உட்படுத்துவது, அதன் நேர்மை, நோக்கம் மற்றும் அரச அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது குறித்த கடுமையான கவலைகளை ஏற்படுத்துகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்பகமான சாட்சியங்களுக்குப் பதிலாக, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது நீதியைச் சீர்குலைப்பது மட்டுமன்றி, இலங்கை ஆயுதப் படைகளின் மன உறுதியையும் கடுமையாகப் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

நாட்டைப் பாதுகாக்கத் தமது உயிரைப் பணயம் வைக்கும் வீரர்கள், அரசியல் தேவைகளுக்கான இலக்குகளாக மாற்றப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதி என்பது வெளிப்படையானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும், எவ்வித தலையீடுகளும் அற்றதாக இருக்க வேண்டும். அதற்கு மாறாகச் செய்யப்படும் எச் செயலும், அதனைச் செய்பவர்கள் மீது நீங்காத கறையை ஏற்படுத்தும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர மேலும் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmm1zzqt5000l356pcdx1ejei

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுரேஷ் சலே கைதானது எப்படி?

Feb 25, 2026 - 09:34 PM

சுரேஷ் சலே கைதானது எப்படி?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்டார்.

அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான மிலேச்சத்தனமான தீவிரவாதிகள் குழுவினால் நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட 10 தற்கொலைத் தாக்குதல்களில் 273 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அனைத்து விசாரணைகளின் அடிப்படையில் வெளிவந்த தகவல்களுக்கு அமைய, தாக்குதல் நடத்திய குழுக்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெற்று வருகின்றது.

இத்தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் பின்னணி இருப்பதாகப் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.

இதன் ஒரு கட்டமாக, ராஜபக்ஷவினரை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு நடைபெற்றதாகப் பிரித்தானியாவின் 'சனல் 4' ஊடகம் ஒரு ஆவணப்படத்தின் மூலம் குற்றச்சாட்டை முன்வைத்தது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் ஊடகப் பேச்சாளராக இருந்து, தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ரகசிய விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அவ்வப்போது கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தது.

இந்நிலையில், இன்று காலை 8.10 மணியளவில் பேலியகொடை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்காகச் சென்று கொண்டிருந்த போதே சுரேஷ் சலே சி.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட அவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அவர் பயன்படுத்திய கணினிகள், அவரது வீடு, வங்கிக் கணக்குகள் மற்றும் மின்னஞ்சல் தகவல்களைச் சோதனையிடவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுரேஷ் சலே முன்கூட்டியே சில தகவல்களைத் தெரிந்திருந்தும், அதனை உரிய தரப்பினருக்குத் தெரிவிக்காமல் மறைத்தாரா என்பது குறித்தும் விசாரணை அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, இத்தாக்குதலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் சில முக்கிய நபர்கள் குறித்தும் சி.ஐ.டி விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmm283hp8000r356poz882xg5

  • கருத்துக்கள உறவுகள்

'ஈஸ்டர் தாக்குதலின்' முக்கிய சூத்திரதாரி களில்(Master Mind) ஒருவரும், தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் வசிப்பதாக கருதப்படுபவருமாகிய ஆசாத் மெளலானாவின் ரகசிய வாக்குமூலம் இது:

##################################

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று திரு மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கு 3 நாட்களுக்குப் பின்னர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே எங்களை ஹபரணவுக்கு வரச் சொன்னார்.

மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே அவர்கள் என்னிடமும் பிள்ளையானிடமும் அரசாங்கம் மாறி விட்டது.

எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்.

ஆயுதங்களை ஒளியுங்கள். தன்னையும் இடம் மாற்றலாம்.

இராணுவ சம்பளம் சில வேளை தொகையாகக் கொடுக்க விட மாட்டார்கள்.

ஆட்களுக்கு நேரடியாகத் தான் கொடுக்க வேண்டி வரும் என பல விடயங்களை சொன்னார்.

எதற்கும் 15 போலி பெயர்களை எழுதித் தருங்கள்.

அந்த பெயர்களை இராணுவ சம்பள பட்டியலில் சேர்த்து விடுகிறேன் என நம்பிக்கை தந்தார்.

போலி பெயர்களை எங்களுக்கு பொறுப்பான புலனாய்வு அதிகாரி மொகமட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

எங்களுக்கு ரூபா 3.5 மில்லியன் மாத இராணுவ சம்பளம் தொடர்ச்சியாக மாதாந்தம் வழங்கப்பட்டு வந்தது.

2015 பொதுத்தேர்தலிற்கு பின்னர் பிள்ளையானை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள்.

5 மாத காலம் 4 ஆம் மாடியில் தடுத்து வைத்திருந்தார்கள்.

நான் பிள்ளையானை ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமதி பெற்று சந்தித்தேன்.

5 மாதங்களுக்குப் பிறகு பிள்ளையானை மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றினர்.

பிள்ளையானுக்கு வழக்காடச் சட்டத்தரணியை ஏற்பாடு செய்ய பசில் ராஜபக்சே மூலம் உதவி பெறும்படி சுரேஸ் சாலே அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கிடையில் சுரேஸ் சாலே மலேசியா தூதரகத்துக்கு பாதுகாப்பு பிரதானியாக இடம் மாற்றப்பட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி திரு அனில் சில்வாவை பசில் ராஜபக்சே ஏற்பாடு செய்து வழங்கினார்.

பிள்ளையான் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை முன்கூட்டியே முடிக்க ஒத்துழைக்க வேண்டாம் என சுரேஸ் சாலே அறிவுறுத்தியிருந்தார்.

வழக்கு தவணையின் போது நேரம் கேட்டு ஒத்திவையுங்கள் எனவும் சொல்லி இருந்தார்.

நாங்கள் சட்டத்தரணியோடு கதைத்து அந்தத் தந்திரோபாயத்தை கடைப்பிடித்தோம்.

நான் ஒவ்வொரு வாரமும் அனுமதி பெற்று பிள்ளையனைச் சந்தித்தேன்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையனுக்கு தனியான ஒரு பெரிய அறை கொடுத்திருந்தார்கள்.

பிள்ளையான் சிறைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தினார்.

அந்தத் தொலைபேசி சிறைக்காவலர் ஒருவர் ஊடாக நான்தான் அனுப்பி வைத்தேன்.

அந்தத் தொலைபேசியில் இரவில் என்னோடு கதைத்தார்.

2017 ஆவணி மாதம் சந்திக்கப் போன போது பிள்ளையான் சிறையில் தங்க வைக்கப்பட்டு இருந்த காத்தான்குடி முஸ்லிம் நபர்களை என்னை சந்திக்கும் படி சொன்னார்.

2017 ஆவணி மாதம் 2வது கிழமை சிறைச்சாலைச் அத்தியட்சர் அக்பரின் அனுமதியுடன் ஒரு சிறைக்காவலர் அவர்களில் ஒருவரை என்னுடன் பேச அழைத்து வந்தார்.

நானும் பிள்ளையனும் அவரும் சந்தித்தோம்.

அவர் தன் பேர் சைனி மௌலவி என்று சொன்னார் (தற்*கொ*லை கு*ண்டுத் தா*க்குதாரர்களின் தலைவர் சஹரான் மௌலவியின் சகோதரர்).

சில சம்பாஷணைகளுக்கு பிறகு அவர் போய்விட்டார்.

சந்திப்புக்கு பின்னர் பிள்ளையான் சொன்னார்:

“இவர்கள் கடும் விஷயமான ஆக்கள். வழக்கு முடிந்து வெளியில் வருவார்கள். கஷ்டத்தில் இருக்கிறார்கள. அவர்களுக்கு உதவி செய்வோம். அவர்கள் பின்பு எங்களுக்கு உதவி செய்வார்கள்.”

குறிப்பாக சைனி மௌலவியின் மனைவியின் தம்பியிடம் ரூபா 50,000 கொடுக்க சொன்னார்.

அடுத்தநாள் சைனி மௌலவியின் மச்சான் தொலைபேசி எடுத்தார். நான் எங்கள் காரியாலயம் மட்டக்கிளப்பு லேக் ரோட்டில் இருக்கிறது.

அங்கு வரச் சொன்னேன். அங்கு அவர் வந்து ரூபா 50,000 கொடுத்தேன்.

சம நேரத்தில் பிள்ளையான் சுரேஸ் சாலேயோடு 2 முறை தொலைபேசியில் கதைத்தார்.

2017 புரட்டாதி முதல் கிழமை சுரேஸ் சாலே பிள்ளையானை சந்திப்பதற்கு சில்வா என்கிற ஒருவரை அனுப்பி இருந்தார்.

அந்த நபர் எங்கள் காரியாலயத்திற்கு வந்தார்.

நானும் அவரும் என்னுடைய வாகனத்தில் சிறைச்சாலைக்குப் போனோம்.

சில்வா தமிழ் நன்றாகக் கதைத்தார்.

சிறைச்சாலைக்குள் போவதற்கு என்னுடைய பேரில் பதிந்து கூட்டிக் கொண்டு போனேன். 20 நிமிடம் கதைக்க அனுமதி தந்தார்கள்.

ஆனால் 20 நிமிடம் கதைக்கப் போனவர் 2 மணித்தியாலம் கதையை நிறுத்தவில்லை.

சிறைக்காவலர் தனக்குப் பிரச்சனை வரப்போகுதென்று பயப்படத் தொடங்கினார்.

நான் பிள்ளையானும் சில்வாவும் கதைத்து கொண்டுவிருந்த சிறை அறைக்குள் புகுந்த பிறகு, அவர்கள் கதைப்பதை நிறுத்தினார்கள்.

அதன் பிறகு அவரை நான் சந்திக்கவில்லை.

சில்வா வந்து போன பிறகு மேற்குறிப்பிட்ட முஸ்லிம் ஆட்களைப் பிணை எடுக்க வேண்டும் என பிள்ளையான் கூறினார்.

காசு கொஞ்சம் ஒழுங்கு பண்ண பிள்ளையான் சொன்னார்.

ரூபா இரண்டரை இலட்சம் அளவில் வேண்டும். சுரேஸ் சாலேயிடம் கேட்க வேண்டும் என பிள்ளையான் கூறினார்.

நான் சுரேஸ் சாலேயிடம் பிணை எடுப்பதற்கு காசு இரண்டரை லட்சம் தரும்படி கேட்டேன்.

சுரேஸ் சாலே தான் மொகமட் அவர்களிடம் சொல்லி ஒழுங்குபண்ணுவதாக கூறினார்.

எங்கள் செப்டம்பர் மாத சம்பளத்தோடு சேர்த்து இரண்டரை லட்சம் மேலதிமாகத் தரப்பட்டது.

நான் அந்தக் காசை சைனி மௌலவியின் மச்சானிடம் கொடுத்தேன்.

பின்பு பிணை எடுப்பதற்கு ஓட்டமாவடி சட்டத் தரணி ராசிக் ஐ ஒழுங்குபடுத்திக் கொடுத்தேன். அவர்கள் 24.10.2017 யன்று பிணையில் வெளியில் வந்தார்கள்.

2018 ஜனவரி மாத கடைசியில் மேற்படி பிணையில் வந்தவர்களை சுரேஸ் சாலே சந்திக்க விரும்பினார் என்று பிள்ளையான் சொன்னார்.

அந்தக் கலந்துரையாடலை ஒழுங்குபடுத்திக் கொடுக்கச் சொன்னார்.

அந்தக் கலந்துரையாடலுக்கு என்னையும் போகச் சொன்னார், இராணுவ வாகனத்தில் போக அறிவுறுத்தினார்.

நான் சைனி மௌலவிக்குப் முதல்நாளே போன் பண்ணி, “எனக்கு இப்படிக் கூட்டம் இருக்கிறது. அவர்களின் ஆட்களைக் கூட்டிக் கொண்டு வருங்கள்” என சொல்லி வைத்தேன்.

பிள்ளையான் தொலைபேசியில் ஏற்கனவே கூறியதாகச் சொன்னார்.

சுரேஸ் சாலே தொலைபேசி எடுத்தார். “தானும் வந்து கொண்டிருக்கிறேன்” என உறுதிப்படுத்தினார்.

புத்தளம் வனாத்துமுல்லையில் தென்னமரங்கள் சோலை போல் வளர்ந்திருந்த இடத்தில கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.

அங்கு எனக்கு சைனி மௌலவி ஒருத்தரை மட்டும்தான் தெரியும்.

சைனி மௌலவி தான் எனக்கு தனது சகோதரரை அறிமுகப்படுத்தினார்.

அவர் தனது பெயர் சஹ்ரான் என்று சொன்னார்.

சுரேஸ் சாலே அவர்களிடம், “சஹ்ரான் மௌலவியை நான் தான் அறிமுகப்படுத்தினேன்” என்று கூறினார்.

சஹ்ரான் சொன்னார், “இவரைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன்.” உடனே அவர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளே நுழைந்தனர்.

நான் வெளியில் நின்றிருந்தேன். கூட்டம் 3 மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு சுரேஸ் சாலே தனியாக என்னைக் கூப்பிட்டு, “பிள்ளையான் சிறையிலும் வழக்கிலும் வெளியிலை வருவதென்றால், கோத்தபாயா ஜனாதிபதியாக வந்தால் மாத்திரமே முடியும்.

இல்லையெனில் பிள்ளையான் மட்டுமல்ல எல்லோரும் உள்ளே போக வேண்டியிருக்கும்” என எச்சரித்தார்.

அடுத்தநாள் பிள்ளையானைச் சந்தித்து நடந்த விபரங்களை எல்லாவற்றையும் சொன்னேன்.

பிள்ளையான் கோத்தபாயாவை வெல்ல வைக்க சுரேஸ் சாலே பெரிய பிளானில் வேலை செய்கிறார்.

“நாங்கள் அதற்கு உதவி செய்யவேண்டும். அப்போதான் நான் வெளியிலே வரலாம்” என்று கூறினார்.

11.2.2018 அன்று செப்டம்பரில், நாங்கள் (நான், பிரசாந்தன், தேவராஜ், இனியபாரதி) கோத்தபாயாவை சந்தித்தோம்.

அங்கு ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண இருந்தார்.

கோத்தபாயா, “நான் ஜனாதிபதி தேர்தலில் வென்றால் பிள்ளையனை விடுவிக்க முடியும். முழுமையாக வேலை செய்யுங்கள்” எனக் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019 அன்று, சுரேஷ் சாலே காலை 7 மணியளவில் என்னைத் தொடர்பு கொண்டார்

கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு உடனடியாகச் சென்று, அங்கு காத்திருக்கும் ஒருவரை அழைத்து வருமாறு சொன்னார்

நான் தற்போது மட்டக்களப்பில் இருக்கிறேன், கொழும்பில் இல்லை என்று சுரேஷ் சாலே அவர்களுக்கு பதிலளித்தேன்

இந்த உரையாடலுக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தா*க்குதல்கள் நடந்தன.

தாக்குதல்களுக்குப் பிறகு உடனடியாக பிள்ளையான் ஒரு சிறைக் காவலர் மூலம்எனக்கு ஒரு செய்தியை அனுப்பி, தன்னை அவசரமாகச் சந்திக்கச் சொன்னார்.

பிள்ளையானைச் காலை 11 மணிக்கு சந்தித்தேன்

யாருக்கும் ஒன்றும் தெரியாத நேரத்தில் பிள்ளையான், “நீ வாயை மூடிக் கொண்டு எதுவும் தெரியாதது போல் இரு. இது எங்களுடைய கூட்டாளிகளின் வேலையாகும். சுரேஸ் சாலே கூட்டாளிகளின் வேலையாகவே இருக்கிறார்.

இது நமக்கு நல்லது. அரசாங்கம் எப்படியும் மாறும்” என கூறினார்.

பின்னர் சைனி மௌலவியை அழைத்து நிலைமைகளை விசாரிக்க சொன்னார்

இருப்பினும், சைனி மௌலவியிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

மாலையில் ஊடகங்களில் வந்த செய்திகளின் ஊடக பிள்ளையானின் வேண்டுகோளின் பேரில் வனாத்துமுல்லையில் நான் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சுரேஸ் சாலே அவர்களை சந்தித்தவர்கள் தான் ஈஸ்டர் தா*க்குதலில் ஈடுபட்ட கு*ண்டுதாரிகள் என அறிந்தேன்

அதே போல சுரேஷ் சலே என்னை தாஜ் சமுத்ரா ஹோட்டலிலிருந்து அழைத்து வர சொன்ன நபர் ஜமீல் என்பதையும், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்*கொ*லைத் தா*க்குதலை நடத்த பணிக்கப்பட்ட கு*ண்டுதாரி என்றும், பின்னர், கடைசி நிமிடத்தில் திட்டங்களை மாற்றியமைத்து, தாஜை விட்டு வெளியேறி, தெஹிவளையில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் தன்னைத்தானே வெ*டிக்கச் செய்தார் என்பதையும் பின்னர் தெரிந்து கொண்டேன்

ஐப்பசி 15, 2021 அன்று சுரேஸ் சாலே கோத்தபாயா அதிகாரத்திற்கு வந்த பின்னர் சுரேஸ் சாலே அவர்களை மீண்டும் சந்தித்தேன்.

தனது அறைக்குள் வைத்துத் தனது கணனியில் பாராளமன்றத்தில் ஹரின் பெர்னாண்டோ பேசிய வீடியோவை பார்க்கும்படி சொன்னார்.

அதே போல ஆயர் சிறில் காமினி அவர்கள் பேசிய வீடியோவும், பாராளமன்ற உறுப்பினர் நளின் பண்டார அவர்களின் வீடியோவும் பார்க்க சொன்னார்.

“இவர்கள் சஹரான் குழுவுக்கும் இராணுவப்புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பு இருக்கிறது என சொல்லுவது பற்றி தெரியுமா?” என கேட்டார்.

நான் சஹ்ரானைச் சந்தித்தது எனக்கும், பிள்ளையானுக்கும் தான் தெரியும். நீ தான் சொல்லியிருக்க வேண்டும் என சொன்னார்

அதற்குப்பிறகு என்னைக் கடுமையாக விசாரித்தார். நான் யாரோடும் இதைப் பகிரவில்லை. கைத்தொலைபேசியைச் சோதனை செய்தார்.

2007 இல் இருந்து அவரை அறிந்தேன். அன்று தான் மிகக் கடுமையாக இருந்தார்.

10 மணிக்கு போனேன், 1 மணிக்குத் தான் வெளியே விட்டார்.

இவர் என்னைக் கடுமையாக சந்தேகிக்கிறார் என்று விளங்கியது. வெளியே வந்து பிள்ளையானுக்கு தொலைபேசி எடுத்தேன்.

சுரேஸ் சாலே என்னைக் கூப்பிட்டு கடுமையாக விசாரித்தார். சந்தேகப்படுகிறார். எனக்குப் பயமாக இருக்கின்றது என சொன்னேன்

ஓக்டோபர் 16 ஆம் தேதி, பிள்ளையான் தனியே சுரேஸ் சாலேவை சந்தித்தது அமலன் (சாரதி) மூலம் எனக்கு தெரியவந்தது.

பிள்ளையான் என்னிடமும் சொல்லவில்லை. பிள்ளையனும் சுரேஸ் சாலே போல என்னை சந்தேகிக்க தொடங்கி விட்டார் போல இருந்தது.

நான் இராணுவத்தை காட்டி கொடுத்ததாக அவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டதால் கடுமையாக அஞ்சத் தொடங்கினேன்.

இலங்கையிலிருந்து தப்பி சென்று இருக்கும் பிள்ளையான் கூட்டாளி அசாத் மௌலானா ஈஸ்டர் தாக்குதல் சதி முயற்சிகள் தொடர்பாகவும், சுரேஸ் சாலே மற்றும் பிள்ளையான் தொடர்புகள் குறித்த மிக நீண்ட வாக்குமூலத்தின் ஒரு பகுதியே இது.

உண்மையில் ஈஸ்டர் தாக்குதலின் Mastermind அடையாளம் காணப்படும் சுரேஷ் சாலே யாழ்ப்பாணத்தில் அருண் சித்தார்த் தலைமையில் ஆவா குழு, கிரீஸ் மனிதன் உட்பட்ட கொடூரங்களை செய்வித்த நபர் ஆவர்

அதே போல இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாண போதனசாலை பணிப்பாளர் வைத்தியர் திரு சத்தியமூர்த்தி உட்பட வைத்தியர்களை அச்சுறுத்தி பத்திரிகையாளர் மாநாட்டில் பொய் சொல்ல தூண்டிய சூத்திரதாரியாகவும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அடையாளம் காணப்பட்டு இருந்தார்

இது தவிர கோட்டாபய ராஜபக்சே பாதுகாப்பு செயலாளாராகவிருந்த போது நடைபெற்ற பல்வேறு அரசியல் கொ*லைகளிலும் இவருக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்படுகின்றது

ஒரு நியாயமான நேர்மையான விசாரணை மூலம் கடந்த காலங்களில் நடைபெற்ற ஈஸ்டர் தா*க்குதல் முதல் பல்வேறு இருண்ட கொடூர பக்கங்களுக்கு விடைகளை கண்டறிய முடியும்

ஆனால் பொது நிர்வாகம் முதல் சகல விடயங்களையும் வெறும் அரசியலாக அணுகும் ஜேவிபி இந்த விவகாரத்தை எப்படி அணுகும் என்பது வெறும் 3 நாட்களில் ஊகிக்க கூடியதாக இருக்கும்

விசேடமாக 11 மில்லியன் ரூபா பொது நிதியில் அரசியல் மாநாடு வைத்து போதை பொருளை ஒழிக்க முடியும் என கதை சொல்லும் ஜேவிபி ரூபா 7.6 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலக்கரி மோசடி விவகாரத்தில் சொல்லிவருவது போல எதாவது புனை கதை சொல்லவும் வாய்ப்பிருக்கின்றது.

இனமொன்றின் குரல்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து - ஆசாத் மௌலானா பேசிய போது, சுரேஷ் சாலே உள்ளிட்ட முக்கிய தலைகள் உருளும் என, இந்த வீடியோவில் கூறியிருந்தேன்.

தாக்குதல் நடந்த போது - சிங்கப்பூரில் படுத்துக் கிடந்த முன்னாள் GS பற்றிய செய்தியும் அடுத்து வரக்கூடும்.

இந்த வீடியோவை முழுவதுமாக பாருங்கள். நீங்கள் இதுவரை அறியாத மிக முக்கிய தகவல்கள் உள்ளன.

காணொளி: 👉 https://www.facebook.com/reel/1797748740904109 👈

Mabrook UL is in Addalachenai, Sri Lanka.

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.