Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்வி சிவராமலிங்கம் யாமினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்களே தவிர பரிதாபப்பட வேண்டியவர்களல்ல

yaminiwv5.jpg

(`நிலவே நீ மயங்காதே' (நாவல்) வெளியீட்டின் மூலம் வவுனியா மாவட்டத்தில் முதல் நாவலை வெளியிட்ட பெண் எழுத்தாளரான செல்வி சிவராமலிங்கம் யாமினி கவிதை, சிறுகதை எழுவதுதிலும் கணிசமாக பணியாற்றி வருகின்றார். ஈழத்து இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வவுனியா மாவட்டத்தில் இருந்து செய்து வரும் யாமினியை `தினக்குரல்'க்காக நேர்கண்டபோது பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.-கனகரவி- )

கேள்வி: நீங்கள் வெளியிட்ட முதல் நாவல் பற்றிக் கூறுங்கள்?

பதில்: இது ஒரு சமூக நாவல். இது சமூகத்தில் இருக்கின்ற கண்ணியமற்ற சில ஆண்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை முக்கியமாக இளம் பெண்களுக்கு எடுத்துச் சொல்கின்றது. அத்தகைய ஆண்கள், பெண்கள் மனதளவில் சோர்ந்துபோய் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் சந்தர்ப்பத்தைக் கூடப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி விடுவார்கள் என்பதால் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

கேள்வி: வவுனியா மாவட்டத்தில் முதல் நாவல் ஒன்றை வெளியிட்ட உங்களுக்கு எப்படி வரவேற்பிருந்தது?

பதில்: நாவலை வெளியிட்ட பின் என் உறவினர்கள், நண்பர்கள் என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். எனது சிறிய தந்தையார் எனக்கு ஆயிரம் ரூபா பரிசளித்து என்னை உற்சாகப்படுத்தினார். ஆனால், எனது வீட்டில் நிலைமை வேறு மாதிரியிருந்தது. படிக்கிற காலத்தில் நான் கதையெழுதியதால் நான் பேனா, பேப்பர் எடுக்கிற நேரமெல்லாம் என்ற பெற்றோர் முறைத்துக் கொண்டேயிருந்தார்கள். பின் என் தாயார் எழுத்துத்துறையில் எனக்கிருந்த நாட்டத்தை புரிந்துகொண்டும் `இப்போது படி. உயர்தரப் பரீட்சை எடுத்த பின் எழுது' என்று கொஞ்சம் விட்டுக்கொடுத்தார். மீரா வெளியீட்டகத்தினரோடு தொடர்பு கொண்டு எனது நாவலை பிரசுரிப்பதற்காக அனுப்பியபோதும் எனது தந்தையார் சற்றும் இறுக்கம் குறையாமல் `சரி, இந்த ஒன்று போதும். இனிமேல் படி' என்று சொல்லிவிட்டார். எழுத்துத் துறையில் நாட்டமுள்ள எனது அம்மாவுக்கு உள்ளூர கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சற்று இறுக்கமாகவே இருந்தார். பெற்றோருக்கு விருப்பமில்லாத ஒரு விடயத்தைச் செய்கிறேனே என்ற தயக்கமும் சங்கடமும் எனக்குள் நிறையவே இருந்தது. இருந்தாலும், புத்தகமாக வெளியான என் நாவலை மிகுந்த சந்தோஷத்துடன் அம்மாவிடம் காட்டியபோது அவரின் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெருமிதமும் எனக்குத் தந்த பூரிப்போடு புத்தகத்தை அப்பாவிடம் கொடுக்க, அவர் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் அதை வாங்கி மேசையில் வைத்துவிட்டு `பி.பி.சி.' கேட்பதற்கு ஆயத்தமானார். நான் வந்த சுவடு தெரியாமல் மெதுவாக அறைக்குள் மறைந்து கொண்டேன். சற்று நேரம் கழித்து மெதுவாக எட்டிப்பார்த்தபோது, வானொலி தன்பாட்டில் செய்தி சொல்லிக் கொண்டிருக்க கதை, கவிதை எதிலும் நாட்டமேயில்லாத அப்பா என் புத்தகத்தில் மூழ்கிப்போயிருந்தார். எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதைக் கருதுகிறேன். இதைவிட, வேறென்ன பாராட்டு வேண்டும் எனக்கு!

கேள்வி: பக்தி இலக்கியங்கள் படைப்பதில் ஆர்வம் காட்டுவதனை அறிய முடிகின்றது. எவ்வகையான வெளியீடுகளைச் செய்துள்ளீர்கள்?

பதில்: `சக்திப்ரதாயினி', 'யாதுமாகி நின்றாய்' ஆகிய இரு பக்திக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன். இரண்டிலும் உள்ள கவிதைகள் அம்பாளுக்காகவும் விநாயகருக்காகவும் எழுதப்பட்டவை. இக்கவிதைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் நான் மனதால் உணர்ந்து உருகி எழுதியவை.

கேள்வி: ஆன்மீகம் மீது ஆர்வம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன?

பதில்: என் பெற்றோர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அத்துடன், எமது வீடு ஆலயங்களின் அயலில் இருப்பதால் அடிக்கடி ஆலயத்திற்குச் செல்லவும் வழிபடவும் பூசை, புனஸ்காரம் என்றிருக்கிற ஆலயச் சூழலில் இருக்கவும் அதிக சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இவையெல்லாம் ஆன்மீகத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாகின.

கேள்வி: எழுத்துத் துறையில் ஈடுபாடுடைய நீங்கள், சமூகம் சார்ந்த விடயங்களை எவ்வளவு வெளிக்கொணர்ந்தீர்கள்?

பதில்: எனது முதல் நாவலிலேய சமூகம் சார்ந்த விடயங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறேன். பெண்களைப் போகப்பொருளாக நினைத்து அவர்களின் சந்தோஷத்தை, நிம்மதியை வாழ்க்கையைச் சின்னாபின்னப்படுத்தும் ஆண்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். வவுனியா இலக்கிய மலரான "கலைமருதத்தில்" பிரசுரமாகிய "தாலி" என்ற சிறுகதையில் விதவைப் பெண்களை ஒதுக்கி வைக்கின்ற இந்தச் சமூகத்தின் மீது கோபப்பட்டிருக்கின்றேன். `துவாரகா' என்கிற சிறுகதையில் மதவெறியைச் சாடியிருக்கிறேன்.

கேள்வி: குறிப்பாக, பெண் என்ற வகையில் பெண்களுடைய தேவைகள், பாதிப்புகள் போன்றவற்றை படைப்பிலக்கியங்களூடாக வெளியிட்டுள்ளீர்களா?

பதில்: ஆம், நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல `நிலவே நீ மயங்காதே'யில் தனது கண்ணியத்தைப் பற்றியோ, பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை பற்றியோ கொஞ்சம்கூடக் கவலைப்படாது பெண்களைப் போகப்பொருளாக நினைத்துக் கொள்ளும் ஆண்களினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கூறியிருக்கிறேன்.

தொடர்ந்தும் எனது எழுத்துகளில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், பெண்களின் தேவைகள் பற்றி மட்டுமன்றி, சமூகத்தின் சகல வர்க்கத்தினரினதும் தேவைகள், பாதிப்புகள் பற்றியும் எழுதுவேன் என்பதை இங்கே குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி: அரச திணைக்களத்தில் எத்தனை ஆண்டு காலம் கடமையாற்றினீர்கள். குறுகிய காலத்துக்குள் ஓய்வு பெற்றமைக்குக் காரணம் எதுவும் உள்ளதா?

பதில்: 13 வருட காலம் அரச திணைக்களத்தில் கடமையாற்றிவிட்டேன். இத்தனை காலமும் கோவைகளுடனும் பதிவேடுகளுடனும் கடமையாற்றிய எனக்கு உளவளத்துணையாளரானதும் உணர்வுக் குவியல்களாகவுள்ள மனிதர்களுடன் பணியாற்றுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கான சந்தர்ப்பம் அமைந்தபோது அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.

கேள்வி: பழைமைகள் பேணப்பட வேண்டும் என்று பெண்களின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள். குறிப்பிட்டுக் கேட்பதாக இருந்தால், விதவை என்று பெண்களை அடையாளப்படுத்துவது போல் ஆண்களுக்கு இல்லையல்லவா. எனவே, இவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: பழைமைகள் பேணப்பட வேண்டுமென்பதற்காக எந்தவொரு நல்ல விடயத்துக்கும் முட்டுக்கட்டை போடுவது சரியல்ல. விதவைப் பெண் என்று பொட்டில்லாது, பூவில்லாது ஏன் மேல் சட்டை (Blouse) கூட இல்லாது வெள்ளைச் சேலை கட்டிக்கொண்டு வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்றிருந்த காலமும் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அவ்வளவுக்கு மோசமாக இல்லை. குங்குமமும் பூவும் வைப்பதில்லையே தவிர, கலர்ப்புடவையுடன் எங்கு வேண்டுமானாலும் போய் வருகிறார்கள். சில பெண்கள் தைரியமாக குங்குமம், பூக் கூட வைத்துக் கொள்கிறார்கள். விதவைகள் மறுமணம் கூட நடைபெற்று வருகின்றன. அந்தளவுக்கு சமூகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது சந்தோஷப்படக் கூடிய, வரவேற்கத்தக்க விடயம். ஆனாலும், அன்றும் சரி இன்றும் சரி, சமூகம் கணவனை இழந்த பெண்கள் மீது செலுத்தும் அளவுக்கு மனைவியை இழந்த ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. தபுதாரர்களையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றோ அவர்கள் மீது நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்றோ, சொல்லவில்லை. விதவைகளை ஒதுக்கி வைக்காதீர்கள். அவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்காதீர்கள் என்றே சொல்கிறேன்.

கேள்வி: சீதனம் வாங்குவது, கொடுப்பது பற்றி எழுத்தாளர் என்ற வகையில் உங்கள் கருத்து?

பதில்: சீ- தனம் என்று சொல்லும் போதே இது விரும்பப்படாத தனம் என்பது தெளிவாகிறது. பிறகெதற்கு அதைக்கேட்டு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்? பெற்றவர்கள் தங்களிடம் பணம், பொருள் இருக்கும் பட்சத்தில், பிள்ளைகளுக்குக் கொடுக்கத்தானே போகிறார்கள். அவர்கள் விருப்பப்பட்டதை, அவர்களால் முடிந்ததை அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கட்டும் என்று ஒதுங்கி விடுவது நாகரிகம். இதை விடுத்து, இவ்வளவு தர வேண்டும், தந்தால் தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லி பெண்ணின் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் ஓட ஓட விரட்டி அலைக்கழித்து, சீதனம் வாங்கி கல்யாணம் செய்தால் அந்தப் பெண்ணின் மனதில் இதெல்லாம் வேதனையாக, சங்கடமாக இருக்குமல்லவா. பிறகெப்படி அங்கே அந்நியோன்யமான குடும்ப வாழ்க்கை அமையும்? ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இது வெடிக்கத்தானே செய்யும். இருக்கின்ற ஒரேயொரு மகனுக்குக் கூட 15 இலட்சம், 20 இலட்சம் என்று சீதனம் வாங்கி தங்களது பெயரில் வங்கியில் போட்டுவிட்டு இருக்கிற பெற்றோரும் இருக்கிறார்கள்தானே. பெற்றவர்கள், இதைச் செய்யாதே. இதைச் செய் என்றால் கேட்டு நடக்காத ஆண்கள், இந்த ஒரு விடயத்தில் மட்டும் பெற்றோரின் சொல் மீற மாட்டேன் என்பது மிகவும் வேடிக்கையானதொரு செயலாக இருக்கின்றது.

ஆனால், இவ்வாறெல்லாம் சீதனம் வாங்கும்போது தமது நிலைமை தான் படுமோசமாகப் போய்விடுகிறது என்று எந்த ஆணும் புரிந்து கொள்வதில்லை. இதை நினைக்கும்போது ஆண்கள் மீது நான் பரிதாபப்படுகிறேன்.

என் பிள்ளை டொக்டர். எனவே, இவ்வளவு தர வேண்டும். என் பிள்ளை இஞ்ஜினியர் எனவே இவ்வளவு தர வேண்டும் என்று தங்களது பிள்ளையைப் படிக்க வைத்ததற்கும் வளர்த்ததற்கும் இதர செலவுகளுக்குமாகவென்று பெற்றோர் பேரம் பேசி விற்றுவிடுகிறார்கள். இது ஒரு ஆட்டையோ, மாட்டையோ வளர்த்து விற்பதைப் போன்றதுதானே. அதுவரை காலமும் என் அப்பா, என் அம்மா, என் சகோதரம் என்றிருந்த அத்தனை சொந்தமும் அவனை ஒரு விற்பனைப் பொருளாக்கும் அந்த நிமிடத்தில் உணர்வு ரீதியாக இல்லாமல் போகின்றது. அவன் அங்கே ஒரு பொருளாக நிற்கிறானேயன்றி, உறவாக இல்லை. இந்த நிலையில் அந்த ஆண்மகனை நினைத்து நான் மிகவும் கவலையடைகின்றேன். அவனது நிலைமையை நினைத்த அவன் மீது பரிதாபப்படுகின்றேன்.

இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டுக்கொள்ள பிரிப்படுகின்றேன். என் சகோதரனை எந்தவொரு நிமிடத்திலும் நான் பேரம் பேசவில்லை. விற்பனை செய்ய முயலவில்லை. எப்போதும் நான் அவருக்கு சகோதரியாகவே இருக்கிறேன்.

கேள்வி: சமூகத்தில் ஆண்-பெண் சமமாக வாழ வேண்டுமெனின்; ஆண்களும் பெண்களும் என்ன செய்ய வேண்டும்?

பதில்: முதலில் பெண்களும் விருப்பு, வெறுப்பு, உணர்வுகள், திறமைகள் உள்ள மனிதர்கள் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களை மதிப்பதுவும் அவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுவும் நாகரிகமான செயலென்றும் அது ஒன்றும் தரக்குறைவான செயலல்ல என்பதையும் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தமக்குச் சமமானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை ஆண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தாம் ஆண்களுக்கு அடுத்த இடத்தில் (இரண்டாம் பட்சத்தில்) உள்ளவர்கள், ஆண்களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அடியோடு உதறி தங்களால் எதுவும் முடியும் என்பதையும் தாங்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்பதையும் சகல பெண்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் பல துறைகளிலும் மேலும் முன்னேற வேண்டும்.

கேள்வி: பெண் செல்வியாக இருக்கும்வரை தந்தையின் பெயர் முதலெழுத்தாக இருக்கும். திருமணம் செய்து விட்டால் கணவனின் பெயர் தான் முதலெழுத்தாக இருக்கிறது. இதுபோன்றதல்ல ஆண்களுக்கு. இது பற்றி சமூகத்தில் தர்க்கம் உள்ளது. இது விடயத்தில் தங்களின் கருத்தென்ன.

பதில்: இது நல்லதொரு கேள்வி. ஆனால், இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முன் செல்வி, திருமதி என்பதனால் குறிப்பிடப்படுவது என்ன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். செல்வி, திருமதி என்பவை ஒருவருடைய வாழ்வியல் நிலை மாத்திரமேயன்றி, இன்னாருடைய மகள் அல்லது இன்னாருடைய மனைவி என்பதைக் குறிப்பிடுவதல்ல. அத்துடன், ஒரு நபருக்கு எப்போதும் முதலெழுத்து என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியும். எனவே, பெண்கள் எப்போதும் தந்தையின் பெயரை முதலெழுத்தாகக் கொள்வது சரியென்றே நான் கருதுகிறேன். சிங்களப் பெண்கள் பலரும் திருமணத்தின் பின்பும் தந்தையின் பெயரையே முதலெழுத்தாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.

தவிர, குழந்தையின் பிறப்பத்தாட்சிப் பத்திரத்தில் தாயின் கன்னிப் பெயரே கேட்கப்படுகிறது. ஆனால், தற்போது இதைப் பற்றித் தெரிந்து கொள்ளாத சிலர், கன்னிப் பெயரைக் குறிப்பிடாமல் அவரது கணவனின் பெயரைச் சேர்த்தே குறிப்பிடுகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

கேள்வி: ஆன்மீகத்திலும் ஈடுபாடு இருப்பதனால் இந்தக் கேள்வியைக் கேட்கலாமென்று எண்ணுகின்றேன். பசு வதை பற்றிப் பேசுகின்றவர்கள் பாலைக் கறந்தெடுத்துவிட்டு பசு பால் தருகிறது என்று சொல்வது பற்றி?

பதில்: பசு வதை என்பது பசுவை வதைப்பது. பசுவை அடித்தோ, பிறவழிகளில் வதைத்தோ அதன் கன்றுக்குப் போதிய பாலை வழங்காமல் முழுப்பாலையும் கறந்தெடுப்பதுதான் பசு வதை. பசுவையும் கன்றையும் நல்ல முறையில் பராமரித்து அவற்றுக்குப் போதிய ஆகாரத்தையும் வழங்கி கன்றுக்குப் போதிய பாலை வழங்கி மீதமுள்ள பாலைக் கறந்தெடுப்பது பசு வதையல்ல என்றே நான் கருதுகிறேன். இது வதையென்றால் மரங்கள், செடிகளிலிருந்து காய்களையும் கனிகளையும் இலைகளையும் பறித்தெடுப்பதை என்னவென்பது?

(ஆனாலும் பசு பால் தருகிறது என்பதை பசுவிடமிருந்து பாலைப் பெறுகிறோம் என்று திருத்திக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், பசு பாலைத் தராது ஒளித்து விட்டால், எம்மால் பெற்றுக் கொள்ள முடியாதே.)

கேள்வி: பெண்களின் கண்ணீர் ஓர் ஆயுதம் என்று சொல்வதைப் பெருமையாக நினைக்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக இல்லை. பெண்கள் அழுவதைப் பார்த்துப் பரிதாபப்பட்டு ஒரு காரியம் நிறைவேறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்களின் பக்கமிருக்கிற நியாயத்தால் அவர்களின் திறமையால் ஒரு காரியம் நிறைவேறுவதே மரியாதையான விடயம். பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்களே தவிர; பரிதாபப்பட வேண்டியவர்களல்ல.

கேள்வி: உளவளத்துணை கற்றவர் நீங்கள். தொலைக்காட்சித் தொடரில் கண்ணீர்க் காவியங்கள் பெரும்பாலும் அநேகரின் பொழுதுபோக்காக இன்றுள்ளது. இது சமூகத்தில் முன்னேற்றத்தையா, பின்னடைவையா ஏற்படுத்தும்?

பதில்: முன்னேற்றம், பின்னடைவு என்று ஒட்டுமொத்தமாக அத்தனை தொடர்களுக்கும் சொல்லிவிட முடியாது. தொலைக்காட்சித் தொடர்களை பார்க்கக் கூடியவை, சகிக்கக் கூடியவை, சகிக்க முடியாதவை என்று மூன்றாக வகைப்படுத்தலாம். இவற்றுள் முதலாவது பிரிவை எடுத்துக்கொண்டால் இவற்றுள் சமூகம் சார்ந்த விடயங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் என்பதோடு தைரியம், தன்னம்பிக்கை, பாசம், பொறுப்புணர்ச்சி போன்ற நல்ல விடயங்களையும் இவை எடுத்துச் சொல்கின்றன. அத்துடன், மதிக்கப்படக் கூடிய இயல்பான பாத்திரப் படைப்புகள் பார்ப்பவரின் ஆளுமையில் ஒரு நேர்க்கணிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். நீண்ட காலத்திற்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டிய நிலை இருந்தாலும் இவ்வகைத் தொடர்கள் சமூகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை.

இரண்டாம் வகையைப் பற்றிச் சொல்லவதானால் இவை தைரியம், தன்னம்பிக்கை, விடா முயற்சி, நட்பு என்று நல்ல விடயங்கள் சிலவற்றை எடுத்துச் சொன்னாலும் தொட்டதற்கெல்லாம் கண்ணைக் கசக்குவதும் படு மட்டமான சிந்தனைகள், செயல்கள் கொண்ட கதாபாத்திரங்களும் அவற்றின் பக்குவப்படாத முடிவுகளும் என்று பார்ப்பவர்களுக்குச் சற்று எரிச்சல் மூட்டிக் கொண்டிருக்கின்றன. இவற்றினால் சமூகத்திற்குச் குறிப்பிட்டுச் சொல்கின்ற அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்ல முடியாது.

சகிக்க முடியாதவை பற்றிச் சொல்வதென்றால் முட்டாள் தனமாக யோசித்துச் செயற்படும் கதாபாத்திரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் என்று பார்ப்பவர்களை முட்டாள்களாக்குவதோடு எரிச்சல் மூட்டுபவனவாகவும் உள்ளன. இவற்றினால் சமூகத்தில் முன்னேற்றம் என்று எதுவும் இல்லை.

ஆனால், தொடர்களுக்காகத் தினமும் நீண்ட நேரம் செலவிடப்படுவதால் இவை சமூகப் பின்னடைவுக்கு வழிகோலுகின்றன.

கேள்வி: தங்களின் வழிகாட்டியாக யாராவது உள்ளனரா?

பதில்: எனது தாயார் இருந்தவரை சிறந்த வழிகாட்டியாவும் நண்பியாகவும் இருந்தார். 1997 இல் அவர் இறைவனடி சேர்ந்ததும் எனக்கு வழிகாட்டியென்று யாரும் இல்லை.

கேள்வி: எழுத்துலகில் இன்னும் எந்த மாதிரியான வெளியீடுகளை செய்யவுள்ளீர்கள்?

பதில்: கவிதைத் தொகுப்பு ஒன்று, சிறுகதைத் தொகுப்பு ஒன்று மற்றும் சில நாவல்களை வெளியிடுவதாக இருக்கிறேன்.

கேள்வி: எழுத்து சோறு போடுமா என்று கேட்பார்கள். உங்களுடைய படைப்புகளைப் படிப்பாளிகளிடம் முழுமையாக விநியோகிக்க முடிந்ததா?

பதில்: `நிலவே நீ மயங்காதே' நாவல் மீரா வெளியீடாக வெளிவந்ததால் அதன் விநியோகப் பொறுப்பு என்னைச் சார்ந்திருக்கவில்லை. `சக்திப்ரதாயினி', `யாதுமாதிரி' நின்றாய் என்பவை பக்திக் கவிகைதள் என்பதாலோ என்னவோ 95 சதவீதமானவை படிப்பாளிகளிடம் போய்ச் சேர்ந்துவிட்டன. ஆனால், இதை எல்லா வெளியீடுகளிலும் எதிர்பார்க்க முடியாது. ஒரு படைப்பை வெளியிடுவதென்பது இலகுவானதல்ல. இதில் பணம் என்பது ஒரு பெரிய பிரச்சினை. ஒரு படைப்பை வெளியிடுவதற்கே பெருந்தொகைப் பணம் தேவைப்படுகின்றது. இத்தனையையும் கடந்து புத்தகங்களை வெளியிட்டால் இவற்றை விநியோகிப்பது பெரும்பாடாக இருக்கிறது. இது சகல எழுத்தாளர்களுக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இதனாலேயே பல எழுத்தாளர்களின் பல படைப்புகள் நூலுருப் பெறாமலேயே இருந்து விடுகின்றன. இது புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கும் உருவாகியவர்கள் வளர்வதற்கும் பெரிய தடையாக இருக்கின்றது.

கேள்வி: இலக்கிய உலகில் ஆண், பெண் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது தான். ஆனாலும், பெண்களின் வரவு குறைவு. வந்தவர்களும் சிலர் ஒதுங்கி விடுவதனையும் காணக்கூடியதாகவுள்ளது. எனவே, புதியவர்களின் வரவு தேவை என்ற வகையில் இலக்கிய உலகிற்குள் பெண்களை உள்வரவழைக்க எப்படியான கருத்தைச் சொல்லலாம்?

பதில்: எழுத்துத்துறையில் நாட்டமுள்ளவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். சமூகத்திற்குத் தாங்கள் சொல்ல விரும்புவனவற்றைத் தங்கள் எழுத்துகளின் மூலம் சொல்லிக் கொள்ளலாம். தங்கள் குடும்பச் சுமைகள், அலுவலகச் சுமைகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் கடந்து உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு தைரியமாக எழுத்துலகில் பிரவேசிக்க வேண்டும்.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.