Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காற்றில் அலையும் விரல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

THE PIANIST - காற்றில் அலையும் விரல்கள்

A Film by Roman Polanski

Year 2002

Run time : 150 minutes

"….the line between fantasy and reality has been hopelessly blurred. I have taken most of a lifetime to grasp that this is the key to my very existence". .

-Polanski

'ஹோலோகாஸ்ட், என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. இனப்படுகொலை என்று தமிழில் பொதுவாக மொழி பெயர்க்கலாம். இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப்படையினர் யூதர்களை லட்சக்கணக்கில் அழித்தொழித்த சம்பவங்களுக்கு பொதுவான பெயர் ஹோலோகாஸ்ட். எப்படி உலகப்போர்களை கருவாகக்கொண்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளிவந்தனவோ, அது போல் மிக குறைந்த அளவில் யூத இனப்படுகொலையை மையக்கருவாகக்கொண்ட திரைப்படங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. "லைஃப் இஸ் பியூட்டிஃபுல்" திரைப்படமும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய "ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்" திரைப்படமும் இதே வகையை சேர்ந்தவை.

கறுப்பு வெள்ளையில் வெளியான "ஸ்ட்" பல ஆஸ்கார் விருதுகளைக் குவித்தது. இதற்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் ரோமன் பொலான்ஸ்கி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "தி பியானிஸ்ட்". ஸ்பீல்பெர்கைப் போல் பொலான்ஸ்கியும் யூத இனத்தை சேர்ந்தவர்தான்.

இனப்படுகொலை நிகழ்ச்சிகளின்போது சிறுவனாய் இருந்து சுவரேறி தப்பித்து வாழ்க்கையை தொடர்ந்தவர். இவருக்கும் ஸ்பீல்பெர்குக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை இருவருமே ஒரே மாதிரி படைப்புகளை தொடந்து தருபவர்கள் அல்ல. மாற்றங்களே அவர்களது முத்திரைகள். பொலான்ஸ்கி போலந்து திரைப்படங்களை இயக்கி பின்னர் ஹாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டினார். ஜாக் நிகல்சன் நடித்த "சைனாடவுன்" என்ற திரைப்படம் பெரும் புகழ் பெற்றது. "ரோஸ்மேரிஸ் பேபி", டெஸ், "மேக்பெத்" போன்றவையும் இவர் இயக்கத்தில் வெளிவந்தவை. 1970களில் ஒரு சிறுமியை மானபங்கப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கிலும் சிக்கியவர். அதற்காகவே அமெரிக்காவிலிருந்து தப்பியோடியவர். பின்னர் "தி பியானிஸ்ட்" ஆஸ்கார் விருது பெற்றபோதும் கூட இவர் அமெரிக்கா செல்லவில்லை. இன்னும் மேடை நாடகங்களில் நடித்து இயக்குவது இவருடைய பெரும் பணியாக திகழ்கிறது. 70 வயதை கடந்து இன்னும் பொலான்ஸ்கி தீவிர படைப்பாளியாக இருக்கிறார். "தி பியானிஸ்ட்" அவருடைய படைப்புலகின் உச்சம் என்று பேசப்படுகிறது. முந்தைய படங்களை விட மிகவும் மாறுபட்டு திகழ்ந்தது பியானிஸ்ட்.

ஸ்பில்மேன் வார்சா ரேடியோவில் தினமும் அற்புதமான பியானோ இசையை வாசிக்கும் நிலையக்கலைஞர். அரசியல் ஆர்வமற்றவன். கலாமேதமையை பெருமையுடன் அணிந்திருப்பவன். யூதன். பெரும் வீரனல்ல. திரைப்படத்தின் பின்பகுதி இவனுடைய தானுண்டு தன் வேலையுண்டு என்ற குணாதிசயத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 1939ல் போரின் வெடிமுழக்கங்கள்

முதன் முதலாக கேட்கும்போதும் நிலையத்தில் இசைத்துக்கொண்டுதான் இருக்கிறான்.

ஸ்டுடியோ சுவர்கள் தகர்ந்தபோதுதான் வெளியேறுகிறான். நிறைய கலைஞர்கள் அவனுக்கு நண்பர்கள். ரேடியோ நாடக நடிகை, அவள் கணவன், செல்லோ வாத்தியத்தை இசைக்கும் தோழி என்று நெருங்கிப்பழகுபவர்கள் பலருண்டு. குடும்பமோ பெரிது. பெற்றோர்களும் உடன்பிறப்புகளும் கலகலப்பாய் பழகுபவர்கள். போர் அவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. யூதர்களுக்கென்று தனியாக ஒதுக்கப்படும் பகுதிக்கு குடி பெயர கடும் நிர்ப்பந்தங்கள்.

யூதர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள கைகளில் நட்சத்திர சின்னம் பொறிக்கப்பட்ட துணிப்பட்டைகளை அணிந்து கொள்ள வேண்டும். ஓட்டல்களில் அனுமதியில்லை; பூங்காக்களில் அமர்ந்து பேசக்கூடாது; நடைபாதையில் நடக்கக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஸ்பில்மேனின் தந்தை வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு சிப்பாய்க்கு வணக்கம் செலுத்தவில்லை என்று கன்னத்தில் அறையப்படுகிறார். சொந்த வீடுகள் கா செய்யப்படுகின்றன. யூதர்கள் அனைவரும் ஒரே இடத்தில் குடி அமர்த்தப்பட்டு சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு பிற மக்களிடமிருந்து பிரிக்கப்படுகின்றனர். சுவற்றுக்கு அப்பால் இருந்து நல்ல மனங்கள் உணவுப்பொருட்களை எறிகின்றன. சுவற்றின் கீழ்ப்பகுதியில் துளையிடப்பட்டு சிறுவர்கள் அதன் வழியே வெளியேறி தப்புகின்றனர். ஸ்பில்மேன் நடந்து செல்லும்போது ஒரு சிறுவன் துளையில் சிக்கிக்கொண்டு கதறுகிறான். அந்தப்புறம் யாரோ அவனை இழுத்துக்கொண்டோ அடித்து உதைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அவனைக் காப்பாற்ற இவன் இந்தப்பக்கம் இழுக்க ….பிணமாகத்தான் சிறுவனின் உடல் வெளியே வருகிறது. கொடுமையான இந்தக்காட்சிகள் பொலான்ஸ்கியின் வாழ்க்கையோடு தொடர்புடையவை என்றே கூறலாம்.

யூதர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளும் படுகொலைகளும் நாஜிகளின் தலைமைப்பீடத்தால் நேரடியாக செய்யப்படுபவையல்ல. சாதாரண சிப்பாய்களே தங்கள் விருப்பம் போல செயல்படுகிறார்கள். வயதான யூதர்களை பொருந்தா ஜோடியுடன் வீதிகளில் ஆட வைப்பது; வீடுகளில் புகுந்து சக்கர வண்டியோடு வயதானவர்களை பால்கனியிருந்து வீசியெறிவது; ஊனமுற்றவர்களை கொடுமை செய்வது; தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை சுட்டுக்கொல்வது, தப்பியோடும் குழந்தைகளை அடித்தே கொல்வது என்று மிருகவெறியோடு செயல்படுகிறார்கள். வீதிகளில் வறுமை தாண்டவமாடுகிறது. ஒரு கிழவியின் கைகளிலிருந்து உணவைப்பறிக்கிறான் படு கிழவன் ஒருவன். மீட்கும் போராட்டத்தில் உணவு கீழே கொட்டிவிடுகிறது. சாலையில் கிடப்பதை அப்படியே வாயால் ஒரு பசித்த மிருகத்தை போல் நக்கி உண்ணுகிறான் அவன். அவன் தொப்பியை பறித்துச்செல்கிறான் வேறொருவன். கதறி அழுகிறாள் கிழவி. வேலைக்கான பெர்மிட் கிடைத்தால் பிற நிறுவனங்களில் வேலை பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு ஸ்பில்மேனும் குடும்பத்தினரும் செயல்படுகின்றனர். ஒரு உணவகத்தில் பியானோ வாசிக்கும் பணி கிடைக்கிறது. துடிப்பான தம்பி வீதிகளில் தன் புத்தகங்களையே விற்கிறான். ஷேக்ஸ்பியரை படிக்க அப்போது யாருக்குத்தான் பொறுமையிருக்கும்! ஒரு நாள் வேலைக்கான பெர்மிட் என்பதே ஒரு அபத்தம் என்று தெரிய வருகிறது. அனைவரும் வீதிக்கு அனுப்பப்படுகின்றனர். எதற்காக காத்துக்கிடக்கிறோம் என்று தெரியாமலேயே காத்திருக்கும் அவலம். ஒரு இளம் தாய் கதறிக்கொண்டிருக்கிறாள்-ஒளிந்து கொண்டிருக்கும்போது குழந்தை அழுதிருக்கிறது.. வாயை அழுத்தமாக பொத்தியிருக்கிறாள். இறந்தே போய்விட்டது. ஆற்றாமையால் கதறிக்கொண்டிருக்கிறாள்.

ஒரு புகைவண்டி காத்திருக்கிறது. அனைவரும் அதில் பட்டியில் அடைக்கப்படும் ஆடுகளைப்போல் திணிக்கப்படுகிறார்கள். ஸ்பில்மேனை அந்த கூட்டத்திலிருந்து இழுத்து வெளியே வீசுகிறான் நாஜிப்படையிலிருக்கும் ஒரு யூத சிப்பாய். இவனுக்கு தெரிந்தவன்தான்; இவன் அங்கிருந்து புகைவண்டிக்கு தப்பித்து ஓடப்பார்க்க, மீண்டும் உதைக்கிறான்..."மடையா, உன்னைக் காப்பாற்றியிருக்கிறேன், தெரிகிறதா, ஓடிவிடு" என்கிறான்.

ஆம், அந்த புகைவண்டி மரணத்தை நோக்கிச் செல்கிறது. விஷவாயு கிடங்குகள் அவர்களுக்காக காத்திருக்கின்றன.

இவனுக்கு ஒளிவதற்கு இடமில்லை. ஆளில்லா வீடு ஒன்றில் அலமாரிக்குள் அடைக்கலம் தருகிறான் ஒருவன். வேறொரு சந்தர்ப்பத்தில் ஆயுதங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அலமாரிக்கு பின் உள்ள சிறு இடைவெளியில் தங்க வைக்கப்படுகிறான். பழைய நண்பர்களான நாடக நடிகையும் அவள் கணவனும் ஒரு சந்தர்ப்பத்தில் உதவுகிறார்கள். அவர்கள் உதவியுடன் அவன் தங்கிய வீட்டின் பக்கத்து வீட்டுக்காரி இவனை யூதன் என்று கண்டுபிடித்து விரட்டுகிறாள். கட்டிட சித்தாள் வேலைக்கு கூட போகிறான் இந்த இசைக்கலைஞன். வேலையில் கவனம் சிதறியதால் சவுக்கடி கிடைக்கிறது. சேற்றில் பிணம் போல விழுந்து கிடக்கும் அவனை தரதரவென்று இழுத்துச்செல்கிறார்கள். முகாமிற்கு உருளைக்கிழங்குகளும் ரொட்டியும் கொண்டு செல்லும் பணியும் அவனுக்கு அளிக்கப்படுகிறது. நாஜிகளை எதிர்க்கத் துணியும் புரட்சிகர இளைஞர்களுக்கு உருளைக்கிழங்குடன் துப்பாக்கிகளும் உள்ளே வருகின்றன.

உலகப்போரின் பல்வேறு திருப்பங்கள் இவனை பல புகலிடங்களுக்கு அலைக்கழிக்கின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் இவனுடைய பழைய சிநேகிதியான செல்லோ கலைஞரை சந்திக்கிறான். அவளும் அவள் கணவனும் இவனை ஒரு அபார்ட்மெண்ட்டில் ரகசியமாக தங்க வைக்கிறார்கள். அவ்வப்போது வந்து உதவ ஒரு நண்பரையும் ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் கதவை வெளியே பூட்டி சாவியை எடுத்துச்சென்றுவிடுவார்கள். வீடு பூட்டியே கிடப்பதாக மற்றவர்கள் எண்ணவேண்டும். மஞ்சள் காமாலை நோயால் பீடிக்கப்படுகிறான். உடல் இளைத்து துரும்பாகிறது. இதற்காகவே நடிகர் அட்ரியன் பிராடி தன் உடலை மெலிதாக்கினாராம். நோயின் கடுமையிலிருந்து மீண்டு வரும்போது போர் உச்சத்தை எட்டுகிறது.

யூதப் புரட்சியாளர்கள் அவ்வப்போது நாஜி வீரர்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்துகிறார்கள். வீர மரணமும் எய்துகிறார்கள். இதன் விளைவாக வீதியெங்கும் பிணக்குவியல்கள். அவற்றின் மீது பெட்ரோல் ஊற்றி நடுவீதியிலேயே கொளுத்தும் அவலம். பீரங்கிகளும் நெருப்பு உமிழும் கருவிகளும் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்த, பூட்டப்பட்ட அறைக்குள் தவிக்கிறான் ஸ்பில்மேன். சுவர்கள் தகர்ந்திட வெளியேறுகிறான். எங்கும் புகலிடம் இல்லை. இடிந்த மருத்துவமனைக்குள் அடைக்கலம் புகுகிறான். கடும் தாகம். குப்பை நீரை அருந்த வேண்டிய அவலம். தனிமையின் கொடுங்கரங்களின் விரல்கள் அவனுக்கு மட்டுமே கேட்கும் ரகசிய இசையை காற்றிலிருந்து மீட்டெடுத்து வாசிக்க முற்படும் சோகம். வாசிக்க கருவியில்லாமல் தவிக்கும் நீண்ட விரல்களின் நர்த்தனம். பசி! பசி! இடிபாடுகளுக்கிடையே நீளும் தேடலில் கிடைக்கிறது பழச்சாறு அடங்கிய சீல் வைத்த டப்பா. திறப்பதற்கு பல முயற்சிகள். ஒன்றும் தேறாமல் உடைக்கும்போது உருண்டோடி அது நிற்பது ஒரு நாஜி அதிகாரியின் கால்களுக்கருகே.

யாரென்று விசாரிக்கிறான் அதிகாரி. ஒரு பியானோ கலைஞன் என்றவுடன் நம்பாமல் அவனை ஒரு பியானோவிடம் கொண்டு சென்று வாசிக்கச்சொல்கிறான். நான்கு வருடமாய் காற்றில் மட்டும் விளையாடிய விரல்கள் கட்டையின் மீது அழுந்துகின்றன. கடந்த கால கசப்புகளும் கொடூரமான அனுபவங்களும் தந்த விளைவுகளையும் மீறி அற்புத இசை பிறக்கிறது. வியந்து நிற்கிறான் அதிகாரி. அடுத்த நாள் மீண்டும் வருகிறான். கைகளில் ரொட்டி,

தொட்டுக்கொள்ள ஜாம், கூடவே டின் திறக்கும் கருவி ஒன்று. கலைஞனுக்கும் ரசிகனுக்கும் விநோத உறவு பிறக்கிறது. ருஷ்ய படைகள் நெருங்கிவிட்டன என்றும் இன்னும் சில தினங்களில் போலந்துக்கு விடுதலை கிடைக்கும் என்று கூறி தன்னுடைய மேலங்கி சீருடையை குளிரிலிருந்து அவனைக் காப்பாற்ற அன்பளிப்பாக கொடுக்கிறான்.

போரில் நாஜிகள் தோல்வியடைகின்றனர். மாபெரும் சுடுகாடாய் மாறிவிட்ட வார்சா நகரத்து இடிபாடுகளிலிருந்து வீதிக்கு வருகிறான் ஸ்பில்மேன்.. இளைத்து வெளிறிய உடல், குழி விழுந்த கண்கள், பொருந்தாத சீருடையுடன் வரும் அவனை நாஜி என்ற சந்தேகத்தின் பேரில் துப்பாக்கி முனையில் நிறுத்துகின்றனர். பிறகு உண்மை தெரிந்து விடுவிக்கின்றனர். நாஜிக்கைதிகளை கடந்து செல்லும் போலிஷ்களும் யூதர்களும் வெறுப்பை உமிழ்கின்றனர். ஒரு யூதன், என்னிடம் வயலினைக்கூட பிடுங்கியெறிந்த பாதகர்களே, உருப்படுவீர்களா? என்றுக் கூவ, கூட்டத்திலிருந்து எழுந்து வருகிறான் அந்த நாஜி அதிகாரி. உனக்கு ஸ்பில்மேன் என்ற பியானோ கலைஞனைத் தெரியுமா, அவனுக்கு நான் உதவியிருக்கிறேன், அவனைப்பார்த்தால் தகவல் சொல் என்று கூறுகிறான்.

மீண்டும் வானொலி நிலையத்தில் பியானோவை இசைத்துக் கொண்டிருக்கிறான் ஸ்பில்மேன். வயலின் கலைஞன் நாஜிக்கைதிகள் முகாமிட்டிருந்த இடத்திற்கு அவனை இட்டுச்செல்கிறான். அங்கு யாருமில்லை. வெற்று பூமியை பார்த்துக்கொண்டு திரும்புகிறான் பியானிஸ்ட்.

"தி பியானிஸ்ட்" ஒரு உண்மைக்கதை. ஸ்பில்மேன் சமீபத்தில்தான் மறைந்தார். அவரைக் காப்பாற்றிய நாஜி அதிகாரி 1952ல் ரஷ்ய சிறையில் மாண்டாராம். திரைப்படத்தை பார்த்த எந்த கல்நெஞ்சனும் இனிமேலும் இனப்படுகொலைகளும் மதப்படுகொலைகளும் தொடரக்கூடாது என்று மனமாற வேண்டிக்கொள்வான். அதுதான் இந்த திரைப்படத்தின் சிறப்பு.

http://thamizhstudio.com/ulagappadam.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

&feature=PlayList&p=0F55BBDB72076DB0&playnext=1&index=13

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.