Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு ஒரு நாளும் வாழ்த்தாது!!!

Featured Replies

p46a.jpg

'மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்று 'பூம்புகார்' திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது. 'மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்' என்று எழுதினார் ஜெயகாந்தன். 'அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காகஅழுதாலும் அழுவது நல்லதுதான். ஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், 'விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை' விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம். மகிந்தா ராஜபக்ஷேவும், ரணில் விக்கிரமசிங்கேவும் 2005-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரிக்க மறுத்தது ஒரு பெரிய அரசியல் பிழை என்பது கலைஞரின் கருத்து. ஒரு லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்ரணில் தோல்வியைத் தழுவினார். ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்குப் பணிந்து தேர்தலைப் புறக்கணிக்காமல், ரணிலுக்கு ஆதரவாக வாக்குகளைவழங்கியிருந்தால், ராஜபக்ஷே அதிபராக வந்திருக்க முடியாது என்பதே நம் முதல்வரின் வாதம். 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் பிரபாகரன் தமிழர்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால், ரணில் வெற்றிபெற்று அமைதிப் பேச்சைத் தொடர்ந்திருப்பார் என்பது கலைஞரின் நம்பிக்கை. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1998 மற்றும் 1999-ல் ஆற்றிய 'மாவீரர் தின' உரைகளில், 'சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சுகளில் பங்கேற்க நாம் தயார்!' என்று பிரகடனம் செய்தார். நவம்பர் 2001-ல் மாவீரர் நாள் உரையில், 'ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமை கொள்ள முனையும் அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்து வருகிறோம். இக்கொடிய போருக்கு முடிவு கட்டி, நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதாயின், போர் வெறி கொண்ட இனவாத சக்திகளை இனங்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நிதி வழங்கவும் சிங்கள மக்கள் முன் வர வேண்டும்' என்று பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார். ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகளிடம் அமைதியான அரசியல் தீர்வை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாற்றமுற்றனர் என்பதுதான் வரலாறு. இதை நம் முதல்வர் நன்றாகவே அறிவார். ஆனால், பதவி நாற்காலிப் பற்றுதான் அவர் நினைப்பதை வெளியில் சொல்லி, 'நெஞ்சுக்கு நீதி' தேடுவதைத் தடுத்துவிடுகிறது. ஈழத் தமிழர்கள் 1987-ல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத் தெருக்களில் வீதியுலா வந்தபோது, 'நிரந்த அமைதியையும், உரிமை மிக்க வாழ்வையும் வழங்க வானத்து தேவர்களே வரமளிக்க மண்ணில் வந்து இறங்கியதுபோல்' மகிழ்ந்து வரவேற்றனர்.

p46.jpg

ஆனால், அந்த அமைதிப் படையால் தங்கள் அமைதி முற்றாகக் குலைந்தபோது அவர்கள் திகைத்து நின்றனர். அப்போதும் நம் முதல்வராக இருந்த கலைஞர் அந்த 'அமைதிப் படை' நாடு திரும்பியபோது தேடிச் சென்று வரவேற்க மறுத்தார். அன்று கலைஞருக்கு இனம் முக்கியமாகப் பட்டது. இன்று...? சந்திரிகா குமாரதுங்காவால் இனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அவர் 1994-ல் வெற்றி பெற்றபோது, 'காரிருள் கலைந்து வெளிச்ச விழுதுகள் ஈழ நிலத்தில் இறங்கியதாக' தமிழர் நெஞ்சம் மீண்டும் நம்பிக்கை கொண்டது. வளையல்களுக்கும், புடவைகளுக்கும் அது சந்திரிகாவின் பெயர் சூட்டி மகிழ்ச்சியில் மிதந்தது. ஆனால், வாக்களித்தபடி ஈழத்தமிழர் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவுமில்லை; போரை நிறுத்த சந்திரிகா அரசு சம்மதிக்கவுமில்லை. அவருடைய ஆட்சியில்தான் 'ஜெய சுக்குறு' (வெற்றி நிச்சயம்), 'தீச்சுவாலை' போன்ற மோசமான ராணுவ நடவடிக்கைகள் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டன. ரஷ்யா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து நவீன போர்க் கருவிகளையும், படை விமானங்களையும் சந்திரிகா அரசு வாங்கிக் குவித்தது. யாழ் நகரை, சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து, ஐந்து லட்சம் தமிழர் இடம் பெயர்ந்தனர். இந்த மாபெரும் மனித அவலத்தை உலகநாடுகள் அன்றும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தன. 'சமாதான தேவதை' சந்திரிகாவின் சுயமுகம் வெளிப்பட்டபோது ஈழத்தமிழர்கள் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடந்தனர். சந்திரிகாவிடம் ஏமாற்றமடைந்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேவிடம் நம்பிக்கை கொண்டனர். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதாகவும், பொருளாதாரத் தடை, பயணத் தடை போன்ற முட்டுக் கட்டைகளை முற்றாக நீக்குவதாகவும் 2001-ல் நடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியது. 'சமாதானம் வேண்டி நிற்கும் சக்திகளுக்கும், அதற்கு எதிரான தீவிரவாத சக்திகளுக்கும் இடையில் போட்டியாக இத்தேர்தல் நடக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவ வேண்டுமா... போர் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது!' என்று கூறிய பிரபாகரன், சந்திரிகாவின் சுதந்திரா கட்சிக்கு எதிராக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். 'ரணிலின் கட்சி விடுதலைப் புலிகளுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது' என்று சந்திரிகா குற்றம் சாட்டினார். தமிழர் ஆதரவுடன் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ரணிலிடமும் தமிழர் நம்பிக்கை துரோகத்தையே சந்தித்தனர். நார்வே நட்டின் முயற்சியால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்தது. பிப்ரவரி 22, 2002 அன்று வன்னியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் முதலில் கையப்பமிட்டார். பிரதமர் ரணில் கையப்பம் இட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலுக்கும் சாவகச்சேரிக்கும் சென்றார்.p48.jpg வீதியெங்கும் தமிழர் கூடிப் புதிய நம்பிக்கையுடன் ரணிலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் முதல் பேச்சு வார்த்தை தாய்லாந்தில் 2002 செப்டம்பரில் நடந்தது. அங்கேயே அக்டோபர் - நவம்பரில் இரண்டாவது பேச்சு வார்த்தையும் தொடர்ந்தது. சமாதானம் நாடிய பிரபாகரன், தனித் தமிழீழம் என்ற கோரிக்கையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு இறங்கி வந்தார். 'உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்துக்கு இசைவாக நாமும் எமது போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே. சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகுக்கு உணர்த்தவே, நாம் ராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம். எமது மக்களின் தேசிய இனப் பிரச்னைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின், அதனை முயன்று பார்ப்பதில் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்' என்றார் பிரபாகரன். ஆனால், ரணில் தமிழினத்தைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றினார். தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி, ஜப்பான் என்று ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த நிலையிலும் தமிழினம் எந்த உரிமையையும் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டது. கலைஞர் இன்று கொண்டாடும் இந்த ரணில் விக்கிரமசிங்கே, பேச்சுவார்த்தை நடக்கும்போதே கருணாவை, பிரபாகரனிடமிருந்து பிரித்து 2004-ல் விடுதலைப் புலிகளிடையே பிளவை உண்டாக்கியவர். கிழக்கு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் வலிமையைப் பலவீனப்படுத்த கருணாவை ரணில் அரசுபயன் படுத்திக் கொண்டது ஒருமலினமான வஞ்சகப் படலம்.இலங்கை அதிபராக இருந்த சந்திரிகாவின் அரசியல் சூழ்ச்சியை எதிர்க்க, விடுதலைப்புலிகளைத் தன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக் கொடுத்தவர் ரணில். போர் நிறுத்த ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்றாமல் அதைத் திறந்த வெளிச் சிறைச்சாலையாக வைத்திருந்ததன் விளைவாகவே பிரபாகரன் ரணிலிடம் நம்பிக்கைஇழந்தார்; பேச்சு வார்த்தை முறிந்தது. சிங்களத் தலைவர்கள் அனைவரும் நிரந்தர அமைதி யையும், அரசியல் தீர்வையும் உருவாக்குவதற்கான நேர் மையும், உண்மையான அர்ப் பணிப்பும் உள்ளவர்கள் இல்லை என்பதையும்தங்கள் பதவியைத்தக்க வைத்துக் கொள்ள தமிழினத்துக்கு எதிராக சிங்களப் பேரின வாதத்தை வளர்க்கவும், பௌத்த பிக்குகளின் ஏவல் கூவல்களாகச் செயற்படவும் சித்தமாக உள்ளவர்கள் என்பதையும் கலைஞர் அறியாதவரா? எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வு இன்று அவசியந்தானா? இந்திய அரசுதான் ஈழத்தமிழரை அழிப்பதில் ராஜபக்ஷே அரசுக்கு முழுமையாக உதவியது என்பதை சரத் ஃபொன்சேகா போட்டுடைத்த பின்பும், மத்திய அரசின் அத்துமீறிய தமிழின அழிப்பு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து வாய் திறக்க முடியாத நம் முதல்வர், இன்னும் எத்தனை காலம் 'சகோதர யுத்தம்' குறித்து விதம் விதமாக வியாசம் எழுதி பிரச்னையை திசை திருப்பப் போகிறார்? போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், நிலங்களை விட்டு ரணில் ஆட்சியில் ராணுவம் வெளியேறவில்லை. மக்கள் வாழிடங்கள் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்ததால் மீள்குடியேற்றம் நிகழவில்லை. 800 ச.கி.மீட்டர் பரப்புள்ள யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்களப் படையை நிரந்தரமாகக் குவித்து வைத்திருந்த ரணிலுக்கு, பிரபாகரன் மீண்டும் தேர்தலில் ஆதரவு தர மறுத்ததைக் கலைஞர் அரசியல் பிழை என்கிறாரா? 'அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்; தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்' என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை? இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை? பதவி நாற்காலி பறிபோய்விடுமே என்ற அச்சம் காரணமாகவே புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்துவிட்டதா? வன்னி மக்கள் வாழ் நிலத்தில் பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகள், எரிகுண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள் என்று சர்வதேசப் போர்விதிகளுக்கு மாறாக இரக்கமிலா ஓர் அரக்க ஆட்சி பல்லாயிரம் தமிழரைக் கொன்று குவித்ததை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை அமைப்பில் விவாதிக்க ஜெனிவாவில் மே 25, 2009 அன்று சிறப்புக் கூட்டம் நடந்தபோது இந்தியா வெளிநடப்பு செய்தபோதும், இலங்கை அரசுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்டியபோதும் இனவுணர்வுடன் அவற்றை எதிர்த்து எழுத ஏன் கலைஞர் பேனாவைக் கையில் எடுக்கவில்லை? அசோக சக்கரத்தைத் தேசியக் கொடியில் வைத்திருக்கும் காந்தி தேசத்தை ஆளும் அரசு, தமிழினத்துக்கு எதிராக ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய ரத்தக் குளியலுக்கு ரகசிய ஆதரவு வழங்கியதோடு, அழித்தவன் கைகளிலேயே புனர்வாழ்வு தர ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்த கொடுமைக்கு உடந்தையாக நின்ற கலைஞரை வரலாறு எப்படி வாழ்த்தும்? சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா? பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார்? எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார்? வேலூர் செயற்குழுவில் சம்பத் தாக்கப்பட்டதும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கண்ணதாசன் மீது செருப்பு வீசப்பட்டதும் சகோதர யுத்தத்தின் சமிக்ஞைகளன்றி வேறென்ன? 'மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ, பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது' என்றார் ஹென்றி மெய்ன்.விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது. இதுதானோ கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!

source:anantha vikatan

--

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.