Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பக்கம் சாயும் சர்வதேசம்: சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்கிறார் கஜேந்திரகுமார்

Featured Replies

“ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழ் அரசியல் தலைமைகள் சரிவர கையாளவேண்டும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்; அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் “தமிழருவி“ மாத இதழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை விசாரணை, போர்க்குற்ற விசாரணை, வடமாகாண சபைத் தேர்தல், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழர்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நிலைப்பாடு, உலகத் தமிழர்களின் கடமை ஆகிய விடயங்கள் குறித்து “தமிழருவி“க்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விரிவாக பதிலளித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தமிழருவிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழுவடிவம் வருமாறு:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் இனப்படுகொலை விசாரணை தேவை என வலியுறுத்தியிருந்தீர்கள். போர்க்குற்ற விசாரணைக்கும் இனப்படுகொலை விசாரணைக்குமிடையிலான வேறுபாட்டை விளக்குவீர்களா?

இனப்படுகொலை எனப்படுவது பல்வேறு மட்டங்களில் ஓர் இனத்தை இல்லாமற் செய்கின்ற செயற்பாடு. இனப்படுகொலையில் பல்வேறு அங்கங்கள் உண்டு. அவற்றில் போர்க்குற்றமும் ஒன்று. போர் ஊடாக ஓர் இனத்தைக் கொலைசெய்வது போர்க்குற்றமாகும். பொருளாதார ரீதியாக நலிவடையச் செய்து ஒர் இனத்தை இல்லாதொழிப்பது மற்றும் . கலாச்சார ரீதியாக ஓர் இனத்தின் அடையாளங்களை இல்லமாற் செய்வது ஆகியன இனப்படுகொலையின் ஏனைய அங்கங்கள்.

இலங்கைத் தீவில், பல்வேறு கோணங்களாக தமிழ் தேசத்தினுடைய இருப்பை இல்லாமற் செய்கின்ற செயற்பாடுகள் கடந்த மூன்று நான்கு வருடங்களாக அல்ல, பிரித்தானியர் இலங்கைத் தீவிலிருந்து வெளியேறிய காலத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த முப்பது வருடங்களாக, சிங்கள தேசத்தின் அரசியற் தலைமைகள திட்டமிட்ட வகையில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வந்திருக்கின்றன.

தமிழரின் ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து திட்டமிட்ட வகையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்குள் படுகொலைகளும் அடங்கும். படுகொலைகளைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலை மற்றும் யாழ். செம்மணிப் படுகொலைகள் போன்ற இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. அவற்றை தனியே போர்க்குற்றங்கள் என்று கூறினாலும் அவற்றை நாம் இனப்படுகொலையின் ஓர் அங்கமாகத்தான் பார்க்கவேண்டும். அதுமட்டுமல்ல, போர்க்குற்றங்களை கடந்த மூன்று வருடங்களாக நடைபெறும் விடயங்களாகப் பார்க்க முடியாது. கடந்த முப்பது வருடங்களாக தமிழருக்கெதிராக இராணுவ ரீதியாக நடத்தப்பட்ட அத்தனை விடயங்களும் போர்க்குற்றங்களாகக் கருதவேண்டும்.

போர்க்குற்றம் என்ற ஒரு விடயத்தில் மட்டும் நாம் தங்கியிருந்து போர்க்குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்பொழுது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை தீர்க்கப்படும். ஆனால் ஏன் அந்தப் போர்க்குற்றங்கள் நடைபெறுகின்றன? என்ன நோக்கத்திற்காக அக்குற்றங்கள் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்றன? என்ற விடயங்களை ஆராய்ந்து பார்த்தால் உண்மையிலேயே அவைகளுக்குள் அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன.

அதாவது தமிழ் இனத்தை இல்லாமற் செய்கின்ற அடிப்படை நோக்கத்தோடுதான் இந்தப் போர்க்குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் போர்க்குற்றங்களை பற்றி மட்டும் நாம் பேசினால்; அடிப்படைப் பிரச்சினைகள் - அதாவது தமிழ் தேசத்தினை இல்லாமற் செய்கின்ற திட்டமிட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு - ஒரு பதில் இல்லை. எங்களுக்கு அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடையாது.

ஆகவே, இனப்படுகொலைதான் இங்கே நடைபெறுகிறது போர்க்குற்றமானது இனப்படுகொலையின் ஓர் அங்கமென்பதை நாம் வலியுறுத்தி நிரூபிக்க வேண்டும். இனப்படுகொலை நடக்கின்ற இடத்தில் அரசியல் விளைவுகளும் இருக்கும். இனப்படுகொலையை செய்கின்ற அரசிடமிருந்து இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகின்ற இனத்தை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் சர்வதேச சமூகத்துக்கு ஏற்படுகின்றது. ஒர் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓர் இனத்தை திட்டமிட்ட வகையில் படுகொலை செய்கின்றபோது அந்த இனத்தை அந்த அரசிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பை சர்வதேச சட்டம் சர்வதேச சமூகத்துக்கு கொடுக்கின்றது.எங்களைப் பொறுத்தவரையில் இலங்கையில் ஒரு இனப்படுகொலைதான் நடைபெறுகிறது அதை வலியுறுத்தி நிரூபிக்கவேண்டும்.

இனப்படுகொலை விசாரணை தொடர்பில் தாயக மற்றும் புலம்பெயர் தமிழர்கள் எந்தவகையில் பங்களிப்புச் செய்யலாம்?

தாயகத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு- விசேடமாக அரசியற் தலைமைகளுக்கு - இந்த இனப்படுகொலையை ஆவணப்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையும் பொறுப்பும் உள்ளது. புத்திஜீவிகளுக்கும் சிவில் சமூகத்துக்கும்கூட இந்த பொறுப்பு இருக்கின்றது. அது நிச்சயமாக நாம் அனைவரும் செய்தே ஆகவேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் சில வாரங்களுக்கு முன்பு நாம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு இருக்கிறது என்ற ஒரு செய்தியை நாம் கூறி இருக்கின்றோம். அது தனியே தமிழ் தேசிய மக்கள் மக்கள் முன்னணியின் செயற்பாடாக மட்டும் இருக்காது புத்திஜீவிகள் சிவில் சமூகத்தினுடைய ஒத்துழைப்பு பொதுமக்களுடைய ஒத்துழைப்பு அனைத்தையும் உள்வாங்குகின்ற ஒரு செயற்பாடாகத்தான் அது அமையும். எம்மைப் பொறுத்தவரையில் இது தனியே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடாக இருக்கக் கூடாது. பல்வேறு கோணங்களில் பங்களிப்புச் செய்யக் கூடிய அனைத்துத் தரப்பும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதே எமது விருப்பம். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக வேறு அரசியற் கட்சிகள் எம்முடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

எம்மைப் பொறுத்தவரையில் தாயகத்தில் இருக்கக்கூடிய மக்கள் தலைவர்கள் - விசேடமாக அரசியற் தலைவர்கள் - இந்த நடவடிக்கையில் ஈடுபட்டே ஆகவேண்டும். அதுவும் இந்த நேரத்தில் சர்வதேசமட்டத்தில் சிறிலங்கா அரசுக்கெதிரான கருத்து உருவாகும் நேரத்தில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது மக்களின் விடிவுக்குரிய செயற்பாடாக இது அமைய வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு.

புலம்பெயர்ந்த மக்களைப் பொறுத்தவரையில் புலம்பெயர்ந்த மக்களுக்கு மிகப்பெரிய ஒரு பொறுப்பு இருக்கின்றது. தாயகத்தில் இருக்கக்கூடிய மக்கள் சிறிலங்கா அரசின் நேரடி அழுத்தங்களுக்கும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். 2009 மே 18 க்குப் பின்பு அந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

புலம்பெயர்ந்த மக்களுக்கு அப்பிரச்சினைகள் எவையுமே கிடையாது. சுதந்திரமாக துணிச்சலாக இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முழு அதிகாரமும் அவர்களுக்கு இருக்கின்றது. ஆகவே அவர்கள் இப்பொறுப்பை ஏற்று செயற்படவேண்டும் என்பதே எமது அவா.

அண்மைக் காலத்தில் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியல் இவ்விடயம் தொடர்பாக ஒரு சில நடவடிக்கைகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. விசேடமாக போர்க்குற்றங்களை நிரூபிக்கும் வகையில் ஒரு சில அமைப்புக்கள் தம்முடைய செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன.

ஆனால் ஒரு கருத்தை எமது கருத்தைக் கூற விரும்புகின்றோம். போர்க்குற்றங்களோடு மட்டும் நாம் எமது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தாமல் ஒரு இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்பதை நிரூபிக்கக்கூடிய வகையிலே செயற்பாடுகள் அமையவேண்டும் என்பதே எமது வேண்டுகோள். ஏனெனில் இனப்படுகொலையை நாம் நிரூபிக்கும்பொழுது போர்க்குற்றங்கள் அதற்குள் உள்ளடக்கப்படும். இனப்படுகொலை என்பது எத்தனையோ கோணங்களில் இங்கே நடைபெறுகின்றன. போர்க்குற்றம் என்பது அந்த நடவடிக்கைளில் ஓர் அங்கம். எம்மைப் பொறுத்தவரையில் போர்க்குற்றங்களோடு மட்டும் நாம் எமது செயற்பாடுகளை மட்டுப்படுத்தினால் இனப்படுகொலையின் ஏனைய அங்கங்கள் வெளிவராமற்போகலாம். எமக்கு சாதகமாக வரவேண்டிய அரசியல் முடிவுகள் கிடைக்காமற்போகும். ஆகையால் அதுதொடர்பாக அவசரப்படாமல் ஆறுதலாகச் சிந்தித்து புலம்பெயர் தமிழ் மக்கள் செயற்படவேண்டும்.

மிக விரைவில் வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருக்கும் தமிழ்க்கட்சிகள் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்ன?

வட மாகாண சபை என்பது சிறிலங்காவின் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு தேர்தல் முறை. 13 ஆவது திருத்தம் அடிப்படையில் இந்தியாவின் நேரடி தலையீடுகள் 80களில் இருந்த வேளை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஓர் தீர்வாகத்தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தம் என்பது தமிழ் தேசியப் பிரச்சினைக்கு ஓரு தீர்வு அல்ல. தமிழ் தேசிய மக்களின் அரசியற் தலைமைகளோடு பேசி எம்முடைய முழுப்பங்களிப்போடும் எம்முடைய இணக்கப்பாட்டோடும் கொண்டுவரப்பட்ட ஒரு விடயம் அல்ல. ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் எமது அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாத 13ஆவது அரசியல் திருத்தத்துக்குள் நாம் சென்று முடக்கப்படக்கூடாது என்பதுதான் எமது தெளிவான – உறுதியான - நிலைப்பாடு.

ஆகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் நாம் 13 ஆவது திருத்தத்தில் அடிப்படையில் வரப்போகின்ற மாகாண சபைத் தேர்தல்களை முழுமையாகப் புறக்கணிக்கிறோம். நாம் அதை நிராகரிக்கின்றோம். பொறுப்புள்ள தமிழ் அரசியல் தலைவர்களும் இதைப் புரிந்து நிராகரிக்க வேண்டும். நாம் இந்த முறையை ஏற்று தேர்தலில் போட்டியிடுவோமாயின் அது தமிழர்களின் அரசியல் ஆசைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியாத ஆபத்தான நிலையாக அமையும்.

அரசியலில் திருப்பு முனையைக்கொண்டுவரும் காரணிகளில் மாணவர் சக்தியும் ஒன்று. மாணவர்களுக்கும் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குமான உறவு எப்படி உள்ளது?

பல்கலைக் கழக மாணவர்கள் மட்டுமல்ல பல்கலைக் கழக சமூகத்தையும் நாம் அணுக விரும்புகின்றோம். அந்த அடிப்படையில் தேர்தல் காலத்திலும் கூட பல சந்திப்புக்களை மாணவர் ஒன்றியத்தோடும் பல்கலைக் கழக புத்தி ஜீவிகளோடும் நடத்தியிருக்கின்றோம்.

அச் சந்திப்புக்கள் எதிர்காலத்திலும் தொடரும்;. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் மே 18க்குப் பிறகு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தமிழ் தேசியவாதம் தொடர்பாகவும் தமிழ் தேசிய அரசியலுடையை பாதைகள் தொடர்பாகவும் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் சிறிலங்கா அரசு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. அவ்வகையில் பல்கலைக் கழக சமூகத்தைத்தான் முக்கியமாக இலக்கு வைக்கிறார்கள். அந்த வகையில் அவர்களுக்கு ஒரு தெளிவைக் கொடுக்கும் விதமாக அவர்களை அணுகிக்கொண்டிருக்கின்றோம்.

தற்போது அரச அதிபர் மகிந்த ராஜபக்ச சகல அதிகாரங்களையும் கொண்ட ஒரு அதிபராகவும் அவருடைய கட்சி ஆளும் கட்சியாகவும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் முக்கியமான அரசியல் பொறுப்புக்களில் இருப்பவர்களாகவும் உள்ள நிலையில், மிகப்பெரிய இன அழிப்பையும் ஒடுக்கு முறையையும் எதிர்கொண்டுள்ள ஈழத் தமிழினம் எவ்வாறு தனது விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லலாம் என நீங்கள் கருதுகிறீர்கள்?

நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று சிங்கள தேசத்தின் தலைவராக மகிந்த கோலோச்சுகிறார் நேற்று வேறொருவராக இருந்தார். ஆனால் சிங்கள தேசத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், சிங்கள தேசத்தின் தலைவர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு தமிழினப் படுகொலையை செய்துகொண்டு வந்திருக்கிறார்கள். ஆகவே மகிந்த ராஜபக்ச இன்று ஆட்சியில் இருக்கிறார் அவருடைய குடும்ப ஆட்சி பலமாக இருக்கிறது என்பதற்காக நாம் எதையும் சாதிக்க முடியாது என்ற முடிவுக்கு நாம் வரமுடியாது. உண்மையில் மகிந்த ராஜபக்சவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் சிங்கள மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வரும் எந்த ஒரு தலைவரும் தமிழ் தேச நலன்களுக்கு மாறாக தமிழ் தேசத்தை அழிக்கும் நோக்கோடுதான் செயற்படுவார். சிங்கள தேசத்தின் ஆதிக்கத்தை தமிழ் தேசத்தின்மீது செலுத்தி எங்களுடைய ஆட்சி அதிகாரத்தை இல்லாமற்செய்து எமது இனத்தை வேரோடு அழிக்கும் நோக்குடன்தான் செயற்படுவார்கள். அது கடந்த காலத் தலைவர்களாக இருக்கலாம் இன்றை தலைவராக இருக்கலாம் எதிர்காலத் தலைவர்களாகவும் இருக்கலாம். ஆகவே நாம் சிங்களத் தலைவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்த காரணத்தினால்தான் எமது போராட்டத்தில் பலவகை மாற்றங்களைச் செய்து முன்னெடுத்து வந்திருக்கிறோம்.

எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் இன்றைக்கு மிகப் பெரிய இன அழிப்பைச் செய்திருக்கின்ற ஒரு சூழலில், ராஜபக்சவாகவும் இருக்கலாம் வேறு யாராகவும் இருக்கலாம் ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் எப்படி எமது அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற விடயத்தில் நாம் ஒன்றைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும்.

இன்றைய சர்வதேச நிலைமைகளை நாம் நிச்சயமாகப் பயன்படுத்தவேண்டும். இன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளில்; குறிப்பாக மேற்குலக நாடுகளில் உருவாகிக்கொண்டு வருகிறது என்பது திட்டவட்டமாக எமக்கு தெரியக் கூடியதாக இருக்கிறது. இதுமட்டுமல்ல தமிழினத்தை அழிக்கின்ற செயற்பாட்டில்தான் சிறிலங்கா அரசு செயற்பட்டுவருகிறது என்பதை இந்திய மக்களும் புரிந்துள்ளார்கள். அங்கே இருக்கின்ற சூழலை நாம் சரியாகப் பயன்படுத்தவேண்டும். நிச்சயமாக சிறிலங்கா அரசு மேற்குலக நாடுகளுக்கும் - ஏன் இந்தியாவுக்கும்கூட - அந்த நாடுகளின் நலன்களுக்கு மாறாக செயற்படுகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆகவே அந்த நாடுகள் தங்களுடைய நலன்களைக் கருதி சிறிலங்கா அரசு மேல் அழுத்தத்தைப் போடவேண்டிய நிலைமையும் நிச்சயமாக இருக்கின்றது. இவற்றை நாம் பயன்படுத்தவேண்டும். இவை எமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பங்கள்.

மற்ற கட்சிகள் கூறும் கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களைத்தான் நாம் கூறிக்கொண்டு வருகின்றோம். அதாவது “நாம் (தமிழர்கள்) தோற்றுப்போய் இருக்கின்றோம் என்று மற்றவர்கள் கூறுகிறார்கள். நாம் எம்முடைய பலத்தை முழுமையாக இழந்திருக்கின்றோம். நாம் நொந்துபோய் இருக்கின்றோம். ஆகவே நாம் இவ்வளவு காலமாக வலியுறுத்திய விடயங்கள் அரசியற் கருத்துக்கள் அவற்றில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். இனிமேலும் நாம் தேசியம் தாயகம் சுயநிர்ணயம் என்ற தத்துவங்களைப் பேசி எதையும் அடைய முடியாது” என்று கூறுகிறார்கள்;.

நாம் கூறுவது என்னவென்றால், உண்மையில் இன்றைக்கு சர்வதேசமட்டத்தில் எமக்கு சாதகமான் சூழல் உருவாகிவாகின்றது. அதுமட்டமல்ல சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசுமீது அழுத்தம் போடவேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்படும்பொழுது சிங்கள நாட்டுக்கு அழுத்தம்போட ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது அதுதான் தமிழர். தமிழ் மக்கள் தமிழ்; அரசியல் அபிலாசைகள் என்ற விடயம் மட்டுமே சிங்கள நாட்டுக்கு அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய நெருக்கடியைக் கொடுக்கக்கூடிய ஒரு விடயம். ஆகவே இந்த நாடுகள் எங்களது விடயங்களை அணுகவேண்டிய சூழல் இருக்கின்றது. எதிர்காலத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். ஆகவே எமக்கொரு சந்தர்ப்பம் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் கூடிக்கொண்டு இருக்கின்றது.

ஆனால் இவ்விடயங்களை நாம் சரியாக அணுகி எம்மக்களுக்கு ஒரு முன்னேற்றத்தைக் கொடுப்பதற்கு தாயகத்தில் உள்ள அரசியற்தலைமைகள் தமிழ் தேசத்தின் அடிப்படை அரசியல் நலனில் எவ்வித விட்டுக்கொடுப்பையும் செய்யாது உறுதியாக நிற்கவேண்டியது மிக முக்கியமாக ஒரு விடயம். இந்த நிலையில் எமது அரசியல் அபிலாசைகளை விட்டுக்கொடுத்துப் போகவேண்டும் என்று கருதுவது மிகப்பெரிய வரலாற்றுத் தவறாக அமையும்.

தற்போதையை நிலையில் ஈழத் தமிழர்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நிலைப்பாடு என்னவாக உள்ளது? ஈழத் தமிழர்கள் சர்வதேசமட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் எவையெனக் கருதுகிறீர்கள்?

சர்வதேசத்தைப் பொறுத்த வரையில் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது மிகுந்த ஆத்திரமடைந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மேற்கு நாடுகளின் நலன்களுக்கு எதிராக மேற்கு நாடுகளுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து செயற்படுவதே அதற்குக் காரணமாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய போர்க் குற்றங்கள் இடம் பெற்றுள்ளமையை சர்வதேச சமூகம் சுட்டிக்காட்டுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேணடுமென சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இறுதி யுத்தத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனை வழங்குவதற்கென மூன்றுபேர் கொண்டகுழு ஒன்றை நியமித்துள்ளார். மேலும் போர்க்குற்றம் தொடர்பான சான்றுகளை அனுப்பி வைக்கும்படியும் ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. ஐp.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இலங்கை அரசு பாரிய போர்க்குற்றங்களைப்; புரிந்துள்ளது என்பதுதான் அவர்களின் வெளிப்படையான கருத்தாக உள்ளது. இது அவர்களின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடாகவும் உள்ளது.

போர்க் குற்றம் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி மேற்குலக நாடுகளின் நலன்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் மகிந்த அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயல்வதன் மூலம் மகிந்தராஐபக்சவை பணியவைத்து மேற்குலகின் நலன்களை பேணுதல் அல்லது அவரது ஆட்சியை மாற்றி மேற்குலகுக்குச் சார்பான ஆட்சியை ஏற்படுத்துவது.

கடந்த காலங்களில் பிறேமதாசா மற்றும் சந்திரிக்கா போன்றவர்களது ஆட்சியிலும் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றிருந்தது. எனினும் அவை தொடர்பாக மேற்கத்தேய சர்வதேச சமூகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை. அத்துடன் அவர்களை பாதுகாக்கவும் விரும்பியது. காரணம் அவர்கள் மேற்கு நாடுகளின் நலன்களை பேணியபடி செயற்பட்டமையேயாகும்.

மேற்குலக நாடுகள் கூறும் போர்க் குற்றச் சாட்டுக்களில் சரத் பொன்சேகாவுக்கும் முக்கிய பங்குண்டு எனினும் அவரைத் தண்டிக்கும் எண்ணம் மேற்குலக நாடுகளுக்கு இலலை. மாறாக அவரைப் பாதுகாக்கவே விரும்புகின்றன. ஆனால் ராஐபக்ச அவர்கள் மேற்கு நாடுகளால் விரும்பப்படாத ஒருவராக உள்ள காரணத்தினால் மேற்கு நாடுகள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்புகின்றன. இந்த சந்தர்ப்பத்தினை தவறவிடாது தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இனத்திற்கு சர்வதேச சட்டங்கள் கூறும் வகையிலான அரசியல் நலன்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் எமது நடவடிக்கைகள் அமைய வேண்டும். அதாவது இனப்படுகொலை நிரூபிக்கப்படும் பட்சத்தில் இலங்கை அரசு தண்டிக்கப்படும் அதேவேளை தமிழத் தேசத்தின் இறைமையை தமிழர்கள் பிரயோகிக்கக் கூடிய வகையில் சிங்கள சேத்த்தின் அடக்கு முறையில் இருந்து விடுபடக்கூடிய அரசியல் அங்கீகாரத்தினை சர்வதேச சமூகத்திடமிருந்து பெறும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இனப்படுகொலையை நிரூபிப்பதன் மூலமான செயற்பாட்டினூடாக மகிந்த அரசு தண்டிக்கப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் மேற்கு நாடுகளுக்குச் சார்பானவர்கள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் தமிழ்த் தேசத்தின் மீது எவ்வித அடக்கு முறைகளையும் பிரயோக்கிக் முடியாதவாறு அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பினை சர்வதேச சமூகத்திடமிருந்து குறிப்பாக ஐநாவிடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இச் சந்தற்பத்தில் புலம்பெயர் தமிழ் மக்கள் பொறுப்புடன் செயற்படல் வேண்டும். மகிந்த அரசிற்கு எதிராக மேற்கு நாடுகள் திரண்டுவரும் இந்த சந்தற்பத்தினை சரியாகப் பயன்படுத்த வேண்டிய தேவை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு உண்டு. சரியாகப் பயன்படுத்துவதென்பது மேற்கு நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் போர்க் குற்றங்களுக்காக மேற்கு நாடுகளுடன் இணைந்து செயற்படுவதுடன் மட்டும் நின்றுவிடாதிருத்தல்.

இலங்கையில் இடம்பெற்றது 60 ஆண்டுகால இனப்படுகொலையே என்பதனை உறுதியாக சர்வதேச சமூகத்திற்கு அழுத்திக் கூற வேண்டும். அந்த இனப்படுகொலை தொடர்பாக பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டுமென மேற்கு நாடுகளுக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுத்தல். இனப்படுகொலையை நிரூபிக்கும் வகையிலான சாட்சியங்களை திரட்டி கொடுத்தல்.

http://www.pooraayam.com/special-articles/1586-2010-11-29-23-12-54

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.