Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக முதல்வர் கருணாநிதியால் டில்லியைப் பணிய வைக்க முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வர் கருணாநிதியால்

டில்லியைப் பணிய வைக்க முடியுமா?

நக்கீரன் (கனடா) -

தூங்கிக் கிடந்த தமிழகம் இப்போது பொங்கி எழுந்துள்ளது. ஏன் கொதிநிலை அடைந்துள்ளது என்று கூடச் சொல்லலாம்.

அரசியல்வாதிகள், திரையுலகக் கலைஞர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள், வணிகர்கள் என அனைவரும் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டப்பேரணி, கதவடைப்பு எனத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.

மேலவை உறுப்பினர் கனிமொழி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் கையளித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்ரோபர் 21 இல் சென்னையில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்தத் திருப்பங்கள் தமிழகத்தை தமிழீழ போராட்;டம் சார்பாக தள்ளிவிட்டுள்ளது. இதனை இந்திய மத்திய அரசு கொள்கை வகுப்பாளர்கள் எதிர்பார்த்திருப்பார்கள் எனக்கூற முடியாது.

வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவ முகாம் மீது கடந்த செப்ரெம்பர் மாதம் விடுதலைப் புலிகள் நடத்திய வான், தரைவழி தாக்குதலில் அங்கிருந்த இந்திய ராடர் சேதப்படுத்தப்பட்டது.

அதனை இயக்கிய இரண்டு இராணுவ பொறியியலாளர்கள் காயப்பட்டனர். அப்போதுதான் இந்தியா சிறிலங்காவுக்கு ஆயுதம் மட்டுமல்ல ஆட்களையும் கொடுத்து உதவிவருகிறது என்ற குட்டு வெளியுலகுக்குத் தெரியவந்தது.

கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் சிறிலங்கா இராணுவத்துக்கு உதவியாக மொத்தம் 265 இராணுவ தொழில்நுட்பவியலாளர்கள் இருப்பதாகச் சொன்னது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாகப் போயிற்று.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஒக்ரோபர் 2 ஆம் நாள் ஒரு உண்ணாநோன்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது.

தமிழீழத்தில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள், இடம்பெயர்ந்த மக்களின் அவலங்கள் ஆகியவற்றை மட்டும் அல்லாமல் இந்தியாவின் இரட்டை வேடத்தையும் உண்ணாநோன்புப் போராட்டம் கலைக்க உதவியது. தமிழ் உணர்வு கரைபுரண்டு ஓடியது.

எங்கே தானும் தனது கட்சியும் தனிமைப்படுத்தப்பட்டு விடலாம் என்று அஞ்சிய முதல்வர் கருணாநிதி ஒக்ரோபர் 14 ஆம் நாள் அனைத்து கட்சிக்கூட்டத்தைக் கூட்டினார்.

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் 'இலங்கையில் தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த சிறிலங்காவை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் மத்திய அரசு, சிறிலங்கா அரசுக்கு பக்கத்து நாடு என்ற முறையில் நல்லெண்ண அடிப்படையில் வழங்கும் ஆயுத உதவிகள், இனப் படுகொலையைத் தீவிரப்படுத்தி, தமிழர்களை அழிக்கவே சிறிலங்கா அரசால் பயன்படுத்தப்படுவதால் அவற்றை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும். அங்கு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும். இது தொடர்பாக இரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பதவியை விட்டு விலகுவது" என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்து கட்சிக்கூட்டத்தில் அ.தி.மு.க., ம.தி.மு.க., பாரதிய ஜனதா மற்றும் தே.மு.தி.க. கலந்து கொள்ளவில்லை. இது அனைத்து கட்சிக்கூட்டத்துக்கு ஒரு பின்னடைவாகும். அதைக் குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி 'என்னுடைய பிரச்சினையில் அவர்களுக்குள்ள அதிருப்தியின் காரணமாகத்தான் அவர்கள் வரவில்லையே தவிர, இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் அவர்களை சிங்கள வெறியர்களுக்கு களப்பலியாக ஆக்கக்கூடாது, அவர்கள் சிங்கள இராணுவத்திற்கு பலியாகி மாண்டு மடியக்கூடாது என்பதில் எல்லோரையும் போலவே ஒத்த கருத்து உடையவர்கள்தான் என்றாலும் கூட, இன்று வராத காரணத்தால் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று சிங்கள வெறியர்கள் நினைத்து விடக்கூடாது. இந்த கூட்டத்தின் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்ட அந்த மறுப்புக் கருத்துகள் அவர்கள் காதுகளிலே விழுமேயானால் - இது சிங்கள வெறியர்களுக்கு ஒரு ஊக்கமாக, ஆக்கமாக அமைந்து விடக்கூடாது. அமைய விடவும் மாட்டோம்" என்றார்.

முதல்வர் அஞ்சியது போலவே சிங்கள ஆட்சியாளர் தமிழக கட்சிக்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமையின்மையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.

எதிர்பார்த்தது போலவே தமிழக முதல்வர் கூட்டிய அனைத்து கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிரான குரல் சிறிலங்கா ஆளும் வட்டாரத்தில் இருந்து கிளம்பியுள்ளது.

ஆட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் பிரசாத்தை அலரி மாளிகைக்கு அழைத்து இரண்டு மணி நேரம் பேசியதாகச் செய்திகள் தெரிவித்தன. ஒரு கட்டத்தில் உரத்த குரலில் மகிந்த ராஜபக்ச பேசியதாகத் தெரிகிறது.

'இலங்கையில் தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது, தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல. 2006 இல் கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதிகளைத் தோற்கடித்து அங்கு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், வடக்கிலும் தமிழ் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தீவிரவாதிகள் விரட்டி அடிக்கப்படுவர்" என்று சிறிலங்கா வெளியுறவுச் செயலர் பாலித கோகன்ன கடந்த புதன்கிழமை தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இன்னும் பல படி மேலே சென்று 'தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு அமைவாக இங்கு முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்குத் தாம் தயாராகவில்லை" எனத் தெரிவித்தார். இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையீடு செய்யும் எனத் தாம் கருதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

'தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை, முக்கியமாக இந்தியாவில் அரசியல் அடிப்படையில் அந்நாட்டு அரசுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தமாகும்;. அரசின் உறுதித்தன்மை தொடர்பாக ஏற்பட்டுள்ள அழுத்தமாகும்.

எனினும் தமிழ்நாடும் இரண்டாகப் பிரிந்துள்ளது, தமிழ்நாட்டில் ஜெயலலிதா அணியும், வைகோ அணியும் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.

'இதேவேளை, கருணாநிதியும் வேறு சில தரப்பினரும் இந்திய அரசாங்கத்திற்கு ஏதோ வகையான அழுத்தத்தைக் கொடுத்துள்ளனர்.

எனினும், இந்திய அரசாங்கமும், எமது அரசாங்கமும் எப்போதுமே மிகுந்த புரிந்துணர்வின் அடிப்படையிலேயே செயற்பட்டு வந்துள்ளன. எமது அரச தலைவர் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது, அரசியல் தீர்வு காண்பது என்ற இரு விடயங்கள் தொடர்பாக மிகுந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றார்.

இந்தியாவும் இது விடயத்தில் விளங்கிக்கொண்டுள்ளது. அந்த வகையில் இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் எமது நாட்டு உள்விவகாரத்தில் தலையீடு செய்யும் என நான் கருதவில்லை. அந்த வகையில் நாம் மிகுந்த புரிந்துணர்வோடு இந்தியாவில் அரசியல் உறுதியற்ற நிலை ஏற்படாத வகையில் செயற்படும் அதேவேளை, பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அதே விதத்திலேயே முன்னெடுப்பதற்காக இந்தியாவின் ஆதரவை வேண்டி நிற்பதுடன், இந்தியாவில் இது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது விடயத்தில் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கும் அரவு தயாராகவுள்ளது.

'அந்த வகையில் இது இரண்டு அரசுகளுக்கு இடையிலுள்ள விடயமேயன்றி தமிழ்நாட்டிலுள்ள பிரச்சினைக்கு மத்தியில் தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு அமைவாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நாம் தயாராகவில்லை.

எனினும், விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கீழே வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக இந்த அரசாங்கம் அதன் உதவிகள் அனைத்தையும் இந்திய அரசினால் வழங்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கத்தை எந்த விதத்திலும் ஒரு இக்கட்டு நிலைக்கு உட்படுத்த நாம் தயாராகவில்லை" என்றார்.

அமைச்சரின் பேச்சு எதனைக் காட்டுகிறது? இந்தியாவின் நிலைப்பாடு சிங்கள சிறிலங்கா சார்பாகவும் தமிழீழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகவும் இருந்து வந்துள்ளதைக் காட்டுகிறது.

இந்தியா இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் இராணுவத் தீர்வு தீர்வாகாது என்று மேலுக்குச் சொன்னாலும் உள்ளுர சிறிலங்காவின் இராணுவத் தீர்வுக்கு பச்சைக்கொடி காட்டி வருகிறது.

சிறிலங்கா இராணுவத்துக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளித்து வருகிறது. குறைந்த வட்டியில் கடன் உதவி அளிக்கிறது. சம்பூரில் (கிழக்கு மாகாணம்) அனல் உலை நிறுவுகிறது. இவை காரணமுhகவே சிறிலங்கா ஒருதலைப்பட்சமாக சமாதான உடன்பாட்டை கிழித்தெறிந்த போது இந்தியா மௌனம் காத்தது. இந்திய - சிறிலங்கா உடன்பாட்டை மீறி வடக்கு - கிழக்கு இணைப்பு துண்டிக்கப்பட்ட போது இந்தியா மௌனம் சாதித்தது. சிறிலங்காவின் மிகையொலி போர் விமானங்கள் குண்டுவீசி பொதுமக்களைக் கொல்லும்போது இந்தியா வாய்மூடிக் கிடந்தது.

தமிழக அனைத்து கட்சிக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புதன்கிழமை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங் 'இலங்கையில் தற்போது நிலவும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்துள்ளோம்;. அது எமக்குக் கவலை தருகிறது. இதில் இராணுவத்தின் மூலம் தீர்வு காண முடியாது பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியும் என்பதை சிறிலங்கா அரசிடம் நாம் கேட்டுக்கொள்ள முடியும். இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பு அளித்து பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும். அதே சமயம் தமிழ் சிறுபான்மை மக்களின் மனித உரிமையும் மதிக்கப்பட வேண்டும்; மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும். இந்த கருத்தை நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மூலமாக சிறிலங்கா துணைத் தூதுவர் வழியாக சிறிலங்கா அரசுக்கு கூறப்பட்டது. இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் சிறிலங்காவிடம் தெரிவித்துள்ளோம்" எனக் கூறினார்.

அதே சமயம் இலங்கையில் நடக்கும் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதில் வரையறைகள் உள்ளன என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

மத்தியில் இருப்பது இந்திரா காங்கிரஸ் ஆட்சியல்ல. அது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. அதில் திமுக, பாமக இருக்கின்றன. இருந்தும் மத்திய ஆட்சி காங்கிரஸ் ஆட்சி என்றே அழைக்கப்படுகிறது. அந்தக் கட்சியின் சார்பில் பேசவல்லவர்கள் அனைத்துக்கட்சி தீர்மானம் பற்றிக் தெரிவித்திருக்கும் கருத்து ஊன்றிக் கவனிக்கத்தக்கது.

'இலங்கைப் பிரச்சினை அதன் உள்நாட்டு விவகாரம். இறையாண்மை கொண்ட அடுத்த நாடுகள் குறித்து கோரிக்கை வைப்பவர்கள், இந்தியாவின் இறையாண்மை என்பது நமது எல்லையுடன் முடிவடைகிறது என்பதை அறிய வேண்டும். அடுத்த நாட்டு உள்விவகாரத்தில் இந்திய அரசு தலையிட முடியாது. அடுத்த நாட்டின் உறவுகள் மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம். அடுத்த நாடுகளில் நடக்கும் வன்முறைகளைக் கண்டனம் செய்யும் போது, மத்திய அரசு இதைச் செய்யவேண்டும் என்று (தமிழ்நாடு அரசு) கூற முடியாது என்று கருதுகிறேன்" எனக் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறினார்.

'இலங்கைப் பிரச்சினையால் மத்திய அரசுக்கு எவ்வித சிக்கலும் இல்லை" என காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான மணீஸ் திவாரி கூறினார். இதன் பொருள் சோனியா முதல்வர் கருணாநிதிக்குப் புறங்கை காட்டுகிறார் என்பதுதான்.

இதற்கிடையில் 'இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறேன் அவர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கையில் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும்" என்று அறிக்கைவிட்ட ஜெயலலிதா இப்போது இராகத்தை மாற்றிப் பாடுகிறார்.

'இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று கோருவதன் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார்" என ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையில் இப்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கையில் இப்போது நடப்பது விடுதலைப் புலிகள் எனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இதில் அங்கு வாழும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவிடாமல் அவர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன. இது உடனே நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துச் செல்ல விடுதலைப் புலிகள் தடை செய்யக்கூடாது என்று விடுதலைப் புலி நண்பர்கள் மூலம் கருணாநிதி வலியுறுத்தி இருக்கலாம்."

ஜெயலலிதாவின் இந்தக் கருத்து துக்ளக் சோ, இந்து இராம், இந்து மாலினி பார்த்தசாரதி, அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சுவாமி போன்றோரது கருத்தாகும்.

இவர்கள் தாங்கள் சொல்வதும் எழுதுவதும் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தக் கருத்து என்ற தோற்றத்தைக் கொடுப்பவர்கள். இவர்கள் கையில் தூக்கும் முதல் ஆயுதம் ராஜீவ் கொலை ஆகும்.

மற்றது தமிழீழம் தனிநாடானால் தமிழ்நாட்டிலும் பிரிவினை கேட்போர் பலம்பெற்று தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரித்து விடுவர். பின்னர் தமிழகத்தையும் தமிழீழத்தையும் சேர்த்து ஒரு அகண்ட தமிழகத்தை பிரபாகரன் உருவாக்கிவிடுவார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத இந்து ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி 'இந்து" ஏட்டில் (ஒக்ரோபர் 14) எழுதிய கட்டுரையில் இந்த இரண்டு காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டுதலால் தான் - தமிழ்நாட்டில், தமிழீழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடக்கின்றன என்றும் இப்படி தூண்டிவிடும் சக்திகள் ஆபத்தானவை என்றும் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் 51 விழுக்காட்டினர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளதை மாலினி பார்த்தசாரதி கண்டுகொள்ளவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்று பேசி வந்த இந்த பார்ப்பனக் கூட்டம் இப்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வீசும் அலையைக் கண்டு அரண்டு போனதில் வியப்பில்லை. ஆனந்த விகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ஏடுகள் நடத்திய கருத்துக்கணிப்புக்குப் பின்னரும் துக்ளக் சோவும் இந்து இராமும் இந்து மாலினியும் விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்றே வாதாடுகிறார்கள்.

அனைத்து கட்சிக்கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை காங்கிரஸ் அரசு மதித்து நடக்கப் போவதில்லை. நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (இதில் 10 பேர் காங்கிரஸ்) பதவி விலகினாலும் மத்திய அரசு உடனடியாகக் கவிழ வாய்ப்பில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி தனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் எண்பித்துக் காட்டுமாறு ஆட்சித்தலைவரலால் கேட்கப்படலாம். பொதுத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே எஞ்சியிருக்கின்றன.

இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களின் (South Block) பெரும்பாலானோர் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்கள். இதில் எம்.கே.நாராயணன் ஒருவர். இந்திய அரசியலில் அவர்களது குடுமிப்பிடி தொடருமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்ன நடந்தாலும் தமிழக அரசியல் முன்னர் போல் இனி இருக்கப்வோவதில்லை.

http://www.tamilnaatham.com/articles/2008/...an_20081018.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.