Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்கொள்ளப்பட்ட தேசத்தின் ஆட்கொள்ளபடாத ஆத்மா...

Featured Replies

2009 இல் வெளிவந்த இந்தப் படம்,இரு மனிதர்களின் போராட்டத்தைப் பற்றியது.The struggle of two men, to uplift a beaten up nation by uplifting a beaten up sports team.இது தான் கதை.

1990 வருடம் நெல்சன் மண்டேலா தன்னுடைய நீண்ட சிறைத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவதை காட்டி ஆரம்பிக்கறது படம்.அவரை விடுவித்துச் செல்லுவதை பார்க்கும் ஆப்ரிக்க சிறுவர்கள் குதூகலப்படும் அதே நேரம்,ஒரு வெள்ளையன் இன்னொருவனிடம், “நம் நாடு நாய்களுக்கு போகும் காலம் இது!(This is the day our country(??) goes to the dogs)“ என்கிறான்.

எங்கே இவர் நிலைமையை சீர் செய்து விடுவாரோ என்று பயப்படும் ஆங்கில அரசாங்கம்,தீவிரவாத கும்பல்களுக்கு மறைமுகமாக ஆயுதம் கொடுத்து நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.உள்நாட்டு யுத்தம் நடக்கக் கூடிய நிலையில் உள்ள நாட்டை கஷ்டப்பட்டு மீட்டு, ஆப்ரிக்க மக்களுக்கும் வோட்டுரிமை பெற்றுத் தருகிறார் மண்டேலா.மேலும்,நிகழும் தேர்தலில் ஜெயிக்கிறார் மண்டேலா.

நிறவெறி பிடித்த வெள்ளையனின் கூற்றுக்கு மாறாக,காரியங்கள் நடைபெற ஆரம்பிக்கிறது மண்டேலா ஆட்சியில்.ஆப்ரிக்க மக்களின் பிரதிநிதியாக மண்டேலா பிரெசிடென்டாக தேர்ந்தெடுக்கப்பட்டதும்,அவரது அலுவலகத்தில் இருந்து விலக எத்தனிக்கிறார்கள் அங்கே ஏற்கனவே வேலை செய்யும் வெள்ளையர்கள்.இது எங்கே நாம் போட்ட வெறியாட்டம் நமக்கே திரும்பிப் படிக்கப்படுமோ என்ற பயத்தின் வெளிப்பாடே! ஆனால்,குணத்தில் பெரியவர் யார் என்று காட்டுகிறார் மண்டேலா.

அலுவலகத்தை விட்டுப்போக எத்தனிக்கும் வெள்ளையர்களிடம், ”உங்களுக்கு போக ஆசை இருந்தால் நீங்கள் போகலாம்.ஆனால்,உங்கள் நிறத்தின் காரணமாக நீங்கள் போக நினைத்து இருந்தால்,அதனை நிறுத்திவிட்டு, நிறவெறி இல்லாத ஒற்றுமை உள்ள நாடாக ஆப்ரிக்காவை உருவாக்க உதவுங்கள்.ஆப்ரிக்க நாட்டின் குடிமக்கள் தான் நீங்களும்.” என்கிறார். பழிவாங்கத் துடிக்கும் மக்களை சமாதானப்படுத்த முனைகிறார்.மாற்றத்தை தன் மூலமே ஆரம்பிக்கிறார்.தன்னுடைய மெய்க்காப்பாளர் படையில் இரு நிற மக்களையும் வேலைக்கு அமர்த்துகிறார்.ஏற்கனவே பசி,கொள்ளை,கொலை,நிறவெறி ஆகியவற்றால் அல்லல்படும் நாட்டில் பழிவாங்கும் வெறி தலை தூக்கி விடாமல் இருக்க பாடுபடுகிறார்.

இது இப்படியாக போய்க்கொண்டு இருக்கும் போது,ஒருநாள் ஆப்ரிக்க ரக்பி அணியினர் பங்கேற்கும் ஒரு போட்டிக்கு செல்கிறார்.Springboks என்றும், செல்லமாக bokke என்றும் அழைக்கப்படும் இந்த ரக்பி அணியினை ஆப்ரிக்க மக்கள் நிறவெறித் தனத்தின் அடையாளமாகவே பார்கிறார்கள்.இதன் காரணமாக,எப்போது இந்த அணி விளையாண்டலும்,இவர்களின் எதிர் அணிக்கே உற்சாகம் கொடுப்பது ஆப்ரிக்க மக்களின் வழக்கம்.

சிறு வயதில் தானும் இதையே செய்து இருந்தாலும், ஒன்றிய ஆப்ரிக்காவுக்கு இது பெரும் ஆபத்து என உணரும் மண்டேலா,மக்களிடம் இருக்கும் இந்த துவேசத்தை நீக்க யோசிக்கிறார். மக்களின் நிற துவேசத்தை நீக்க தான் எடுக்கும் முயற்சிகளில் போக்கே அணியினரை மக்களை ஏற்க வைப்பதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று உணர்கிறார். மக்களை இணைக்க விளையாட்டை பயன்படுத்த நினைக்கிறார்.மிக மோசமான நிலையில் இருக்கும் ரக்பி அணியின் கேப்டன் Francois Piennar ஐ அழைத்து, அடுத்த வருடத்தில் நடக்க இருக்கும் ரக்பி உலகக்கோப்பை போட்டியை ஜெயிக்க வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்துகிறார்.ஒற்றுமையின் முதல் படி,விளையாட்டின் மூலம் ஆரம்பிக்கப்பட முயற்சிக்கிறார்.ஆனால் இந்த முடிவு சந்தேகங்களையும்,எதிர்ப்புகளையும் எழுப்பும் அளவு,ஆதரவை பெற்றுத் தருவதாயில்லை.

ஆனால் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கும் மண்டேலா,தன்னைப் போலவே ஒற்றுமையை விரும்பும் ப்ரான்ஸ்வாவின் உதவியுடன் செயல்படுகிறார். ஆனால் அவர்களது பாதை எளிதானது அல்ல!மிக மோசமான நிலையில் உள்ள அணி,மோசமான நிலையில் உள்ள நாடு இரண்டையும் அவர்கள் சீர்படுத்த வேண்டும்.மிகப்பெரும் சவால்களை விளையாட்டிலும்,நாட்டிலும் சந்திக்க வேண்டும்.எப்படி அதை சாதித்தார்கள் என்பதே கதை.

யூகிக்கக் கூடிய கதையைக் கொண்டிருந்தாலும்,கதை செல்லும் வேகம் பிரமிக்க வைக்கும்.அது மட்டுமில்லாமல்,ஆப்ரிக்க நாட்டின் மிகச் சிக்கலான பிரச்சனையைக் கூட சின்னச் சின்ன காட்சிகளால் எளிதாக உணர்த்த முடிகிறது Clint Eastwood க்கு.

படத்தின் ஆரம்ப காட்சியில், வெள்ளையர்கள் uniform அணிந்து பச்சைப் புல்வெளியில் விளையாடிக் கொண்டு இருக்க,எதிரே புழுதியில் கிழிந்த சட்டையுடன் விளையாடும் ஆப்ரிக்க மண்ணின் மைந்தர்களும்,அந்த இரு அணியினரின் பின்னால் தெரியும் கட்டடங்களும்,இந்த இருவேறு துருவங்களையும் இணைக்கும் பாதையில் செல்லும் மண்டேலா, ஒரு நல்ல உதாரணம்.

கதையில் சினிமா நகாசு இல்லாமல்,கதையை உண்மையான சம்பவங்களின் மூலமாக வைத்து எடுத்திருப்பது இன்னும் அழகு.எங்கேயும் ஆங்கில சினிமாவின் இலக்கணமான அதிகப்படி விவரனைகளோ,காட்சிகளோ இல்லாததும் சிறப்பு.

மண்டேலாவாக Morgan Freeman. நடிப்பு ராட்சசன் !

Usually,Morgan steals the whole show even if you give him just 10 mins.What if you give him an entire movie?

அது தான் இங்க நடந்து இருக்கிறது.வசன உச்சரிப்பு,நடை,செய்கைகள் என அனைத்திலும் மண்டேலா தான் தெரிகிறார்.மோர்கன் தெரியவேயில்லை. மண்டேலாவின் முகமே குழம்ப ஆரம்பித்து எனக்கு.பாத்திரத்தோடு இணைந்த பிரமாண்ட நடிப்பைத் தருகிறார் இந்த மகா நடிகன்!இனி எனக்கு மண்டேலா என்றால் இவர் முகமும் நினைவுக்கு வரும்.

“உங்கள் குடும்பம் எவ்வாறு இருக்கிறது? “ எனக் கேட்கப்படும் கேள்விக்கு, “என் குடும்பம் மிகப்பெரியது.43 மில்லியன் மக்களைக் கொண்டது.” என்று சொல்லி விட்டு,பிரித்து கிடக்கும் தன் குடும்பத்தை எண்ணியவாறே,ஆப்ரிக்காவையும் நினைத்துக் கவலைப்படும் கட்டத்தில் மோர்கனின் நடிப்பு,ஒரு பானைக்கு ஒரு சோறு பதம்.

ப்ரான்ஸ்வா ஆக Matt Damon. மோசமான நிலையில் பயிற்சி இல்லாத அணியினை பக்குவப்படுத்தி அதனை வெற்றிக்கு கொண்டு செல்ல முனைவது மட்டுமல்லாது,மண்டேலாவின் திட்டங்களுக்கு துணையாய் இருந்து நாட்டையும் வசீகரப்படுத்தும் வேடம். நன்றாக செய்து இருக்கிறார் என்றாலும்,அவருக்கு இதில் நடிக்க வாய்ப்பு கம்மி தான். மலையென திகழும் மோர்கன் முன் முடங்கிப் போகிறார் மேட்.

ஆப்ரிக்க மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் உள்ள வெறுப்பு மண்டேலாவின் பாதுகாப்பு அதிகாரிகளின் மூலமே வெளிப்படுகிறது.கதம்பக்கூட்டமான இது,அடுத்தவரை வெறுப்புடனே நோக்குவதும்,சண்டை போடுவதும்,பின்னர் சிறுது சிறிதாக நட்பு கொள்வதும்,கடைசியில் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவதும் என்று மாற்றத்தை இந்தக் கூட்டத்தின் மூலமே வெளிப்படுத்துவது சிறப்பு.

இது மட்டுமில்லாது,போக்கே அணியின் வெற்றியின் மூலம் உற்சாகம் அடையும் மக்கள் அதனை நேசிக்க ஆரம்பிப்பதும்,ஒற்றுமையின் முதல் படி விரிவதும்,பின்னர் போக்கே அணியை நிறபேதமில்லாமல் ஆதரிப்பதும்,கடைசியில் எல்லோரும் சேர்ந்து ஆடிப் பாடுவதும் என்று, ஒற்றுமையை பேண சிறந்த வழிகளில் ஒன்று விளையாட்டு என்பது கண் முன் விரிகிறது.

சிறையில் இருந்து வந்ததும் வன்முறையை அடக்குவது,பொதுத் தேர்தலை கொண்டுவருவது, மக்களை ஒன்றுபடுத்த பாடுபடுவது, வெள்ளையர்களை பழிவாங்க எத்தனிக்காமல் மேன்மை காட்டுவது,தன் சம்பளம் மிக அதிகம் எனக்கூறி மூன்றில் ஒரு பங்கை தானத்துக்கு கொடுப்பது,போட்டியின் முதல் நாள் நேரே சென்று வாழ்த்துக் கூறுவது என்று நாம் பார்ப்பது, ஒரு மஹா மனிதனின் வாழ்க்கையில் சிறியதொரு பங்கே!ஆனால்,இதுவே நம்மை மலைக்கவும் ஏங்கவும் வைக்கிறது.இவரையும்,நமது நாட்டில் இருக்கும் சில ஈனப் பிறவிகளையும் ஒப்பீடு செய்து, கோபப்படாமல் இருக்க முடியவில்லை.தன் புகழ் கெட்டாலும் நாட்டு ஒற்றுமையை நிலைநாட்ட முடிவுகள் எடுத்த மண்டேலா எங்கே?தினம் தினம் பாராட்டு விழா நடத்திக் கொள்ளும் சில மனிதர்கள் எங்கே?

மேலும்,பணியின் முதல் நாள் காலை,மண்டேலா வாக்கிங் போகும்போது பேப்பர் ஒன்றின் தலையங்கம் தென்படுகிறது.அதில்,” தேர்தலில் ஜெயிக்க முடிந்த மண்டேலாவுக்கு,நாட்டை வழிநடத்த முடியுமா?” என்ற வாசகம் இருக்க,கூட இருக்கும் மெய்க்காப்பாளர்,

Not even one day on the job and they are after you.

என்பார்.அதற்கு மண்டேலா,It's just a legitimate question. என்று சொல்லும் போது ஆரம்பிக்கிறது இந்த மாமனிதனின் ராஜாங்கம்.

இங்கே INVICTUS என்பது ஒரு லத்தின் வார்த்தை.அதற்கு Undefeatable ,Unconquerable என்று அர்த்தம்.

இருபத்தியேழு வருடங்கள் சிறையில் இருந்தாலும்,தன்னை அங்கே வைத்து கொடுமைப்படுத்திய வெள்ளையர்களை தன் நாட்டின் குடிமக்களாக ஏற்று,ஒற்றுமைக்கு போராடிய ஒரு மனிதனை குறிக்க இதை விட சிறந்த வார்த்தை இருக்காது

THANZ:ILLUMINAATIBLOGS

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.