Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் ஊடகங்களில் தமிழர்கள் பற்றிய பார்வை – இரா.துரைரத்தினம்!

Featured Replies

கடந்த ஒருவாரகாலமாக சுவிசர்லாந்திலிருந்து வெளிவரும் அனைத்து ஊடகங்களும் தமிழ் மக்கள் தொடர்பான செய்தியை- அவர்கள் தொடர்பாக ஏனைய இனத்தவர்களுக்கு ஒரு காட்சியை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகள் வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவராதா என ஏங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு கடந்த ஒருவாரகாலமாக சுவிசர்லாந்திலிருந்து வெளிவரும் ஊடகங்கள் மட்டுமன்றி அனைத்து சர்வதேச ஊடகங்களும் வெளியிட்ட செய்திகள் பெரும் அதிர்ச்சியை அல்லது அவமானத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

அண்மையில் சுவிசர்லாந்தில் உள்ள 10தமிழர்கள் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த கைது பற்றி நாம் இங்கே பெரிதாக பேச முடியாது. அது சுவிசர்லாந்து நாட்டின் நீதி சேவையின் விசாரணைக்குட்பட்ட விடயம். எனவே அவர்கள் நிரபராதிகள் என்றால் விடுதலை செய்யப்படுவார்கள். இல்லையேல் அந்தந்த நாட்டில் வாழ்பவர்கள் அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் வாழ வேண்டும் என்பது சட்ட நியதி. எனவே இந்த கைது பற்றியோ இந்த நீதிவிசாரணைகள் பற்றியோ நாம் இங்கு பேச முற்படவில்லை. குற்றமற்றவர்களுக்கு சுவிசர்லாந்தின் நீதித்துறை ஒரு போதும் தண்டனை வழங்காது என நாம் நம்புவோம்.

ஆனால் இந்த கைதுகளுக்கு அப்பால் இந்த நீதி விசாரணைகளுக்கு அப்பால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியே இங்கு நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களை மூன்று வகையாக பிரித்துப்பார்க்கலாம்.

1.கடன்களைப்பெற்றுக்கொடுத்து பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள்.

2.வங்கிகளுக்கு முகவர்களாக இருந்த தமிழ் நிறுவனங்கள்.

3.சுவிசர்லாந்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமூகம்.

இந்த மூன்று தரப்பினரும் பாதிக்கப்படுவது அல்லது சுவிசர்லாந்தில் உள்ள ஊடகங்களால் குற்றவாளிகளாக பார்க்கப்படுவது பற்றியே நாம் இங்கே பார்க்க வேண்டும்.

2009ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து மே மாதம் 19ஆம் திகதிவரை சுவிசர்லாந்தில் உள்ள வங்கிகளிலிருந்து கடன்களைப்பெற்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முகவர்களாக சுவிசர்லாந்தில் செயற்பட்ட நபர்களிடம் பணத்தை கொடுத்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டிக்கிறார்கள். இவர்கள் கடன்களை மீளச்செலுத்த முடியாது கடனாளிகளாக போனது ஒருபுறமிருக்க அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதகமான விளைவுகள் ஏராளம்.

சுவிசர்லாந்து சட்டத்தின் படி ஒருவர் தான் செலுத்த வேண்டிய கட்டணத்தை உரிய காலத்தில் அந்த நிறுவனத்திற்கு செலுத்த தவறினால் இது பற்றிய நடவடிக்கைகளை மாவட்டச்செயலகத்தில் உள்ள Betreibungsamt என்ற பிரிவு அல்லது நீதிமன்றம் கையாளும். மாவட்ட செயலகத்தின் Betreibungsamt பிரிவினால் அல்லது நீதிமன்றத்தினால் உரிய கட்டணத்தை செலுத்த தவறிய குற்றவாளியாக காணும் ஒருவர் சுவிசர்லாந்தில் வாழ்க்கையை கொண்டு நடத்துவது என்பது கஷ்டமான காரியம். ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வங்கிகளிடம் கடனைப் பெற்று விட்டு அதனைச்செலுத்தாது வாழும் பலர் இருக்கிறார்கள். ஆனால் சுவிசர்லாந்தில் அவ்வாறு செய்ய முடியாத அளவிற்கு சட்டங்கள் கடுமையானவை.

இந்த விடயத்தை சுவிசர்லாந்தில் உள்ள சமஷ்டி குற்றவியல் காவல்துறையினரே கையாண்டு வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Betreibungsamt அலுவலகத்தில் கொடுப்பனவை செலுத்தாத நபராக பதிவு செய்யப்பட்டிருந்தால் அவரால் வாடகைக்கு ஒரு வீட்டைப்பெற முடியாது. நிரந்தரவதிவிட அனுமதி, குடியுரிமை என்பனவற்றை இவர்களால் ஒரு போதும் பெறமுடியாது. சொந்த வீடு இருக்குமாக இருந்தால் அவர்களின் வீடு ஏலத்தில் விடப்பட்டு அந்த கட்டணத்தொகையை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும். எனவே எனைய நாடுகளைப்போலன்றி சுவிசர்லாந்தில் கடன்களை பெற்றவர்கள் அதை மீளச்செலுத்தவில்லை என்றால் அவர்களால் சுவிசர்லாந்தில் வாழ்வது என்பது கஷ்டமான காரியமாகும். இன்று கடன்களைப்பெற்று அதை செலுத்த முடியாமல் போனவர்கள் இவ்வாறான நெருக்கடிக்குள்தான் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் கடன்களைப்பெற்ற போது வங்கிகளிடம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களும் போலியானவை என வங்கி விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கிறது. போலியான சம்பளபட்டியலை வழங்கியது, வீட்டுவாடகை உட்பட தமக்கான செலவு விவரங்களை குறைத்து காட்டியதாக விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது. தமது நிறுவனத்தால் வழங்கப்பட்ட சம்பள பட்டியலுக்கு பதிலாக போலியான சம்பள பட்டியலை தயாரித்ததாக சிலரை அவர்கள் வேலை செய்த நிறுவனங்கள் வேலையிலிருந்தும் நிறுத்தியிருக்கின்றன. இவ்வாறு சுவிசர்லாந்தில் நூற்றுக்கணக்கானவர்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிர்க்கதியான நிலையில் நிற்கிறார்கள். இதனால் சில குடும்பங்கள் கூட பிரிந்திருக்கின்றன. பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய சோகம் என்னவெனில் வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிற்கும் இந்த மக்களைப்பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.

கடனைப்பெறுவதற்கு வங்கிகளிடம் விண்ணப்பித்த போது அவர்கள் என்ன நோக்கத்திற்காக கடனைப்பெறுகிறோம் என குறிப்பிட்டிருந்த விடயத்திற்கு மாறாக அப்பணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் கடன்பெற்ற பொதுமக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. சுவிசர்லாந்தின் சட்டத்திற்கு முரணான வகையில் வங்கிக்களில் பெற்ற கடன் அந்த நாட்டின் நீதி நிர்வாக எல்லைக்கு அப்பால் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. தமது சொந்தப்பணத்தை மட்டுமே வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியும். வங்கிகளில் கடனைப்பெற்று வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியாது. இந்த குற்றச்சாட்டுக்களும் கடன்பெற்றவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

கடனாளிகளாக கஷ்டங்களை அனுபவிப்பது மட்டுமன்றி பல சட்ட சிக்கல்களுக்கும் அவர்கள் எதிர்காலத்தில் முகம் கொடுக்கப்போகிறார்கள். இந்த மக்களை உரிய காலத்தில் சிக்கல்களிலிருந்து காப்பாற்றியிருக்க வேண்டும். ஆனால் அந்த பணத்தைப்பெற்றவர்கள் அப்பாவி பொதுமக்களை நடுக்கடலில் தத்தளிக்க விட்டதாலேயே இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்கிறது.

இரண்டாவது வங்கிகளுக்கு முகவர்களாக இருந்த தமிழ் நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சுவிசர்லாந்தில் வர்த்தகதுறையில் ஒரளவு முன்னுக்கு வந்தவர்கள் ஒருசிலர்தான். அந்த ஒருசிலரின் வர்த்தகம் கூட பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பாதிப்பாகவே அமையும். போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போது அதை சரிபார்க்காது வங்கிகளிடம் வழங்கியது உட்பட சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆவணங்களை சரிபார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டை தவிர வேறு பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த விடயம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இந்த விடயத்தை நாம் ஆழமாக பேசமுடியாது. இருந்த போதிலும் தமிழ் நிறுவனங்கள் சந்தித்திருக்கும் நெருக்கடி தமிழ் சமூகத்திற்கான நெருக்கடியாகத்தான் பார்க்க வேண்டும். தமிழ் மக்களின் வாழ்வியல் முன்னேற்றங்களில் இந்த தமிழ் நிறுவனங்கள் கணிசமான பங்கை வகித்திருக்கின்றன என்பதை நாம் மறந்து விடமுடியாது. தமிழ் மக்கள் தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் சொந்தவீடுகளை வாங்குவதற்கும் துணைபுரிந்தவர்கள் இந்த தமிழ் வங்கி முகவர்களே. அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது சுவிசர்லாந்தில் உள்ள தமிழ் சமூகத்திற்கான பாதிப்பாகவே நோக்க வேண்டும். அவர்கள் இந்த சிக்கல்களிலிருந்து மீண்டு வந்து தமது தொழில் முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்பதே எனது பிராத்தனை.

மூன்றாவது சுவிசர்லாந்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமூகம். இந்த விடயத்தில் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய இழுக்கும் அவமானமும் அவர்கள் மீது மோசடிக்காரர்கள் என்ற பழியும் சுவிசர்லாந்திலிருந்து வெளிவரும் ஊடகங்களாலும் சர்வதேச ஊடகங்களாலும் சுமத்தப்பட்டிருக்கிறது.

தமது நாட்டின் பெருமளவு நிதியை தமிழர்கள் மோசடி செய்திருக்கிறார்கள் என்று சுவிசர்லாந்தில் உள்ள மக்கள் மனதில் ஆழமாக பதியும் வகையில் சுவிசர்லாந்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. உலகின் மிகப்பெரிய மாபியாக்கள் என வர்ணிக்கும் வகையில் சுவிசர்லாந்து மக்கள் ஒவ்வொருவரும் தமிழ் மக்களை பார்க்கும் வகையிலேயே இவை சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளைக்காரன் எங்களைப்பார்த்து மாபியா என்று சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும் என உங்களில் சிலர் எண்ணலாம்.

இது மிகப்பெரிய பாதிப்பு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று சர்வதேச ஆதரவை பெறுவதன் மூலமே தமிழ் மக்கள் தங்கள் உரிமையை பெற முடியும் என்ற மார்க்கத்தை தவிர வேறு மார்க்கம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் நியாயங்களை ஏற்றுக்கொண்டு சிறிலங்கா அரசு உட்பட தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கும் தரப்புக்களுக்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலமே தமிழர்கள் தங்களது நியாயபூர்வமான உரிமைகளை பெற முடியும். அது தவிர இனிமேல் ஆயுதப்போராட்டத்தின் மூலமோ அல்லது காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருப்பதாலோ உரிமைகளை பெற்று விடலாம் என நினைப்பது வேடிக்கையான விடயம். சர்வதேச ஆதரவை தமிழர் பக்கம் திருப்புவதன் மூலமே எதனையும் சாதிக்க முடியும்.

இந்நிலையில் இந்த சம்பவங்களும் ஜேர்மன் பிரென்ஞ், இத்தாலி ஆங்கில மொழிகளில் வெளிவரும் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்ற செய்திகளும் சர்வதேசத்தின் முன் ஈழத்தமிழர்கள் ஒரு மோசடிக்காரர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள், மாபியாக்கள் என்ற வடிவத்தையே கொடுத்திருக்கிறது.

ஆதரவையும் அனுதாபத்தையும் தேடி தமது பலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டிய தமிழர் சமூகம் இன்று உலக நாடுகளில் கெட்டபெயர்களையே தேடிவருவது எந்த வகையிலும் விடுதலை வேண்டி நிற்கும் சமூகத்திற்கு உதவப்போவதில்லை.

ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கின்ற தடையை அகற்ற வேண்டும் என பிரான்சில் உள்ள சில நல்ல உள்ளங்கள் முயற்சி எடுத்து வருகின்றன. அவர்களுக்கு கூட துரோகி பட்டங்களை சிலர் சூட்டிக்கொண்டிருக்கிறார்கள். தடைகளை அகற்றுவதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டிய இந்த நேரத்தில் சுவிசர்லாந்து போன்ற நாடுகளிலும் தடைகளை போடுவதற்கான வேலைகளே நடைபெற்று வருகின்றன.

சுவிசர்லாந்து குடிமக்களும் அங்குள்ள ஏனைய நாட்டவர்களும் இப்போது தமிழர்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை ஜேர்மன் மொழி நன்கு தெரிந்தவர்களுக்கு புரியும். தமிழர்களை சந்திக்கும் சுவிசர்லாந்து மக்களும் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருக்கிறதே என்றுதான் கேட்கிறார்கள். தமிழர்கள் என்னதான் நியாயத்தை சொன்னாலும் இந்த நாட்டு ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதும் செய்திகளையே அவர்கள் நம்புகிறார்கள். இவ்வளவு காலமும் தமிழர்கள் நேர்மையானவர்கள் உழைப்பாளிகள் என்று இருந்த நற்பெயர்கள் அனைத்தும் தவிடு பொடியாக்கப்பட்டு சர்வதேசத்தின் முன்னால் கூனிக்குறுகி தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சுவிசர்லாந்தில் உள்ள தமிழர்கள் பற்றி நன்கு அறிந்து கொண்ட ஒரு சில சுவிசர்லாந்து மக்களைத்தவிர பெரும்பாலானவர்கள் இந்த ஊடகங்களில் வெளிவரும் தகவல்களை நம்புவது இயல்பானதுதான்.

கடந்த சில தினங்களுக்கு முதல் சுவிஸ் இன்போ ஆங்கில இணையத்தளத்திற்கு சுவிசர்லாந்தில் உள்ள தமிழர்கள் தொடர்பாக செவ்வி வழங்கிய பேர்ண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இனங்களியியலாளர் கலாநிதி டமாரிஸ் லூதி சுவிசர்லாந்தில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல் குறித்து அனுதாபத்துடனேயே நோக்குகிறார்.

பேர்ண் பல்கலைக்கழகத்தில் இனங்கள் இயல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றும் இவர் தனது கலாநிதி பட்டத்திற்காக 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டுவரை சுவிசர்லாந்தில் உள்ள தமிழர்களின் வாழ்வியல் மற்றும் இனங்களுடனான இணைதல் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டவர். அதன் தொடர்ச்சியாக தமிழர்களின் நடவடிக்கைகள் பற்றியும் வாழ்வியல் பற்றியும் மிக உன்னிப்பாக அவதானித்து வருபவர்.

இவரை கடந்த சில தினங்களுக்கு முதல் சுவிஸ் இன்போ இணையத்தளம் செவ்வி கண்டிருந்தது. இவர் அண்மைக்காலத்தில் தமிழர்கள் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் ஆய்வுகள் பற்றி தெரிவித்திருந்தார்.

2009ஆம் ஆண்டு முற்பகுதி தொடக்கம் போர் முடிவடைந்த மேமாதம் வரை சுவிசர்லாந்தில் உள்ள தமிழ் சமூகத்திடம் பெருமளவு நிதி வழங்குமாறு நிர்ப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் இதில் சிலரிடம் வங்கிக்கடனாக பெறப்பட்டதாகவும் குறிப்பிடும் கலாநிதி டமாரிஸ் லூதி இந்த பணத்தின் பெருந்தொகை உரிய இடத்திற்கு போய் சேரவில்லை என்றும் சில இடங்களில் தேங்கி கிடப்பதாகவும் தான் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்த விடயங்களை சுவிசர்லாந்து அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடாத போதிலும் விசாரணைகள் பற்றிய தகவல்களை ஸ்ரீலங்கா தூதரகமே பெற்று ஊடகங்களுக்கு வழங்கி வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். சுவிசர்லாந்தின் சட்டத்தை மீறி ஸ்ரீலங்கா தூதரகம் தமிழ் மக்கள் மத்தியில் உளவு பார்த்து வருவதாகவும் டமாரிஸ் லூதி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பம் அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டே நிகழ்ந்துள்ளதாகவும் ஏனெனில் அவர்கள் சமூக கட்டமைப்பிலும் தங்களின் பொருளாதார வலுவை கட்டி எழுப்புவதிலும் மிகவும் கரிசனை கொண்டவர்கள் என்பதை அவர் சுவிஸ் இன்போவிற்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிசர்லாந்தில் உள்ள தமிழர்களின் முதலாவது தலைமுறையின் பெரும்பாலானவர்கள் தொழில்சார் கற்கை நெறிகளை கொண்டிராத போதிலும் தொழில் நிறுவனங்களைப்பொறுத்தவரை பெறுமதி மிக்க தொழிலாளர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

நல்ல உழைப்பாளிகளான இவர்கள் தங்களுடைய சமூக கட்டமைப்பிலிருந்து விலகாதவர்களாகவும் ஏனைய இனங்களுடன் இணைதல் என்பது குறைவாக காணப்படுவதாக குறிப்பிடுகிறார்.

சுவிசர்லாந்தில் உள்ள தமிழர்களில் முதலாவது தலைமுறையினர் தங்களுக்கான ஒரு நாடு கிடைக்கும் தாம் அங்கு மீண்டும் திரும்பி செல்லலாம் என்ற நம்பிக்கையுடன்தான் வாழ்ந்தார்கள். ஆனால் அந்த நம்பிக்கைகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு மிகவும் நொந்துபோன சமூகமாக இருப்பதாக கலாநிதி டமாரிஸ் லூதி அனுதாபத்தோடு பார்க்கிறார். இந்த அனுதாபமும் புரிதலும் சுவிசர்லாந்தில் உள்ள அனைவருக்கும் இருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது.

கலாநிதி டமாரிஸ் லூதி தமிழர் சமூகத்தைப்பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு செய்வர். அவர்களுடன் நெருங்கிப்பழகிறவர். ஆனால் சுவிசர்லாந்தில் உள்ள அத்தனை சுவிஸ் குடிமக்களும் அதிகாரிகளும் டமாரிஸ் லூதிகள் இல்லையே.

thurair@hotmail.com

குறிப்பு – சுவிசர்லாந்திலிருந்து வெளிவந்திருக்கும் ஊடகங்களின் சில இணைப்புக்களை இங்கே இணைத்திருக்கின்றேன். ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழி புரிந்தவர்கள் இதனை ஒருமுறை பார்த்தால் சுவிசர்லாந்து ஊடகங்கள் தமிழ் மக்களை எவ்வாறு பார்க்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

11.01.2011

http://www.tagesanzeiger.ch/schweiz/standard/Polizei-nimmt-bei-Grossrazzia-in-der-Schweiz-tamilische-Befreiungstiger-fest/story/26159248

http://www.blick.ch/news/ausland/tamilische-ltte-im-visier-der-ermittler-104694

http://www.20min.ch/news/schweiz/story/28743699

12.01.2011

http://www.tagesschau.sf.tv/Nachrichten/Archiv/2011/01/12/Schweiz/Tamilen-in-der-Schweiz-haben-20-Mio.-Franken-Schulden

http://www.swissinfo.ch/ger/politik_schweiz/Bern_schweigt_ueber_moegliche_Hinweise_aus_Colombo.html?cid=29227892

http://www.nzz.ch/nachrichten/politik/schweiz/schweiz_razzia_tamil_tigers_1.9064770.html'>http://www.nzz.ch/nachrichten/politik/schweiz/schweiz_razzia_tamil_tigers_1.9064770.html

<http://www.nzz.ch/nachrichten/politik/schweiz/schweiz_razzia_tamil_tigers_1.9064770.

http://www.aargauerzeitung.ch/schweiz/schweizer-tamilen-kritisieren-grossrazzia-103467936

http://www.swissinfo.ch/ger/politik_schweiz/Tamil_Tigers_erneut_im_Fokus_der_Schweizer_Justiz.html?cid=29227892

17.01.2011

http://www.swissinfo.ch/eng/politics/foreign_affairs/Tamil_Tigers_return_to_legal_spotlight_.html?cid=29241680

http://www.saritham.com/?p=8965

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.