Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸைச் சந்தி சிரிக்கவைத்த எஸ்.வி.சேகர்

Featured Replies

காங்கிரஸைச் சந்தி சிரிக்கவைத்த எஸ்.வி.சேகர்

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அப்படி நம்மைச் சிரிக்கவைப்பவர் எஸ்.வி.சேகர். 2 நாளுக்குமுன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவருடனும் புலவர் புலமைப்பித்தனுடனும் கலந்துகொண்டேன்.

தமிழக முதல்வர் கருணாநிதி நடத்தப்போகும் செம்மொழி மாநாட்டைப் பற்றிய விவாதம் என்பதால், எடுத்த எடுப்பிலேயே விவாதத்தில் சூடு பறந்தது. ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தடுக்க அறிவித்ததைப் போலவே தி.மு,க.வினர் பதவி விலகியிருந்தாலும் காங்கிரஸ் விலகியிருக்காது என்று விவாதத்தின்போது சேகர் குறிப்பிட, காங்கிரசார் எந்த அளவுக்கு தமிழின விரோதிகள் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்ததற்காக நான் பாராட்டினேன். அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று மறுக்க முயற்சித்தாரே தவிர, சேகராலேயே முதலில் சொன்னதை மாற்றிச் சொல்லமுடியவில்லை.

அவர் சொன்னதற்கு அதைத் தவிர வேறென்ன அர்த்தம்? நாடக மேடைகளில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவைப்பவர், தம் பங்குக்கு காங்கிரஸைச் சந்தி சிரிக்கவைத்தார். சேகரையெல்லாம்விட நம்மை அதிகம் சிரிக்கவைப்பவர், தங்கபாலு. சென்னையில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியொன்றில், காங்கிரஸ் தான் அரசியலை சேவையாகச் செய்கிறது என்று அவர் பேசியது, சேலத்துக்காரர்களுக்கும் கும்பகோணம் குசும்பு கைவந்த கலை என்பதைப் பறைசாற்றியது. எம்.பி.யாகவும் இல்லாததால், வாணிமகால், நாரதகான சபா, ராஜா அண்ணாமலை மன்றம் என்று தங்கபாலு ஒரு ரவுண்ட் அடித்துவிடக்கூடாது. சேகர் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.

இன்னொருபுறம், ஈரோடு குப்புறக் கவிழ்த்தபிறகு, கார்த்தி சிதம்பரம், திருமகன் ஈவெரா, அருள் அன்பரசு போன்ற இளம் தியாகச் சுடர்களிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டதாக நாம் நினைத்த இளங்கோவனைத் திரும்பவும் பரபரப்பு அரசியலில் இறக்கிவிட்டிருக்கிறது பெட்ரோல் குண்டு. இளங்கோவன் பழையபடி அறிக்கைவிட ஆரம்பித்துவிட்டார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கிவிட்டார். தன்மானத் தலைவர் பட்டத்துடன் நகர்வலம் வர ஆரம்பித்துவிட்டார். பேனர் கிழிக்கக்கூட தயாராகிவிட்டார். அவர் வேறு என்னதான் செய்யமுடியும்...... கட்சிக்கும் தலைவரில்லை.

மக்களவையிலும் உறுப்பினர் இல்லை. டெல்லிக்கும் சென்னைக்குமாய் பறந்து பறந்து பாலிடிக்ஸ் செய்த மனிதரை பெவிலியனில் உட்காரவைத்து ஆட்டத்தை வேடிக்கை பார்க்கச் சொன்னால் எப்படி? திருமாவளவனின் தயவால் சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் பார்டரில் தப்பித்தமாதிரி, ஈரோட்டில் தானுன் மயிரிழையில் தப்பிவிட முடியும் என்றுதான் இளங்கோவனும் நினைத்திருப்பார். அது வொர்க்கவுட் ஆகவில்லை. திருமாவளவன் புத்திசாலி. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதும், அந்தக் கட்சித் தலைவர்கள்மீது வைத்திருந்த 'அபார' நம்பிக்கையால், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் படத்தைப் போட்டுத்தான் விளம்பரம் செய்தார். . இவரோ நேரம் காலம் தெரியாமல் 'முத்துக்குமாரா, அவர் யார்' என்று கேட்டார். நீ யார்- என்று திருப்பிக் கேட்டார்கள் ஈரோடு வாக்காளர்கள். ஒரு நேரத்தில் வாயாலேயே சோனியா காங்கிரஸை வளர்த்த பெரியாரின் பேரனை, இப்போது வாய் தான் வழுக்கி விழவைத்தது.

இன்னொருபுறம், சிதம்பரத்தின்மீது காங்கிரஸ் தலைமைக்கு இருக்கும் பாசமும் நேசமும் இளங்கோவன் மீது இல்லை. தோற்றாலும் ஜெயித்தாலும் சிதம்பரத்தைக் காப்பாற்றியே தீர்வதென்பதில் காங்கிரஸ் உறுதியாயிருந்தது. வாக்கு எண்ணிக்கையில் சிதம்பரம் தொடர்ந்து பின்னிலையில் இருந்தபோது கூட, தோற்றாலும் அவர் அமைச்சராக்கப்படுவார் என்கிறதொனியில் அவசர அவசரமாக அறிவித்தது டெல்லி. இளங்கோவன் விஷயத்தில் அப்படி ஏதாவது அறிவிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறுகண்ணில் வெண்ணெய் என்கிற இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையால் மனமுடைந்துபோனாரோ என்னவோ, பெட்ரோல் வெடிகுண்டிலிருந்து தன்னுடைய பலத்தைக் காட்டும் முயற்சியில் இறங்கிவிட்டார் ஈ.வி.கே.எஸ். இத்தனைக்கும், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்கிற கட்சி இருக்கிறது என்பதை பரபரப்பாக வெளிப்படுத்தியவர் இளங்கோவன்தான்.

காங்கிரஸுக்கு எதிராக சிதம்பரம் தனிக்கொடி கட்டியபோதும், இளங்கோவன் காரில் காங்கிரஸ்கொடி தான் பறந்து கொண்டிருந்தது. 'இந்தியா ஒளிர்கிறது' என்ற பாரதீய ஜனதாவின் பிரச்சாரத்தை, தேர்தலில் நிற்பதற்கான உத்தரவாதம் கிடைத்தபிறகு எதிர்த்தவரில்லை அவர், தொடக்கத்திலிருந்தே எதிர்த்தார். இப்படி எல்லாவிதத்திலும் சிதம்பரத்துக்கும் அவருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இருந்து என்ன பயன்? வாசலில் இவரைக் காக்கவைத்துவிட்டு, வீட்டுக்குள் சிதம்பரத்துக்கு விருந்து பரிமாறுகிறது காங்கிரஸ். வெல்லம் தின்கிறார் அவர், விரல் சூப்புகிறார் இவர். கொடுமைடா சாமி! சொந்தப் பொண்டாட்டியிடம் அடி உதை படுபவன் ரேடியோ பெட்டியில் சத்தத்தைக் கூட்டிவைப்பதைப் போல, சகட்டுமேனிக்கு சவுண்டு கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் இளங்கோவன்.

ஒருசமயத்தில் பரபரப் அரசியல் நடத்தியபோது, அவர் வெறும் இளங்கோவன். இப்போதோ, முன்னாள் மத்திய அமைச்சர். இதை அவர் மறந்துவிடக்கூடாது. இந்திரா அம்மையார் காலத்தில்தான் எமர்ஜென்ஸி இருந்தது. இப்போது இது ஒரு ஜனநாயக நாடு என்றுதான் சொல்லப்படுகிறது. 'பழைய நினைப்புடா பேராண்டி' என்பதுபோல் இளங்கோவன் நடந்துகொள்ளக்கூடாது. பொது இடத்தில் பிரபாகரன் பேனர் வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம் என்று இவராகவே ஒரு முடிவுக்கு வந்தாலும், அதை அகற்றுவதற்கும் கிழித்து எறிவதற்கும் இவரென்ன ஏட்டு ஏகாம்பரமா? சட்டவிரோதமென்றால் அதைப்பற்றிப் புகார் கொடுப்பதற்காகத்தான் காவல்நிலையங்கள் இருக்கின்றன.

பொழுதுபோக்கு கிளப்புகளிருந்து வெளியே வரும்போது மட்டுமே ஆவேச அறிக்கை விடும் ஒருசில தலைவர்களைப் போல், காவல்நிலையங்களில் உட்கார்ந்து கார்ட்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்களா போலீசார்? மத்திய அமைச்சர் பதவியிலிருந்த இளங்கோவனுக்கே இது தெரியாவிட்டால், மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது? நீதிமன்ற வளாகத்திலேயே கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரை வெட்டிக் கொல்பவனுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்? 'இளங்கோவன் ஒன்றும் விஷயம் தெரியாதவரல்ல, இப்படியெல்லாம் மனம்போனபோக்கில் சட்டம் ஒழுங்கைக் கையில் எடுத்துக்கொள்வது சட்டவிரோதம் என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரியும், தெரிந்தேதான் இதைச் செய்கிறார், இதெல்லாம் டெல்லி எஜமானர்களுக்கு அவர் கொண்டுவரும் கவன ஈர்ப்புத் தீர்மானம்' என்று ஒரு விமர்சனம் எழுகிறது.

அப்படியாவது தன்னை ஒரு பொருட்டாக அவர்கள் மதிக்கமாட்டார்களா என்று இவர் நினைக்கிறாரோ என்னவோ! ஒருவேளை அதெல்லாம் தனக்குத் தெரியாதென்றால் அதையாவது வெளிப்படையாக அவர் அறிவிக்கட்டும். இவ்வளவும் செய்துவிட்டு, இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதென்றால் அது காங்கிரஸால்தான் என்று இளங்கோவனாலும் சில காங்கிரஸ் தலைவர்களாலும் கூச்சமில்லாமல் சொல்லிக்கொள்ள முடிகிறது. இந்தியாவை விடுங்கள், காங்கிரஸுக்குள்ளாவது ஜனநாயகம் இருக்கிறதா? இளங்கோவனைத் தூக்கியெறிவதாகட்டும், கிருஷ்ணசாமியைத் தூக்கியெறிவதாகட்டும், ஜனநாயக முறையிலா செய்கிறது காங்கிரஸ்? சொந்த மாநிலத்தில் குப்பைக்கூடையில் தூக்கியெறியப்படும் தலைவர்களையெல்லாம் கொண்டுவந்து ஆளுநர் பதவியில் அமர்த்தி அழகுபார்ப்பதையும், அவர்கள் காங்கிரஸின் 125வது ஆண்டை ராஜ்பவன் படுக்கையறையில் கொண்டாட அனுமதிப்பதையும் தவிர வேறென்ன செய்யமுடியும் காங்கிரஸால்!

இதையெல்லாம் தட்டிக்கேட்காமல், காரை பெயர்ந்து கொண்டிருக்கிற கட்டடத்துக்கு உள்ளே நின்றுகொண்டு, பக்கத்து வீட்டில் வெள்ளையடிக்கவில்லை என்று நொள்ளை சொல்லிக்கொண்டிருப்பது கருத்துத் தெளிவுடன் காங்கிரஸை விமர்சித்து மன உறுதியுடன் வெளியேவந்த பெரியாரின் பேரனுக்கு அழகா? ராஜீவின் படுகொலைக்காகக் கண்ணீர் சிந்த இளங்கோவனுக்கு உரிமை இருக்கிறது என்றால், இங்கிருந்து 26வது மைலில் ஆறே மாதத்தில் கொன்று குவிக்கப்பட்டிருக்கும் ஒருலட்சம் தமிழ்ச் சொந்தங்களுக்காகக் கண்ணீர் சிந்தும் உரிமை எங்களுக்குக் கிடையாதா? 1987ல் ஜெயவர்தனே என்கிற சிங்கள வெறியனுடன் ராஜீவ் செய்துகொண்ட வரலாற்றுப் பார்வையற்ற ஒப்பந்தத்தால் உயிரிழக்க நேர்ந்த வீரத்தமிழ் வேங்கைகளுக்காகவும் அப்பாவி மக்களுக்காகவும் சமாதானத்தின் பெயரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட எங்கள் சகோதரிகளுக்காகவும் கண்ணீர் சிந்தாமல் இருக்க தமிழன் என்ன மாமிசப் பிண்டமா, மரக்கட்டையா?

காங்கிரஸ் தலைவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! எல்லாத் தமிழனும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? 1991 மே 21ம் தேதிக்கு முன் விடுதலைப் புலிகளோடும் பிரபாகரனோடும் காங்கிரஸுக்கு எந்த விரோதமும் இல்லை என்கிற புளுத்துப்போன பொய்யை மீண்டும் மீண்டும் அவர்கள் பரப்புகிறபோது, ஒரு மெய்யான விடுதலை இயக்கத்தின்மீது புழுதிவாரித் தூற்றுகிறபோது, ஆண்மையுடன் அதை மறுக்கிற கடமை எங்களுக்கு இருக்கிறது. 1987ல் ஒருமுறைக்கு மூன்றுமுறை அமைதியின் பெயரால் பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்ட மேதாவி யார் என்று கேட்கிற தகுதி எங்களுக்கு இருக்கிறது.

இதுபோன்ற நேர்மையான கேள்விகளுக்குப் பதில்சொல்லத் தன்மானத் தலைவர் இளங்கோவன் தயாராயிருக்கிறாரா? தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு முன் பிரபாகரன் பற்றிப் பேச பயந்ததாகவும், இப்போது பேச ஆரம்பித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டுகிறார் இளங்கோவன். இப்படியெல்லாம் அவர் சொல்வது, புலிகளைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் பேசுபவர்களை உள்ளே தள்ளூங்கள் என்று மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு காங்கிரஸ் பிறப்பிக்கும் மறைமுக ஆணை மாதிரியே இருக்கிறது. அப்படி ஒரு கைது நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டால், புலிகள் மீது அடுக்கடுக்காகப் பொய்ப்புகார்களைச் சுமத்தி, உண்மைகளைச் சொல்லவேண்டிய அவசியத்தை எங்களுக்கு ஏற்படுத்திய சிதம்பரம், கருணாநிதியிலிருந்து இளங்கோவன் வரை அத்தனைப் பேர் மீதும் முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இப்படியொரு நியாயமான யோசனையைத் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்வாரா இளங்கோவன்! பொய், முழுப்பொய், வடிகட்டிய பொய் என்று வாய்க்கு வக்கணையாகப் பேச இளங்கோவனையும் சிதம்பரத்தையும் கருணாநிதியையும் ஜனநாயகம் அனுமதிக்கும்.... அந்தப் பொய்யுரைகளைத் தகர்த்தெறிய ஊரறிய உண்மைகளை எடுத்துரைக்க மட்டும் வாய்ப்பூட்டு போட்டுவிடுமா? அப்படியொரு வாய்ப்பூட்டு போட்டால் அதை உடைத்தெறியும் துணிவற்ற புழுக்களாக இருந்துவிடுவோம் என்றா இளங்கோவன் கருதுகிறார்? டெல்லி முதலாளிகளுக்கு இளங்கோவன் எவ்வளவு விசுவாசமாகவாவது இருந்துவிட்டுப் போகட்டும்... தங்கபாலுவையும் கிருஷ்ணசாமியையும் காட்டிலும் தீவிர விசுவாசி என்று அவர் காட்டிக்கொள்ளட்டும்.... அதற்காக நாட்டில் முசோலினியின் ஆட்சி நடப்பதாகவா அவர் நினைத்துக்கொள்வது!

சிங்கள இனவெறியர்களால் பறிக்கப்பட்ட நிலத்தையும் உரிமையையும் மொழியையும் வாழ்வையும் மீட்பதற்காக, தங்களது சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்வதற்காக, உயிரைக் கொடுத்துப் போராடியவர்கள் எங்கள் சொந்தங்கள். விடுதலைப் போருக்கும் தீவிரவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு அவர்களைப் பற்றிப் பேசுகிற தகுதி அறவே கிடையாது. உலக வரலாற்றின் உன்னதமான பக்கங்களை வன்னிக்காட்டின் வெப்பக்காற்றில் எழுதிச் சென்றிருக்கும் அந்த மகத்தான மனிதர்களைப் பற்றி விமர்சிக்கவும், அவர்களைப் போற்றிப் பேசாதே என்று தடுக்கவும் கோபாலபுரத்தின் கொத்தடிமைகளுக்கு என்ன தகுதி இருக்கிறது? நாமார்க்கும் குடியல்லோம் என்பது தான் பச்சைத் தமிழன் காமராஜின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது.

அதைத்தான் நாங்கள் கடைப்பிடிக்க முயல்கிறோம். 'கிளிக்' என்கிற வார்த்தையை காந்திஜி பயன்படுத்தியவுடன், அதைத் திரும்பப்பெறும்படி துணிவுடன் வற்புறுத்தியவன் அந்த கருப்பு மனிதன். அந்த மனிதனின் படத்தையும் போட்டுக்கொண்டு, எங்கள் தமிழ்ச் சொந்தங்கள் டெல்லி தலைவர்களின் தயவில் கொன்று குவிக்கப்பட்டபோது வாயில் எதையோ வைத்துக்கொண்டிருந்துவிட்டு, இன்றைக்கு வாய்கிழியப்பேசுவோரின் கோழைத்தனத்தையா நாங்கள் கடைபிடிக்கமுடியும்! காங்கிரஸ் தலைவர்களின் இந்த துணிவின்மையைத் தான் சந்தி சிரிக்கவைத்தார் எஸ்.வி.சேகர். அவருக்குத் தான் இந்த நேரத்தில் நன்றி கூறவேண்டியிருக்கிறது. காங்கிரஸ்காரர்களும் வாய்விட்டுச் சிரிக்கட்டும். அப்படியாவது அவர்களது கொத்தடிமை நோய் தீர்கிறதா என்று பார்ப்போம்.

தமிழ்க்கதிருக்காக

இயக்குநர் புகழேந்திதங்கராஜ்

http://www.tamilkathir.com/news/2451/58//d,full_view.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.