Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதம் கொன்று.... மனம் தின்று.... ஈழம் இன்று....ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது: விகடன்

Featured Replies

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

குண்டுகள் வீசப்படும்போது முதலில் பிணம் விழுகிறது. உயிரோடு பிழைப்பவரின் மனம் அடுத்ததாக விழுகிறது. ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது.

'கவனமாகக் காலை வையுங்கள். கண்ணி வெடிகள் இருக்கலாம்' என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது. 'பாதங்களைப் பார்த்து வையுங்கள்... பிணங்கள் தட்டுப்படலாம்' என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிணங்கள் பார்த்துப் பழகிய மனங்கள் இப்போது

அழுவதில்லை. 'கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்' என்பது ஆறுதல்!

'அரசியல் தீர்வு என்ன என்று சிலர் பேசுகிறார்கள், பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்குமா என்று பலர் கவலைப்படுகிறார்கள். அந்த மக்கள் உளவியல்ரீதியாகப் பெரும் பாதிப்பில் சிக்கி இருக்கிறார்களே... அதைப் பற்றி யார் பேசப் போவது?' என்று கண்ணீர் வார்த்தைகளால் கேட்கிறார் யாழ் மாவட்டப் பாதிரியார்களில் ஒருவரான ஜெபனேசன் அடிகள்.

ஒரு நாள் இரவு மின்சாரம் இல்லையென்றால், மறுநாள் வாழ்க்கையே வெறுக்கிறது. பால்காரர் வராவிட்டால், வேலைக்காரம்மா லீவு போட்டால், கேபிள் கட்டானால் இங்கே பலருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடுகிறது. சில கல் தொலைவில் இலட்சக்கணக்கான மக்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல், கிடந்து துடிக்கிறார்கள். குடியிருக்க வீடு இல்லை, உணவில்லை, மாற்று உடையில்லை, மருந்து இல்லை. எல்லா ஊருக்கும் எருமையில் வரும் எமன், ஈழத்தில் மட்டும் ஏரோபிளேன் ஏறி வந்து குண்டுகள் வீசுகிறான்.

உயிர் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்பதைத் தவிர, சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. ''81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இங்கு இருக்கிறார்கள்' என்று புள்ளிவிவரம் சொல்கிறார், முல்லைத் தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன். மாத்தளன் கடற்கரைப் பகுதிக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் வந்து இறங்கியபோது, 'எங்களக் காப்பாத்தச் சோறு போடுங்க', 'எம் புள்ளைகளைக் குணப்படுத்த மருந்து கொடுங்க' என்று மொழி தெரியாத மனிதர்களிடம் பிச்சை கேட்டு ஆணும் பெண்ணுமாகக் கதறிய கோலம் காணச் சகிக்காதது. குண்டடி பட்டுச் செத்தவர்கள் போக, பாம்புக் கடி, நாய்க் கடியால் இறந்தவர்களும் மலேரியா காய்ச்சலுக்கு மருந்து இல்லாமல் மறைந்த வர்களும் அதிகம்.

18 பேர் நான்கு நாட்களில் தொடர்ச்சியாகச் செத்து விழுக, விநோதமான வியாதி ஏதாவது பரவிஇருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிறது கொஞ்சம் அக்கறையுள்ள மருத்துவக் குழு. அவர்களால் காரணத்தை வெளியில் சொல்ல முடியவில்லை.

'உணவின்மை, ஊட்டச் சத்து இல்லாதது, நோய் எதிர்ப்புச் சக்தி இழந்தது என மூன்று காரணங்களால் நிறையப் பேர் தூங்கிய நிலையில் இறந்துகிடக்கிறார்கள்' என்கிறது மருத்துவர் குழு. 'பிள்ள சாப்பிட்டே மூணு நாள் ஆகியிருக்கும் போல இருக்கே' என்று கேட்கிறார்.

தூக்கி வந்த அம்மா, அமைதியாகத் தலை கவிழ்ந்து நிற்கிறார். துக்க மிகுதியில் அழுவதற்கு உடலில் கண்ணீர் மிச்சம் இல்லாததே அவரது மயான மௌனத்துக்குக் காரணம்.

பால் வளம் இழந்த மார்பின் காரணம் அறியுமா குழந்தை? சபேசன் சிந்து, சிவராசா சக்தி கணேசன் ஆகிய இரண்டு குழந்தைகள் பெயர் வரலாற்றில் இடம் பெறும். அம்மையிடம் பால் இல்லாமல் செத்த பிள்ளைகள். இனி, உலகில் வறுமைக்கு சோமாலியாவைச் சொல்ல வேண்டியதில்லை. நமது சொந்தங்களே இருக்கிறார்கள்.

தன் வளர்ப்பு மகனைத் தேடி, தயா தங்கராசா என்பவர் வன்னி மருத்துவமனைக்குப் போகிறார். அவர் சொல்லும் காட்சி... ''வைத்திய சாலைக்குள் அனைவரும் உறுப்புகளை இழந்தவர்களாக இருந்தார்கள். யாரையும் பார்க்க அவ்வளவாக அனுமதிக்கப்படவில்லை.

நோயாளிகளுக்குத் தங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாது. தங்களது வலியின் காரணமாகவும் கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவு முழுவதும் கத்திக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்தார்கள்.

இரண்டு கால்களையும் கைகளையும் இழந்த ஒரு கர்ப்பிணித் தாய், தாதியை அழைத்து தான் சாவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கதறிக்கொண்டு இருந்தாள். ஒரு தாய் வெறுமையுடன் உட்கார்ந்திருந்தாள். குண்டு விழுந்து அவள் ஓடத் தொடங்கியபோது அவளது குழந்தை கொல்லப்பட்டதாம்.

ஒரு மண்வெட்டியை எடுத்து மண்ணைத் தோண்டி குழந்தையைப் புதைக்கும் துணிவு அவளுக்கு இருந்திருக்கிறது. தனது குழந்தையின் உடல் காட்டு விலங்குகளால் உண்ணப்படுவதை அவள் விரும்பவில்லை. இதைச் சொல்லும்போது அவள் அழவில்லை. உளவியல் பிரச்னைக்கு அவள் உட்பட்டிருந்தாள் என்பது உறுதி!''

சாவைச் சட்டை பண்ணாமல்... ரத்தத்தை அலட்சியப்படுத்தி... சதைகள் பிய்ந்து தொங்கும்போது உணர்வில்லாமல் பார்த்து... குப்பைமேட்டைக் கொளுத்துவது போல மனித உடல்கள் எரிவதை வெறுமனே வேடிக்கை பார்க்க மக்கள் பழகிவிட்டால், அந்த மனம் என்னவாகும்?

குழந்தைகளுக்கு விருப்பமே விமானம் பார்ப்பதுதான். ஆனால், ஈழத்துக் குழந்தைக்கு அதுதான் எமன். 30 ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் இருந்து வாங்கி வரப்பட்ட விமானம்தான் குண்டு போடுவதைத் தமிழ்ப் பகுதிகளில் தொடங்கிவைத்தது. அதனுடைய கிர் ஒலியைக் கேட்டாலே, மக்களுக்குக் கிறுக்குப் பிடித்தது. அதிலிருந்து தப்பிக்கப் பதுங்கு குழிகள் வெட்டி, அதில் வாழப் பழகினார்கள். வெளிச்சத்தைப் பார்த்துக் கண் கூசும் அளவுக்குப் பலரது வாழ்க்கை பதுங்கு குழிக்குள் கழிந்தன. கடந்த ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் டன் குண்டுகள் விமானங்களின் மூலம் போடப்பட்டுள்ளதாக சிங்கள ராணுவம் பெருமையாக அறிவித்துள்ளது.

சமீபகாலமாகப் பயன்படுத்தப்படும் பீரங்கிக் குண்டுகள் ஏற்படுத்தும் சத்தம் காது சவ்வு மற்றும் தொப்புள் ஆகிய இரண்டையும் கிழிக்கிறதாம். இதனால், காது வழியாக ரத்தம் வடிந்த நிலையில் வாழ்வோரும் தொப்புள் வெடித்து வேறு எந்தக் காயமும் இல்லாமல் மரணிப்போரும் அதிகமாகி வருகிறார்களாம்.

கொடூரங்களைச் செய்வதைவிட அதைப் பரப்புவதையும் சரியாகவே சிங்கள ராணுவம் செய்து வருவதாகச் சொல்கிறார்கள். மக்களை மனரீதியாகப் பலவீனப்படுத்துவதில் ராணுவம் இறங்கி உள்ளது. பாலியல் வல்லுறவுக் கதைகளை ராணுவம் இதனால்தான் அதிகம் பரப்பி வருகிறது. 100 பேர் சாவு, 200 பேர் சாவு என்ற தகவல்களைப் பரப்புவதை 'உளவியல் யுத்தம்' என்கிறார்கள். அதனால்தான் கடுமையான போர் ஆரம்பமாவதற்கு முன், கடந்த ஜூலை மாதம் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழரை அடிமைப்படுத்த முயலும் எதிரி தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரைத் தொடுத்துள்ளான். வதந்திகளைப் பரப்பி மனங்களைக் குழப்பி வருகிறான்' என்று எச்சரித்தது.

கற்பழிக்கப்படும் பெண்களது உடல்களைப் பொது இடங்களில் போட்டுவிட்டுப் போவது அப்படித்தான். பெண்களையும் சிறுவர்களையும் இது அதிகமாகப் பாதிக்கிறது. இழப்புகள், சோகங்கள், இடப் பெயர்வுகள் பல மாதங்களாகத் தொடர்வதால் தலைவலி, உடல் சோர்வு, அதிகக் கோபம், உணவில் விருப்பமின்மை, கவலை, சோகம், அச்சம், வேதனை என அத்தனை உளவியல் பாதிப்புகளும் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.

இந்த மனித மனங்களை மீண்டும் தட்டியெழுப்ப முடியுமா என்று மனநல மருத்துவர் ருத்ரனைக் கேட்டோம். ''நம் வீட்டில் ஒரு சாவு விழுந்தால், அது அதிகபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் நம் மனச் சிறையில் உட்கார்ந்து கிடக்கும். அந்தச் சோகம் மெள்ள மெள்ள மறைந்து, நாம் அடுத்த வேலைக்குத் தாவிவிடுவோம். நம் வீட்டிலேயே அடுத்தடுத்து மரணங்கள் சம்பவித்தால், மறுபடி மறுபடி நமது சோகம் தட்டியெழுப்பப்படும். அது மாதிரிதான், நிமிஷத்துக்கு நிமிஷம் நாள்கணக்கில், மாதக்கணக்கில் மரணங்கள் நடந்தால், அழுவதற்கு நம்மிடம் கண்ணீர் இல்லை. பழகிப்போகும். அப்படித்தான் மரணத்தைப் பார்த்து அம்மக்கள் மனசு பழகிப் போய்விட்டது.

அழுகை என்பது மனதின் தற்காப்பு. சொல்லிப் பயனில்லாததை அழுவதன் மூலமாக அறிவிக்கிறோம். அது எப்போதாவதுதான் சாத்தியம். தொடர்ச்சியாக அழ முடியாது. இவ்வளவு பேர் செத்து விழும்போதும் அம் மக்களால் அழ முடியாததற்குக் காரணம், அதைப் பார்த்து அவர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதால்தான்.

குண்டு வீச்சையும், பீரங்கி வருகையையும் முதல் தடவை பார்க்கும் தலைமுறையாக இருந்தால், அவர்களுக்குப் பதற்றம் இருந்திருக்கும். 30 ஆண்டுகளாகப் பார்த்துச் சலித்துப்போன சத்தம். சென்னையில் குண்டு விழுகிறது என்றால், ஏற்படும் பதற்றம், அச்சம் அந்த மக்கள் மனதில் இல்லை. ஏனென்றால், அச்சத்தை நித்தமும் எதிர்பார்த்துதான் அவர்களது வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. 'நாளை நலமடைவோம்' என்று அவர்கள் நினைப்பதில்லை. 'இன்றிருந்ததைவிட நாளை இன்னும் மோசமாகும்' என்ற எதிர்பார்ப்புடனே மறுநாளை எதிர்கொள்கிறார்கள்.

பதற்றம் என்ற வார்த்தைதான் உளவியலில் ஆரம்பமான அளவு. ஆனால், அவர்களது மனதில் பதற்றம் அப்படியே பதிந்துபோய்விட்டது. போர்ச் சூழலில் கஷ்டப்படும் மக்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஏனென்றால், அவர்களது பயமே மரணத்தைப் பார்த்துத்தான். அதனால், தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டார்கள். ஆபத்து, மரணம், துயரம் ஆகிய மூன்றையும் எதிர்பார்த்து வாழும் வாழ்க்கைதான் ஈழத் தமிழருடையது. அதனால்தான் அவர்கள் அழுவதில்லை. சோகமாவதில்லை. நிம்மதியற்ற அரசியல் சூழ்நிலை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாழும் மக்களுக்கு இதுதான் தலைவிதி.

ஒருவனின் வாழ்க்கையை அவனது அனுபவம்தான் தீர்மானிக்கிறது. இவர்களுக்கு அனுபவமே அச்சம் கலந்ததாக இருக்கிறது. நிம்மதியான கடந்த காலம் இல்லாததால் நம்பிக்கையான எதிர்காலத்தைக் கற்பனை செய்ய முடியவில்லை. வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதைச் சொல்ல இயலவில்லை.

குழந்தைகள்கூட தொடர்ந்து இந்தச் சம்பவங்களைப் பார்த்துப் பழகிவிட்டார்கள். அவர்களுக்கு உடல் காயங்களால் வலி இருக்கலாம். அதிர்ச்சி குறைந்து போயிருக்கும். தனது தாய்-தகப்பனைத்தான் குழந்தைகள் தனது பாதுகாப்பாக நினைக்கும்.

ஆனால், இலங்கையில் யார் யார்கூடவோ ஓடி, வாழ்ந்து பழகியதால் சமூகத்தைத் தனது பாதுகாப்பாக நினைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தை இழந்த குழந்தைக்குச் சமூகமே குடும்பமாக ஆகும். படிப்பை இழந்த பிள்ளைகள் மனதில் ஏற்பட்ட வெறுமைக்கு அளவு இல்லை. இது இரண்டு தலைமுறைகளைப் பாதிக்கும். பணத்தால் வரும் தைரியம் கொஞ்ச நாள்தான். கல்வியால் வரும் தைரியம் ஆயுள் வரை இருக்கும். எனவே தைரியமற்ற, எந்தச் சிந்தனையுமற்ற, கோழையான, வெறுமையான மனிதர்களாக்கும் கொடுமையே அங்கு நிகழ்கிறது.

அங்கு ஓர் அரசியல் தீர்வு வரும் என்று வைத்துக்கொண்டாலும், போருக்குப் பின் அந்த மக்களை மறுபடியும் உடல், மன ஆரோக்கியத்துடன் கட்டமைக்கிற பணி மிகப் பெரிய சவால்!'' என்கிறார் ருத்ரன்.

சூனியம் ஓர் இனத்தைச் சூழ்வதும் அதன் சொந்தங்கள் சும்மா இருப்பதுமான சூழல் வேறு இனத்தில் நடக்காது. நாற்காலி யுத்தத்தில் தமிழகம் மும்முரமாகிவிட்டது. ஆனால், ஈழ மக்கள் வாழ்வோ உளவியல் யுத்தத்தில் உயிர்விட்டுக்கொண்டு இருக்கிறது!

படங்களுடன் பார்க்க........

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.