Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வினவு ஓராண்டு நிறைவு: கற்றவையும் கடமையும்!!

Featured Replies

அன்றாட வேலைகள் சலித்த ஒருவன் திடீரென்று திரைப்படம் பார்த்ததைப் போலத்தான் வினவும் பிறந்தது. ஜூலை 17, 2008 காலையில் எல்லாத் தினசரிகளிலும் அரசியல் நகைப்பு வெள்ளமென ஓடியது. அணுசக்தி ஒப்பந்தத்திற்காக இடதுசாரிகள் மன்மோகன் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிய நேரம். குதிரை பேரங்கள் மர்மநாவலைப் போல ஆனால் மக்களுக்கோ எந்த ஆவலும் இல்லாமல் நாட்டை வலம்வந்த காலம். இந்த நாடகத்தில் பஃபூன் வேடம் ஏற்றிருந்த சி.பி.எம் கட்சியினரும், அவர்களது சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜியும் மாபெரும் ‘கொள்கை’ப் போரில் ஈடுபட்ட கதைகள்தான் அன்றைய செய்திகளின் காமடிச் சுரங்கம்.

கூட இருந்த தோழருடன் இதை விவாதித்த போது இதையே ஒரு வலைத்தளம் ஆரம்பித்து வெளியிட்டால் என்ன என்று கேட்க அவரும் சரியென்றார். இதற்கு சில மாதங்கள் முன்புதான் இணையமும், தமிழ்ப் பதிவுலகமும் ஏதோ கொஞ்சமாக அறிமுகமாயிருந்தன. அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் தட்டச்சு செய்வதை “ஆசான்” மூலம் கற்றிருந்தோம். கணினியில் எழுதுவது எங்கள் அரசியல் வேலைகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

பாதியோ முக்காலோ கட்டுரை முடிந்த மாலை நேரம் வேறு தோழர்கள் வந்தார்கள். வலைத்தளத்திற்கு என்ன பெயர் வைப்பது என்ற தேடல் சுமார் மூன்று மணிநேரம், திருக்குறள், பராதி, பாரதிதாசன் கவிதைகள், தமிழ் அகராதி என எல்லா ஆயுதங்களோடும் நடந்தது. கடைசியில் “வினவு” தேர்வாகியது. ஒரு தோழர் உடனே வினைசெய் என்றார். “கேளுங்கள், செயல்படுங்கள்” இந்த விளக்கமும் அந்த அருமையான தமிழ்ப்பெயரும் எங்களுக்கு பிடித்திருந்தன. மற்றபடி ‘தீவிரவாத’ கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சிவப்பு, சூரியன், கதிர், போர் போன்ற பெயர்களை வேண்டுமென்றே தவிர்த்தோம். காரணம் புதியவர்களை கருத்தின்பால் வென்றெடுப்பதற்கு இந்த கம்பீரமான வார்த்தைகள் அச்சுறுத்துமோ என்ற தயக்கம்.

தொழில்நுட்பவேலைகளில் கில்லியான தோழர் வலைத்தளத்தை பதிவு செய்தார். பிளாக்ஸ்பாட்டா, வோர்ட்பிரஸ்ஸா எது சிறந்தது என்பது தெரியவில்லை, குத்துமதிப்பாக வோர்ட்பிரஸ்ஸில் வினவு ஒரு குழந்தையாக பதிக்கப்பட்டது. இரவு முழுக் கட்டுரையை முடித்து காலையில் வலையேற்றம் செய்ய திட்டம். காலையில் ஏற்றும் நேரம் எங்கள் பகுதியில் முழுநாள் மின்தடை என்பது தெரியாது. அருகாமை ப்ரவுசிங் சென்டருக்கு சென்றும் முடியவில்லை. மாலையில் மின்பகவான் வந்தார். கட்டுரை எழுதிய நான் இங்கே, தொழில்நுட்பக் கில்லி அவருடைய அலுவலகத்தில், பிழைதிருத்தம் பார்த்த தோழர் வேறு இடத்தில் என மூன்று திசைகளில் முதல் கட்டுரை சரிபார்க்கப்பட்டு ஏற்றப்பட்டது. சிவப்பு தலையில், கருப்பு உடலில் கட்டுரை வந்ததும் குழந்தை பிறந்த உற்சாகம்.

சரி, குழந்தையைக் கொஞ்சுவதற்கு ஆட்கள் வேண்டுமே? பிழையும், கில்லியும் எங்கள் தோழர்கள் வைத்திருக்கும் தளங்களில் வினவின் பெயரில் மொட்டைக் கடுதாசி அல்லது இலவச விளம்பரங்களைப் பின்னூட்டங்களாக போட்டார்கள். தோழர்கள் என்பதால் படித்தே தீரவேண்டுமென்பதால் இந்தப் பணி. அந்த அளவுக்கு நிறைய தோழர்கள் அப்போது எழுதிவந்தார்கள். போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், தமிழினவாதிகளுக்கும் இந்த இணையப்படை மிகுந்த பொறாமையை ஏற்படுத்துகிறது. இது இளமை துடிப்புள்ள ஒரு மார்க்சிய லெனினிய இயக்கம். களத்திலும், கருத்திலும், அரசியல் அரங்கிலும், பத்திரிகை துறையிலும் அதே போல இணையத்திலும் இப்படி முன்னணியில் இருப்பது ஆச்சரியமானதல்ல.

தோழர்கள் படிக்க வந்தார்கள். அசுரன் அவரது பதிவில் பதிலளித்தார். அசுரனே வினவை பொருட்படுத்தி எழுதியது எங்களுக்கு ஆச்சரியம். என்ன இருந்தாலும் அவர்தான் அப்போது இணையத்தில் எங்களது தலைவர். தொண்டர்களுக்கு ஆச்சரியம் இருக்காதா? இப்போதும் தலைவர் வேறு வேறு பெயர்களில் எல்லா விவாதங்களுக்கும் வந்து தொண்டர்களுக்கு தெரியாமல் உற்சாகப்படுத்துகிறார். முதல் பதிவேறிய உற்சாகத்தில் அடுத்த இருநாட்களுக்கும் இருபதிவுகள் எழுதினேன். அதிகம் பேர் பின்னூட்டமிட வரவில்லை. ஒருவர் மட்டும் பதிவேற்றியதும் வாழ்த்து தெரிவித்தார். அவர் கில்லிதான் என பிழை சொல்ல நான் கில்லியிடம் கேட்க இறுதியில் ஆரம்பத்தில் இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்பதாய் மறுத்து பிறகு ஆங்கிலத்திலிருந்து அவரது செந்தமிழ் பிரோயகத்திற்கு மாறியபோது கில்லி பிடிபட்டார். எல்லாம் எழுதுபவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு நல்ல நோக்கத்திற்காம். அதற்கு வேலை வைக்காமல் புதியவர்கள் வந்தார்கள். மூன்றாவது நாள் இன்றைய ஹிட்ஸ் 20 என உற்சாகமாய் பிழைக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அதே போல மொத்த ஹிட்ஸ் 500, 1000 தாண்டிய போது கில்லி எனக்கு அனுப்புவார். இவ்வளவு அப்பாவிகளா என சிரிக்காதீர்கள். அப்பாவித்தனத்தையும் ஒத்துக்கொள்வது வீரமில்லையா?

எல்லாத் தளங்களின் ஓரங்களிலும் விதவிதமான அலங்காரங்கள், ஆன்லைன் பார்வையாளர்கள் அது இது என இருக்கிறதே இதை செய்ய முடியாதா என கில்லியிடம் கேட்டபோது அதெல்லாம் பெரிய விசயங்கள் தனக்கு தெரியாது என்பார். இதன் பொருள் அடுத்த நாள் அந்த வேலை நிறைவேறிவிடும் என்பதே. இதற்கு அவ்வப்போது வாலை முறுக்கிவிடவேண்டும். ஒரு காலத்தில் தமிழ் பதிவுலகில் தோழர்கள் எழுதுவது நேரவிரயம் என வாதிட்ட கில்லி அப்புறம் அதனோடே வாழ ஆரம்பித்தது காலத்தின் கோலம். இதற்குள் வினவின் லோகோ, இன்னும் விரிவாக பல இடங்களில் ஆர்குட், பல இணைய குழுமங்களில் வினவை அறிமுகம் செய்வதை கில்லி முடித்தார்.

குஜராத்தில் வெடித்த குண்டுவெடிப்பை பற்றி ஒரு பதிவெழுதியபோது மாற்றுக் கருத்தாளர்கள் விவாதத்திற்கு வந்தார்கள். சில இசுலாமிய தளங்கள் இதை மறுபிரசுரம் செய்தன. இந்த புதிய அனுபவத்தில் பின்னூட்டத்தில் விவாதிப்பது தேவையானால் பதிலை தனி பதிவாக வெளியடுவது என பயணம் சென்றது.எங்களது தாய்த்த்தளமான வோர்ட் பிரஸ்ஸிலிருந்து வந்த குந்தவை வெளியிட்ட விமரிசனத்திற்கான பதிலை தனி பதிவாக உடன் வெளியிட்டோம். ரவி சீனீவாசும், பி.முரளியும் இதில் விடாமல் விவாதிக்க, சீனீவாசின் தொல்லை காரணமாக அவரை சிறப்பாய் கவனித்தோம். இப்போதெல்லாம் அவர் வினவிற்கு வருவதில்லை, ஏனோ? ஆனால் வினவு.காம் வேலைகள் செய்த நண்பர் ரவியின் தளத்திற்கு சென்று தீவிரவாத வினவிற்கு உதவுகிறீர்களா என்றெல்லாம் நைசாக மிரட்டுவதை மட்டும் அவர் விடவில்லை.

இடையில் ஜெயமோகனின் நவ்வாப்பழம் கட்டுரை, இதை இன்னொரு தோழர் எழுதியதை வெளியிட்டோம். இதையும் பலர் மறுபிரசுரம் செய்தார்கள். நான் கடவுள் எனும் அகந்தை முற்றிய மோகனை குறிபார்த்து வெளுத்தது பலருக்கு மகிழ்ச்சியை தந்தது. இந்தக் கட்டுரைக்காக பிழை காலச்சுவடு தொடங்கி பல இலக்கியவாதிகளின் மின்னஞ்சல்களுக்கு விளம்பரம் செய்தார். படித்திருப்பார்கள், ஆனால் முகம் காட்டவில்லை.

அடுத்த மாதம் முழுக்க பண்பாட்டு விசயங்களைக் குறித்த கட்டுரைகள் வந்தன. இது பல புதியவர்களை வினவிற்கு அறிமுகப்படுத்தியது. ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும், ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி, குசேலன் உள்குத்து, முதலிய கட்டுரைகள் பெரும் வரவேற்பை பெற்றன. ரஜினி கட்டுரைக்கு ஒரே நாளில் 980 பேர் வந்தனர். கில்லிக்கு உற்சாகம் தாங்கவில்ல, மிச்ச இருபதை நானே கிளிக் செய்து ஆயிரம் ஆக்கியிருப்பேனே என்றார். சூப்பர் ஸ்டாரின் கட்டுரைய பாராட்டி பதிவுலகின் சூப்பர் ஸ்டார் லக்கிலுக் பின்னூட்டமிட்டார். ஏயப்பா லக்கிலுக்கா என ஆச்சரியம் தாளவில்லை. கில்லி சொன்னார் லக்கி கமல் ரசிகர் அதனால்தான்…. இருக்கட்டுமே லக்கிலுக் பெயரைப்போட்டு பலரும் ஊசிப்போன போண்டாக்களை பரபரப்பாக விற்ற காலத்தில் வினவுக்கு அவர் வருவது விசேடமில்லையா?

இடையில் தமிலிஷ், மாற்று என மற்ற திரட்டிகளிலெல்லாம் பதிவுகளை இணைப்பதை கில்லி செய்து வந்தார். தமிலிஷில் வாக்களிப்பதற்கு பலரையும் கில்லி படுத்திவந்தார். ஆனால் பிழை மட்டும் இதை சட்டை செய்யாமல் இருக்க ஒரு ஓட்டுகூட போடமாட்டார், இவரும் வினவு குழுவா என கில்லி அங்கலாய்க்க, அதன்பிறகு அதற்கு தேவையே இல்லாமல் மக்கள் வாக்களிக்க நாளுக்கு நாள் புதியவர்கள் வருகை அதிகமானது. “இப்போது எழுதுபவர்களில் வினவு ஆர்ப்பாட்டமின்றி நன்றாக எழுதுகிறார்” என சுகுணா திவாகர் எழுதியதை ஒரு தோழர் மின்னஞ்சல் இணைப்பில் தெரிவித்தார். அப்போது தீவிரமாய் எழுதிவந்த சுகுணாவின் பாராட்டு மற்றொரு அங்கீகாரம்.

நமீதா அழைக்கிறார், நாசரேத் ஆயர் கட்டுரைக்கு செந்தழல்ரவி வந்தார். கிறித்தவத்தின் தவறுகளை விமரிசிப்பதில் அவருக்கு ஆனந்தம். மற்றொரு உண்மைக் கிறித்தவர் அவர் பெயர் ஸ்டான்ஜோ….என ஞாபகம் அவருக்கு கோபம். ஷகிலா இசுலாம் கட்டுரைக்கு புதிய இசுலாமியர்கள் வந்தார்கள். யாரும் எமது விமரிசனத்தை எதிர்க்கவில்லை என்பது ஆச்சரியம். அட்டகாசமாக பின்னூட்டமிட்ட நண்பர் அல்லாபிச்சை அதன்பிறகு ஆளே காணோம். இந்தக்கட்டுரைக்கு ஆலோசனை தந்தவர் பிழை. அதனால்தான் என்னவோ இன்றும் பாலியல் தேடல்களில் பயணம் செய்வோர் ஷகிலா கட்டுரையின் குறிச்சொற்களுக்காக பிழையாக வினவில் விழுந்து திரும்புகிறார்கள்.

இடையிடையே தமிழ்மணத்திலிருந்து நமக்கு நட்சத்திர அழைப்பு வரப்போகிறது தயாராகுங்கள் என கில்லி அச்சுறுத்தியது போல நான்கு மாதங்களுக்கு பிறகு அழைப்பு வந்தேவிட்டது. அடுத்த ஆச்சரியம். முதல் கட்டுரையாக மொக்கை குறித்த பதிவை எமது மூத்த தோழர் எழுதினார். இவ்வளவிற்கும் அவர் பதிவுலகை அறிந்தவரில்லை என்றாலும் கில்லியின் விரல் நுனி விவரக்கிடங்கை வைத்து எழுதிய கட்டுரையின் வரவேற்பு லக்கிலுக்கால் துவக்கிவைக்கப்பட்டது. இதற்காக அவரது தளத்திற்கு சென்ற ஒருவர் இப்படி இங்கே மொக்கைகளாக போட்டுத் தாக்கிவிட்டு, வினவிற்கு சென்று மொக்கைகளை கண்டிக்கும் பதிவுக்கு வரவேற்பா எனக் கேட்க அதற்கு லக்கி அளித்த பதில்? “நான் மொக்கைதான். ஆனால் எனக்கு மொக்கைகளை பிடிக்காது!” இன்னும் புரியாதவர்கள் அவரிடமே கேட்டுப்பார்க்கலாம்.

நட்சத்திர வாரத்தின் போது அவரசமான அமைப்பு வேலைக்காக வெளியூர் சென்று திரும்பினோம். வீடு வந்தபோது சட்டக்கல்லூரி கலவரம் தொலைக்காட்சிகளில் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகளோடு வெடிக்கத் துவங்கியிருந்தது. அதற்குள் களத்திற்கு சென்ற பு.மா.இ.மு தோழர்கள் பின்னணி விவரத்தை உடனுக்குடன் அறியத் தந்தார்கள். தொலைக்காட்சி, மற்ற பதிவுகளை பார்த்துவிட்டு நான் விவரங்களை சேகரிக்க உடனே விவாதித்து மூத்த தோழர் எழுதினார். முழு இரவுப் பயணத்திற்கு பிறகு அதிகாலையில் எழுத ஆரம்பித்து நண்பகலில் முடித்த பிறகு கில்லி ஏற்றினார். பப்புவின் உலகிலிருந்து வந்த சந்தனமுல்லை, சங்கர பாண்டி முதல் பல பதிவுலக பிரபல நண்பர்கள் சின்னத்திரையில் திணிக்கப்படும் காட்சிக்கு பின்னே தலித் மாணவர்கள் மீது ஏவப்பட்டிருக்கும் வன்முறையை புரிந்து கொண்டு பேசினார்கள். என்றாலும் பெரும்பாலும் பலர் புதியவர்கள் அதிலும் பிற்படுத்தப்பட்ட அல்லது ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த இடுகையை ஆத்திரத்துடன் எதிர்த்தார்கள். பதிவுலகத்தின் வாசகப் பரப்பை இதுதான் பெரும்பாலும் ஆக்கிரமித்திருக்கிறது என்பதையும், தப்பித் தவறி இந்த மாய உலகில் வந்து போகும் சில தலித் மாணவர்கள் சிறுபான்மை என்றாலும் தங்களது சிறுவயது, கல்லூரி கொடுமைகளை இந்த சம்பவரம் பெரிதும் ஒத்திருப்பதாக எடுத்துச் சொன்னதையும் வைத்துப் பார்க்கும் போது இங்கே இன்னமும் தலித் மக்களின் வலி உணரப்படவில்லை என புரிந்து கொண்டோம்.

எனவே இதற்காக பு.க, பு.ஜ கட்டுரைகளை உள்ளிட்டு மேலும் சில இடுகைகளை வெளியிட்டோம். அவ்வப்போது ஆதிக்க சாதியை இடித்துரைக்கும் வேலையை செய்யவேண்டுமென்பதையும் குறித்துக் கொண்டோம். இந்தப் பிரச்சினைக்குப் பிறகு பின்னூட்டங்கள் ஐம்பது, நூறு என்ற எண்ணிக்கைக்கு விரிந்து சென்றன. வெளியே பரபரப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வின் உண்மைப் பின்னணியையும் அது குறித்த சமூகக் கண்ணோட்ட ஆய்வையும் வெளியிடுவது என்ற வேலை வினவின் திட்டத்தில் தானாக ஏறியது. இதனால் தமிழகம் மட்டுமல்ல, பல வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்லும் பணியை வினவு எடுத்துக் கொண்டது. வினவு நம்பகமான ஒரு தமிழ்பத்திரிகை என்று பாராட்டினார் ஒரு ஈழத்தமிழர்.

சூடான அரசியல் சமூகப் பிரச்சினைகளுக்கு நடுவே தணிப்பது போல இலக்கியவாதிகளை கவனிக்கும் கட்டுரைகளை அதிகம் வெளியிட வேண்டுமென்பதும் எமது விருப்பம். கருத்துரிமைக்காக காலச்சுவடு போராடும் வேடத்தை கலைத்தும், அவ்வப்போது அடித்துக் கொள்ளும் சாரு, ஜெ.மோ இருவரையும் முழு ஃபுளோவில் மோதவிட்டும், சினிமா பாடல் சான்ஸுக்காக கமலிடம் பல்லிளிக்கும் மனுஷ்ய புத்திரன் என அவ்வப்போது வந்தன. இது போதாது என்பதும் இலக்கியவாதிகள் பலர் இலக்கியத்தின் பெயரால் மறைத்திருக்கும் சமூக விரோத ஆன்மாவை வெளிச்சமிடும் வேலையை அதிகம் செய்திருக்கவேண்டும். இதனால் நாங்கள் இலக்கியத்திற்கு எதிரிகள் என நண்பர் ஜயோராம் சுந்தர் கருதவேண்டாம். வினவின் நூலான இலக்கிய மொக்கையை சாரு ரசித்து படித்ததாக அவரது புகழ் பரப்பும் ரசிகர் ஒருவர் – அவர் யார்? – வேறு ஒரு ஃபாரத்தின் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார். இது இலக்கிய மொக்கை 2ம்பாகம் எழுதுவதற்கு உந்துதலாக நிச்சயம் இருக்கும்.

சென்னையில் அடை மழையும், மும்பயில் பயங்கரவாதிகளின் தாக்குதலும் ஒருங்கே நிகழ்ந்தன. மும்பை தாக்குதலின் முழுமையான பரிமாணத்தை விளைவை, ஆறு பாகங்களாக வெளியிட்டோம். இத்தொடரிலும் பெரிய விவாதம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ் பரப்புரையின் தொடர்பு இல்லாமலே பலர் அந்தக் கருத்துக்களை இயல்பாக பேசுவது இங்கே தெரியவந்தது. இசுலாமியர்களைப் பற்றிய பொய்யான கற்பிதங்களும், வெறுப்பும், பொது மனவெளியில் அழுத்தமாக பதிக்கப்பட்டிருக்கிறது. இதையும் நெம்பி எடுக்க வேண்டுமென்பதும் அசாத்தியமான வேலைதான். சிலர் இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் வினவு நியாயப்படுத்தும் என முடித்துக் கொண்டனர். ஆனால் மும்பை இறுதி பாகத்தில் சர்வதேசம் பேசும் இசுலாமிய தீவிரவாதத்தின் முகத்தை இந்து மதவெறியரை அம்பலப்படுத்தும் அதே அலைவரிசையில் எழுதியது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அந்த பாகத்திற்கு மட்டும் அவர்கள் விவாதிக்க வரவில்லை என்பதில் அறிய முடிந்தது.

ஜனவரியில் சென்னை புத்தக கண்காட்சி. இணையத்தில் மட்டும் அறியப்பட்ட இந்தக் கட்டுரைகளை மக்களுக்கு கொண்டு சென்றால் என்று ஒரு தோழர் கேட்க அந்த ஆலோசனைகளை அமைப்புத் தோழர்கள் ஏற்க புயல்வேகத்தில் ஆறு தலைப்புக்களில் புத்தகங்கள் புதிய கலாச்சார வெளியீடாக வந்தன. அரங்கில் கீழைக்காற்று கடையில் மட்டும் மொத்தம் ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாயின. இலக்கிய மொக்கை பரபரப்பாக விற்பனையாவதாக கிழக்கு பா.ராகவன் அவரது பதிவில் எழுதினார். இதனாலேயே அம்பானியை தெய்வமாக போற்றும் அக்கம்பெனி எழுத்தாளர்களை நாங்கள் மன்னிப்பதாக இல்லை. மும்பை, சட்டக்கல்லூரி இரண்டு நூல்களிலும் வாசகர்களின் பின்னூட்டங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது தமிழுக்கு புதியது. வினவின் விவாதங்களில் சண்டாமிருதம் செய்யும் அண்ணன் ஆர்.வியின் வாதங்களெல்லாம் மும்பை நூலில் இருப்பது அவருக்கு தெரியுமா என்பது தெரியாது.

கண்காட்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் திட்டமிடப்பட்டு இந்த நூல்கள் வெளியிடப்பட்டன. கில்லி, பிழை மற்றும் சில தோழர்களின் பங்களிப்பால் இது சாத்தியமாயிற்று. இந்நூல்களின் முன்னுரைகளெல்லாம் வினவில் வெளியிட்டு வாசகர்களை கண்காட்சிக்கு அழைத்தோம். செந்தழல் ரவி புத்தக கண்காட்சியில் வினவு என்று ஒரு பதிவிட்டு உற்சாகப்படுத்தினார். மொக்கைக்குள்ளும் ஈரம் இருக்கிறது என்பதை அவரது அன்பான எதிரிகள் உணரவேண்டும்.

ஆரம்பத்தில் சராசரியாக ஒரு வாரத்திற்கு ஒரு புதிய இடுகையென்பது பின்னர் மூன்று நாட்களுக்கொன்று, இறுதியில் அன்றாடம் ஒன்றாக நிலைகொண்டது. இதுவும் திட்டமிட்டு நடந்ததல்ல. காலத்தைக் கைப்பற்றும் அவ்வப்போதைய பிரச்சினைகளை உடனுக்குடன் கொண்டு செல்ல வேண்டுமென்பதாலும், அதற்கு உதவும் வகையில் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களின் பல கட்டுரைகள் சேமிப்பு போல காத்துக்கிடந்தன. அமெரிக்க திவால் என்ற கட்டுரை அப்படித்தான் வெளியிடப்பட்டு பல குழுமங்களில் பிரசுரிக்கப்பட்டு பல்லாயிரம்பேர் படித்தனர். இப்படி இணையத்திற்கு வெளியே உள்ள எமது அமைப்பின் செய்திகள் இணைய வாசகர்களுக்காக கொண்டு சேர்த்தது என்ற வகையில் அதன் பயன்மதிப்பு அதிகம். இத்தகைய கட்டுரைகளுக்கும் பெரு எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் மாதக்கணக்கில் வந்தவண்ணமிருந்தன.

சத்யம் கட்டுரை, ஐ.டி.துறை நண்பா கட்டுரைகள் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் பெரும் விவாதத்தை கிளப்பின. இந்தக் கட்டுரைக்கு நண்பர் தமிழ்சசி அவரது கட்டுரை ஒன்றோடு இணைப்பு கொடுத்தார். அப்போது வரவிருக்கும் ஆட்குறைப்பு ஆபத்தை மறுத்த நண்பர்கள் விரைவிலேயே அவை பலித்த சோகத்தை கண்கூடாக பார்த்தார்கள். இப்படி சமூகத்தரப்பில் எல்லாத் தரப்பினரதும் பிரச்சினைகளுக்குள்ளும் வினவு நுழைந்து பலரை அழைத்து வந்தது.

ஈழத்தில் சிங்கள இனவெறி அரசு புலிகளை அழிக்கும் பெயரில் தமிழினப்படுகொலையை அரங்கேற்றிய நேரம் அதன் எதிர்விளைவு தமிழகத்தில் கொந்தளித்த நேரம். வினவும் அதில் முடிந்த மட்டும் தீவிரமாக பங்கு கொண்டது. எமது மொத்த இடுகைகளில் மூன்றில் ஒரு பங்கு ஈழத்திற்காக ஒதுக்கப்பட்டது என சொல்லலாம். பொதுவில் ஈழப்பிரச்சினை வெறும் மனிதாபிமானமாக தமிழக அரசியல் வெளியில் சுருக்கப்பட்டபோது புரட்சிகர அமைப்புகள் அவற்றை இந்தியாவின் மேலாதிக்க நலனுக்காக நடத்தப்படும் சதியை எடுத்துரைத்து மக்களை குறிப்பான அரசியல் முழக்கங்களின் கீழ் அணிதிரட்ட முயன்று வந்தன. அந்த அரசியல் வழிகாட்டுதலில் வினவில் பலகட்டுரைகள், ராஜீவ் காந்தி கொலையை வைத்து செய்யப்படும் அவதூறுக்கு மறுப்பு, முத்துக்குமார் தியாகம் என தொடர்ந்தன.

இதன்மூலம் கணிசமான ஈழத்தமிழ் மக்கள் வினவிற்கு அறிமுகமாயினர். இறுதியில் புலிகள் முற்றிலும் வீழ்த்தப்பட்ட நேரத்தில் ஈழப்போராட்டத்தை ஒரு பறவைப் பார்வையில் நடப்பு சம்பவங்களோடு இணைத்து எழுதப்பட்ட ஈழம் போர் இன்னும் முடியவில்லை என்ற கட்டுரை வலியையும், உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு மிகுந்த ஆயாசத்துடனும், விவாதங்கள் திருத்தங்களுடனும் எம்மால் எழுதப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு பகல் ஒரு இரவு இதற்காக இடைவெளியின்றி ஒதுக்கப்பட்டு அதிகாலையில் வலையேற்றம் செய்யப்பட்டது. அந்த தருணத்தின் அரசியலையும் உணர்ச்சியையும் ஒருங்கே கொணர்ந்த இந்தக் கட்டுரையை யாழில் மட்டும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோரால் படித்து விவாதிக்கப்பட்டது.

முக்கியமாக ஈழத்தமிழர்களின் இணைய தளங்கள் புலிகள் ஆதரவு, எதிர்ப்பு என தெளிவான இரண்டு முகாம்களாக பிரிந்திருந்த போது வினவு மட்டும் இந்த இரு தரப்பினரும் விவாதிக்கும் களமாக மாறியிருந்தது. இருவரும் தமது தரப்பை மறுபரிசீலனை செய்யும் கடினமான பணியை மிகுந்த போராட்டத்துக்கிடையில் களத்தின் அனுவபங்களோடு கொண்டு சென்றோம். தீவிர புலி ஆதரவாளரான தமிழ் நிலாவும், தீவிர புலி எதிர்ப்பாளரான டெக்கானும் வினவின் விவாதங்களில் கலந்து கொள்வது எங்களுக்கே புதிய அனுபவம்.

ஈழத்தோடு தேர்தல் வந்த நேரத்தில் வினவின் டாட் காம் வேலைகளுக்காக சில நாட்கள் பதிவு போடவில்லை. தேர்தல் குறித்து, தமிழ்சசி, மாற்றம் நண்பர்களின் நிலையை பரிசீலிக்கும் கட்டுரையெல்லாம் எழுத நினைத்து நடக்காமல் போயிற்று. பாசிச ஜெயா தீடிரென ஈழத்தாயக கொண்டாடப்பட்ட போது அந்த பேயை உள்ளது உள்ளபடி அம்பலப்படுத்தியதிலும், அதே போல கருணாநிதியின் துரோகத்தை ஒருங்கே கண்டித்ததும் இங்கு மட்டும் நடந்த விசயம். மற்ற தளங்களெல்லாம் ஜெயா ஆதரவு, கருணாநிதி ஆதரவு என இருமுகாம்களாக பிரிந்து ஈழத்திற்காக பேசியதும் இங்கே இணைத்து பார்க்க வேண்டும்.

போலிக் கம்யூனிஸ்டுகளை அவ்வப்போது விமரிசித்து எழுதியதை இணையத்தில் இருக்கும் சில அரசியல் தெரியாத சி.பி.எம் அப்பாவிகள் திமிருடன் எதிர் கொண்டனர். எங்களது அரசியல் எதிரிகள் எல்லோரும் செய்யும் விதவிதமான அவதூறுகளை தொகுத்து அவர்கள் எங்களுடன் சண்டையிட்டது நல்ல தமாஷ். அப்போதுதான் இந்த அவதூறு பின்னூட்டங்களை வெளியிடக்கூடாது என நாங்கள் பேசிய போது கில்லி மட்டும் இவற்றை வெளியிடுவதன் மூலம் அவற்றை வலுவிழக்கச் செய்யலாம் என்றார். இறுதியில் அவர் சொன்னதுபோலவே நடந்தது. அநேகமாக எந்த பின்னூட்டத்தையும் வினவில் தடை செய்தது இல்லை என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

ஒரு நாள் மெயிலில் ஒருகேலிச்சித்திரத்தை அனுப்பி அறிமுகமான ரவி அப்புறம் தேர்தல் வரைக்கும் தீவிரமாக பல சித்திரங்களை வரைந்து கொடுத்தார். மற்றொரு தோழர் பெயரெல்லாம் வேண்டாமென்று வரைகலை கேலிசித்திரங்களை அனுப்பி வந்தார். இப்படித்தான் கேலிச்சித்திரப் பகுதி உருவானது. அதே போல இணையத்தில் காத்திரமாக எழுதும் நண்பர்களை தேடிச் சென்ற போது கலையகத்தில் பெரிய ஊடகங்கள் கூட மறுக்கும் முக்கிய சர்வதேச அரசியல் நிகழ்வுகளை கண்ணோட்டத்தோடும், மக்கள் சார்பிலும் வைத்து எழுதும் தோழர் கலையரசனை கண்டோம். எமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஆப்பரிக்க தொடரை எழுதினார். தற்போது அது முடிந்து அடுத்த தொடரை ஆரம்பிக்கும் நிலையில் இன்னும் ஒரு ஐந்து வருடமாவது தோழர் கலையரசன் வினவில் தொடர்களை எழுதுவார் என நம்புகிறோம். விரும்புகிறோம்.

அப்படித்தான் மருத்துவர் ருத்ரனையும் பிடித்துப் போட்டோம். ஆனாலும் அன்றாடம் பெருகி வரும் மனத் துயரர்களை கவனித்து விட்டு எழுதுவதற்கு இயலாத நிலையில் அவர் இருக்கிறார். என்றாலும் எழுதவேண்டுமென நாங்கள் மட்டுமல்ல நீங்களும் வலியுறுத்தினால் அவரை மீட்டு வரலாம். இருப்பினும் பல பதிவர்களின் பதிவுகளை படித்து எல்லோரையும் உற்சாகப்படுத்தும் வேலையை அவர் செய்வது பலருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொம்பன், அருள் எழிலன், இராவணன், முதலான நண்பர்களும், தோழர் துரை சண்முகம் போன்றோரும் அவ்வப்போது எழுதி வருகின்றனர். வாசகரான அறிமுகமான பெண் தோழர் ரதி இப்போது ஈழத்து நினைவுகளை தொடராக எழுத ஆரம்பித்திருப்பது நீங்களே வரவேற்ற சமீபத்திய நிகழ்வு.

இருக்கட்டும் இந்த ஒரு வருடத்தில் நாங்கள் என்ன கற்றுக் கொண்டோம்? விவரப்பிழைகளை உடனுக்குடன் வாசகர்கள் திருத்துவதால் அதில் கவனமாக இருக்கவேண்டுமென்ற பொறுப்பு. இல்லினாய் தான், இல்லியானய்ஸ் இல்லை என்பார் அந்த அமெரிக்க நண்பர். மேல்சாதி என எழுதுவது தவறு ஆதிக்க சாதி என நினைவுபடுத்துவார் இங்குள்ள நண்பர். பார்ப்பனியத்தை பற்றி எழுதினால் விசுவாமித்தரின் போல அண்ணன் ஆர்.வி வாதிடுவார் என்பதால் நாங்களும் பல கோணத்தில் பார்ப்பனியத்தின் மனித குல விரோதங்களை புரியவைக்க முயன்றோம். வித்தகன் போன்ற ‘நடுநிலைமையாளர்கள்’ சுட்டிக்காட்டும் பிரச்சினைகள் நாங்கள் இன்னும் கருவை கன்வின்சிங்காக எழுதுவதற்கு கட்டளையிடுகிறது. வெளி உலகத்தின் நடைமுறை அறிவு இணையத்தில் குறைவாக இருப்பதால் எதனையும் விலாவாரியாக எழுதுவதோடு எச்சரிக்கையோடு அழைத்து செல்லும் பொறுப்பை கற்றுத் தந்திருக்கிறது.

இருவேறு கருத்துக்கள் பின்னூட்டத்தில் உக்கிரமாக வாதிடும் போது இரண்டின் பலமும் பலவீனமும் எங்களுக்கு தெரிய வருகிறது.

சுருங்கக் கூறுவது அழகு என்றாலும் முழுமையை உணர்த்த வேண்டுமென்பதற்காக எமது கட்டுரைகள் நீண்டுவிடுகின்றன. இதை நண்பர் ரவிசங்கர் சுட்டிக்காட்டினார். கில்லியிடம் இந்தக் கட்டுரை ஆயிரம் வார்த்தைகளுக்குள் எழுதுவதாக கூறிவிட்டு பின்னிரவில் ஆரம்பித்து இப்போது அதிகாலை ஐந்து மணிநேர நிலவரப்படி 2050 வார்த்தைகளில் நிற்கிறேன். இன்னும் எழுத வேண்டியது ஏராளமிருக்கிறது, என்ன செய்யப் போகிறேன்?

வினவின் வாசகர்களும், பதிவர்களும், தோழர்களும் பல விதங்களில் எங்களை பயிற்றுவித்திருக்கிறார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறோம். வினவின் ஆரம்பத்தில் நிறைய தோழர்கள் எழுதிவந்தார்கள், இப்போது கலகம், குருத்து போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் நின்று விட்டது எங்களுக்கு பெரும் குற்ற உணர்ச்சியை தருகிறது. அவர்கள் சொந்த தளங்களில் எழுதாவிட்டாலும் வினவில் எழுதலாம். விவாதங்களில் பங்கு பெறலாம். அதே போல பிரபல பதிவர்களும், பிரபல பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடும் பிரபலங்களும் இங்கே அதிகம் வருவதில்லை. அவர்களின் உலகம் வேறு, எங்களின் உலகம் வேறு இன பிரிந்தே இருப்பதும் புரிகிறது. இதை எப்படி இணைப்பது?

தனிப்பட்ட வாழ்க்கையின் ரசனைகளை தனியொருவர் எழுதுவதே வலைப்பூ என்றாலும் அந்தவர் சராசரியாக மட்டும் வாழும்போது அவரிடத்தில் என்ன நல்ல இரசனை தோன்றிவிடும்? வாழ்வின் வெளியில் அசாதாரணங்கள் இல்லாத போது சாதரணமே சிறப்பாக எப்படி மாறும்? இப்படித்தான் தமிழ்ப் பதிவுலகம் இருக்கிறது என்பதையும் இங்கே வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். அதனால்தான் ஆனந்த விகடனிலும் அழுகை சீரியல்களிலும் இடம்பெறும் அரதப் பழசான மாமியார் மருமகள் சண்டைகள் போல இங்கே நடக்கின்றன. இதற்கெல்லாம் மொழியின் அதிகாரம் பற்றிய புரிதல்தான் காரணம் என தோழர் பைத்தியக்காரன் நினைத்தால் அதில் நாங்கள் உடன்படவில்லை. உங்களது வினையும், வாக்கும் ஒன்றோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. வாழ்க்கையின் பொருளில் சமூக நோக்கும் பயன்பாடும் இல்லையென்றால் தனிப்பட்ட வாழ்வு தனது இருத்தலுக்காக அற்ப பிரச்சினைகளின் பால் வேறு வழியின்றி விழுந்து விடுகிறது. பதிவரசியலின் இந்த போக்குகளை இனிமேல் அவ்வப்போது எழுத விருப்பம்.

இந்தக்கட்டுரைகளை மட்டும் தமிழ்மணம் தனித்தெரிவாக வைத்தால் நல்லது என்ற கோரிக்கை வைத்தாலே பலர் சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஆனாலும் அவர்கள்தான் தமிழ்மணம் பதிவர் போட்டியில் இரண்டு பிரிவுகளில் வினவின் கட்டுரைகளை முதலிடத்திற்கு தெரிவு செய்தார்கள். தமிழ் மணத்திற்கும், தமிலிஷ் , மாற்று, திரட்டி மற்ற சகல திரட்டிகளுக்கும் எமது நன்றிகள்.

தமிழ் ஸ்டூடியோ நண்பர்கள் சிறந்த வலைப்பதிவருக்கு மாதவிருது வழங்கும் திட்டத்தை அறிவித்து முதல் பதிவராக வினவை தெரிவு செய்தார்கள். அவர்களுக்கும் எமது நன்றிகள்.

எதிர்காலத்தில் செய்யவேண்டியதையும் நிறைய யோசித்திருக்கிறோம். எமது இயக்கங்களின் பாடல் தொகுப்புக்கள், உரைகள், ஆடியோ பேட்டி, வீடியோ நிகழ்ச்சிகள், நூல்கள், பு.க,பு.ஜ இதழ்கள் அத்தனையும் வலையேற்றம் செய்யும் பிரம்மாண்டமான கனவும் உண்டு. இதற்கு நாலைந்து கில்லிகள் வேண்டும். மார்க்சியக் கல்வி, அரசியல் வாழ்க்கையின் அனுபவங்கள், கேள்வி பதில் என நீண்ட திட்டங்களும் உண்டு. சில முக்கியமான நிகழ்வுகளை வினவில் நேரடியாக காட்டும் யோசனை கூட இதெல்லாம் எப்படி சாத்தியமென்பது தெரியாவிட்டாலும் உண்டு. ரவிசங்கர் போன்ற நண்பர்கள் அதற்கு உதவுவார்கள்.

ஒரு வருடத்தில் 140 நாடுகளிலிருந்து ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்ஸ்கள், 6800 மறுமொழிகள், இதில் தவிர்க்க இயலாமல் வினவின் பெயரில் போட்ட மறுமொழிகள் நூறுக்கும் குறைவே. மற்ற நண்பர்களைப் போல நாங்கள் மறுமொழிகளுக்கு நன்றி சொல்வதில்லை. சொல்லியிருந்தால் இன்னும் ஒரு ஐயாயிரம். இருக்கட்டும். பிரமிப்பாக இருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமென்று நாங்கள் எதிர்பார்த்ததில்லை. நடந்திருக்கிறது. அதனால் சற்றே பயமாகவும் இருக்கிறது. ஆனாலும் இனி வினவின் பாதையை நீங்களும் வினவுமே தீர்மானித்துக் கொள்வீர்கள். புரட்சியின் ஒரு சிறு மாதிரியை எங்களுக்கே காட்டிய வினவின் இந்த சிறு வெற்றியை எங்களது ஆசான்களுக்கு அர்பணிக்கிறோம். அது சரி, எமது ஆசான்கள் யார்?

நல்லது நண்பர்களே இனி உங்களைப் பற்றி…….

வினவின் இத்தனை பிரயத்தனங்களும் எதற்காக..?வினவு எங்களது மாபெரும் அரசியல் வாழ்வின் ஒரு துளி. இந்தக்கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது ஆயுள்தண்டனை பெற்று சிறையில் அரசியல் உணர்வை இழக்காமல் வாடும் தோழர்களை நினைத்துப் பார்க்கிறேன். கடந்த காலத்தில் எதிரிகளுடனான மோதலில் உயிரை தியாகம் செய்த தோழர்கள் சமீப காலம் வரை உண்டு. ராகுல்காந்தியை மறித்ததில் துவங்கி பல்வேறு வழக்குகளுக்காக எமது தோழர்கள் நீதிமன்றத்திற்கு அலைந்த வண்ணமிருக்கிறார்கள். போராட்டத்தினால் பணியிழந்து அரசியல் வேலையை அதிகப்படுத்தியிருக்கும் தோழர்கள் இருக்கிறார்கள். இளவயதிலேயே தனது வாழ்வை முழுநேர அரசியிலுக்கு அர்ப்பணித்தவர்கள் ஏராளம். கலப்பு மணம் செய்து ஊரையும் உறவையும் பகைத்துக் கொண்டு கிராமங்களில் தம்பதி சகிதராக போராடும் முகங்களும் வந்து போகின்றன. சிறுவயதிலேயே கலைக்குழுவிற்கு வந்து தமிழகம் முழுவதும் தமது குரல்களால் பயணம் செய்த அந்த தோழர்களின் கடுமுழைப்போடு ஒப்பிடும் போது இந்தக் கட்டுரை எழுதுவது ஒன்றும் பெரிய விசயமல்ல. வரும் சனி, ஞாயிறு தமிழகத்தின் எல்லாப் பேருந்து நிலையங்களிலும், சென்னையின் புறநகர் ரயில்களிலும் எமது தோழர்கள் பத்திரிகை விற்பனை, பிரச்சாரம், நிதி வசூல் என தனியாக, சிறு அணியாக செல்வதற்கு முன் இப்போது தூக்கத்தை விட்டு எழுந்திருப்பார்கள். வன்னியிலோ எதுவுமின்றி நம் மக்கள் இன்னும் எத்தனை காலம் சிறைபடநேரிடுமோ என்பது தோழர் இரங்குவோனுக்கு மட்டுமல்ல பலருக்கும் நெருப்பாய்ச் சுடுகிறது.

தண்டகாரண்யாவிலும், பீகாரிலும் கானகத்தில் கடும் இன்னல்களுக்கிடையே மாவோயிச தீவிரவாதிகள் என்ற பெயரில் பழங்குடி மக்களை விடுவிக்கும் அந்த தோழர்களெல்லாம் நகரங்களிலிருந்து தமது நடுத்தர வாழ்வை உதறிவிட்டு சென்றவர்கள். ஈராக்கிலோ நாளைக்கு வெடிப்பதற்கு இன்றைக்கு ஒரு தற்கொலைப் போராளி விழித்துக் கொண்டிருப்பான்.

பழைய உலகின் அநீதிகளுக்கு எதிராக புதிய உலகம் படைக்கும் முயற்சிகள் இப்படித்தான் உலகெங்கும் போராடுகின்றன. மனித குலத்தை வருங்காலத்தில் முற்றிலும் அடிமைச் சிறையிலிருந்து விடுவிக்க எத்தனிக்கும் இந்தப் போராட்டத்தில் நீங்கள் பார்வையாளரா இல்லை பங்கேற்பாளரா?

வந்தவர்கள் பார்ப்பதும், பார்த்தவர்கள் பங்கேற்பதும், பங்கேற்றவர்கள் களத்தில் இறங்குவதும், இறங்கியவர்கள் தோழர்களாக பரிணமிப்பதற்கும்தான் வினவு. இதன்றி வேறு நோக்கம் எதுவுமில்லை என்பதை பகிரங்கப்படுத்துவதில் தயக்கம் இல்லை. அல்லும் பகலும் நெருக்கித் தள்ளும் வாழ்வில் சுயநலத்தினால் உந்திப்பட்டு வாழ்ந்தால் நமக்கும் மந்தைகளுக்கும் என்ன வேறுபாடு? பின்னொரு நாளில் நான் இப்படிக் கழித்தேன் என்று நினைவு கூர்வதற்கு மந்தைகளிடம் ஏதுமில்லை. நானிலிருந்து விடுபட்டு நாமுக்காக வாழ்வதே வாழ்க்கையின் முழுமையை ஒளியூட்டி உணர்த்துகிறது. இது மதவாதிகள் கூறும் ஆன்ம விடுதலை என்ற சொர்க்கத்தின் இன்பத் திறவுகோலல்ல. சமூகவிடுதலைக்காக தன்னை இழந்து தம்மை மீட்கும் மனிதகுலத்தின் ஆகப்பெரும் கனவு. இந்தக் கனவுக்காக வாழ்ந்தோருக்கு நினைவு கூற எதுவுமில்லை. அவர்கள் விட்டுச்சென்ற நினைவடித்தடங்களைத்தவிர. தங்களை கிடத்தி அவர்கள் சமைத்திருக்கும் அந்த ராஜபாட்டையில் நாம் ஓடிச் சென்று அடுத்த பாதையை செதுக்கவேண்டும். அப்போது நீங்கள் கசடுகளை இழந்து நெருப்பில் நுழைந்து வைரமாய் புடம்போடப்பட்டு ஒளிர்கிறீர்கள். அடுத்த தலைமுறையில் வரும் மனிதர்கள் இந்த இருட்டு குகைகளின் தடையை நம் ஒளியால் கடக்கிறார்கள். பாதையும் முடிவதில்லை. பயணங்களும் சோர்வதில்லை. இருப்பது ஒரே வாழ்வு, தடுப்பதும் தாண்டுவதும் ஒரே முறைதான். வாருங்கள் அந்த நெடிய பயணத்தின் சாகசத்திற்கு உங்களையும் அழைத்துச் செல்கிறோம்.

பின்னொரு நாளில் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

தமிழகத்தில் இருக்கும் நண்பர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் இந்தப் பாதையின் அரசியல் பரிமாணத்தை நேரிலே தெரிந்து கொள்ளலாம். உங்களால் இயன்ற அளவு களப்பணியில் இறங்கலாம்.

இந்த மாபெரும் பணிக்கு உங்களது உதவித் தொகையை தருமவானாக அல்ல, குற்ற உணர்ச்சியுடன் கூடிய கடமை உணர்ச்சியுடன், கிள்ளியல்ல அள்ளி, உங்களால் முடிந்ததை அல்ல உங்களால் முடியாததை, கோவில் உண்டியல் போல அல்ல, குடும்ப பொறுப்பைச் சுமக்கும் இன்பச்சுமையாக நிதி வழங்கலாம். வழங்க வேண்டும். புரட்சிகர அமைப்புகள் தமது அரசியல் பணிக்கு மக்களிடம் வாங்கும் மரபை இங்கே நாங்களும் வைத்திருக்கிறோம். எங்களது அரசியல் பணிக்கு நீங்கள் வழங்கும் ஆதரவில் வினவின் இருப்பும் நலமுடன் வளரும். வினவில் இப்போது நிறைய பார்வையாளர்கள் வந்தாலும் எப்போதும் விளம்பரங்கள் போடுவதாக இல்லை. விளம்பர உலகின் வழி முதலாளிகள் ஊடகங்களை அடக்கியாளும் வழியை நாம் அறிவோம். எமது பத்திரிகைள் கூட இப்படித்தான் பல ஆண்டுகளாய் நடத்தப்படுகின்றன. வினவிலும் கம்யூனிஸ்டுகள் உண்டியலேந்த ஆரம்பித்துவிட்டார்கள் என ‘அவர்கள்’ புரளிபேசலாம். ஆனால் மக்களின் புரட்சிக்கு ஆள்பவர்களிடமும், அரசுகளிடமும் கையேந்த முடியாது. ஏந்தினால் அது எதிர்ப்புரட்சி. மக்களிடம் கேட்பது கம்யூனிஸ்ட்டுகளின் உலக வழிமுறை. ஆதரியுங்கள். அமைப்புத் தோழர்கள், வெளிநாட்டில் இருக்கும் தோழர்கள், பு.க, பு.ஜ வாசகர்கள், ம.க.இ.கவின் அரசியலை அறிந்தவர்கள் அனைவரும் இதை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து உதவ வேண்டும். வினவிற்கு புதிதாய் வந்தவர்கள் எமது அரசியல் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்து இந்த பணிக்கு கடமையுடன் உதவலாம். உங்களது நிதி உதவி எங்களது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.

வினவின் வாசகர்கள் தரும் நன்கொடைக்காகவே தனிச்சிறப்பாக ஒரு வங்கிக் கணக்கு ம.க.இ.க மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலகெங்கிலிருந்தும் அனுப்பலாம். விரைவிலேயே இந்த பணியை இன்னும் எளிமைப்படுத்தி வசதிகள் செய்கிறோம். கணக்கு விவரம்,

SRINIVASAN.R

STATE BANK OF INDIA, CHETPUT BRANCH, CODE NO 1852

A/C NO : 3 0 8 2 6 2 2 5 4 2 4

காசோலை, வரைவோலை அனுப்பவிரும்புவர்கள் SRINIVASAN.R என்ற பெயருக்கு எடுத்து அனுப்பலாம். தபால் முகவரி

SRINIVASAN.R, PUTHIYA KALACHARAM,

NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,

SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.

PHONE:044- 23718706.

நேரில் தரவிரும்பவர்கள் இந்த முகவரிக்கு வருகை தரலாம். தொலைபேசி மூலம் உறுதி செய்து வினவு தோழர்களையும் இங்கு சந்திக்கலாம்.

நன்கொடை அனுப்பும் நண்பர்கள் அதை தனிமடலிலும் தெரிவிக்குமாறு கோருகிறோம். அனைவருக்கும் ரசீதுகள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

ஏற்கனவே நாங்கள் கோராமலேயே சில நண்பர்கள் மாதந்தோறும் உதவித்தொகை அனுப்பிவருகிறார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்.

சரி,

ஒராண்டு அனுபவத்தையும், கோரிக்கையும் எங்கள் தரப்பில் வைத்துவிட்டோம். விடுபட்டதை நீங்கள் எடுத்து தருவீர்கள். ஆனால், வினவு குடும்பத்தின் அங்கத்தினரான உங்களது அனுபவத்தை பின்னூட்டத்தில் தெரிவியிங்கள், அப்படி முடியவில்லை என்றால் அலைபேசியில் சொல்லுங்கள்.

பார்க்கலாம்.

ஓராண்டு முடிந்து விட்டது. அடுத்த ஆண்டு துவக்கத்தை ஒட்டி வரும் திங்களன்று ஒரு சிறப்பு கட்டுரை மைக்கேல் ஜாக்சனைப் பற்றியும் அடுத்த நாட்களில் ஆரம்ப கால வினவில் வாசகர் வரவேற்பு பெற்ற கட்டுரைகளும், ஈழம் குறித்த மூன்று முக்கிய வெளியீடுகளும் வழக்கமான தொடர்களும் வெளியிடப்படும்.

ஒரு வழியாய் வினவின் ஒராண்டு அனுபவத் தொகுப்பை எழுதி முடித்த போது வார்த்தைகள் 2984 காட்டுகிறது.

ஆயினும் காத்துக்கிடக்கும் பணிகளைக் காணும்போது இவை போதாது என்றே தோன்றுகிறது ! சரிதானா?

நட்புடன்

வினவு

வினவு தளத்திலிருந்து http://www.vinavu.com

உங்கள் வாழ்த்துக்களும் விமர்சனங்களும் ; http://www.vinavu.com/2009/07/17/vinavu-year-one/

ஒராண்டு நிறைவை கொண்டாடும் வினவுதளத்துக்கு வாழ்த்துக்கள்

சிவப்பு சிந்தனையை (மாக்சிசத்தை)புதிய கலாச்சாரம் என்ற புதுச்சட்டியில போட்டு பறிமாறா முயற்சி செய்கிறீங்கள்

போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், தமிழினவாதிகளுக்கும் இந்த இணையப்படை மிகுந்த பொறாமையை ஏற்படுத்துகிறது
.

தோழரேரேரேரே தமிழினவாதியும் போலி கமினிஸ்டும் ஒண்றோ..

சிவப்பு தலையில், கருப்பு உடலில் கட்டுரை வந்ததும் குழந்தை பிறந்த உற்சாகம்.

சிவப்புதலையை வெள்ளை உடம்புகள்,சப்பை உடம்புகள்(சீனா) எல்லாம் முயற்சி செய்து தோல்வியை தழுவிகொன்டபின்பும்,நீங்கள் அதை கருப்புடம்புக்கு போட்டு போட்டு அழகு பார்க்கவேண்டும் என்று அடம்பிடிக்கிறீங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஆயுள்தண்டனை பெற்று சிறையில் அரசியல் உணர்வை இழக்காமல் வாடும் தோழர்களை நினைத்துப் பார்க்கிறேன். கடந்த காலத்தில் எதிரிகளுடனான மோதலில் உயிரை தியாகம் செய்த தோழர்கள் சமீப காலம் வரை உண்டு. ராகுல்காந்தியை மறித்ததில் துவங்கி பல்வேறு வழக்குகளுக்காக எமது தோழர்கள் நீதிமன்றத்திற்கு அலைந்த வண்ணமிருக்கிறார்கள். போராட்டத்தினால் பணியிழந்து அரசியல் வேலையை அதிகப்படுத்தியிருக்கும் தோழர்கள் இருக்கிறார்கள். இளவயதிலேயே தனது வாழ்வை முழுநேர அரசியிலுக்கு அர்ப்பணித்தவர்கள் ஏராளம். கலப்பு மணம் செய்து ஊரையும் உறவையும் பகைத்துக் கொண்டு கிராமங்களில் தம்பதி சகிதராக போராடும் முகங்களும் வந்து போகின்றன. சிறுவயதிலேயே கலைக்குழுவிற்கு வந்து தமிழகம் முழுவதும் தமது குரல்களால் பயணம் செய்த அந்த தோழர்களின் கடுமுழைப்போடு ஒப்பிடும் போது இந்தக் கட்டுரை எழுதுவது ஒன்றும் பெரிய விசயமல்ல
. வரும்

தோழர்களே இப்படியான முயற்சியில் நாம் இறங்கி இழந்தது எண்ணில் அடங்காது.4லட்சத்திற்க்கு மேற்பட்ட உயிர்கள்..எமது போராட்டத்த நசுக்கியதே இந்த மாக்சிச ,மற்றும் ஜனநாயக கும்பல்கள்தான் ..மனிதாபிமான முறையில் கூட ரஸ்யா,சீனா, கியுபா,வியட்னாம் போன்றசிவப்பு தலைநாடுகள் குரல் கொடுக்கவில்லை ,பிறகு ஏன் சிவப்பு தலை கறுப்பு உடம்புக்கு?

Edited by Jil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.