Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்பாடுகளின் தோல்வி‐ நாடு கடந்த அரசு?குளோபல் தமிழ்ச்செய்திகளிற்காக தேவஅபிரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்பாடுகளின் தோல்வி‐ நாடு கடந்த அரசு?குளோபல் தமிழ்ச்செய்திகளிற்காக தேவஅபிரா

குளோபல் தமிழ்ச் செய்தி நிறுவனத்தில் வெளிவந்த திரு உருத்திரகுமாரனுடனான நேர்காணலைக் கேட்டும் வாசித்ததன் பின்பும் தோன்றிய எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலில் அந்தப்பேட்டியில் மேலெழுந்து வருகிற முன்வைக்கப்படுகிற சில முக்கியமான விடையங்களைத் தொகுக்க முனைந்துள்ளேன்.

• தமிழ் மக்களுக்கான அரசியல் வெளியும் போராட்ட வலு மையமும்

• பன்மைத்துவம்

• நாங்களே ஒழுங்கமைத்துக்கொள்ளும் சனநாயகமும் அதன் விழுமியங்களும்

• பொதுத் தேசிய அடையாளமும் புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் தோழமையும்

• கோட்பாடுகளின் தோல்வி

• பிராந்திய அரசியல் மாற்றங்கள் உலகமயமாதல் பொருளாதார நலன்கள்

தமிழ் மக்களுக்கான அரசியல் வெளியும் போராட்ட வலு மையமும்

தமிழ்மக்களின் அரசியல் வெளியும் போராட்ட வலுமையமும் அகம் புலம் என இரண்டினுள்ளும் பிரிந்துள்ளன.

தமிழ் மக்களின் அக அரசியல் வெளி தனிநாட்டுக் கோரிக்கைகளை வைக்க இடமளிக்கப்போவதில்லை. ஆனால் இலங்கை என்ற நாட்டுக்குள் தங்களுக்கு மறுக்கப்படுகின்ற சகல உரிமைகளுக்கும் எதிராக குரல் கொடுக்கக் கூடிய சாத்தியங்கள் அங்கே அற்றுப் போய்விடவில்லை.

தேர்தல்களுடாக தெரிவுசெய்யப்படும் தமிழ் பிரிதிநிதிகள் தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைகளுக்கு உரிய முறையில் குரல் கொடுக்க முடியும். தமிழர்களின் அரசியல் உணர்வை அழியாது தக்க வைக்கும் உரிய பொறுப்பு அவர்களிடமே உள்ளது.

சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகின்ற அரசியல் சமூகக் குழுக்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து சக்திகளையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அடைவதற்கான சனநாயகப் பொறிமுறை ஒன்றினுள் இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அது தனியே திரு. உருத்திரகுமாரன் அவர்களின் பணி அல்ல. தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகள். சமூக அரசியல் பொருளாதார உரிமைகள் பேணப்படவேண்டும் என எண்ணுகின்ற சகலரும் ஒரு மையப் புள்ளியை நோக்கி வரவேண்டியுள்ளது.

சிங்கள மக்களிடம் மிகத்தீவிரமான மேலாதிக்க மனப்பான்மை இருக்கும் வரை தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படப்போவதில்லை. அதேநேரம் இலங்கை என்ற யதார்த்தத்துக்குள் இருக்கும் வரை அடிப்படை சனநாயக மனித உரிமைகளுக்காக போராடுவதை இலங்கை அரசு நேரடியாகத் தடுக்கவும் முடியாது.

இத்தகைய போராட்டங்களைத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒழுங்கமைத்து தலைமை தாங்குவதினூடாக மெல்ல மெல்ல எமக்கான அரசியல் வெளியை உருவாக்கலாம். உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதே நேரம் தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு ஒடுக்கு முறையையும் உலகிற்கு வெளிக்கொண்டு வரக்கூடிய ஒரு பலமான அமைப்பு புலத்தில் அவசியம். அது நாடு கடந்த அரசு என்னும் புலிகளின் அடுத்த வடிவமா அல்லது அதற்கும் மேலாக அதனையும் உள்ளடக்கிய பல்வேறு கோட்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பன்மைத்துவம் மிக்க சனநாயக ரீதியான தமிழ் தேசியத்திற்கான ஒரு கட்டமைப்பா என்பது விவாததிற்கு உரியது.

எது எவ்வாறு இருப்பினும் அகத்திற்கும் புலத்திற்குமிடையே முறையான ஊடாட்டங்களும் இடைத்தாக்கங்களும் இல்லாமல் சிங்களத்தேசியவாதத்தை நாங்கள் எதிர்கொள்ள முடியாது. அகத்தில் தொடர்ச்சியான சனநாயகக் கோரிக்கைகளை வைத்து வெகுசனப் போராட்டங்கள் தொடர்ச்சியான உரையாடல்கள் போன்றவற்றை தொடர்வதன் முலம் தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வை தக்கவைத்துக்கொள்ளவேண்டும். தமிழ்மக்கள் தங்கள் வலுமையத்தை இழக்காமல் இருப்பதற்கான முதற்படியாகவும் அது இருக்கும். திரு உருத்திரகுமாரன் பேசுகிற வலு மையம் தனியே புலத்தில் மையம் கொள்வது சாத்தியமுமில்லை நல்லதுமில்லை.

பன்மைத்துவம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி தமிழர்களது அரசியலை இலங்கை அரசின் அரசியல் வட்டத்துக்குள் இருந்து படிப்படியாக வெளிக்கொண்டு வந்தது. நேர்காணலில் பேசப்படுகிற பன்மைத்துவத்தை தமிழீழ விடுதலைப் போராட்டம் தனக்குள் வளர்த்துக் கொள்ளத் தவறியமை அதன் முக்கியமான பலவீனமாக அமைந்து விட்டிருந்தது.

விடுதலைப்புலிகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஏகத்துவத்துக்குள் கொண்டு சென்றார்கள். அப்போதும் கூட ஏகத்துவத்துக்குள் இருக்கக்கூடிய பன்மைத்துவத்தையும் அவர்கள் மறுதலித்திருந்தார்கள். இது இரண்டாவது முக்கியமான பலவீனம்.

இதனால்தான் பிரபாகரனின் இராணுவ மையப்பட்ட அணுகுமுறைகளின் மீது விடுதலைப் புலிகளின் அமைப்புக்குள் இருந்தவர்களினாலும் கூட எந்த விதமான தாக்கங்களையும் ஏற்படுத்த முடியாது போய்விட்டது.

புலிகள் மக்களிடம் இருந்தே தோன்றினார்கள் ஆனால் மக்களிடம் இருந்து தம்மை அன்னியப்படுத்தக் கூடிய பாரிய தவறுகளையும் இறுதிவரையும் செய்தும் இருந்தார்கள்.

புலிகள் அடைந்த ஏக பிரதி நிதித்துவம் என்பது தமிழ் தேசியத்தின் இருப்புக்கு வலிமை சேர்க்கும் புறக்காரணிகள் இருந்தமையால் பெறப்பட்டதாகும். சிங்களப் பேரினவாதம் இருக்கும் வரையும் தமிழ் தேசிய வாதம் சாம்பலுக்குள் கனன்று கொண்டிருக்கும். தமிழீழக் கோட்பாடு தோல்வி அடைந்துவிட்டதா எனக் கேட்பதை விடவும் தமிழ் தேசியம் அழிந்துவிட்டதா எனக் கேட்பதே நியாயமானதாகும். பதில் இல்லை என்பதாகும்.

உண்மையிலும் திரு உருத்திரகுமாரன் சொல்கின்ற பன்மைத்துவம் உண்மையான பன்மைத்துவம் அல்ல. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை எப்படி அடைய முடியும் என பல்வேறு தரப்பினரும் பல்வேறுவிதமான சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் பொது நோக்கம் ஒன்றிக்காக இணைக்கும் போதுதான் உண்மையான பன்மைத்துவம் தோன்றும்.

உருத்திரகுமாரன் குறிப்பிடுகிற பன்மைத்துவம் தமிழீழம் என்னும் ஏகத்துவத்துக்குள் இருக்கிற பன்மைத்துவமாகும். தமிழீழக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளுகின்றவர்களுக்கிடையே அதை எவ்வாறு அடைவது என்பது பற்றி இருக்கக்கூடிய சனநாயக ரீதியான கருத்தாடல்களை இணைக்கும் பொறிமுறைபற்றியே உருத்திரகுமாரன் பேசுகிறார். இது தவறல்ல. தேவையானதுதான். விடுதலைப் புலிகள் தமது உச்சங்களில் இருந்தபோது செய்யாததை இப்போது செய்ய முனைகிறார்கள். இது முதற்படி மட்டுமே!

சுயமாக ஒழுங்கமைத்துக் கொள்ளும் சனநாயகம்.

ஆசியாவில் சனநாயகத்தின் வளர்ச்சி மிக மந்தமான நிலையிலேயே இருக்கிறது. ‘உண்மையான சனநாயகம்’ என்பதை அல்லது அதற்கு கிட்டவாவது வரக்கூடிய சனநாயக கட்டமைப்பு என்பதை காணமுடியாது.

அனேகமான நாடுகளிலும் அரச வன்முறை பயங்கரவாதம் தேவைப்படும் போதெல்லாம் பாவிக்கப்படுகிறது. அரசாங்கங்கள் சட்டம் நீதி நிர்வாகக் கட்டமைப்புக்களில் தேவைப்படும் போதெல்லாம் தலையீடு செய்கின்றன.

ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்குத் தேர்தலை நடாத்துதல் என்பதனைத் தவிர சனநாயக நடவடிக்கைகள் எதுவும் இங்கு இருப்பதில்லை.

தேர்தல்களும் மக்களின் அரசியல் அபிலாசைகளின் வெளிப்பாடுகளாக இருப்பதில்லை.

அதிகாரத்தை அடைய விரும்புபவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பாதைகளில் ஏதோவொன்றைத் தெரிவு செய்ய நேரிடையாகவோ மறைமுகமாகவோ மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். எனவே நாடுகடந்த அரசாங்கத்தை ஸ்தாபிப்பவர்கள் யாரை சனநாயக மயப்படுத்தப்போகிறார்கள் என்பது முக்கியமானது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் சூழ்நிலைகளுக்கூடாகத் தவிர்க்கமுடியாதபடிக்கு முதலாளிததுவ சனநாயக கலாச்சாரத்துக்குள் படிப்படியாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. மரபுவழியான ஆண் தலைமைதாங்கிய குடும்பக் கட்டமைப்புக்கள் புலம் பெயர் நாடுகளில் மாற்றமடைந்து வருகின்றன. குடும்பம் என்னும் கட்டமைப்புக்குள் ஆண் பெண் பெற்றோர் பிள்ளைகள் என்னும் உறவுகளுள் சனநாயக மாற்றங்கள் மெதுவாக நிகழ்ந்து வருகின்றன. இதுவும் முக்கியமான ஒரு மாற்றமாகும்.

சனநாயகப் பண்பாட்டின் வளர்ச்சி இலங்கையிலேயே அதிகமாகத் தேவைப்படுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் தனது சகமனிதனின் இருப்பையும் உணர்வுகளையும் மதிக்கும் மனநிலையை அடந்து அது சமூக நடத்தையாக மாறும் போது மட்டுமே சனநாயகப்புரட்சி தோன்றும்.

தமிழ்தேசியத்தின் எழுச்சி பல்வேறுபட்ட விழுமியங்களை சமூக நடத்தைகளாக மாற்ற முனைந்திருந்தது. பெண் ஒடுக்குமுறை சாதிய ஒடுக்குமுறை போன்றவற்றுக்கெதிரான விழுமியங்கள் சமூக நடத்தைகளாக மாறவாரம்பித்திருந்தன. அப்பொழுது சனநாயக விழுமியங்களையும் இணத்துக்கொண்டிருப்பின் எமது தமிழ்ச்சமூகம் இன்னும் கூடிய பலத்துடன் இருந்திருக்கும்.

சிங்கள சமூகத்தின் சனநாயக மயப்பாட்டை சிங்கள பௌத்த பேரினவாதம் தடுத்து நிற்கிறது. அதே போல் தமிழ்ச் சமூகத்தின் சனநாயக மயப்பாட்டைப்பற்றி அக்கறைப்படாமல் தம்வழியே சென்ற பிழையை விடுதலைப்புலிகளும் விட்டுள்ளனர்.

எனவே சனநாயகம் என்பது கட்சிக்கு உள்ளுக்கும் வெளியிலும் சமூகத்தினுள்ளும் வளர்த்தெடுக்கப்படவேண்டியது. இது மிக மெதுவான மாற்றமாகும். திரு உருத்திரகுமாரன் தமது கட்சிக்குள் சனநாயகப்பொறிமுறையை வளர்ப்பதைப் பற்றியே குறிப்பிடுகிறார். இதுவும் ஆரோக்கியமானதே!

பொதுத் தேசிய அடையாளமும் புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் தோழமையும்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்கின்ற சில முக்கியமான பிரச்சனைகளின் பின்னணியிலேயே மேற்குறித்த அம்சத்தை நோக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த ஒவ்வொருவரையும் அவர்கள் வாழும் நாட்டின் கலாசாரத்துள் கரையும் படி சட்ட ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் நிர்ப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. இதனாலும் மொழிப்பிரச்சனையினாலும் முதலாவது தலைமுறையினர் கலாசார தனிமைப்பாட்டை எதிர்கொள்கின்றனர். இதனை வெல்வதற்க்காக அவர்கள் இன்னும் தமது அகத்துடன் தம்மைப் பிணைத்துக் கொள்கின்றனர்.

இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் மொழிப்பிரசனையினை எதிர்கொள்ளாவிடினும் தமது அடையாளத்தை தேடுகின்றனர். தமது தாய் தந்தையர் வாழ்ந்த நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை வேறு வெளிச்சத்திலேயே புரிந்துகொள்கின்றனர். ஆனாலும் தமது அடையாளம் காரணமாகவும் வேர்கள் காரணமாகவும் அரசியல் ரீதியான தோழமையை வழங்குகின்றனர்.

இந்த இரண்டு அம்சங்களையும் வைத்துப் பார்க்கும் போது தமிழ்த்தேசியம் தனக்கென இன்னுமொரு வகையான வலு மையத்தைப் புலத்திலும் உருவாக்கிக் கொள்வது சாத்தியம். ஆனால் இவர்களால் அரசியல் தோழமையை மட்டுமே வழங்கமுடியும்.

கோட்பாடுகளின் தோல்வி.

தமிழ்தேசியத்திற்கு தனது முறையில் அரச வடிவம் கொடுக்க முனைந்த பிரபாகரனின் சிந்தனை சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கோரமான முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் தமிழ்தேசிய உணர்வோடு இருந்தமையால் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை இத்தகைய கொடூரமான பாதையூடாக அழைத்துச் சென்ற புலிகளின் சுய விமர்சனத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். பல்வேறு விமர்சனங்களுக்கு அப்பாலும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கும் வல்லரசுகளுக்கும் அடிபணியாது மரணித்த போராளித் தலைவனாக நிமிர்ந்து நிற்கும் பிரபாகனின் கண்ணுகுத் தெரியாத சமாதிமீது மீண்டும் ஒளிவட்டத்தையும் மாயையும் கட்டி எழுப்ப முயலாது வெளிப்படையான அரசியலை செய்ய முனைவது காலத்தின் தேவை.

மூன்று தலைமுறைகளின் பின்பு தாம் அடைந்த இழப்பும் தோல்வியும் தமிழீழத்தின் சாத்தியம் பற்றிய அச்சவுணர்வை தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறது. அதற்கு மதிப்பளிக்க வேண்டிய தேவை புலிகளுக்கு இருக்கிறது.

மக்களின் நலன்களை அடிபபடையாகக் கொண்டு உருவாக்கப்படும் கோட்பாடுகள் ஒருபோதும் தோல்வியடைவதில்லை. ஆனால் அதற்குச் செயல்வடிவம் கொடுக்க முனைபவர்கள் பல்வேறு அகப்புறக் காரணிகளால் தோல்வியடைகிறார்கள் அல்லது வெற்றியடைகிறார்கள்.

பிராந்திய அரசியல் மாற்றங்கள் உலகமயமாதல் பொருளாதார நலன்கள்.

எதிரியின் வெற்றிக்கும் புலிகளின் தோல்விக்கும் தமிழ் தேசியத்தின் பின்னடைவுக்குமான அகப்புறக் காரணிகள் இடியப்பச் சிக்கலாக பிணைந்து முன் எதிர்வு கூறமுடியாதவாறு இருக்கின்றன. இன்னிலையில் பிராந்திய அரசியல் தமிழீழத்தை அமைப்பதற்கு சாத்தியமாக மாறும் என அடித்துக் கூறமுடியாது. மாறலாம். ஆனால் இதனை எமது மூல உபாயத்திற்கு ஆதாரமாகக் கொள்வது அரசியல் தற்கொலையாகும்.

சந்தைகளையும் அதிகாரத்தையும் கைப்பற்றித் தக்க வைத்துகொள்ளும் நோக்கத்துடனேயே உலகம் ஒழுங்கமைக்கப்படுகிறது. இந்த ஒழுங்குக்குள் இலங்கை என்கிற நாட்டிற்கு இருக்கின்ற பெறுமானம் தமிழீழம் என்ற சிறய அலகுக்கு இல்லை. மிகச் சிறிய இனமான எங்களுக்கு எந்தச் சந்தைப் பெறுமானமும் இல்லை.

இன்றைக்கு தமிழீழம் என்னும் எல்லைகளைப் பற்றிச் சிந்திப்பதை விடவும் தமிழ்த்தேசியத்தின் இருப்பைப் பாதுகாப்பதைப் பற்றிச் சிந்திப்பது இன்னும் முக்கியமானது. ஏனேனில் இன்னும் பத்து வருடங்களில் தமிழீழத்தின் சனத்தொகைப்பரம்பல் மாற்றப்பட்டுவிடும்.

சீனாவின் சின் ஜாங் உய்கூர் தன்னாட்சிப்பிரதேசம், திபெத், குர்திஸ்தான், பலஸ்தீனம் போன்ற பகுதிகளில் நடப்பவற்றை நாங்கள் இங்கு கவனிக்க வேண்டும்.

புலிகள் தமிழீழத்தை அடைவதற்கான இன்னுமொரு பொறிமுறையாக மட்டுமே நாடு கடந்த அரசு என்ற வடிவத்தை முன்னைடுப்பதாகத் தெரிகிறது.

ஆனால் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளைத் தமிழீழம் என்கிற ஒரு சட்டகத்தினுடாக மட்டுமே அணுக வேண்டும் என்கிற கோட்பாட்டு ஏகத்துவம் சர்வதேச அரசியலில் மீண்டும் நம்மைத் தனிமைப்படுத்தலாம்.

உண்மையில் தமிழர்களின் முக்கியமான வலுமையம் வடக்கு கிழக்கிலேயே அமையவேண்டும்.

குளோபல் தமிழ்ச்செய்திகளிற்காக தேவஅபிரா எழுதிய கோட்பாடுகளின் தோல்வி‐ நாடு கடந்த அரசு? என்ற இந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்பவர்கள் தலையங்கத்தில் மாற்றம் இன்றி இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு மறுபிரசுரம் செய்யலாம்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24128&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.