Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ச்செல்வன் - ஓர் அதிசய ஆளுமையின் வீழ்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்செல்வன் - ஓர் அதிசய ஆளுமையின் வீழ்ச்சி

- திருமலை

“தமிழ்ச்செல்வன் அண்ணா வீரச்சாவு அடைந்து விட்டார்” செய்து கேட்டு இடிந்து போனோம். அதிர்ந்தோம், அழுதோம், பொய்யாக இருக்கக் கூடாதா என்று நப்பாசை கொண்டோம். ஆனாலும் உண்மை என்றாகிப் போனபின்னர் சோக மயமானோம். மாலைகள், ஊர்வலங்கள், பாமலைகள், அஞ்சலிகள், இறுதியில்…. விதைத்தோம். பின்னரும் கவி புனைந்தோம். உலகத் தமிழர்களின் மனங்களிலே தமிழச்செல்வன் அவர்கள் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தார், உலகத் தலைவர்களின் மனங்களிலே எவ்வளவு ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தார் என்பதை தொடர்ந்து வந்த நாட்களில் விளைந்த உணர்ச்சிமயமான எழுச்சியிலே, அஞ்சலிச் செய்திகளிலே இரங்கல் உரைகளிலே கண்ணுற்று மெய்சிலித்துப் போனோம்.

ஆனாலும் இன்னும் சில வாரங்களில்…..? அன்றேல் தொடர்ந்து வரும் மாதங்களில்……? சம்பமாகிப் போய்விடக் கூடிய ஒரு துன்பியல் நிகழ்வோ அன்றி சரித்திரம் என்று ஆறுதல்படுத்திக் கொள்ளக்கூடிய தளபதி ஒருவரின் வீரச்சாவா இதுவென்ற கேள்வி பலமாக எழுந்து நிற்கின்றது.

சுதந்திரம் நோக்கிய நீண்ட நெடும் இலட்சியப் பயணத்தில் இழப்புக்களும் தியாகங்களும் தவிர்க்கப்பட முடியாதவைதான் எனினும், எத்தனையோ ஆயிரம் வீரமறவர்களையும், எத்தனை சிறந்த தளபதிகளையும் பொறுப்பாளர்களையும் இழந்த சோகங்களைச் சுமந்து மீண்டவர்கள் தான் எனினும் இழப்புக்களில் பேதமென்றும் ஏற்றத் தாழ்வென்றும் ஏதுமில்லை, வீழ்ந்தோரில் வேற்றுமைகள் பார்ப்பதுவும் வழக்கமில்லை, தியாகத்தில் பெரிதென்றும் சிறிதென்றும் பேதங்கள் எதுவுமில்லை என்பதெல்லாம் அறிந்தவர்கள் தாம் எனினும் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் சிலரின் இழப்புக்கள் ஏற்படுத்தி விடுகின்ற துயரத்தின் எல்லைகள், அதன் வீரியங்கள் முற்றிலும் வித்தியாசமானவை. காலவோட்டத்தால் கூட ஜீரணித்துக்கொள்ளப்பட முடியாது ஏனெனில் அவர்களது இழப்புக்கள் ஏற்படுத்திச் செல்கின்ற வெற்றிடங்கள் மீள் நிரப்பப்பட முடியாத நிரந்தர வெற்றிடங்களாக நிலைத்து விடுகின்றன. தமிழ்செல்வன் அவர்களின் இழப்பென்பது அவ்வாறானவற்றுள் முதன்மையான ஒன்றெனில் நிச்சயமாக அதில் மிகைப்படுத்தல் ஏதுமில்லை என்பது பலருக்கும் புரியாத, தெரியாத ஒன்று.

கனடாவில் வாழ்கின்ற என் நண்பர் ஒருவர் அண்மையில் என்னிடம் கேட்டார். இயக்கத்தில் எத்தனையோ பெரும் தளபதிகள், மூத்த உறுப்பினர்கள், இயக்கத்தை வளர்த்தவர்கள் எல்லாம் வீரச்சாவு அடைந்துள்ளார்களே தமிழ்ச்செல்வனின் வீரச்சாவை மாத்திரம் இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்கின்றீர்களே, ஏன்? என்றார். அவரின் தவறேதும் இல்லை. ஏனெனில் அவருக்கும் இன்னும் பலருக்கும் உலமெங்கும் வாழுகின்ற எம் உறவுகளுக்கும் விடுதலைப் போராட்டத்தை நேசித்து தோள்கொடுத்து தாங்கி நிற்கும் எம் பாச உறவுகளுக்கும் போராட்டத்தின் சுமைகளை எம்மைவிட அதிகமாய்ச் சுமந்து நிற்கும் எம் மண் வாழ் மக்களுக்கும் தமிழ்ச்செல்வன் அவர்களை ஒரு தளபதியாக, அரசியல் துறையின் பொறுப்பாளராக, சமாதான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக, எமது போராட்டப் பயங்கரவாதம் என்று கூச்சலிடும் வல்லாதிக்கத்தின் செவிகளுக்கும் உலகுக்கும் அது பயங்கரவாதம் அல்ல ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போர் என்று பறைசாற்ற ஒங்கி ஒலித்த குரலாக மாத்திரமே தமிழ்ச்செல்வன் அவர்களைத் தெரிந்திருந்தது.

ஆனாலும் தமிழ்ச்செல்வன் என்ற போராளியின் பரிநாமங்கள் மிகப் பரந்து விரிந்தவை, அகற்றவை, வீரியமானவை, வித்தியாசமானவை. உள்ளிருந்து ஊன்றிப் பார்த்தவர்களை ஆச்சரியப்பட வைத்தவை. பன்முக ஆழுமையின் முழு வடிவம். நிர்வாக முகாமைத்துவத்தைக் கற்பிக்கக்கூடிய ஒரு வழிகாட்டி நூல்.

எமது விடுதலை அமைப்பின் அரசியல் துறை என்பதுவின் நிர்வாக அமைப்பு, நிர்வாக எல்லைகள், நிர்வாக விஸ்தீரணம் என்பது 1990 களில் இருந்தது போன்றோ அல்லது 1995 களில் இருந்தமை போன்றோ அல்லது 2000 ஆம் ஆண்டுகளில் இருந்தது போன்ற நிலையில் நிச்சயமாக இன்று இல்லை. அதன் நிர்வாக எல்லைகள் மிகவும் பரந்து விரிந்து விட்டன. சுருக்கமாகக் கூறின் எமது இயக்கமெனும் மாபெரும் விருட்சத்தின் முக்கால் பகுதி நிர்வாக அமைப்பினைத் தன்னகத்தே உள்ளடக்கிக் கொண்டது தற்போதைய அரசியல்துறைத் கட்டமைப்பு.

எம்மக்களின் துயர் நிறைந்த, இன்னல் நிறைந்த அன்றாடத் தேவைகளோடு பிரச்சனைகளோடு வாழ்வாதாரங்களோடு முழுமையாகப் பின்னிப் பிணைந்து நிற்கின்ற, சிறீலங்கா அரசின் வஞ்சக தந்திரங்களை, சூழ்ச்சிகளைத் சமாளித்து புத்திசாதூரியமாகக் கையாண்டு எம் மக்களின் அன்றாட அத்தியாவிசய தேவைகளை ஒழுங்குபடுத்தும் பெரும் பொறுப்பு வாய்ந்த “தமிழீழ நிர்வாக சேவை” தமிழீழ மக்களுக்கு பக்கச்சார்பற்ற, ஊழல் அற்ற நோங்கங்கள், கால தாமதங்கள் அற்ற முறையில் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கேற்ற வகையில் பிரதேசமெங்கும் நீதிமன்றங்களை அமைத்து செயற்படுத்தி, சட்டவல்லுனர்களை கற்பித்து உருவாக்கி நெறிப்படுத்துகின்ற தமிழீழ நீதி, நிர்வாகத் துறை” எம்மக்களின் வாழ்வாதரமான விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக போதிய வெளி வழங்கல்கள், நிபுணத்துவங்கள் மிகக் குறைவாக உள்ள நிலையிலும் கிராமங்கள் தோறும் கிராமங்கள் தோறும் கிளைகளைப்பரப்பிச் செயற்படுகின்ற ‘தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்”

தமிழீழப் பிரதேசங்களில் உண்மையில் என்னதான் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை முழு உலகமே உணர்ந்து கொள்ள முடியாத வகைகளில் சிங்கள அரசு பயங்கரவாதத்தினால் திட்டமிடப்பட்ட முறையில் செய்திகள் இருட்டிப்புச் செய்யப்படுகின்ற போதிலும் உண்மைகளை உலகிற்கும் உள்நாட்டிற்கும் ஓங்கி ஒலிக்கின்ற எமது ஊடகங்களான “புலிகளின் குரல் நிறுவனம்”, “நிதர்சனம் தொலைக்காட்சி சேவை”, ஈழநாதம், “விடுதலைப்புலிகள்” ஆகிய பத்திரிகைகள் ஆகிய நிர்வாகங்கள் தம் தாயகத்தில் நடப்பதனையும் தம் உறவுகள் உடன் பிறப்புக்கள் பற்றிய செய்திகளையும் அறிய முடியாமல் பரிதவித்து நின்ற எம்புலம்பெயர் மக்களின் தாகத்தைத் தீர்த்து வைக்கக் கூடியவகையிலும் சிங்கள அரசின் முக மூடியினை உலகின் கண்களுக்கு தோலுரித்துக் காட்டும் வகையிலும் எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இவ் ஊடகத்தின் செயற்பாடுகளை உலக அளவில் விஸ்தரிப்பு செய்த செயற்பாடுகள்,

பாரிய யுத்தத்திற்கு எம்மக்கள் முகம்கொடுத்து நிற்கின்ற வேளையிலும் எம் மண்ணின், மக்களின் பாரம்பரிய கலை பண்பாடுகள் அழிந்திடா வண்ணம் அதனை வளர்ப்பதற்காகப் பாடுபடும் “ கலை பண்பாட்டுக் கழகம்” விளையாட்டுத்துறைச் செயற்பாடுகளை வளர்ப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் முனைந்து நிற்கின்ற “தமிழீழ விளையாட்டுத்துறை”

கல்வியையே பெரும் முதலீடாகக் கொண்ட எம் தமிழ்ச் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியைச் சிதைந்துவிட சிங்கள அரசு திட்டமிட்டு செயற்பட்டு நிற்கின்ற வேளையிலும் அதனை எதிர்கொண்டு மறுக்கப்படுகின்ற எம்மக்களில் கல்வி உரிமையை வளர்ச்சியைச் சீர்படுத்த பாடுபடுகின்ற “தமிழீழக் கல்விக் கழகம்”

தமிழீழத்தின் இயற்கை வளங்கள் அழிந்திடா வண்ணமும் அதேவேளை மக்களின் வனவளத் தேவைகளை சரியான, ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் ஈடு செய்யக் கூடியவகையில் அதனை நிர்வகித்து நிற்கின்ற “தமிழீழ வனவள சேவை”

எமது மக்களுக்கான அடிப்படை, மனதாபிமான மருந்துவ வசதிகளைத் கூட சிங்கள தேசம் புறக்கணித்த நிலையிலும் மருத்துவ சாதனங்கள், மருந்துப்பொருட்களைக் கூட எமது பகுதிகளுக்கு எடுத்துவர சிங்கள அரசு இறுக்கமான தடை விதித்திருந்த காலப்பகுதி தொடக்கம் இன்றுவரை மருந்துப் பொருட்களை எங்கிருந்தோ எல்லாம் கொண்டு வந்து சேர்த்து, போராளிகளையே மருத்துவர்களாகக் கற்பித்து உருவாக்கி, பிரதேசங்கள் தோறும் மருத்துவமனைகளை அமைத்து இக் கிராமங்களுக்குக் கூட திலீபனின் பெயரால் நடமாடும் மருத்துவ சேவைகளை விஸ்தரித்து ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கி எமது மக்களினதும் போராளிகளினதும் மருத்துத் தேவைகளை நிறைவேற்றப்படுகின்ற “தமிழீழ மருத்துவ சேவை”

இன்னும் “போராளி மாவீரர் குடும்ப நாள் காப்பகம்”, “புகைப்பட பிரிவு”, வெளியீட்டுப் பிரிவு” “சுதந்திரப் பறவைகள்” மகளிர் அமைப்பு என்று வேறுபட்ட மாறுபட்ட பரந்து விரிந்த எல்லைகளைக் கொண்ட செயற்பாடுகளை தன்னகத்தே உள்ளடக்கிய அத்தனை துறைகளையும் இயக்கி நின்றவர் சாதாரணமாக அல்லது எவரும் குறை கூறிவிட முடியாத வகையில் வளங்களுக்காக போராட வேண்டிய நிலையிலும் மிகச் சிறப்பாக வழிநடாத்திச் சென்றவர் மெலிந்த சிறு தோற்றத்தையும், புன்னகை தவளும் வதனத்தையும் போரில் தாங்கிய விழுப்புண்ணால் ஊன்று கோலின் துணையின்றி நடமாட முடியா அந்த இயலாமையினை சுமந்து நிற்க முடிந்த தென்றால் அந்த அபூர்வ ஆழுமை பலருக்கும் புரிந்து கொள்ள முடியாத அருகிலிருந்து அனுபவித்த பொறுப்பாளர்களையே ஆச்சரியப்பட வைத்த ஒரு விடயமென்றால் அது வியப்பானவை.

காலையில் நோர்வே தூதுவரைச் சந்திக்கிறார். தொடர்ந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்து விளக்குகின்றார். பின்பு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசனை வழங்குகின்றார். கிடைத்த நேர இடைவெளியில் நிர்வாக சேவைப் பொறுப்பாளரை அழைத்து அரச நிர்வாகத்துடனான சிக்கலொன்றைத் தீர்க்க ஆலோசனை கூறுகின்றார். மதியம் இந்தியாவில் இருந்து வந்த திரைப்படக் துறையைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து அளவளாவுகின்றார். தொடர்ந்து அவர்களைத் தலைவர் அவர்களிடம் அழைத்துச் செல்கின்றார்.

மாலை புலிகளின் குரல் நிகழ்ச்சி நிரல்களை, செய்திகளை வாசித்து திருத்தங்கள் கூறுகின்றார். இடையிடையே தன்னைச் சந்திக்க வந்த பிறதுறைப் பொறுப்பாளர்களையும் போராளிகளையும் சந்தித்து அவர்களது தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கின்றார். போராளி ஒருவரின் வீரச்சாவு நிகழ்விற்குச் செல்கின்றார். இரவு மருத்துவப் பொறுப்பாளரை அழைத்து காயப்பட்ட போராளிகளின் மருத்துவத் தேவைகளைத் கேட்டறிகின்றார். அடுத்து தன்னை நட்பு நிமித்தம் சந்திதக்க வந்த கிறிஸ்தவ பாதிரியாரை அன்போடும் மரியாதையோடும் அழைத்து அளவளாவுகின்றார்.

உறங்கச் செல்ல முன்னர் அடுத்த நாளைக்குரிய பத்திரிகைச் செய்திகளைப் பரிசீலித்து மாற்றங்களும் திருத்தங்களும் கூறுகிறார். சரி உறங்கச் செல்வோம் என்று நினைக்கையில் வாசலில் தயங்கி நின்ற தனது துறையைச் சேர்ந்த போராளியை அழைத்து தன்னருகில் இருந்தி அவன் கூற விளைந்த குடும்பப் பிரச்சினையை அக்கறையோடு கேட்டறிந்து அதனைத் தீர்த்து வைக்க உரிய பொறுப்பாளருக்கு தொலைத்தொடர்பு சாதனமூடாக உத்தரவுகளை வழங்கிய பின்னர் உறங்கச் செல்கையில் எப்படியும் அதிகாலை ஆகியிருக்கும்.

மறுநாள் அதிகாலை எழுந்து அவர் தயாராகும் முன்னரே அவரது சண்டைக் களப் பொறுப்பாளர்கள் சில பிரச்சினைகளோடும் தேவைகளோடும் வெளியே காத்திருப்பர். ஆம்… தமிழ்ச்செல்வன் அவர்கள் அரசியல் துறையின் பொறுப்பாளராக இருந்த அதே நேரத்தில் சமாதான காலம் முழுவதும் அவரே யாழ்.மாவட்ட யுத்தகள நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்தார். யாழ். மாவட்டம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட எதிர்கால யுத்த நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வேவு நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ்ச்செல்வன் அவர்களின் பொறுப்பிலேயே மேற்கொள்ளப்பட்டன என்பது பெரும்பாலானோருக்கு தெரியாத ஓர் விடயமாகும்.

மேலும் சமாதானம் ஏற்படுவதற்கு முன்னைய காலப்பகுதிகளிலும் யாழ். மாவட்டத்திலும் மற்றும் சில இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரமான மறைமுக நடவடிக்கைகள் தமிழ்ச்செல்வன் அவர்களாலேயே நேரடியாகத் திட்டமிடப்பட்டு வழி நடாத்தப்பட்டன என்பது போராளிகளுக்குக் கூட தெரிந்திராத ஓர் செய்தியாகும்.

பெரும் சிக்கல் நிறைந்த இத்தனை சுமைகளையும் சுமந்து நிற்கின்ற போதிலும் எந்தவிதமான பரபரப்பும் இன்றி மன அழுத்தம் இன்றி அவர் திருமண வீட்டுக் செல்கின்றார், நிர்வாக சேவையாளர் வீதிகள் பாலங்கள் அமைப்பதனையும் நேரில் பார்வையிடுகின்றார். வனவளப் பகுதியின் மீள் மரநடுகைத் திட்டத்தினை நேரில் சென்று ஊக்கப்படுத்துகதின்றார். ஆயர்களைச் சந்திக்கின்றார், சாதாரண பொதுமக்களையும் சந்திக்கிறார். போராளிகளோடு சேர்ந்து கூழ் காய்ச்சிக் குடிந்து மகிழ்கின்றார்.

தன்னை விட வயதிலும், அனுபவத்திலும், இயக்கச் செயற்பாடுகளிலும் மூத்தவர்களான பேபி அண்ணா, பால குமரன் அண்ணா, பரா அண்ணா, புதுவை அண்ணா, பொன் தியாகம் ஐயா போன்றோரையும் தனது நிர்வாகப் பொறுப்பின் கீழ் வைத்திருந்து அவர்களை மிகுந்த மதிப்புடனும் சிறப்பாகவும் கையாளவும் தேவையான போது கண்டித்து வழிநடாத்தும் சூட்சுமமும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதே வேளை தனது வயதை ஒத்த இயக்க சம செயற்பாட்டுக் காலங்களையுடைய பொறுப்பாளரை நட்புடன் சிரித்தபடி வேலை வாங்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது.

தமிழ்ச்செல்வன் அவர்களின் நிர்வாக ஆளுமையின் முழு வெற்றி எங்கே இருந்ததென்றால் உள்நாட்டில் இருக்கும் போது அதனை விடயங்களையும் நேரடியாகப் பரிசீலிக்கும் செயற்படுத்தும் அவர் பேச்சுவார்த்தைக்காக வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் காலப்பகுதிகளில் அவரது எந்தவொரு நிர்வாக இயந்திரமும் சேர்ந்து போனதோ அல்லது அவரது பதிலுக்காக சேவைகள் தேங்கியிருந்ததோ கிடையாது. அனைத்தும் சீராக நடந்து கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் தனது பொறுப்பின் கீழ் இருந்த ஒவ்வொருவர் மீதும் அவர் செலுத்திய ஆளுமை மற்றும் தனது பொறுப்பாளர்களுக்கு அவர் வழங்கியிருந்த நிர்வாகச் சுதந்திரம் போதிய சுதந்திரம் தேவையான பரிசீலனை , நட்பு நாடும் அணுகு முறை தேவைப்பட்டால் கண்டிப்பு தனக்கு கீழ் உள்ளவர்கள் மீது அன்பான அக்கறை இவை அவரது வெற்றியின் காரணிகள்.

தலைவர் அவர்கள் தமிழ்ச்செல்வன் அவர்களை அழைப்பார். இயக்கத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டியதன் அவசரத்தை அண்ணன் விளக்கி வைப்பார். தான் எதிர்பார்க்கின்ற ஓர் எண்ணிக்கையையும் தலைவர் அவர்கள் கூறுவார். துலைவரின் உத்தரவினை நடைமுறைப்படுத்துவது பற்றிச் சிந்தித்தபடி தமிழ்ச்செல்வன் அவர்கள் தனது முகாம் வந்து சேர்வதற்கிடையில் பிரச்சார வேலைக்கு பொறுப்பானவர்கள் அனைவரும் முகாமில் சந்திப்பதற்கு தயாராக இருப்பார்கள். வாகனத்தில் பயணித்த நேரத்தில் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை அவர் செய்து முடிந்திருப்பார்.

ஆம் இயக்கத்தின் மிகவும் முக்கியமானதும் மிகவும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் கையாளப்பட வேண்டியதுமான “புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியானது” தமிழ்ச்செல்வன் அவர்களின் நேரடிப் பொறுப்பின் கீழேயே இருந்தது. தலைவர் அவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வரை அவர் தனது பொறுப்பின் கீழ் உள்ள அனைத்து நிர்வாகங்களையும் அப்பணியில் ஒருங்கிணைத்திருப்பார்.

மேலும் நிதித்துறையின் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அவர்களின் செயற்பாடுகளுக்கு இடைய10று விளைவிக்காத வகையில் நிதி மீட்டக்கூடிய பல்வேறு வழிமுகைளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கட்டியமைத்திருந்த அவர் தனது மிகப் பெரும் துறையின் நிதித்தேவைகளை நிதித்துறையாளரிடம் இருந்து எந்தவொரு பணத்தையும் பெறாமல் நிறைவேற்றிக் கொள்வதோடு மாத்திரமின்றி தலைவர் அவர்களின் அவசர நிதித் தேவைகளை ஈடுசெய்வதற்கு பக்கபலமாகச் செயற்பட்டவர் என்பது பெரும்பாலானோருக்கு தெரியாத சேதிகளாகும்.

தமிழ்ச்செல்வன் அவர்களின் கண்ணோட்டங்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் விஸ்தீரணமானவை. முன்னுணர்வானவை. சுமாதான கால பேச்சுவார்த்தை பணிகள் மற்றும் தனது பெரும் நிர்வாகப்பணிகளில் அவர் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருந்த வேளையிலும் நீதித்துறை, திரைப்படத்துறை, மருத்துவம், பொருண்மியம் போன்ற பல துறைகளுக்கும் தேவையான நிபுணர்களை உருவாக்குவதற்காக தகுதியுடைய போராளிகளைச் தெரிவு செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி கல்வி கற்கச் செய்தார். மேலும் மருத்துவம், பொறியியல், நிதி போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பினை நிறுத்தி விட்டு போராட்டத்தில் இணைந்து கொண்ட போராளிகளை சமாதான காலத்தை முழுமையாகப் பயன்படுத்தி அவர்களது கல்வியைத் தொடரச் செய்து ப10ர்த்தி செய்யவைத்ததோடு மேல் படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்தார். அவர்களது கல்வியினால் எட்டப்படும் துறைசார் நிபுணத்துவம் எமது மக்களுக்கும் போராளிகளுக்கும் பயன்பெறக் கூடிய வகையிலும் ஏற்பாடு செய்தார்.

“சுனாமி” ஆழிப்பேரலை அனர்த்தங்களின் போது நாகர்கோவில் தொடக்கம் அம்பாறை வரை எமது மக்களே மிகக் கூடுதலான அழிவுகளைச் சந்தித்திருந்தனர். சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தச் சூழ்நிலையில் கூட எமது மக்களுக்கான நிவாரணப் பணிகளை சிறீலங்கா அரசாங்கங்கள் முற்றிலும் புறக்கணித்திருந்தது. அழிவுகளையும் நிவாரணப் பணிகளையும் பார்வையிடுவதற்காக இலங்கை வந்திருந்த ஐ.நாவின் செயலாளரையும் அமெரிக்காவின் முன்னாள் ஐனாதிபதியையும் கூட எமது பகுதிக்கு வரவிடாது அரசு தடுத்து நிறுத்திவிட்டது.

ஆனாலும் நாகர் கோவில் தொடக்கம் செம்மலை வரை எமது கட்டுப்பாட்டு பகுதியிலும் திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கூட பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி நிவாரண மருத்துவ, சுகாதார வசதிகளை தமிழ்ச்செல்வன் அவர்கள் மிகத் துரிதமாக மேற்கொண்டிருந்தார். வன்னியில் இருந்து தனது போராளிகளை சகல பிரதேசங்களுக்கும் அனுப்பி வைத்தார். இக்காலப்பகுதியில் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யன் அவர்கள் வீரச்சாவு அடைந்த பொழுது அவரது வீரச்சாவு நிகழ்வில் கலந்து கொள்ளுவதற்காக மட்டக்களப்புக்குச் சென்றிருந்த தமிழ்ச்செல்வன் அவர்கள் வன்னி திரும்பும் வழியில் திருகோணமலைக்கு வந்திருந்தார்.

அவர் முன்னரும் திருமலைக்கு வந்திருந்தார் எனினும் இம்முறை நிலமை முற்றிலும் மாறுபட்டிருந்தது. சுனாமி அனர்த்தத்தினால் எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்களில் முக்கால்வாசிப் பகுதியாளர் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வந்தனர். சிறீலங்கா அரசின் எந்தவொரு சேவைகளும் அம்மக்களை வந்தடையவில்லை. நிலமையை பார்த்துக் கொண்ட தமிழ்ச்செல்வன் அவர்கள் வன்னியில் இருந்த பணிகளை ஒத்தி வைத்து விட்டு நான்கு நாட்கள் திருமலையில் தங்கியிருந்தார். அந்நாட்களில் மூதூர் தொடக்கம் வாகரையின் இராணுவ எல்லைப் பிரதேசம் வரை அமைந்திருந்த அனைத்துக் கிராமங்களுக்கும் அனைத்து அகதி முகாம்களுக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு அனைத்து மக்களுடனும் தானே நேரில் கதைத்து அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

முதல் நாள் சந்திப்பு முடிவடைந்த நிலையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட தமிழ்ச்செல்வன் அவர்கள் மிகக் குறைந்த நேர இடைவெளிக்குள் வன்னியிலும் வேறு முக்கிய வேளைகளிலும் நின்ற தனது துறைசார் பொறுப்பாளர்களையும் வாகரைக்கு அழைத்தார். நிலமை சீரடையும் வரை அவர்கள் அனைவரையும அங்கேயே தங்கி நின்று மக்களின் அனைத்து உடனடிப் பிரச்சினைகளையும் துரிதகதியில் தீர்த்து வைக்க ஏற்பாடு செய்தார்.

தனது இயலாத கால்களுடன் ஒவ்வொரு அகதி முகாமையும் அவர் நடந்து சென்ற பொழுது தன்னைச் சூழ்ந்து கொண்ட சிறுவர்களுடன் அமர்ந்திருந்து மிகப்பொறுமையுடன் உரையாடி, ஆறுதல் கூறி அவர்கள் அனைவருக்கும் தனது கைகளால் இனிப்பும் உணவுப் பொருட்களும் வழங்கிய அந்த காட்சிகளை நேரடியாகப் பார்த்தவர்களுக்குத் தான் அவர் தனது மக்களை எவ்வளவு ஆழமாக நேசித்தார் என்பது புரியும்.

அந்தக் கொடும் துயரமான தமது சூழ்நிலையில் கூட அம்மக்கள் தமிழ்ச்செல்வன் அவர்களை அன்போடு சூழந்து கொண்டு தனது பற்றை ஒருவருடன் கதைப்பது போன்ற உறவு நெருக்கத்துடன் உறவாடிய அந்தக் காட்சிகளை இப்போது எண்ணுகின்ற பொழுது எம்மக்கள் எவ்வளவு தூரம் ஆழமாக நேசித்த ஒரு தலைவனை நாம் இழந்திருக்கிறோம் என்பதைனப் புரிய வைக்கின்றது.

தமிழ்ச்செல்வன் அவர்களின் அடையாளம் அவரது புன்னகை. ஆவரின் புன்னகைக்கு பலரும் பல்வேறு விளக்கங்களைக் கூறுகின்றார்கள். அது அவரவர் கண்ணோட்டம். ஆனாலும் அவரின் புன்னகையின் பின்னால் மறைந்திருந்தது அவரது நிதானம். எந்தவொரு சிக்கலான பிரச்சினைகளையும் மிக நிதானமாகக் கையாளுகின்ற எந்தவொரு சிக்கலான சூழ்நிலையிலும் பரபரப்படையாது பொறுமையுடனும் வெறுமையுடனும் முடிவுகளை எடுத்து செயற்படுத்துகின்ற அவரது நிதானத்தின் வெளிப்பாடே அவரின் புன்னகையாகும்.

தமிழ்ச்செல்வன் அவர்களுடன் தனது கருத்தினை வெளிப்படையாகவும் மனம் திறந்தும் கதைப்பதற்கும் எந்தவொரு போராளியும் பொருப்பாளரும் அஞ்சுவது கிடையாது. அதே போன்று போராளிகள் பொருப்பாளர்களுடன் சிறிச் சின்நது அதிர்ந்து அவர் பேசுவதனையும் எவரும் கண்டிருக்க முடியாது. கண்டிப்பதும் தண்டிப்பது எப்படி என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தே இருந்தது.

உண்மையில் தழிழ்ச்செல்வன் அவர்களை அரசியல் துறையின் பொறுப்பாளராக நியமித்த தலைவர் அவர்கள் உத்தேசித்த வேளையில் தனது தீர்மானம் பற்றி பலமுறை தான் தனக்குள் யோசித்ததாக தலைவர் அவர்கள் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறுவதுண்டு. ஏனெனில் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஒரு யுத்த கள தளபதியாக வளர்க்கப்பட்டவர். ஆரசியல் செயற்பாடுகளோடு முற்றிலும் பரீட்சியம் இல்லாதவர்.

தலைவர் அவர்களைச் சிந்திக்க வைத்த மற்றைய காரணம் தமிழ்ச்செல்வன் அவர்களின் இளம் வயது, ஏனெனில் மக்களோடு நெருக்கிப் பணியாற்ற வேண்டிய ஒரு பணிக்கு பல்வேறு தரப்பட்ட அரசியல் தலைவர்களையும் ராஐதந்திரிகளையும் அணுகிக் கையாள வேண்டிய அரசியல் பணிக்கு வயது முதிர்ச்சி என்பதுவும் அத்தியாவசியமான ஒரு தகுதியாகும். இவ்வாறான பிரதி கூலங்கள் இருந்த போதிலும் தலைவர் அவர்கள் தனது தீர்க்க தரிசனத்துடன் அவரை பொறுப்பாளராக நியமித்தார். அதே போன்று பிற்காலத்தில் தமிழ்ச்செல்வன் அவர்களின் செயற்பாடுகளை அவதானித்த தலைவர் அவரின் முடிவை எண்ணி பெருமைப்பட்டிருப்பார். அரசியல் துறையை என்றுமில்லாத அளவிற்கு ஒர பரந்து விரிந்த கட்டமைப்பாக உருவாக்கி நெறிப்படுத்திய பெருமை நிச்சயமாக தமிழ்ச்செல்வன் அவர்களையே சாரும்.

உலகத் தமிழினம் உண்மையில் தங்களால் ஆழமாக நேசிக்கப்பட்ட, தங்களை ஆழமாக நேசித்த தலைவனை இளந்து விட்டது. இந்த விடுதலைப் போராட்டம், விடுதலை இயக்கமானது பன்முக நிர்வாக ஆழுமை கொண்ட ஒரு நிர்வாகியை இழந்து விட்டது. எங்களவு தலைவர் அவர்கள் தனது வேலைப்பழுவில் அரைவாசிக்கு மேல் தாங்கி நின்ற போராளியை இழந்திருக்கிறார். அரசியல் துறையானது தன்னை அழகுபடுத்திய ஒரு பொறுப்பாளரை இழந்திருக்கின்றது.

தமிழ்ச்செல்வன் அவர்கள் விட்டுச்சென்ற நினைவலைகள் காலவோட்டத்தாலும், பணி நெருக்கடிகளினாலும் மறக்கப்பட்டு போகலாம். ஆனால் அவரால் விட்டுச் செல்லப்பட்ட வெற்றிடமானது இன்னும் சில காலத்திற்கு மீள் நிரப்பப்டப முடியாத ஒன்றாகவே இருந்துவிடப் போகின்றது. ஏனெனில் தமிழ்ச்செல்வன் அவர்களின் வீரச்சாவு என்பது ஏன் தளபதயின்… ஒரு பொறுப்பாளரின்…. ஒரு தலைவனின்…. ஒரு அரசியல் வாதியின் வீழ்ச்சி அல்ல………….

அது ஓர் அதிசய ஆளுமையின் வீழ்ச்சியாகும்.

- சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.