Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !

Featured Replies

அன்பார்ந்த நண்பர்களே,

ஐ.டி துறையின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அது அமெரிக்க ஏகாதிபத்திய நலனோடு பின்னப்பட்டிருக்கிறது என்பதை விளக்கியும், புரியவைக்கவும் வினவில் பல கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இதை பலர் பொதுவில் புரிந்து கொண்டாலும் ஐ.டி துறையில் இருக்கும் நண்பர்கள் பிரச்சினையின் பாரிய தன்மையை பொதுவில் இல்லையென்றே கருதுகிறார்கள். எமக்கு வந்த பின்னூட்டங்களிலிருந்து இதை உணர முடிகிறது.

தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களிலிருந்து ஆட்குறைப்பும், சம்பளக் குறைப்பும், இப்போதுதான் நிகழ்கிறது என்றால் இந்த போக்கு உற்பத்தி சார்ந்த தொழில்துறைகளுக்கு முன்பே நடந்து வருகிறது. பின்னி ஆலை, ஸ்டாண்டர்டு மோட்டார் ஆலை போன்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஓரளவுக்கு நடுத்தர வர்க்க ஊதியம் வாங்கி வந்த பல நூறு தொழிலாளர்கள் இன்று தமது வாழ்க்கைக்காக உதிரி வேலை செய்து போராடி வருகிறார்கள். இவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு. இப்போது அமெரிக்க பின்னடைவு காரணமாக இந்தியாவின் தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பும், கதவடைப்பும் நடந்து வருகிறது.ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அதிக கார்கள் ஏற்றுமதி செய்து வந்த ஹுண்டாய் நிறுவனமே பாதி நாட்களுக்கு மட்டும் இயங்கி வருகிறது என்றால் மற்ற தொழிற்சாலைகளின் நிலைமையை புரிந்து கொள்ளலாம்.

தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் உற்பத்தி சார்ந்த தொழிலாளர்களின் ஊதியத்தை விட பலமடங்கு அதிகம் பெறுகிறார்கள் என்பதும் அதற்கேற்றபடி அவர்களது வாழ்க்கைத்தரம் மாறியிருப்பதும் எவரும் மறுக்க முடியாத ஒன்று. இருப்பினும் அமெரிக்காவோடு பிணைக்கப்பட்டிருக்கும் அவர்களது விதி என்றுமே கழுத்திற்கு மேல் தொங்கக்கூடிய கத்தி போல அபாயகரமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. சுருங்கக்கூறின் அவர்களது வாழ்க்கை ஓரிரவில் தலைகீழாக மாறலாம். ஆடம்பரமும், நுகரவுக் கலாச்சாரமும் துறந்தே தீரவேண்டுமெனவும் நிலைமை வரலாம்.அப்படி வந்து விட்டது என்பதைத்தான் கீழ்க்கண்ட உண்மைக்கதைகள் எடுத்தியம்புகின்றன.இது மேல்தட்டு நடுத்தரவர்க்கத்தின் சோகம் என்றாலும் அவர்களையும் ஒரு தொழிலாளியின் நிலைமைக்கு காலம் இறக்கியிருக்கிறது.பதிவர் கிறுக்குப்பையன் தளத்திலுருந்து இந்தக் கதைகளின் சில பகுதிகளை இங்கே பதிவு செய்கிறோம்.நாட்டு நடப்பும், அரசியலும் கிஞ்சித்தும் அறியாத இந்த அப்பாவிகளின் கதைகள் பொதுவில் எவரையும் சோகம் கொள்ளவைக்கும். சோகம் எந்த அளவுக்கு இதயத்தை ஊடுறுகிறோதோ அந்த அளவு அரசியல் ரீதியாக அதைப் புரிந்து கொள்வதும் அதிலிருந்து மீள்வதும் சாத்தியம்தான். முதலில் கதைகளைப்படியுங்கள். தீர்வை கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.

சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்ட அதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலைய வைத்திருக்கிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடி அளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. 'விப்ரோ' நிறுவனத்துக்குக் கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில் வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்கு முன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி!

'கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில் இறங்கி விட்டன. விரைவில் இந்தியா முழுக்க இருக்கிற ஐ.டி நிறுவனங்கள் பாதிக்கப்படும்!' என்கிற அதிர்ச்சித் தகவல் நம் காதுகளை வந்தடைந்தது! விஷயத்தின் தீவிரம் நம்மை உலுக்க, பெங்களூருவின் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கிற.. பார்த்த.. தமிழர்களை சந்தித்துப் பேசினோம். அனைவருமே புகைப்படத்துக்கு மறுத்துத்தான் பேசி னார்கள். இல்லை.. இல்லை.. தங்கள் மனக் குமுறல்களைக் கொட்டினார்கள்.

''நான் சென்னையிலிருந்து பெங்களூரு வந்து ஏழு வருஷமாச்சு.. என்னோட ஆரம்ப சம்பளம் 20,000 ரூபா. கடைசியா எனக்கு கம்பெனி கொடுத்த புரமோஷன்ல அறுபதாயிரம் ரூபாயா ஆகியிருந்தது என் சம்பளம்..'' என்கிற மீரா கிருஷ்ணனுக்கு இன்றைக்கு வேலை இல்லை. ''வீட்டு வாடகை, சாப்பாடு, போக, வர கார் வசதினு எல்லாமே கம்பெனி கொடுத்துடும். வாங்குற சம்பளத்துல எனக்குனு ஒரு செலவு கிடையாது. மூணு வருஷத்துக்கு முன்னால கல்யாணமாகி, குழந்தை பிறந்து சந்தோஷமா போய்ட்டு இருந்தது வாழ்க்கை.. திடீர்னு ஒரு நாள் எங்க எல்லாரையும் கூப்பிட்டு 'இனிமே கம்பெனியை நடத்த முடியாது'னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான். மறுநாள் என்னை பிக்கப் பண்ண கார் வரல.. வெளியில வேலை தேடுறேன். கிடைக்கல. என்னோட இத்தனை வருஷ அனுபவமும் சுத்த வேஸ்ட்ங்கிறது இப்போதான் தெரியுது'' - கட்டுப்படுத்தவே முடியாமல் கேவுகிறார் மீரா.

வேலையிலிருந்து முதலில் தூக்குவது திருமணமான பெண்களைத்தானாம்! அடுத்து, திருமணமான ஆண்களையாம்! அதுபற்றிச் சொல்லி வருந்தினார் தர்மபுரியிலிருந்து இங்கு வந்து வேலை செய்கிற கல்பனா. ''நூறு பேர் இருந்த இடத்துல இருபது, முப்பது பேரை வச்சு வேலை வாங்கியாகணும். அப்படின்னா, அவங்க ராத்திரி, பகல் பார்க்காம வேலை செய்றவங்களா இருக்கணும். கல்யாணமான பெண்கள்னா, குறிப்பிட்ட நேரத்துக்குள்ள வீட்டுக்குப் போறதுலயே நோக்கமா இருப்பாங்க. குடும்பம், குழந்தை, பிரசவம்னு லீவ் எடுப்பாங்க. அதனால அவங்களைத்தான் முதல்ல வெளியேத்துறாங்க.

கல்யாணமான ஆண்களும்கூட பேச்சுலர்ஸ் அளவுக்கு ஆபீஸ்ல நேரம் செலவழிக்க முடியாது இல்லையா? அதனால, கொஞ்சம்கூட ஈவு, இரக்கமே இல்லாம, 'ஸ்டார் பர்ஃபார்மரா' ('பிரமாதமாக வேலை செய்கிறவர்' என்று நிறுவனமே ஸ்டார் அந்தஸ்து கொடுக்குமாம்) இருந்தாக்கூட தூக்கிடுறாங்க. எங்க கம்பெனியில போன நவம்பர் மாசம், 30 வயசைத் தாண்டினவங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டாங்க.. நாங்களும் பயந்துட்டுத்தான் இருக்கோம்'' என்றவர், ஒரு கண்ணீர்க் கதையைச் சொன்னார்..

''எங்க டீம் லீடர் அவர். பிரமாதமா வேலை செய்வார். போன செப்டம்பர்லதான் அவருக்குக் கல்யாணம் ஆச்சு. அவர் மனைவி இப்போ கர்ப்பமா இருக்காங்க. அவருக்கும் வேலை போய்டுச்சு. போன வாரம் தற்செயலா அவரோட வீட்டுக்குப் போயிருந்தேன். ஐயோ! அந்தக் கொடுமையை என்னனு சொல்லுவேன்! கையில இருந்த காசு மொத்தமும் செலவழிஞ்சு போக, மூணு நாள் பட்டினியா கெடந்திருக்காங்க ரெண்டு பேரும். 'பேசாம செத்துப் போய்டலாம்போல இருக்கு'னு அவர் குலுங்கிக் குலுங்கி அழ, என்னால தாங்கவே முடியல. ஆபீஸ்ல ஒரு பாஸா மட்டும்தான் அவரை நான் பார்த்திருக்கேன். டீம்லயே 'ஜூனியர் மோஸ்ட்' ஆன என்கிட்ட அவர் அப்படி அழுதது.. ச்சே! இந்த உலகம்.. பணம்னு எல்லாத்து மேலயும் வெறுப்பு வந்துடுச்சு'' என்கிறார் கண்ணீர் மல்க! கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக வெளிவரும் ஒவ்வொரு கதையுமே இதயத்தை நொறுக்குகிறது. ''எதுவா இருந்தாலும் இ-மெயில்தான். இனிமே எல்லாரும் பத்து மணி நேரம் கண்டிப்பா வேலை பார்க்கணும். கார், சாப்பாடு வசதில்லாம் கிடையாது'ன்னு ஒரு இ-மெயில் அனுப்பிட்டா மறுநாளே கையில டிபன் பாக்ஸோட டவுன் பஸ் பிடிச்சு ஆபீஸ் வந்துடணும். அப்படித்தான் வந்துக்கிட்டு இருக்கோம்'' என்றார் ரேவதி.

பெங்களூருவின் பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் மாதம் 80,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த பிரகாசம், இன்று 7,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார்.. ''ஐ.டி. துறையில சம்பளம் ஜாஸ்தினு வெளியில இருக்குறவங்களுக்குத் தோணும். ஆனா, அதுக்கேத்த கமிட்மென்ட்ஸ் எங்களுக்கு இருக்கும். காருக்கு மட்டும் மாசம் இருபதாயிரம் ரூபா இ.எம்.ஐ கட்டினேன். வேலை போனதும் காரை வித்துட்டேன். ஆனாலும் கார் கடன் இன்னும் முழுசா அடையல. அதுதவிர, கிரெடிட் கார்டு கடன் இருக்கு. ஃபர்னிச்சர், மைக்ரோவேவ் அவன், டிஜிட்டல் கேமரா, ஹோம் தியேட்டர்னு கண்ட பொருளையும் வாங்கிக் குவிச்சிருக்கேன். இதையெல்லாம் வித்தா பைசாகூட தேறாது. தலைக்கு மேல கடனை வச்சுக்கிட்டு திண்டாடுறேன்..'' என்றவர் நிறுத்தி, ''என்னையும் என் மனைவியையும் விடுங்க. எப்படியோ போறோம். பீட்ஸாவும் பர்கருமா சாப்பிட்டுப் பழகின குழந்தைக்கு திடீர்னு தினம் தினம் ரசம் சாதம் போடுற கொடுமை எந்தத் தகப்பனுக்கும் வரவே கூடாதுங்க.. போன மாசம் முழுக்க ரெண்டு வேளை சாப்பாடுதான். கடனை அடைச்சாத்தான் நிம்மதி கிடைக்கும்!'' என்றார் கலங்கும் கண்களுடன்.

ஐ.டி. நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் பிரசாந்த் குமார், இந்த அவல நிலையின் காரணம் பற்றியும் ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியும் பேசினார்.. ''தொண்ணூறுகளின் இறுதியில் பெங்களூருவில் 600-க்கும் மேற்பட்ட ஐ.டி. கம்பெனிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் சென்டர்கள், பி.பி.ஓ-க்கள் இருந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெங்களூருவைத் தேடி வந்து குடியேறினர் மக்கள். ஆனால், சமீபத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தொடர் சரிவின் காரணமாக, உலகெங்கும் ஐ.டி. கம்பெனிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பெங்களூருவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 8,500 பேர் வேலை இழந்துள்ளனர். சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு, சலுகைகள் குறைப்பும் இதனால்தான்.

சமீபத்தில் 'யுனைட்ஸ்' என்கிற தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை வழங்குவோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்க நேரிடும்' என்று அறிவித்துள்ளது. கவலை தரும் அறிக்கை இது'' என்றவர்,

''இருந்தாலும் '2009-ல் தகவல் தொழில் நுட்பத்துறை மீண்டும் கோலோச்சும்' என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருப்போம்'' என்றார். இரவிலும் வேலை செய்யும் இவர்களின் எதிர்காலத்துக்கு விடியல் வருமா?

இரக்கம் இல்லாத இ-மெயில்!

ஒரு ஐ.டி நிறுவனம் தன் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு இ-மெயிலில் இருந்த வரிகள் இவை.. 'வடை, அப்பளம், காய்கறி, பழங்களை உணவில் குறைத்தால் மாதம் 5 லட்ச ரூபாய் சேமிக்க முடியும். வருடத்துக்கு 60 லட்சம் ரூபாய் சேமிப்பு. அதனால், நாளை முதல் உணவில் இவை கிடையாது!'

''மறைமுக பாதிப்பு!''

''ஐ.டி துறையில் நேர்ந்திருக்கிற பாதிப்பு என்பது நேரடியானது. இது தவிர, மறைமுக பாதிப்புகளும் நிறைய இருக்கின்றன. ஐ.டி. நிறுவனங்களை நம்பி மாதத் தவணையில் கார் வாங்கி, ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் பல இளைஞர்களும். தவிர, ஜிம்கள், கேடரிங்குகள், ஹவுஸ் கீப்பிங்.. என்று பல வகையான தொழில்களும் ஐ.டி-யால் வளர்ந்தன. இன்று அவைதான் முதல் கட்ட பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. ஐ.டி. துறையினர் ஏற்றி விட்ட ரியல் எஸ்டேட் விலையும் வீட்டு வாடகையும் எப்போது கட்டுக்குள் வரும் என்பது தெரியவில்லை..'' என்று வருந்துகிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர்.

''கண்ணு முன்னால நிக்குது இ.எம்.ஐ..''

சமீபத்தில் சரிவைச் சந்தித்த 'சத்யம்' நிறுவனம் 'தன் ஊழியர்கள் யாரும் மீடியாக்களிடம் பேச அனுமதி கிடையாது' என்று இ-மெயில் அனுப்பி உள்ளது. இருந்தாலும், அந்த நிறுவன ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.. தங்கள் அடையாளங்களை மறைத்து அவர்கள் வெளிப்படுத்திய உண்மைகள் இங்கே..

'' 'சத்யம் கம்பெனியை இழுத்து மூடப் போறாங்க. அதுக்குள்ள எல்லாரும் வேற வேலை தேடிக்குங்க'னு சீனியர்ஸ் என்னை நாலு மாசம் முன்னவே எச்சரிச்சாங்க. அவங்களும் வேற கம்பெனிக்கு நல்ல சம்பளத்துக்குப் போயிட்டாங்க. ஆனா, அவங்க சொன்னதை நம்பாத நான் சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்.. இப்ப வேற கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டா, பிப்ரவரி வரைக்கும் ஆட்களை வேலைக்கு எடுக்கிறதில்லைனு சொல்லிட்டாங்க!'' ''வேலை இருக்கா.. இல்லையா.. ஜனவரி மாசச் சம்பளம் வருமா.. வராதா..னு எதுவுமே தெரியல. இதுல, தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் வாங்கினது.. ஊர்ல அப்பா, அம்மாவுக்கு வீடு கட்டிக் குடுத்தது..னு கட்ட வேண்டிய இ.எம்.ஐ.கள் கண்ணு முன்னாடியே நிக்குது. பிப்ரவரி ஒண்ணாம் தேதியை நினைச்சா இப்பவே பயமா இருக்கு!''

பின்னுரை

ஹுண்டாய் துணை நிறுவனமொன்றில் பணிபுரியும் தோழர் ஒருவரிடம் பேசும்போது அவர் நிறுவனத்தில் சில ஆயிரம் ரூபாய்களுக்கு பணிபுரியும் பொறியியல் பட்டதாரிகள் கூட எங்கே நம்மையும் பணி நீக்கம் செய்து விடுவார்களோ என்ற பீதியுடன் அற்ப விசயங்களைக்கூட அதி ஜாக்கிரதை உணர்வுடன் எச்சிரிக்கையாக பதட்டத்துடன் வேலை செய்வதாகக் கூறினார். இந்த நிலை இப்போது ஐ.டி துறையிலும் விஷம்போல பரவியுள்ளது. இதையெல்லாம் வைத்து முன்பு நாங்கள் சொன்ன விசயங்கள் இப்போது பலித்து வட்டதாக நாங்கள் மகிழ்ச்சி அடைவதாக நண்பர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளக் கூடாது. இந்த நாட்டின் தொழிலாளிக்கும், ஐ.டி துறை ஊழியர்களுக்கும் நடக்கும் அநீதி என்பது எங்களுக்கும் இழைக்கப்படும் துன்பம்தான் என்ற தோழமை உணர்வுடனே இதைப் பார்க்கிறோம்.சாரமாகச் சொன்னால் இது முதலாளித்துவப் பயங்கரவாதம் ஏழைநாடுகளின் மீது நடத்தும் போர். இந்தப் போரில் நாமும் ஆயுதங்களுடன் தயாராகி எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் எமது அவா.

அதற்காகத்தான் ஐ.டி ஊழியர்களுக்கு ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் தேவை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். வாங்கிய சம்பளத்தை சேமித்து, ஐ.எஸ்.ஓ தரக்கட்டுப்பாடு போன்ற விசயங்கள் மூலம் இந்த இடரை சமாளிக்கலாம் என்ற மூடநம்பிக்கை சில ஐ.டி ஊழியர்களிடன் இருக்கிறது. சத்யம் நிறுவனம் கூட இந்த சான்றிதழும் உலக கார்ப்பரேட் நிறுவன விருதும் பெற்றதும் என்பதிலிருந்து இதன் யோக்கியதையை புரிந்து கொள்ளலாம். நமக்குத் தேவை அரசியல் ரீதியான தெளிவும், ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் கொடுக்கும் "நாம்" என்ற பலமும்தான். இந்த தொழிற்சங்க முயற்சி ஆரம்பித்த உடனே ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கையில் பாலும், தேனும் ஓடும் என்று சொல்லவில்லை. ஆனால் சுயமரியாதையும், கேட்பார் கேள்வியின்றி ஆட்குறைப்பு செய்யும் முதலாளிகளின் திமிரை ஒடுக்கவும் முடியும்.அப்படி பல தொழிற்சாலைகளில் எமது தோழர்கள் சாதித்திருக்கிறார்கள்.

முக்கியமாக இந்த நம்பிக்கையை இணையத்தின் வாயிலாக மட்டும் உங்களுக்கு அளித்து விட முடியாது. அவற்றை நீங்கள் நேரில் காணவேண்டும்.அது நிச்சயம் உங்களுக்கு ஒரு நம்பிக்கையையும், போராட்ட குணத்தையும் அளிக்கும்.அதற்கு வரும் ஞாயிறு நடக்க இருக்கும் அம்பத்தூர் மாநாட்டிற்கு வருமாறு உரிமையுடன் அழைக்கிறோம். ஐ.டி துறை ஊழியர்களின் தொழிற்சங்க முயற்சிக்கு வினவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். நாங்கள் 21 ஆம் நூற்றாண்டின் கம்யூனிஸ்ட்டுகள். எங்களது தோழமை உங்களது சோர்வையும், அவநம்பிக்கையையும், சலிப்பையும், தோல்வி மனப்பான்மையையும் நிச்சயம் நீக்கி உங்களை புதிய மனிதனாக மாற்றிக் காட்டும். வாழ்வை இழப்பதற்கு நாம் ஒன்றும் அனாதைகளல்ல.தொள்கொடுக்க நாங்கள் இருக்கிறோம். வாருங்கள் புதிய உலகத்தை படைப்போம், முதலாளத்துவ பயங்கரவாதத்தை வேரறுப்போம்.

வினவு தளத்திலிருந்து: http://vinavu.wordpress.com/2009/01/22/itstories/

இதன் மறுமொழிகள் http://vinavu.wordpress.com/2009/01/22/itstories/#comments

தொடர்புடைய பதிவுகள்

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு !

CONFERENCE AGAINST CAPITALIST TERROR!

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

ராமலிங்க ராஜூ கோவிந்தா, கோவிந்தா

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

ஒரே இரவில் பலரது வாழ்க்கையை -- IT

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.