Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காடு காண் காதை

Featured Replies

எழுதியவர்: கி.பி. அரவிந்தன்

[01]

இப்படியாக

இருந்து வரும் நாளொன்றில்

இங்கோர் ஈரவலயக் காட்டினில்

புயலடித்து ஓய்ந்திருந்தது.

தூறல் மழையும்

ஈரலித்த காற்றும் ஓயாதிருந்தது.

வேனிற் காலமும் தள்ளிப் போயிற்று.

குழந்தைகளோ

புயல் துழாவிச் சென்ற

காட்டினைக் காணவும்

அக்காட்டிடை உலவவும்

ஆவல் கொண்டிருந்தனர்.

அவர்தம் ஆவல் மேலிட

வீட்டின் மூலை முடுக்கிலும்

புத்தக அடுக்கிலும்

நாற்புற சுவரிலும்

தொங்கத் தொடங்கின

காடுகள்.

காடென்றால்

பெரு விருட்சங்களும்

நெடு மரங்களும் பற்றைகளும்

செடி கொடிகளுமாய்

அடர்ந்து கிடக்கும் காடுகளவை.

சிறுகாடு

பெருங்காடு

மழைக்காடு

பற்றைக்காடு

ஈரவலயக்காடு

வெப்பவலயக்காடு

இப்படியாய் பலவகைக் காடுகள்..

அவை

துளிர்க்கும் உதிர்க்கும்

காய்க்கும் பூக்கும் கலகலக்கும்..

பருவ காலங்களில்

ஆனால்

இருள் படர்ந்த நிழலில்

மௌனப் பெருமூச்சுக்களுடன்

அந்தக் காட்டிடையில்

இலையுதிர்க்க மறுத்து

சடைவிரித்து தவமியற்றின

சில ஊசியிலை மரங்கள்.

இவற்றுடன்

நட்ட மரங்களும்

ஒட்டு மரக்கன்றுகளும்

வேர்பிடிக்க தவித்திருந்தன

எங்களைப் போல்

எங்கள் குழந்தைகள் போல்.

புயல்வாய்ப்பட்ட

அவ்வீரலிப்பான காட்டினுள்

உடனடியாகவே

நடமாட முடியாததால்

காடு பற்றிக் கதைக்கலாமென

ஓப்புதல் அளித்தனர் குழந்தைகள்.

[02]

அஃதொரு

வெப்பவலய காடு.

காட்டரசன் சிங்கத்திற்கு

வாக்களிக்கப்பட்ட காடாம்

இதிகாசம் இப்படியாய் கூறிடினும்

மதங்கொண்ட யானைகளினதும்

வசமான காடது.

காடென்றால்

முதிரை, யாவரனை, பாலையென

பெருவர்க்க மரமட்டுமல்லாது

துவரை, விண்ணாங்கு, உலுவிந்தை

பன்னை, கொடுக்குநாறியென

சிறுவர்க்க மரஞ்செடிகளும்

நிறைந்த கறுவாக்காடது.

பெருவர்க்க மரங்களோவெனில்

தாங்களே

காட்டின் அடையாளமென்றும்

சிறுவர்க்க செடிகொடிகள்

தற்சார்பு கொண்டவையல்ல

தம்மையே சார்ந்திருப்பவை என்றும்

இறுமாப்பு கொண்டிருந்தன.

குழந்தைகளோ கண்களை

அகல விரித்துக் கொண்டனர்.

இங்குதான் நம் முன்னவர்

ஆடிக் களித்த சுவடுகள்

கலைந்து கிடக்கின்றன.

அந்தக்காடு கலைத்த கதையும்

நீங்கள் அறியலாந்தான்

கதையை தொடங்கினேன் நான்.

[03]

சேனைச் செய்கையை

துவம்சம் செய்வதென்பது

கானுயிர் சிலதுக்கு கைவந்த கலை.

இரவானால் போதும்

யானை வரும்

பன்றி வரும்

காட்டெருமை வரும்

நாள்தோறும் தீராத தொல்லைதான்

மீளும் வழி தேடித்தான்

காடு கலைக்க துணிந்தனர் சிலர்.

அந்த நாளும் வந்தது.

அணியிரண்டாய்ப் பிரிந்து

இருமுனைகளால்

ஊடுருவி இணைந்து

அரைவட்டமாய் காட்டுக்குள்

நிலை எடுத்த்தாயிற்று

வெட்டையில்

கட்டுத் தோட்டா நிரப்பிய

நாட்டுத் துவக்குடன்

காத்திருந்தனர் இன்னும் சிலர்

கறள் கட்டிய தகரங்களிலும்

பீங்கான் கோப்பைகளிலும்

தட்டி ஒலியெழுப்பி

வாயால் உரத்து ஓசையிட்டபடி

நிலையெடுத்தவர் நகரத் தொடங்கினர்

காடுகலைப்பு தொடங்கியது

காடும் வெளியும் அதிர்ந்தது

நாட்டுத் துவக்கிருந்து

வெடி பறிந்த போதிலும்

கட்டுத் தோட்டாவால்

இலக்கெட்ட முடியவில்லை.

வெடிக்கு தப்பி விட்டன

கானுயிரிகள்.

அப்புறமென்ன

கானுயிரிகளின் மூர்க்கம்

சேனையெல்லாம் நாசம்

தொடக்கமே சறுக்கல்தான்.

பரண் வேண்டும்

இருட்டு விழி வேண்டும்

பொறி அமைக்கும் மதி வேண்டும்

பொறியில் அகப்பட்டதை

கச்சிதமாய் பதனமிடும்

கலையும் அறிய வேண்டும்

இத்தனைக்கும் நெஞ்சிலுரம் வேண்டும்..

இவையெல்லாம் அறிய

இன்னுயிர் அளித்தோர் ஏராளமாயினர்.

பின்வரும் நாட்களில்

காடு கலைத்தோரே

காட்டால் கலைக்கப்பட்டவருமாயினர்

காடு துறந்தவருமாயினர்.

[04]

இதுவொரு மலைக்காடு

காடென்றால்

மலைகள் குன்றுகள் மீதும்

கணவாய்கள் பள்ளத்தாக்குகள் மீதும்

அடர்ந்து விரிந்த காடு.

இருள் நிழலை அடைகாத்திருக்கும் காடு

இந்தக்காடு

கோப்பி

தேயிலை

இறப்பர்காடாய்

மாறிய கதையையும்

சொல்லத் தொடங்கினேன்.

வடவேங்கடந் தென்குமரியாயிடை

விரிந்த தொன்மக் காடது.

எல்லாக் காடுகளைப் போலவும்

ஆங்கோர்

பனங்காட்டிலும் கரிசல்காட்டிலும்

வாழ்ந்து வந்தன பறவைகள்.

மழை பொய்த்து

இரைகளும் வரண்ட ஒருநாளில்

வேட்டைகாரர் விரித்த வலையில்

சிக்கிக்கொண்டன பறவைகள்.

சூரியன் மறையாத எல்லைகளைக்

கொண்டிருந்த வேட்டைக்காரரோ

அகப்பட்ட பறவைகளை

இழுத்து வந்தனர் இம்மலைக்காட்டிற்கு

கடல்தாண்டி வனம்தாண்டி

இராமர் அணைதாண்டி

சிங்கத்தின் ஆணைக்குட்பட்ட

காடேகின பறவைகள்.

சீதை சிறையிருந்த அசோகவனமும்

கண்ணகி வந்தாறிய மூலையும்

அனுமன் எரித்த காடும் இதுதான்.

இங்கே

சிறகுகள் கத்தரிக்கப்பட்டு

கூண்டுக்குள் அடைபட்டது வாழ்வு.

காடான தொன்மக் காடிழந்து

ஒத்தப்பனை தோப்பிழந்து

வாடி உதிர்ந்த கதை

அந்தப் பறவைகளுக்கானது.

மலைகளின் உரமாய்

தேயிலையில் இரத்தமாய்

இரப்பர்மரப் பாலாய்

தலைமுறை தாண்டிய போதும்

சிறகசைப்பதை தடுத்தது காடு.

ஒரு கறுப்பு நாளில்

எஞ்சியிருந்த

பறவைகளின் சிறகுகளும்

ஒட்ட வெட்டப்பட்டன.

இந்த மலைக்காடும் சொந்தமற்றதென

அறிவிக்கபட்டது அந்நாளில்.

அப்புறமென்ன

புயல்மையம் கொண்டது காட்டில்

காடு இன்னமும் எரிகின்றது

வெந்து வெந்தும் தணிகின்றது

இந்நாள் வரையில்

[05]

கதைசொல்லி

களைத்திருந்த ஓரு மாலையில்

எங்களின் கானுலா தொடங்கியது.

குழந்தைகள் துள்ளி நடந்தனர்.

பற்றைக்காடுகளின் ஊடான

ஒற்றையடிப்பாதை

காட்டிற்கு வழிகாட்டிச் சென்றது.

காட்டின் பச்சைமணம்

நாசியில் ஏற

ஐம்புலன்களும் சிலிர்த்தன.

காட்டின் இருள் விலகியிருந்தது.

நிலத்தை நிழல் மூடிய காட்டில்

ஒளித்துவாரங்களற்று எங்கும்

பொட்டல் வெளிகள்.

வெளியெங்கும்

ஒடிந்த இலைகள் குழைகள்

‘ஆபத்து

உள்நுழைய வேண்டாம்

அறிவிப்பு பலகைகள்

ஆங்காங்கே தொங்கின.

மரங்களை முறுக்கி

மொட்டையாக்கி இருந்தது புயல்.

கொப்பிழந்த மரங்கள்

மூளியாக தோற்றமளித்தன

ஊனமுற்ற மனிதரைப்போல்

விழிகளில் வலித்தது.

‘காற்று இத்தனை வலிமைமிக்கதா?

குழந்தைகள் ஆச்சரியத்துடன் கேட்கின்றனர்.

முறிபட்ட கிளைகளும்

பாறிச் சாய்ந்த மரங்களும்

அரியப்பட்டு துண்டாடப்பட்டு

அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

கோடரிகளுடனும்

மின்வாள்களுடனும் தென்பட்டனர்

சீருடை அணிந்த காட்டிலாகாவினர்.

காடு சீரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

எங்களைப் போலவே

பார்வையாளர் பலரும்

காட்டினைக்காண வந்திருந்தனர்.

குழந்தைகள் பெரியவர்கள்

அனைவரின் முகங்களிலும்

கவலை இருள் படர்ந்திருந்தது.

திரும்பும் வழியில்தான்

இன்னோர் அறிவிப்பு பலகை

கண்ணில்பட்டது

‘இந்தக்காடு

ஆயிரம் மரங்களை இழந்து விட்டது

வரும் வேனிற் காலத்தில்

பள்ளிக் குழந்தைகள் நடுகை செய்ய உள்ளனர்

என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

இவ்வண்ணம்

நகர்மன்றத் தலைவர்

அப்பா நாங்களும்

நடுகை செய்யப் போகிறோம்

குதூகலித்தனர் குழந்தைகள்.

தூறல் மழையும்

ஈரலித்த காற்றும் ஓயாதிருந்தது.

வேனிற் காலமும் தள்ளிப் போயிற்று

இப்படியாக இருந்து வரும் நாளொன்றில்..

[கோடை காலம் 2006 | பிரான்ஸ்]

நன்றி: அப்பால் தமிழ்

www.appaal-tamil.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.