Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிறீலங்காத் தலைமைகளை இயக்கும் சிங்களச் சிந்தை மையம்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனோகரன் எழுதிய "சிறீலங்காத் தலைமைகளை இயக்கும் சிங்களச் சிந்தை மையம்"

முற்றிலும் மாறான வகையில் போரை நடத்தக்கூடியவாறான விதத்தில் சிறீலங்காவின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளிருக்கின்றன என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சொன்னார். சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலிருந்த மாதிரியான ஒரு அரசியல் இராஜதந்திர பொறிமுறையை மகிந்த ராஜபக்சவின் அரசுக்கும் "சிங்களச் சிந்தனை மையம்" வழங்கி வருகிறது என்றும் அவர் மேலும் சொன்னார்.

சிங்களச் சிந்தனை மையம் இலண்டனை தளமாகக் கொண்டியங்குகிறது. உலகின் பல திசைகளிலுமுள்ள சிங்கள சமூகத்தின் ஆய்வாளர்களும் அறிஞர்களும் இந்த இலண்டன் தளத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அந்த மையத்தில் தங்களின் சிந்தனையைக் குவிக்கிறார்கள். சிறீலங்காவின் அரசியல் மற்றும் பொருளாதார இராஜதந்திர அணுகுமுறைகள் பற்றி இவர்களே திட்ட வரைபுகளை முன்வைக்கிறார்கள். அதாவது இவற்றுக்கு வழிகாட்டுகிறார்கள். சரியான அர்த்தத்தின்படி பார்த்தால், கடந்த கால்நுாற்றாண்டு காலத்திலும் சிறீலங்கா நெருக்கடிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. உள்நாட்டு நெருக்கடிகள் ஒரு பக்கமாகவும், பிராந்திய மற்றும் சர்வதேச நெருக்கடிகள் இன்னொரு பக்கமுமாக கூட்டு நெருக்கடிகளுக்குள் சிறீலங்கா சிக்கியிருந்தது.

ஏன் இப்போது கூட உள் - வெளி என்ற இரு

பெரும் நெருக்கடிகளால் அது வியூகமிடப்பட்டேயிருக்கிறது. ஆனால், இந்த நெருக்கடிகளையெல்லாம் அது கடப்பதற்கும் அரசாங்கத்தை சுற்றி வளைக்கும் நெருக்கடிகளை தமிழர்களின் பக்கமாக திசை திருப்பி விடுவதிலும் சிங்கள சிந்தனை மையம் வெற்றிகரமாகச் செயற்பட்டிருக்கிறது. இதற்கான முக்கிய உதாரணங்களாக 1980களில் தமிழர்களிடமிருந்து இந்தியாவைப் பிரித்தெடுத்து அவர்களுக்கே எதிராக திருப்பி விட்டமை.

ஒடுக்குமுறை அரசுகளும் சரி இடதுசாரிச் சிந்தனையையுடைய அரசுகளாயினும் சரி, கீழைத் தேசமாயினும் சரி, மேற்காயினும் சரி சகலவற்

றையும் சிறீலங்கா தனக்குச் சாதகமாவே கையாள்கிறமையானது ஆகக்குறைந்தது அது தன்னைச் சுற்றியிறுக்கும் நெருக்கடிகளைத் தவிர்க்கவும் தமிழர்களுக்கெதிராக அந்த நெருக்கடிகளை திருப்பி விடவும் கூடிய தந்திரோபாயத்தைக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் சர்வதேச சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாகவே மீறி சமாதானப் பேச்சுவார்த்தையை முறித்த பின்னும் அரசாங்கம் தனக்கான எதிர்ப்பலைகள் கை மீறிப்போகாமல் கிளம்பிவிடாமல் பார்த்துக் கொள்கிறதே! அத்தோடு இப்போது தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் வியூகத்தை உடைக்க வேண்டிய கட்டத்துக்கு அவர்களுக்கும் வெளியுலகத்துக்குமான உறவை ஆக்கிரமித்திருக்கிறது.

அதாவது சிறீலங்கா அரசு போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்தபோது, விடுதலைப் புலிகளிடமிருந்து அந்தப்பகுதிகளை பிடுங்கியபோது அதை மேற்குலகம் பாராமுகமாகவே இருந்தது. அந்த நடவடிக்கை நிச்சயமாக பேச்சுவார்த்தையை முறிக்கும் என்று தெரிந்தும் மேற்கின் துாதுவர்களும் பிரதிநிதிகளும் அந்த நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர். அக்காலப் பகுதியில் கிழக்குக்கு அதிகமான துாதுவர்கள் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். உள்ளூர் அதிகாரிகளே போய்வராத வாகரைக்கு யப்பானியத் தூதுவர் யசூசி அக்காசியே போயிருந்தார். பெருந்தொகையான நிதியை மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு என்ற போர்வையில் பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் வழங்கியிருந்தன. இது அங்கிருந்து புலிகளை வெளியேற்றும் நடவடிக்கைக்கான ஆதரவை வெளியுலகத்திடமிருந்து சிறீலங்கா பெற்றதன் விளைவாகும்.

பொதுவாக மகிந்த ராஜபக்ச மேற்குலகத்தோடு அதிகம் ஒத்துப்போகாத ஆளாகவே கருதப்படுகிறார். ஆனால், அவர் மேற்கை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தன்னுடைய காரியங்களை முடித்துக் கொள்கிறார். அல்லது, அவற்றை தனது காரியங்களுக்கான ஆதரவுத் தரப்பாக மாற்றி விடுகிறார். அதுவும் சாத்தியப்படாத வேளைகளில் அவற்றின் எதிர்ப்பலைகள் கிளம்பிவிடாமற் பார்த்துக் கொள்கிறார். இதில் மகிந்த ராஜபக்சவின் திறனோ ஆற்றலோ கூடியிருக்கவில்லை. அவர் சிங்கள சிந்தனை மையத்தின் வளத்தை அந்த வள அணியை சரியான முறையில் பயன்படுத்த விழைகிறார் அவ்வளவுதான்.

இந்தச் சிந்தனை மையம் சிங்களத் தரப்பின் நலனை மட்டுமே குறியாகக் கொண்டது. இது தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரானது. கிழக்கில் அரசாங்கம் வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாகவும், நுாற்றுக்

கணக்கானோர் பலியாகவும் வேண்டியிருந்தது. ஆனால், இதையெல்லாம் சர்வதேச சமூகம் அனுமதிப்பதற்கான நிலையை சிங்களச் சிந்தனை மையம் உருவாக்கியிருந்தது. சிறீலங்கா அரசை வெற்றி கொள்ள வைப்பதற்கான வகையிலேயே இந்தச் சிந்தனை மையம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது சர்வதேச அரசியற் போக்கை அவதானித்து அதற்கமைய வியூகங்களை வகுக்கிறது. அதைப்போல உள்நாட்டில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிப்பதிலும் சிறுபான்மைத் தரப்புகள் பலம்பெறாத வகையிலும் இந்த மையம் செயற்படுகிறது.

முஸ்லிம் கொங்கிரசை உடைத்து பல துண்டுகளாக்கியதிலும் பிறகு அத்தனை துண்டுகளையும் தன்னுடைய தேவைகளுக்குப் பயன்படுத்துவதிலும் அதைப்போல மலையகக் கட்சிகளை உடைத்ததிலும் அவற்றையும் தேவைக்குப்பயன் படுத்துவதிலும் இந்த மையம் சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறதாகவே கொள்ள முடியும். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சிறீலங்காவைச் சுற்றியிருந்த நெருக்கடிகள் மிகக் கடுமையானவை.

அதிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிறீலங்கா அரசாங்கத்துடன் மெல்லிய முரண் நிலையில் இருந்தன. அப்போது இந்த நாடுகள் சிறீலங்காவை பலவகையிலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தியும் கொண்டிருந்தன. ஆனால் அதையெல்லாம் இந்தச் சிங்களச் சிந்தனை மையம் வெகு சுலபமாக சமாளித்து விட்டது. சர்வதேச அரசியல் நிலைமைகளின்படி இப்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், யப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ஒரு அணியில் நிற்கின்றன. மறு அணியில் சீனா சார்பான அல்லது அமெரிக்காவுக்கெதிரான சில நாடுகள் உண்டு.

ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இதில் அடக்கம். சிங்களத்தரப்பு இந்த நிலையை தெளிவாக மதிப்பிட்டு அதற்கமைவாக தனது இராஜதந்திரத்தையும் அதற்கான பொறிமுறையையும் வகுத்து வைத்திருக்கிறது.

அதன்படி அது தனக்கு அமெரிக்கக் கூட்டணியால் இருந்த நெருக்கடியை அமெரிக்காவுக்கெதிரான அணியுடன் நெருங்குவதாகக் காட்டி விலக்கியிருக்கிறது. இது புதிய இராஜதந்திரமோ அணுகுமுறையோ அல்ல. இந்தியாவை எப்படி சிறீலங்கா வெற்றி கொண்டதோ அதைப்போல அமெரிக்கக் கூட்டணியை அது வென்றிருக்கிறது. இராணுவ கேந்திர அர்த்தத்தில் இலங்கை அமெரிக்காவுக்கு இப்போது தேவை என்பதைவிடவும் இலங்கை அவ்வாறு சீனாவின் கைகளில் வீழ்ந்து விடக்கூடாது என்பதே அமெரிக்காவின் முதல்தர விருப்பமாகும்.

அதற்கான அரசியலைத்தான் அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் முதன்மைப்படுத்துகிறது.

குறிப்பாக இனப்பிரச்சினை சிங்கள அரசை சீனாவின் பக்கம் தள்ளிவிடுமோ என்ற அச்சம் அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் உண்டு. இந்த இரு அரசுகளினதும் அச்சத்தினைத்தான் மகிந்த ராஜபக்ச தனது அரசியல் அறுவடைக்கான உரமாய்ப் பயன்படுத்துகிறார். அதாவது சர்வதேச வலைப் பின்னலில் ஒரு முடிச்சை அமுக்கி அழுத்து

வதன் மூலம், மற்றைய முடிச்சுகளை அவர் தன் பக்கம் நோக்கி நகர்த்துகிறார்.

மேற்கின் மீது ராஜபக்ச கடும்போக்கை காட்டுகின்றபோதும் அவரை மேற்கு தழுவத் தவறவில்லை. சிங்கம் உறுமுகின்ற போதிலும் அதன்பிடரியை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் வருடிக் கொடுத்து வளைக்க முயல்வதன் இரகசியம் இதுதான். இவ்வாறு அரசியல் ஆய்வாளர் திரு. மு. திருநாவுக்கரசு எழுதுகின்றார். இங்கே திரு.மு.திருநாவுக்கரசு சொல்லுகிற இன்னொரு விடயத்தையும் நோக்கலாம். இந்து சமுத்திரத்தில் அதன் அமைவிட முக்கியத்துவம் காரணமாக இலங்கைத் தீவு என்றும் பதினாறு வயது நிரம்பிய கவர்ச்சிக் கன்னியாவாள்.

இந்தக் கவர்ச்சிக் கன்னி யாரையும் தேடிப்போகாது விட்டாலும் இவளைத் தேடி உலக நாடுகள் வலைவீசத் தவறப்போவதில்லை. இத்தகைய வலைப்பின்னலில் சிறீலங்கா அரசு பெரும் திரண்ட முடிச்சாய் இருப்பதுதான் இன்றைய சர்வதேச அரசியலைக் கையாள்வதில் மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கக்கூடிய அடிப்படைப் பலமாய் அமைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து அதைப்பணிய வைக்கும் நோக்குடன் அமெரிக்கா தனது உதவிகளை நிறுத்துகின்ற தருணங்களில், சீனா அந்த இடைவெளிக்குள் நுழைவது வழக்கம்.

இதனை அவதானித்து கிளிங்டன் நிர்வாகம் பின்னர் பாகிஸ்தானிலிருந்து அமெரிக்கா அதிகம் விலகிச் சென்றிடக்கூடாதென்ற கொள்கையை வகுத்தது. அதாவது எதிரியை விலகி துாரச் செல்ல விட்டு

விடாது, தன்கைக் கெட்டிய துாரத்தில் வைத்திருத்தல் என்ற கொள்கைக்கு அமெரிக்கா வந்தது. அப்படித்தான் ராஜபக்ச அரசாங்கத்தை கைக்கெட்டிய துாரத்தில் வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. இதில் ராஜபக்ச அரசாங்கத்தை கையாள்வது அல்லது வழிப்படுத்துவது மேற்படி சிந்தனை மையம்தான். இதில் அமைப்பென்பதை விடவும் பல சிந்தனைகளையும் விமரிசனங்களையும் பேசுவதன் மூலமும் முன்வைப்பதன் மூலமும் கூட்டுருவாக்கத்துக்கு இடமளித்து அதன் செழிப்பான விளைவை அறுவடை செய்கிறது சிறீலங்கா அரசு.

சிறீலங்கா மிகவும் சிறிய நாடு. ஆனால் அதன் இராஜதந்திரப் பாரம்பரியமும் அரசியலைக் கையாளும் முதிர்ச்சியும் மிக நீண்ட மரபுடையது. அந்த மரபார்ந்த வழிமுறையினதும் செயல்முறையினதும் செழிப்பை ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு தரப்பும் பயன்படுத்துகிறது. இப்போது மகிந்த ராஜபக்சவின் முறை. அவர் இதைப் பயன்படுத்துகிறார். இதன்படியே இந்த வாரம் உகண்டாவில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டின்போது பாகிஸ்தானின் மீது ஏனைய நாடுகள் தடையைக் கொண்டு வந்ததற்கு சிறீலங்கா அமைச்சரவையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இப்படி ஏனைய நாடுகளின் தீர்மானத்தையும் பொருட்படுத்தாமல் தனியே பாகிஸ்தானுக்காக நிற்பதென்பது வெளிப்படையாகவும் நேரடியாகவும் பார்த்தால் முட்டாள் தனமான காரியமாகவே இது தெரியும். ஆனால், சிங்களச் சிந்தனை மையத்தின் மூளைக்கு பாகிஸ்தானை அது தனிமைப்பட்டுப் போகும்போது தனியே அரவணைத்து ஆதரவளிப்பதன் மூலம் பெரும் நன்மைகளையும் உதவிகளையும் பெறலாம் எனப்பட்டிருக்கிறது. அதற்காகவே உடனடியாக பாகிஸ்தான் மீது கொண்டுவரப்பட்ட தடையை சிறீலங்கா எதிர்த்தது. இதில் உள்ள வேடிக்கை என்ன வென்றால், கம்பாலாவில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு கொண்டுவந்த பாகிஸ்தான் மீதான தடைக்கு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம ஆதரவளித்திருந்தார்.

ஆனால், சிங்களச் சிந்தனை மையத்துக்கு போகல்லாகமவின் நிலைப்பாடும் அணுகுமுறையும் மிகத் தவறாகவேபட்டது. அதனால்தான் அது உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி பாகிஸ்தான் மீதான தடைக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

இதுபோல இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஜப்பானை ஐ.நாவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என எல்லா நாடுகளும் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் சிறீலங்கா மட்டும்தான் ஜப்பானுக்கு ஆதரவளித்தது. ஜப்பானை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியது. அப்போது அப்படிச் சொன்னவர் திரு. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜப்பானுக்குச் செய்த உதவிக்காக அவர் ஆட்சிக்கு வந்தவுடன் ஜப்பான் தாராளமாக அள்ளிக் கொடுத்தது. அப்பொழுதும் சிங்களச் சிந்தனை மையம் இப்படி விலகலாகவே சிந்தித்து செயலாற்றியது.

இதில் அது அதிக நன்மைகளையும் தாராளமாகப்பெற்றது. அதைப்போல இப்போது பாகிஸ்தானை அரவணைத்து தமிழ் மக்களின் மீது போரைத் தொடுக்க சிறீலங்கா முயற்சிக்கிறது.

இப்படிச் செய்யும் போது இதனால் வருகின்ற இந்திய எதிர்ப்பையோ, அமெரிக்க எதிர்ப்பையோ சிங்களத் தரப்பு பொருட்படுத்தவில்லை. அதற்குத்தெரியும் ஒரு எல்லைக்கு மேல் சிறீலங்காவை வற்புறுத்தவோ அடிபணியவோ வைத்துவிடவும் முடியாது.

அப்படி முயன்றால் அது சீனாவைச் சார்ந்து விடுவதாக போய்முடியும். அப்படி அது போக யாரும் விடப்போவதில்லை. இல்லையென்று போனாலும் சீனாவோ பாகிஸ்தானோ அதற்குத் தாராளமாக உதவவும் கூடும். கல்லை எப்படி எங்கே எறிந்தாலும் மாங்காய்தான். இதைச் சோதிடத்தில் இருகுருச் சந்திரயோகம் என்பார்கள். உண்மையில் கேந்திர முக்கித்துவமுடைய நாடு என்பதால் அதற்கு வலுவும், பலமும் அதிகமாகும். சிங்கள மையச் சிந்தனை, எப்போதும் தமிழருக்கான உரிமைகள் வழங்குவதைப் பற்றியோ இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையோ காணவில்லை. இப்போதும் அது அத்தகைய பரந்த கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகவும் இல்லை.

இப்போது உகண்டாவிலிருந்து மகிந்த ராஜபக்ச ஈரானின் பக்கமாக செல்கிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் ஈரானின் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பானுக்கு பெருந்திரளாகப் போக உத்தேசித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேசத்தை வளைத்துப்போடும் அரசியலை அவர் கைக்கொள்ள எத்தனிக்கிறார். இதற்கான வழிகாட்டியாக இந்த சிந்தனை மையமே செயற்படுகிறது.

பொதுவாக வெளி அரசியலையும் சரி, உள் அரசியலையும் சரி சிங்கள சிந்தனை மையமே நகர்த்துகிறது. ஆனால், இதற்குப்பதிலாக தமிழ் இராஜதந்திரம் வளர்ந்தே ஆகும். வளரவும் வேண்டும்.

தமிழர்களில் உள்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் ஆய்வாளர்கள் சிந்தனையாளர்கள் இல்லாமலில்லை. அவர்களின் செயற்பாடுகளும் நடைபெறாமலில்லை. அச்சிந்தனைகள் ஒருங்கிணைக்கப்படவேண்டும். துலக்கமான சிந்தனை மையங்கள் தேச விடுதலைக்காக இன்னமும் முனைப்புப் பெற வேண்டும். செழிப்பாக இயங்கத் தொடங்கவும் வேண்டும்.

நன்றி - "ஈழமுரசு"

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=8&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.