Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களை காக்க உணர்வுகளை வெளிப்படுத்தினாலே தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயுமா? - கொளத்தூர் மணி ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களை காக்க உணர்வுகளை வெளிப்படுத்தினாலே தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயுமா? - கொளத்தூர் மணி ஆவேசம்

இராணுவ வாகனங்களை - தோழர்கள் ஏன் மறிக்க முயன்றார்கள் என்ற உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், கடுமையான குற்றமாகக் கருதி தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தும் - தமிழக அரசின் பார்வையைக் கண்டிக்கிறோம் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். கோவையில் ஜூன் 8 ஆம் தேதி நடந்த கண்ட கூட்டத்தில் அவரது உரை:

“இந்தக் கூட்டத்தில் நாம் பெரிதும் விவாதிக்க இருக்கும் செய்தி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யுங்கள்; வழக்கை திரும்பப் பெறுங்கள் என்பதை வலியுறுத்துவதற்கு அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்பதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளத் துடிப்பவர்கள்தான். எங்களுடைய பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கூறியது போல தோழர் இராமகிருட்டிணனுக்கு இந்த வழக்கு ஒன்றும் புதிது அல்ல. 25 வயது இளைஞனாக இருந்த போதே மிசா சிறையில் ஓராண்டுக்கு மேல் இருந்தவர். அதற்குப் பிறகு மூன்றரை ஆண்டுகள் தடா வழக்கில் ராஜீவ் கொலையையொட்டி சிறையில் இருந்தவர். மறுமலர்ச்சி தி.மு.க.வின் மாணவரணி பொறுப்பாளர் சந்திரசேகர் கூட, தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதே என்று மகிழ்கிறவர் தானே தவிர, வருந்தக் கூடியவர் அல்ல. ஆனால், என்ன காரணத்தைச் சொல்லி, தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சியிருக்கிறார்கள் என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டிய செய்தி என்று நான் நினைக்கிறேன். பல நேரங்களில் தி.மு.க. ஆட்சி, இந்த சட்டத்தை ஏவியிருக்கிறது. பெரியார் சிலையை உடைத்ததற்காக எதிர்வினையாற்றிய எங்கள் தோழர்கள் மீதுகூட, தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போட்டார்கள். அதிலே, இப்போது சிறையி லிருக்கிற எங்கள் தோழர் இலட்சுமணனும் ஒருவர். மற்ற தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டதற்கு அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டார்கள் என்று தி.மு.க. அரசு குற்றம் சாட்டியது.

என்ன சமூக விரோத செயல் என்றால், 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வீரப்ப மொய்லி அறிக்கையை எரித்தார்கள். விசுவ இந்து பரிஷத் மாநாட்டுக்கு எதிராக போரா டினார்கள். இப்படிப்பட்ட குற்றங்களின் தொடர்ச்சி யாக கோயில்களில் புகுந்து அர்ச்சகர்களைத் தாக்கியிருக்கிறார்கள் என்று கூறி, தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவினார்கள். இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக போராடியதையும், மதவெறி சக்திகளுக்கு எதிராக போராடியதையும், சமூக விரோத நடவடிக்கைகளாகவே தி.மு.க. அரசு பார்த்தது.

நான் அப்போதே கேட்டேன்; திராவிட ஆட்சி என்றால், பெரியார் பார்வையில் ஆரியர்களை விலக்கி வைக்க வேண்டும்; அண்ணா பார்வையில் வடவர்களை விலக்கி வைத்திருக்க வேண்டும்; ஆனால் கலைஞர் அவர்களே, நீங்கள் யாரை விலக்கி வைத்திருக்கிறீர்கள்? நாட்டின் தலைமைச் செயலாளராக திரிபாதியை வைத்துக் கொண் டிருக்கிறீர்கள்; பெரியார் பார்வையில் ஆரியர்; அண்ணா பார்வையில் வடவர்; காவல்துறை தலை வராக முகர்ஜியை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; அவர் பெரியார் பார்வையில் ஆரியர், அண்ணா பார்வையில் வடவர், உள்துறை செயலாளர் மாலதி - ஆரியர். இப்படிப்பட்டவர்களை உயர் பொறுப்பில் வைத்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, பெரியார் வழியில் அண்ணா வழியில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறதாம். இப்படிப்பட்ட அரசு எப்படி நடந்து கொள்ளும் என்பது நமக்குப் புரியும். ஆனால், ராணுவ வாகனங்களைத் தடுத்து நிறுத்தியதை, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் போடக் கூடிய கடுமையான குற்றமாகக் கருதக்கூடிய அந்தப் பார்வையைத் தான் நாம் கண்டிக்கிறோம். நாங்கள் அடிக்கடி சொல்வது உண்டு, பெரியார் தொண்டர்களாகிய நாங்கள், சட்டவிரோதமாகக் கூட நடந்து கொள்வோம். ஆனால், நியாய விரோதமாக நடந்து கொள்ள மாட்டோம்.

ஏற்கனவே, ஈரோடு வழியாக, ராணுவ டாங்குகள் ஏற்றப்பட்ட வண்டிகள் சென்றது. அதை பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டன. பொது மக்களும் பார்த்திருக்கிறார்கள். அதற்குப் பின்னால், சிங்கள ராணுவத்துக்கு பயிற்சியும் தந்தீர்கள். தமிழகத்தில் அப்படி பயிற்சிப் பெற வந்த சிங்கள ராணுவத்தினரை தடுத்தவுடன், வேறு மாநிலத்துக்கு பயிற்சிக்கு அனுப்பினீர்கள். எங்கள் தொப்புள் கொடி உறவுகளை, ரத்தங்களை, ஈழத் தமிழரைக் கொல்வதற்கு தொடர்ந்து ஆயுதங்களும் பயிற்சி களும் அளித்த நிலையில் அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வின் கொந்தளிப்பின் வெளிப்பாடுதான் இந்த நிகழ்ச்சி. உடைந்த கண்ணாடிகளின் மதிப்பை யெல்லாம் வழக்கில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அது முக்கியமல்ல; உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசப் பாதுகாப்பை குலைப்பது அல்ல எங்கள் நோக்கம். அப்படிப்பட்ட நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு, அதற்காக நீங்கள் வழக்கு போட்டிருந்தால், நாங்கள் அதை ஏற்றுக் கொண்டிருப்போம். பீகாரில் - என்ன நடக்கிறது? தொடர் வண்டி - ஊரில் நிற்கவில்லை என்பதற்காக, தொடர் வண்டியையே எரிக்கிறான். கருநாடகத்தில் கன்னட செய்தியை படிக்கும் நேரத்தில் சமஸ்கிருத செய்தியைப் படித்ததற்காக தொலைக்காட்சி நிலையத்துக்குள்ளேயே சென்று அடித்து உடைத்தார்கள். இதற்கெல்லாம் அந்த மாநில அரசுகள் அவர்கள் மீது தேசிய பாகாப்புச் சட்டத்தைப் போடவில்லை. சிறு வழக்குகளைப் போட்டார்கள். இரண்டு, மூன்று நாட்களில் அவர்கள் வெளியே வந்து விட்டார்கள். ஆனால், நம்முடைய அரசு நம்முடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுக்கிறது என்பதுதான் நம்முடைய குற்றச்சாட்டே தவிர தோழர்கள் மீது வழக்குப் போட்டதற்காக அல்ல.

இப்போது, ஈழத்தில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே அவர்கள் வாழ்ந்தது அவலமான வாழ்க்கை. 25 ஆண்டுகள் தொடர்ந்து மின்சாரத்தையே பார்க்காமல் வாழ்ந்த வர்கள். யாழ்ப்பாணத்தில் கடந்த 13 ஆண்டுகளாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் தொடர்ந்து நடமாட முடியாமல் - ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கிறது. வேலைக்குப் போய் ராணுவ சோதனைச் சாவடிகள் வழியாக வரும் இளைஞர்கள் எல்லாம், தங்கள் பழக்கத்திற்கு மாறாக குடித்துவிட்டு வருவதுதான் வழக்கமாம். என்னடா, இப்படி, எல்லோரும் குடிக்கத் தொடங்கி விட்டார்களே என்று கேட்டபோது, குடித்தால்தான் எங்களை விடுதலைப் புலிகள் என்று ராணுவம் சந்தேகிக்காது. எனவே குடிக்கிறோம் என்று சொல்லி வாழ்ந்த நாடாக அது இருந்தது. இப்படிப்பட்ட அவலங் களில், நம்முடைய அப்பாவி மக்கள் அங்கே வாழ்ந்தார்கள். அதைவிட அதிகமான அவலங்களை, இப்போது முகாம்களில், அங்கே தமிழர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக ஒழித்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் ராணுவத்துக்கு ஒரு லட்சம் பேரை புதிதாக சேர்க்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கமே அழிந்து போன பிறகு, எதற்கு ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்கிறார்கள்? இந்தியா மீது படை எடுக்கவா? உண்மையிலே - விடுதலைப் புலிகள் ஒழிந்து விட்டதாக சிங்களவன் நம்பவில்லை. அது மீண்டும் உயிர்ப்பிக்கும்; எழுச்சியோடு போராடும் என்றுதான் அவன் நம்பிக் கொண்டிருக்கின்றான். ஆனால், புலிகளை ஒழித்ததாக பொய்யாக சொல்லிக் கொண்டிருக்கிறான் (கைதட்டல்). இல்லாவிட்டால் ஏன் ஒரு லட்சம் பேரை படையில் சேர்க்கிறார்கள்?

இப்போதே அவன் இந்தியாவை எப்படி மதிக்கிறான் என்பதை இந்திய அரசு பார்க்க வேண்டும். நேற்று - நம்முடைய வெளியுறவு அமைச்சர், இலங்கை அரசு தமிழர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்றும் சொன்னார். அவ்வளவுதான் சொன்னார். அதற்கு பதிலடி தந்து இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் ஒரு கட்டுரையை வெளியிடுகிறார்கள். ராஜபக்சேயின் தம்பி - கோத்த பய ராஜபக்சேயின் பொறுப்பில் இருக்கிறது அந்த இணைய தளம். இப்படி ஒரு கருத்தை வெளியிட்டதற்காக கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கும் அக்கட்டுரை.

“நாங்கள் கிருஷ்ணாவிடம் (வெளி விவகாரத் துறை அமைச்சர்) கேட்பது என்னவென்றால், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று எங்களுக்கு கூற நீங்கள் யார்? இறையாண்மை உள்ள நாடான சிறீலங்காவுக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருங்கள். இல்லாவிட்டால், சிறீலங்காவுக்கு எதிராக பேசி வந்த அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளை எப்படி ஒதுங்கிக் கொண்டாரோ, அதேபோல் நீங்களும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்ற பதிலடி தந்திருக்கிறான். இன்னும் ஒரு படி மேலே போய் அந்தக் கட்டுரையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது:

“இந்தியாவிற்கு மேலும் சில விடயங்களைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்; இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் வழங்க மாட்டோம்; ஏனெனில் தனிநாடு கோரி தமிழர்கள் போராட்டம் நடத்துவதற்கு அதுவே போது மானதாக அமைந்துவிடும்” என்று கூறிவிட்டான். ராஜபக்சேவும் இதைத்தான் கூறியிருக்கிறார்.

இனி இலங்கையில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று எதுவும் கிடையாது. எல்லாம் ஒரே இலங்கை என்று ராஜபக்சே கூறுகிறார். எனவே தமிழர்கள் தமிழைப் பேசினாலும், தமிழர்கள் என்று ஒரு தனி இனம் இருக்கிறது என்பதை அவர்கள் அங்கீகரிக்கப் போவதில்லை. ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் செய்ததைப் போல வடக்கு மாகாணத்திலும், சிங்களக் குடியேற்றத்தை அமுல் நடத்துவார்கள். இதை நான் சொல்லவில்லை; இரத்தினகுமார் என்று ஒரு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி இருந்தார். இலங்கையில் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியவர். அவர் அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் எழுதுகிறார்: “சிங்களர்களுக்கு - சிக்கலை தீர்ப்பது எப்படி என்பது தெரியும். கிழக்கு மாகாணத்தில் தீர்த்தது போல் வடக்கு மாகாணத்திலும் தீர்த்து விடுவார்கள்” என்று அவர் எழுதுகிறார். “கறை படிந்த ரத்தக் கைகளோடு இதை எழுது கிறேன்” என்று அவர் கூறுகிறார். இத்தனைக்கும் அந்த அதிகாரி தமிழர் அல்ல; அவருக்குக்கூட அந்த உணர்வு இருக்கிறது.

நண்பர் பாலமுருகன் கூறியது போல், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து - போருக்கு எதிரான மனித உரிமைகளுக்கான கொள்கைகளை உருவாக்கினார்கள். அதில், இனப் படுகொலை தான் மிகப் பெரும் குற்றம் என்று வரையறுக்கப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டு மாநாடுகள் நடத்தி, அதில், தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களுக்கு காப்பகமாக விளங்கிய நாடு சுவிட்சர்லாந்து. அதே சுவிட்சர்லாந்துதான் இப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தையும் அய்.நா.வில் கொடுத்தது. ஆனால், அதுவும் ‘வழவழா கொழகொழா’ தீர்மானமாகவே இருந்தது. “மனித உயிர்கள் இழப்புக்கு கவலை தெரிவிக்கிறோம். இதற்கு விடுதலைப்புலிகளும் காரணம். இந்தக் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு விசாரிக்க வேண்டும்” - என்று தான் அத் தீர்மானம் கூறியது. இலங்கை அரசே விசாரிக்கலாம் என்பதுதான் தீர்மானம். இலங்கை அரசைக் கண்டிக்கவும் இல்லை; இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்கத்தான், இந்தியா முனைந்து செயல்பட்டது, தோழர்களே! ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கையை அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒரு முயற்சி வந்தபோது, அதை இந்தியா தான் முன்னெடுத்தது. ஆனால், இணைக்க முடியவில்லை என்பது வேறு. அப்போதும் இந்தியா துணை நின்றது. இப்போதும் துணை நிற்கிறது. ஏதோ, உலக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்துவிட்டதாக யாரும் கருதிக் கொண்டு விடாதீர்கள். இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக்கூட, இந்தியா ஏற்கவில்லை என்பதுதான் உண்மை.

எனவே நம்முடைய இந்திய அரசு இலங்கையின் இனப்படு கொலைகள், போர் குற்றங்கள் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக போராடிக் கொண்டிருக் கிறது. அந்த அரசிடம் தான் நாம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் தோழர் தா.பா. கூறியது போல்தான், நானும் நமது கடமையை உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிட்டது; ஓய்ந்து விட்டது என்று, சிங்களவன் சொல்வதை நாம் நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நமக்குத் தெரியும். மீண்டும் அது வீச்சோடு உருவெடுக்கும் என்பது நமக்குத் தெரியும். சிறிய சிறிய தாக்குதல்களை பெண்கள் மீது நடத்தப்பட்ட காரணத்தால் தான், புலிகள் இயக்கம் போராடத் தொடங்கியது. ஆனால் - இப்போது நடந்து முடிந்துள்ள இனப்படுகொலைக்கு எதிர்காலத்தில் பதிலடி எப்படி எல்லாம் கிடைக்கப் போகிறது என்பது, நமக்குத் தெரியாது. காரணம், அவ்வளவு கொடுமை நடந்திருக்கிறது (பலத்த கை தட்டல்). அதற்கு காலம் எப்போது வரும் என்பதும் நமக்குத் தெரியாது. சில மாதங்கள் ஆகலாம்; அல்லது ஆண்டுகள் ஆகலாம்; எப்போது என்பது நமக்குத் தெரியாது.

இதில் நம்முடைய கடமை என்ன? பிச்சைக்காரர்களே இல்லாத நாடாக இருந்த ஈழத் தாயகத்தில் - அந்த நாட்டுத் தமிழர்கள் அனைவரும் அகதி முகாம்களில் இருந்து கொண்டு தட்டேந்தி நின்று கொண்டிருக்கிறார்கள். பிச்சைக் காரர்களையே சந்திக்காத மக்கள் அனைவரும் இப்போது பிச்சைக்காரர்களாக இருந்து கொண் டிருக்கிறார்கள். அதைப் பார்க்கிறோம். அய்.நா. மன்றத்திலே ‘சாட்சியே இல்லாத போர்’ என்று கூறினார்கள். உலகத்தில் எந்தப் போரும் இப்படி நடக்கவில்லை. இப்படி எல்லாம் போரை நடத்துவதற்கு இலங்கைக்கு கற்றுக் கொடுத்ததே இந்தியா தான். இந்திய ‘அமைதிப் படை’ என்ற பெயரில் - அங்கே இந்திய ராணுவம் சென்றபோது - ‘ஈழ முரசு’, ‘உதயன்’ பத்திரிகை அலுவலகங்களைத்தான் முதலில் தாக்கினார்கள். யாழ்ப்பாண மருத்துவமனையில் குண்டு வீசி, மருத்துவர்களையும் நோயாளிகளையும் கொன்றது இந்திய ராணுவம் தான். ஜானி போன்ற தூதர்களாக செயல்பட்டவர்களைக் கொன்றவர்கள் - இந்திய அமைதிப் படைத்தான். எனவேதான் வெள்ளைக் கொடி ஏந்தி சமரசம் பேச வந்த நடேசனையும் புலித் தேவனையும் ராணுவம் சுட்டுக் கொன்றது என்றால், அது இந்தியா காட்டிய வழிதான். இதுபற்றி எல்லாம் விரிவாகப் பேச நேரமில்லை. போர் முனையில் அரசே நியமித்த அரசு அதிகாரிகள் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த வர்கள் என்ன சொல்கிறார்கள்.

பார்த்திபன் என்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அப்படி அங்கே அரசால் நியமிக்கப்பட்டவர். அந்த பொறுப்புக்கு அங்கே மாவட்ட ஆட்சித் தலைவர் என்று கூறுவதில்லை. ‘கவர்ன்மென்ட் ஏஜென்ட்’ (அரசு முகவர்) என்று கூறப்படுகிறது. வவுனியாவின் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பார்த்திபன் போர் முடிவதற்கு இரு தினங்கள் முன்பு வரை 18 ஆம் தேதி வரை களமுனையில் இருந்தவர். அவர் இப்போது சிறையில் இருக்கிறார், எதற்காக? போர் நடக்கும் பகுதியில் 70000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக இலங்கை அரசு கூறியது. அதை நம்முடைய வெளியுறவுத் துறையும் ஏற்றுக் கொண்டது. ‘இந்து’ ஏடும் எழுதியது. அப்படி சொன்னபோது அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பார்த்திபன் தான் 80000 குடும்பங்கள் இருக்கின்றன என்று சொன்னவர். இவர்கள் எல்லாம் 70000 பேர் என்று சொன்னபோது, 80000 குடும்பங்கள் என்று சொன்ன வரை, இப்போது சிறையில் வைத்திருக் கிறார்கள். மூன்று மருத்துவர்கள் உள்ளே இருந்து பணியாற்றினார்கள். சண்முகராசா, சத்தியமூர்த்தி மற்றும் ஒருவர், 16 ஆம் தேதி வரை உள்ளே இருந்தார்கள். அவர்கள்தான், கடைசிவரை போரை பார்த்தவர்கள். அந்த மருத்துவர்களையும் கைது செய்து உள்ளே வைத்திருக்கிறார்கள். இவ்வளவு குண்டு வீச்சு களுக்கும் இடையில் பதுங்கு குழியில் பதுங்கி வெளியே வந்து திறந்த வெளியில் சிகிச்சை செய்த இந்த மருத்துவர்களுக்கு சர்வதேச மருத்துவக் குழு விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. அந்த மூன்று மருத்துவர்களும் இப்போது சிறையில் இருக் கிறார்கள். இந்திய அரசுக்கு, குறைந்தபட்ச மனிதாபிமானம் இருக்குமானால், இந்த மாவட்ட ஆட்சித் தலைவரையும், மருத்துவர்களையும் விடுவித்து, சர்வதேச பத்திரிகையாளர் முன் நிறுத்தி, என்ன நடந்தது என்பதை அவர்கள் வழியாக வெளியிடுவதற்காகவாவது ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா? மக்களைக்கூட விட்டுவிடுங்கள், அவர்கள் எல்லாம் புலிகள் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்துகிறீர்கள்; இந்த அதிகாரிகள் கருத்தையாவது கேட்க வேண்டாமா?

ராஜபக்சே கூறுகிறார், ஒரு அப்பாவி மக்களைக்கூட கொல்லாத போரை நடத்தினோம் என்று, எங்கள் பக்கம் 6000 பேர் இறந்தால், அவர்கள் பக்கம் 10 மடங்கு அதிகம் என்றார். அப்படியானால், 60000 புலிகள் இறந்திருக்கிறார்கள் என்றார். அவர்கள் பார்வையில், கணக்குப்படி இறந்த தமிழர்கள் அனைவருமே புலிகள். இதைப் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துகிறோம். வாழ்ந்தவர்கள், இறந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு வேண்டும். இதையாவது இந்திய அரசு செய்யக் கூடாதா? என்பது தான் நமது கேள்வி? இவர்கள் நிச்சயமாக செய்ய மாட்டார்கள். காரணம் - இந்தப் போர்க் குற்றங்களுக்கு இலங்கையோடு சேர்ந்து துணை நின்றது இந்திய அரசு என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இந்த நிலையில் இங்கு திரண்டு வந்துள்ள இந்த மக்களாவது ஈழத் தமிழர்களுக்காக எடுக்கப்படும் அறவழிப் போராட்டங்களில் உணர்ச்சியுடன் பங்கு பெறுங்கள். யாராவது போராடட்டும் என்று கருதாமல், ஒவ்வொருவரும் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்ற போராட்ட உணர்வோடு கலைந்து செல்லுங்கள் என்று வேண்டுகிறோம்.

தமிழக அரசே ஏராளமான குற்றங்களை செய்து கொண்டிருக்கிற நீ - இந்தக் குற்றத்தையாவது நீதிமன்றம் உன் தலையில் குட்டுவதற்கு முன்னால், இந்த தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறு என்ற வேண்டுகோளை வைத்து முடிக்கிறேன” என்று கூறியுள்ளார்.

http://www.meenagam.org/?p=4772

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துத் திராவிடச் சிங்கங்களே! தமிழகம் என்ற ஒருநாடு ஒருவேளை இல்லாது வேறு ஒருமொழி நாடு இருந்திருப்பின் எப்போது விடியல் மலர்ந்திருக்கும்.

உயர் குழத்து கிந்தியர் நடத்தும் கூத்து ஈழத்தமிழருக்காக அல்ல.தமிழகத்தை ஒடுக்க என்பதே உண்மை. தம்பிக்கடிப்பதூடாக அண்ணாவை அடிபணியவைக்கும் உத்தி. தமிழகத்தவரின் கோவணங்கள் மெதுவாகப் பறிக்கப்படுவதற்கான முன்னோட்டம். இதன்பின்னும் கட்சியரசியலும் கறுமம் பதவிக் கதிரைக்குமாய்........ இந்த இழிநிலை மாறவேண்டும். அதுவரை விடிவே என்ன தலைநிமிர்ந்த வாழ்வே கிடையாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.